Year: 2015

  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -7

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ​ரூ​பை​யாத்
    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
    தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா

     

    ++++++

    The garden -1

     

    சொல்வது அவர்: சிங்கம், முதலை நடத்திடும்
    ஜாம்சையத் புகழெய்திக் குடித்த நீதி மன்றத்தை;
    பெருவேடன் பஃஹ்ராமும் உளான்; காட்டுக் கழுதை
    தலைமேல் மிதிப்பினும், கலையா தவன் தூக்கம்!

     

    19
    They say the Lion and the Lizard keep
    The Courts where Jamshyd gloried and drank deep:
    And Bahram, that great Hunter – the Wild Ass
    Stamps o’er his Head, but cannot break his Sleep.

     

     

    சிந்திப்பேன் சில நேரம், சிவக்காது ரோஜா,
    குருதி சிந்தும் ஏதோர் சீஸர் புதைத்த இடத்தில்;
    பூங்கா மடியில் புரளும் செந்நிறச் செடியும்
    ஏதோர் எழிற் தலை வீழ்த்திய ஒன்றுதான்!

     
    20
    I sometimes think that never blows so red
    The Rose as where some buried Caesar bled;
    That every Hyacinth the Garden wears
    Dropt in its Lap from some once lovely Head.

     

    இப்பூரிப்பு மூலிகை விதையின் மென்பசுமை
    பறக்கச் சிறகு தரும் ஆற்றின் கரைகளுக்கு;
    சாய்வாய் அதன்மேல் மெதுவாய்; எழில்
    வாயில் தெரியா தெழுமென யார் அறிவார்

     

    21.
    And this delightful Herb whose tender Green
    Fledges the River’s Lip on which we lean –
    Ah, lean upon it lightly! for who knows
    From what once lovely Lip it springs unseen!

    ​   ​

    தகவல்:

    1. http://www.acole.com/novels/timuras/khayyam.html

    2.http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm

    3. http://www.omarkhayyamrubaiyat.com/text.htm

    4. https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam[November 17, 2015]

     

    Share
  • கருணைக்காவல்

    சந்தர் சுப்பிரமணியன்

     

    குறுகலான சாலை.

    ‘அதன்மேல் யாரேனும் காலை வைத்து விடுவார்களா?’
    கவலை என்னைப் பிடுங்கித்தின்ன ஆரம்பித்தது.
    கதவைத் திறந்துவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    விர்ரென்று ஸைரனுடன் விரையும் ஆம்புலன்ஸ்,
    கொக்கிக்கொக்கி அரைப்பெடல் அடித்தவாறு சைக்கிளில் வரும் பேப்பர்பையன்,
    தெருவையே அதிரவைத்தபடி வரும் பால்காரனின் மின்வண்டி,
    எதையோ துரத்தியபடி ஓடும் தெருநாய்களின் கும்பல்,
    பழைய பேப்பர் வாங்குபவனின் மூன்று சக்கர வண்டி,
    குப்பை எடுத்துச்செல்லும் லாரி,

    – கண்கொட்டாமல் நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    வீட்டுக்கு உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது:
    ‘ஏன்டி, கோலம் போட்டுட்டு வர இவ்வளவு நேரமா?’

    Share
  • தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான போட்டி

    வணக்கம்.

    காரைக்குடி கம்பன் கழகம் , காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் 31-1-2016 ஆம் தேதி நடத்தும் இவ்வாண்டுக்கான தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான போட்டி அறிக்கையினையும், சிவகங்கை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டி நடைபெறுகிறது.

    scan0087

    scan0088

    தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் இவை பற்றி தெரிவித்து மாணாக்கர்கள் அவர்கள் படிப்புக் கட்டணம், புத்தகங்கள் வாங்கும் செலவிற்கு உதவுகிறார்போல் அதிக அளவில் ரொக்கப் பரிசுகளைப் பெற்றுப் பயனடைய உதவிடும்படி மிக்க பணிவன்புடன் வேண்டுகின்றோம். தங்கள் அறிவிப்பு பெற்றோர்களின் பாரத்தை இம்மழை வெள்ளப் பாதிப்பு சமயத்தில் குறைப்பதற்கு பெருமளவில் உதவும்; அவர்கள் தங்களுக்கும், தங்கள் பத்திரிக்கைக்கும் நன்றி பாராட்டுவர்.

    மேலதிக விபரம் வேண்டுவோர் அல்லது போட்டித் தயாரிப்பிற்கு விவரம், குறிப்பு வேண்டினால் அஞ்சலட்டையில் பள்ளியா கல்லூரியா என்று குறிப்பிட்டு, தங்கள் வீட்டு அஞ்சல் குறிப்பு எண்ணுடனான முழு இல்ல முகவரியை, “கம்பன் கழகம், காரைக்குடி 2” என்ற முகவரிக்கு எழுதினாலோ அல்லது 94450 22137 என்ற கைபேசிக்கு குறுஞ்செய்தியில் (எஸ் எம் எஸ்) அனுப்பினாலோ எங்கள் செலவில் அறிக்கைகளை முழு விபரங்களுடன் அனுப்பி வைக்கிறோம் என்ற செய்தியையும் தெரிவித்து உதவ மிக்க அன்புடன் வேண்டுகின்றோம்.

    தாங்கள் இதுகாறும் எங்கள் முயற்சிகளுக்கு அளித்துவந்த உதவிகளுக்கும் ஆதரவிற்கும் நன்றியும் வணக்கமும் ஏற்றருள்க! இத்தகு நட்பும், உதவியும் இனியும் தொடர அன்போடு நன்றி பாராட்டி வேண்டுவோம்.

    தமிழ்ப் பணியில் தங்கள் பணிவன்புள்ள

     
    செயலாளர்
    ————————————-
    M.Palaniappan
    muppalam2006@gmail.com
    manidal.blogspot.com
    9442913985

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”ஆண்டாள் -9”….
    ———————————

    a7ad4b77-2cff-40df-8634-511108001ad9

    ”’தூமணி மாடத்” திருப்பாவை இன்றுரைத்தாள்,
    கோமள கோகிலக் கோதையார்: -மாமாயன்,
    பன்னிரெண்டு(துவாதஸ) நாமம் புகன்றுடுவீர் பாவைகாள்,
    கண்ணிரெண்டில் மின்னும் கதிர்”….கிரேசி மோகன்….

    கோகிலம் -கிளி….

    Share
  • மார்கழி மணாளன் 8 ஒப்பிலியப்பன் கோயில்( (திருநாகேச்வரம்) திரு விண்ணகரப்பன்  

    க. பாலசுப்பிரமணியன்

    e0de2c95-7269-4d28-9ab0-4fd166896f38

    தரணியில் தன்னொப்பாரில்லா அப்பனே !

    துளசியின் தவத்தால் வந்த திருவுள்ளமே

    திருவேங்கடத்தான் உருக்கொண்ட திருமாலே !

    திருவிண்ணகரம் கண்டதிருநிறைவே! திருவருளே  !

     

    மனம்கனிந்து மார்கண்டேயனக்கு மகள் தந்தாய்

    மனமுவந்து இளம்பெண்ணை மணம் முடித்தாய்  !

    உளமுவந்து உப்பில்லாப்பண்டம் உண்டாய் !

    உப்பிலியப்பா !! உன்பாதம் நித்தியத் திருக்காப்பு !!

     

    ஓங்கி உலகளந்த  உத்தமனே! தத்துவமே !

    உருமாறி வாழ்ந்திருந்த பறவையையும்

    ஓரிரவில் திருக்குளத்தில் உய்வித்தாயே !

    உள்ளத்தின் இருளில் ஒளியாய் வந்திடுவாயே !

     

    திருக்கண்கள் மறைத்து நீ நின்றாலும்

    திருக்கண்ணா ! உன் பார்வை என் மீது !

    திருக்கண்ணமுதின் சுவையாக நீயிருக்க

    திருவிண்ணகரத்தானே ! திருத்தாள் காப்பு!

     

    ஆயிரம் பெயர்கள் போற்றிட  உனக்குண்டு

    அன்புடனே ஒருபெயர் சொல்லி அழைக்கின்றேன் !

    ஆதிமூலத்திற்கு அருள்செய்த வேங்கடவா !

    ஆனையென எனைநினைத்து அருள்வாயே !

     

    ஊஞ்சலில் உனைவைத்து உப்பிலியப்பா, !

    கொஞ்சிடவே மனம் நித்தம் வேண்டுதப்பா  !

    சொல்லூஞ்சலில் உனைவைத்து ஆட்டுகின்றேன்

    சுகமாக என் நெஞ்சில் நீ அமர்ந்திடுவாய்  !

     

    உப்பில்லா உணவும் ஓர் சுவைதான்

    உப்பிலியப்பா ! உன் அருட்சுவைதான் !

    மூப்புற்று முழங்கால்கள் மடியும்முன்

    முப்போதும் உனைக்காண வரம்  தருவாய் !

    Share
  • மார்கழி மணாளன் 7  திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

    திருநீர்மலையில் திருமால் நான்கு வகையாக தரிசனம் தருகின்றார்.-  அரங்கனாக (கிடத்தல்) நீர்வண்ணனாக (நிற்றல்) திருவிக்ரமனாக (நடத்தல்) யோகநரசிம்மராக (அமர்தல்) . இதை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட பாடல்

    271f5fd3-6b56-4fa8-aedb-d3459ea3b314

    நீருண்ட மேகங்கள் சற்றே வான் நிற்கும்

    நீர்வண்ணா! உன்னழகு பார்த்திருக்கும் !

    வான்மேகத்தில் வளைந்த வில்லைப்போல்

    பால்வண்ணா! பரம்பொருளே ! நின்னழகு.!

     

    நின்றான் நீர்வண்ணன் நிலம் மீதில்

    நிலையாகும் கண்கள் சிலை மீதில்

    மலையான துயரங்களும் நீக்கிடுவான்

    மலையாளும் மாலனே நீர்மலையில் !

     

    அலைபாய் பாற்கடலின்  நல்லமுதே

    கிடந்தாய் பாம்பணை  மேல் சாய்ந்து !

    மலைத்தார் விண்ணவரும் அறிந்தார்

    கிடந்தான் இடந்தான் என்றும் வைகுந்தமே !

     

    இருப்பான் இவன் எங்கே எனக் கேட்டான்

    இறுமாப்பில் தன்  நிலைதான் மறந்தான்

    இருப்பேன் இங்கும் அங்கும் எங்குமென

    இருந்தாய் அமர்ந்தாய் இறையாய் நரசிம்மா !

     

    மூவுலகும் அளந்த மூத்தவனே மாதவனே !

    மூன்றடியில் முடிமன்னன் காத்தவனே !

    கிடந்தாலும் நடந்தாலும்  நீயே அளப்பாய் !

    கடைக்கண்ணால்  காவியம் பல படைப்பாய் !

     

    நின்றாலும் அமர்ந்தாலும் நடந்தாலும்

    நீர்மலையில் நீ அழகாகக் கிடந்தாலும்

    நான் வாழ நிழலேன்றும்  நீ எனக்கு !

    நீலவண்ணா ! நின் நினைப்பே காப்பு !

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஆண்டாள் -8….
    ——————————–

    eaa9d798-8a1b-43ab-924a-8ada8d780cb2

    ‘’கீழ்வானம் செப்புது, கோதை திருப்பாவை
    பாழ்வாய் பிளந்துறங்கல் போதுமெழு : -ஆழ்வாராய்
    தேவாதி தேவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவள்
    கூவாது கெஞ்சும் கிளி’’….கிரேசி மோகன்….

    Share
  • மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 2

    — முனைவர்   துரை. குணசேகரன்.

     

    மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

    கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
    படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
    முடியாத முதலோனை மூவர் பெருமானை
    வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
    வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

    ‘முயற்சி திருவினையாக்கும்’ என்று சொல்வார்களே அது பிள்ளையவர்கள் வாழ்வில் நூற்றுக்குநூறு உண்மை. பிள்ளையவர்கள் திருத்தணிகைப்புராணத்தை வருவித்துப்படித்து வருகிறார். அப்புராணத்தில் அகத்தியன் அருள்பெறுபடலத்தின் சிலபகுதிக்குப்பொருள் விளங்கவில்லை. ‘சிவதருமோத்திரம்’ என்னும் நூலின் உதவியால் பொருளை விளங்கிக்கொள்ளலாம் என்று அறிகிறார். அச்சுவடியைப்பெற அரும்பாடுபடுகிறார்.

    இந்தச்சுவடி, திரிசிரபுரத்தில் ஆன்மீகவாதியான தேசிகர் ஒருவரிடம் இருப்பதாக அறிந்து நேரில்சென்றும் பலஅன்பர்கள் வழியாகவும் கேட்டுப்பயனில்லை. பொருள் தருவதாகச் சொல்லியும் சாக்குபோக்குச்சொல்லி அலைக்கழித்து வருகிறாராம் அந்த அன்பர். எங்கு இருக்கப்போகிறதோ என்று எண்ணிய பிள்ளையர்களுக்கு, தம்மூரிலேயே அந்தச்சுவடி இருக்கிறதென்பதை எண்ணி முதலில் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் கைக்குஎட்டியது வாய்க்குஎட்டாதபோது அதுபற்றிக்கவலைப்பட்டார்.

    முகவாட்டத்துடன் இருந்த பிள்ளைவர்களைப்பார்த்த அவரின் மாணவர் சுந்தரம்பிள்ளை என்பவர் அதுகுறித்து வினவுகிறார். உண்மையறிந்து, அதனைப்பெற்றுத்தருவதாக உறுதிகூறிச்செல்லுகிறார். ஒருமுறை மேற்படி சிவதருமோத்திர சுவடியிருக்கும் வீட்டிற்கு எதிரே பிரபு ஒருவர் இரட்டைக்குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்து இறங்குகிறார். முன்னர் ஒரு சேவகன் ஓடிவந்து, இந்த வீடு இன்னாருடையதானா? அவர் இருக்கிறாரா? என்று தேசிகரிடம் வினவ, நான்தான் அவர், என்னவேண்டும் என்றுகேட்கிறார். அதற்குள் இன்னொரு சேவகன் ஓடிவந்து திண்ணiயில் விரிப்பொன்றை விரிக்க, வேறொருவன் திண்டினைக்கொண்டு வந்து வைக்கிறான். பிரபு திண்ணையில் அமர்ந்து திண்டில் சாய்ந்துகொண்டு கம்பீரமாய்க் காட்சியளிக்கிறார்.இதைக்கவனித்த தேசிகர் நாமாகச்சென்று விசாரித்தால் மதிப்பு இருக்காது என்று எண்ணி ஒருபலகையில் சென்று அமர்ந்துவிட்டார். முன்பு வந்த அதே சேவகன் உள்ளே வந்து விவரத்தைச்சொன்னான். ‘உள்ளே அழைத்து வரலாமே’ என்று கூறியவர், தாமே வந்து பார்ப்பதாகக்கூறி வெளியில் வருகிறார். முகமன் கூறி நிற்கிறார்.

