இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக (45)

நீயே தவம்!

[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE/[/mixcloud]

10616225_590718837705442_5172244511758978034_n
நீயே தவம் நீயே வரம்
நீயே நெஞ்சில் நிரந்தரம்
நினைவில் கனவின் மலர்கள் விரியும் தினம் தினம், உன்
நிழலினொளியில் தானே எந்தன் சுதந்திரம்!

மது மயங்கும் மதுவே கண்ணாய்த் திறந்தது
மனது பாவம் விண்ணைத் தாண்டிப் பறந்தது
இதயம் முழுதும் அன்பின் வெள்ளம் நுழைந்தது
எனது உனது என்னும் எண்ணம் மறந்தது

தலைகோதும் தென்றல் காற்றே! அலைதூண்டும் நிலவே!
நிலைமாறும் நெஞ்சுக்குள்ளே நின்றாடும் உறவே!
இடைவிடாமல் அன்பால் என்னைக்
கொல்லும் முல்லைப் பூவே! புயலே!

உனதுமுகம் கனவினில் வரும்நிலவா?
கனவிலொரு மறைவினில் எழும்மலரா?
உனதுமனம் காதலின் திருவனமா?
வனம்முழுதும் கணந்தொறும் வளர்ந்திடும் கடவுளும் தொழும் சுகமா?

கவிதையுருவாகும் பேரழகே
காலம்தடு மாறும் கண்ணழகே
தவித்தமனம் தத்தித்தத்தி அடைந்திடும் மெத்தைமடி தனிலெனைத்
தாலாட்டிடும் குரலே! நெஞ்சில்நிதம்
தாளமிடும் விரலே!

(நீயே தவம்)
சொல்லில் சொல்ல முடியாதம்மா உன் நேசம்
விலக விலக வளரும் விந்தை உன் பாசம்
எல்லை தாண்டி உந்தன் அன்பின் எழில் வீசும்
எண்ணமெங்கும் கன்னம் குழையும் ஒரு வாசம்

உயிரெல்லாம் உனதே என்னும் உணர்வொன்றே எனது
பயிர்போல மழையே உனையே பார்த்து ஏங்கும் மனது
எல்லைகள் தீரும் வேளை
எதிரே வந்தாய் இதுவே உறவு

கண்களென்ன மின்னல்களின் கனவா?
கனியிதழ்கள் அமிழ்தம் தரும் சுனையா?
வானவில் பட்டுப்பட்டுக் கன்னங்களில் தொட்டுவிளையாடுவது
நாணமெனும் சுவையா?

நீயெனது உயிர்வருடும் விரலா?
உயிருள்ளில் ஊடுருவும் விழியா?
விழியாலே கொஞ்சிக்கொஞ்சி நெஞ்சிலெங்கும் பஞ்சுப்பஞ்சுப் பறப்பதைப்
பார்த்துச் சிரிக்கும் ரதியா?

(நீயே தவம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *