படக்கவிதைப் போட்டி (40)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
ந். முழுநிலவு நீயம்மா !
( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )
மொட்டை அடித்தாலும்
முழுநிலவு நீயம்மா
முடிமுழைத்த பின்னாலே
முழுநிறைவு பெற்றிடுவாய் !
அப்பாவின் அரவணைப்பில்
அழுகின்ற நீபின்னர்
அப்பாவை அணைத்துநிற்க
அருவருப்புக் காட்டாதே !
அழாதே.. எல்லாம் உன் நன்மைக்கே..
முதல் மொட்டை
குலதெய்வத்திற்கோ, பழனி முருகனுக்கோ
போட்டே ஆக வேண்டும்..
மொட்டை போட்டால்தான்
உன் முடி கருகருவென்று அடர்த்தியாய் வளரும்..
இன்று ஆரம்பித்து பெற்றோர் உனக்கு
செய்யும் ஒவ்வொரு காரியமும் உன்
எதிர்கால நன்மைக்கே என்று புரிந்து கொள்.
நீ சற்று வளர்ந்து பெரியவளானதும்
உன்னை பள்ளிக்கு அனுப்பும் போது
அழாதே..
அது உன் வளமான எதிர்காலத்திற்கு என்று மனதில் கொள்..
இன்னும் சற்று வளர்ந்த பின்
உன்னை படி, நல்ல மதிப்பெண் எடு
என்று பெற்றோர் சொன்னால்
அவர்கள் மேல் கோபம் கொள்ளாதே…
அதுவும் உன் எதிர்கால நன்மைக்கே என்று புரிந்து கொள்..
உன் கல்லூரிக்காலத்தில்-
நல்ல பழக்கங்களையும், நல்ல நண்பர்களையும்
மட்டுமே வைத்துக் கொள் என்று
பெற்றோர் உனக்கு அறிவுரை சொன்னால்
உதாசீனப் படுத்தாதே..
ஏற்றுக் கொள்..
பிள்ளை யழுகையிலே பெற்றவுள்ளம் நோகிறதே
துள்ளு மழகே துவளாதே !- முள்ளாகக்
குத்தியதோ கண்ணே ! குலச்சாமி காத்திடும்
கத்தாமல் நீசற்று காட்டு .
முடி இழக்கும் போதும்
முடி துறக்கும் போதும்
அழுவதும் சிரிப்பதும்
அவரவர் இயல்பே…..
ஆனால் குழந்தாய்
அம்மான் மடியில்
அமர ஓர் சிம்மாசனம்
அழகாய்த் தரும்முடி காணிக்கை…
மகிழ்வாய்க் கொடுக்க
மனமகிழும் ஆண்டவனும்
உறவும் சுற்றமும்
ஒன்றுகூடும் வழிபாடு……
இதுதான் வாழ்வின்
இனியதொரு தொடக்கம்…
இனிமேல் நிகழ்வன
எல்லாமிதில் அடக்கம்…
இழந்த முடியழகு
இன்னும் அழகூட்டும் மொட்டை….
இது ஓர் ஒத்திகை
இங்கினி யாரும் நமை
அடித்திடக்கூடாது மொட்டை…..
இழந்தன எல்லாம்
மீளத் திரும்பிடும்…..
சிரசில் முடியும்
செவ்வனே வளரும்,
அழகும் மிளிரும்…
அது ஓர் தத்துவம்
அறிந்தவர் அறிவாராக!
இளவல் ஹரிஹரன், மதுரை.
காத்திருத்தல் வேண்டும்
தாய்மாமன் மடியில் வைத்துத்தம்
பெண் குழந்தைக்கு மொட்டை அடிக்கும்
தாய்மார்கள் அறிவதேயில்லை.
மொட்டையடித்தல் பற்றியறியா
மாமன்மார்கள் பிற்காலத்தில்
தம் மகன்மூலம் தம்கணவர் சொத்தையெல்லாம்
மொட்டையடிப்பர்கள் என்னும் உண்மை .
மொட்டையாகும் தலைக்காக
குழந்தை அழவில்லை நாளை
தகப்பனை மொட்டையடிக்கப்
போகிறார்களே என்றழுகிறதெனும்
உண்மை தகப்பன் மாருக்கே புரியும் உண்மை .
