Month: July 2015

  • “பெருந்தலைவர்” – கர்மவீரர் காமராசர்!

    — எஸ். நித்தியலக்ஷ்மி.

    பெருந்தலைவர்

    kaamaraasar

    முன்னுரை:
    தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker),பெருந்தலைவர் என்ற பெருமைக்குரிய காமராசர் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு உயர்ந்தவர். வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்து தமிழகத்துக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் நலன்களுக்கு மிகப்பெரும் தொண்டாற்றியவர்.

    பிறப்பு:
    விருதுநகர் மாவட்டம் விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி தம்பதியருக்கு 15.07.1903 ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் இவரின் பெயர் குலதெய்வமான காமாட்சி அம்மனின் பெயரையே சூட்டினர். இவரது தாயார் மட்டும் ராஜா என்று அழைத்து வந்தார். பின்னாளில் காமாராசு என பெயர் மாற்றம் பெற்று எல்லோராலும் அழைக்கப் பெற்றார்.

    கல்வி:
    தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கிய காமரசர், ஆறு வயதில் தந்தையை இழந்ததும் ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.

    சிறை வாழ்க்கை:
    ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

    அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ.வரதராசுலு நாயுடு அவர்களின் வாதத் திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

    1940ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும்போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு விடுதலை ஆன காமராசர் நேராகச் சென்று தனது நகராட்சித் தலைவர் பதவியை துறந்தார். அப்போது பதவிக்கு நேர்மையாகவும் முழுமையாகவும் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்று கூறினார்.

    மீண்டும் 1942ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார். இம்மாதிரியான சிறை வாழ்க்கைகளின்போது சுயமாகப் படித்துத் தன் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார்.

    அரசியல் குரு:
    மிகச்சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியுமான சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் காமராசர். 1936ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சியைக் கண்டு தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லத்திற்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார். குடியாத்தம் தொகுதியில் சட்டப்பேரவைக்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தமிழக முதல்வராக 13.04.1954 தமிழ் புத்தாண்டு அன்று பதவியேற்றார். முதல்வராக பதவியேற்றதும் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லம் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டுதான் தன் பணிகளைத் தொடங்கினார்.

    அமைச்சரவை:
    * காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன.

    * மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

    * காமராசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த பக்தவச்சலம் இருவரையும் அமைச்சரவையில் அமைச்சர்களாக சேர்த்திருந்தார்.

    ஆற்றிய பணிகள்:
    ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்றும் உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது (ஆங்கிலேய அரசு காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலை நாட்கள் 180 லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப்பட்டது.

    காமராசர் முதல்வராக பதவி வகித்த காலங்களில் தமிழகத்தின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமை அளித்து பலத் திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின்கீழ் 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவை:

    * கீழ் பவானித்திட்டம்

    * மேட்டூர் கால்வாய்த்திட்டம்

    * காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்

    * மணிமுத்தாறு

    * அமராவதி

    * வைகை

    * சாத்தனூர்

    * கிருஷ்ணகிரி

    * ஆரணியாறு ஆகியவையாகும்

    முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களும், பெருந் தொழிற்சாலைகளும்:

    * பாரத மிகுமின் நிறுவனம்

    * நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

    * மணலி சென்னை சுததகரிப்பு நிலையம் (MRL) இதன் தற்போதைய பெயர் (CPCL)

    * இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

    * நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

    * கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

    * மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

    * குந்தா மின் திட்டம்

    * நெய்வேலி மற்றும் ஊட்டியில் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

    அகிலஇந்திய காங்கிரஸ் (K.PLAN):
    மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும், குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் ‘காமராசர் திட்டம்’ ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதல்வர் பதவியை (02.10.1963) துறந்து பக்தவத்சலம் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தில்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 ஆம் தேதி அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவகர்லால் நேரு மறைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

    இறுதிக் காலம்:
    காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காமராசர் இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித நிலங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வாழ்க்கை பயணத்தை முடித்தார்.

    நினைவுச் சின்னங்கள்:
    காமராசர் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினைவிடம் ஒன்றை
    அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

    காமராசர் இறந்த பிறகு 1976-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Share
  • “இனி நினைந்திரக்கமாகின்று!”

