இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (180)
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே!
இனிய வணக்கங்கள்.
2015ம் ஆண்டின் இறுதி மடலினூடாக உங்களுடன் உரையாடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
ஆம், கடுகதி புகையிரதம் போல எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடோடி வந்து இறுதிப் பகுதியில் நிற்கிறது 2015ம் ஆண்டு.
ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போதும் பல எதிர்பார்ப்புகளுடன் பிறக்கிறது. ஒவ்வொருவரும் தாம் கடந்து வந்த வருடத்தை விட இவ்வருடம் தமது வாழ்வினை ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றமுள்ளதாக மாற்றியமைக்கும் எனும் நம்பிக்கையுடன் அப்புதிய வருடத்தினுள் நுழைகின்றனர். எதிர்பார்ப்புகள் வெறும் எதிர்பார்ப்புகளாகவே நிறைவடைந்து விட்டனவா? இல்லை அவை நிறைவேறி வாழ்வினில் தாம் எதிர்பார்த்த மாற்றத்தை அடைந்தனரா என்பதை அவரவரே கூற வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் பிறந்து நடந்து முடியும் போது அதற்குள் பல நிகழ்வுகளைத் தாங்கி நிற்கிறது, உலக சரித்திரப் புத்தகத்தில் தன்னையும் ஒரு அத்தியாயமாக இணைத்துக் கொண்டு விடுகிறது. அப்படியான ஒரு வகையில் 2015 தன்னுள் எவற்றைத் தாங்கி நிற்கிறது என்பதை எனது கோணத்தில் இருந்து பார்க்க விழைகிறேன்.
இந்நிகழ்வுகளை மூன்று பிரிவுகளாகப் பார்க்கலாம்
– எனது பிரத்தியேக வாழ்வின் மாற்றங்கள்
– இங்கிலாந்து அளவிலான மாற்றங்கள்
– சர்வதேச ரீதியிலான மாற்றங்கள்
2015ம் ஆண்டைத் தொட்ட போது அது ஓர் மைல் கல்லாகவே எனது வாழ்வில் தென்பட்டது, 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி இங்கிலாந்து மண்ணில் நான் முதன் முதலாகக் கால் பதித்த தினம். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 திகதி நான் இங்கிலாந்தில் நுழைந்து நாற்பது வருடங்கள் ஓடி விட்டது. அப்பப்பா! ஒரு மனிதனின் வாழ்வில் நாற்பது வருடங்கள் என்பது வாழ்வின் அரைவாசி என்று கூடச் சொல்லலாம்.
வெறும் பதினெட்டு வருடங்கள் மட்டுமே நான் உதித்த தாய் மண்ணில் வாழ்ந்த எனக்கு என் வாழ்வின் முக்கிய நாடாக இங்கிலாந்து இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லைதான். நான் இங்கிலாந்தில் மாணவனாக நுழைவதற்குத் தேவையான ஸ்பான்ஸர் கொடுத்தவர் எனது பெரியதாயாரின் மூத்த மைந்தன் ஆவார். அதாவது எனது ஒன்று விட்ட அண்ணன். அந்த அன்பான அண்ணனை எனது வாழ்வின் மாற்றத்துக்கு ஒரு காரணியாகத் திகழ்ந்தவரை காலன் எம்மிடமிருந்து பறித்துச் சென்றது கூட இந்த 2015 இல் தான். என் மனைவியின் அன்புத் தந்தை, எனது தந்தையைப் போல என்மீது பாசம் கொண்டவரும் நான் என்னுள்ளத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுபவருமான எனது மாமனார் இப்பூவுலகை விட்டு மேலுலகிற்கு ஏவியதும் இந்த 2015ல் தான். ஆம் இந்த 2015 எனக்குக் கொடுத்ததும் உண்டு என்னிடமிருந்து பல இனியவர்களை எடுத்துச் சென்றதும் உண்டு.
நான் வாழும், எனக்கு வாழ்வளித்த இந்த இங்கிலாந்து நாட்டைப் பொறுத்த வரையில் 2015 சில முக்கிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை ஈட்டியது பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் கன்சர்வேடிவ் கட்சியெனினும் அவர்களால் தனியாக அரசமைக்க முடியவில்லை. லிபரல் டெமகிரட்ஸ் எனும் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் அடுத்த தேர்தலை 2015 மே மாதம் எதிர் நோக்கியிருந்தது. பொருளாதாரப் பின்னடைவை நோக்கியிருந்த இங்கிலாந்தை மீட்டெடுக்கப் பல நெருக்கடியான செலவுக் கட்டுப்பாட்டைக் கைப்பிடித்ததினால் மக்கள் மிகவும் அதிருப்திக்குள்ளாகியிருந்தார்கள். அதனால் எதிர்க்கட்சியாகவிருந்த லேபர் கட்சி 2015 தேர்தலில் வெற்றியீட்டுவதற்குச் சாதகமான சூழல் என்றே அரசியல் அவதானிகள் பலரது கருத்துகளும், பொதுக் கருத்துக் கணிப்பீடுகளும் சுட்டிக்காட்டின.
ஆனால் 2015ம் ஆண்டு வேறுவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தது போலும் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக கன்சர்வேடிவ் கட்சி தனித்து அரசமைக்கக்கூடிய பெரும்பான்மையால் வெற்றியீட்டியது. 2015 டேவிட் கமரன் அவர்களை மீண்டும் பிரதமராக முடிசூட்டியது. இங்கிலாந்து அரசியல் அரங்கில் வெளிநாட்டவரின் வருகையே மிக முக்கியமான பிரச்சனையாக முன்னணியில் திகழ்ந்தது, திகழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமா? 2015 லேபர் கட்சிக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டத் தவறவில்லை, தலைவராகும் சந்தர்ப்பம் யாருக்கு ஒருபோதும் கிட்டாது என்று கணிக்கப்பட்டதோ அந்நபர் லேபர் கட்சியின் தலைவரான அதிசயத்தையும் 2015 நிகழ்த்திக் காட்டியது. ஆம், எப்போதும் தனி ஒரு மனிதனாக லேபர் கட்சியினுள் இருந்து குரலெழுப்பிக் கொண்டிருந்த ஜெர்மி கோர்பன் அவர்களை கட்சிக்குத் தலைவராக்கியது கூட காலத்தின் கோலமோ ?
