நன்னூலார் காட்டும் நல்லாசிரியர்

0

–முனைவர் து. சந்தானலெட்சுமி.

மீனாட்சிசுன்ந்தரம் புதிது

அறிமுகம்:
ஆசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டும், அவருடைய தகுதிகள் என்ன என்பதைப்பற்றி மிகத்தெளிவாக, நன்னூலார் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய ஆசிரிய இலக்கணமான,

“குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன் நூலுரை யாசிரியன்னே”1

என்ற நூற்பாவில் கூறப்பட்டுள்ள அத்துணைத் தகுதிகளும் முழுமையாகப் பெற்றிருப்பவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். இவ்விலக்கணங்களை மகாவித்துவான் அவர்களிடம் பொருத்தி ஆயும் நோக்குடன் எழுவதே இக்கட்டுரை.

குலன் அருள் தெய்வம்:
மகாவித்துவான் அவர்கள் நன்னூலார் கூறியதுபோல் உயர்ந்தகுடியில் பிறந்தவர். அவர் தந்தையாரே இவருக்கு ஆசானாகவும் இருந்துள்ளார். ஒரு ஆசானுக்கு மகனாகப் பிறந்து நன்னூல் கூறும் முதல் தகுதியைப் பெற்றவர். அடுத்தத் தகுதியான அருள் உள்ளத்தைக் கொண்டவர். அவருடைய வீட்டிலேயே தங்க இடம் கொடுத்து கல்வியும் அளித்த அந்த அருள் உள்ளம் ஆசிரியர் இலக்கணத்தில் தலையாயது. அதனை அவர் பெற்றுள்ளார். இதனை உ.வே.சாமிநாத ஐயர் அவர்களே தம்முடைய நூலில் குறிப்பிடுகின்றார்கள் (மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்னும் நூலில் உ.வே.சா. அவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்)

தெய்வவழிபாடு:
ஒரு ஆசிரியரானவர் தெய்வ வழிபாட்டையுடையவராக இருக்க வேண்டும் என்பது நன்னூலார் கூற்று. அதன்படி சிறந்த சிவபக்தராக விளங்கியவர் மகாவித்துவான் அவர்கள். அவர்களுடைய தோற்றமே தெய்வம்போல் இருந்தது என்று உ.வே.சா. அவர்கள், தான் அவரைச் சந்தித்த காட்சியைப்பற்றிக் கூறும்போது,

“பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம் போல் அவர் (பிள்ளையவர்கள்) வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலையெழுந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.”2 என்று, அவர் தெய்வமாகவே காட்சி தந்ததைக் குறிப்பிடுகிறார்.

கொள்கை மேன்மை:
ஒரு ஆசிரியர் மேன்மையான கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நன்னூல் கருத்துப்படி, இவர் கொள்கைகளே மேன்மையானதாக இருந்துள்ளது. அவர் எப்பொழுதும், மாணவர்களின் நலனையே மனதில் கொண்டு வாழ்ந்தார். ஆசிரியரை மாணவர்கள் போற்ற வேண்டும் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் தம் ஆசிரியரை இவர் பாராட்டிக்கொண்டே இருப்பதை,

“வானளவு புகழ்ந்திருவா டுதுறையில் குருநமச்சிவாய மூர்த்தி
ஆனபர சிவனருளான் ஞானகலை முதற்பிறவு ம்மையக்கற்று
மோனமிகு சாத்தியனாய் மிளிர்கனக சபாபதிமா முனிவர் கோமான்
கூனன்மதி முடித்தபிரான் மதூகவனப் புராண நீ கூறுகென்ன”3

என்ற இப்பாடலால் அறியமுடிகிறது.

கலைபயில் தெளிவு:
ஆசிரியரானவர் பல நூல்களைக் கற்றுத் தெளிந்தவராக இருக்க வேண்டும் என்று நன்னூலார் கூறுவது போல் இவருடைய பன்னூற்பயிற்சி இவரியற்றிய நூல்களின் வழி வெளிப்படும். இவர் தமிழகம் கண்ட பெரும்புலவர்களுள் ஒருவர். தமிழறிஞர்கள் இவரைப் பிற்கால கம்பர் எனவும் இக்காலக் கம்பர் எனவும் சிறப்பித்துக் கூறுவர்.