    — தஞ்சை வெ.கோபாலன்.

    தஞ்சை என்றதும், பசுமையான நெல்வயல்கள், அந்த வயல்களை ஈரமாக்கி விளைச்சலை கொள்ளை கொள்ளையாகத் தரும் காவிரி நதியும்தான் முதலில் நம் எண்ணத்தில் வரும். ஆடியில் காற்றடித்தால், காவிரியில் தண்ணீர் வரும் என்பர் அந்த நாளில். “ஆடியிலே காத்தடிச்சா, ஐப்பசியில் மழை வரும்” என்றொரு பாடலும் உண்டு. ‘அக்கா’ குருவிகளின் ‘அக்கோ’ எனும் சோக ஒலி சோலைகளிலும், தோப்பு, துரவுகளிலும் எதிரொலிக்கும். காவிரி வறண்டு கிடக்கும் காலங்களில் ஆற்றுப் படுகைகளில் தெருக்கூத்து விடிய விடிய நடைபெறும். நிலவொளி இருக்கும் நாட்களில் கிராமங்களில் மின்சாரம் வராத பழைய நாட்களில் (சுதந்திரத்துக்கு முன்பு வரை) ஆற்று மணலில் நெடுநேரம் அமர்ந்து பேசுவர், சிறுவர்கள் ‘சடுகுடு’ (இப்போதைய பெயர் கபடி) ஆடிக் கொண்டிருப்பர்.

    பல கிராமங்களுக்கு சுதந்திரத்துக்குப் பிறகுதான் மின்சாரம் கிடைத்தது. புதிய கம்பங்கள் நட்டு, கம்பி இழுத்து வீடுகளுக்கு மின்சாரம் கொடுத்தபோது அரிக்கன் விளக்கும், சிம்னி விளக்கும் எரிந்த வீடுகளில் மின்சார பல்புகள் வெளிச்சத்தை உமிழும் அதிசயத்தை தங்கள் வீட்டில் மின்சாரம் இல்லாத சிறுவர்கள் வேடிக்கைப் பார்க்க வருவார்கள்.

    உள்ளடங்கிய கிராமங்களில் அஞ்சல் அலுவலகங்கள் இருந்தாலும், அந்த ஊர்களுக்கு வந்து சேரவேண்டிய தபால்களை அருகிலுள்ள பெரிய ஊரிலிருந்து ‘ரன்னர்’ (Runner) எனும் அஞ்சல் ஊழியர், சீல் வைத்த அஞ்சல் பையைத் தோளில் சுமந்து கொண்டு கையில் சலங்கை கட்டிய ஒரு கைத்தடியோடு ஓடிவருவதைப் பார்க்கவே அழகாக இருக்கும். அவர் நடந்து வரக்கூடாது, ஓடிவர வேண்டும், அதனால்தான் அவருக்கு ரன்னர் என்று பெயர். ரன்னர் ஓடிவரும்போது கேட்கும் சலங்கை ஒலியைக் கேட்டதும் எழுந்து அஞ்சல் அலுவலகம் போய் தங்களுக்கு ஏதேனும் கடிதம் இருக்கிறதா என்று பார்ப்பவர்களும் உண்டு. இந்த காட்சிகளை கல்கியின் “அலை ஓசை” நாவலின் முதல் பகுதிகளில் பார்க்கலாம்.

    கிராமங்களில் கிராம தேவதைகளுக்குக் கோடையில் காப்புக் கட்டுதல் நடைபெறும். அப்போதெல்லாம் கிராமக் கோயில்களின் முன்பு தீமிதி, கரகம் போன்றவைகளும், மண்ணெண்ணையில் எரியும் திரிவிளக்கு வெளிச்சத்தில் ஜவ்வு மிட்டாய் வியாபாரமும், பயாஸ்கோப்புப் பெட்டியும் கோலாகலம்தான். ஊரின் மேற்கே ஒரு பெருமாள் கோயில், கிழக்கே ஒரு சிவன் கோயில், வடக்கே ஆற்றங்கரையோரம் ஒரு மாரியம்மன் அல்லது காளியம்மன் அல்லது ஒரு ஐயனார் கோயில் இப்படி எங்கு திரும்பினாலும் ஆலய வழிபாடுகள். தேர் திருவிழா என்றால் அக்கம் பக்கத்து கிராமத்தாரின் படையெடுப்பு. வசதி படைத்தோர் வெயில் நேரத்தில் திருவிழா காண வந்த மக்களுக்கு நீர்மோர், பானகம் விநியோகம் ஒரு பக்கம். அடடா! அந்த நாளைய தஞ்சாவூர் கிராம வாழ்க்கை சொர்க்க வாழ்க்கைதான்.