    சிறிதுநேரம் கழித்து சேவகர் ஒருவரிடம் வந்திருப்பவர் யார்? எங்கே வந்தார்கள் என்று மந்தணமாக (மறைவாக) கேட்கிறார். “எஜமானவர்கள் தென்னாட்டில் ஒரு ஜமீன் பரம்பரை. தாயார் முதலியோருடன் சிதம்பரதரிசனத்திற்காக வந்து இவ்வூரில் இறங்கி ஜம்புநாதர், தாயுமானவர், அரங்கநாதர் ஆகியோரை வழிபட்டுச்செல்ல கண்டோன்மென்டில் ஒரு பங்களாவில் மூன்றுநாட்கள் தங்கிச்செல்லலாம் என்றிருந்தார்கள். அதற்குள் தாயாருக்குச்சுரம் ஏற்பட்டது. எவ்வளவோ மருத்துவம் செய்தும் பலனில்லை. இங்கேயே தகனம் செய்துவிட்டு இன்று காலை நடக்கவேண்டிய செயல்களையும் செய்து முடித்தோம். சொந்த இடமாக இருந்தால் எவ்வளவு சிறப்பாக நடந்திருக்கும் என்ன செய்வது? எல்லாம் தெய்வச்செயல்” என்று கூறிமுடித்தான். “சிலவிவரங்களை விசாரிக்க, தக்கவர் யார் என்று கேட்டதற்கு, அனைவரும் உங்கள்பெயரைச்சொன்னார்கள். அதனால்தான் இங்கு வந்தோம் என்றான். காரியத்தை நடத்துவதற்கு வேண்டிய பதார்த்தம் அவ்விடத்தைப்போன்று இவ்விடத்தில் கிடைக்காது. நடத்துதற்குரிய நபர்களும் அவ்வாறே. அதனால் ஊருக்கே புறப்பட்டுப்போய்விடலாமோ என்றுகூட நினைக்கிறார்கள்” என்று கூறினார்.

    விவரங்களைக்கேட்ட தேசிகர், “பணம்மட்டும் இருந்தால் என்ன பொருள் கிடைக்காது? எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். யோசிக்கவே வேண்டாம் என்று கூற, யோசனை ஒன்றுமில்லை சிவதருமோத்திரம் என்று சுவடி உள்ளது. அதனை இந்தநேரத்தில் படித்துக்கொண்டே பொழுதுபோக்கவேண்டியுள்ளது. பிரபுவின் பிதாஎஜமான் இறந்தபோதுகூட எங்கிருந்தோ அந்தச்சுவடியைத்தருவித்து படித்தார்களாம். அந்தச்சுவடியும் கிரந்தத்தில் இருந்தால் பயன்இல்லை. தமிழில் வேண்டுமாம். இதற்காகவே அங்கே போயவிடலாம் என்று நினைக்கின்றனர்” என்று கூறிய சேவகன், ‘இங்கேயே இருந்து முடித்துவிட்டுப்போனாலென்ன என்று எவ்வளவோபேர்சொல்லியும், காதில் ஏறவேயில்லை. ‘இந்தப்புத்தகத்தைப்படிக்கா மற்போனாலென்ன?’ என்று மெல்லிய குரலில் சொன்னான்.

    உடனே தேசிகர் பிரபுவை நோக்கி ‘சிவதிருமோத்திரசுவடி தமிழிலேயே என்னிடமிள்ளது. பயன்படுத்திக்கொள்ளலாம் உங்களைப்போன்ற பிரபுக்களுக்கில்லா மல் வேறுயாருக்குத்தான் கொடுக்கப்போகிறேன் என்றார். கிரியை நடப்பதற்கு வேண்டிய குறிப்புகளைக்கேட்டு எழுதிவாங்கிக்கொண்டு, செலவு குறைவாகத்தான் இருக்கிறது. அங்கே செய்தால் இன்னும் அதிகமாகும்’ என்றுகூற, ‘இவ்வளவு செலவு செய்யக்கூடியவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்’ என்று தேசிகர் பதிலுரைத்தார்.

    பிரபு, ‘நீங்களே இருந்து எல்லாவற்றையும் செய்க, வாங்கவேண்டியவற்றை உடனிருந்து வாங்கித்தரவேண்டும்’ என்று சொல்விட்டு வண்டியில்ஏறி அமர்ந்தார். சேவகன் ஒருவர், ‘நாங்கள் எப்போது வரவேண்டும்?’ என்று கேட்க, கிரியைக்கு ஒரு வாரத்திற்குமுன் வந்தால்போதும்’ என்று தேசிகர் கூறிவிட்டு, பிரபுவிடம், ‘கொஞ்சம் தாமதித்துச்செல்ல வேண்டும’; என்று வேண்டிக்கொண்டு இல்லத்திற்குள் ஒடுகின்றார். ஒரு சுவடியை எடுத்துவந்து, ‘இந்தப்புத்தகத்தை முன்பே கொடுக்காததற்கு மன்னிக்க வேண்டும். தங்களைப்போன்றவர்களின் பழக்கத்தைவிட இந்தப்புத்தகம் எனக்குப்பெரிதில்லை. குறிப்பறிந்து செய்யும் மகாபிரபுவுக்குத்தெரிவிக்க என்போன்றோருக்கு வேறுஎன்ன இருக்கிறது’ என்று வழிகிறார். ‘எல்லாம் தெரிந்துகொண்டோம்: அதிகமாக ஒன்று சொல்லவேண்டியதில்லை’ என்று கூறி, ஐந்து ரூபாயை எடுத்துக்கொடுத்துவிட்டுக்கிளம்பினார் பிரபு. சேவகர்கள் வண்டியின் முன்பும் பின்பும் ஓடினார்கள். தேசிகருக்கு இக்காட்சி அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தது.

    இதுவரை நடந்தது ஒரு நாடகம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். பிரபுவாக நடித்தவர் பிள்ளையவர்களின் அன்புக்குரிய சுந்தரம்பிள்ளை. ஒருநாள் அவர் வந்து பிள்ளையைப்பார்த்து சிவதிருமோத்திரசுவடியைத்தருகிறார். ‘ஏதப்பா இந்தச்சுவடி? எப்படி கிடைத்தது?’ என்று கேட்டவர், ‘ஏன் மீசையை எடுத்துவிட்டாய். உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத்தெரியாமல் போய்விட்டதே. ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?’ என்று கேட்கிறார். ‘அதைப்பற்றிப்பிறகு சொல்கிறேன். இந்த நூலை படிஎடுத்துக்கொண்ட ஒருவாரத்தில் கொடுத்துவிடுங்கள். யாருக்கும் தெரியவேண்டாம’; என்று சுந்தரம்பிள்ளை கூறிவிட்டுச்செல்கிறார்.

    பிள்ளையவர்கள் பத்துப்பத்து ஏடாகப்பிரித்து படியெடுத்து உரியகாலத்தில் கொடுத்தனுப்புகிறார். அந்தச்சுவடியுடன் ஒரு பவுனையும் கொடுத்து, தேசிகரிடம் சேர்ப்பிக்குமாறு சுந்தரம்பிள்ளை சேவகர் ஒருவரிடம் பணிக்க, தேசிகரின் வரவேற்பிற்கிடையே அவரிடம் ஒப்படைத்துவிட்டு, ‘உறவினர்களின் வற்புறுத்தலினால் ஊரில்போய் காரியத்தைச் செய்வதாகவும், தங்களிடம் கூறிவிட்டுச் சொல்லமுடியவில்லையே என்று வருந்துவதாகவும்’ கூறினான். மேலும், விரைவில் தங்களையும் அவ்விடத்திற்கு அழைப்பார்கள் என்றும் கூற, முதலில் வருந்திய தேசிகர், பொன் கிடைத்ததில் சமாதானமடைந்ததாக உ.வே.சா. தமது நூலில் குறிப்பிடுகின்றார்.

