நீயும் நானுமா கண்ணா, நீயும் நானுமா?
— கவிஞர் காவிரிமைந்தன்.
தமிழகத்தின் பெயர்விளங்கும் சாதனைகள் படைத்தவர்கள் வரிசையில் திரு.கஸ்தூரி ரங்கன் அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஆம்.. தி ஹிந்து என்னும் ஆங்கிலநாளிதழ் மூலம் பத்திரிக்கைத்துறையில் பன்னெடுங்காலம் வியாபித்து பெரும்புகழுடன் விளங்கிவருவதுடன்.. அவர் ஸ்தாபித்த நிறுவனத்தின் மூலம் ஆங்கிலம் அறிந்தவர்களின் எண்ணிக்கை.. ஆங்கில மொழியை மேம்படுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. அவர்தம் வழித்தோன்றலாய்.. தி ஹிந்து குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் திரு. ரங்கராஜன் அவர்களை மெல்லிசை மன்னரோடு இணைந்து நானும் சந்திக்கச் சென்ற நாள் 01.12.1994 இனியதொரு திருநாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
முன்கூட்டியே சந்திப்பிற்கான அனுமதி பெற்றிருந்தோம் என்பதால், திரு.ரங்கராஜன் அவர்களும் எங்களை வரவேற்கக் காத்திருந்தார். மெல்லிசை மன்னரோடு எத்தனை சினேகம் என்பதை அவர்களின் வழக்குமொழிச் சொற்கள் அடையாளம் காட்டின! அதை சினேகம் என்பதைவிட அந்நியோன்யம் என்று கூறலாம்! கட்டித்தழுவி தங்கள் அன்பை பரிமாறியபின் இருக்கைகளில் அமர்ந்தனர். இதையெல்லாம் கண்கொள்ளாக் காட்சியாகக் காண எனக்கு கண்ணதாசன் கருணை புரிந்திருந்தார். உபசரிப்புகள் பலமாக ஒருபக்கம் நடந்திருக்க.. சென்ற விஷயத்தை மெல்லிசை மன்னர் அவரிடம் எடுத்துரைத்தார். கேட்டமாத்திரத்தில்.. பொல்லாத கோபம் கொண்டார்..திரு.ரங்கராஜன் அவர்கள்! ஏண்டா.. நீ மட்டும்தான் கண்ணதாசனுக்கு என்று நினைத்துக் கொண்டாயா? ஏன் நாங்கள் எல்லாம் இல்லையா? ஏன் இத்தனை நாள் வரவில்லை.. இதையெல்லாம் ஒப்புக் கொள்ளவே முடியாது என்று பொங்கியெழுந்தபின் சரி..சரியென்று மெல்லிசை மன்னர் கேட்டுக்கொள்ள.. இப்போது என்ன வேண்டும் கேள்.. இதோ வெற்றுக் காசோலை.. வேண்டியதை எழுதிக் கொள் என்றார். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.. உருவாக்கியிருக்கும் சிலையை தமிழக அரசு ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைக்கிறார்கள். அதையடுத்து முழுநாள் விழாவாக கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்ணதாசன் விழா பற்றிய விளம்பரத்தை ஹிந்து நாளிதழில் வெளியிட வேண்டும் என்றார். அது சரி.. முழுப்பக்கத்திற்கும் விளம்பரம் கொடுத்துவிடுவோம்.. என்றார் திரு.ரங்கராஜன். அதற்கான கட்டணம் என்ன என்று மெல்லிசைமன்னர் கேட்டார். அது எவ்வளவாக இருந்தால் என்ன? மேட்டரைக் கொடு.. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் ரங்கராஜன். முழுபக்கம் எல்லாம் வேண்டாம்.. சும்மா ஒரு கால் பக்கம் அளவில் கொடுத்தால் போதும் என்றார். அதெல்லாம் கிடையாது என்று சமர்புரிந்த ரங்கராஜன் இறுதியாக அரைப்பக்க அளவில் போட்டே தீருவேன் என்று முடிவு செய்தார். அன்றைய நாளில் அந்த விளம்பரம் கட்டணம் செலுத்தியிருந்தால் ரூ.2 லட்சம் என்பது நான் திடுக்கிட்ட செய்தி.. அதையே வண்ணத்தில் கொடுத்தால் இன்னும் இருமடங்கு என்றார்கள். கறுப்பு வெள்ளையில் வெளியான அந்த அரைப்பக்க விளம்பரத்திற்கு அவர் ஒரு காசு கூட வாங்கவில்லை என்பதுடன்.. தி ஹிந்து அன்பளிப்பு என்று கூட போட்டுக்கொள்ளவில்லை.. இது நாங்கள் சென்ற விஷயம்.. நம்ம விஷயத்திற்கு வருவோம். ஆம்.. அவரிடம் என்ன செய்தி கிடைத்தது.. அறிய ஆவல்தானே?
கவியரசு கண்ணதாசனும், மெல்லிசை மன்னரும் ஹிந்து ரங்கராஜன் ஆகியோரும் அடிக்கடி சந்தித்து மகிழும் நண்பர்கள்.. அவர்களிடையே அந்தரங்க விஷயம் முதல் அன்றாட அரசியல் வரை எல்லாமே இருந்தன. அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது.. கவிஞரிடம் வழக்கமான கேள்வி .. கடைசியாக என்ன பாட்டு எழுதினாய்.. சொல் என்று சொல்ல.. அங்கே சொல்லருவி கொட்ட.. தமிழ் மணக்கும் அந்த இடத்தில் மனம் திளைக்க இன்பம் பருகியவர் ரங்கராஜன். அப்போது.. தற்செயலாக ரங்கராஜன் அவர்கள் கவிஞரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்.. ஏன்.. கவிஞரே யாருக்கெல்லாம் பாட்டு எழுதித்தரீங்களே.. எனக்கு ஒரு பாட்டு எழுதக் கூடாதா என்று! நான் என்ன எழுத மாட்டேன்னா சொல்றேன்.. படம் எடு.. நான் பாடல் எழுதுகிறேன்.. என்று இயல்பாக கவிஞர் சொல்ல.. உடனடியாக மெல்லிசை மன்னரை அழைத்து.. ஒருநல்ல கதை கிடைக்குமா.. உடனே நான்ஒரு படம் எடுக்க வேண்டும்.. கவிஞரைப் பாட்டெழுதச் செய்ய வேண்டும் என்கிறார்.