இனி இங்கே காதுகுத்தி
இத்துனூண்டு தங்கத்தைப் போட்டுவிட்டு
பவுன்கணக்கில் கேட்கப் போகிறார்களே
என்று புலம்பி அழும் குழந்தையை
புரிந்துகொள்ள இன்னும் நாம்
பதினெட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்
கருப்பு வெள்ளை
புகைப் படத்தை
உற்றுப் பார்த்துக்
கொண்டேயிருந்தேன்…..
மெல்லத் துளிர் விடத்
தொடங்கியது….
கால
ஓட்டத்தின்
வண்ண கேசங்கள்….
கவிஜி
முடி
தலை தலையாய்
வேண்டுதல் இந்த
வேண்டு தலை
கடந்த ஜென்மத்து
பந்தங்களை துண்டிக்க
இந்த வேண்டு தலை
இந்துக்களின் முக்கிய சடங்கு
குல தெய்வத்துக்கு
முடி கொடுத்தால்
முடி மட்டுமல்ல
குழந்தையும் ஆரோக்கியமாய்
வளரும் என்பது ஐதீகம்
தலைக்கனம் போக
தலைமுடி தருவாய்
பார் பார் உனக்கு முடி
எப்படி வளரப்போகுதுன்னு
அழாமல் முடிகொடு சாமிக்கு
அடுத்துக்கொடுப்பார் சாமிசீக்கிரமே
ஆறடி க்கூந்தலை உனக்கு
சரஸ்வதி ராசேந்திரன்
வேண்டுதல்…
தாய்மாமன் தன்மடியில் தாங்கிப் பிடித்திட்டார்,
ஓய்வின்றி வேண்டாம் அழுகையும்தான்- சாய்ந்திடாதே
செல்லமே சொல்கேளு, சொந்தசாமி வேண்டுதலை
நல்லபடிச் செய்திடுவோம் நாம்…!
-செண்பக ஜெகதீசன்…
முடியை கொடுப்பது
சம்பரதாயம் மட்டுமல்ல
மகிழ்ச்சியின் திருவிழா
உறவுகளின் அன்பின் ஒற்றுமைக்கு
உணர்வு கொடுக்கும்
ஆத்மார்த்த நிகழ்வு
மாமன் மடியில் வைத்து
மொட்டை போட
அத்தை ஆறுதல் சொல்ல
மற்ற உறவுகள் உணவுக்கும்
உணர்வுக்கும் உதவி செய்ய
குழந்தைக்கு தலைமுடி
எடுத்தால் இன்னும்
ஆரோக்கியம் என்ற
உண்மையான காரணத்திற்காக
முன்னோர்கள் செதுக்கி
வைத்த சிற்பம் போன்ற
நல்வாழ்வின் வழிமுறைகள்
அழாதே தங்கம்
நீ ஆரோக்கியமாய்
நீடுடிவாழ்வாய்
பட வரி 40.
முடி வழித்தல்
பிறந்த முடி வழித்தலென்று
பிறந்த முப்பதாம் நாள்
சிறப்பாகத் துடக்குமுடி வழிப்பர்
மறக்காது சந்தனமிட்டுக் குளிர்விப்பார்.
குழந்தை கதறக் கதற
வழங்கும் வழக்கங்கள் கொடுமை!
புனித அறிவைப் பாவிக்கலாம்!
மனித வேண்டுதல்களிற்கு அளவில்லை!
மூட வழக்கமென்று இதற்கு
மூடுவிழா வைத்தாலும் பல
தடவை வழித்தால் முடி
அடர்த்தியாக வளருமென்பதும் வழக்கு.
பொது உறவு கூடல்
இது சடங்கு என்று!
மாற்ற நினைத்தாலும் மாறாது
போற்றும் நிகழ்வு இது!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-11-2015.
திருக்கோவிலில் முடி காணிக்கை செலுத்துவது
இறைவனிடம் சரணாகதியாகும் சம்பிரதாயம்
திருக்கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் போது
தந்தை சிரிக்கிறார்
மகன் அழுகிறார்
முடி வளர்ந்து மகன் வளர்கிறார்
மகன் தந்தையைகிறார்
தந்தை தாத்தவாகிறார்
பேரனும் திருக்கோவலில் முடிகாணிச்கை செலுத்துகிறைரர்
முடிசூடி மன்னாராகத் திகழ்கின்றார்