மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 2

0

— முனைவர்   துரை. குணசேகரன்.

 

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
முடியாத முதலோனை மூவர் பெருமானை
வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

‘முயற்சி திருவினையாக்கும்’ என்று சொல்வார்களே அது பிள்ளையவர்கள் வாழ்வில் நூற்றுக்குநூறு உண்மை. பிள்ளையவர்கள் திருத்தணிகைப்புராணத்தை வருவித்துப்படித்து வருகிறார். அப்புராணத்தில் அகத்தியன் அருள்பெறுபடலத்தின் சிலபகுதிக்குப்பொருள் விளங்கவில்லை. ‘சிவதருமோத்திரம்’ என்னும் நூலின் உதவியால் பொருளை விளங்கிக்கொள்ளலாம் என்று அறிகிறார். அச்சுவடியைப்பெற அரும்பாடுபடுகிறார்.

இந்தச்சுவடி, திரிசிரபுரத்தில் ஆன்மீகவாதியான தேசிகர் ஒருவரிடம் இருப்பதாக அறிந்து நேரில்சென்றும் பலஅன்பர்கள் வழியாகவும் கேட்டுப்பயனில்லை. பொருள் தருவதாகச் சொல்லியும் சாக்குபோக்குச்சொல்லி அலைக்கழித்து வருகிறாராம் அந்த அன்பர். எங்கு இருக்கப்போகிறதோ என்று எண்ணிய பிள்ளையர்களுக்கு, தம்மூரிலேயே அந்தச்சுவடி இருக்கிறதென்பதை எண்ணி முதலில் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் கைக்குஎட்டியது வாய்க்குஎட்டாதபோது அதுபற்றிக்கவலைப்பட்டார்.

முகவாட்டத்துடன் இருந்த பிள்ளைவர்களைப்பார்த்த அவரின் மாணவர் சுந்தரம்பிள்ளை என்பவர் அதுகுறித்து வினவுகிறார். உண்மையறிந்து, அதனைப்பெற்றுத்தருவதாக உறுதிகூறிச்செல்லுகிறார். ஒருமுறை மேற்படி சிவதருமோத்திர சுவடியிருக்கும் வீட்டிற்கு எதிரே பிரபு ஒருவர் இரட்டைக்குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்து இறங்குகிறார். முன்னர் ஒரு சேவகன் ஓடிவந்து, இந்த வீடு இன்னாருடையதானா? அவர் இருக்கிறாரா? என்று தேசிகரிடம் வினவ, நான்தான் அவர், என்னவேண்டும் என்றுகேட்கிறார். அதற்குள் இன்னொரு சேவகன் ஓடிவந்து திண்ணiயில் விரிப்பொன்றை விரிக்க, வேறொருவன் திண்டினைக்கொண்டு வந்து வைக்கிறான். பிரபு திண்ணையில் அமர்ந்து திண்டில் சாய்ந்துகொண்டு கம்பீரமாய்க் காட்சியளிக்கிறார்.இதைக்கவனித்த தேசிகர் நாமாகச்சென்று விசாரித்தால் மதிப்பு இருக்காது என்று எண்ணி ஒருபலகையில் சென்று அமர்ந்துவிட்டார். முன்பு வந்த அதே சேவகன் உள்ளே வந்து விவரத்தைச்சொன்னான். ‘உள்ளே அழைத்து வரலாமே’ என்று கூறியவர், தாமே வந்து பார்ப்பதாகக்கூறி வெளியில் வருகிறார். முகமன் கூறி நிற்கிறார்.