    பள்ளிக்கூட மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் முழுவதுமே கொண்டாட்டம்தான். ஆற்றில் தண்ணீர் இருந்தால் இவர்கள் குதித்து, நீராடும் பாங்கில் ஆறு இரண்டுபடும். கோடையில் ஆற்றில் நீர் இல்லாத காலங்களில் இருக்கவே இருக்கிறது மாரியம்மன் கோயில் குளம், சிவன்கோயில் குளம், பெருமாள் புஷ்கரணி, வயல்வெளிகளுக் கிடையில் உள்ள குட்டைகள் இங்கு எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் கொண்டாட்டம் பரவிவிடும்.

    குருகுலம் இருந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லை. பள்ளிக்கூடங்கள் தொழிற்கூடங்கள் போல காலையில் தொடங்கி உணவு இடைவேளைக்கு மணியடித்துப் பின் மறுபடி கூடி மாலை நான்கு மணிக்கு அவிழ்த்து விட்டால், பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒட்டு ஏது உறவு ஏது? அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மற்ற விடுமுறை நாட்கள் என்றால், வீடுகளில் பழைய சோறு அல்லது நீராகாரம் முடித்துவிட்டு தலைமை ஆசிரியர் வீட்டுக்குப் போய் விடும் மாணவர்களைப் பார்க்கலாம். மிகப் பெரிய தோட்டமும், அருகில் அவர் வீடும் சோலை போல காட்சியளிக்கும். வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் பயிரடப்பட்டு காய்களும் காய்த்துக் குலுங்கும். பெரும்பாலும் அப்போதெல்லாம் உள்ளூர்காரர்களே பள்ளிக்கூடங்களில் பணியில் இருந்தார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களாகவும், தோட்டம் துரவுகளோடு வாழ்ந்து மாணவர்களைப் பயிற்றுவிப்பதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.

    ஆசிரியரின் மனைவி சொன்ன காய்கறிகளை பதமாகப் பார்த்துப் பறித்து அவருக்குக் கொடுத்துவிட்டு, காய்கறி பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து முடித்ததும் அழைப்பு வரும். அனைவருக்கும் அவர்கள் வீட்டில் காலை எளிய உணவு அல்லது கெட்டித் தயிர் கலந்த பழைய சாதம், காய்ந்த நாரத்தங்காய் ஊறுகாய் ஆகியவைகள் ஏதேனும் அனைவருக்கும் தரப்படும். அவர்கள் வீட்டு மாட்டை அருகிலுள்ள குளத்துக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டி மாட்டையும் கன்றையும் வீட்டுக்கு அழைத்து வந்து, நெற்றியில் மஞ்சள் குங்குமம் பூசி அதற்கு புல்லையும் அள்ளிப்போட்டு அன்போடு உபசரிக்கும் வழக்கமும் இருந்தது.

    பிறகு ஆசிரியர் கணக்கு அல்லது ஆங்கிலம் போதிப்பார். பதினோரு மணிக்கு அனைவரும் வீடு நோக்கி ஓடிவிடுவர். அங்கு குளித்து முடித்து பகல் உணவு உண்டபின், வீட்டினுள் விளையாட்டுகள். மாலையானதும் மீண்டும் தெருவில் விளையாட்டு. இருட்டியதும் அரிக்கன் விளக்கை ஏற்றிவைத்து பாடங்களைப் படிக்க வற்புறுத்துவதால் சிறிது நேரம் படிப்பதாக பாவனை செய்தபின் இரவு உணவை முடித்து நிலவில் விளையாட்டு, இருளாக இருந்தால், யார் வீட்டுத் திண்ணையிலாவது அமர்ந்து அரட்டை, பாட்டு, நடிப்பு இப்படி. அதிலும் பண்டிகை காலங்கள் என்றால் எங்காவது ஒரு வீட்டுத் திண்ணையில் நாடகமோ, பாட்டுக் கச்சேரியோ அரங்கேறிக் கொண்டிருக்கும். “நாம் இருவர்” படத்தில் வரும் பாரதியார் பாடல்கள் பெரும்பாலும் அனைவருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.

