ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 33
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஏகாந்த வாழ்க்கை
_____________________
“நாம் ஊமைகளாக மூலை முடுக்குகளில் தெரியாமல் முடங்கிக் கிடந்தோம். ஆனால் இன்று நமது குரல் ஓங்கி வானகமே அதிரும் வண்ணம் முழக்குகின்றது.”
“நாமோர் சிறிய பொறியாக சாம்பல் குவியலில் புதைக்கப் பட்டிருந்தோம். ஆனால் இன்று நாமோ சீறி எழும் தீக் கனலாக வனக் குன்றின் வாசலில் நிற்கிறோம்.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
_____________________
ஏகாந்த வாழ்க்கை
_____________________
என்னரும் சகோதரனே ! நீ
உன் புகழ்ப் பீடத்தின்
மீதமர்ந்து
உன்னைச் சுற்றி யுள்ளோர்
உன் கம்பீரத்தை வாழ்த்தி
தீரச் செயல்களைப் போற்றி
பேரறிவை வியந்து
தேவ தூதருள் ஒருவராய்
உன்னை நோக்கி
வானளாவ முழக்குவதை
நானும் கண்டிருக் கிறேன் !
_____________________
உன் குடிமக்களைப் பார்த்து நீ
உவப்பதை –
உன்னத வெற்றிகளின்
வெகுமதியை –
உன் உடலுக்கு
நீயே ஆத்மா வென்பதை
நான் உன் முகத்திலே
கண்டிருக்கிறேன் !
_____________________
பிற்காலத்தில் மறுபடி நான்
நோக்கிய போது
ஏகாந்தனாய் தனித்து நீ
ஆசனத்தின் அருகில்
நிற்கக் கண்டேன் !
நாற்புறமும் உன் முன்னே
நாடு கடத்தும் கரங்கள்
நீட்டி இருந்தன !
கண்ணுக்குத்
தெரியாத பிசாசுகள் உனக்காகப்
பரிவுக்கும் அருளுக்கும்
இரங்கிப் பாவிப்பது போல்
உனைப் பாதுகாக்க
யாசித்தன
நேசமும் கணப்புத் தழுவலும்
சேர்ந்து !
_____________________