சிறிதுநேரம் கழித்து சேவகர் ஒருவரிடம் வந்திருப்பவர் யார்? எங்கே வந்தார்கள் என்று மந்தணமாக (மறைவாக) கேட்கிறார். “எஜமானவர்கள் தென்னாட்டில் ஒரு ஜமீன் பரம்பரை. தாயார் முதலியோருடன் சிதம்பரதரிசனத்திற்காக வந்து இவ்வூரில் இறங்கி ஜம்புநாதர், தாயுமானவர், அரங்கநாதர் ஆகியோரை வழிபட்டுச்செல்ல கண்டோன்மென்டில் ஒரு பங்களாவில் மூன்றுநாட்கள் தங்கிச்செல்லலாம் என்றிருந்தார்கள். அதற்குள் தாயாருக்குச்சுரம் ஏற்பட்டது. எவ்வளவோ மருத்துவம் செய்தும் பலனில்லை. இங்கேயே தகனம் செய்துவிட்டு இன்று காலை நடக்கவேண்டிய செயல்களையும் செய்து முடித்தோம். சொந்த இடமாக இருந்தால் எவ்வளவு சிறப்பாக நடந்திருக்கும் என்ன செய்வது? எல்லாம் தெய்வச்செயல்” என்று கூறிமுடித்தான். “சிலவிவரங்களை விசாரிக்க, தக்கவர் யார் என்று கேட்டதற்கு, அனைவரும் உங்கள்பெயரைச்சொன்னார்கள். அதனால்தான் இங்கு வந்தோம் என்றான். காரியத்தை நடத்துவதற்கு வேண்டிய பதார்த்தம் அவ்விடத்தைப்போன்று இவ்விடத்தில் கிடைக்காது. நடத்துதற்குரிய நபர்களும் அவ்வாறே. அதனால் ஊருக்கே புறப்பட்டுப்போய்விடலாமோ என்றுகூட நினைக்கிறார்கள்” என்று கூறினார்.

விவரங்களைக்கேட்ட தேசிகர், “பணம்மட்டும் இருந்தால் என்ன பொருள் கிடைக்காது? எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். யோசிக்கவே வேண்டாம் என்று கூற, யோசனை ஒன்றுமில்லை சிவதருமோத்திரம் என்று சுவடி உள்ளது. அதனை இந்தநேரத்தில் படித்துக்கொண்டே பொழுதுபோக்கவேண்டியுள்ளது. பிரபுவின் பிதாஎஜமான் இறந்தபோதுகூட எங்கிருந்தோ அந்தச்சுவடியைத்தருவித்து படித்தார்களாம். அந்தச்சுவடியும் கிரந்தத்தில் இருந்தால் பயன்இல்லை. தமிழில் வேண்டுமாம். இதற்காகவே அங்கே போயவிடலாம் என்று நினைக்கின்றனர்” என்று கூறிய சேவகன், ‘இங்கேயே இருந்து முடித்துவிட்டுப்போனாலென்ன என்று எவ்வளவோபேர்சொல்லியும், காதில் ஏறவேயில்லை. ‘இந்தப்புத்தகத்தைப்படிக்கா மற்போனாலென்ன?’ என்று மெல்லிய குரலில் சொன்னான்.

உடனே தேசிகர் பிரபுவை நோக்கி ‘சிவதிருமோத்திரசுவடி தமிழிலேயே என்னிடமிள்ளது. பயன்படுத்திக்கொள்ளலாம் உங்களைப்போன்ற பிரபுக்களுக்கில்லா மல் வேறுயாருக்குத்தான் கொடுக்கப்போகிறேன் என்றார். கிரியை நடப்பதற்கு வேண்டிய குறிப்புகளைக்கேட்டு எழுதிவாங்கிக்கொண்டு, செலவு குறைவாகத்தான் இருக்கிறது. அங்கே செய்தால் இன்னும் அதிகமாகும்’ என்றுகூற, ‘இவ்வளவு செலவு செய்யக்கூடியவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்’ என்று தேசிகர் பதிலுரைத்தார்.

பிரபு, ‘நீங்களே இருந்து எல்லாவற்றையும் செய்க, வாங்கவேண்டியவற்றை உடனிருந்து வாங்கித்தரவேண்டும்’ என்று சொல்விட்டு வண்டியில்ஏறி அமர்ந்தார். சேவகன் ஒருவர், ‘நாங்கள் எப்போது வரவேண்டும்?’ என்று கேட்க, கிரியைக்கு ஒரு வாரத்திற்குமுன் வந்தால்போதும்’ என்று தேசிகர் கூறிவிட்டு, பிரபுவிடம், ‘கொஞ்சம் தாமதித்துச்செல்ல வேண்டும’; என்று வேண்டிக்கொண்டு இல்லத்திற்குள் ஒடுகின்றார். ஒரு சுவடியை எடுத்துவந்து, ‘இந்தப்புத்தகத்தை முன்பே கொடுக்காததற்கு மன்னிக்க வேண்டும். தங்களைப்போன்றவர்களின் பழக்கத்தைவிட இந்தப்புத்தகம் எனக்குப்பெரிதில்லை. குறிப்பறிந்து செய்யும் மகாபிரபுவுக்குத்தெரிவிக்க என்போன்றோருக்கு வேறுஎன்ன இருக்கிறது’ என்று வழிகிறார். ‘எல்லாம் தெரிந்துகொண்டோம்: அதிகமாக ஒன்று சொல்லவேண்டியதில்லை’ என்று கூறி, ஐந்து ரூபாயை எடுத்துக்கொடுத்துவிட்டுக்கிளம்பினார் பிரபு. சேவகர்கள் வண்டியின் முன்பும் பின்பும் ஓடினார்கள். தேசிகருக்கு இக்காட்சி அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தது.

