செப்டெம்பர் 8, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. பாலமுருகன்அவர்கள்

 

sa.balamurugan

நம்நாடு தொன்மை நிறைந்த நாடு, தொன்மையான மரபுச் செல்வங்கள் குவிந்து கிடக்கும் நாடு.  பெரும்பாலோருக்கு அவற்றின் அருமையும் பெருமையும் தெரிவதில்லை. அவற்றைப்  பாதுகாக்கவும் முன் வருவதில்லை.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியகத்தின் துணை வட்டாட்சியரான  திரு. பாலமுருகன் அவர்கள்  “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” பற்றிய முறைகளைப் பற்றிய திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டதுடன், அதனை அத்துறை ஆய்வறிஞர்கள் கருத்தரங்கிலும்  வழங்கியுள்ளார்.  தமிழக மரபுச் செல்வங்களைக்  காக்க முன்னெடுத்த இவரது  முயற்சிக்காக இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதி பெருமிதம் கொண்டு பாடியதை இக்கால மக்கள் அறிவோம்.
ஆனால் …..
தென்குமரி வட பெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப…”
— மதுரைக்காஞ்சி   (70-72)

என்ற மதுரைக்காஞ்சி பாடலிலேயே நம் நாட்டின் தொன்மை குறிப்பிடப்படுகிறது. இங்கே ‘தொன்று மொழிந்து’ என்பது பாண்டிய மன்னன்  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் குறித்து, ‘மிகவும் பழங்காலந்தொட்டுத் தொடர்புடையராயுள்ளமையைப் பாராட்டிச்  சொல்கிறது’ இந்தப் பாடலின் வரிகள்.  இதனால் தமிழத்தின் தொன்மை நன்கு புலப்படுகிறது.  உண்மை நிலை இவ்வாறிருந்தும் நம் மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பது பற்றி வெகு சிலரே அக்கறை காட்டுகிறார்கள்.  அவர்களிலும் பலர் வாய்ச்சொல்லோடு நிறுத்தியும் விடுகிறார்கள்.  பாதுகாக்கும் செயலில் இறங்குபவர்கள் அதனினும் குறைவு.  அவ்வாறு ஆர்வமுள்ளவர்கள் தொழில் முறையில் தொல்லியல் துறையில் பணியாற்றுபவர்களாக இல்லாததும் வியப்புக்குரியதாக இருக்கிறது.  இத்தகைய செயல் மரபுச் செல்வங்கள் மீது இவர்கள் கொண்ட ஆர்வத்தைக் காட்டுகிறது.  இந்த ஒரு சில ஆர்வலர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவகத்தில் துணை வட்டாட்சியராகப் பணிபுரியும் திரு. பாலமுருகன் அவர்கள்.

துணை வட்டாட்சியரான இவரது பணியில் இவரது பொறுப்பு மின் ஆளுமைத்திட்ட ஒருங்கிணைப்பாளராக செயலாற்றுவது. படித்தது  எம்.சி.ஏ மற்றும் எம்.எஸ்.சி. புவியியல். எந்த வகையிலும் தொல்லியியல் துறைக்கும் இவருக்கும் தொடர்பு இல்லை என்றாலும்  தமிழ்நாடு, சமூகம், பண்பாடு, வரலாறு போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். ஓய்வு பெற்ற தமிழ், தலைமை ஆசிரியரின் மகனான பாலமுருகனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊர்.  அவரது  ஊரில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயமும் மலைக்கோயிலும் இவரை வரலாறு, கல்வெட்டு, நடுகற்கள் போன்றவற்றின் மீது கவனம் கொள்ள வைத்தன என்கிறார் இவர்.

இப்பொழுது அவரது ஊரில் உள்ள கோயில் வரலாற்றை கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து எழுதி வருகிறார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற வரலாற்றுத் தடங்களையும் ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிடவும் இவர் திட்டமிட்டுள்ளார்.  தமிழ், தமிழக வரலாறு, தொல்லியல், சூழலியல் தொடர்பான துறைகளில் ஆர்வமுள்ள பாலமுருகன், குறிப்பாக வரலாறு மற்றும் தொல்லியல்  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அதைப்பாதுகாப்பதற்கும் முயற்சிகளை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளார்.

