Year: 2015

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (180)

    – சக்தி சக்திதாசன்.

    புத்தாண்டு வாழ்த்துகள்-

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்.

    2015ம் ஆண்டின் இறுதி மடலினூடாக உங்களுடன் உரையாடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    ஆம், கடுகதி புகையிரதம் போல எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடோடி வந்து இறுதிப் பகுதியில் நிற்கிறது 2015ம் ஆண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போதும் பல எதிர்பார்ப்புகளுடன் பிறக்கிறது. ஒவ்வொருவரும் தாம் கடந்து வந்த வருடத்தை விட இவ்வருடம் தமது வாழ்வினை ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றமுள்ளதாக மாற்றியமைக்கும் எனும் நம்பிக்கையுடன் அப்புதிய வருடத்தினுள் நுழைகின்றனர். எதிர்பார்ப்புகள் வெறும் எதிர்பார்ப்புகளாகவே நிறைவடைந்து விட்டனவா? இல்லை அவை நிறைவேறி வாழ்வினில் தாம் எதிர்பார்த்த மாற்றத்தை அடைந்தனரா என்பதை அவரவரே கூற வேண்டும்.

    ஒவ்வொரு வருடமும் பிறந்து நடந்து முடியும் போது அதற்குள் பல நிகழ்வுகளைத் தாங்கி நிற்கிறது, உலக சரித்திரப் புத்தகத்தில் தன்னையும் ஒரு அத்தியாயமாக இணைத்துக் கொண்டு விடுகிறது. அப்படியான ஒரு வகையில் 2015 தன்னுள் எவற்றைத் தாங்கி நிற்கிறது என்பதை எனது கோணத்தில் இருந்து பார்க்க விழைகிறேன்.

    இந்நிகழ்வுகளை மூன்று பிரிவுகளாகப் பார்க்கலாம்

    – எனது பிரத்தியேக வாழ்வின் மாற்றங்கள்
    – இங்கிலாந்து அளவிலான மாற்றங்கள்
    – சர்வதேச ரீதியிலான மாற்றங்கள்

    2015ம் ஆண்டைத் தொட்ட போது அது ஓர் மைல் கல்லாகவே எனது வாழ்வில் தென்பட்டது, 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி இங்கிலாந்து மண்ணில் நான் முதன் முதலாகக் கால் பதித்த தினம். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 திகதி நான் இங்கிலாந்தில் நுழைந்து நாற்பது வருடங்கள் ஓடி விட்டது. அப்பப்பா! ஒரு மனிதனின் வாழ்வில் நாற்பது வருடங்கள் என்பது வாழ்வின் அரைவாசி என்று கூடச் சொல்லலாம்.

    வெறும் பதினெட்டு வருடங்கள் மட்டுமே நான் உதித்த தாய் மண்ணில் வாழ்ந்த எனக்கு என் வாழ்வின் முக்கிய நாடாக இங்கிலாந்து இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லைதான். நான் இங்கிலாந்தில் மாணவனாக நுழைவதற்குத் தேவையான ஸ்பான்ஸர் கொடுத்தவர் எனது பெரியதாயாரின் மூத்த மைந்தன் ஆவார். அதாவது எனது ஒன்று விட்ட அண்ணன். அந்த அன்பான அண்ணனை எனது வாழ்வின் மாற்றத்துக்கு ஒரு காரணியாகத் திகழ்ந்தவரை காலன் எம்மிடமிருந்து பறித்துச் சென்றது கூட இந்த 2015 இல் தான். என் மனைவியின் அன்புத் தந்தை, எனது தந்தையைப் போல என்மீது பாசம் கொண்டவரும் நான் என்னுள்ளத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுபவருமான எனது மாமனார் இப்பூவுலகை விட்டு மேலுலகிற்கு ஏவியதும் இந்த 2015ல் தான். ஆம் இந்த 2015 எனக்குக் கொடுத்ததும் உண்டு என்னிடமிருந்து பல இனியவர்களை எடுத்துச் சென்றதும் உண்டு.

    நான் வாழும், எனக்கு வாழ்வளித்த இந்த இங்கிலாந்து நாட்டைப் பொறுத்த வரையில் 2015 சில முக்கிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை ஈட்டியது பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் கன்சர்வேடிவ் கட்சியெனினும் அவர்களால் தனியாக அரசமைக்க முடியவில்லை. லிபரல் டெமகிரட்ஸ் எனும் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் அடுத்த தேர்தலை 2015 மே மாதம் எதிர் நோக்கியிருந்தது. பொருளாதாரப் பின்னடைவை நோக்கியிருந்த இங்கிலாந்தை மீட்டெடுக்கப் பல நெருக்கடியான செலவுக் கட்டுப்பாட்டைக் கைப்பிடித்ததினால் மக்கள் மிகவும் அதிருப்திக்குள்ளாகியிருந்தார்கள். அதனால் எதிர்க்கட்சியாகவிருந்த லேபர் கட்சி 2015 தேர்தலில் வெற்றியீட்டுவதற்குச் சாதகமான சூழல் என்றே அரசியல் அவதானிகள் பலரது கருத்துகளும், பொதுக் கருத்துக் கணிப்பீடுகளும் சுட்டிக்காட்டின.

    ஆனால் 2015ம் ஆண்டு வேறுவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தது போலும் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக கன்சர்வேடிவ் கட்சி தனித்து அரசமைக்கக்கூடிய பெரும்பான்மையால் வெற்றியீட்டியது. 2015 டேவிட் கமரன் அவர்களை மீண்டும் பிரதமராக முடிசூட்டியது. இங்கிலாந்து அரசியல் அரங்கில் வெளிநாட்டவரின் வருகையே மிக முக்கியமான பிரச்சனையாக முன்னணியில் திகழ்ந்தது, திகழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமா? 2015 லேபர் கட்சிக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டத் தவறவில்லை, தலைவராகும் சந்தர்ப்பம் யாருக்கு ஒருபோதும் கிட்டாது என்று கணிக்கப்பட்டதோ அந்நபர் லேபர் கட்சியின் தலைவரான அதிசயத்தையும் 2015 நிகழ்த்திக் காட்டியது. ஆம், எப்போதும் தனி ஒரு மனிதனாக லேபர் கட்சியினுள் இருந்து குரலெழுப்பிக் கொண்டிருந்த ஜெர்மி கோர்பன் அவர்களை கட்சிக்குத் தலைவராக்கியது கூட காலத்தின் கோலமோ ?

    இங்கிலாந்திலே பிறந்து, இங்கிலாந்துப் பிரஜைகளாகவே வளர்ந்த பல இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதப்பாதையைத் தேர்ந்தெடுப்பது தற்போதைய இங்கிலாந்து தேசம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனையாக 2015இல் வளர்ந்து நிற்பது மட்டுமல்லாது 2016ம் ஆண்டிலும் தமது கால்களைப் பதிக்கப் போகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் வலுத்துக் கொண்டு வருகிறது. இதற்கான பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றைத் தான் 2017ம் ஆண்டு முடிவதற்குள் நடத்துவேன் என்பது பிரதமருடைய ஒரு வாக்குறுதி. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் எனும் கருத்துடையவரல்ல பிரதமர். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் உறவின் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தாலொழிய ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனும் வாதம் வலுவடையாது என்பது பிரதமரின் கருத்து. இம்மாற்றங்களுக்கான கலந்துரையாடல்களின் ஆரம்பத்தை 2015 தன்னுள் உள்ளடக்கியுள்ளது. ஆனால், அதற்கான முடிவுகளை 2016 தான் பகிர வேண்டும்.

    சரி இனி சர்வதேச அளவிலான 2015ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். பயங்கரவாதம் தமது அகோர தாண்டவத்தை பாரீஸ் நகரில் நடத்திக் காட்டியுள்ளது. உலக மகாயுத்தத்தின் பின்னால் அதிக அளவிலான உயிரிழப்பினை ஒரே நிகழ்வில் பிரான்சு நகரம் சந்தித்தது இதுவே முதல் தடவை என்கிறார்கள். இஸ்லாம் எனும் புனித மதத்தின் பெயரால் ஏதுமறியா பொதுமக்களின் மீது அமெரிக்க நகரில் பயங்கரவாதம் அரங்கேறியுள்ளது. மனித உயிர்களின் மதிப்பை கணிக்கத் தவறி உயிர்களைக் காவுகொள்ளும் நீசத்தனம் தொடர்வது 2015க்கு ஒரு கரும்புள்ளி என்றே கூற வேண்டும்.

    சிரியா நாட்டில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக லட்சோபலட்ச மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் படலம் உச்சக்கட்டத்தை அடைந்தது 2015ல் என்றே கூறவேண்டும். அகதிகள் எனும் பெயரில் சில பயங்கரவாதச் செயல் புரிவோரும் ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்துள்ளார்கள் எனும் அச்சம் உண்மையான அகதிகளின் நிலையைப் பரிதாபத்துக்குள்ளாக்கியிருக்கிறதுஎன்றே கூற வேண்டும்.

    உலகின் வெப்ப அளவு கணிக்கப்படத் தொடங்கியதிலிருந்து 2015ம் ஆண்டே அதிக வெப்ப அளவினைக் கொண்ட ஆண்டாகக் கூறப்படுகிறது. உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் முகமாகக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்காகக் கூட்டப்படும் சர்வதேச மகாநாடு 2015ம் ஆண்டின் இறுதியில் பிரான்ஸு நகரில் கூடியது. இதிலே உலகத்தின் வெப்பம் 2 டிகிரிக்கு மேல் கூடாதவாறு ஒவ்வொருநாடும் தமது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் உடன்பாடு கணப்பட்டுள்ளது. இவ்வுடன்பாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உடன்பாடு என்று கூறப்படுகிறது. இது எவ்வளவு உண்மையானது என்பதை வருங்காலம் தான் காட்ட வேண்டும்.

    ஆண்டின் இறுதியில் மிகவும் சோக நிகழ்ச்சியாக அன்னைத் தமிழின் தாயகமான தமிழகத்தின் தகைநகரம் சிங்காரச் சென்னை வெள்ளத்தினுள் அமிழ்ந்தது. இவ்வெள்ளப் பாதிப்பினால் பலர் உயிரிழந்து, உடைமைகள் இழந்து, இல்லத்தை இழந்து பரிதவிப்பது நெஞ்சத்தை ரணமாக்கினாலும் மனிதாபிமானம் கொடிகட்டிப் பறந்தது என்பது நெஞ்சத்தைக் குளிர்விக்கிறது. எந்தவிதப் பாகுபாடுமின்றி நிர்வாகத்தினை எதிர்பார்க்காமல் … குறிப்பாக இளைஞர்கள் சமூக வலைத்தளங்களின் உதவியோடு கரங்களிணைத்து தவிக்கும் பலருக்கு உதவியது 2015ல் மனிதாபிமானத்திற்குக் கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.

    பல தடைகளையும், சில படிகளையும் தாண்டி 2016 வாசலில் வந்து நிற்கின்றோம், நேற்றைய நிகழ்வுகளை நாளைய வெற்றிகளுக்குதவும் அனுபவப் பாடங்களாக எடுத்து புத்துணர்வுடனும், புத்தெழுச்சியுடனும் 2016இனுள் நுழைவோம் வாருங்கள். என் இனிய அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இரண்டு வார இடைவெளியின் பின்னால் மீண்டும் 2016 ஜனவரி இறுதி வாரத்தில் மடலுடன் உங்களைச் சந்திக்கிறேன்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மார்கழி மணாளன் – 17 திருஎவ்வுள்ளூர்- வைத்திய வீரராகவப் பெருமாள்

    ஓராண்டு தவமிருந்த மாமுனியின்

    உள்ளாண்டு நின்றிருந்த உத்தமனே !

    பல்லாண்டு உதிர்ந்திட்ட கிழவனாய்

    மனமாண்ட மாமுனியின் விருந்தே !

     

    பங்கின்றிச்  சாலியின் உணவைச் சுவைத்து

    பங்கில்லா அருளைத் தந்த பரிபூரணனே !

    எவ்வுள்ளில் உறங்கலாம் என்றே குடிலில்

    திருவுள்ளம் கொண்ட திரு எவ்வுள்ளூரானே !

     

    புஜங்க சயனத்தில் கிடந்த கோலத்தில்

    நிஜங்களை காக்கும் நெடுமாலே !

    புலனறியா நோயினையும் பொழுதினிலே

    நலமாக்கும் வைத்திய வீரரகாவனே !

     

    கிடந்தாலும் நின்னழகு விண்ணழகு

    காலருகில் வசுமதியின் கண்ணழகு !

    களங்கமில்லா சாலியின் மேல் கையழகு !

    காலமெல்லாம் நீ அருளும் அருளழகு !

     

    கல்லாகச் சிலையாகக் கண்டவரோ கண்டிலர்

    கண்ணிமையில் கசிகின்ற காதலை அறிந்திலர்

    சொல்லாகப் பொருளாக உன்னை அடைந்திலர்

    சுவையாக நீயிருக்க சுமையனைத்தும் நீக்கிலர் !

     

    விண்ணவனே! பொன்னவனே !  வீக்ஷாரண்யனே !

    வினைதீர்க்க வந்திடுவாய் வேதவல்லி மணாளனே!

    பாசுரத்தின் ஒலிதன்னில் வருவினைகள் நீங்கட்டும் !

    பாதத்தின் ஒளி தன்னில் பாரெல்லாம் செழிக்கட்டும் !

     

     

     

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்….

     

    images

     

    ’’நேற்று நடந்ததை நாளை நடப்பதை
    மாற்ற முயலாய் மடமனமே -காற்றுன்னுள்
    வீசுகையில் தூற்றிக்கொள் வாய்க்கும்பார் புத்தாண்டு
    காசுமலர் நாளாய்ப் பிறப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”ஆண்டாள் -15 ….
    ———————————

    baa6b95b-90f4-4762-a0bb-3dc6fc622e84

    கொல்லே(லை) மரக்கிளை, எல்லே இளங்கிளியே,
    மல்லேந்தி ஆனை மருப்பொசித்த, – வல்லானே
    தாயத்தாம், ஆண்டாள் திருப்பாவை முப்பதும்
    காயத்ரி மந்திரமாம் கூவு …. கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் 15 தேரழுந்தூர்– ஆமருவியப்பன்

     க. பாலசுப்பிரமணியன்

    b8346d13-a0b3-4351-b71a-8cef523b821a

    தேர்நிழலில் காலழுத்தித் தீயணைத்தான்

    தேர்பெற்ற மன்னவனின் தானழித்தான் !

    தேவராஜன் கருடனைப் பக்கம் வைத்தான் !

    தேடிவரும் நெஞ்சங்களில் தன்னை வைத்தான் !

     

    காவிரிக்குக் கருணை தந்த கார்மேகன்

    கரிகாலன் மனம் கவர்ந்த கண்ணனவன்

    செங்கமலத் தாயோடு  மனம்கொண்டான்

    சிங்கமுகன் சினம் தீர்ந்த சிலை கொண்டான் !

     

    முன்னழகு  பார்த்தாலோ முத்துப் பந்தல்

    பின்னழகு பார்த்தலோ பூந்தோட்டத் தோரணமே !

    பூவிழிகளிலே பொங்குகின்ற கருணை வெள்ளம்

    பொற்பதம் பார்த்ததுமே போதையிலே சரணம்

     

    பாரிஜாத மலர் வாசம் திருமேனி வீசும் !