இதுவரை நடந்தது ஒரு நாடகம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். பிரபுவாக நடித்தவர் பிள்ளையவர்களின் அன்புக்குரிய சுந்தரம்பிள்ளை. ஒருநாள் அவர் வந்து பிள்ளையைப்பார்த்து சிவதிருமோத்திரசுவடியைத்தருகிறார். ‘ஏதப்பா இந்தச்சுவடி? எப்படி கிடைத்தது?’ என்று கேட்டவர், ‘ஏன் மீசையை எடுத்துவிட்டாய். உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத்தெரியாமல் போய்விட்டதே. ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?’ என்று கேட்கிறார். ‘அதைப்பற்றிப்பிறகு சொல்கிறேன். இந்த நூலை படிஎடுத்துக்கொண்ட ஒருவாரத்தில் கொடுத்துவிடுங்கள். யாருக்கும் தெரியவேண்டாம’; என்று சுந்தரம்பிள்ளை கூறிவிட்டுச்செல்கிறார்.

பிள்ளையவர்கள் பத்துப்பத்து ஏடாகப்பிரித்து படியெடுத்து உரியகாலத்தில் கொடுத்தனுப்புகிறார். அந்தச்சுவடியுடன் ஒரு பவுனையும் கொடுத்து, தேசிகரிடம் சேர்ப்பிக்குமாறு சுந்தரம்பிள்ளை சேவகர் ஒருவரிடம் பணிக்க, தேசிகரின் வரவேற்பிற்கிடையே அவரிடம் ஒப்படைத்துவிட்டு, ‘உறவினர்களின் வற்புறுத்தலினால் ஊரில்போய் காரியத்தைச் செய்வதாகவும், தங்களிடம் கூறிவிட்டுச் சொல்லமுடியவில்லையே என்று வருந்துவதாகவும்’ கூறினான். மேலும், விரைவில் தங்களையும் அவ்விடத்திற்கு அழைப்பார்கள் என்றும் கூற, முதலில் வருந்திய தேசிகர், பொன் கிடைத்ததில் சமாதானமடைந்ததாக உ.வே.சா. தமது நூலில் குறிப்பிடுகின்றார்.

பிள்ளையவர்கள் வேறொருவர் மூலம் நடந்த நிகழ்வுகளை அறிந்து, சுந்தரம்பிள்ளையின் அடைக்குந்தாழ் இல்லாத அன்பின்பெருமையை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். தாம் நிகழ்த்திய நாடகம் குறித்து சுந்தரம்பிள்ளை அஞ்சி சிலநாட்கள் பிள்ளளையவர்களைப்பாராமலே இருந்துவிட்டார். அவரின் வற்புறுத்தலின் பேரில் சுந்தரம்பிள்ளை வந்தார். ‘என்ன அப்பா இப்படிச்செய்யலாமா?’ என்று கேட்பொழுது,

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனில்”

என்னும் குறளுக்கேற்ப நடந்துகொண்டேன். இதனால் யாருக்கு எந்தத்தீமையும் இல்லையே. ஐயாவுக்குக்குற்றமாகத் தோன்றினால் பொறுத்தருளவேண்டும் என்றார். இந்நிகழ்வு ஆசிரியர்மீது மாணவர்கொண்டிருக்கும் உண்மையான குருபக்தியைக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி ஐயத்தைப்போக்கிக்கொள்ள பிள்ளையவர்கள் ஒவ்வொருநேரத்தில் எடுக்கும் முயற்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

மாணவரின் திறனாய்வுக்கு மதிப்பு:-
மகாவித்துவான் அவர்களுக்குள்ள பெருமைகளில் குறிப்பிடத்தகுந்தது அவர் உருவாக்கிய மாணவர் பரம்பரை. பங்களூரில் இருந்த தேவராசப்பிள்ளை, பிள்ளையவர்களை மாணாக்கர்களுடன் அழைத்துப்பாடம் கேட்டவர். பிள்ளையவர்கள் கவலையில்லாமல் இருந்தால் படைப்புகளை மிகவும் நேரத்தியாகச்செய்வார் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