    எல்லா வீடுகளும் இரவு ஒன்பது மணியானால் ஓய்ந்து விடும். அவரவர்கள் சாப்பாடு முடிந்து படுத்து விடுவர். ரேடியோ, டி.வி. போன்ற பொழுதுபோக்குகள் ஏது? பெண்கள் சிலர் வீட்டினுள் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தாயம் விளையாடுவது உண்டு. பையன்கள் ஒரு ஜமக்காளம் ஒரு தலையணையை எடுத்து வீட்டுக்கு வெளியே திண்ணையில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். சில நாட்கள் ஐந்து மைல் தொலைவிலுள்ள பக்கத்து டவுனுக்கு இரண்டாம் காட்சி சினிமா பார்க்கப் போய்விட்டு இரவு மூன்று மணிக்கு வந்து படுப்பார்கள். யார் வீட்டுத் திண்ணையிலும் இவர்கள் படுத்துக் கொள்ளலாம், யாரும் கேள்வி கேட்பாரில்லை.

    ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற திரைப்படப் பாடல் இப்போது நெஞ்சிலே ஓடுகிறது. மேலே சொன்னவை அனைத்தும் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் நடந்தவை, அந்த நாள் இனித்தது. கவலை என்பது என்னவென்று தெரியாத பருவம். இப்போது போல நெருக்கடிக்கு மத்தியில் மூட்டைக்குள் கட்டப்பட்ட தானியம் போல அடைந்து கிடக்கும் வழக்கம் இல்லை. வானத்தில் சிறகு விரித்து முடிந்த மட்டும், மேலே, மேலே பறந்து களித்த நாட்கள்.

    malgudi daysஊர் எல்லையில் பெரிய குளம். அது குளமா ஏரியா? இரண்டுக்கும் இடைப்பட்ட பெரிய நீர்த்தேக்கம். அதன் ஒரு புறம் பெரிய மாந்தோப்பு. கோடை விடுமுறை காலம் பார்த்து அந்த மரங்களில் மாங்காய்கள், அடடா, அதில்தான் எத்தனை வகைகள், ஒட்டு, கிளிமூக்கு, துவர்ப்புக்காய், புளிப்பு, கற்பூராதி இப்படி பலதரப்பட்ட மாங்காய்கள் மரங்களில் கிளை தெரியாது, இலைகள் தெரியாது, மாங்காய்கள் தான் தெரியும். தோட்டத்துக்குக் காவல் உண்டு. காவல்காரன் நுழைவு வாயிலுக்கு அருகில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு இருப்பான். குளக்கரை பின் பக்கம் இருக்கும், மற்ற மூன்று பக்கங்களிலும் உயர்ந்த முள்வேலி, உள்ளே நுழைய முடியாது. ஊர் சுற்றிவரும் பிள்ளைகளில் பலரும் அரை டிராயர் பேர்வழிகள். சிலர் மட்டும் முழங்காலுக்குக் கீழ் வரை ஒரு வேட்டி. குளத்தின் இந்தக் கரையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும், அதில் ஒரு எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு போய் குளத்தில் இறக்கி அதன் மீது ஒருவன் ஏறி உட்கார்ந்து விடுவான். வேட்டி கட்டியவனின் வேட்டி உருவப்பட்டு அவனிடம் கொடுக்கப்படும். அவன் குளத்தில் மாட்டின் மீதே போய் தோட்டத்துப் பக்கம் மெதுவாம ஓசையின்றி இறங்கி, கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள பலவகை மாங்காய்களைப் பறித்து அந்த வேட்டியில் மூட்டை கட்டிக்கொண்டு, திரும்ப வந்து மாட்டின் முதுகில் அந்த சுமையை வைத்துத் தானும் உட்கார்ந்து திரும்புவான். அவன் திரும்பி வரும்வரை ஒரே திகில்தான். காவல்காரனிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது? நல்ல காலம் மாட்டுவதில்லை. அப்படி காவல்காரன் துரத்தி வந்தாலும் ஓடிவந்து மாட்டின்மீது ஏறிக்கொண்டு எமதர்ம ராஜன் போல இந்தக் கரை வந்துவிடுவான்.

    சில சமயங்களில் அப்படி மாங்காய் திருடிய பையன்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டில் வத்தி வைத்து விடுவார்கள். அப்புறம் அவன் வீட்டில் திமிலோகம் தான். அடிவாங்கி, தோப்புக்கரணம் போட்டு, தோட்ட உரிமையாளர் பட்டாமணியாரிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தால்தான் சோறு கிடைக்கும். அதிலும் ஒரு ‘கிக்’ இருக்கத்தான் செய்தது. சில ஆசிரியர்கள் தங்கள் தோட்டத்தில் கொய்யா, மா மாரம் போன்றவற்றில் ஒட்டு போடுவதைக் கற்றுத் தருவார்கள். ஒரு வகை மாமரக் கிளையை நன்கு சீவி, அதோடு, வேறொரு மரக்கிளையை ஒட்டு சேர்த்து இணைத்து துணியால் கட்டி வைத்து அதில் தினம் தன்ணீர் ஊற்றிவர அது பிடித்துக் கொண்டு வளரும். அதில் காய்க்கும் மாங்காய் ஒட்டு மாங்காய் எனப்படும். அதன் சுவையே சுவைதான்.

    எட்டாம் வகுப்பு வரையில் தான் அந்த ஊரில் படிக்க முடியும். அதற்குத்தான் ஒரேயொரு பள்ளி. ஆங்கிலேயர்களை மகிழ்ச்சியடைய வைக்கவென்றோ என்னவோ, அந்தப் பள்ளிகளுக்கு ஆங்கிலோ வெர்னாகுலர் ஹையர் எலிமெண்டரி பள்ளி என்று பெயர். ஒன்பதாம் வகுப்புக்கு ஐந்தாறு மைலுக்கு அப்பாலுள்ள டவுனுக்குத்தான் போகவேண்டும். அது ஒரு தனி அனுபவம். திடீரென்று ஒரு நாள் தலைமை ஆசிரியர் மாணவர்களையெல்லாம் அழைத்து விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி, நம்ம நாடு வருகிற ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் அடையப்போவுது. அதை நாம் நம்ம பள்ளியிலே உத்சாகமாகக் கொண்டாடணும் என்று அறிவித்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

    போதும் இந்தக் கிராம வாழ்க்கை அனுபவத்தை அசைபோட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்துவிட்டு, டவுனுக்குப் போன அந்த அனுபவத்தை மறந்தே விடலாம். கிராம வாழ்க்கை அன்று சொர்க்கம். இன்று நினைத்தாலும் மனதுக்கு இதமாக இருக்கிறது. புறநானூற்றில் “தொடித்தலை விழுத்தண்டூன்றினார்” எனும் பெயரில் எழுதப்பட்ட ஒரு பாடல் உண்டு. “இனி நினைந்திரக்கமாகின்று….” எனத் தொடங்கும் அந்தப் பாடலில், வயது முதிர்ந்த கிழவர் ஒருவர், உடல் நடுக்கமடைந்து, கண் பார்வை மங்கி, தடியூன்றி நடக்கும் பருவத்தில் தன்னுடைய இளமைக் காலத்து சாகசங்களை நினைத்துப் பார்த்துப் பெருமூச்சுவிடும் பாடல் அது. அதைப் போலத்தான் இப்போதும் “இனி நினைந்திரக்கமாகின்று” என்று பெருமூச்சு விடும் ‘பெரிசுகள்’ என்னைப்போல ஏராளமாக உண்டு.