மாகாவித்துவான் அவர்கள் படைத்தளித்த நூல்கள் பற்பல. அவைகளைத் திருத்தலங்கள் பற்றிப் பாடிய தல புராணங்கள், இறைவன் மீது பாடிய நூல்கள், அம்மை மீது பாடிய நூல்கள், சமயத்தலைவர்கள் மீது பாடிய புகழ்மாலைகள், வள்ளல்களைப் பற்றி பாடிய பாடல்கள் எனவும், பல்வேறு தனிப்பாடல்கள், சிறப்புப்பாயிரங்கள், செய்யுட்கள் எனவும் பாகுபடுத்திப் பார்த்தால், தமிழ் இலக்கிய வகையின் வரிசையிலும் நூல்களின் எண்ணிக்கை வரிசையிலும், பாடல்களின் எண்ணிக்கை வரிசையிலும் அதிகமாக யாத்துள்ள புலவர் மகாவித்துவான் என்றால் மிகையாகாது.

கட்டுரை வன்மை:
மகாவித்துவான் அவர்களின் சொல்வன்மையை எடுத்துக்கூறும் விதமாக, அவருடைய மாணவர் உ.வே.சா அவர்கள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். அவரிடம் பாடம் பயின்றேன் என்று சொல்வதே அக்காலத்தில் ஒரு சிறப்புத் தகுதியாக இருந்தது என்றால் அதற்கு அவருடைய கற்பிக்கும் திறனே காரணம். மாணவர்கள் மனம் கொள்ளும் வகையிலும், மாணவர்களின் அறிவாற்றலைத் தூண்டும் வகையிலும் பாடம் கற்பிப்பதில் அவருக்கு நிகர் அவரே எனலாம்.

நிலம்:
ஆசிரிய இலக்கணத்தில் இலக்கண நூலார் பவணந்தி முனிவர் கூறுவது, நிலம் போன்ற பொறுமை ஆசிரியருக்கு இன்றியமையாதது என்று நிலத்தைப் பற்றிக்கூறும் நன்னூலார்,

“தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே”4

என கூறுகிறார்.

பிறரால் அறியப்படாத உருவப்பரப்பின் பெருமையுடைய நிலத்தைப்போல, ஆசிரியரும் பிறரால் அறியவியலாத கல்விப் பெருமையுடையவராதல் வேண்டும் என்கிறார். மகாவித்துவான் அவர்களின் கல்விப் பெருமையை யாரும் அளந்திடமுடியாது. அவருடைய நூல்களே பறைசாற்றும். நிலத்திற்குரிய பொறுமையான குணம் போல ஆசிரியருக்கும் பொறுமை வேண்டும் என்கிறார் நன்னூலார். மகாவித்துவானின் பொறுமையான அணுகுமுறையும், மாணவர்கள் குற்றம் புரிந்திடின் அதனைப் பொறுத்துக்கொள்ளும் பண்பும் மிகுதியாக இருந்த்தால் மாணவர்கள் அவரை சூழ்ந்தே இருந்துள்ளனர். அவருடைய மாணவர்களே அவருடையப் பண்பைப் புலப்படுத்துகின்றனர். மாணவர்களின் முயற்சிக்கேற்ப கல்விப் பயிற்றுவிக்கும் தன்மையவராகவே மகாவித்துவான் அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

மலை:
ஆசிரியர் இலக்கணம் கூறவந்த நன்னூலார் அளவிடமுடியாத மலைப்போல், ஆசிரியரின் அறிவுவளத்தை அளவிடற்கு யார்க்கும் அரிதாக இருக்க வேண்டும் என்கிறார். மலையில் பல்வேறு பொருள்கள் விளைந்து நன்மைகள் தருவது போல, ஆசிரியர் பன்னூல் அறிவு பெற்றிருக்கவேண்டும் என்கிறார். இத்தகுதி முழுமையாக மகாவித்துவான் அவர்களுக்குப் பொருந்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

“அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வன்மையும் மலைக்கே”5

என்ற நூற்பாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களிடம் அன்பாகவும் தன்வீட்டில் தங்கவைத்தும் பாடம் சொன்ன பெருமையுடையவர் நம் மகாவித்துவான். இவரைக் கல்விமலை என்றே கூறலாம்.

நிறைகோள்:
நிறுக்கப்பட்ட பண்டத்தின் அளவை ஐயம் நீங்கக் காட்டுதலும் துலாக்கோல்போல் நடு நிலைமையோடு மாணவர்களை நடத்துதலும், வினவப்பட்ட பொருளை ஐயம் நீங்க விளக்குதலும் ஆகிய குணங்களால் மகாவித்துவான் அவர்கள் துலாக்கோலை ஒத்துள்ளார்கள் என்பதை யாவரும் அறிவர்.

மலரின் இயல்பு:
மலரின் இயல்பை நன்னூலார் நல்லாசிரியருக்கு எடுத்துரைக்கின்றார்.

“மங்கலமாகி இன்றி யமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர்வு உடையது பூவே”6

மகாவித்துவான் அவர்கள் இந்நூற்பாவுக்கு முற்றிலும் பொருந்துவார்கள். உ.வே.சா. அவர்கள் தம் நூலில் அவர்களுடைய தோற்றத்தையும் மிகத்தெளிவாக எடுத்துரைப்பதில் மலருக்கு இவர் ஒப்பானவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. உலகியல் அறிவோடு உயர்குணம் கொண்டவராக விளங்கினார் என்பதற்கு இவரை ஆதரித்த திருவாவடுதுறை ஆதீனம் முதலியவற்றைச் சான்றாகக் கொள்ளலாம்.

முடிவுரை:
மகாவித்துவான் அவர்கள் கல்வி கற்றதில் சிறந்த தலைமாணாக்கராகவும் கற்பிப்பதில் நல்லாசிரியராகவும் விளங்கியுள்ளார்கள். ஒரு தந்தையின் சிறப்பை அவருடைய புதல்வர்கள் புலப்படுத்துவது போல், ஒரு ஆசிரியரின் சிறப்பை அவருடைய மாணவர்கள் புலப்படுத்த வேண்டும். அந்த வகையில் மகாவித்துவானுக்கு அமைந்த மாணவர்கள் பலர் அவருடைய சிறப்பைப் புலப்படுத்தியுள்ளனர். அவர்களின் எழுத்தே அதனைக் காட்டும்.

“இருள் கனிந்த வெண்மனத்து மிடையறா தொளிபரப்பி
இருப்போன் கங்கைப்
பொருள் கனிந்த குலதீபன் மீனாட்சி சுந்தரனார்
புலவரேறு”7

என்று மகாவித்துவான் அவர்களின் மாணவருள் ஒருவரான, சுப்பராய செட்டியார் கூறுகிறார்.

”எண்ணிய பலவு மாணவர்க் கன்பி னீந்திடு
நிதிதமிழ் விளங்க
நண்ணிய புகழ் மீனாட்சிசுந்தர நன்னவலன்”8

என்று மகாவித்துவான் அவர்களின் உள்ளங்கவர் மாணாக்கர் உ.வே.சா. கூறுகிறார். நன்னூல் காட்டும் நல்லாசிரிய இலக்கணம் நூறு விழுக்காடு பொருந்திய நல்லாசான், பேரறிஞர், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் என்பதில் யாதும் ஐயுரவு இல்லை.

சான்றெண் விளக்கம்:
1.நன்னூல் நூற்பா.26
2.என் சரித்திரம் அத்யாயம்.27
3.மேற்படி
4.நன்னூல் நூற்பா.27
5.நன்னூல் நூற்பா.28
6.மேற்படி. நூற்.30
7.ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் சரித்திரம்.(பாகம்.2).ப.326
8.மேற்படி.ப.322

முனைவர் து.சந்தானலெட்சுமி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
அ.வ.அ.கல்லூரி,
மன்னன்பந்தல்-609305
அலைப்பேசி:9965045930
Santhanalakshmid13@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *