Year: 2015

  • அருணாசல மகிமை

     

    DSC_5908

    ”அவனியின் கர்வம் அருணையாம் பர்வம்
    சிவனிதய மர்ம ஸ்தலமாம் -புவனத்தின்
    ஆன்மீக நெஞ்சமாம் , அண்ணா மலைதீபம்
    ‘’நான்’’மோகம் நீக்கும் நெருப்பு”….

    ”ஆரூர் பிறந்தோர்க்கும் அக்காசி மாய்ந்தோர்க்கும்
    பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும் -நேரும்
    திருநாளாம் முக்தி அருணா சலத்தை
    ஒருநாள் நினைத்தாலே உண்டு”….கிரேசி மோகன்….

    Share
  • ”கார்த்திகை தீபம்”

    b8cd6006-41a2-4f91-b2d8-b374a28c88c8

     

    “பைனா குலரில் பகவான்பார் கின்றார்தன்
    நைனாவின் கார்த்திகை நெய்ப்பந்தம்; -மெய்நானைக்
    கண்டவர் காண்கிறார், காண்பவனைக் காணென்று,
    விண்டவர் காலில் விழு”….கிரேசி மோகன்….
    ரமணர் அருணாசலேஸ்வரரை தகப்பனாகக் கண்டவர்….அதனால்” நைனாவின் கார்த்திகை நெய்ப்பந்தம்’’ என்று எழுதினேன்….இப்போது தோன்றுகிறது ‘’நைனாவின் கார்த்திகை நெய்தீபம்’’ என்று போட்டிருக்கலாம்….பார்க்கப் படுவதால் உலகை ‘’பார்’’ என்கிறோம்….பார்ப்பவன் யாரென்று பார்த்தால் ‘’பார் முதல் பஞ்ச பூதங்கள்’’ மாயை என்பது உணர்வோம்….இது ‘’ரமண வழி’’….அப்படிப் பார்க்கச் சொன்னவர் (விண்டவர்) காலில் விழு….இதையேதான் ஆதிசங்கரர் ‘’சத்யம் ப்ரம்மம் ஜகத் மித்யை’’ என்றார்….கிரேசி மோகன்.

    Share
  • அண்ணாமலை

    கிரேசி மோகன்

    38

    கட்டாந் தரைதனில் கையே தலையணையாய்
    கொட்டாவி விட்டுறங்கு கோமானாய் -கட்டாயம்
    தன்னாலே வந்துனக்கு தாலாட்டு பாடிடுவார்
    பெண்ணாளும் அண்ணா மலை ….

    கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய்
    உண்டதோர் பிக்‌ஷையில் உன்மத்தம் -கொண்டுநீர்
    ஏகான்மம் ஏற்றிட ஏற்றிடுவான் உச்சிக்கு
    மீகாமன் அண்ணா மலை ….

    கற்ற கரத்தளவே பெற்ற பகுத்தறிவை
    முற்றும் துறக்க முனைந்திடுவாய் -சற்றும்
    நினையாத வேளை நினக்கருள் செய்வான்
    மனையாளும் அண்ணா மலை ….

    தொட்ட குறைதோஷம், விட்ட குறைவேஷம்
    எட்டநின்று சாட்ஷியாய் ஏற்றிட -அட்டவணை
    போட்டுயர்ந்த ஞானம் படிப்படியாய் நல்கும்
    மாட்டமர்ந்த அண்ணா மலை …

    அச்சம் பொறாமை அசூயை அவமானம்
    மிச்சமின்றி போட்டு மிதித்திடு -உச்சம்
    உனக்களிக்கும், ஒன்றிலும் ஒட்டாத இன்ப
    மனக்களிப்பே அண்ணா மலை ….
    சல்லடை போட்டு சலித்து சலித்தேனே
    உள்ளடைந்த நானார் உணர்வதற்கு -பல்லிடை
    மாட்டிய பாக்காய் மனநட்டு வாங்கத்தால்
    நாட்டியம் ஆடுதே நான் ….

    ஏனிந்த மாயை? எதற்கிந்த பொய்போர்வை?
    நானிந்த நாடகத்தைக் காண்பதேன்? -ஆனந்தம்
    பார்ப்பதில் உள்ளதா? பாசாங்கில் உள்ளதா?
    யார்பதில் சொல்வார் எனக்கு !….கிரேசி மோகன்….

    Share
  • நான் யார்?

    – தேமொழி

    நான் யார்?

    கவிதை மூலம் – கார்ல் சாண்ட்பர்க்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    விண்மீன்களை என்தலை மோதிடும்
    மலையுச்சியில் என் பாதங்கள் பதிந்திடும்
    பள்ளத்தாக்கிலும், எங்கெங்கும் நிறைந்திருக்கும்
    வாழ்வின் கரையிலும் என் விரல்நுனிகள் திளைத்திருக்கும்

    ஓசையுடன் நுரை பொங்கும் ஆதி அலைகளின்
    ஆழத்தில் விதியெனும் கூழாங்கற்களை
    என் கரங்களால் துழாவி நான் விளையாடுவேன்

    நான் பலமுறை நரகத்திற்குச் சென்று வந்திருக்கிறேன்
    நான் கடவுளுடன் பேசியுள்ளேன், சொர்க்கம் பற்றியும் நன்கறிவேன்
    நான் கொடியவரின் குருதியிலும் துணிவிலும் மூழ்கியிருக்கிறேன்
    ஆசையாய் கவர்ந்திழுக்கும் அழகினை நான் அறிவேன்
    தவிர்த்திடு என அறிவித்தால், அதனை எதிர்த்திடும்
    மனிதரின் அதிசயக் குணத்தையும் நான் அறிவேன்

    எனது பெயர் உண்மை, உலகில் யார் கட்டுப்பாட்டிலும்
    கட்டுண்டிருப்பதில்லை நான்

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    Carl Sandburg

    Who Am I?

    – Carl Sandburg

    My head knocks against the stars.
    My feet are on the hilltops.
    My finger-tips are in the valleys and shores of
    universal life.
    Down in the sounding foam of primal things I
    reach my hands and play with pebbles of
    destiny.
    I have been to hell and back many times.
    I know all about heaven, for I have talked with God.
    I dabble in the blood and guts of the terrible.
    I know the passionate seizure of beauty
    And the marvelous rebellion of man at all signs
    reading “Keep Off.”

    My name is Truth and I am the most elusive captive
    in the universe.

    Share
  • “திருஅருணாசல சிவம்”

     
    மீ.விசுவநாதன்

    karthigai

    அண்ணா மலையின் தீபம் – மன
    அகந்தை பொசுக்கும் நண்பா !
    எண்ணா திருக்கும் பேர்க்கும் – ஒளி
    இதயம் பாயும் நண்பா !

    கிரியை வலமாய் வந்தால் – நம்
    கிரகம் உதவும் நண்பா !
    அரியும் சிவனும் ஒன்றே – எனும்
    அருணா சலமே நண்பா !

    தீபத் திருநா ளன்றும் – சிவன்
    தெரிவான் நமக்குள் நண்பா !
    தாபத் தோடு தொட்டால் – அவன்
    தாளே சொர்க்கம் நண்பா !

    கலியில் அருணை மலைதான் – நம்
    கவலை அழிக்கும் நண்பா !
    வலியில் கருணை மழையாய் – நல்
    வரமாய்ப் பொழியும் நண்பா !
    (வலியில் – வலியில்லாத)

    (இன்று – 25.11.2015- திருக்கார்த்திகை தீபத்திருநாள்)

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2

     

    ajay

    பாரசீக மூலம் : உமர் கயாம் ​ரூ​பை​யாத்
    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

     

     

    புத்தாண் டிக்கணம் பழம் இச்சை புதுப்பிக்கும்
    சிந்திக்கும் ஆத்மா தனிமை நாடி ஒதுங்கிடும்
    மோசஸின் வெண்கரம் விலக்கிடும் கிளை மரம்
    ஏசு மகான் தரணி மேல் பெரு மூச்சு விடுவார்

     

    4. Now the New Year reviving old Desires,

    The thoughtful Soul to Solitude retires,

    Where the WHITE HAND OF MOSES on the Bough

    Puts out, and Jesus from the Ground suspires.

     

    ஈராம் பறவை போனது மெய்யே தன் பூக்க ளோடு
    ஏழு வளையக் கும்பா போன தெங்கே என்று அறியார்,
    ஆயினும் உள்ளது திராட்சை; பூர்வ ரூபி பயன்தரும்,
    இன்னும் ஓர் பூங்கா நதிக் கருகில் புயல் வீசும்.

     

    5. Iram indeed is gone with all its Rose,

    And Jamshyd’s Sev’n-ring’d Cup where no one knows;

    But still the Vine her ancient Ruby yields,

    And still a Garden by the Water blows.

     

    தாவிதின் வாயிதழ்கள் மூடி இருக்க தெய்வீகமாய்
    ஊது குழல் உரக்கக் குரல் , “ஒயின், ஒயின், ஒயினென !
    கூவிடும் குயில் பூவினைக் கேட்பது, “செந்நிற ஒயின்.”
    கன்னியின் மஞ்சள் கன்னம் பொன்னிற மினுக்கம்.

     

    6. And David’s Lips are lock’t; but in divine

    High piping Pehlevi, with “Wine! Wine! Wine!

    “Red Wine!”—the Nightingale cries to the Rose

    That yellow Cheek of hers to incarnadine.

    ​ +++++++++++++++++++ ​

    ​ ​
    தகவல்:

    1. http://www.acole.com/novels/timuras/khayyam.html

    2.http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm

    3. http://www.omarkhayyamrubaiyat.com/text.htm

    4. https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam [November 17, 2015]

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 33

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ஏகாந்த வாழ்க்கை
    _____________________

    “நாம் ஊமைகளாக மூலை முடுக்குகளில் தெரியாமல் முடங்கிக் கிடந்தோம். ஆனால் இன்று நமது குரல் ஓங்கி வானகமே அதிரும் வண்ணம் முழக்குகின்றது.”
    “நாமோர் சிறிய பொறியாக சாம்பல் குவியலில் புதைக்கப் பட்டிருந்தோம். ஆனால் இன்று நாமோ சீறி எழும் தீக் கனலாக வனக் குன்றின் வாசலில் நிற்கிறோம்.”
    கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    _____________________

    ஏகாந்த வாழ்க்கை
    _____________________

    என்னரும் சகோதரனே ! நீ
    உன் புகழ்ப் பீடத்தின்
    மீதமர்ந்து
    உன்னைச் சுற்றி யுள்ளோர்
    உன் கம்பீரத்தை வாழ்த்தி
    தீரச் செயல்களைப் போற்றி
    பேரறிவை வியந்து
    தேவ தூதருள் ஒருவராய்
    உன்னை நோக்கி
    வானளாவ முழக்குவதை
    நானும் கண்டிருக் கிறேன் !
    _____________________

    உன் குடிமக்களைப் பார்த்து நீ
    உவப்பதை –
    உன்னத வெற்றிகளின்
    வெகுமதியை –
    உன் உடலுக்கு
    நீயே ஆத்மா வென்பதை
    நான் உன் முகத்திலே
    கண்டிருக்கிறேன் !
    _____________________

    பிற்காலத்தில் மறுபடி நான்
    நோக்கிய போது
    ஏகாந்தனாய் தனித்து நீ
    ஆசனத்தின் அருகில்
    நிற்கக் கண்டேன் !
    நாற்புறமும் உன் முன்னே
    நாடு கடத்தும் கரங்கள்
    நீட்டி இருந்தன !
    கண்ணுக்குத்
    தெரியாத பிசாசுகள் உனக்காகப்
    பரிவுக்கும் அருளுக்கும்
    இரங்கிப் பாவிப்பது போல்
    உனைப் பாதுகாக்க
    யாசித்தன
    நேசமும் கணப்புத் தழுவலும்
    சேர்ந்து !
    _____________________

    Share
  • திருப்புக்காட்சி

    -கவிஜி 

    மழை தேசப்
    பாலை வனத்தில்
    வானுயர மரங்களின்
    பூமி தொடாத கண்ணீர்
    கொடுஞ்சூடு…!

    தொலை தூரப்
    பெருவானில்
    நதிதேடும் இரு
    சிறகின் புரியாமை
    வழி தேடல்…!

    கரை தாண்டும்
    சிறைப் பூக்கள்
    உதிராத வழிப் பாதையில்
    இளைப்பாறக் கிடைக்காத
    நிழலான மரக் கூடு…!

    வெந்து தணிய
    வேகத் தடையில்லை
    என்று கனிந்த
    காற்றுச் சொல்லொன்றாய்க்
    கனவுடைத்த
    கருங்கல்…!

    எண்ணக் குதிரையில்
    ஏகாந்தம் குலை நடுங்கப்
    பதியாத நினைவுகளைப்
    பாதி பாதியாய்
    அடுக்கிக் கொண்ட
    ஆற்றுப் படுகையில்
    என்
    திருப்புக் காட்சி…!

     

    Share
  • நெடுந்துயர் அகன்றேயோடும்!

      
      -எம். ஜெயராமசர்மா –  மெல்பேண், அவுஸ்திரேலியா

        வான்முகில் வழாது பெய்கவென
        வாயார வாழ்த்துப் பாடி
        வையத்தில் விழாக்கள் தோறும்
        மனமாரப் பாடி நிற்போம்!

         வாழ்த்தினைக் கேட்டுவிட்டு
         வானுறை தேவர் எல்லாம்
         வையகம் வாழ்க எண்ணி
         மாமழை பொழியச் செய்வர்!                rain

        வறண்டு நிற்கும் பூமியெல்லாம்
        வான் மழையக் கண்டுவிட்டால்
        மகிழ்வு கொண்டு வானோக்கி
        மனதார நன்றி சொல்லும்!

        வயல்நிறையும் குளம் நிறையும்
        வயலுழுவார் மனம் மகிழும்
        தினமும் மழை பெய்கவெனத்
        தீர்மானம் எடுத்தும் நிற்பார்!

       அகமகிழ வைக்கும் மழை
       ஆபத்தைத் தந்த திப்போ
       அனைவருமே மழை பார்த்து
       அலமந்தே நின்று விட்டார்!

       பார்க்கு இடம் எல்லாம்
       பாய்ந்தோடும் வெள்ள மதால்
       பரி தவித்து நிற்கின்றார்
       பல இடத்தில் மக்களெலாம்!

      நீர் பெருகி நிற்பதனால்
      நிவாரணப் பணிகள் எல்லாம்
      யார் செய்வார் எனவேங்கி
      நாளும் அவர் அழுகின்றார்!

      மேடைகளில் ஏறி நின்று
      வாய் கிழியப் பேசியவர்கள்
      அறிக்கைகளை விட்டுவிட்டு
      அவர் பாட்டில் இருக்கின்றார்!

      ஆளுகின்ற கட்சி தனை
      அனுதினமும் திட்டி நிற்கும்
      எதிர்க் கட்சிக் காரரெலாம்
      இதை வைத்தே திட்டுகின்றார்!

      எதிர்க் கட்சித் திட்டினுக்கு
      ஏற்ற பதில் சொல்வதிலே
      இதைச் சாட்டாய் கொண்டுள்ளார்
      ஏறி நிற்கும் அரியணையார்!

      வாதங்கள் புரிவதிலும் வழக்குகள் இடுவதிலும்
      பேதங்கள் யாதுமின்றிப் பேயாட்டம் போடுகின்ற
      சாதனைச் செம்மல்கள் சராசரி மக்களது
      வேதனைகள் புரியாது விடுகின்றார் அறிக்கைமழை!

      வடிகால்கள் அமைக்கவென வந்திருக்கும் பணமெல்லாம்
      வட்டாட்சி மாவட்டம் மந்திரிகள் வசமாகும்
      மழைவந்த பின்னாலே மழைவெள்ளம் தனைப்பார்த்து
      மந்திரிகள் மற்றவர்கள் மாடிநின்று படமெடுப்பார்!

      அவர்களது தொலைக்காட்சி அதைக்காட்டிப் பணமாக்கும்
      அவதிப்படும் மக்கள்தமை ஆருமே பார்க்கார்கள்
      அவர்நிலையைப் பெரிதாக்கி அனுதாபம் தேடியவர்
      அவர்பொருட்டு வரும்நிதியை அமைதியாய் சுருட்டிநிற்பார்!

      வெள்ளப் பெருக்குக்குக்காய் வேதனையாய் இருப்பதுபோல்
      வெள்ளை வேட்டிசட்டையுடன் விதம்விதமாய் கதைவிடுவார்
      உள்ளமெலாம் அழுதபடி ஓர்வழியும் புரியாமல்
      வெள்ளத்தில் அகப்பட்டார் விழிபிதுங்கி நிற்பார்கள்!

      மாடிவீட்டில் வசதியுடன் மனைவி மக்களோ டிருப்பார்
      மாவெள்ளப் பாதிப்பால் மகிழ்வையெல்லாம் இழந்துநிற்கும்
      மக்கள்தமை மனங்கொள்ளா மாமனிதராய் இருப்பர்
      மக்களெலாம் வெள்ளத்தில் மரணத்தை அணைத்துநிற்பார்!

      பொறியியல் படித்தவர்கள் பொறுப்புதனை அறிந்தவர்கள்
      நெறிமுறையில் செயல்பட்டால் நீரழிவு  வந்திடுமா?
      அறநெறியைக் கடைப்பிடித்து ஆட்சிதனை ஆற்றிவிடின்
      அநியாய வெள்ளமது அனைவரையும் அழிக்காதே!

      குடிகளைக் காக்கவேண்டும் குறையெலாம் போக்கவேண்டும்
      நடித்திடும் செய்கைதன்னை நாட்டிலே அகற்றவேண்டும்
      அரசியல் செய்கின்றாரும் அதிகாரம் செய்கின்றாரும்
      நினைவெலாம் தூய்மைபெற்றால் நெடுந்துயர் அகன்றேயோடும்!

     

     

    Share
  • மனதின் மகத்துவம்

    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

    தாமாக நடப்பது விதி
    நாமாக உருவாக்குவது மதி
    (பதினாறு கவனகர் திருக்குறள் இராம கனக சுப்புரத்தினம்)

    ஆன்மீகமும் விஞ்ஞானமும் இரு சகோதரர்கள் என்று அமரர் வாசு கண்ணன் எழுதிய “உள் மன ஆற்றல்” புத்தகத்திலிருந்து படித்த ஞாபகம். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் நமது இந்தியாவில் இருப்பது இந்தியர் அனைவருக்கும் பெருமை. இதைப்போல் பூமியின் தோற்றமும் ஒரு அதிசயமானதுதான். நவக்கிரகங்களை உற்று நோக்கினால் காந்த சக்தி எவ்வாறு பரந்து விரிந்து கிடக்கிறது என்பதை நாம் அறியலாம். இந்தக் காந்த சக்தி மனித உயிரின் சக்தியில் ஊடுருவுகின்றது.

    மொத்தம் 2600 வகை உயிரினங்கள் உள்ளன. இதில் மனிதன் தான் தனித்தன்மை படைத்தவனாக இருக்கின்றான். காரணம் மனிதனின் மூளையை மனம் என்று ஒரு பொருள் இருப்பது.

    மனிதனால் உருவாக்கப் பட்ட வீணைகள் எல்லா வீணைகளும் ஒன்றுதான். ஆனால் அதை மீட்டும் விரல்களைப் பொறுத்தே அதில் உருவாகும் இசை வீணைக்கு வீணை வேறுபடுகின்றது. மனித மூளையும் அனைவருக்கும் ஒரே மாதரிதான். நீயூட்ரான்கள், டெண்ட்ராட்ஸ், மின்காந்தத் துகள்களின் இயக்கம்தான். மூளையின் அமைப்பும், ரசாயனமும் பவுதிகக் கூட்டணுக்களும், அவை இயங்கும் விதமும் எல்லோர்க்கும் ஒருமாதிரியே. ஆனால், மனமும், குணமும் அப்படி இல்லையே – அவை ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகின்றன. அவற்றின்படியே அவர்களின் செயல்பாடுகளாம் அமைகின்றன என்று கவிஞர் தியாகு, “வாழ்ந்திடச் சொல்கிறேன்” தன்னம்பிக்கைத் தொடர் ( நன்றி, தினத்தந்தி, இளைஞர் மலர் 14.11.2015 ) கூறுகிறார்.

    பதினாறு கவனகர் “திருக்குறள் இராம கனக சுப்புரத்தினம்” மெகா தொலைக்காட்சியில் “வெற்றி நிச்சயம்” என்ற நிகழ்ச்சியில், ஈ-க்கும் , தேனீக்கும் ஒப்புமை கூறுகிறார். ஈக்கள், நறுமணம் வீசும் பூக்களிலும் மொய்க்கும். அதே சமயம் துர்நாற்றம் வீசுகின்ற பொருட்களிலும் மொய்க்கும். ஆனால். தேனீக்களோ நறுமணம் வீசுகின்ற பொருட்களில் தான் மொய்த்து , கூட்டைக்கட்டி, தேனைச் சேமிக்கிறது. இது போல, மனத்தூய்மை பற்றி தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொருட்பாலில் (அரசியல்), சிற்றினம் சேராமை அதிகாரத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

    மனம் தூய்மை, செய்வினை தூய்மை இரண்டும்
    சினம் தூய்மை தூவா வரும்.
    திருக்குறள் 455

    யோகத்திறனும், கற்பனை காணும் திறனும். நினைவு ஆற்றலும் மனித மனத்திலிருந்துதான் உருவாகுகின்றது. இதுவே தான் மனிதனின் முன்னேற்ற வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்கின்றது. ஆன்மீகத் துறையில் எத்தனையோ ஞானிகள் மக்கள் நலனுக்காக வாழ்ந்திருக்கிறார்கள். மக்கள் மனதில் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். இராம கிருஷ்ணர், விவேகானந்தர், சாய்பாபா போன்ற மகான்கள் சற்றும் சுயநலமின்றி வாழ்ந்தனர் என்று விக்கரவாண்டி வி. ரவிச்சந்திரன் “மனோசக்தி” மாத இதழில் (ஜனவரி 2015) , “பெயரும் புகழும் பெறுவது எப்படி” என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆன்மீகத்தைப்பற்றி ஆங்கில எழுத்தாளர் “Richard A. Bowell” தனது புத்தகத்தில் “The Seven Steps of spiritual Intelligence “( The practical Pursuit of purposes, success and Happiness,), Nicholas, Brealey Publishing, London, Boston, USA, First Publishe in the USA 2005) ஏழு நிலைகள் / படிகளில் விளக்குகிறார்.

    1)Awareness 2) Meaning 3) Evaluation 4) Being Centred 5) Vision 6) Projection 7) Mission
    எனவே, நாம் நம்முடைய மனதை நன்கறிந்து, அறியாமையிலிருந்து விழிப்புணர்வு பெற்று, மனதை ஒருமைப்படுத்தி மகத்தான சாதனை செய்வோமாக.

    Share
  • சிவபிரதோஷம்

    -மீ.விசுவநாதன்

    திருநீ றிட்டுக் கொள்கின்றேன்
      –திருடன் பேரை மறைக்கின்றேன்!
    கருநீ லகண்டன் நினைக்காமல்                     siva
      –கறுப்புப் பணத்தில் மிதக்கின்றேன்!
    கருநா கத்தைச் சுமப்பவனின்
       –கழலில் கவனம் மறக்கின்றேன்!
    ஒருநா ளின்றி ஒருநாள்நான் 

       –உணர்ந்து கொள்ள முயல்கின்றேன்! 

    கனகாம் பரமாய் மணமின்றிக்
       –காலம் பழிக்க வாழ்கின்றேன்!
    தினவால் பரமன் உனைக்கூடத்
       –திட்டித் திட்டி எழுதுகிறேன்!
    வினைவால் நீண்டு தொடராமல்
       –வெட்டி விடவே தொழுகின்றேன்!
    நினைவால் உன்னைத் தொடர்கின்ற
       –நெஞ்சம் பெறவே விழைகின்றேன்! 

    ( அறுசீர் அரையடி வாய்பாடு: மா,மா,காய் )

    (பிரதோஷ தினம் : 23.11.2015)

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (40)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12305808_919906761396857_1498062885_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    385beec2-d9ae-4f21-b882-8be7482e8688

    ”பாம்பேறித் தூங்கும் பெருமாள் சுபவமாம்,
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய், -BambooNotes
    பாடுகிறான் கீதையை, பாரதம் செய்திட:
    மாடறி யாதிதையம் மே’’….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 23, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு கே. பிரித்திகா யாசினி அவர்கள்

    Prithika Yashini

     