இங்கிலாந்திலே பிறந்து, இங்கிலாந்துப் பிரஜைகளாகவே வளர்ந்த பல இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதப்பாதையைத் தேர்ந்தெடுப்பது தற்போதைய இங்கிலாந்து தேசம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனையாக 2015இல் வளர்ந்து நிற்பது மட்டுமல்லாது 2016ம் ஆண்டிலும் தமது கால்களைப் பதிக்கப் போகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் வலுத்துக் கொண்டு வருகிறது. இதற்கான பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றைத் தான் 2017ம் ஆண்டு முடிவதற்குள் நடத்துவேன் என்பது பிரதமருடைய ஒரு வாக்குறுதி. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் எனும் கருத்துடையவரல்ல பிரதமர். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் உறவின் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தாலொழிய ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனும் வாதம் வலுவடையாது என்பது பிரதமரின் கருத்து. இம்மாற்றங்களுக்கான கலந்துரையாடல்களின் ஆரம்பத்தை 2015 தன்னுள் உள்ளடக்கியுள்ளது. ஆனால், அதற்கான முடிவுகளை 2016 தான் பகிர வேண்டும்.
சரி இனி சர்வதேச அளவிலான 2015ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். பயங்கரவாதம் தமது அகோர தாண்டவத்தை பாரீஸ் நகரில் நடத்திக் காட்டியுள்ளது. உலக மகாயுத்தத்தின் பின்னால் அதிக அளவிலான உயிரிழப்பினை ஒரே நிகழ்வில் பிரான்சு நகரம் சந்தித்தது இதுவே முதல் தடவை என்கிறார்கள். இஸ்லாம் எனும் புனித மதத்தின் பெயரால் ஏதுமறியா பொதுமக்களின் மீது அமெரிக்க நகரில் பயங்கரவாதம் அரங்கேறியுள்ளது. மனித உயிர்களின் மதிப்பை கணிக்கத் தவறி உயிர்களைக் காவுகொள்ளும் நீசத்தனம் தொடர்வது 2015க்கு ஒரு கரும்புள்ளி என்றே கூற வேண்டும்.
சிரியா நாட்டில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக லட்சோபலட்ச மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் படலம் உச்சக்கட்டத்தை அடைந்தது 2015ல் என்றே கூறவேண்டும். அகதிகள் எனும் பெயரில் சில பயங்கரவாதச் செயல் புரிவோரும் ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்துள்ளார்கள் எனும் அச்சம் உண்மையான அகதிகளின் நிலையைப் பரிதாபத்துக்குள்ளாக்கியிருக்கிறதுஎன்றே கூற வேண்டும்.
உலகின் வெப்ப அளவு கணிக்கப்படத் தொடங்கியதிலிருந்து 2015ம் ஆண்டே அதிக வெப்ப அளவினைக் கொண்ட ஆண்டாகக் கூறப்படுகிறது. உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் முகமாகக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்காகக் கூட்டப்படும் சர்வதேச மகாநாடு 2015ம் ஆண்டின் இறுதியில் பிரான்ஸு நகரில் கூடியது. இதிலே உலகத்தின் வெப்பம் 2 டிகிரிக்கு மேல் கூடாதவாறு ஒவ்வொருநாடும் தமது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் உடன்பாடு கணப்பட்டுள்ளது. இவ்வுடன்பாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உடன்பாடு என்று கூறப்படுகிறது. இது எவ்வளவு உண்மையானது என்பதை வருங்காலம் தான் காட்ட வேண்டும்.
ஆண்டின் இறுதியில் மிகவும் சோக நிகழ்ச்சியாக அன்னைத் தமிழின் தாயகமான தமிழகத்தின் தகைநகரம் சிங்காரச் சென்னை வெள்ளத்தினுள் அமிழ்ந்தது. இவ்வெள்ளப் பாதிப்பினால் பலர் உயிரிழந்து, உடைமைகள் இழந்து, இல்லத்தை இழந்து பரிதவிப்பது நெஞ்சத்தை ரணமாக்கினாலும் மனிதாபிமானம் கொடிகட்டிப் பறந்தது என்பது நெஞ்சத்தைக் குளிர்விக்கிறது. எந்தவிதப் பாகுபாடுமின்றி நிர்வாகத்தினை எதிர்பார்க்காமல் … குறிப்பாக இளைஞர்கள் சமூக வலைத்தளங்களின் உதவியோடு கரங்களிணைத்து தவிக்கும் பலருக்கு உதவியது 2015ல் மனிதாபிமானத்திற்குக் கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.
பல தடைகளையும், சில படிகளையும் தாண்டி 2016 வாசலில் வந்து நிற்கின்றோம், நேற்றைய நிகழ்வுகளை நாளைய வெற்றிகளுக்குதவும் அனுபவப் பாடங்களாக எடுத்து புத்துணர்வுடனும், புத்தெழுச்சியுடனும் 2016இனுள் நுழைவோம் வாருங்கள். என் இனிய அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இரண்டு வார இடைவெளியின் பின்னால் மீண்டும் 2016 ஜனவரி இறுதி வாரத்தில் மடலுடன் உங்களைச் சந்திக்கிறேன்
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan