இரா. தமிழரசி கவிதைகளில் மரபழுத்தங்களும், படைப்புச் சிறுவெளியும்

0

— முனைர் மு.பழனியப்பன்.

பழைய நடைமுறைகள் மரபுகள் ஆகின்றன. அந்நடைமுறைகளை அப்படியே சில நேரங்களில் ஏற்க முடிகிறது. பல நேரங்களில் அவற்றில் இருந்து விலக எண்ணம் தோன்றுகிறது. விலகிச் செயல்படவும் வேண்டியிருக்கிறது. பழைய நடைமுறைகளை மீள் பார்வை செய்து ஏற்கவும் மறுக்கவும் ஆன காலம் இப்போது அரங்கேறிவருகிறது. இந்நிலை மக்கள் சமுதாயத்தில் இலக்கியத்தில் ஊடகங்களில் தற்போது வேகமாக பரவிவருகின்றது. காலத்தின் கட்டாயமும், நாகரீகத்தின் வளர்ச்சியும், செயல்களில் அவசரமும், பழைய மரபுகளில் பற்றின்மையும் இத்தகைய நிலைக்குக் காரணங்களாகின்றன.

குறிப்பாக பெண்கள் மரபு நிலையில் பெரிதும் கவரப்படுபவர்கள். புதுமையை ஏற்பதைக் காட்டிலும் பழமையை மறுப்பதில் அவர்கள் வேகம் காட்டுவதில்லை. பழைய மரபுக் கட்டுகள் இன்னமும் பெண்களிடம், பெண்களின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. இருந்தாலும் புதுமையை வரவேற்கும் பாங்கும் புதுமையுள் புகும் எண்ணமும் பெண்களிடத்தில் இல்லாமல் இல்லை. இதன் காரணமாக பெண்களின் படைப்புகள் கவனமாக ஆராயப்பட வேண்டியனவாக உள்ளன. பெண்கள் படைக்கும் ஒவ்வொரு படைப்பும் மரபில் காலூன்றி புதுமைக்கு வரவேற்பு பாடுவனவாக விளங்குகின்றன என்பது பொதுவான மதிப்பீடாகும். விழுப்புரத்தில் வசிக்கும் இரா. தமிழரசி அவர்களின் கவிதைத்தொகுதியான “குடையாய் விரியும் கவனம்” என்பதில் காணப்படும் மரபழுத்தங்களையும், படைப்புச் சிறுவெளியையும் எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

பெண்ணுக்கான வாழ்க்கையில் மரபும் மாற்றமும் :-
பெண்ணுக்கான கடந்த கால வாழ்க்கையை இரா. தமிழரசி கவிதையாக ஆக்குகிறார். கடந்த கால வாழ்க்கையில் பெண்பிள்ளையைப் பொசுக்கி வளர்க்கும் தாயின் அடக்குமுறை வெற்றிபெற்று அவள் மீண்டும் ஒரு குடும்பப்பாங்கான பெண்ணாக வடிவமைக்கப்பெறுகிறாள். பெண்ணுக்காக சமுதாயம் தந்துள்ள அத்தனைப் பட்டங்களையும் இக்கவிதை சுமந்து நிற்கிறது.

அம்மாவின் கட்டுப்பாடுஅதிர்ந்து நடக்கையில் எல்லாம்
“அடி செருப்பால” என்பாய்
விரித்துவிட்ட கூந்தல் கண்டால்
வீடே இரண்டாகும்
பின்னல் தாண்டும் பூச்சரத்தால்
பிரச்சனைதான் பலநேரம்
கண்ணாடி முன்நின்றால்
கண்டிப்பாய்த் திட்டுவிழும்
தோளைத் தொடும் காதணியா
கன்னம் பழுத்துக் கதைபாடும்

என்று தொடங்கும் இக்கவிதை பின்வருமாறு முடிகின்றது,

திட்டும் வார்த்தையெல்லாம்
என்னைத் திடப்படுத்தலேயன்றி
அத்தனையும் அர்த்தமற்ற அசைகளென்று
நான் அறிவேன்” ( குடையாய் விரியும் கவனம் 12)

இக்கவிதையில் பெண்களை அடக்கி வளர்க்கும் கடந்த நூற்றாண்டு அம்மாவின் கட்டுப்பாடுகள் வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன. அத்தனை வார்த்தைகளும் திட்டும் வார்த்தைகள் என்றாலும் அதனைத் திடப்படுத்தும் வார்த்தைகளாக ஏற்கவேண்டும் என்ற எண்ணம் பெண்ணுள் உருவாக்கப்படுகிறது. தாயின் சுடுசொற்களை அசைச்சொற்களாக ஏற்கும் மனப்பான்மை பெண்களிடத்தில் வளரக்கப்படுகிறது.

இப்படி வளர்ந்த பெண் குடும்பத்துக்குள் வரும்போது கயிற்றில் நடக்க பழகும் லாவகத்தைக் கற்றுக்கொள்கிறாள்.

கயிற்றின்மீது
நடக்கப் பழக்கிவிட்டுக்
கட்டாந்தரையில் நின்று
கொட்டுகிறாய் முரசை…;
கவனம் சிதறாமை
வழக்கத்திற்கு வந்துவிட்டது
கயிற்றின்மீது நடப்பதே
வாழ்க்கை என்றாகிப் போனதால் (குடையாய் விரியும் கவனம். ப. 16)

என்ற கவிதையில் கவனம் மிக்கவளாக குடும்பப்பெண் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வெற்றிபெறுகிறது. இவ்வாறு அம்மாவின் அடக்குதல்கள், குடும்பத்தலைவரின் சீரமைப்புகள் இவற்றோடு தனக்காகவும் வாழ்கிறாள் பெண். அவளுக்குள் பல உணர்ச்சிகள் பிரவகிக்கின்றன. இவ்வுணர்ச்சிப் பிரவாகம் அவளை அவளாக வாழ வழி செய்கிறது.

