பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர்
உற்றா லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற் கொன்னாரோ டொன்றுமோ? – தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா
இரண்டே றொருதுறையுள் நீர்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர்.
பொருள் விளக்கம்:
ஒரு துன்பம் தனது தலைவருக்கு நேரிடுமானால் தனது உடலையே கொடுக்கும் வீரர் ஒருவர், மாற்றானாகிய எதிரியுடன் சென்று சேர்வாரா? (அவ்வாறு செய்ய விரும்ப மாட்டார்). தெளிவாக தம்முள் முரண்பாடுகள் கொண்ட வலிமையுள்ளவர் ஒன்றுபடுவரோ? மாறுபாடுகள் கொண்ட எருதுகள் இரண்டு இணைந்து ஒரே துறையில் நீர் உண்ணுவதில்லை (அவ்வாறே, தனது மன்னனிடம் மாறாத அன்பு கொண்ட வீரரும் பகைவனுடன் சேர விரும்ப மாட்டார்)
பழமொழி சொல்லும் பாடம்: அரசைக் காக்கும் பொறுப்புள்ள வீரர் பகைவருடன் சென்று சேர்ந்து தனது நாட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்ப மாட்டார். வீரரின் இத்தகைய பண்பினை, இத்தகைய வீரர்கள் கொண்ட படையினை விவரிக்கும் வள்ளுவர்,
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. (குறள்: 764)
போரில் அழிவின்றியும், பகைவரின் வஞ்சத்திற்கு இறையாகாமலும்(அறைபோகாதாகி), தலைமுறை தலைமுறையாக அச்சம் தவிர்த்து வீரத்துடன் போரிடும் படையையே சிறந்த படை என்கிறார்.