    பச்சைக்கற்பூரம் உடல் தோய்ந்து ஒளி வீசும் !

    கழுத்திருந்து  கன்னித்துளசி  காதல் பேசும் !

    பாரெல்லாம் கண்ணா! உன் பார்வை அருள் வீசும் !

     

    !கண்களிலே  அவனிருக்கக் கற்பனைகள் ஏங்கும்

    கற்பனையில் அவனிருக்கக் கருத்துக்கள் ஏங்கும்

    கருத்தினிலே அவனிருக்கக் காலங்கள் ஏங்கும்

    காலமெல்லாம் அவனிருக்கக்  கவலைகள் நீங்கும் !

     

    சடையப்ப வள்ளலின் கொடையினிலே

    சரித்திரம் படைத்த கவியானான் கம்பனுமே !

    கட்டுத் தறியும் அங்கே கனிந்தே  கவிபாடக்

    காகுந்தன் கதையின் விதை தேரழுந்துரே !!

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர்

     

     

    உற்றா லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான்
    மற்றவற் கொன்னாரோ டொன்றுமோ? – தெற்ற
    முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா
    இரண்டே றொருதுறையுள் நீர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
    மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
    முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
    இரண்டு ஏறு ஒரு துறையில் நீர்.

    பொருள் விளக்கம்:
    ஒரு துன்பம் தனது தலைவருக்கு நேரிடுமானால் தனது உடலையே கொடுக்கும் வீரர் ஒருவர், மாற்றானாகிய எதிரியுடன் சென்று சேர்வாரா? (அவ்வாறு செய்ய விரும்ப மாட்டார்). தெளிவாக தம்முள் முரண்பாடுகள் கொண்ட வலிமையுள்ளவர் ஒன்றுபடுவரோ? மாறுபாடுகள் கொண்ட எருதுகள் இரண்டு இணைந்து ஒரே துறையில் நீர் உண்ணுவதில்லை (அவ்வாறே, தனது மன்னனிடம் மாறாத அன்பு கொண்ட வீரரும் பகைவனுடன் சேர விரும்ப மாட்டார்)

    பழமொழி சொல்லும் பாடம்: அரசைக் காக்கும் பொறுப்புள்ள வீரர் பகைவருடன் சென்று சேர்ந்து தனது நாட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்ப மாட்டார். வீரரின் இத்தகைய பண்பினை, இத்தகைய வீரர்கள் கொண்ட படையினை விவரிக்கும் வள்ளுவர்,

    அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை. (குறள்: 764)

    போரில் அழிவின்றியும், பகைவரின் வஞ்சத்திற்கு இறையாகாமலும்(அறைபோகாதாகி), தலைமுறை தலைமுறையாக அச்சம் தவிர்த்து வீரத்துடன் போரிடும் படையையே சிறந்த படை என்கிறார்.

    Share
  • பேராசிரியர் தமிழண்ணல் மறைவு!

    முனைவர் மு.இளங்கோவன்

    தமிழண்ணலுக்குக் கையறுநிலைப்பா!

    annal 2
    தமிழண்ணல்
    தமிழைத் தேக்கிய நெஞ்சமுடன்
    தரணி எங்கும் சுழன்றபடி
    கமழக் கமழ உரையாற்றி,
    கன்னித் தமிழைப் போற்றியவன்!
    கமழக் கமழ உரையாற்றி,
    கன்னித் தமிழைப் போற்றியவன்
    இமைகள் மூடிய கொடுஞ்செய்தி
    என்றன் நெஞ்சைத் தாக்கியதே!

    நிமையப் பொழுதும் தவறாது
    நிலைத்த பணிகள் செய்தவனாம்!
    தமிழின் அண்ணல் எனும்பெயரோ
    தமக்குப் பொருந்த வாழ்ந்தவனாம்!
    தமிழின் அண்ணல் எனும்பெயரோ
    தமக்குப் பொருந்த வாழ்ந்தமகன்,
    குமைந்து மக்கள் அரற்றும்படி,
    கூடல் நகரில் மாய்ந்தனனே!

    ஆய்வில் நுழைந்து தமிழுக்கு,
    அணிஅணி யாக நூல்தந்து,
    ஓய்வோ இன்றி உழைத்த மகன்
    உலகம் போற்றத் துயில்கொண்டான்!
    ஓய்வோ இன்றி உழைத்தமகன்
    உடலம் சுருங்கித், தளர்வுற்றுச்,
    சாய்ந்த செய்தி தமிழர்களைச்,
    சாய்த்த தென்றே நானுரைப்பேன்!

    பள்ளிக் கல்வி தமிழாக,
    பாடு கிடந்த புலவோர்க்கு,
    உள்ளம் இசைந்து தலைமையேற்ற
    ஒப்புயர் வில்லா மறவன்இவன்!
    உள்ளம் இசைந்து தலைமையேற்ற
    ஒப்புயர் வில்லா மறவன்இன்று
    வள்ளல் போல உயிர்துறந்து
    வையம் நீங்கிச் சென்றனனே!

    கோவில் தோறும் குடமுழுக்குக்
    குமரித் தமிழில் நடத்திடவே,
    ஆவல் கொண்ட பெரும்படைக்கே,
    அரசன் போல ஆணையிட்டான்!
    ஆவல் கொண்ட பெரும்படையின்
    அணியின் செயலை நேர்கண்ட,
    காவல் வீரன் நிகர்த்தமகன்
    கண்கள் துயின்றான்! கவலுகின்றோம்!

    புதுமை, பழைமை எனும்பெயரில்
    புரட்சி நடந்த ஆய்வுலகில்,
    மதிமை சான்ற தமிழண்ணல்
    மலர்ந்த கண்ணாய் இரண்டனையும்
    பொதிய மலையின் அகத்தியனாய்ப்
    போற்றித் தழுவிப் புகழ்புரிந்தான்.
    அதனால் இரண்டு குழுவுக்கும்
    அவனே இணைப்புப் பாலம்அம்மா!

    கற்றோர் அவையை அணிசெய்த
    கழகப் புலவன் ஒத்தமகன்!
    வற்றிய உடலம் கொண்டாலும்
    வரிப்புலி போன்றே தமிழ்காத்தான்!
    வற்றிய உடலின் வரிப்புலியோ
    வாழ்ந்து முடிந்து சென்றாலும்
    பற்றிய தீயாய் அவன்உணர்வு
    படர்ந்து தமிழகம் நிலவும்அம்மா!

    சிற்றூர் தன்னில் பிறந்தாலும்
    செயலால் உலகோர் உறவானான்!
    கற்ற மக்கள் உள்ளமெலாம்
    கல்லின் எழுத்தாய் நிலைபெற்றான்!
    கற்ற மக்கள் உள்ளமெலாம்
    கல்லின் எழுத்தாய் நிலைத்தவனின்
    பற்றில் திளைத்தோம்; பதறுகின்றோம்!
    போய்வா அண்ணலே, காத்திருப்போம்!

    பேராசிரியர் தமிழண்ணல்

    மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்கள் உடல் நலம் குன்றி, தம் 88 ஆம் அகவையில் இயற்கை எய்தியுள்ளார். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் உடல் நல்லடக்கம் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மதுரையில் நடைபெற உள்ளது.

    பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கிய தமிழ்ப் பேராசிரியர் ஆவார். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்த தமிழறிஞர் குழுவுக்குத் தலைமையேற்றவர். தொல்காப்பியத்திற்கு முரணாக ஒரு தொல்காப்பியப் பதிப்பு வந்தபொழுது துணிச்சலுடன் நின்றெதிர்த்த பெரும்புலவர். இத்தகு காரணங்களால் இவர் தலைமையில் யான் திருமணம் செய்துகொண்டேன். என் சிற்றூருக்கு வருகை தந்து என் நூல்களை வெளியிட்டவர்(1995). சிலவாண்டுகளுக்கு முன் புதுச்சேரிக்கு வந்தபொழுது நம் இல்லம் வந்து எங்களின் எளிய விருந்தினை ஏற்றவர். மதுரை செல்லும்பொழுது யானும் தமிழண்ணல் ஐயா அவர்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என் மீது அளவற்ற அன்புகாட்டியவர். என் குடும்பத்தின் மீது பரிவுகொண்டவர். இத்தகு அன்பால் எங்களைப் பிணைத்திருந்த பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்களின் மறைவுச் செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. எங்களின் கண்ணீர் வணக்கத்தை ஐயாவுக்குக் காணிக்கையாக்குகின்றோம்.

    பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தமிழ் வாழ்க்கையை நினைவுப்படுத்துகின்றேன்.

    பிறப்பு

    தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.

    கல்வி

    மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    ஆசிரியர் பணி

    தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். இங்கு, தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருடன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றியவர். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.

    1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

    குடும்பம்

    தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

    தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்

    1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

    பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.

    இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

    இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.

    தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.

    தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வந்தவர்.

    தமிழண்ணல் நூல்கள்

    தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :

    வாழ்வரசி புதினம்
    நச்சுவளையம் புதினம்
    தாலாட்டு
    காதல் வாழ்வு
    பிறைதொழும் பெண்கள்

    சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
    சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
    தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
    புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
    தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
    ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
    ஒப்பிலக்கிய அறிமுகம்
    குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்

    தொல்காப்பியம் உரை
    நன்னூல் உரை
    அகப்பொருள் விளக்கம் உரை
    புறப்பொருள் வெண்பாமாலை உரை
    யாப்பருங்கலக் காரிகை உரை
    தண்டியலங்காரம் உரை
    சொல் புதிது சுவை புதிது
    தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
    தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
    பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
    பிழை திருத்தும் மனப்பழக்கம்
    உரை விளக்கு
    தமிழ் உயிருள்ள மொழி
    தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
    தமிழ்த்தவம்
    உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
    திருக்குறள் உரை
    இனிய தமிழ்மொழியின் இயல்புகள்

    முதலியன

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ”ஆண்டாள் -14’’….
    ————————————

    312b3168-ac97-4ce7-9aea-ca3442c02120

    புழக்கடைத் தோட்டத்துப் பூக்கள் மலரக்,
    கிழக்கிடை தோன்றும் கதிரோன், -பழக்கிடும்,
    முன்பே எழுந்திருந்து, முப்பதைச் செப்பிடும்
    அன்பே ஹரிஆண்டாள் ஆம் ….கிரேசி மோகன்….

    Share
  • நல்வாழ்வை அள்ளித்தரும் வள்ளி!

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்தஇனம் முதன்முதலில் தோன்றி வாழ்ந்தஇடம் மலையும் மலைசார்ந்த பகுதியுமே என்பது மானுடவியலாளர்களின் கருத்து. இப்பகுதியைத்தான் ’குறிஞ்சி’ என்று குறிப்பிட்டனர் தமிழ்ச்சான்றோர். வானுயர்ந்த மலையும், அம்மலைமீது காய்கதிர்ச்செல்வன் பாய்ச்சிடும் பொன்னொளிக் கிரணங்களும், வெள்ளைப் பட்டாடையைக் கீழே விரித்ததுபோல் மலைமீதிருந்து பாய்ந்துவீழும் அருவிகளுமாய் இயற்கையன்னையின் படைப்புக்கலையின் உச்சம் இந்தக் குறிஞ்சி எனலாம்!

    மலைச்சாரலில் வானுயர ஓங்கிவளர்ந்திருக்கும் மரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் நறுந்தேனின் இறால்கள், ”என்னைக்கொஞ்சம் அருந்தேன்! அருந்தேன்! என்று நம்மை வருந்தியழைப்பது போலிருக்கும். கொடிகளில் கணக்கின்றிக் காய்த்துக்கிடக்கும் வள்ளிக்கிழங்குகள், காண்போர் நாவின் சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும்! (வள்ளி என்ற பெயரால் நாம் கிழங்கை அழைத்தாலும் அஃது உண்மையில் அதனை விளைவிக்கும் கொடியின் பெயரேயாகும். சினையாகுபெயராய் அதுவே கிழங்குக்கும் வழங்கலாயிற்று.)

    வள்ளிக்கிழங்கு என்றதுமே குறிஞ்சிக் கபிலரின் நறுந்தமிழ்ப்பாட்டு ஒன்று நினைவுக்கு வருகின்றது. அதனைப் பார்ப்போம்!

    குறுநிலமன்னர்களில் பெரும்புகழ்பெற்றவனாய்த் திகழ்ந்தவன் பறம்புமலைத் தலைவன் பாரி. அவனுடைய வள்ளன்மையும், அதனால் அவனடைந்துவரும் வான்புகழும் கண்டு அழுக்காறுகொண்ட தமிழகத்தின் மூவேந்தரும், அவன் பறம்புமலையை முற்றுகையிட்டனர். மலைமீது குடியிருக்கும் பாரியும் அவன் கூட்டத்தாரும் எப்படியும் உணவுதேடி அடிவாரத்திற்கு வந்துதானே ஆகவேண்டும். அப்போது அவர்களை வளைத்துப் பிடித்துவிடலாம் என்பது அவர்களது மனக்கோட்டை. ஆனால் வாரங்கள் கடந்தன; அவை மாதங்களாக மாறின. பாரியோ அவன் குடிகளோ அடிவாரம்நோக்கி அடியெடுத்தும் வைக்கவில்லை. கீழே, மரத்துக்கு மரம் யானையைக் கட்டிவிட்டு மேலேயே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மாமன்னர்களின் வியப்புக்கோர் அளவில்லை! ”ஈதென்ன அதிசயம்! பாரியும் பிறரும் உணவுக்கு என்ன செய்கின்றனர்? எவ்வளவுதான் உணவுப்பொருள்களைச் சேமித்து வைத்திருந்தாலும் இதற்குள் அவை தீர்ந்துபோயிருக்கவேண்டுமே!” என்று யோசித்துயோசித்து மனங்குழம்பிக்கொண்டிருந்தனர் மாமன்னர் மூவரும்.

    இவர்களின் குழப்பத்தைத் தெளிவாய் உணர்ந்த பாரியின் ஆருயிர் நண்பரான கபிலர், “தாய்த்தமிழ் வேந்தர்களே! ஈண்டு, நீங்கள் மூவரும் ஒருங்கேகூடி முற்றுகையிடினும், மாவீரன் பாரியை வெல்லவும் முடியாது; அவன் பறம்பைக் கொள்ளவும் முடியாது. உண்டிக்கு நாங்கள் திண்டாடுவோம்; உங்களிடம் உதவிகேட்டு மன்றாடுவோம் என்பதுதானே உங்கள் எண்ணம். அது ஒருநாளும் ஈடேறப்போவதில்லை. என்ன திகைக்கிறீர்! பறம்புமலையின் வளப்பத்தை நீங்கள் அறியமாட்டீர். உழவன் விளைவிக்காமலேயே நான்குவகையான உணவுப்பொருள்களை விளைவிக்கக் கூடியது எங்கள் பறம்பு. ஆம்! வித்திடாமலே இங்குள்ள மூங்கிலின் இலைகளில் நெல்விளையும்; பலா மரங்கள் தீஞ்சுவைக்கனிகளை ஊழ்க்கும்; கொழுவிய வள்ளிக்கொடிகள் கிழங்குகளை வீழ்க்கும்; திணிநெடுங்குன்றமோ தேனை வார்க்கும். ஆதலால் அரசர்களே…!எங்களுக்கு என்றும் வாராது உணவுப்பஞ்சம்! அடையமாட்டான் பாரி உம்மிடம் தஞ்சம்!” என்று கம்பீரமாய் முழங்கினார்.