    படம் உதவி: www.oldindianphotos.in

    Share
  • குமார சம்பவம்

    கிரேசி மோகன்

    shivrratri

    குமார சம்பவம்
    ——————————

    காப்பு
    ———————-
    சிவபார்வதி
    —————-
    சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்
    கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்
    உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்
    குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010

    முருகன்
    ———-
    உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை
    தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே
    முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே
    வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010

    பிள்ளையார்
    —————
    உன்னை மறந்தால் உலகம் பழித்திடும்
    என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை
    கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்
    தந்தை மணமுடிக்கத் தாவு….(3)….2-10-2010

    சரஸ்வதி
    ———–
    செல்வம் செலவாகும், வீரம் வயதாகும்
    கல்வி குறையாது குன்றாது -பல்கிப்
    பெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்கு
    அருகிருந்து சேர்ப்பாய் அறிவு….(4)….2-10-2010

    காளிதாசன்
    —————
    வாடாத பாக்களை வாணியின் பாதத்தில்
    காடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்
    ஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்
    சாற்றையென் பாழ்வாயில் சிந்து….(5)….2-10-2010

    சு.ரவி
    ——–
    நண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்
    வெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்
    சிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்
    கரம்தந்(து) அளித்திடுவாய் காப்பு….(6)….14-10-2010
    ——————————————————————–
    சர்கம்-1
    ———-
    கரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்
    வரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்
    பாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்
    பாரீர் இமயமதன் பேர்….(1)….30-9-2010

    கன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை
    நின்று கறக்க, நிலப்பசு -என்றும்
    சுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை
    வரம்தரும் வெற்பை வணங்கு….(2)….1-10-2010

    சீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற
    பாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு
    எல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு
    பொல்லாப் பனியா பொருட்டு….(3)….1-10-2010

    விண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்
    செஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு
    பட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்
    பட்டப் பகலிலந்திப் போது….(4)….1-10-2010

    கோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக
    ஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை
    கருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்
    சிரத்தினில் வெய்யில் சுகம்….(5)….1-10-2010

    மதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்
    சதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த
    வேடன் அரிமா வழியை அறிவானாம்
    மூடும் பனியில் முனைந்து….(6)….1-10-2010

    தேர்ச்சிமிகு வித்யா தரப்பெண்கள் நேசத்தை
    ஊர்ஜிதமாய், செங்காவி ஊற்றுமையால் -பூர்ஜர
    ஏட்டில் எழுத எதுகை இமயம்தான்
    காட்டிடும் காதல் கொடி….(7)….1-10-2010

    விண்ணுறும் வெற்புகுகை வாய்திறந்து மூங்கிலதன்
    கண்ணூர்ந்து புல்லாங் குழல்காற்றை -கின்னரர்தம்
    கானமேல் ஸ்தாயிக்கு தான சுரம்பிடிக்கும்
    ஞானம் மிகுந்தமலை நாடு….(8)….2-10-2010

    ஆவலோடு கன்னத்தை ஆனை தினவெடுத்து
    தேவதாரு தேகத்தில் தேய்த்திட -சீவலாக
    தோலுறிந்த பட்டையில் பால்சுரக்க வாசத்தை
    மேலிருந்தும் வீசும் மலை….(9)….2-10-2010

    கூடிக் குலவிடும் வேடர்க்(கு) உதவியாய்
    வீடாம் குகையில் விளக்கதற்கு -ஈடாக
    மூலிகைத் தாவரம் மூட்டிட தீபவொளி
    மாளிகைபோ லாக்கும் மலை….(10)….2-10-2010

    பாரமான பின்புற(ம்)அ பாரமான கொங்கைகள்
    ஈரமான பாறைப் பனிநீரும் -சேரவொன்றாய்
    கின்னரப் பெண்கள்தம் இன்னலையும் பாராது
    அன்ன நடைபயில்வர் அங்கு….(11)….2-10-2010

    அல்பனே ஆயினும் அய்யா சரணென்றால்
    சொல்பமும் பாராட்டா சான்றோர்போல் -அல்பயலை
    சூரியன்கை சிக்காது சேர்த்து குகைக்கரத்தால்
    வாரி அணைக்கும் வெற்பு….(12)….2-10-2010

    கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு
    வானின் வளர்மதி வெண்கவரி -மானின்வால்
    ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை
    ஆக இருத்தல் அழகு….(13)….2-10-2010

    கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்
    ஆச்சரியம் கொள்வால் அதைப்பார்த்து -மூச்சிறைக்க
    மேகம் குகைவாசல் போகும் திரையாக
    மோகத் துணைபோகும் மஞ்சு….(14)….2-10-2010

    தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்
    மேவுமயிற் தோகை மிருதுவும் -தாவிவரும்
    காற்றில் கலந்திருக்க காட்டில் களைத்தவேடர்
    ஏற்றடைவர் ஏகாந்த மே….(15)….3-10-2010

    ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை
    வாழும் கமலங்கள், வெற்படியில் -சூழும்
    கதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு
    உதிரும்முன் பூக்கும் உவந்து….(16)….3-10-2010

    வேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்
    கேள்விக் குறிக்குவிடை கண்டதால் -நூல்வைத்த
    நான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம
    வான்முகம் வைத்தான் விழைந்து….(17)….3-10-2010

    பித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்
    தத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்வி -உத்தமி
    மேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம
    வானையவன் வம்சம் வளர்த்து….(18)….3-10-2010

    நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
    தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை
    வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
    மேனாள் வயிற்று மகன்….(19)….3-10-2010

    தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்
    துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்
    முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
    அன்பு இமவான் அகம்….(20)….3-10-2010

    உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
    நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக
    மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
    சங்கரியாய் வந்தாள் சதி….(OR)
    திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)….3-10-2010

    தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
    ஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ
    பார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்
    பார்வதி தோன்றிய போது….(22)….3-10-2010

    அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
    எதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்
    ரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்
    புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு….(23)….3-10-2010

    சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
    இக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்
    அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
    பொங்கும் அழகுற்றாள் பூத்து….(24)….4-10-2010

    உற்றார் அவளை உவந்து அழைத்தனர்
    பெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்
    சமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்
    உமையே தவமேன் உரைத்து….(25)….4-10-2010

    உசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை
    வசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது
    பார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்
    யார்வதை உற்றுமிமை யான்….(26)….4-10-2010

    விளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா
    இலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்
    பெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்
    வற்றா வளமையுடன் வாக்கு….(27)….4-10-2010

    ஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி
    காயாத கங்கைக் கரைமணலில் -சேயாக
    மேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்
    நாடகம் ஆடினாள் நன்கு….(or)
    வேடமிட்டாள் வையவாழ் வொத்து….(28)….4-10-2010

    போதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்
    ஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய
    முற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்
    விற்பன்னன் காளிதாசன் வாக்கு….(29)….5-10-2010

    மாதவள் தோற்றம் மனதை மயக்கிய
    போதுமது அல்லவே புன்மது -காதலான்
    வாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி
    வாலிபத்தைக் கொண்டாள் வளர்ந்து….(30)….5-10-2010

    தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்
    சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்
    யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல
    அவ்வனப்பே ஆரா அழகு…(31)….5-10-2010.

    பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்
    கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட
    பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்
    விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32)….5-10-2010

    அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்
    கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்
    தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு
    சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33)….5-10-2010

    ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட
    கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்
    செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்
    கையிருப்பு போச்சாம் குறைந்து….(or)
    அய்ய! முயன்றதில் மெய்யின்மற் றங்கங்கள்
    செய்ய அழகின்றி சோர்வு….(34)….5-10-2010

    வேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்
    வாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்
    பார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு
    நேர்கதியாய் ஒப்புமைகா ணேன்….(35)….5-10-2010

    விடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்
    அடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்
    இல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை
    சொல்லாமல் எண்ணல் சிறப்பு….(36)….5-10-2010

    இடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்
    தடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்
    மெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்
    துல்லிய ரத்தினத் தேசு….(37)….5-10-2010

    மத்தியில் யாகத்து மேடைக் குறுகலை
    ஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி
    மாறன் படியேற மூன்று மடிப்புகளால்
    சாரம் அமைத்திளமை சேர்வு….(38)….5-10-2010

    நூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த
    நீலக் கமல நயனத்தாள் -கோலயிரு
    வெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி
    எண்ணுதற்(கு) ஏற்ற எழுத்து….(39)….5-10-2010

    செத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்
    பித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்
    வாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு
    ”வாகையினும் மென்மையாம்” வாக்கு….(40)….6-10-2010

    நெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற
    வட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்
    முத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்
    சித்தம் ஒருமிக்கும் சேர்ந்து….(41)….6-10-2010

