-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன் 
காட்சிதர மறுப்பதுமில்லை!
ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்
அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்
நாணயமாய் நடந்துபாருங்கள் – அவன்
நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்!
உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்
உள்ளமதில் வந்துநின்றிடுவான்
தெளிவுடனே தினமும்தேடுங்கள் – அவன்
சீக்கிரமாய் உதவவந்திடுவான்!
ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்
எங்களுடன் இணைந்துநின்றிடுவான்
தோழமையாய் இருந்துபாருங்கள் – அவன்
துயர்துடைக்க வந்துநின்றுடுவான்!
கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்
கருணைமழை பொழிந்துநின்றிடுவான்
கண்ணீரால் நனைத்துப்பாருங்கள் – அவன்
காலமெலாம் உதவிநின்றிடுவான்!
சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்
தனைமறந்து பக்கம்வந்திடுவான்
தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்
இனிமையெலாம் தந்துநின்றிடுவான்!
காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்
கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்
சோதியென நினைத்துப்பாடுங்கள் – அவன்
சுகமனைத்தும் தந்துநின்றிடுவான்!
நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்
நீதிதர மறுப்பதுமில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
பூரணமாய்த் தந்துநின்றிடுவான்!

Leave a Reply