அந்த நாளில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த படம் வியட்நாம் வீடு.. அதன் கதைவசனகர்த்தா.. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள். அவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று கூறி உருவான கதைதான் கெளரவம்.. திரு.ரங்கராஜன் அவர்கள் தயாரிப்பில்.. உருவான திரைக்காவியம்.. கண்ணதாசன் பாட்டெழுத வருகிறார். தனது நெடுநாள் ஆசை நிறைவேறும் தருணத்திற்காகக் காத்திருக்கிறார் ரங்கராஜன்.. மறக்க முடியாத திருநாளாக அது மாறுகிறது.
நடிகர் திலகத்தின் திரையுலகச் சரித்திரத்தில் பொன்னாய் மின்னும் பல படங்களில் முன்னணியில் சில உண்டு. தங்கப்பதக்கம், கெளரவம் என்பவையும் அதில அடங்கும். வியட்நாம் வீடு என்கிற தரமான படத்தை உருவாக்கிய சிருஷ்டி..இயக்குனர் பி.மாதவன் ஆவார். அப்படத்தின் கதைவசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம். நீ முந்திண்டா நேக்கு.. நான் முந்திண்டா நோக்கு என்கிற வசனம் அவரைப்பற்றிப் பேச வைத்தது. அவரே இயக்கிய படம் கெளவரம்.
தன்னிலை தாழாமையும் – தாழ்வுறின்
தாழும்கால் உயிர்வாழாமையும் மானம் எனப்படும்..
என்கிற கருத்தைச் சுமந்த கதையோட்டம்.. உயிரோட்டம் தந்தவர் நடிகர் திலகம்..இரு வேறு வேடங்களில் தந்தை – மகன் பாத்திரமேற்க.. தோளிலே போட்டு வளர்த்த மகனும் சட்டம் பயில வைத்த பின்பு தன்னுடனே மோதுகிறான் கச்சேரியல் (கச்சேரி என்பதற்கு நீதிமன்றம் என்கிற பொருளும் உண்டு). பாலூட்டி வளர்த்த கிளி..பழம் கொடுத்து பார்த்த கிளி என்கிற உணர்வுப் போராட்டப் பாடலும் இதே திரைப்படத்தில்!
தந்தையும் மகனும் மோதுகின்ற நீதிமன்றக் காட்சிகள் திரைப்படத்தின் உச்சம்.. வீட்டிலே அப்பாவுடன் மகன் ஒப்பனையில் நடிக்கும் காட்சிகளும்.. கச்சிதம். தன்னோடு மோதுகின்ற மகனை.. எப்போதும் வெற்றியையே சந்திக்கும் தந்தை.. கச்சேரியில் மோதவிருக்கும் சூழ்நிலையில்.. சுவரில் மாட்டிவைத்த புகைப்படத்தில் மகன் குழந்தையாக இருந்தபோது மார்பிலே உதைப்பது போன்ற காட்சி.. பாசத்திற்கு சாட்சி சொல்ல.. பரிதவிப்பிற்கு.. கண்ணதாசன் பாடல் வருகிறது..
கவிஞர் அங்கே வந்தார். காட்சி விளக்கம் வியட்நாம் வீடு சுந்தரம் தந்தார். கதையின் அமைப்பு கேட்டார். மளமளவென பல்லவிகள்.. சரம் சரமாய்.. சரணங்கள்.. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த ஜீவகவிஞனைப் பற்றி எவ்வளவோ பேசலாம்.
மூன்றடி மண்கேட்டான்.. வாமனன் உலகிலே..
மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே..
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே..
மாறும்அவதாரமே.. இதுதான் உலகிலே..
மன்னனின் கெளரவம் சதுரங்கம் நடுவிலே
மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம்.. ஆட்டத்தின் முடிவிலே
அறுபதை இருபது வெல்லுமா.. உலகிலே..
உணர்ச்சிக் கொந்தளிப்பை முகத்தில் காட்டி உயர்ந்த நடிகனாய் முத்திரை பதித்த நடிகர்திலகம் .. கண்ணதாசன்..விஸ்வநாதன்..ரங்கராஜன் கூட்டணியில் கெளரவம் திரைப்படம் மறக்க முடியாதது. புராணத்தின் மறுபதிவு நடக்கிறது என்கிற கற்பனை யுக்தி.. கண்ணதாசனுக்கே கைவரும் போல்!!
காணொளி: http://www.youtube.com/watch?v=Io_-zCzX81E
படம்: கௌரவம்
பாடல்: கண்ணதாசன்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
குரல்: டி எம் சவுந்தரராஜன்
கண்ணா……
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா… NEVER
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமாஅறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்
ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமாமூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமே இதுதான் உலகிலே
ஹ ஹா… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமாமன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே
மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
அருபதை இருபது வெல்லுமா உலகிலே
ஹே நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமாகாலம் மாறினால் கௌரவம் மாறுமா
காலம் மாரினால் கௌரவம் மாறுமா… NEVER