    பிள்ளையவர்கள் வேறொருவர் மூலம் நடந்த நிகழ்வுகளை அறிந்து, சுந்தரம்பிள்ளையின் அடைக்குந்தாழ் இல்லாத அன்பின்பெருமையை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். தாம் நிகழ்த்திய நாடகம் குறித்து சுந்தரம்பிள்ளை அஞ்சி சிலநாட்கள் பிள்ளளையவர்களைப்பாராமலே இருந்துவிட்டார். அவரின் வற்புறுத்தலின் பேரில் சுந்தரம்பிள்ளை வந்தார். ‘என்ன அப்பா இப்படிச்செய்யலாமா?’ என்று கேட்பொழுது,

    “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கு மெனில்”

    என்னும் குறளுக்கேற்ப நடந்துகொண்டேன். இதனால் யாருக்கு எந்தத்தீமையும் இல்லையே. ஐயாவுக்குக்குற்றமாகத் தோன்றினால் பொறுத்தருளவேண்டும் என்றார். இந்நிகழ்வு ஆசிரியர்மீது மாணவர்கொண்டிருக்கும் உண்மையான குருபக்தியைக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி ஐயத்தைப்போக்கிக்கொள்ள பிள்ளையவர்கள் ஒவ்வொருநேரத்தில் எடுக்கும் முயற்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

    மாணவரின் திறனாய்வுக்கு மதிப்பு:-
    மகாவித்துவான் அவர்களுக்குள்ள பெருமைகளில் குறிப்பிடத்தகுந்தது அவர் உருவாக்கிய மாணவர் பரம்பரை. பங்களூரில் இருந்த தேவராசப்பிள்ளை, பிள்ளையவர்களை மாணாக்கர்களுடன் அழைத்துப்பாடம் கேட்டவர். பிள்ளையவர்கள் கவலையில்லாமல் இருந்தால் படைப்புகளை மிகவும் நேரத்தியாகச்செய்வார் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

    பிள்ளையவர்கள் பாடிய அம்பர்புராணத்தில் சில பகுதிகளைக்கேட்டுவந்த அவருடைய தலைமாணவர்களில் ஒருவரான தியாகராசச்செட்டியார், “பாலியத்தில் செய்த உறையூர் புராணத்தைப்போல இப்புராணம் யோசித்துச்செய்யப்படவில்லை. அம்மாதிரி செய்தால் மிக நன்றாகவிருக்கும்” என்று கூறினார். அதற்கு, “வல்லூர்த் தேவராசபிள்ளiயின் பேருபகாரம்தான் காரணம். அவ்வாறு யாரேனும் என்னைக்கவலையில்லாமல் ஆதரித்து வைத்திருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வேனே” என்று பிள்ளையவர்கள் பதிலளித்தாராம்.

    பெருங்காப்பியம் படைத்த தேரெழுந்தூர் கம்பனுக்கு, திருவெண்ணெய் நல்லூர் சடையப்பவள்ளல்போன்று, திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அங்காங்கே நாடுமுழுவதும் அவ்வவ்போது சிற்சிலமகான்கள் உதவியிருந்தாலும் நிரந்தரமாக, ஒரிடத்தில் அமரவைத்து கல்விப்பணியாற்றுமாறு செய்ய வழியில்லை. அவ்வாறு வழியிருந்திருப்பின் பாடஞ்சொல்லும் தொழிலகமாய், படைப்புகளைத்தீட்டும் பட்டறையாய், பதிப்புரைக்கூடமாய் தனிமனிதரே விளங்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

    இடிப்பாரை இல்லா ஏமாறா மன்னன்
    கெடுப்பார் இலானும் கெடும்

    எனும் குறளுக்கு இலக்கியமாய், பிள்ளையவர்கள் விளங்கியிருக்கிறார்கள். குருகுலவாசம் என்று படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தாம் எல்லாம். மாணவர்களுக்கு விடுதலை உணர்வோடு பேசும் உரிமை இருந்திருக்குமா என்று ஐயுறும் காலத்தில் ஒரு மாணவர் ஆசிரியரின் நூலைத்திறனாய்ந்து கருத்துகூறும் நிலையினைப்பார்க்கவியலுமா? பிள்ளையவர்களின் மாணவர் தியாகராச செட்டியார் அம்பர்ப்புராணம் குறித்து கூறியபோது, அதனை ஏற்றுக்கொண்டு அதற்குரிய காரணத்தைக்கூறியதும், அந்நிகழ்வினை அவரின் இன்னொரு மாணவராம் உ.வே.சா.பதிவு செய்வதும் குருநாதரின் பெருந்தன்மையினைக்காட்டும் நலமான நல்ல நிகழ்வுகளாகும்.

    படைப்பாக்கத்தில் மாணவருக்கு உதவி:-
    மாணவர்களுக்கு கருத்துவிடுதலை அளிப்பது மட்டுமன்றி, படைப்புகளை உருவாக்குவதிலும் உறுதுணையாகப்பலநேரங்களில் விளங்கியவர் மகாவித்துவான் அவர்கள். இவரின் மாணவரான தேவராசப்பிள்ளை தெலுங்கில் இருந்த குசேலோபாக்கியனத்தை தமிழ்வசனநடையில் பெயர்த்து கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதற்குரிய ஆற்றலை அவர் அப்போது பெறாதிருந்ததால் ஊக்கம் குறைந்து உடம்பும் தளர்ந்தநிலையில் காணப்பட்டார். இதனால் வருத்தமுற்றிருப்பதை அறிந்தபிள்ளையவர்கள், “குசேலோ பாக்கியானத்தை செய்யுள்வடிவில் பார்க்க எண்ணமிருந்தால் ஓய்வு நேரங்கில் பாடிமுடித்துவிடுகிறேன். நன்றாகப்பாடுதற்குப்பயிற்சி எடுத்துக்கொண்டபின் ஏதேனும் நூல் இயற்றலாம். இதனை இத்தோடு நிறுத்திவிட்டுக்கவலையின்றி இருங்கள்” என்றார். ஆசிரியரின் சொல்லை மறுத்தற்கஞ்சி அம்முயற்சியை நிறுத்திவிட்டார்.

    என்றாலும் மாணவரின் மனக்குறையைக்குறிப்பாலறிந்த ஆசான் அதுவரை அவர்பாடிய குசேலோபாக்கியானப்பகுதிகளைத்திருத்தம் செய்தது மட்டுமன்றி, நாளொன்றுக்கு ஐம்பது செய்யுளுக்குக்குறையாமல் மாணவருக்கு முன்பாக இயற்றி முடித்தார். எந்தவிய சிரமமின்றி இயல்பாகப்பாடும் திறன்பெற்றிருந்த குருநாதர் பற்றி, “ஐயா! நீங்கள் தெய்வப்பிறப்போ! சாதாரண மனிதராக உங்களை நினைக்கவில்லை. சில பாடல்கள் செய்வதற்குள்ளே நான்பட்டபாடு தெய்வத்திற்கும் எனக்குமே தெரியும். இனிமேல் நான் உங்களிடத்தில் விசேட மரியாதையோடு நடப்பேன். இப்பொழுதுதான் உங்களுடைய பெருமை எனக்குத்தெரிய வந்தது. ஒரு பாட்டையாவது நீங்கள் திரும்பதிருத்தச்சொல்லவில்லையே. நீங்கள் இவ்வளவையும் மனத்திலே யோசித்து முடித்துக் கொள்கிறீர்களே. ஒரு பாட்டெழுதுவதற்குள் நான் கிழித்த காகிதங்கள் எவ்வளவோ இருக்கும்!” என்று ஆனந்தமடைந்தாராம்.

    “நாடு உனக்குதான் நாளை முடிசூட்டிக்கொள்’ என்ற போதும் இல்லை…இல்லை….

    ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனேஆள நீபோய்
    தாழிரும் சடைகள்தாங்கி தாங்கரும் தவம்மேற்கொண்டு
    பூழிவெண்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள்ஆடி
    ஏழிரண்டாண்டில் வாவென் றியம்பினன் அரசன்என்றான்

    என்றபோதும் ‘அன்றலர்ந்த செந்தாமரை முகத்தினைவென்ற இராமன் முகத்தைக் கம்பன் காட்டுவானே… அதேபோன்று, அம்பர்ப்புராணம் குறித்த, மாணவர் தியாகராச செட்டியாரின் திறனாய்வையும், குசேலாபாக்கியானத்தை மாணவருக்காகப் பாடித்தந்தபோது மாணவர் தேவராசப்பிள்ளை பாராட்டியதையும் ஒரேநிலையில் எடுத்துக்கொள்கின்ற பண்பினை, மகாவித்துவானிடம் கண்டபோது, அவரைப் ‘பிற்காலக்கம்பர்’ என்று பாராட்டுவது மிகவும் பொருத்தம் என்பதை உணரலாம்.

    மாணவருக்காக எழுதிய குசேலோபாக்கியானத்தில் இரத்தலின் இழிவினை,

    “பல்லெலாம் தெரியக் காட்டிப் பருவரன் முகத்தில் கூட்டிச்
    சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து
    மல்லெலாம் அகல வோட்டி மானமென்பதனை நீட்டிவீட்டி
    இல்லெலா மிரத்த லந்தோ விழிவிழி வெந்த ஞான்றும்”

    என்று காட்டுவது, இரப்போர் பற்றிய சித்திரத்தைப்பார்ப்பதுபோல் அமைந்துள்ளது. இதுபோன்று நூல்முழுவதும் ஆற்றொழுக்கான நடையால் படிப்போரை ஈர்க்கும் பாங்கினை இந்நூல் மட்டுமன்றி எந்நூலிலும் கண்டு சுவைக்கலாம்.

    காப்பிய உறுப்புகளெல்லாம் அமையப்பாடவேண்டும் என்று எண்ணித்தொடங்கிய தியாகராசலீலை முற்றுப்பெறாமல் உண்டாகிய மனக்குறை உறையூர்ப்புராணம் பாடியதால் தீர்ந்துபோனதாம். உதங்கமுனிவர் உறையூரை நோக்கி வரும்போது, பலதலங்களை வழிபட்டு வந்ததாகச் சொல்லப்படும் பகுதி, அத்தலங்களின் வரலாற்றை அழகுறப்படம் பிடிப்பதாக உள்ளது இதோ அப்பாடல்,

    “அனைபோலு நல்லானை அடையாரிற் புல்லானை
    வினையாவு மில்லானை விளக்குமறைச் சொல்லானை
    புனைமேரு வில்லானைப் புரிசடையிற் செல்வானை
    எனையாள வல்லானை யெழிற்காஞ்சி யிடைப்பணிந்தான்”

    பிள்ளையவர்கள் நிரம்பக்கற்று, பலரை உருவாக்கிய நிலையிலும் தமக்குத் தெரியாதவற்றை யார்கூறினாலும் மாணவராக இருந்து கேட்கும் பண்புடையவர். எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும், எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பதன்றோ அறிவென்னும் வள்ளுவத்தை அறிந்தவர் அன்றோ.

    அறிதொறும் அறியாமை:-
    இலக்கணவிளக்கத்திற்கு, சிலவிடங்களில் பொருள் புரியாமையினால் திருவாரூர் வைத்தியநாத தேசிகரிடம் கற்றுத்தேர்ந்த சுப்பிரமணிய தேசிகரிடம் முறையாகபாடம் கேட்கிறார் பிள்ளையவர்கள். தாம்படித்ததே போதுமென்று தமக்குள்ளே நிறைவடைந்த சிலர், பிள்ளையவர்கள் பாடங்கேட்டலைப்பார்த்து வியந்து, “சிறந்த வித்துவானான இவரும் பாடங்கேட்கிறாரே! இவர் பாடங்கேட்க வேண்டுவது உண்டோ? என்ன கேட்கிறார்?” என்று வினவுவார்களாம். அறிதொறும் அறியாமை கண்டு அதனை அகற்றிக்கொண்டவர் பிள்ளையவர்கள் என்பது இதன்வழிப்புலனாகும்.

    மகாவித்துவான் பட்டம்:-
    திருவாவடுதுறை ஆதீனக்கட்டளைத்தம்பிரானாக விளங்கிய ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர், தமக்குக்குருவாக விளங்கிய தாண்டவராயத்தம்பிரான் அவர்களைக் கொண்டு ஆதீன மாணவர்களுக்குப்பாடம் சொல்லிக்கொடுக்கலாம் என்று முடிவுக்கு வருகிறார். அக்கருத்தை குருநாதரிடம் சொன்னபோது,

    “என்னுடைய தேகநிலை அவ்வாறு செய்ய இடந்தராது: வழக்கமும் இல்லை. திரிசிரபுரத்தில் மீனாட்சிசுந்தரம்பிள்ளையென்று ஒரு வித்துவான் இருக்கிறார். அவர் இரண்டுமுறை சென்னைக்கு வந்திருந்தார். அக்காலத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. பாடஞ்சொல்லுவதிலும் செய்யுள் செய்வதிலும் அவருக்கு இணையாக யாரும் இல்லை என்றே சொல்லலாம். இந்தஆதீன வித்துவானாக அவர் நியமிக்கப்டுவாராயின் ஆதீனத்தின்புகழ் எங்கும்பரவும். அவரைக்கொண்டு பலமாணாக்கர்களைப்படிப்பிக்கலாம்.” என்று விண்ணப்பித்துக்கொண்டாராம். அப்போது ஆதீன கர்த்தாவாக விளங்கியவர் அம்பலவாணதேசிகர். அவருடைய கட்டளையைப்பெற சுப்பிரமணியதேசிகர் பலவினாக்களுக்கு விடையளிக்கவேண்டியிருந்தது. இறுதியாக ஆதீன வித்துவானாக்க ஒத்துக்கொண்டார்.

    தம்மை ஆதீன வித்துவானாக்கிய அம்பலவாண தேசிகர் மீது ஒருசில நாள்களில் கலம்பகம் ஒன்றை இயற்றி அரங்கேற்றம் செய்தார். இதனைக்கேட்ட ஆதீனத்தம்பிரான்களில் ஒருவரான கனகசபைத்தம்பிரான் உள்ளிட்ட சிலர், ‘பிள்ளையவர்களுக்குச் சந்நிதானம் தக்க மரியாதை செய்தருள வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்ய, ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை அம்பலவாண தேசிகர் வழங்கினார்.

    ‘மகாவித்துவான்’ என்னும் பட்டம் ஒருசிலருக்குத்தமிழகத்தில் அளிக்கப்பட்டிருந்தாலும், திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய மீனாட்சிசுந்தரம்பிள்ளைக்குத்தான் மிகவும் பொருத்தமாக அன்று முதல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது என்றால் மிகையன்று.

    (தொடரும்)

    குறிப்பு:-
    இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர் தமிழாய்வுத்துறை
    அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை

    *********************

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 41

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “ஒருநாள் பொறுமை இழந்து நான் பல் மருத்துவரிடம் தொல்லை தரும் பல்லைப் பிடுங்கச் சொன்னேன். இரவில் என் நித்திரையைக் கெடுத்து என்னை அலர வைத்து வேதனை கொடுத்தது. குணப்படுத்தாது பல்லைப் பிடுங்குவது முட்டாள்தனம்,” என்று பல் மருத்துவர் பிடுங்க மறுத்தார். பிறகு பல்லருகே துளையிட்டுத் தோண்டி உள்ளே சுத்தம் செய்தார்.”
    – கலில் கிப்ரான் (Decayed Teeth)
    ___________________

    முதல் முத்தம்
    ___________________

    அருமைக் காதலியின்
    முதல் கண்ணோக்கு
    நீர் வெள்ளத்தின் மேல்
    மிதந்து
    வானக மண்டலத் தையும்
    வையகத் தையும்
    புலர்ந்திட வைக்கும்
    ஆன்மாவைப் போன்றது !
    அப்போது
    அகிலத் தலைவன்
    ஆசிகள் கூறுவான் :
    “அப்படியே நடக்கட்டும்”
    என்று.
    ___________________

    முதல் முத்த மானது
    தேவதை நிரப்பிய
    கிண்ணத்தில்
    உதடுகள் தொட்டுச் சுவைக்கும்
    முதல் வாழ்வுத் தேனமுது !
    அதுவே
    முத்திரைக் கோலம் !
    ஐயத்துக்கும்
    இதயத்தை வருத்தி
    ஆன்மா மயக்கு தற்கும்
    இடைக் கோடு !
    இதய உட்சுனையை
    பூரிப்பால்
    பொங்க வைத்திடும்
    ஓர் உறுதிப்பாடு !
    ___________________

    அதுவே வாழ்க்கைக் கீதம்
    உதித்தெழும் துவக்கம் !
    பூரண மனிதன்
    ஆரம்ப நாடகத்தின்
    முதல் காட்சி !
    அதுவே
    கடந்த காலத்து வியப்பையும்
    எதிர் காலத்து
    ஒளி மயத்தையும்
    இணைக்கும்
    ஓர் ஐக்கிய பந்தம் !
    ஊமை உணர்வையும்
    ஒலிக்கும் பாட்டையும்
    ஒன்றாக்கும்
    ஓர் தொடர்ப்பாடு !
    ___________________

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: தனிமரம் காடாத லில்

     

    எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
    கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
    நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
    தனிமரம் காடாத லில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     
    பதம் பிரித்து:
    எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
    கதித்துக் களையின் முதிராது தீர்த்து,
    நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீர
    தனி மரம் காடு ஆவது இல்.

    பொருள் விளக்கம்:
    எதிர்த்திடும் பகைவரின் பகைமையை அது தோன்றும் பொழுதிலேயே, விரைந்து நீக்கிப் பகை முற்றவிடாமல் அழித்து, தன்னை விரும்புமாறு பகைவரின் நண்பர்களையும் தம் வசப்படுத்திவிட்டால், தனித்திருக்கும் மரம் காடாகாது அல்லவா (அவ்வாறாகத் தனித்துவிடப்பட்ட பகைவர் தீமை செய்ய இயலாத வகையில் வலுவிழப்பார்)

    பழமொழி சொல்லும் பாடம்:
    பகைவரை வளரவிடாது, அவர் கொண்ட பகைமையை முளையிலேயே கிள்ளி பகையை அடியோடு அழித்துவிட வேண்டும். பகையை வளர விடாது வேரறுக்க வேண்டும் என்ற கருத்தினை வள்ளுவர்,

    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து. (குறள்: 879)

    முள் மரத்தை அது சிறிய செடியாக இருக்கும் பொழுதே வளரவிடாமல் அழித்துவிடவேண்டு. வளரவிட்டு அதை அழிக்க முற்பட்டால் அழிப்பவர் கையை பதம் பார்த்துவிடும் என்று, பகையை அழிக்கும் வழியைக் காட்டுகிறார்.

    Share
  • உறவு

    -வேதா. இலங்காதிலகம்

    உறவு நடிப்பாகினால்
    உதறுதல் நன்றாகும்
    உடனிருப்பதில் அருத்தமென்ன!
    நெருங்காத மனங்களாலிதயம்
    வருந்த வேண்டாமே!

    துரோகத்தின் காலடிகள்
    துவம்சமாக்கும் பாதையை
    உறவின் அரும்பெருமைகளைப்
    பறக்க விடுதலால்
    இறக்கிறது உறவுன்னதம்!

    உறவு ஊனின்
    உள்ளுறையும் ஆணிவேராய்
    உணர்வெனும் பண்பிற்கு
    ஆதாரமாய் உள்ளது
    உடலையும் வாழவைக்கிறது!

     

    Share
  • கண்ணாடி பார்ப்பவள்…!

    -கவிஜி

    நீ கடந்த மரங்கள்
    எனை
    உதிர்க்கின்றன…

    ***

    வளையலுக்குள்
    மாட்டிக் கொண்ட
    விளிம்புகளில்
    நான் உடையப் போகும்
    வட்டம்…

    ***

    உன் கனவுக்குள்
    தூக்கம் இன்றி அலைகிறது
    திடுக்கென விழித்துக் கொண்ட
    என் இரவு…

    ***

    அறை முழுக்க வானவில்…
    வரையத் துவங்கினாள்
    கண்ணாடி பார்ப்பவள்…

    Share
  • பொம்மைகளின் காடு!

    -கவிஜி

    புலி, கரடி, சிங்கம்,
    குரங்கு, மான்
    காட்டு நாய், மயில்
    எனப் பல விலங்குகளிடையே
    ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்
    ‘சே’
    என்னை அவன்
    காட்டுக்குள் அனுமதிக்க
    மறுத்தான்….
    எவ்வளவு கெஞ்சியும்
    அனுமதிக்காத அவன்,
    கடைசியாக உதிர்ந்த
    யோசனையில் ஒரு முயல்
    பொம்மையை
    வாங்கிக்கொண்டு வந்த
    என்னைச்
    சிரித்துக் கொண்டே
    உள்ளேசெல்ல அனுமதித்தான்…
    முயல் பொம்மையை
    அவன் கூட்டத்தில்
    சேர்த்துக் கொண்ட பாங்கில்
    எங்கள் வீட்டு முகப்பறை
    ஓர் அடர்ந்த காடாகத்தான்
    தெரிந்தது…!

     

     

    Share
  • நன்னூலார் காட்டும் நல்லாசிரியர்

    –முனைவர் து. சந்தானலெட்சுமி.

    மீனாட்சிசுன்ந்தரம் புதிது

    அறிமுகம்:
    ஆசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டும், அவருடைய தகுதிகள் என்ன என்பதைப்பற்றி மிகத்தெளிவாக, நன்னூலார் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய ஆசிரிய இலக்கணமான,

    “குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
    கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
    நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
    உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
    அமைபவன் நூலுரை யாசிரியன்னே”1

    என்ற நூற்பாவில் கூறப்பட்டுள்ள அத்துணைத் தகுதிகளும் முழுமையாகப் பெற்றிருப்பவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். இவ்விலக்கணங்களை மகாவித்துவான் அவர்களிடம் பொருத்தி ஆயும் நோக்குடன் எழுவதே இக்கட்டுரை.

    குலன் அருள் தெய்வம்:
    மகாவித்துவான் அவர்கள் நன்னூலார் கூறியதுபோல் உயர்ந்தகுடியில் பிறந்தவர். அவர் தந்தையாரே இவருக்கு ஆசானாகவும் இருந்துள்ளார். ஒரு ஆசானுக்கு மகனாகப் பிறந்து நன்னூல் கூறும் முதல் தகுதியைப் பெற்றவர். அடுத்தத் தகுதியான அருள் உள்ளத்தைக் கொண்டவர். அவருடைய வீட்டிலேயே தங்க இடம் கொடுத்து கல்வியும் அளித்த அந்த அருள் உள்ளம் ஆசிரியர் இலக்கணத்தில் தலையாயது. அதனை அவர் பெற்றுள்ளார். இதனை உ.வே.சாமிநாத ஐயர் அவர்களே தம்முடைய நூலில் குறிப்பிடுகின்றார்கள் (மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்னும் நூலில் உ.வே.சா. அவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்)

    தெய்வவழிபாடு:
    ஒரு ஆசிரியரானவர் தெய்வ வழிபாட்டையுடையவராக இருக்க வேண்டும் என்பது நன்னூலார் கூற்று. அதன்படி சிறந்த சிவபக்தராக விளங்கியவர் மகாவித்துவான் அவர்கள். அவர்களுடைய தோற்றமே தெய்வம்போல் இருந்தது என்று உ.வே.சா. அவர்கள், தான் அவரைச் சந்தித்த காட்சியைப்பற்றிக் கூறும்போது,

    “பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம் போல் அவர் (பிள்ளையவர்கள்) வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலையெழுந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.”2 என்று, அவர் தெய்வமாகவே காட்சி தந்ததைக் குறிப்பிடுகிறார்.

    கொள்கை மேன்மை:
    ஒரு ஆசிரியர் மேன்மையான கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நன்னூல் கருத்துப்படி, இவர் கொள்கைகளே மேன்மையானதாக இருந்துள்ளது. அவர் எப்பொழுதும், மாணவர்களின் நலனையே மனதில் கொண்டு வாழ்ந்தார். ஆசிரியரை மாணவர்கள் போற்ற வேண்டும் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் தம் ஆசிரியரை இவர் பாராட்டிக்கொண்டே இருப்பதை,

    “வானளவு புகழ்ந்திருவா டுதுறையில் குருநமச்சிவாய மூர்த்தி
    ஆனபர சிவனருளான் ஞானகலை முதற்பிறவு ம்மையக்கற்று
    மோனமிகு சாத்தியனாய் மிளிர்கனக சபாபதிமா முனிவர் கோமான்
    கூனன்மதி முடித்தபிரான் மதூகவனப் புராண நீ கூறுகென்ன”3

    என்ற இப்பாடலால் அறியமுடிகிறது.

    கலைபயில் தெளிவு:
    ஆசிரியரானவர் பல நூல்களைக் கற்றுத் தெளிந்தவராக இருக்க வேண்டும் என்று நன்னூலார் கூறுவது போல் இவருடைய பன்னூற்பயிற்சி இவரியற்றிய நூல்களின் வழி வெளிப்படும். இவர் தமிழகம் கண்ட பெரும்புலவர்களுள் ஒருவர். தமிழறிஞர்கள் இவரைப் பிற்கால கம்பர் எனவும் இக்காலக் கம்பர் எனவும் சிறப்பித்துக் கூறுவர்.

    மாகாவித்துவான் அவர்கள் படைத்தளித்த நூல்கள் பற்பல. அவைகளைத் திருத்தலங்கள் பற்றிப் பாடிய தல புராணங்கள், இறைவன் மீது பாடிய நூல்கள், அம்மை மீது பாடிய நூல்கள், சமயத்தலைவர்கள் மீது பாடிய புகழ்மாலைகள், வள்ளல்களைப் பற்றி பாடிய பாடல்கள் எனவும், பல்வேறு தனிப்பாடல்கள், சிறப்புப்பாயிரங்கள், செய்யுட்கள் எனவும் பாகுபடுத்திப் பார்த்தால், தமிழ் இலக்கிய வகையின் வரிசையிலும் நூல்களின் எண்ணிக்கை வரிசையிலும், பாடல்களின் எண்ணிக்கை வரிசையிலும் அதிகமாக யாத்துள்ள புலவர் மகாவித்துவான் என்றால் மிகையாகாது.

    கட்டுரை வன்மை:
    மகாவித்துவான் அவர்களின் சொல்வன்மையை எடுத்துக்கூறும் விதமாக, அவருடைய மாணவர் உ.வே.சா அவர்கள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். அவரிடம் பாடம் பயின்றேன் என்று சொல்வதே அக்காலத்தில் ஒரு சிறப்புத் தகுதியாக இருந்தது என்றால் அதற்கு அவருடைய கற்பிக்கும் திறனே காரணம். மாணவர்கள் மனம் கொள்ளும் வகையிலும், மாணவர்களின் அறிவாற்றலைத் தூண்டும் வகையிலும் பாடம் கற்பிப்பதில் அவருக்கு நிகர் அவரே எனலாம்.

    நிலம்:
    ஆசிரிய இலக்கணத்தில் இலக்கண நூலார் பவணந்தி முனிவர் கூறுவது, நிலம் போன்ற பொறுமை ஆசிரியருக்கு இன்றியமையாதது என்று நிலத்தைப் பற்றிக்கூறும் நன்னூலார்,

    “தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
    பருவ முயற்சி அளவிற் பயத்தலும்
    மருவிய நன்னில மாண்பா கும்மே”4

    என கூறுகிறார்.

    பிறரால் அறியப்படாத உருவப்பரப்பின் பெருமையுடைய நிலத்தைப்போல, ஆசிரியரும் பிறரால் அறியவியலாத கல்விப் பெருமையுடையவராதல் வேண்டும் என்கிறார். மகாவித்துவான் அவர்களின் கல்விப் பெருமையை யாரும் அளந்திடமுடியாது. அவருடைய நூல்களே பறைசாற்றும். நிலத்திற்குரிய பொறுமையான குணம் போல ஆசிரியருக்கும் பொறுமை வேண்டும் என்கிறார் நன்னூலார். மகாவித்துவானின் பொறுமையான அணுகுமுறையும், மாணவர்கள் குற்றம் புரிந்திடின் அதனைப் பொறுத்துக்கொள்ளும் பண்பும் மிகுதியாக இருந்த்தால் மாணவர்கள் அவரை சூழ்ந்தே இருந்துள்ளனர். அவருடைய மாணவர்களே அவருடையப் பண்பைப் புலப்படுத்துகின்றனர். மாணவர்களின் முயற்சிக்கேற்ப கல்விப் பயிற்றுவிக்கும் தன்மையவராகவே மகாவித்துவான் அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

    மலை:
    ஆசிரியர் இலக்கணம் கூறவந்த நன்னூலார் அளவிடமுடியாத மலைப்போல், ஆசிரியரின் அறிவுவளத்தை அளவிடற்கு யார்க்கும் அரிதாக இருக்க வேண்டும் என்கிறார். மலையில் பல்வேறு பொருள்கள் விளைந்து நன்மைகள் தருவது போல, ஆசிரியர் பன்னூல் அறிவு பெற்றிருக்கவேண்டும் என்கிறார். இத்தகுதி முழுமையாக மகாவித்துவான் அவர்களுக்குப் பொருந்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    “அளக்க லாகா அளவும் பொருளும்
    துளக்க லாகா நிலையும் தோற்றமும்
    வறப்பினும் வளந்தரும் வன்மையும் மலைக்கே”5

    என்ற நூற்பாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களிடம் அன்பாகவும் தன்வீட்டில் தங்கவைத்தும் பாடம் சொன்ன பெருமையுடையவர் நம் மகாவித்துவான். இவரைக் கல்விமலை என்றே கூறலாம்.