மேலும், தேவிகாபுரம் பற்றிய வரலாறு, புகைப்படங்கள் பற்றி விக்கிபீடியாவிலும் பங்களித்து வருகிறார். அண்மையில் நடந்த தமிழ்விக்கிபீடியா ஊடகப்போட்டியில் இவரது தேவிகாபுரத்தில் கைத்தறி பட்டுசேலை நெசவு குறிக்கும் புகைப்படம் தமிழர் தொழிற்கலைப்பிரிவில் பரிசு பெற்றுள்ளது.

days-of-the-hero

கடந்த ஜூன் மாதம் “நடுகற்கள்” என்ற தலைப்பில் தொல்லியல் துறை நடத்திய, தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவும் நடுகற்கள் பற்றிய இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் (The Days of Heroes) ஒன்றில் அத்துறையின் ஆய்வறிஞர்கள் பலர் பங்கு பெற்றனர். இக்கருத்தரங்கத்தில் “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” என்ற தலைப்பில் பாலமுருகன் தனது கருத்துக்களையும் ஒரு கட்டுரையாக முன்வைத்துள்ளார்.

தமிழ் மரபில் இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல் நட்டு வழிபடுவது தொன்மையான வழக்கம்.  இவ்வாறு நடப்பட்ட நடுகற்கள் வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடப்படுவதுண்டு. நீத்தோர் நினைவாக நடுகற்கள் நடும் மரபு சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளதை  “காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர” எனத் தொல்காப்பியம் வழி அறிய முடிகிறது.  பெரும்பாலும் நடுகற்கள் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. ஒரே போரில் இறந்த பல போர்வீரர்களுக்கும் நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுவதும் உண்டு. தமிழக  தொல்லியல் துறையினரால் புலிமான்கோம்பையில் (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம்) கி. மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றில் மிகப்பழமையானவை என்ற பெருமை வாய்ந்தவை.

sa.balamurugan2தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரவிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்படுகின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள் பற்றிய தரவுகளைத் திரட்டவும், ஆய்வு செய்யவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஊர்தோறும் உள்ள நடுகற்களின் அமைவிடம், அவற்றின் தற்போதைய நிலை அவற்றைப் பாதுகாக்கவும் பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாகியுள்ள தேவையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற  வழிமுறைத் திட்டங்களை  தனது கட்டுரையின் வாயிலாக பாலமுருகன் கருத்தரங்கில்  பகிர்ந்து கொண்டார்.

நடுகற்கள் முதலான மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை முறையே பேணுவதும் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கமே அனைத்தையும் பேண முடியாது என்பதே உண்மை. எனவே, வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க முடியும். அதனால் வரலாற்று ஆர்வலர்கள் செய்யவேண்டியன:

1. மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்துதல்

2. மாவட்டத்தில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் (நடுகற்கள், கோட்டைகள், சிலைகள், பழைய மண்டபங்கள், இராச பாட்டை மற்றும் பல) பற்றிய கணக்கெடுத்தல்

3. நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல்

4. நடுகற்கள் பற்றிய முழுமையான தொகுப்புப்புத்தகம் உருவாக்கி  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

5. நடுகற்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய தனி வலைத்தளம் அமைத்தல்

6. நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்தல் தொடர்பாக அரசை வலியுறுத்துதல், அதன் தொடர்பாக அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல்

என்ற வழிமுறைகளை விளக்கியுள்ளார் பாலமுருகன்.  மேலும் மரபுச்சின்னங்கள் வரைபடம்  தயாரித்தலைப் பற்றிய விரிவான திட்டத்தையும் குறிபிட்டுள்ளார் பாலமுருகன். அத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும். இதற்கு மாவட்ட மரபுச்சின்ன வரைபடம் (District Heritage Map) எனப் பெயரிடலாம். இதற்குத் தற்போது புவியிடங்காட்டு முறைமை [Global positioning system (GPS)] / புவியியல் தகவல் முறைமை [geographic information systems (GISs)] என்ற தொழில் நுட்பம் பெரிய அளவில் உதவும். இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஒரு நடுகல்லின் அதன் அமைவிடம் நிலநேர்க்கோடு, நிலக் கிடைக்கோடு (Latitude and Longitude) என்ற அளவில் வரைபடத்தில் குறிக்கலாம். இதன் மூலம் இந்நடுகற்கள் பிற்காலத்தில் இடம்பெயர்வு ஏற்பட்டாலும், அவை காணாமல் போனாலும் கண்டுபிடிக்க உதவும்.

எடுத்துக்காட்டாக அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள 15 நடுகற்களையும் தொழில்நுட்ப உதவி கொண்டு வரைந்த வரைபடத்தின் மாதிரிகளையும் கருத்தரங்கில் காட்சிப்படுத்தியுள்ளார். அத்துடன் 1. மரபுச் சின்னங்களின் தொகுப்புப் பட்டியல் மற்றும் 2. மரபுச் சின்னங்கள் கணக்கெடுப்புப்  படிவம் ஆகியவற்றையும் வடிவமைத்துக் காட்டியுள்ளார்.

sa.balamurugan3sa.balamurugan4

மரபுச் செல்வங்களை பாதுகாப்பது என்று பேசிக் கொண்டே இருக்கும் பெரும்பாலோர்  போல அல்லாமல், செயல்முறை நடவடிக்கையில் இந்த இந்த வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்று வழி வகுத்துக்  காட்டிய பாலமுருகன் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

வல்லமையாளரைப்  பாராட்ட விரும்புவோருக்காக அவரது தொடர்புத் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ச.பாலமுருகன் (S.Balamurugan)
துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியகம், திருவண்ணாமலை
Phone: 90475 78421
Email: balu_606902@yahoo.com
இணைய முகவரிகள்
1. www.devikapuram.in
2. www.devigai.blogspot.in
3. www.facebook.com/devikapuram (The birth place of King krishnadeveraya)

குறிப்பு: தகவல் வழங்கிய அகர முதல இதழுக்கு நன்றி.  திரு. பாலமுருகனின் கருத்தரங்கக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் அகர முதல இதழில் இந்த சுட்டியைச் சொடுக்கிப் படிக்கலாம்

நடுகற்கள் பற்றிய தகவல்:
http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/natukal.htm

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. கல்லாய் நிற்கும் மாந்தரைக் காணுகின்றோம்..
  இவர்களுக்கிடையில்….
  சொல்லால் செயலால்  நல்லறிவால் இவ்வாறாக 
  மரபு வழிநின்று… நடுகல் இதுவென்று  – அதன் சிறப்பு 
  முக்கியத்துவம்..  வரலாற்று ஆவணம் என்னும் 
  மாட்சிமைகளை பேணல். அறிய வைத்தல்…
  அதற்கான களம் அமைத்தல்..  – இவையெல்லாம் 
  அரசுப் பணியில் உயரிடம் இருந்தும்..  உள்ளம்தேடும் 
  ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும்  
  ச.பாலமுருகன் அவர்களுக்கு 
  வல்லமையாளர் விருது  என்பது சாலப் பொருந்தும்!
  அவர்தம் ஆர்வம்..  ஆற்றல்.. ஒருங்கிணைப்பு இவற்றால் 
  தமிழக வரலாற்றில் மீட்டெடுக்கும் பக்கங்கள் நிறையட்டும்..
  வாழ்த்துகள்…  பாராட்டுகள்..  திரு பாலமுருகன் அவர்களுக்கு…
  நன்றிகள் …  வல்லமை ஆசிரியர் குழுவிற்கு….  
  ஆய்ந்து அறிந்து.. அறிமுகம் தந்து..  பெருமைகள் சேர்க்கும் தேமொழிக்கு…

  காவிரிமைந்தன்
  நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
  கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
  பம்மல் –  சென்னை 600 075.

 2. Hearty congratulations to Balamurugan. He is one of the few good workers in Tiruvannamalai Revenue Unit and he has worked as Vettavalam RI when I was Zonal DT for Kilpennathur. Really surprising to know the other side of Balamurugan. We both work in the same building, (now he is undergoing training as Spl.magistrate in JM Court, Polur) but Balamurugan has never given a hint about his passion for things of yore. Really Balamurugan is humility personified. I wish him all the best from the bottom of my heart and wish him to achieve more in his life.

 3. பரி்வின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் விருது வழங்குவதே ‘வல்லமை’யின் வழக்கம் என்பதை மீண்டும் மீண்டும் வல்லமை மெய்ப்பிக்கின்றது. யார், எவர் என அறியாமல், ஆராயாமல், படைப்புகள் அல்லது பணிகளை மட்டும் கருத்தில் கொண்டு தேர்ந்து எடுப்பது மகிழ்ச்சிக்குரியது. ‘அகரமுதல’ இதழில் வந்த படைப்புகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது என மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் திரு பாலமுருகன் தெரிவித்து இருந்தார். படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிட்டு ‘அகரமுதல’ ஊக்கப்படுத்தி வருகின்றது. படைப்பாளர்களுக்கு விருது அளித்து ‘வல்லமை’ போற்றி வருகின்றது. திரு பாலமுருகனுக்கு வாழ்த்துகள்! ‘வல்லமை’ ஆசிரியருக்கும் குழுவினருக்கும் பாராட்டுகளும் நன்றியும்! விருதாளர்கள் பணி சிறக்கட்டும்! வல்லமையின் தொண்டு தொடரட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.