ஒரு சிறு புருவ உயர்வில்
வியப்பை
ஒரு கீற்றுப் புன்னகையில்
மகிழ்ச்சியை
அளவான கண்சுருக்குதல்களில்
கோபத்தை
முகந்திரிந்து நோக்குதலில்
அதிருப்தியை
இலேசான தலையசைப்பில்
அங்கீகாரத்தை
மெல்லிய முதுகுவருடலில்
ஆதரவை
பூவாய் மலரும் வதனத்தில்
ஆனந்தத்தை
உற்றுநோக்குதலில்
விழைவை
நெற்றி சுருங்குதலில்
வெறுப்பை
மென்மையான கைகுலுக்கலில்
நெருக்கத்தை
கனிந்த முகத்தில்
காதலை
சாந்தத் தலைகோதலில்
நிறைவை
ஈரிமை பொருத்துதலில்
துய்ப்பின் பூரணத்தை
அடங்கிக் கிடத்தலில்
புலன்களின் ஓர்மையை
மெல்லிய அணைப்பல்
தோழமையை
பரவச உச்சி முகர்தலில்
தாய்மையை…
இன்னும், இன்னும் (குடையாய் விரியும் கவனம்,ப. 54)

என்ற இந்தக் கவிதையில் பெண்ணுக்குள் விளையும் பற்பல உணர்ச்சிகள் சுட்டப்பெற்றுள்ளன. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற தொல்காப்பிய மெய்ப்பாடுகளைத் தாண்டி இக்கவிஞர் காட்டும் பெண்களுக்கான உணர்ச்சிகள் அதிகம். அவை அனைத்தும் சிற்சில உடல்மொழிகளில், அசைவுகளில் பெண்களிடம் காணப்படுகின்றன என்ற தெளிதல் உணர்வற்ற சடமாய் வளர்த்த மரபில் இருந்து மீறி உணர்வுடைய உயிராகப் பெண் வலம் வருகிறாள் என்பதைக் காட்டுகின்றது.

மரபுக்கட்டுகளில் இருந்து மெல்ல விடுதலை பெற விழைகிறது பெண் உள்ளம். இதனைக் கவிதையாக ஆக்குகிறார் இரா. தமிழரசி.

“வட்டத்திற்கு வெளியே
கொட்டிக் கிடக்கிறது வசீகரம்
நிர்பந்தத் தளைகளை
நெம்பிவிட்டு வந்தால்
நுகரலாம் சுதந்திர வாசத்தை….
துச்சமென உயிர் மதிக்கும்
போராளியாய்க் காத்துக்கிடக்கின்றன
காலிரண்டும்
பேரலையாய் உருவாகிச்
சிற்றலையாய் உருமாறிக்
கொந்தளித்தும் குளிர்ந்தும்
அடங்கிக் கிடக்கிறது
மனக்கடல்….! ( குடையாய் விரியும் கவனம். ப. 63)

என்ற இக்கவிதையில் சுதந்திர வாசத்தை நுகரத்துடிக்கும் உள்ளமும், அடங்கிக் கிடக்கும் மனக்கடலுமாக பெண்ணின் வாழ்க்கை நடப்பதை அறியமுடிகிறது. எழுதலும் அடங்குதலுமான ஈரியக்க நிலைப்பாடாக பெண்ணின் நிலைப்பாடு இருப்பதை இக்கவிதை வழி அறிய முடிகிறது. பெண்ணின் பற்பல அழுத்தங்களுக்கு வடிகாலாக அமைவது பெண்களின் படைப்பு வெளியாகும். அவ்வெளிக்கும் பெண்கள் ஏராளமான விலை கொடுக்க வேண்டியதை மற்றொரு கவிதை அறிவிக்கின்றது.

எழுத்தில் பதிவாகிவிடுகின்றன
அவர்களுக்கான அத்தனை அழுத்தங்களும்
எங்களுக்கான ஆயாசங்களை மொத்தமாய்
இறக்கி வைக்கலாமென்றால்
தாங்க மறுக்கின்ற ஏடுகள்
தரத் தயங்குகிறோம்
அதற்கான விலையையும் (குடையாய் விரியும் கவனம்,ப. 55)

பெண் பல்வேறு மரபு அழுத்தங்களுக்கு உட்பட்டவளாக விளங்குகிறாள் என்பதும், அதிலிருந்து விடுபட அவளுக்கு சிறு படைப்பு வெளி கிடைத்துள்ளது என்பதும் இக்கவிதைவழி தெரியவருகிறது. இருந்தாலும் இந்தச் சிறு படைப்புவெளிக்கு பெண் தரவேண்டிய விலைகளும் அதிகம் என்பதை இந்த உலகம் உணர வேண்டும் என்ற கவிதை வேண்டுகோள் வைக்கின்றது. இவ்வகையில் பெண்களின் தற்கால நிலைப்பாட்டை உணர்த்தும் கவிதைத் தொகுதியாக குடையாய் விரியும் எண்ணம் என்பது அமைகிறது. பெண்களுக்கு சிறு விடுதலை வெளிச்சம் கிடைத்திருப்பதைப் பதிவு செய்யும் முக்கியமான கவிதைத்தொகுதி இதுவாகும்.


முனைர் மு.பழனியப்பன்
இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
திருவாடானை

M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com
9442913985

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.