    …உழவர் உழாதன நான்குபய னுடைத்தே
    ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே

    இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
    மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே
    நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
    திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே…. (புறம்: 109)

    வள்ளிக்கிழங்குகள் மூன்று வகையின. 

    அவை:
    1. மாவள்ளிக்கிழங்கு

    2. மரவள்ளிக்கிழங்கு
    3. சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியன.

     

    sarsaparillarootஇதில் முதலாவது வகையைச் சார்ந்த மாவள்ளிக் கிழங்கே (Smilax ornata or sarsaparilla) நாளடைவில் மாவலிக்கிழங்காகத் திரிந்து, பின்பு மா’காளி’க்கிழங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டது (எதையுமே கடவுள் பெயரோடு பொருத்திப்பார்ப்பதில் நம் தமிழ்மக்களுக்கு ஓர் அலாதி விருப்பம் போலிருக்கின்றது!).

    இந்நாளைய மக்கள் மாவள்ளி எனுமிந்த மாகாளிக்கிழங்கை ஊறுகாய்ப் போடுவதற்கும், குளிர்பானங்களுக்குமே பெரிதும் பயன்படுத்துகின்றனர். நன்னாரி சர்பத் என்று நாவினிக்கப் பருகுகின்றோமே அதில் ’நன்னாரி’யாய்க் காட்சியளிப்பவர் சாட்சாத் மாகாளியார்தான்!

    தோல்நோய்களைத் தீர்ப்பதிலும், வயிற்றுக்கோளாறுகளைப் போக்குவதிலும்  இக்கிழங்கு திறன்வாய்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்டகாலமாகவே பயன்பாட்டிலிருக்கும் கிழங்கு இது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு இரத்தத்தையும் சுத்திகரிக்கின்றது இக்கிழங்கு. பால்வினை நோய்களைக் குணப்படுத்துவதிலும், டெஸ்டோஸ்ட்ரோன் (Testosterone) எனும் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்துவதிலும் இதன் பங்கு மகத்தானது.

    வள்ளிக்கிழங்கின் மற்றொருவகையே மரவள்ளிக்கிழங்கு (Cassava or tapioca). மாவள்ளியைப் போன்றே இதற்கும் பலபெயர்கள் வழக்கத்தில் உள்ளன. மரச்சீனிக்கிழங்கு என்று நாட்டார்மக்களும், மரவள்ளிக்கிழங்கு என்று நகரத்து மக்களும், கப்பக்கிழங்கு என்று கேரள மக்களும், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்களும் வாஞ்சையோடு அழைப்பது இக்கிழங்கையே. இவையேயன்றி, ‘ஏழிலைக்கிழங்கு’ எனும் எழிலான பெயரும் இதற்குண்டு!

    கிழங்குகளிலேயே மாவுச்சத்து (carbohydrate) அதிகம்கொண்டது cassavaஇந்தக் கிழங்குதான். மிகக்குறைந்த கொழுப்புச்சத்தும், மிகஅதிக அளவிலான புரதச்சத்தும் கொண்ட இக்கிழங்கிலிருந்து கிடைக்கும் புரதத்தில் ‘சிலியாக்’  எனும் நோயை ஏற்படுத்தும் ஒருவிதத் தானியப் புரதமான ‘குளூட்டின்’ இல்லை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். (Gluten is a form of protein found in some grains, which creates an auto-immune disorder Celiac.)

    வர்த்தகத்திற்காகப் பெருமளவில் மாவுப்பொருள் (starch) மரவள்ளிக் கிழங்கிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. ஜவ்வரிசி (பாயசம், வடகம் போன்றவற்றிற்குப் பயன்படுவது) தயாரிக்கப்படுவதும் இந்தக் கிழங்கிலிருந்துதான். இக்கிழங்கு புற்றுநோயை ஒழிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றது என்று சொல்லப்படுகின்றது. (More evidences are needed to confirm the anti-cancer activity of Cassava). இக்கிழங்கின் தோல், வேர் மற்றும் இலைகளில் நச்சுத்தன்மைமிக்க சயனைடு இருப்பதால் அவற்றை உண்ணக்கூடாது. (Cassava roots, peels and leaves should not be consumed raw because they contain two cyanogenic glucosideslinamarin and lotaustralin. They liberate hydrogen cyanide (HCN)).

    Ipomoea_batatasவள்ளிக்கிழங்கின் மூன்றாவது வகைதான் இனிப்புச்சுவை நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு (Ipomoea batatas). இக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. நோய்எதிர்ப்புச்சக்தியை மிகுவிக்கக்கூடிய ஆண்டி-ஆக்ஸிடென்டுகள் (anti-oxidants), உடலுக்குத் தேவையான தாதுஉப்புக்களான இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம் போன்றவையும் இதில் நிறைந்துள்ளன. இக்கிழங்கில் காணப்படும் பீட்டா காரட்டீன் (β-Carotene) எனும் கரிமக் கூட்டுப்பொருள் (oraganic compound), முதுமையில் மனிதர்களுக்கு வரக்கூடிய கண்நோய்களைத் தடுக்கின்றது (age-related macular degeneration). இதிலுள்ள கார்போஹைட்ரேட் எளிதில் சீரணிக்காத சிக்கலான வகையைச் சார்ந்திருப்பதால் (complex carbohydrates) இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். ஆகவே, நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் இக்கிழங்கை உண்டுவரலாம். உலகில் நீண்ட ஆயுள்படைத்த மனிதஇனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜப்பானிலுள்ள ஒகினாவா தீவு (Okinawa Island – Land of longevity) மக்களின் உணவுப்பட்டியலில் சர்க்கரைவள்ளிக்கிழங்குக்கோர் நிரந்தர இடமுண்டு!

    இத்துணை நன்மைகளை அள்ளித்தரும் வள்ளிக்கிழங்குகளைத் தள்ளிவைத்துவிட்டு, நம்மக்கள் உடலுக்குத் தீங்குபயக்கும் விரைவு உணவுகளையும், பிஸ்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுவகைகளையும் அரவணைத்துக்கொண்டிருப்பது வருந்தத்தக்கதே.

    உடல் நலத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் உத்தரவாதம் தருகின்ற வள்ளிக்கிழங்குகளை நம்மனோர் விரும்பியுண்டால் மறலியை வென்று வாழலாம் நன்றாய்!

    Share
  • கலித்தொகை: கருத்தும் காட்சியும்

    –முனைவர் துரை. குணசேகரன்.

    கலித்தொகை

    எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள் ஆகும். இவற்றுள் எட்டுத்தொகையில் இடம் பெற்றிருக்கும் படைப்புகளில் பாவால் பெயர்பெற்றவை இரண்டு. அவற்றுள் ஒன்று கலித்தொகையாகும். கடவுள் வாழ்த்துப்பாடலுடன் அகப்பொருளமைந்த கலிப்பாவால் இயன்ற நூற்றைம்பது பாடல்கள் கொண்டது. பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் முறையால் முறையே பெருங்கடுங்கோன், கபிலர், மருதனிளநாகன், நல்லுருத்திரன், நல்லந்துவனார் ஆகியோரால் 35,29,35,17,33 என்னும் நிலையில் பாடப்பெற்ற நூலின் தொகுப்பாகும். அனைத்தும் நல்லந்துவனாரால் பாடப்பட்டவையே என்னும் கருத்தும் நிலவுகின்றது.(1)

    நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல் சான்ற புலனெறி வழக்கம்
    கலியே பரிபாட்டாயிரு பாங்கினும்
    உரிய தாகு மென்மனார் புலவர் (தொல் பொருள்.56)

    என்னும் நூற்பாவால் புலனெறி வழக்கில் பாடுதற்கு ஏற்ற பாவகையில் கலிப்பாவும், பரிபாடலும் ஏற்றவை என்பது புலனாகும். “தரவு, தாழிசை, முதலிய கலியுறுப்புகள் புலனெறி வழக்கிற்கூற்று நிகழ்த்துதற்குரியார் மற்றொருவர்க்கு நன்று கட்டுரைக்குமிடத்து, அக்கருத்தினைத்தொகச்சொல்லியும் தூவாதநீக்கி வகுத்துரைத்து வலியுறுத்தியும் முடிவின்கண் பயனால் நகச்சொல்லியும் நன்றி பயத்தற்கேற்ற வெவ்வேறோசையும் அமைப்பும் உடையவாகத்திகழ்தலும் இதனது சிறப்புரிமைக்கு ஏதுவாதல் வேண்டும்” என்னும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கூற்றும் இதனை மெய்ப்பிக்கும். சிறப்புகள் பலகொண்ட கலித்தொகை கூறவந்த அடிக்கருத்துகளுக்கேற்ப காட்சியமைப்புகள் அமைந்திருக்கும் சிறப்புகள் குறித்து ஆராயுமுகத்தான் அமைகிறது இக்கட்டுரை.

    நான்கில் ஐந்து:
    இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்தியவன் சங்கத்தமிழன். தமிழகத்தை நான்கு நிலமாகவும் அவற்றுள் வாழும் மக்களின் ஒழுக்கத்தை ஐந்தாகவும் பாகுபடுத்தினர். தொல்காப்பியர் நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முறைப்படுத்தி அதற்கேற்ப திணையை அமைத்தார். நிலமில்லாப்பாலைக்கு கடைசி இடமளித்தார். ஆனால் கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடமளித்ததுடன் தொல்காப்பியர் அளித்த முறைவைப்பை குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்றும் மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

    “கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஒழுக்கங்களைக்கூறி உள்ளடக்கத்தில் புரட்சி செய்த கலித்தொகை, உருவத்திலும் அகநானூற்றைத்தவிர எந்த நூலிலும் முதலிற்கொள்ளாத பாலையை முதலிற்கொண்ட திணைவைப்பு முறையிலும் புரட்சிக்கோலத்தைக் கொண்டிலங்குகிறது” என்பார் ஆய்வாளர்.(2) பாலைக்கு நிலத்தை தமிழின் முதல் காப்பிய ஆசிரியர் இளங்கோவும் நம்பியகப்பொருள் ஆசிரியரும் வெளிப்படுத்துகின்றனர் என்றாலும் முல்லையும், குறிஞ்சியும் வறட்சியின் காரணமாக பாலை நிலமாகத்தோன்றும் என்ற குறிப்பினால் தழிழகத்தில் பாலைக்கு நிலமில்லை என்பது பெறப்படும். “கற்றறிந்தார் ஏத்தும் கலியில்” ஐந்து திணையிலும் இடம் பெறும் பாடல்களில் ஒரு சிலவற்றின் கருத்துக்கேற்ற காட்சிகளை ஆராயும் நோக்கில் அமைகிறது இக்கட்டுரை.

    பாலைத்திணை – சுரத்தின் கொடுமை:
    தலைவியைப் பிரிந்து பொருளீட்டத்தலைவன் செல்லும் காட்டின் தன்மையை,

    வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
    சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
    யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல்
    வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலி
    னலவுற்றுக் குடிகூவ வாறின்றிப் பொருள்வெஃகிக்
    கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ
    லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம் (கலி. 10:17)

    என்று வருணிக்கின்றார் சேரமன்னன் பெருங்கடுங்கோ. இதில் வறிய இளையவனின் கொடுமை, பெருந்தன்மையில்லாதவனிடத்துள்ள பயனில்லா செல்வம், வரம்புமீறி வம்பு செய்வானுக்கு வரும் கேடு, கொடுங்கோலன் ஆட்சியில் வாழும் மக்களின் பொலிவிழப்பு முதலியவற்றை எடுத்துக்காட்டி இவற்றைப்போன்று நிழலில்லா மரங்களின் கிளைகள் மட்டுமன்றி வேர்களும் வெம்பிநிற்கும் காட்சியை அழகுடன் படம்பிடித்துக்காட்டுகின்றார்.

    ஆரளைக்கள்வர்களின் அறமற்றசெயல்:
    தலைவன் குறிப்பிட்ட பாலை நிலத்தின் கொடுமையை எடுத்துரைத்து, துணையாக எம்மையும் அழைத்துச்செல் என்று தலைவி கூறுகின்ற நிலையில்,

    “மரையா மரல்கவர மாரி வறப்ப
    வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
    சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
    உண்ணீர் வறப்பப் புலவர்வாடு நாவிற்குத்
    தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
    கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்”(கலி.6:1-6)

    என்று குறிப்பிடும்பொழுது பாலைநிலத்து ஆரளைக்கள்வர்களின் கொடுஞ்செயல் நெஞ்சை பதைபதைக்கச்செய்கிறது. திருமணமான சூழலில் பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்துவரும் தலைவன் ஈட்டிய பொருளுடன் விரைந்து இல்லம் திரும்புகிறான். அவனுடைய பயணநேரத்தைவிட பிரிவின் கொடுமையினால் அவனுடைய மனம் விரைந்து தலைவியை அடையும் நிலை. இந்தச்சூழலில் பொருளீட்டிவரும் தலைவனை வழிமறித்து ஆறளைக்கள்வர்கள் பொருளை வழிப்பறி செய்கின்றனர். பொருளை அளிக்க மறுக்கும் தலைவன் மீது அம்புமழை பொழிகின்றனர். யாருடைய அம்பு எய்தபின் குருதிமிகுந்த வேகத்துடன் பீறிட்டு அடிக்கின்றது என்று பார்த்து கும்மாளமிடுகின்றனர். மிகுதியான குருதிவெளியேறியதால் வறட்சி ஏற்படுகிறது. வறட்சியினால் நீர் கேட்டு கீழே விழுகிறான் தலைவன். அவன் படும்துன்பத்தைப்பார்த்து மகிழ்கின்றனர் கள்வர்கள். இதனால் வருகின்ற கண்ணீரை நாவால் நக்கி ஒரு சிறிய நேரம் உயிர்வாழும் நிலை. தலைவன் பொருள் கொண்டு வரவில்லை என்றாலும் அவன் உயிருக்கு இறுதிதான். (கலி.பா.4:4-5) இப்படிப்பட்ட கொடுமையுடைய காட்டுவழியில் செல்லுகின்ற தலைவனுடன் தலைவியும் வருகின்றேன் என்று கூறுவதால் செலவழுங்கும் நிலை உருவாகும்.

    காட்டுக்குச் செல்லவிருக்கும் இராமனுடன் செல்லவிழையும் சீதையிடம், காட்டின் கொடுமையை எடுத்துரைக்கின்றான் இராமன். அப்போது சீதை, “நின்பிரிவினும் சுடுமோ பெருங்காடு”
    என்று குறிப்பிடும் நிகழ்வு இவண் ஒப்பு நோக்கத்தக்கது. பாலைநிலத்தின் கொடுமையைப் பளிச்சிடச்செய்ததில் கலித்தொகை முதன்மை வகிக்கிறது எனலாம்.

    உலக இயல்பு:
    தலைவனின் பிரிவு குறித்து ஆற்றாளாய தலைவியிடம் தோழி,

    “உன்னுடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
    கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல்
    பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும்
    புதுவதன்றே…….” (கலி.22:1-4)

    என்று உலக நடப்பு குறித்து எடுத்துக்காட்டி ஆற்றுவித்தது. இதேபோன்று பொருளீட்ட தலைவியைப் பிரிந்து செல்ல விழையும் தலைவனிடம், ஒரேயாடையை இருவரும் போர்த்திக் கொள்ளும் நிலை வந்தாலும் ஒருவரையொருவர் பிரியாதிருப்பவருடைய வாழ்க்கை,

    “ஒரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
    ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்
    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (கலி.18:9-11)

    என்று இளமை நிலயாமையை முதன்மைப்படுத்தி சேர்ந்திருப்போர் வாழ்வின் சிறப்பினை எடுத்துக்கூறி தோழி தலைவனின் செலவழுங்குவித்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

    உடன்போக்கை அறமெனல்:
    தலைவனைப்பிரிந்த தலைவியை ஆற்றுவித்தல், தலைவனை செலவழுங்குவித்தல் இவைமட்டுமன்றி தலைவனுடன் உடன்போக்கு சென்ற தலைவியைத்தேடிச்செல்லும் செவிலித்தாய்க்கு முக்கோட்பகவர் உரைக்கும் அறநிலை தத்துவம் நிறைந்ததாக உள்ளது. பாலைத்திணையிலுள்ள முப்பத்தைந்து பாடலில் பின்வரும் ஒரே ஒரு பாடலே களவுத்துறையிலமைந்த பாடல் என்பது குறிக்கத்தகுந்தது.

    முக்கோலையும் குடையையும் கொண்டு செல்லும் அந்தணர்களைப்பார்த்து செவிலி இச்சுரத்திடை,

    “என்மக ளொருத்தியும் பிறன்மக னொருவனுந்
    தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியை
    ரன்னா ரிருவரைக் காணீரோ பெரும”(கலி.9:6-8)

    என்று வினவ, கண்டோம்; மாணிழை மடவரலாகிய தலைவிக்குத் தாய் போன்றீர் என்று வினவலுடன், பின்வரும் அறிவுரையை அளிக்கின்றார்:

    ‘சந்தனம் பூசிக்கொள்பவர்க்கன்றி பிறந்த மலைக்கும், வெண்முத்து அணிபவர்க்கன்றி நீருக்கும், இன்னிசை கேட்பவர்க்கன்றி யாருக்கும் பயனில்லை. இவையொத்தே நும்மகளும் தலைவற்கன்றி நுமக்குப் பயன்படாள். உடன்போக்கு சென்ற இணையருக்கு எவ்வித துன்பமும் தராதீர். அவர்கள் சென்றவழி அறவழியின் பாற்பட்டதே”(கலி.9:9-23)

    திருமணமான பெண்ணைப்பார்த்து வயிற்றில் ஏதாவது புழுப்பூச்சி உண்டா என்று கேட்பது இன்னும் வழக்கமான ஒன்று. “புழு” என்றால் ஆண்பிள்ளை என்றும் “பூச்சி” என்றால் பெண்பிள்ளை என்றும் குழுஉக் குறி முறையில் வினவுவதாகும். இதற்குக்காரணம் புழுவானது வாழுங்காலம் வரை அதே இல்லத்தில் வாழ்ந்து மறைவதும், பூச்சியெனில் தக்ககாலத்தில் வேறொரு இடத்திற்குப்பறந்து சென்று வாழ்க்கை நடத்துவது என்றும், மறைபொருளை உணர்த்துவதாகும். ‘நாத்தனார்” என்று வழங்கும் உறவும் இதனை ஒத்ததே. ‘நாற்று அன்னார்” என்பதே இதன் இலக்கிய வழக்காகும். அதாவது விதைக்கப்பட்ட நாற்றங்காலுக்கு நாற்று பயன்தராது. அது பிடிங்கி நடப்படும் வேறொரு வயலுக்கே பலன்தருவதைப் போன்று தமிழ்ப்பண்பாட்டில் பிறந்தகத்தில் பெண்பிள்ளை பலன்தருவதில்லை. வாழ்க்கைப்பட்டுச் செல்லும் இல்லத்திற்கே பயன் என்னும் இன்றைய நிலை இவண் ஒப்பு நோக்கத்தக்கது.

    கொடியகாட்டில் இளகிய உள்ளம்:
    பொருள்வயிற்பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வருவான் என்பதற்குத் தலைவி, தலைவன் முன்பு உரைத்த பின்வரும் நிமித்தங்களைத் தோழியிடம்கூறி அமைதி கொள்கிறாள். தலைவன், செல்லும் வழியில்,

    துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
    பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே:
    ………..
    அன்புள் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
    மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே:
    ……….
    இன்னிழ லின்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
    தன்னிழயைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே (கலி.11:8-17)

    என்று தலைவன் முன்பு கூறிய காட்சிகளைத் தோழிக்கு எடுத்துக் காட்டுகின்றாள். இதன்படி …
    கன்று கலக்கிய சிறுதண்ணீரைப் பிடிக்கு ஊட்டிப்பின் களிறு உண்டது;
    வெயிலின் கொடுமையால் வருந்திய பெண்புறாவின் வருத்தத்தை ஆண்புறா தன் சிறகால் போக்கியது;
    நிழலின்றி வருந்திய பெண்மானுக்குத்தன்நிழலை அளித்தது ஆண்மான்.

    இக்காட்சிகள் பொருளீட்டச்சென்ற தலைவன் மனத்தைமாற்றும். அவன் திரும்பி வருவான். இது குறித்துப்பல்லியும் பலன் கூறியுள்ளது என்று தலைவனின் வரவுகுறித்து ஐயுற்ற தோழிக்குத் தலைவி பதிலளிக்கிறாள். மிருகங்களின் மேற்காணும் செயல்குறித்து ஐயுறத்தேவையில்லை. “இன்னும் இத்தன்மைகளை மிருகங்கள் பலவற்றிடம் காணலாம். மீன்களுள் “போத்து” என்னும் ஒருவகை மீன் தன் பெடையிட்ட முட்டைகளைத்தன் வாயிலேயே தாங்கிக்கொண்டு பொரிக்கு மனவிற்கு உணவு கொள்ளுவதில்லை என்று ஞானாம்பாள் அம்மையார் குறிப்பிடுவது சிந்தனைக்குரியது.(3)

    குறிஞ்சிக்கவி:
    கபிலர் பாடியதாகக்கருதப்படும் குறிஞ்சிக்கலியில் நாடக அமைப்பில் காணப்படும் பாடல்கள் சில உள்ளன. அவற்றுள் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்கும் நிலையில் பாடப்பட்ட ‘சுடத்தொடீ கேளாய்” எனும் பாடல் (51) குறிப்பிடத்தகுந்தது.

    தோழி அறியாமல் தம் மனத்தில் குடிக்கொண்ட தலைவனின் செயல்குறித்து தலைவி குறிப்பிடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிறுவயதில் தோழியுடன் தாம் கட்டிய மணல் வீட்டைக்கலைத்தும் கூந்தலில் சூடிய பூவினைப்பறித்தும் வரிப்பந்தினைக்கவர்ந்தும் சென்ற பட்டித்தனமான சிறுவன், தலைவி பருவம் எய்தியபின் அவளைக்காணவியலாமையால் அவள் இல்லம் நோக்கி வருகிறான். தலைவன் இல்லத்தில் தாயும் மகளும் இருக்கின்றனர். தலைவன் தண்ணீர்கேட்க தாய் மகளிடம் பொறுப்பை ஒப்படைக்க வந்திருப்பவன் யார் என்று அறியாது நீர் கொண்டுவந்து கொடுக்கிறாள். கொடுத்த தண்ணீரை வாங்காமல் அவளின் வளை முன்கையைப் பற்றுகிறான். எதிர்பாரதா நிகழ்வு என்பதால் தலைவி பெண்ணுக்கே உரிய நாணாத்தினால் “இவன் ஒருவன் செய்தது காண்” என்று அலற, ஒடிவருகிறாள் தாய். அப்போதுதான் வந்திருந்தவன் தன்மனத்தில் இடம் பிடித்தவன் என்பதை அறிகிறாள். இப்போது தாயிடமிருந்து அவனைக்காப்பாற்ற வேண்டியசூழல் உண்மையைச்சொன்னால் தலைவனின் நிலை பரிதாபமாகிவிடும். எதுவும் சொல்லவில்லை என்றால் தாய்க்கு ஐயம் வந்துவிடும். இக்கட்டான சூழலில் “உண்ணுநீர் விக்கினான்” என்று ஒரு பொய்யைச் சொல்லி, தலைவனைக்காக்கிறாள். தாயும் உண்மையென்று நம்பி அவளின் “முதுகைப்புறம் பழித்து” நீவிவிட, அவனோ தலைவியைக் “கொல்வான் போல் கடைக்கண்ணால் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” என்று தோழியிடம் தலைவி நடந்த கதையைக் கூறுகிறாள்.

    மேற்காணும் நிகழ்வு மூவரைக் கொண்ட ஓரங்க நாடகம் போன்று அமைந்திருப்பது சிறப்பாகும். இயல்பாக நடக்கும் கதைபோன்று இருப்பினும் அதன்வழி தலைவி தோழிக்குத்தம் உள்ளக்கருத்தை வெளிப்படுத்துகிறாள். தலைவன் தலைவி இருவரும் நேருக்கு நேர்பார்க்க, தலைவியின் தாய் தலைவனின் பின்புறம் தலைவியின் முகத்தைப்பார்க்கும் நிலையில் நிற்கிறாள். அவனுக்குத் தலைவனின் முகம் தெரிய வாய்ப்பு இல்லை. தலைவனோ தலைவி அலறியதால் அவளைக் கொல்வது போல் நோக்கினாலும் தன்னைக் காப்பாற்றியதால் காதல் நகையைத் தொடர்ச்சியாக வீசுகிறான். அதனால் “நகைக்கூட்டம்” என்ற தலைவி, நிறைவாக “அக்கள்வன் மகன்” என்று சொல்லும் பொழுது இயல்பான மக்களின் பேச்சு வழக்கில் அமைவது போன்று “திருட்டுப்பயபிள்ளை” என்று பெற்றெடுத்த தந்தையைத் திட்டுவது போன்று இருந்தாலும், தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆடவன் என்பதை உள்ளுறையாகத் தோழிக்கு உணர்த்தி, அறத்தொடு நிற்கிறாள். இது நாடகப்பாங்கில் அமைக்கப்பட்ட ஒரு சிறுகதையாக அமைந்து சிறைக்கிறது. தலைவியின் தாய் அருகில் இருந்தாலும் அவள் அறியாத நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறுவது பண்பாட்டுச் சிறப்புமிக்க பாடலாசிரியரின் தனித்திறமாகும். விரும்பிய அடிக்கருத்திற்கேற்ற காட்சியமைப்பு சிறக்கிறது என்பது வெளிப்படை. இதுபோன்று கலித்தொகையில் பலபாடல்கள் உள்ளன.

    காமர்கடும்புனல்:
    குறிஞ்சிக்கலியின் முப்பத்தொன்பதாம் பாடலின் தொடக்கமாக இடம் பெறுவது இத்தொடர். புனலில் குளிக்கும்பொழுது அடித்துச்செல்லப்பட காப்பாற்றிய ஆடவனை விரும்புகிறாள் தலைவி. தாய் கேட்கும் கேள்விகளுக்குப்பதில் சொல்ல வேண்டிவரும் என்பதற்காகத்தோழி தாம் குறித்த புனலின் தன்மையை இவ்வாறு கூறித்தொடங்குகிறாள். தொடக்கமாக புனலுக்குக் கொடுத்த அடைமொழிகளே காட்சியமைப்பில் சிறப்புடன் தாயைச்சமாளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

    ஆடவன் காப்பாற்றவேண்டிய நிலைக்கு ஏன் சென்றீர்கள்? அந்தச்சுனையில் ஏன் குளித்தீர்கள்? நீர்நிலையில் அடித்துச் சென்றதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் தாய்கேட்பாள் என்பதற்காக அந்தப்புனல் காண்பாரை ஈர்க்கக்கூடியது என்பதால் அது “காமர் புனல்” என்று சொல்லுகின்றாள். அதுமட்டுமன்றி அப்புனலில் ஏன் தடுமாற்றம் ஏற்பட்டது என்பதற்காக “கடும்புனல்” என்னும் சொல்லைப்போட்டாள் தோழி. புனலில் அடையாக வரும் “காமர்” “கடும்” என்னும் பெயரடைகள் தோழியின் பேச்சுத்திறத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இக்காட்டுகள் வழி தாயின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்வதற்கும் தலைவியைக் காப்பாற்றிய அவனே அவளின் உள்ளத்தைக் கவர்ந்தவன் என்று அறத்தொடு நிற்றலுக்கும் இத்தொடரின் வழி உணர்த்தும் காட்சிகள் வலிமை வாய்ந்தவையாகும். இங்குச் சொற்செட்டுடன் காட்சியமைப்பும் படிப்போரை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

    மருதம் – ஊடல் தீர்க்கும் உவமைகள்:
    கலித்தொகையில் சற்றொப்ப முந்நூற்றைம்பத்தாறு உவமைகளுக்குமேல் பயின்று வந்துள்ளன. அவை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் அமைப்பில் முறையே 113:59:30:40:11 என்றும், கடவுள் வாழ்த்தில் மூன்றும் ஆகும் என்று விளக்குவார் தெசிணி.(4) இவ்வகையில் உவமை நலத்தால் சிறந்திருக்கும் கலித்தொகையின் மருதக்கலியில் தலைவியின் ஊடலால் தலைவன் கூறும் உவமை மனங்கொளத்தக்கது.

    “யாரிவன் எங்கூந்தல் கொள்வான்…..” என்று ஊடி “வாரல் நீ வந்தாங்கே மாறு” என்று வாயில் மறுத்த போது தலைவன், உடலும் உயிரும் ஒன்றாக, தலை இரண்டாகிய புள்ளின் இருதலையில் ஒன்று மற்றொன்றுடன் போர்செய்வதைப்போல உன் செயல் இருப்பின் என்னுயிர் நிற்கும் வழியாது? என்று உருக்கமாக எடுத்துரைக்கிறான்.

    இதனை,

    “…………ஒருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
    போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென்
    ஆயருயிர் நிற்குமா றியாது” (கலி.89:4-6)

    என்று கலித்தொகை காட்டும். இவ்வினவலில் உள்ள உவமை தலைவியில் ஊடல் தீர்வதற்கு ஏற்றவாறு அமைந்து சிறக்கிறது. சங்க இலக்கியத்தின் வேறொரு படைப்பில் “இருதலைப்புள்ளின் ஓருயிர் அம்மே” என்று தலைவி தோழியைக்குறிப்பிடல் இவண் ஒப்பு நோக்கத்தக்கது.

    தந்தைபோலிரு – தந்தையாயிராதே:
    தலைவன் மீது ஊடல் கொண்ட தலைவி தன் மகனிடம் தந்தையின் குணத்தில் எதை ஒத்திரு, எதை ஒவ்வாதே என்று குறிப்பிடுமிடங்கள் நெகிழ்ச்சிக்குரியனவாக உள்ளன. பகைவெல்லும் திறத்தில் தந்தையாயிரு, ஒன்று கலந்த தோள் நெகிழச்செய்யும் கொடுமை நிலையில் அவராயிராதே என்னும் பொருள் பட,

    கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
    வென்றி மாட்டொத்தி பெருமமற் றொவ்வாதி
    ஒன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோல்
    மென்தோள் நெகிழ விடல் (கலி.86:13-16)

    என்று மகனுக்குத்தாய் உரைக்குமிடம், ஈன்று புறந்தருதல் மட்டுமின்றி சான்றோனாக்குவதிலும் சங்ககாலத்தாய்க்கு இருந்த பங்களிப்பு புலனாகும். இக்காட்சி தலைவியின் பிரிவுத்துயரத்தைப் படம்பிடித்துக்காட்டும் சிறந்தகாட்சியாகும்.

    முல்லைக்கலி:
    கலித்தொகை பாடியோரில் இருவர் அரசர்கள் அவர்களில் முல்லைக்கலியின் ஆசிரியரான சோழன் நல்லுருத்திரனும் ஒருவர். இப்பகுதியில் சங்கவிலக்கியங்களில் வேறெங்குமே இடம்பெறாத ஏறுதழுவல் பகுதி குறிப்பிடத்தகுந்தது. பிற கலித்தொகைப்பிரிவினின்னும் மிகக்குறைந்த பாடல்களாக இப்பிரிவில் பதினேழு பாடல்கள் அமைந்திருப்பினும் ஒவ்வொரு பாடலும் மிகுதியான அடிகளைக்கொண்டவை. வீரத்தின் விளைநிலமாய் சங்கத்தமிழர் விளங்கினர் என்பதை, புறப்பாடல்கள் மட்டுமன்றி அகப்பாடல்களும் சிறப்புறக்காட்டுகின்றன என்பதற்கு இம்முல்லைக்கலியே சான்று. கலித்தொகை காலத்தால் பழமை வாய்ந்ததாக இருப்பினும் புதுக்கவிதை போன்று.
    ஏறுதழுவும் காட்சியை,

    எழுந்தது துகள்
    ஏற்றனர் மார்பு
    கவிழ்ந்தன மருப்புக்
    கலங்கிணர் பலர் (கலி.102:21-24)

    என்று படம்பிடிக்கிறது. “ஏறு தழுவலில் வெற்றிபெறாத ஆடவரை ஆயர்மகள் புல்லாள்” என்பது பெண்டிரும் வீராங்கணைகளாக விளங்கியமைக்குச் சான்றாகும்.

    தாயின் நெஞ்சம் தோழியாக….:
    ஏற்றிணை வெற்றிகொள்ளும் ஆயனை உள்ளத்தில் ஏற்றிக்கொள்ளுகின்றாள் ஆயர்மகளொருத்தி. ஆயன் சூடியிருந்த கண்ணியைக்கொம்பிலே ஏந்தி வீசியது ஏறு. அது ஆயர் மகளின் கூந்தலிலே வந்து விழுந்தது. வீழ்ந்த கண்ணியைத்தலையிலே சூடிக்கொண்ட அவள், தான்சுற்றிக்கொள்ள ஏற்றகொழுகொம்பாக அவனை ஏற்றுக்கொண்டாள். இச்செயல்கண்டு தாய் கோபம் கொள்வாளோ என்று ஏங்கிய தலைவிக்குத் தோழி,

    ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
    நின்வெய்யனவனாயின் அவன்வெய்ய நீயாயின்
    நின்னைநோ தக்கதோ இல்லைமன்

    என்று கூற, அது கேட்ட தலைவி,

    …………. நின்நெஞ்சம்
    அன்னை நெஞ்சாகப் பெறின் (கலி.107:20-23)

    என்று வேண்டுகிறாள். ஐப்பான் நாடு அளவிலே சிறியதாக இருப்பினும் அங்கு வாழும் மக்களின் மனமே விரிந்து பரந்தது என்பார்கள். காரணம் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் முன், முதலாளியாக இருந்து இது நம்முடைய தொழிலகமாயின் பணியாளர் கேட்கும் உரிமையைத்தருவோமா என்று எண்ணிச்செயல்படுவர். தொழிலதிபராயின், இத்தொழிலகத்தில் நாம் தொழிலாளியாக இருந்தால் இப்போராட்டத்தைச் செய்வோமா என்று என்று எண்ணிச் செயல்படுவார்களாம். அதனால் போராட்டமே நடைபெறாது; நடைபெற்றால் அது நடைபெற வேண்டிய ஒன்றாகவிருக்கும் என்பார்கள். காரணம் தாம் எதிரியின் நிலையில் இருந்து எண்ணிச் செயல்படுவதே காரணம். அது போன்று முல்லைக்கலியில் காதல் வயப்பட்ட தலைவிக்கு உடன்பாடான பதிலை அளிக்கும் தோழியின் நெஞ்சு, தாயின் நெஞ்சாக ஆகவேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் நிகழ்த்தப்பெறும் உரையாடல் எண்ணி வியக்கத்தக்கது. இக்காட்சிகளை அடிக்கருத்துக்கேற்ப நயமாகவும் வலுவாகவும் ஆசிரியர்கள் அமைத்திருக்கும் திறம் பாராட்டத்தக்கது. இதுபோன்று கருத்திற்கேற்ப காட்சிச் சிறப்புடைய பாடல்கள் பல உள்ளன.

    நெய்தற்கலி:
    பாலைக்கலியை அடுத்து மிகுதியான உவமைகள் கொண்ட பகுதியாக நெய்தற்கலி விளங்குகின்றது. காட்சியைக்கற்போர் மனத்தில் எளிதின் உணர்த்த இவ்வுவமைகள் பெரிதும் பயன்படுகின்றன. பிரிவிடை ஆற்றாது மாலைப் பொழுது கண்டு வருந்திய தலைவி அவன் வரவு கண்டு மகிழும் காட்சியைக் கண்டோர் கூறுவதாகக் கலித்தொகையின் நூற்றியிருபதாம் பாடல் அமைந்துள்ளது. மருட்சி மெய்ப்பாடு மிகுந்துள்ள இப்பாடலில் “வெந்ததோர் புண்ணில் வேல்கொண்டு நுழைப்பான் போல்” காதல் நோய் கொண்டவரை கலக்கமுறவந்த மாலையோ என்று வினவுதல் போன்று, ஏழு உவமைகள் வந்து சொல்லவந்த கருத்தினை, பசுமரத்தாணி போல் நெஞ்சில் காட்சிகள் வழி பதிய வைக்கின்றன. சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய காப்பியங்களுக்கு உவமையளவில் கொடைகள் பல நல்கியமையும் புலனாகும். வரைவுடம்படாத்தலைவனுக்கு அறிவுரை கூறி வரைவுகடாயவிதத்தில் அமைந்திருக்கும் பாடலின் உள்ளுறைக் கருத்தும் வாழ்வியலின் விளக்கமும் எக்காலத்தும் எவரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் பெட்டகமாகும்.

    ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை உள்ளிட்ட ஒன்பது குணங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேண்டும் என்னும் உயரிய நோக்கில் அவற்றிற்கு சொற்கட்டுடன் தரப்பட்டிருக்கும் வரையறை மனங்கொள்ளத்தக்கது. இப்பாடலில் இடம் பெறும்,

    நீர்மலி கரகம்போல் பழந்தூங்கு முடத்தாழை
    ……
    தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல்(கலி. 133:4, 17)

    உவமைகள் அடிக்கருத்தின் உள்ளுறையாய் அமைந்து காட்சிச்சிறப்புடன் கருத்தைக்கவருகின்றன. “ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்” தொடங்கி “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்பது வரை தலைவனுக்கு உரைக்கப்படும் அறிவுரை மனித இன உயர்விற்கு வரையறுக்கப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளாகும்.

    இவ்வகையில் கருத்தைக்கற்பவர் நெஞ்சில் பதிய வைப்பதற்கேற்ற காட்சியை அமைத்ததில் கலித்தொகை முதன்மையான இடம்பெறுகின்றது. அதனாற்றான் இது கற்றோர் ஏத்தும் கலியாகி மற்றவரையும் கற்கச்செய்யும் மாசற்ற படைப்பாகிறது. இதனை ஆய்ந்ததன் வழிப் பின்வரும் முடிவுகள் பெறப்படுகின்றன:

    • உலக வழக்கு, நாடக வழக்குடன் புனைந்துரையும் கலந்த புலனெறி வழக்கிலும் காட்சிகள் அமைந்து வெளிப்படுத்த வேண்டிய கருத்துகளைத் தெற்றெனப் புலப்படுத்தல்.

    • நிலம், திணை முறைவைப்பில் வெளிப்படுத்தும் கருத்தின் இன்றியமையாமைக்கேற்ப மாற்றம்.

    • ஓராடைக்குள் இருப்பதால் மட்டுமே ஒற்றுமை என்பதைவிட இருவரின் ஒருமித்த எண்ணத்தில் ஒருங்கிருத்தலில் நடைபெறும் வாழ்க்கையே வாழ்க்கை என அறிவுறுத்தல்.

    • பிறறறியா தம்முளே புணர்ந்த புணர்ச்சியாம் காதல் மணத்தைத்தாமறி புணர்ச்சி என்று பெயர் சூட்டியதுடன் அறவழிகளில் அதுவுமொன்று எனல்.

    • கருத்துப்புலப்பாட்டில் ஓரங்க நாடகவமைப்பில் அமைந்த பல பாடல் காட்சிகள் சிறப்பிடம் பெறல்.

    • செதுக்கிச் சேர்ப்பது போன்று சொற்செட்டுடன் அமைந்துள்ள சொல்லாட்சிகள் பல கருத்துப் புலப்பாட்டில் வெற்றிபெற்றுள்ளமை.

    • உவமைகளுடன் வெளிப்படுத்தும் காட்சிகள் உள்ளம் கொள்ளை கொள்ளும் வகையில் பசுமரத்தாணியாய் பதியவைப்பதில் முதன்மை பெறல்.

    • ஈன்று புறந்தந்த தாய்க்குப் பிள்ளையைச் சான்றோனாக்குவதிலும் பங்குள்ளமை வெளிப்படல்.

    • தமிழிலக்கியங்களில் தனித்ததொரு நிலையில் ஏறுதழுவும் காட்சியைப் படம்பிடித்தல், வெளிப்படுத்தலில் பழமைக்குப் பழமையாய், பாவகையில் கலிப்பாவென்றாலும் எளிய, புதிய சொல்லாட்சியையும் புதுக்கவிதை போன்று பயன்படுத்தியமை.

    • ஒருவர் தாமாக இருந்து எண்ணுதல் மட்டுமன்றி, பிறராக இருந்து எண்ணும் சூழலும் இடம் பெற்றுள்ளமை.

    • உள்ளுறை, இறைச்சி முறையில் அடிக்கருத்து காட்சி அடிப்படையில் சொற்செட்டு, தத்துவ வரையறைகளைத் தந்து வாழ்வியல் பெட்டகமாக அமைந்துள்ளமை.

    • இவையும் இவை போன்ற பிறவும் இக்கட்டுரையின் வாயிலாகப் பெறப்படுகின்றன.

     

     

    குறிப்புகள்:-
    1.ந.மு.வேங்கடசாமி நாட்டார் (க.ஆ) கலித்தொகை மாண்புகள், கலித்தொகைச் சொற்பொழிவுகள் (சென்னை : கழகம், ம. பதி.2001).

    2.நா. ஆறுமுகம், கலித்தொகை : ஓர் ஆய்வு, (சென்னை : பாரிநிலையம், 1985), ப. 21.

    3.கே. ஞானாம்பாள் அம்மையார் (க.ஆ), ஷபாலைக்கலி| கலித்தொகைச் சொற்பொழிவுகள், ப.93.

    4.தெசிணி, கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்: ஒரு திறனாய்வு (சென்னை: அருணா விஜயநிலையம், 2002) பக்.20-73.

     

     

     

     

     

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர், தமிழாய்வுத்துறை
    ஏ.வி.சி.கல்லூரி (தன்னாட்சி)
    மயிலாடுதுறை – 609305.

    Share
  • இரா. தமிழரசி கவிதைகளில் மரபழுத்தங்களும், படைப்புச் சிறுவெளியும்

    — முனைர் மு.பழனியப்பன்.

    பழைய நடைமுறைகள் மரபுகள் ஆகின்றன. அந்நடைமுறைகளை அப்படியே சில நேரங்களில் ஏற்க முடிகிறது. பல நேரங்களில் அவற்றில் இருந்து விலக எண்ணம் தோன்றுகிறது. விலகிச் செயல்படவும் வேண்டியிருக்கிறது. பழைய நடைமுறைகளை மீள் பார்வை செய்து ஏற்கவும் மறுக்கவும் ஆன காலம் இப்போது அரங்கேறிவருகிறது. இந்நிலை மக்கள் சமுதாயத்தில் இலக்கியத்தில் ஊடகங்களில் தற்போது வேகமாக பரவிவருகின்றது. காலத்தின் கட்டாயமும், நாகரீகத்தின் வளர்ச்சியும், செயல்களில் அவசரமும், பழைய மரபுகளில் பற்றின்மையும் இத்தகைய நிலைக்குக் காரணங்களாகின்றன.

    குறிப்பாக பெண்கள் மரபு நிலையில் பெரிதும் கவரப்படுபவர்கள். புதுமையை ஏற்பதைக் காட்டிலும் பழமையை மறுப்பதில் அவர்கள் வேகம் காட்டுவதில்லை. பழைய மரபுக் கட்டுகள் இன்னமும் பெண்களிடம், பெண்களின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. இருந்தாலும் புதுமையை வரவேற்கும் பாங்கும் புதுமையுள் புகும் எண்ணமும் பெண்களிடத்தில் இல்லாமல் இல்லை. இதன் காரணமாக பெண்களின் படைப்புகள் கவனமாக ஆராயப்பட வேண்டியனவாக உள்ளன. பெண்கள் படைக்கும் ஒவ்வொரு படைப்பும் மரபில் காலூன்றி புதுமைக்கு வரவேற்பு பாடுவனவாக விளங்குகின்றன என்பது பொதுவான மதிப்பீடாகும். விழுப்புரத்தில் வசிக்கும் இரா. தமிழரசி அவர்களின் கவிதைத்தொகுதியான “குடையாய் விரியும் கவனம்” என்பதில் காணப்படும் மரபழுத்தங்களையும், படைப்புச் சிறுவெளியையும் எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

    பெண்ணுக்கான வாழ்க்கையில் மரபும் மாற்றமும் :-
    பெண்ணுக்கான கடந்த கால வாழ்க்கையை இரா. தமிழரசி கவிதையாக ஆக்குகிறார். கடந்த கால வாழ்க்கையில் பெண்பிள்ளையைப் பொசுக்கி வளர்க்கும் தாயின் அடக்குமுறை வெற்றிபெற்று அவள் மீண்டும் ஒரு குடும்பப்பாங்கான பெண்ணாக வடிவமைக்கப்பெறுகிறாள். பெண்ணுக்காக சமுதாயம் தந்துள்ள அத்தனைப் பட்டங்களையும் இக்கவிதை சுமந்து நிற்கிறது.

    அம்மாவின் கட்டுப்பாடுஅதிர்ந்து நடக்கையில் எல்லாம்
    “அடி செருப்பால” என்பாய்
    விரித்துவிட்ட கூந்தல் கண்டால்
    வீடே இரண்டாகும்
    பின்னல் தாண்டும் பூச்சரத்தால்
    பிரச்சனைதான் பலநேரம்
    கண்ணாடி முன்நின்றால்
    கண்டிப்பாய்த் திட்டுவிழும்
    தோளைத் தொடும் காதணியா
    கன்னம் பழுத்துக் கதைபாடும்

    என்று தொடங்கும் இக்கவிதை பின்வருமாறு முடிகின்றது,

    திட்டும் வார்த்தையெல்லாம்
    என்னைத் திடப்படுத்தலேயன்றி
    அத்தனையும் அர்த்தமற்ற அசைகளென்று
    நான் அறிவேன்” ( குடையாய் விரியும் கவனம் 12)

    இக்கவிதையில் பெண்களை அடக்கி வளர்க்கும் கடந்த நூற்றாண்டு அம்மாவின் கட்டுப்பாடுகள் வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன. அத்தனை வார்த்தைகளும் திட்டும் வார்த்தைகள் என்றாலும் அதனைத் திடப்படுத்தும் வார்த்தைகளாக ஏற்கவேண்டும் என்ற எண்ணம் பெண்ணுள் உருவாக்கப்படுகிறது. தாயின் சுடுசொற்களை அசைச்சொற்களாக ஏற்கும் மனப்பான்மை பெண்களிடத்தில் வளரக்கப்படுகிறது.

    இப்படி வளர்ந்த பெண் குடும்பத்துக்குள் வரும்போது கயிற்றில் நடக்க பழகும் லாவகத்தைக் கற்றுக்கொள்கிறாள்.

    கயிற்றின்மீது
    நடக்கப் பழக்கிவிட்டுக்
    கட்டாந்தரையில் நின்று
    கொட்டுகிறாய் முரசை…;
    கவனம் சிதறாமை
    வழக்கத்திற்கு வந்துவிட்டது
    கயிற்றின்மீது நடப்பதே
    வாழ்க்கை என்றாகிப் போனதால் (குடையாய் விரியும் கவனம். ப. 16)

    என்ற கவிதையில் கவனம் மிக்கவளாக குடும்பப்பெண் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வெற்றிபெறுகிறது. இவ்வாறு அம்மாவின் அடக்குதல்கள், குடும்பத்தலைவரின் சீரமைப்புகள் இவற்றோடு தனக்காகவும் வாழ்கிறாள் பெண். அவளுக்குள் பல உணர்ச்சிகள் பிரவகிக்கின்றன. இவ்வுணர்ச்சிப் பிரவாகம் அவளை அவளாக வாழ வழி செய்கிறது.

    ஒரு சிறு புருவ உயர்வில்
    வியப்பை
    ஒரு கீற்றுப் புன்னகையில்
    மகிழ்ச்சியை
    அளவான கண்சுருக்குதல்களில்
    கோபத்தை
    முகந்திரிந்து நோக்குதலில்
    அதிருப்தியை
    இலேசான தலையசைப்பில்
    அங்கீகாரத்தை
    மெல்லிய முதுகுவருடலில்
    ஆதரவை
    பூவாய் மலரும் வதனத்தில்
    ஆனந்தத்தை
    உற்றுநோக்குதலில்
    விழைவை
    நெற்றி சுருங்குதலில்
    வெறுப்பை
    மென்மையான கைகுலுக்கலில்
    நெருக்கத்தை
    கனிந்த முகத்தில்
    காதலை
    சாந்தத் தலைகோதலில்
    நிறைவை
    ஈரிமை பொருத்துதலில்
    துய்ப்பின் பூரணத்தை
    அடங்கிக் கிடத்தலில்
    புலன்களின் ஓர்மையை
    மெல்லிய அணைப்பல்
    தோழமையை
    பரவச உச்சி முகர்தலில்
    தாய்மையை…
    இன்னும், இன்னும் (குடையாய் விரியும் கவனம்,ப. 54)

    என்ற இந்தக் கவிதையில் பெண்ணுக்குள் விளையும் பற்பல உணர்ச்சிகள் சுட்டப்பெற்றுள்ளன. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற தொல்காப்பிய மெய்ப்பாடுகளைத் தாண்டி இக்கவிஞர் காட்டும் பெண்களுக்கான உணர்ச்சிகள் அதிகம். அவை அனைத்தும் சிற்சில உடல்மொழிகளில், அசைவுகளில் பெண்களிடம் காணப்படுகின்றன என்ற தெளிதல் உணர்வற்ற சடமாய் வளர்த்த மரபில் இருந்து மீறி உணர்வுடைய உயிராகப் பெண் வலம் வருகிறாள் என்பதைக் காட்டுகின்றது.

    மரபுக்கட்டுகளில் இருந்து மெல்ல விடுதலை பெற விழைகிறது பெண் உள்ளம். இதனைக் கவிதையாக ஆக்குகிறார் இரா. தமிழரசி.

    “வட்டத்திற்கு வெளியே
    கொட்டிக் கிடக்கிறது வசீகரம்
    நிர்பந்தத் தளைகளை
    நெம்பிவிட்டு வந்தால்
    நுகரலாம் சுதந்திர வாசத்தை….
    துச்சமென உயிர் மதிக்கும்
    போராளியாய்க் காத்துக்கிடக்கின்றன
    காலிரண்டும்
    பேரலையாய் உருவாகிச்
    சிற்றலையாய் உருமாறிக்
    கொந்தளித்தும் குளிர்ந்தும்
    அடங்கிக் கிடக்கிறது
    மனக்கடல்….! ( குடையாய் விரியும் கவனம். ப. 63)

    என்ற இக்கவிதையில் சுதந்திர வாசத்தை நுகரத்துடிக்கும் உள்ளமும், அடங்கிக் கிடக்கும் மனக்கடலுமாக பெண்ணின் வாழ்க்கை நடப்பதை அறியமுடிகிறது. எழுதலும் அடங்குதலுமான ஈரியக்க நிலைப்பாடாக பெண்ணின் நிலைப்பாடு இருப்பதை இக்கவிதை வழி அறிய முடிகிறது. பெண்ணின் பற்பல அழுத்தங்களுக்கு வடிகாலாக அமைவது பெண்களின் படைப்பு வெளியாகும். அவ்வெளிக்கும் பெண்கள் ஏராளமான விலை கொடுக்க வேண்டியதை மற்றொரு கவிதை அறிவிக்கின்றது.

    எழுத்தில் பதிவாகிவிடுகின்றன
    அவர்களுக்கான அத்தனை அழுத்தங்களும்
    எங்களுக்கான ஆயாசங்களை மொத்தமாய்
    இறக்கி வைக்கலாமென்றால்
    தாங்க மறுக்கின்ற ஏடுகள்
    தரத் தயங்குகிறோம்
    அதற்கான விலையையும் (குடையாய் விரியும் கவனம்,ப. 55)

    பெண் பல்வேறு மரபு அழுத்தங்களுக்கு உட்பட்டவளாக விளங்குகிறாள் என்பதும், அதிலிருந்து விடுபட அவளுக்கு சிறு படைப்பு வெளி கிடைத்துள்ளது என்பதும் இக்கவிதைவழி தெரியவருகிறது. இருந்தாலும் இந்தச் சிறு படைப்புவெளிக்கு பெண் தரவேண்டிய விலைகளும் அதிகம் என்பதை இந்த உலகம் உணர வேண்டும் என்ற கவிதை வேண்டுகோள் வைக்கின்றது. இவ்வகையில் பெண்களின் தற்கால நிலைப்பாட்டை உணர்த்தும் கவிதைத் தொகுதியாக குடையாய் விரியும் எண்ணம் என்பது அமைகிறது. பெண்களுக்கு சிறு விடுதலை வெளிச்சம் கிடைத்திருப்பதைப் பதிவு செய்யும் முக்கியமான கவிதைத்தொகுதி இதுவாகும்.


    முனைர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்.
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
    திருவாடானை

    M.Palaniappan
    muppalam2006@gmail.com
    manidal.blogspot.com
    9442913985

    Share
  • சங்கத்தமிழர் கடவுட்கொள்கையின் வேரிற்கிடக்கும் பதுக்கையும் நடுகல்லும்

    –சு.விமல்ராஜ்.

    வழிபாட்டு மரபு என்பது மானிட வரலாற்றின் தொல்பழங்காலம் முதற்கொண்டு இயல்பாய் தோன்றி வளர்ந்தது. உலக மானிடவியல் வரலாற்றின் முதற்படியிலிருந்து பயணம் மேற்கொள்ளின் அதன் இயற்கை சார்ந்த படிநிலை வளர்ச்சியை உணரமுடியும். செம்மொழி மக்கள்-மொழி-இலக்கியம் என்னும் பார்வையில் பண்டு வரலாற்றுத் தொன்மையுடைய தன்மையில் வைத்து எண்ணத்தக்க மொழியாகவும் இலக்கியமாகவும் மாந்தராகவும் கருதத்தக்க சங்கத்தமிழரின் கடவுட்கொள்கையை ஊன்றிப்பார்க்கின் இந்திய வைதீகக் கொள்கையும் அதன் வழி பெறப்படும் மேலை ஆரிய வேதமரபும்; தென்னிந்திய கடவுட்கொள்கையில் கிடக்கும் மூத்தோர் வணக்கச் செயல்பாடுகளையும் உணரமுடியும்

    இந்திய வைதீக வழிபாடு:
    இந்திய புராண வரலாற்றுத் தொன்மம் பிரசாபதி, ருத்ர, விஷ்ணு, சிவ பிம்பங்களை முன்னிருத்தி வைத்திருக்கிறது. வேத மரபென்பது தொல் இந்திய கடவுட் கோட்பாட்டு மரபைச் சுட்டி நிற்கிறது. யூதமரபும் அதையொட்டி ஆரியத்தின் மேல் எழுப்பப்படுகிற மேலை ஆரிய கீழை ஆரிய வகைப்பாட்டு பார்வை வரலாற்றின் மீது இருக்கும் காரணத்தினால் திருசூலம்-சூலம் எவ்வகை வேறுபாடு என்பதை ஆழப்பார்க்க வேண்டும். யூத வேரின் மீதான மேலை ஆரியப்பார்வை இந்திய வேதங்களின் மீது வைத்துப்பார்க்கப்படுகிறது. பிரஜாபதி எனும் சொல் குறித்து சில கூற்றுகள் இருக்கின்றது.(ஆதி வேத ஆகமத்தில் சொல்லப்பட்ட பிரஜாபதி – இந்திய ஆதிவேத பிரஜாபதி இரண்டும் ஒன்று என்பது [In Hinduism, Prajapati (Sanskrit: प्रजापति (IAST: prajā-pati)) “lord of people” is a group of Hindu deity presiding over procreation and protection of life, and thereby a King of Kings (Rajanya or Rajan). Vedic commentators also identify him with the creator referred to in the NasadiyaSukta.]1 இந்த திரிசுலம் எதன் குறியீடு என்பதை வேர்வரையில் சென்று பார்த்தால் விளங்கும்.

    வழிபடு-வழிபாடு:
    வழிபாடு என்பது ஒன்றின் மையப்பொருளில் ஒன்றித்து பயணப்படுதல். இலக்கை மையமாகக் கொண்ட தமிழர் வாழ்வில் கடவுள் என்னும் கோட்பாடு இழைந்து காணப்படுகிறது. பதுக்கையும் நடுகல்லும் சான்றாய் நின்று விளங்கும்.

    “விழுத்தொடை மறவர; வில்லிடத் தொலைந்தோர்
    எழுத்துஉடை நடுகல் அன்ன’’ 2

    தொல்லியலார் கல்திட்டைகளையும் பதுக்கைகளையும் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளனர். சங்க காலத்தில் இத்தகைய கல் பதுக்கைகள் இருந்தன. தரையைத் தோண்டிச் சிறிது நிலத்திற்கடியில் இருக்குமாறோ அல்லது முழுவதும் அடியிலிருக்குமாறோ பிணக் குழியை அமைப்பர். நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் பட்டைகளை இதற்குப் பயன்படுத்தனர். இக்குழியைச் சுற்றிலும் ஒன்றிரண்டு வரிசைகளில் கல்சுவர்கள் எடுப்பர். ஈமப் பொருளைக் குழியிற் போட்டபின் ஒரு கல்லால் மூடிவிடுவர். அதற்குப் பிறகு மேலே கூழாங்கற்கள் பரப்பப்பட்டன. இது புதைபொருள் ஆய்வாளர் கண்டுள்ள பதுக்கைகளின் அமைப்பாகும்.

    ‘‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
    கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்
    படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை’’3

    நடுகல் வழிபாடு- போரில் இறந்துபட்ட வீரர்கட்குக் கல் நட்டு அவர்களைக் கடவுளாக வழிபட்ட மரபினை இலக்கியம் பலபடப் பேசுகிறது. வெட்சித் திணையின் பகுதியில் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை வாழ்த்து என்றும் நடுகல் வணக்கத்தின் ஆறு படிநிலைகளைத் தொல்காப்பியம் கூறியுள்ளது நோக்க இம்மரபு அவர் காலமாகிய கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனத் தெரிகின்றது. மாடுகளே பண்டு செல்வமாகக் கருதப்பட்டன. எனவே, பகைவரிடமிருந்து மாடுகளைக் காக்கும் முயற்சியிலீடுபட்டு உயிர் நீத்த கரந்தை வீரர்கட்கே பெரும்பான்மையான கற்கள் நடப்பட்ன என்று அறிய வேண்டியுள்ளது. நடுகற்கள் ஊருக்குப் புறத்தே தொலைவில் இருந்த திடல்களில் நடப்பட்டன. ஒரு வீரனுக்குக் கல் நட்டதைப் புறநானூற்றுப் பாடலொன்று கூறுகின்றது.

    ‘‘ஊர்நனி யிறந்த பார்மூதிர் பறந்தலை
    ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
    போந்தையந் தோட்டில் புனைந்தனர்
    மல்லான் கோவலர் படலை சூட்டக்
    கல்லா யினையே கடுமான் தோன்றல்’’4

    இக்கற்களில் வீரனுடைய பெயரும்பீடும் எழுதப்பட்டன. அணிமயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டன.

    ‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
    பெயரும் பீடும் எழுதி அதன்தொறும்
    பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்’’5

    பழந்தமிழர்களுக் கென்ற தனித்துவமான வழிபாட்டு மரபுகள், நம்பிக்கைகள் என்பவை பண்டைய தமிழர் தொன்மையை நிலை நிறுத்துகிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் பெயர் கி.பி. பதினோறாம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் வந்ததாகக் குறிப்பர். இதில் மாறுபாடு உண்டு. பன்னிருபாட்டியலும் பின்னால் கி.பி.பதிமூன்றாம், பதினான்காம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கொள்ளப்படும் மயிலைநாதர் உரைகளிலும் காணப்படுகிறது. தொல்தமிழர் வழிபட்ட கடவுள் மரபை நுண்ணித்து பார்த்தால் இயற்கையின் மீது பிடிப்போடு இருந்து ஒழுகியதை உணரமுடியும்.

    தொல்காப்பியத்தில் கடவுள்:
    தொல்காப்பியனார் திணைகள் ஒவ்வொன்றுக்குமான கடவுளரின் பெயர்களை விவரித்துக் கூறியிருப்பார்.

    “மாயோன்மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”6

    என்பது தொல்காப்பியம். தொல்காப்பியர், – மாயோன் – சேயோன் – வேந்தன் – வருணன் என்று நான்கு கடவுளரைப் பற்றி முதலில் கூறி, அக்கடவுளர் நெறியைப் போற்றி வணங்கிய நிலங்களைக் குறிப்பிடுகிறார்.

    இந்த நூற்பாவின் படி, காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் கடவுளாக மாயோனாகிய திருமாலும்[“மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றானதாகும். மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்”]7, மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனாகிய முருகப்பெருமானும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கடவுளாக “வேந்தன்” ஆகிய இந்திரனும், கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கடவுளாக வருண பகவானும் குறிக்கப்பட்டுள்ளனர். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் “கொற்றவை” வழிபாடு நிகழ்ந்ததாக சங்க நூல் வழியும், “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து” என்று சங்கம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.