    தொலைக்காட்சிகளின் பண்டிகைக்காலச் சிறப்புத் திரைப்பட வெளியீடு அறிவிப்பு போல அறிவிக்க வேண்டிய சாதனை திருமிகு பிரித்திகா யாசினி அவர்களுடையது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, தமிழகத்தின் திருநங்கை பிரித்திகா யாசினி காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். தளரா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு, சட்டத்தின் துணையுடன் விடாது போராடி இந்தியவரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார் இவர். இந்த மாதம் (நவம்பர் 6) சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், பிரித்திகா யாசினி காவல்துறைப் பணிக்குத் தகுதியானவர் எனத் தீர்ப்பு வழங்கி, தமிழகக் காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அவரை அமர்த்துமாறு உத்தரவிட்டிருந்தது. சென்றவாரம் (நவம்பர் 16, 2015) தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில் (Tamil Nadu Uniformed Services Recruitment Board – TNUSRB) நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, பிரித்திகா யாசினி அவர்களைக் காவல்துறை உதவி ஆய்வாளர் (Sub Inspector of Police) பணிக்குத் தேர்வுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடைகள் பல கடந்து வெற்றிவாகை சூடிய திருமிகு கே. பிரித்திகா யாசினி அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம்.

    Prithika Yashini - X

    Source: http://www.tnusrbexams.net/documents/opq_finalresults.pdf

    காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற விரும்பி சிறுவயது முதல் கனவு கண்ட பிரித்திகா கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பிரித்திகா, வாடகை ஊர்தி ஓட்டும் தந்தைக்கும், தையல் தொழில் செய்யும் தாய்க்கும் மகனாகப் பிறந்த பிரதீப் குமார் ஆவார். பள்ளி நாட்களில் இருந்தே பெண்மை உணர்வு கொண்ட அவரது நடவடிக்கைகள் பள்ளியிலும், பிறகு கணினி சார்ந்த பட்டப்படிப்பு படித்த கல்லூரி நாட்களிலும் பலரது கேலிகுள்ளானது. இருபதாவது வயதில் தனது பெண்மை நிரம்பிய மனவுணர்வுகளின் வழிநடந்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பிய அவரது எண்ணத்தை அவரது பெற்றோர் ஆதரிக்கவில்லை. மாறாக, மந்திரிப்பது முதல் மனநல மருத்துவம் செய்வது வரை பல வழிகளிலும் அவரது எண்ணத்தைக் கைவிடச் செய்ய முயன்றனர். தனது பெற்றோர்களின் தடைகளினால் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். மகளிர் விடுதியில் காவல் பணியாளர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர், தொண்டு நிறுவன ஊழியர் எனப் பற்பல பணிகளில் ஈடுபட்டதுடன், தமிழினப்படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கு பெற்று தன்னார்வப் பணிகளும் செய்தார். அறுவை சிகிச்சையும் செய்து கொண்டு பெண்ணாக மாறினார்.

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு இவர் விண்ணப்பித்தார். தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை இவர். விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினப் பிரிவு குறிப்பிடாத காரணத்தால் பெண் எனக் குறிப்பிட்டார். சான்றிதழ்கள் ஆண் பெயரில் இருக்க, பெண்பெயரில் இருந்த இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எழுத்துத் தேர்வுக்கு அனுமதி பெற்று தனது ஆவணங்களையும் சட்டப்படி பிரித்திகா என்ற பெயரில் மாற்றிக் கொண்டார். தேர்வறை நுழைவுச்சீட்டைக் கடைசி நேரத்தில் பெற்று, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதினார். கடந்த மே மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இந்த எழுத்துத் தேர்வில் 1078 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அத்துறையில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கான 20% ஒதுக்கீட்டைக் கணக்கில் கொண்டால், பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கான சுமார் 850 பணியிடங்களுக்குத் தேர்வெழுதியவரின் எண்ணிக்கை இத்தேர்வுக்கான போட்டியின் தீவிரத்தைக் காட்டும்.

    இத்தேர்வில் வெற்றி பெற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த உடல்தகுதித்திறன் போட்டிக்கு இவர் அழைக்கப்படாததால் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தின் ஆணையில் தேர்வு நடக்கும் நாளுக்கு முதல் நாளன்று தேர்வில் பங்கு பெற வருமாறு அழைப்பைப் பெற்றார். ஆனால் மூன்றாம் பாலினத்திற்கென்ற தகுதி வரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை. பல போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்றாலும் உடல் தகுதித் தேர்வின்ல் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது தேர்வாணையம். இதனால் போட்டியின் காணொளி ஆதாரங்களைக் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். மனிதநேய அடிப்படையில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றார்.

    வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் இவர் பணிக்குத் தகுதி பெற்றவர் எனத் தீர்ப்பு வழங்கினர். பணிக்குத் தேர்வு செய்ய காவல்துறைக்கு வழங்கிய ஆணையில், தேசிய சட்டப்பணி ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளை 3-வது இனம் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று சென்ற ஆண்டே தீர்ப்பளித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரும் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வாணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். பாலினப்பிறழ்வுடன் பிறந்த காரணத்தால் வளர்ந்த குடும்பம் முதற்கொண்டு, வாழும் சமூகம் வரை அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு, தகுதிக்கேற்ற வேலையோ தங்குமிடமோ கிடைப்பதில் சிரமங்கள் எதிர்கொண்டு மூன்றாம் பாலினர் பலர் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது. சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற பிரித்திகா ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பார், அவர்களது நலத்திற்காகப் பாடுபடுவார் என்பது தீர்ப்பெழுதிய நீதிபதிகளின் கருத்தும் கூட.

    மத்திய அரசின் கணக்கெடுப்புப்படி சுமார் ஐந்து லட்சம் திருநங்கைகள் இந்தியாவில் உள்ளனர், அவர்கள் யாவருக்கும் பிரித்திகாவின் போராட்டமும் வெற்றியும் நல்ல வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை. திருநங்கைகளின் நல்வாழ்விற்காக உதவும் ‘சினேகிதி’ என்ற அரசுசாராத் தொண்டு நிறுவனம், பிரித்திகாவை நம்பிக்கை நட்சத்திரம் எனப் பாராட்டியுள்ளது. தனது கனவுகளைக் கைவிடாது, எஸ். ஐ வேலைக் கிடைக்காவிட்டால் ஐ.பி.எஸ். ஆகும் திட்டத்தில் இருந்தவர் பிரித்திகா. பிரித்திகாவை வல்லமையாளராக அறிவித்து வல்லமை இதழ் பெருமை கொள்கிறது.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    படம் உதவி: பிரித்திகாவின் ஃபேஸ்புக் பக்கம்
    https://www.facebook.com/prithikayashin

    தகவல் பெற்ற தளங்கள் பல, குறிப்பாக:
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1387830
    http://www.bbc.com/tamil/india/2015/11/151105_transgenderpolice
    https://ta.wikipedia.org/s/53up
    http://www.tnusrbexams.net/
    http://www.tnusrbexams.net/documents/opq_finalresults.pdf

    Share
  • தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா .

    முருகேஷ். மு

    bb0b7454-f14b-4ccb-931f-05cf6f62548f

    வந்தவாசி.நவ.21. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் இணைந்து நடத்திய 48-ஆவது தேசிய நூலக வார முப்பெரும் விழா சார்பாக பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

    இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றர். மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எ.மு.உசேன், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்யூட்டர் நிறுவன முதல்வர் எ.தேவா, ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வந்தவாசியைச் சுற்றியுள்ள 6 முதல் 12-ஆம் வகுப்புவரையுள்ள பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட
    ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு கிளை நூலகர் கு.இரா.பழனி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில், ரூ.1000/- செலுத்தி, 170-ஆவது நூலகப் புரவலராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ப.ஜெயலெட்சுமி இணைந்தார்.

    மூன்றாம் நிலை நூலகர் சா.ஜோதி,யுரேகா ஒன்றிய கருத்தாளர்கள் மு.குமரன், மு.ஜீவா, முருகன்,
    பள்ளி ஆசிரியர்களும் ஏராளமாய் கலந்து கொண்டனர்.

    நிறைவாக, நூலக உதவியாளர் மு.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    படக்குறிப்பு :

    வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு கிளை நூலகர் கு.இரா.பழனி பரிசுகளை வழங்கும்போது எடுத்த படம். அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எ.மு.உசேன், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்யூட்டர் நிறுவன முதல்வர் எ.தேவா, ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.

    Share