பிள்ளையவர்கள் பாடிய அம்பர்புராணத்தில் சில பகுதிகளைக்கேட்டுவந்த அவருடைய தலைமாணவர்களில் ஒருவரான தியாகராசச்செட்டியார், “பாலியத்தில் செய்த உறையூர் புராணத்தைப்போல இப்புராணம் யோசித்துச்செய்யப்படவில்லை. அம்மாதிரி செய்தால் மிக நன்றாகவிருக்கும்” என்று கூறினார். அதற்கு, “வல்லூர்த் தேவராசபிள்ளiயின் பேருபகாரம்தான் காரணம். அவ்வாறு யாரேனும் என்னைக்கவலையில்லாமல் ஆதரித்து வைத்திருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வேனே” என்று பிள்ளையவர்கள் பதிலளித்தாராம்.

பெருங்காப்பியம் படைத்த தேரெழுந்தூர் கம்பனுக்கு, திருவெண்ணெய் நல்லூர் சடையப்பவள்ளல்போன்று, திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அங்காங்கே நாடுமுழுவதும் அவ்வவ்போது சிற்சிலமகான்கள் உதவியிருந்தாலும் நிரந்தரமாக, ஒரிடத்தில் அமரவைத்து கல்விப்பணியாற்றுமாறு செய்ய வழியில்லை. அவ்வாறு வழியிருந்திருப்பின் பாடஞ்சொல்லும் தொழிலகமாய், படைப்புகளைத்தீட்டும் பட்டறையாய், பதிப்புரைக்கூடமாய் தனிமனிதரே விளங்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

இடிப்பாரை இல்லா ஏமாறா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

எனும் குறளுக்கு இலக்கியமாய், பிள்ளையவர்கள் விளங்கியிருக்கிறார்கள். குருகுலவாசம் என்று படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தாம் எல்லாம். மாணவர்களுக்கு விடுதலை உணர்வோடு பேசும் உரிமை இருந்திருக்குமா என்று ஐயுறும் காலத்தில் ஒரு மாணவர் ஆசிரியரின் நூலைத்திறனாய்ந்து கருத்துகூறும் நிலையினைப்பார்க்கவியலுமா? பிள்ளையவர்களின் மாணவர் தியாகராச செட்டியார் அம்பர்ப்புராணம் குறித்து கூறியபோது, அதனை ஏற்றுக்கொண்டு அதற்குரிய காரணத்தைக்கூறியதும், அந்நிகழ்வினை அவரின் இன்னொரு மாணவராம் உ.வே.சா.பதிவு செய்வதும் குருநாதரின் பெருந்தன்மையினைக்காட்டும் நலமான நல்ல நிகழ்வுகளாகும்.

படைப்பாக்கத்தில் மாணவருக்கு உதவி:-
மாணவர்களுக்கு கருத்துவிடுதலை அளிப்பது மட்டுமன்றி, படைப்புகளை உருவாக்குவதிலும் உறுதுணையாகப்பலநேரங்களில் விளங்கியவர் மகாவித்துவான் அவர்கள். இவரின் மாணவரான தேவராசப்பிள்ளை தெலுங்கில் இருந்த குசேலோபாக்கியனத்தை தமிழ்வசனநடையில் பெயர்த்து கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதற்குரிய ஆற்றலை அவர் அப்போது பெறாதிருந்ததால் ஊக்கம் குறைந்து உடம்பும் தளர்ந்தநிலையில் காணப்பட்டார். இதனால் வருத்தமுற்றிருப்பதை அறிந்தபிள்ளையவர்கள், “குசேலோ பாக்கியானத்தை செய்யுள்வடிவில் பார்க்க எண்ணமிருந்தால் ஓய்வு நேரங்கில் பாடிமுடித்துவிடுகிறேன். நன்றாகப்பாடுதற்குப்பயிற்சி எடுத்துக்கொண்டபின் ஏதேனும் நூல் இயற்றலாம். இதனை இத்தோடு நிறுத்திவிட்டுக்கவலையின்றி இருங்கள்” என்றார். ஆசிரியரின் சொல்லை மறுத்தற்கஞ்சி அம்முயற்சியை நிறுத்திவிட்டார்.

என்றாலும் மாணவரின் மனக்குறையைக்குறிப்பாலறிந்த ஆசான் அதுவரை அவர்பாடிய குசேலோபாக்கியானப்பகுதிகளைத்திருத்தம் செய்தது மட்டுமன்றி, நாளொன்றுக்கு ஐம்பது செய்யுளுக்குக்குறையாமல் மாணவருக்கு முன்பாக இயற்றி முடித்தார். எந்தவிய சிரமமின்றி இயல்பாகப்பாடும் திறன்பெற்றிருந்த குருநாதர் பற்றி, “ஐயா! நீங்கள் தெய்வப்பிறப்போ! சாதாரண மனிதராக உங்களை நினைக்கவில்லை. சில பாடல்கள் செய்வதற்குள்ளே நான்பட்டபாடு தெய்வத்திற்கும் எனக்குமே தெரியும். இனிமேல் நான் உங்களிடத்தில் விசேட மரியாதையோடு நடப்பேன். இப்பொழுதுதான் உங்களுடைய பெருமை எனக்குத்தெரிய வந்தது. ஒரு பாட்டையாவது நீங்கள் திரும்பதிருத்தச்சொல்லவில்லையே. நீங்கள் இவ்வளவையும் மனத்திலே யோசித்து முடித்துக் கொள்கிறீர்களே. ஒரு பாட்டெழுதுவதற்குள் நான் கிழித்த காகிதங்கள் எவ்வளவோ இருக்கும்!” என்று ஆனந்தமடைந்தாராம்.

“நாடு உனக்குதான் நாளை முடிசூட்டிக்கொள்’ என்ற போதும் இல்லை…இல்லை….

ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனேஆள நீபோய்
தாழிரும் சடைகள்தாங்கி தாங்கரும் தவம்மேற்கொண்டு
பூழிவெண்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள்ஆடி
ஏழிரண்டாண்டில் வாவென் றியம்பினன் அரசன்என்றான்

என்றபோதும் ‘அன்றலர்ந்த செந்தாமரை முகத்தினைவென்ற இராமன் முகத்தைக் கம்பன் காட்டுவானே… அதேபோன்று, அம்பர்ப்புராணம் குறித்த, மாணவர் தியாகராச செட்டியாரின் திறனாய்வையும், குசேலாபாக்கியானத்தை மாணவருக்காகப் பாடித்தந்தபோது மாணவர் தேவராசப்பிள்ளை பாராட்டியதையும் ஒரேநிலையில் எடுத்துக்கொள்கின்ற பண்பினை, மகாவித்துவானிடம் கண்டபோது, அவரைப் ‘பிற்காலக்கம்பர்’ என்று பாராட்டுவது மிகவும் பொருத்தம் என்பதை உணரலாம்.

மாணவருக்காக எழுதிய குசேலோபாக்கியானத்தில் இரத்தலின் இழிவினை,

“பல்லெலாம் தெரியக் காட்டிப் பருவரன் முகத்தில் கூட்டிச்
சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து
மல்லெலாம் அகல வோட்டி மானமென்பதனை நீட்டிவீட்டி
இல்லெலா மிரத்த லந்தோ விழிவிழி வெந்த ஞான்றும்”

என்று காட்டுவது, இரப்போர் பற்றிய சித்திரத்தைப்பார்ப்பதுபோல் அமைந்துள்ளது. இதுபோன்று நூல்முழுவதும் ஆற்றொழுக்கான நடையால் படிப்போரை ஈர்க்கும் பாங்கினை இந்நூல் மட்டுமன்றி எந்நூலிலும் கண்டு சுவைக்கலாம்.

காப்பிய உறுப்புகளெல்லாம் அமையப்பாடவேண்டும் என்று எண்ணித்தொடங்கிய தியாகராசலீலை முற்றுப்பெறாமல் உண்டாகிய மனக்குறை உறையூர்ப்புராணம் பாடியதால் தீர்ந்துபோனதாம். உதங்கமுனிவர் உறையூரை நோக்கி வரும்போது, பலதலங்களை வழிபட்டு வந்ததாகச் சொல்லப்படும் பகுதி, அத்தலங்களின் வரலாற்றை அழகுறப்படம் பிடிப்பதாக உள்ளது இதோ அப்பாடல்,

“அனைபோலு நல்லானை அடையாரிற் புல்லானை
வினையாவு மில்லானை விளக்குமறைச் சொல்லானை
புனைமேரு வில்லானைப் புரிசடையிற் செல்வானை
எனையாள வல்லானை யெழிற்காஞ்சி யிடைப்பணிந்தான்”

பிள்ளையவர்கள் நிரம்பக்கற்று, பலரை உருவாக்கிய நிலையிலும் தமக்குத் தெரியாதவற்றை யார்கூறினாலும் மாணவராக இருந்து கேட்கும் பண்புடையவர். எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும், எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பதன்றோ அறிவென்னும் வள்ளுவத்தை அறிந்தவர் அன்றோ.

அறிதொறும் அறியாமை:-
இலக்கணவிளக்கத்திற்கு, சிலவிடங்களில் பொருள் புரியாமையினால் திருவாரூர் வைத்தியநாத தேசிகரிடம் கற்றுத்தேர்ந்த சுப்பிரமணிய தேசிகரிடம் முறையாகபாடம் கேட்கிறார் பிள்ளையவர்கள். தாம்படித்ததே போதுமென்று தமக்குள்ளே நிறைவடைந்த சிலர், பிள்ளையவர்கள் பாடங்கேட்டலைப்பார்த்து வியந்து, “சிறந்த வித்துவானான இவரும் பாடங்கேட்கிறாரே! இவர் பாடங்கேட்க வேண்டுவது உண்டோ? என்ன கேட்கிறார்?” என்று வினவுவார்களாம். அறிதொறும் அறியாமை கண்டு அதனை அகற்றிக்கொண்டவர் பிள்ளையவர்கள் என்பது இதன்வழிப்புலனாகும்.

மகாவித்துவான் பட்டம்:-
திருவாவடுதுறை ஆதீனக்கட்டளைத்தம்பிரானாக விளங்கிய ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர், தமக்குக்குருவாக விளங்கிய தாண்டவராயத்தம்பிரான் அவர்களைக் கொண்டு ஆதீன மாணவர்களுக்குப்பாடம் சொல்லிக்கொடுக்கலாம் என்று முடிவுக்கு வருகிறார். அக்கருத்தை குருநாதரிடம் சொன்னபோது,

“என்னுடைய தேகநிலை அவ்வாறு செய்ய இடந்தராது: வழக்கமும் இல்லை. திரிசிரபுரத்தில் மீனாட்சிசுந்தரம்பிள்ளையென்று ஒரு வித்துவான் இருக்கிறார். அவர் இரண்டுமுறை சென்னைக்கு வந்திருந்தார். அக்காலத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. பாடஞ்சொல்லுவதிலும் செய்யுள் செய்வதிலும் அவருக்கு இணையாக யாரும் இல்லை என்றே சொல்லலாம். இந்தஆதீன வித்துவானாக அவர் நியமிக்கப்டுவாராயின் ஆதீனத்தின்புகழ் எங்கும்பரவும். அவரைக்கொண்டு பலமாணாக்கர்களைப்படிப்பிக்கலாம்.” என்று விண்ணப்பித்துக்கொண்டாராம். அப்போது ஆதீன கர்த்தாவாக விளங்கியவர் அம்பலவாணதேசிகர். அவருடைய கட்டளையைப்பெற சுப்பிரமணியதேசிகர் பலவினாக்களுக்கு விடையளிக்கவேண்டியிருந்தது. இறுதியாக ஆதீன வித்துவானாக்க ஒத்துக்கொண்டார்.

தம்மை ஆதீன வித்துவானாக்கிய அம்பலவாண தேசிகர் மீது ஒருசில நாள்களில் கலம்பகம் ஒன்றை இயற்றி அரங்கேற்றம் செய்தார். இதனைக்கேட்ட ஆதீனத்தம்பிரான்களில் ஒருவரான கனகசபைத்தம்பிரான் உள்ளிட்ட சிலர், ‘பிள்ளையவர்களுக்குச் சந்நிதானம் தக்க மரியாதை செய்தருள வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்ய, ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை அம்பலவாண தேசிகர் வழங்கினார்.

‘மகாவித்துவான்’ என்னும் பட்டம் ஒருசிலருக்குத்தமிழகத்தில் அளிக்கப்பட்டிருந்தாலும், திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய மீனாட்சிசுந்தரம்பிள்ளைக்குத்தான் மிகவும் பொருத்தமாக அன்று முதல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது என்றால் மிகையன்று.

(தொடரும்)

குறிப்பு:-
இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

முனைவர் துரை. குணசேகரன்
தலைவர் தமிழாய்வுத்துறை
அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
மன்னன்பந்தல், மயிலாடுதுறை

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *