நவம்பர் 23, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு கே. பிரித்திகா யாசினி அவர்கள்

Prithika Yashini

 

தொலைக்காட்சிகளின் பண்டிகைக்காலச் சிறப்புத் திரைப்பட வெளியீடு அறிவிப்பு போல அறிவிக்க வேண்டிய சாதனை திருமிகு பிரித்திகா யாசினி அவர்களுடையது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, தமிழகத்தின் திருநங்கை பிரித்திகா யாசினி காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். தளரா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு, சட்டத்தின் துணையுடன் விடாது போராடி இந்தியவரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார் இவர். இந்த மாதம் (நவம்பர் 6) சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், பிரித்திகா யாசினி காவல்துறைப் பணிக்குத் தகுதியானவர் எனத் தீர்ப்பு வழங்கி, தமிழகக் காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அவரை அமர்த்துமாறு உத்தரவிட்டிருந்தது. சென்றவாரம் (நவம்பர் 16, 2015) தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில் (Tamil Nadu Uniformed Services Recruitment Board – TNUSRB) நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, பிரித்திகா யாசினி அவர்களைக் காவல்துறை உதவி ஆய்வாளர் (Sub Inspector of Police) பணிக்குத் தேர்வுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடைகள் பல கடந்து வெற்றிவாகை சூடிய திருமிகு கே. பிரித்திகா யாசினி அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம்.

Prithika Yashini - X

Source: http://www.tnusrbexams.net/documents/opq_finalresults.pdf

காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற விரும்பி சிறுவயது முதல் கனவு கண்ட பிரித்திகா கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பிரித்திகா, வாடகை ஊர்தி ஓட்டும் தந்தைக்கும், தையல் தொழில் செய்யும் தாய்க்கும் மகனாகப் பிறந்த பிரதீப் குமார் ஆவார். பள்ளி நாட்களில் இருந்தே பெண்மை உணர்வு கொண்ட அவரது நடவடிக்கைகள் பள்ளியிலும், பிறகு கணினி சார்ந்த பட்டப்படிப்பு படித்த கல்லூரி நாட்களிலும் பலரது கேலிகுள்ளானது. இருபதாவது வயதில் தனது பெண்மை நிரம்பிய மனவுணர்வுகளின் வழிநடந்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பிய அவரது எண்ணத்தை அவரது பெற்றோர் ஆதரிக்கவில்லை. மாறாக, மந்திரிப்பது முதல் மனநல மருத்துவம் செய்வது வரை பல வழிகளிலும் அவரது எண்ணத்தைக் கைவிடச் செய்ய முயன்றனர். தனது பெற்றோர்களின் தடைகளினால் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். மகளிர் விடுதியில் காவல் பணியாளர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர், தொண்டு நிறுவன ஊழியர் எனப் பற்பல பணிகளில் ஈடுபட்டதுடன், தமிழினப்படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கு பெற்று தன்னார்வப் பணிகளும் செய்தார். அறுவை சிகிச்சையும் செய்து கொண்டு பெண்ணாக மாறினார்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு இவர் விண்ணப்பித்தார். தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை இவர். விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினப் பிரிவு குறிப்பிடாத காரணத்தால் பெண் எனக் குறிப்பிட்டார். சான்றிதழ்கள் ஆண் பெயரில் இருக்க, பெண்பெயரில் இருந்த இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எழுத்துத் தேர்வுக்கு அனுமதி பெற்று தனது ஆவணங்களையும் சட்டப்படி பிரித்திகா என்ற பெயரில் மாற்றிக் கொண்டார். தேர்வறை நுழைவுச்சீட்டைக் கடைசி நேரத்தில் பெற்று, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதினார். கடந்த மே மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இந்த எழுத்துத் தேர்வில் 1078 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அத்துறையில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கான 20% ஒதுக்கீட்டைக் கணக்கில் கொண்டால், பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கான சுமார் 850 பணியிடங்களுக்குத் தேர்வெழுதியவரின் எண்ணிக்கை இத்தேர்வுக்கான போட்டியின் தீவிரத்தைக் காட்டும்.

இத்தேர்வில் வெற்றி பெற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த உடல்தகுதித்திறன் போட்டிக்கு இவர் அழைக்கப்படாததால் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தின் ஆணையில் தேர்வு நடக்கும் நாளுக்கு முதல் நாளன்று தேர்வில் பங்கு பெற வருமாறு அழைப்பைப் பெற்றார். ஆனால் மூன்றாம் பாலினத்திற்கென்ற தகுதி வரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை. பல போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்றாலும் உடல் தகுதித் தேர்வின்ல் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது தேர்வாணையம். இதனால் போட்டியின் காணொளி ஆதாரங்களைக் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். மனிதநேய அடிப்படையில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் இவர் பணிக்குத் தகுதி பெற்றவர் எனத் தீர்ப்பு வழங்கினர். பணிக்குத் தேர்வு செய்ய காவல்துறைக்கு வழங்கிய ஆணையில், தேசிய சட்டப்பணி ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளை 3-வது இனம் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று சென்ற ஆண்டே தீர்ப்பளித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரும் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வாணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். பாலினப்பிறழ்வுடன் பிறந்த காரணத்தால் வளர்ந்த குடும்பம் முதற்கொண்டு, வாழும் சமூகம் வரை அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு, தகுதிக்கேற்ற வேலையோ தங்குமிடமோ கிடைப்பதில் சிரமங்கள் எதிர்கொண்டு மூன்றாம் பாலினர் பலர் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது. சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற பிரித்திகா ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பார், அவர்களது நலத்திற்காகப் பாடுபடுவார் என்பது தீர்ப்பெழுதிய நீதிபதிகளின் கருத்தும் கூட.

மத்திய அரசின் கணக்கெடுப்புப்படி சுமார் ஐந்து லட்சம் திருநங்கைகள் இந்தியாவில் உள்ளனர், அவர்கள் யாவருக்கும் பிரித்திகாவின் போராட்டமும் வெற்றியும் நல்ல வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை. திருநங்கைகளின் நல்வாழ்விற்காக உதவும் ‘சினேகிதி’ என்ற அரசுசாராத் தொண்டு நிறுவனம், பிரித்திகாவை நம்பிக்கை நட்சத்திரம் எனப் பாராட்டியுள்ளது. தனது கனவுகளைக் கைவிடாது, எஸ். ஐ வேலைக் கிடைக்காவிட்டால் ஐ.பி.எஸ். ஆகும் திட்டத்தில் இருந்தவர் பிரித்திகா. பிரித்திகாவை வல்லமையாளராக அறிவித்து வல்லமை இதழ் பெருமை கொள்கிறது.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

படம் உதவி: பிரித்திகாவின் ஃபேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/prithikayashin

தகவல் பெற்ற தளங்கள் பல, குறிப்பாக:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1387830
http://www.bbc.com/tamil/india/2015/11/151105_transgenderpolice
https://ta.wikipedia.org/s/53up
http://www.tnusrbexams.net/
http://www.tnusrbexams.net/documents/opq_finalresults.pdf

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.