    நிறைகோள்:
    நிறுக்கப்பட்ட பண்டத்தின் அளவை ஐயம் நீங்கக் காட்டுதலும் துலாக்கோல்போல் நடு நிலைமையோடு மாணவர்களை நடத்துதலும், வினவப்பட்ட பொருளை ஐயம் நீங்க விளக்குதலும் ஆகிய குணங்களால் மகாவித்துவான் அவர்கள் துலாக்கோலை ஒத்துள்ளார்கள் என்பதை யாவரும் அறிவர்.

    மலரின் இயல்பு:
    மலரின் இயல்பை நன்னூலார் நல்லாசிரியருக்கு எடுத்துரைக்கின்றார்.

    “மங்கலமாகி இன்றி யமையாது
    யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
    பொழுதின் முகமலர்வு உடையது பூவே”6

    மகாவித்துவான் அவர்கள் இந்நூற்பாவுக்கு முற்றிலும் பொருந்துவார்கள். உ.வே.சா. அவர்கள் தம் நூலில் அவர்களுடைய தோற்றத்தையும் மிகத்தெளிவாக எடுத்துரைப்பதில் மலருக்கு இவர் ஒப்பானவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. உலகியல் அறிவோடு உயர்குணம் கொண்டவராக விளங்கினார் என்பதற்கு இவரை ஆதரித்த திருவாவடுதுறை ஆதீனம் முதலியவற்றைச் சான்றாகக் கொள்ளலாம்.

    முடிவுரை:
    மகாவித்துவான் அவர்கள் கல்வி கற்றதில் சிறந்த தலைமாணாக்கராகவும் கற்பிப்பதில் நல்லாசிரியராகவும் விளங்கியுள்ளார்கள். ஒரு தந்தையின் சிறப்பை அவருடைய புதல்வர்கள் புலப்படுத்துவது போல், ஒரு ஆசிரியரின் சிறப்பை அவருடைய மாணவர்கள் புலப்படுத்த வேண்டும். அந்த வகையில் மகாவித்துவானுக்கு அமைந்த மாணவர்கள் பலர் அவருடைய சிறப்பைப் புலப்படுத்தியுள்ளனர். அவர்களின் எழுத்தே அதனைக் காட்டும்.

    “இருள் கனிந்த வெண்மனத்து மிடையறா தொளிபரப்பி
    இருப்போன் கங்கைப்
    பொருள் கனிந்த குலதீபன் மீனாட்சி சுந்தரனார்
    புலவரேறு”7

    என்று மகாவித்துவான் அவர்களின் மாணவருள் ஒருவரான, சுப்பராய செட்டியார் கூறுகிறார்.

    ”எண்ணிய பலவு மாணவர்க் கன்பி னீந்திடு
    நிதிதமிழ் விளங்க
    நண்ணிய புகழ் மீனாட்சிசுந்தர நன்னவலன்”8

    என்று மகாவித்துவான் அவர்களின் உள்ளங்கவர் மாணாக்கர் உ.வே.சா. கூறுகிறார். நன்னூல் காட்டும் நல்லாசிரிய இலக்கணம் நூறு விழுக்காடு பொருந்திய நல்லாசான், பேரறிஞர், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் என்பதில் யாதும் ஐயுரவு இல்லை.

    சான்றெண் விளக்கம்:
    1.நன்னூல் நூற்பா.26
    2.என் சரித்திரம் அத்யாயம்.27
    3.மேற்படி
    4.நன்னூல் நூற்பா.27
    5.நன்னூல் நூற்பா.28
    6.மேற்படி. நூற்.30
    7.ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் சரித்திரம்.(பாகம்.2).ப.326
    8.மேற்படி.ப.322

    முனைவர் து.சந்தானலெட்சுமி,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி,
    மன்னன்பந்தல்-609305
    அலைப்பேசி:9965045930
    Santhanalakshmid13@gmail.com

    Share
  • பெற்றோர் சொல்கேட்டு நடக்க மாணவர்கள் உறுதிமொழி

    அகம் ஐந்து, புறம் ஐந்து மாணவர்களுக்கான ஆளுமை பயிற்சி
    அம்மா, அப்பா சொல்வதை நன்றாகக் கேட்போம் மாணவர்கள் உறுதி.

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அகம் ஐந்து, புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயிற்சி நடைபெற்றது.

    Chairman

    பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மதுரை நிகில் அமைப்பின் மண்டல பயிற்சியாளர் திரு. திரு. தயானந்தன் மாணவர்களுக்கு ஆளுமை தன்மை வளர்க்கும் பயிற்சி அளித்தார்.
    அகம் ஐந்து என்கிற தலைப்பில் …
    1. அன்பு செலுத்துதல்,
    2. பொறுப்புணர்வு,
    3. ஒற்றுமை,
    4. நேர்மை,
    5. பிறர் நிலையில் இருந்து பார்த்தல்
    என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும்;

    புறம் ஐந்து என்கிற தலைப்பில் …
    1. கவனித்தல்,
    2. பாராட்டுதல்,
    3. ஆழமான சிந்தனை,
    4. ஆக்க சிந்தனை,
    5. கோபத்தைக் கையாளுதல்
    என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், பல்வேறு விளையாட்டு முறையின் மூலமாகவும் எடுத்து விளக்கினார்.

    மாணவ மாணவியரைப் பல குழுக்களாகப் பிரித்து அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயிற்சி அளித்தார். குழுக்களுக்குள் எவ்வாறு ஒற்றுமையைக் கொண்டு வருவது என்பதைச் செயல்கள் மூலம் செய்து நேரடியாக விளக்கம் அளித்தார். அடுத்தவர் நிலையை உணர்ந்து கொள்ளுதல் சார்பாகப் படங்களும் போட்டுக் காண்பிக்கப்பட்டது. பெற்றோர்கள் எவ்வாறு கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதும் தெளிவாக சில படங்களின் வழியாகக் காண்பிக்கப்பட்டது.

    இதனைப் பார்த்த பெருவாரியான மாணவியர்கள் தங்கள் அம்மாவும் இது போல்தானே கஷ்டப்பட்டு நம்மைப் படிக்க வைக்கின்றனர் என்று கண்ணீர் விட்டு அதன் அர்த்தத்தைப் புரிந்து அழுதனர். இனிமேல் நாங்கள் அம்மா, அப்பா சொல்வதை நன்றாகக் கேட்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். ஆளுமை தன்மை தொடர்பாகச் சக்தி, முத்தழகி, செந்தில், நந்தகுமார், காயத்திரி, முனீஸ்வரன் உட்படப் பல மாணவ மாணவியர் சந்தேகங்களைக் கேட்டு பதில் பெற்றனர். பயிற்சியின்போது பல்வேறு மாணவ மாணவியர் இது வரை தாங்கள் தெரியாமல் பொய் சொன்னது உண்டு என்றும் இனிமேல் பொய் சொல்ல மாட்டோம் என்றும், நல்ல செயல்களையே செய்வோம் என்றும் பேசினார்கள்.
    நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

    பட விளக்கம்:
    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து ,புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயிற்சியினை மண்டல பயிற்சியாளர் திரு. தயானந்தன் பயிற்சி கொடுத்தார்.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share