    முருகன், திருமால், வேந்தன், கொற்றவை, வருணன் என்ற திணைக்கடவுட் கோட்பாடென்பது சிறு தெய்வ வணக்க வழிமுறையாக கருதப்படுகிற மூத்தோர் வணக்கத்தின் படி நிலை என்பதையும் உணரவேண்டும். பதுக்கையும் அதைத்தொடர்ந்த நடுகல்லும் எத்தகைய நிலையை உணர்த்தி நிற்கிறது என்பதை தெளிந்து நோக்க வேண்டும். முருகு, திருமால் வழிபாட்டளவில் ஏனைய கடவுளர்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை இங்கு நோக்குதல் நன்று.

    முருகு-முருகன்:
    முருகு+அன்=முருகன். முருகு என்னும் சொல்லுக்கு சதுரகராதி அகில்,அழகு, இளமை, எழுச்சி, கள், திருவிழா, முருகன், வாசனை என்று பலபொருளைச் சுட்டுகிறது.8
    முருகன் பெயருக்கு இளையோன், குமரன், வெறியாட்டாளன் என்கிறது.9
    குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். மக்கள் தோன்றிய இடமும் வாழ்வு தொடங்கிய இடமுமாகக் கருதப்பெறும் மலையை முருகன் இடமாகக் கொண்டான்.
    முருகன் வேலை போர்க்கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டான். இந்திரன் பணியாளரான நெருப்பையும், காற்றையும் சுப்பிரமணியர் என்று அழைத்தனர் என்று தைத்ரீய ஆரணியகம் கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் முருகனைத் தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் முருக வழிபாடு முறையாகிய வெறியாட்டு மிகப் பழைமையானது என்பதும், சமுதாயக் கூட்டு வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றியது என்பதும் அறியப்படுகின்றன. கடவுட் கோட்பாட்டில் முதலில் தோன்றியது முருக வழிபாடு குறித்த கோட்பாடே. தமிழ் நாட்டில் முருக வழிபாட்டிற்குத் தோற்றமாயிருந்தது. வேலன் வெறியாடல். இஃது ஓர் இனக்குழு வழிபாட்டு முறை என்பர். கடவுள் வழிபாட்டிற்குத் தொடக்க நிலையில் உருவங்கள் வைத்து வணங்கப்படவில்லை. குறிப்பிட்ட அடையாளங்களை வைத்தே வழிபட்டனர். அதுபோல முருகனுக்கு அடையாளமாக வேலாயுதம் வைத்து வணங்கப்பட்டது.

    வேலாயுதம் என்னும் கருவியின் மீதான ஆய்வும் வைக்கத்தக்கது. கிரேக்க தேசத்தில் பொசைடன் என்னும் கடல் கடவுளின் குறியீடாய் மூன்று முனைகளை உடைய ஒன்று காட்டப்படுகிறது. சிவனின் சூலாயுதம் மூன்று குறியீடுகள் உடையதாய் காட்டப்படுகிறது. இஃது தனித்து ஆய்வு நிகழ்த்துவதற்கு உரியது.
    சங்க இலக்கியம் முழுவதும்ஒன்பது இடங்களில் முருகன் பெயர்வருகிறது.

    “உருவப்பல்தேர்இளையோன்சிறுவன்
    முருகற்சீற்றத்துஉருகெழு குருசில்”10
    “முருகன்தாள்தொழு தன்பரங்குன்று”11
    “முருகன்நற்போர்நெடுவேள் ஆவி”12
    “சினம்மிகுமுருகன்தன்பரங் குன்றத்து”13
    “முருகன்ஆர்அணங்கு என்றலின்”14
    “முருகன் அன்ன”15
    “முருகற் சீற்றத்து உருகெழு குருசில்”16
    “முருகன் சுற்றத்து அன்ன”17
    “அணங்குடை முருகன் கோட்டத்து”18
    முருகு என்னும் சொல் முருகன் என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது. முருகு, முருகநழகு என்னும் பொருளைச் சுட்டி நிற்கும்.

    “முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்”19
    “முருகு அயர”20
    “அருங்கடி வேலன் முருகொடு வளைஇ”21
    முருகு, முருகன் கடவுள் அல்லது நிலத்தலைவனின் பெயர் உணர்த்தி செவ்விய முருகியற்பொருந்திய இடத்தை எடுத்துக்காட்டுகிறது.

    வேலன்/வேலான்/வேல்வல்லான்/செவ்வேலான்:
    வேலன் பெயர் சங்க இலக்கியத்தில் முப்பத்து ஓரிடங்களில் இடம்பெற்று வந்துள்ளது. வேல் என்னும் கருவியினை உடையவன் என்னும் பொருளில் வேலுடையான் பொருளுணர்த்தி நிற்கிறது. கருவியை உடையவனாதலால் வேலின் பெயர் ஆளுக்காகி வேலன் என்றானது. வேல்+அன்= வேலன். வெறியாட்டு நிகழ்த்துதல் நிகழிடத்தில் கருவியானது முதன்மை. வழிபடு முறைகளுள் ஆள் ஒருவன் தன்மேல் முருகன் வருவதாய் ஆடி நிகழ்த்துவது சங்கப்பாடல்கள் பலவற்றில் பயின்று வந்துள்ளது.

    வேல்+ஆன்=வேலான் என்று பரிபாடலின் ஈரிடங்களில் வருகிறது.22 வேற்சொல்லுடன் ஆன் விகுதிப்பெற்று வேலான் என்று வழங்கியுள்ளது. முருகனை வேலுடையவன் என்னும் பொருளில் வேலன், வேலான் என்றவாரு வழங்கிவந்துள்ளது.
    வேல்வல்லான் – வேலில் வல்லான். குறிஞ்சி நிலத்தவனை/ தலைவனை/ முதன்மையுடையவனை முருகு, முருகன், வேலன், வேலான் என்று உணர்த்தி நின்று வேலில் வல்லானாய் முருகனைக் காட்டி வந்துள்ளது. செவ்விய வேலையுடையவன் என்னும் பொருளில் செவ்வேலான் என்றது.23

    முருகன் கோயில்:
    சங்க காலத்தில் முருகன் கோயில் கொண்டிருந்த இடங்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கடம்ப மரத்தடியில் முருகன் வீற்றிருந்ததை,

    ‘‘….. . ..புகழ் பூத்தகடம்ப மர்ந்து
    அருமுளி மரபின் ஆன்றவர் நுகர்ச்சியின்
    இந்நிலத்தோடும் இயைகெனக் கீத்தநின்
    தண்பரங்குன்றத்து’’24

    என்ற பரிபாடல் அடிகளிலிருந்தும் உணரலாம். குறிஞ்சி நில மக்கள் தம் பண்டைய மரபு முறையிலேயே வழிபாடுசெய்து வந்தனர் இலக்கியங்களில் முருகக் கடவுளைப் பற்றி எழுந்த பழைமையான நீண்ட முதல் தனிப்பாட்டு திருமுருகாற்றுப்படையாகும்.

    முருகன் வழிபாடு பற்றி அகநானூறு :
    முருகன் வழிபாடு பற்றி அகநானூறு குறிப்பிடும்போது,

    ‘‘சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
    சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து’’25

    என்ற வரிகளில், முருகன் தெய்வப் பண்புகளையன்றி, வீரப்பண்பு உடையவனாகத் திகழ்ந்திருக்கிறான். தமது பகைவனாகிய சூரபன்மாவினைச் சுற்றத்தோடு அழித்துச் சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன் சினம் மிகுந்த முருகன்; அச்சினம் தணிந்து அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் தட்பம் வாய்ந்த அறுபடைவீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் பற்றியதில் தெரியவருகிறது.

    ‘‘புரிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு
    முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்’’26

    என்ற அகநானூற்று வரிகளில் ஒலியையொத்தக் கடுஞ்சீற்றத்துடனும் பகைவரை எதிர்க்கக் கூடியவனாகிய முருகனின் வலிமையை இவ்வடிகள் தெளிவுறுத்துகின்றன.

    முருக வழிபாடும் வைதீகமும்:
    முருகன் குறித்து வரும் பல்வேறு பெயர்கள் மலை நிலக் கடவுளாக முருகனைக் கொள்வதற்கு துணை நிற்கிறது. முருகனின் பல்வேறு பெயர்களும் வணக்கமுறைகளும் அவரை வீரவணக்கப் பின்புலம் உடையவராகக் காட்டுகிறது. சிவனுக்கும் முருகனுக்குமான வைதீகச் சார்பு டையக்கருத்துகள் ஆய்வுக்கு உரியதாக உள்ளது.

    தொல்தமிழரின் மூத்தோர் வணக்கம் வீரர்கள், தலைமைப் பண்புடையவர்கள், உறவுகளில் முதிர்ந்தவர்கள் ஆகியோரை வணங்கும் முறை பழக்கத்தில் இருந்ததைக் காட்டுகிறது. வழிபாட்டு வரலாறு ஆதிமனிதன் இயற்கையைக் கண்டு நடுங்கி கதிரோனையும், திங்களையும் மதித்து வழிபடுவது என்ற வழித்தடத்தில் மரத்தைத் தான் முதன்முதலாக வழிபட்டான்.

    “நாகரிகம் தோன்றிய காலம் முதலாகக் கொண்டு உலகமெங்கும் மனிதன் மரங்களை வழிபடத் தொடங்கினான் என்பதே ஆய்வாளர்களின் கருத்து “27
    மரவழிபாட்டிற்கு அடுத்த நிலையில் விலங்கு வழிபாட்டில் நாகம் தொன்மையானது. இந்தியாவில் நாகர்கள் பழமையான குடிகள். நாகர் என்பதற்கு ஒரு பழைய சாதியர்28,
    நாகநாடு என்பதற்கு நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு29 என்றும் பொருள் கொள்வர்.

    இவ்வழிபாட்டு அமைப்பில் தமிழர்களின் தொன்மையான முறைகளுள் ஒன்றான நடுகல் வழிபாடு உள்ளது. இவற்றுள் இரண்டுள்ளது. ஒன்று பெருங்கற்படை என்னும் பதுக்கைகள் இரண்டாவது அதன் நீட்சியான நடுகல் என்பதுமாகும்.

    பதுக்கை (Cist) என்னும் பெயர் சங்க இலக்கியத்தில் பதினான்கு இடங்களில் வருகிறது.30நடுகல்

    “அம்பின் விசை இடை வீழ்ந்தோர்
    எண்ணு வரம்பு அறியா உவல்இரு பதுக்கி “31

    நடுகல் என்னும் பெயர் சங்க இலக்கித்தில் பதினெட்டு இடங்களில் வருகிறது.

    “நடுகல் பீலி சூட்டி “32
    “நடுகல்லின் அரண் போல “33

    என்றுவரும் இவற்றிலிருந்து பதுக்கை, நடுகல் வழிபாடிருந்ததை உணரமுடியும். இறந்தவர்களை புதைப்பதும் எரிப்பதுமான பழக்கம் இருந்தது. வீரர்களை, உயர்குடியில் பிறந்தவர்களில்தான் பதுக்கை, நடுகல்லும் கொண்டு வழிபடும் முறை இருந்தது. (தொல்லியல் நோக்கில் சங்க காலம்.கே.ராஜன்.)

    புதைப்பதையும் எரிப்பதையும்,

    “இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
    படு வழிப்பாடுக “34

    என்னும் பேரெயில் முறுவலார் பாடல் எடுத்துக் காட்டுகிறது. இதற்கு சான்றாக மணிமேகலை,

    “சுடுவேள் இடுவேள் தொடு குழிப் படுவேள்
    தாழ் வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் “35

    என சுடுபவர்களையும்(Cremation), இறந்தவர்களை ஓரிடத்தில் வைப்பதை(Post Excarnation burial), குழியில் இடுவதை(Pit burial), நிலத்திற்கு அடியில் கல்லறை வைப்பதை(Rock chamber or Cist burial), தாழிகள் இட்டு அதன் மேல் மூடிகள் கொண்டு மூடுவதை(Urn burial encapped with lid), [“தாழி இடுவதை மாயிருந் தாழி கவிப்ப “36 என்பர் பரணர்] விளக்கி நிற்கிறது.

    இறந்தவர்களை மதிப்போடு இடுவதும், சுடுவதும், பதுக்கை, நடுகல் அமைத்து அவர்களை வழிபடுவதும் தமிழர்களின் வீரவனக்கச் செயற்பாடுகளுள் ஒன்றாக விளங்கியது. முருகு வழிபாடும் அத்தகு வீரவனக்கச் செயற்பாடுகளின் தலைமுறை கடந்த மாற்றுருவே ஆகும். குறிஞ்சி நிலத்தலைவன் மதிப்பு மிகு நிலையில் வீரவணக்கம் செய்யப்பெற்று அதுவே கடவுள் நிலைக்கு உயர்த்தப் பெற்றிருக்கிறது.

    வைதீகக் கோட்பாடுகள் முருகனை சிவனின் பிள்ளை, நெற்றிக்கண்ணில் உதித்தவர் என்கிறது. இந்நிகழ்வும் பரிபாடலில் சுட்டப்பெறுகிறது37 பூர்வகுடி வழிபாட்டு அமைப்புக்கும் இவ்வைதீகம் சுட்டும் புராண நிகழ்வியல் கோட்பாட்டுக்கும் முரண்பாடு உடையதாய் உள்ளது. ஸ்கந்தன் என்னும் வடமொழிப் பெயர் கந்தன் என தமிழில் வழங்குவதாய் ஒரு கூற்றுண்டு. கந்தழி என்றால் பரம்பொருள் மற்றொன்று மதிலழித்தல் என்னும் பொருளுண்டு38) கந்து எனின் தெய்வம் உறையும் தூண்.39 எதிர் நாட்டினரை, வீரரை அழிப்பவர் என்னும் பொருளில் அவ்வாறான வீரருக்கு வணங்கும் மதிப்பு உருவாகி பின்னர் நிலம் சார்ந்த கடவுளாக மாற்றம்பெற்றது.

    சான்றெண் விளக்கம்:

    1.விக்கிபீடியா -பிரஜாபதி
    2. ஐங்குநுறூறு.352
    3. அகம். 231)
    4.புறம். 265.1 – 5
    5. அகம். 67
    6.தொல்.அகத்.5
    7.தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி, பக்.58.]
    8.சதுரகராதி.ப.158.
    9.மேலது.ப.188
    10.பொருணர்.131-132
    11.பரிபாடல்.8-81
    12.அக.1.3
    13.மேலது.59.11
    14.மேலது.98.10
    15மேலது.158.16
    16.புறம்.16.2
    17.மேலது.23.4
    18.மேலது.299.6
    19.திருமுரு.243-244
    20.மது.38
    21.மேலது.611
    22.பரிபாடல்.9.68, கலி.27.16
    23.கலி.93.26
    24.பரிபாடல்.19
    25.அகம். 59
    26. மேலது.68
    27கு.சேது.சுப்பிரமணியன்.திருமுறைத் திருத்தலத் தெய்வீக மரங்கள். முன்னுரை
    28. ச.வே.சுப்பிரமணியன்.மாணவர் தமிழ் அகராதி.ப.310
    29மேலது .310
    30.ச.இ.சொல்.அடைவு.த.பல்கலை.ப.448
    31அக.109.7-8
    32.அக.35-8
    33பட்டிணப்.79
    34.புறம்.239.20-21
    35மணிமேகலை.6.111.66-67
    36.நற்.271.11
    37.பரி.5.21-54
    38. ச.வே.சுப்பிரமணியன்.மாணவர் தமிழ் அகராதி.ப.127
    39.மேலது.ப.127

    சு.விமல்ராஜ்,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி,
    மன்னன்பந்தல்
    மயிலாடுதுறை
    அலை.8220470590
    மின்:thamizhvimal@gmail.com

    Share
  • மார்கழி மணாளன்  14   அஹோபிலம்  

     க. பாலசுப்பிரமணியன்

    2b6ee445-4a50-4d1e-856e-b2dddafe42df

    கருவினில்  நாரதன் தந்த  தாரக மந்திரம்

    கருத்தினில் கண்களில்  கண்ணனின் சித்திரம் !

    தேனூறும் சொல்லெல்லாம் திருமாலின் மந்திரம்

    ஊனூறும் வினையெல்லாம் ஒட்டிவிடும் திருப்பதம் !

     

    நானென்று நானென்று  நலமிழந்த தந்தை

    நாரணனை  வெல்லத்துடிக்கும்  அகந்தை !

    பாலகனைக் கொல்ல முயன்றான் தந்தை

    பரந்தாமன் இருக்கையில் ஏது கவலை ?!

     

    உள்ளறிந்த பாலகனின்  உணர்வறியாத் தந்தை

    ஒருநாமம் நாரணனே என்றுணரா அகந்தை

    மரணமில்லா இரணியனே தானென்ற மமதை

    மாதவனுக்கு இணையாமோ மன்னனின் சிந்தை ?

     

    தூணிலும் சயனம்  துரும்பிலும் சயனம் !

    தூணிணைப் பிளந்தது அழகிய சிங்கம் !

    ஆணவம் அழிக்க அரிதலை வந்தது

    வானமும் வேதமும் வணங்கியே  நின்றது !

     

    அஹோ ! பலம் அஹோபிலம் அகிலமே வியந்தது

    அன்னையாய் சேயினை அணைத்திட அரங்கமே வந்தது!

    ஆயிரம் ஆதவன் அணி அமைத்து ஒளிர்ந்தது !

    பாயிரம் பாடிட பக்தியின் வல்லமை வென்றது !!

     

    புண்ணிரண்டாய் கண்ணிரண்டும் மண்ணைதனைப் பார்த்திருக்க

    விண்ணிருந்து கண்ணனவன் நெஞ்சினினிலே வந்திறங்க

    காட்சியிலே கற்பனையில் அவன் மட்டும் நிறைந்திருக்க

    காலமெல்லாம் நன் நெஞ்சே! கண்ணனுக்குத் தலைவணங்கு !

     

    தீராத ஆசைகளைப் பகடைகள் தூண்டிவிடத்

    தானிழந்து தாரமிழந்து தலைகுனிந்த பஞ்சமரின்

    திரௌபதியும் தஞ்சமெனத் தலைகாத்த  தாமோதரா !

    தஞ்சமென வந்திட்டேன் வஞ்சமின்று வாழ்த்திடுவாய்  !

     

     

     

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 43

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    ஆதலால் நான் அடுத்தோர் பல் மருத்துவரை நாடி, “இந்தச் சாபப் பல்லைப் பிடுங்கி எடுங்கள். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காதீர். அடியை வாங்கிக் கொள்ளும் ஒருவன் அதை எண்ணிக் கொள்ளும் மற்றவனைப் போலில்லை !” என்று கூறினேன். நானிட்ட கட்டளைப்படி மருத்தவர் பல்லை பிடுங்கி எடுத்துச் “சொத்தைப் பல்லைப் பிடுங்கியது நல்லது.” என்றவர் கூறினார்,” மனித சமூகத்தில் எலும்பு வரைச் சீர்கெட்டுப் போன பல்வேறு சொத்தைப் பற்கள் உள்ளன ! அவற்றை அகற்றச் சமூகம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல், தங்கத்தை இட்டு நிரப்புவதில் திருத்தி அடைந்து வருகிறது.
    – கலில் கிப்ரான் (Decayed Teeth)

    ___________________

    திருமணம்
    ___________________

    இங்கே தான்
    காதல்
    வாழ்வின் அரிச்சுவடியை
    எழுதத் துவங்கிறது !
    இரவில் தோன்றிப்
    பகலில்
    பாடி வரும்
    இசைக் கீத மாகவும்
    புகழ்ப் பாமாலை யாகவும் !
    நிகழ்வது இங்குதான் !
    ___________________

    இதிலிருந்து தான்
    காதல் தேவி
    வாழ்வின் அரிச்சுவடியை
    எழுதத் துவங்கிறாள் !
    இரவில் தோன்றிப்
    பகலில் பாடி வரும்
    இசைக் கீத மாகவும்
    புகழ்ப் பாமாலை யாகவும் !
    நிகழ்வது இதிலிருந்து தான் !
    இங்கிருந்து தான்
    காதல் வேட்கை
    முகத் திரையை நீக்கி விடும் !
    இதயச் சந்துகளில்
    விளக் கேற்றி
    ஆத்மா வுக்கு நிகரற்ற
    களிப்பை அளிக்கும் !
    கடவுளைத் தழுவ வைக்கும்
    அந்த இணைப்பு !
    ___________________

    தெய்வீகப் பிறவிகள் இரண்டின்
    ஐக்கிய உடன்பாடுதான்
    திருமணம் !
    மூன்றாவது பிறவி ஒன்று
    வையத்தில்
    தோன்றும் என்பதற்குச்
    சான்றிதழ் !
    ஆத்மாக்கள் இரண்டின்
    கூட்டுறவு !
    தனிமை போக்கிடும் திருமணம்
    ஓர் உறுதிப் பிணைப்பு !
    ஈர் ஆன்மாக்கள்,
    ஏகாந்தப் பிறவிகள் கூடும்
    உன்னத இயக்கம் !
    தங்கத்தில் வடித்த வளையம்
    சங்கிலில் !
    ஆரம்பம் அதற்கு
    காதலர் கண்ணோக்கு !
    நேரும் விளைவு
    நித்தியப் பிணைப்பு !
    ___________________

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    கோதைக் காப்பு …..

    மார்கழி முன்னிட்டு ‘’கோதைக் காப்பு’’….நாடகம் போட ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற போது சன்னிதியில் எழுதியவை சில வெண்பாக்கள்….

    இவை நான்கும் கேசவ் ஓவியம் பார்த்த பரவசத்தில் எழுதியது….
    ——————————————————————————–

    4ddd7d75-3703-416a-b7a9-656f2116f160

    “பச்சை மலையோன் ,பவளச்செவ் வாயனவன்
    இச்சை மிகக்கொண்டான் இவ்வையம்- மெச்சிட;
    ஆதலால் நின்றான் அழகுக் கிளியேந்தி
    கோதையாய்க் கோலம் கொடுத்து”….

    “வேண்டாத மூப்பினை வாலிபத்தில் ஏற்றுப்புள்
    கீண்டானைக் காதலிக்க கோதையாய் -ஆண்டாளாய்,
    ஆனாளோ அவ்வை அதனால்தான் பாசுரங்கள்
    தேனாய் இனிக்கின்ற தோ”!….

    “ஆடிப்பூ ரத்தில் அவதரித்த ஆண்டாளின் ,
    சூடிக் கொடுத்த சுடர்கொடியின், -ஜோடித்து
    பாக்களாய் ரங்கமன்னார் பாதத்தில் இட்டநறும்
    பூக்களே நம்பாது காப்பூ”….

    “சாரங்க மன்னார்க்கு சொல்லித் திருப்பாவை
    பாரங்க மன்னாராய் பாதித்து, -சீரங்கம்
    தாதை யுடன்சென்று தாரமாய் மாறிய
    கோதைமுகம் பூசுமஞ்சள் காப்பு”….

    ’’ஒருநூற்று நாற்பத்தி மூன்றுரைத்த தாயே
    கருமூர்த்தி மேல்கொண்டு காதல் -திருவில்லிப்
    புத்தூரின் வாழ்வே பெரியாழ்வார் பெண்பிள்ளாய்
    கொத்தலர் பூம்பாவாய் காப்பு….(1)

    கயிற்றுதரக் கண்ணன்மேல் காதல்கொண்(டு) அன்று
    இயற்றினாய் பாடல் எமக்காய் -பயிற்றுவித்த
    தாதையுடன் சென்றந்த கீதையோன் கைப்பிடித்த
    கோதைக்கை கோகிலமே காப்பு….
    ….(2)

    வினதை மகனும் புனிதர் மகளும்
    இனிதாய் இடவலம் ஏள -அணிதிகழ்
    அங்கமதில் வில்லிபுதூர் ஆண்டாள் அணிந்ததேற்ற
    ரங்கமன்னார் கோலம் ருசி….(3)

    கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
    முன்னாடி சூடி மகிந்ததற்குப் -பின்னாடி
    வில்லிபுதூர் ரங்கனின் வெற்றிக்(கு) அலங்கலிடும்
    கிள்ளைகொள் கோதாய் காப்பு….(4)

    கிளிப்பிள்ளை போலவள் கீசுகீசு பாட்டை
    களிப்புடன் ஓதுவான் கண்ணன் -தளிப்புன்னில்
    அக்காரச் சோறுண்ன அந்தரங்கன் கைப்பிடித்து
    உக்கார வைத்தோளை உன்னு….(5)

    எத்தனுக்(கு) எத்தனந்த ஏரார்ந்த கண்ணியவள்
    பெத்தெடுக் காதஅந்தப் பிள்ளையை -முத்துடை
    பந்தலுக்குக் கீழே பதியாய்ப் பிடித்திழுத்து
    குந்தவைத்தக் கையிரெண்டும் காப்பு….(6)

    ஓர்கழி கையேந்த ஆர்குழல் வாயூத
    ஊர்வன மேய்த்தோ னுடனொன்ற -தார்குழல்
    மார்கழி நீராடி மையிட்(டு) எழுதாத
    கூர்விழித் தாமரை காப்பு….(7)

    வெப்பறியா மார்கழியில் துப்புரவாய் நீராடி
    ஒப்பறியா நோன்பிருந்து உத்தமர்க்கு -சொப்பனத்தில்
    இல்விதித்து இங்கிழுத்து வில்லிபுதூர் மண்ணிலம்மிக்
    கல்மிதித்த காலிரெண்டும் காப்பு….(8)

    எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தோனை
    சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
    மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே
    நேர்வழியில் எம்மை நடத்து….(9)

    ”ஆடிவரும் பூரம் அவதரித்து, மார்கழியில்
    பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை -நாடிவரும்
    வைகுண்டம் விட்டந்த வில்லிபுதூர் வாழ்வுக்கு
    பைகொண்ட பாம்பணைவோன் பார்….(10)

    ’’தப்பெது வானாலும் தாரா ளமாய்ச்செய்வீர்
    முப்பதைத் தப்பின்றி முன்மொழிந்து, -அப்புறம்பார்
    குப்பென வேர்த்து குதித்தோடும் வெவ்வினைகள்;
    துப்புர வாகும்வுன் தீங்கு’’….(11)

    ’’ நாச்சியார் ஆண்டாள் நவனீத ரங்கனைக்
    காய்ச்சினாள் பாசுரத்தால் காலையில், -பூச்சொரிந்து
    சில்லென்று மாலையில் சூடிக் கொடுத்தவள்
    இல்லாளாய் ஆனாள் இறைக்கு’’….(12)

    ’’ஆடிப் பூரத்தின் ஆச்சரிய ஆண்டாள்போல்
    பாடிப் பறக்கப் பணித்திடுவாய்; -ஓடிப்போய்
    புள்ளேறி ஆனை பரிதவிப்பைப் போக்கியவா
    சொல்லேறி சிந்தைக்குள் செல்’’….(13)

    “பச்சை மலையோன் ,பவளச்செவ் வாயனவன்
    இச்சை மிகக்கொண்டான் இவ்வையம்- மெச்சிட;
    ஆதலால் நின்றான் அழகுக் கிளியேந்தி
    கோதையாய்க் கோலம் கொடுத்து”….(14)

    ஆடிப் பலன்
    ————–

    ”ஆடிப்பூ ரத்தாள் அளிக்கின்றாள் தள்ளுபடி
    வாடிக்கை யாய்வந்து வில்லிபுதூர் -ஜோடிக்கு
    முன்நின்று தப்பாது முப்பதைச் சொல்வோர்க்கு
    பின்நின்று வெற்றியளிப் பு’’….(15)….
    ——————————————————————————
    ’’ஆடிப் பூரத்தின் ஆச்சரிய ஆண்டாள்போல்
    பாடிப் பறக்கப் பணித்திடுவாய்; -ஓடிப்போய்
    புள்ளேறி ஆனை பரிதவிப்பைப் போக்கியவா
    சொல்லேறி சிந்தைக்குள் செல்’’….(16)

    ’’ நாச்சியார் ஆண்டாள் நவனீத ரங்கனைக்
    காய்ச்சினாள் பாசுரத்தால் காலையில், -பூச்சொரிந்து
    சில்லென்று மாலையில் சூடிக் கொடுத்தவள்
    இல்லாளாய் ஆனாள் இறைக்கு’’….(17)

    ’’தப்பெது வானாலும் தாரா ளமாய்ச்செய்வீர்
    முப்பதைத் தப்பின்றி முன்மொழிந்து, -அப்புறம்பார்
    குப்பென வேர்த்து குதித்தோடும் வெவ்வினைகள்;
    துப்புர வாகும்வுன் தீங்கு’’….(18)

    போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம்….
    “ஏகபோகம் ஆகிறாள் ஏரார்ந்த கண்ணியவள்
    நாகமிசை நர்த்தன நாரணன் -பாகமாக;
    போகியன்று ஆண்டாள் பெருமாளை சேர்கிறாள்
    வாகீச பெண்மைக்கு வாழ்த்து”….(19)

    “பழயன விட்டு புதியன பூண
    மழையன்ன மாலின் மனையாய்-விழைகிறாள்
    புள்ளேறி வைகுந்த புக்ககம் போவதற்கு
    கள்ளுறும் பாசுரத்தாள் காண்”….(20)

    “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்
    பாடி இடம்பிடித்தாள் பாற்கடலில்; -ஆடிப்பூ
    ரத்தாள் பதம்பிடித்து ரங்கன் அழைக்கின்றான்
    அத்தாளை அம்மிமிதிக் க “….(21)

    “கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
    போதை தலைக்கேற புள்ளேறி -தாதை
    பெரியாவான் இல்லம் பறந்துபோய் கேட்டான்
    தரியாஓய்! பெண்ணை தனக்கு”….(22)

    I LOVE YOU (143) அன்றே சொல்லிவிட்டாள் அரங்கனுக்கு ஆண்டாள்….
    “பட்டர் பிரான்பெண்ணை BUTTER பிரான்கண்ணன்
    ட்விட்டரில் காதலுக்கு தூதுவிட்டான் -லெட்டராய்;
    நூத்திநாப் பத்திமூணு நூற்றாள் பதிலுக்(கு)
    ஆத்தியது ஐலவ்யு ஆச்சு”….கிரேசி மோகன்….(23)
    ———————————————————————————————————————————————————————

    Share