    சந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்
    செந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு
    ஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்
    பார்வதி சீர்வதனம் புக்கு….(42)….6-10-201

    சிவந்த தளிர்மீது சிந்தியவெண் பூவாய்
    பவழம்தன் மேல்முத்துப் பொட்டாய் -குவிந்த
    அதரத்தில் பரவி அவளாய் உதிர்க்க
    சிதறும் ஒளிப்புன் சிரிப்பு….(43)….6-10-2010

    குயில்கொடிய யாழ்கொடிய கர்ண கடூரம்
    பயில்கின்ற பார்வதியின் பேச்சால் -ஒயில்கொண்டு
    வானத்(து) அமிழ்தாய் நிதானத் துடனின்சொல்
    ஞானத் துடன்நல்கும் நாவு….(44)….6-10-2010

    மாருதம் வீச மருள்நீல முண்டகமாய்
    வேரதைப்போல் நீண்ட விழிகளின் -பாருதலை
    மானுரைக்கக் கற்றாளா? மான்கற்றுத் தந்ததா
    நானறியேன் நாராய ணா….(45)….6-10-2010

    கையெடுத்து துரிகையில் மையடைத்து தீட்டியதாய்
    பையுடைத்த ராஜநாகம் போல்நீள -மையலான்தன்
    காமா யுதவில்லின் கர்வத்தை விட்டுரைத்தான்
    ஆமாம் அவள்புருவம் அம்….(46)….6-10-2010

    விலங்குகள் உள்ளத்தில் வெட்கம் இருப்பின்
    கலங்கும் கவரிமான் கண்டு -துலங்குமவள்
    கேசத்தால் தங்கள்வால் பாசம் துறக்குமாம்
    ரோஷத்தால் நீங்கும் ரசிப்பு….(47)….6-10-2010

    உவமைகள் யாவையும் ஓரிடத்தில் காண
    அவயவங்கள் தேடி அலைந்து -சிவமய
    சக்தியைச் செய்தான் சிரம்நான்(கு) உடையவன்
    முக்திக்(கு) அவளழகே மெய்….(48)….6-10-2010

    சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்
    பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி
    பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே
    பார்விதி என்றார் பலத்து….(49)….7-10-2010

    தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்
    தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்
    வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை
    தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)….7-10-2010

    வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்
    தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்
    கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்
    பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)….7-10-2010

    அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை
    எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே
    அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்
    பத்தினி பற்றொழித்தார் பார்….(52)….7-10-2010

    கின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து
    விண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்
    அஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்
    விஞ்சுமெழில் குன்றில் வளர்ப்பு….(53)….7-10-2010

    சரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி
    சிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ
    சிலாஜது மேவும் சிறுபாறை குந்தி
    கலாஜடை யோந்தொண்டர் கூட்டு….(54)….7-10-2010

    ஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்
    காளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி
    கர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்
    சர்வாங்கம் சிங்கம் சிலிர்ப்பு….(55)….7-10-2010

    தானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்
    வானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ
    ஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்
    நிமித்தம் சிவன்போக்கு நெஞ்சு….(56)….7-10-2010

    தானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்
    மூணாம் விழிகொள் முதலையிம -வானே
    பணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை
    அணிந்திடச் சொன்னான் அழைத்து….(57)….7-10-2010

    சஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத
    நெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்
    பார்வதி வந்து பணிவிடை செய்திட
    ஓர்விழித் தீக்கண்ணன் ஒப்பு….(58)….7-10-2010

    கொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்
    மெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்
    தீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி
    தீர்த்ததவள் கொண்ட தவிப்பு….(59)….7-10-2010

    சர்கம் ஒன்று சுபம்
    ——————————————————————-

    சர்கம் -2
    ————-

    அந்த சமயம், அசுரனாம் தாரகனால்
    நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்
    முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்
    கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010

    சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு
    போததி காலை புலப்படும் -ஆதவன்போல்
    வாடிய வானவர்முன் கூடிய வாசலில்
    பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010

    நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை
    தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து
    தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்
    தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010
    (OR)
    வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை
    நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த
    தேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்
    தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010

    தத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே
    சத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே
    மூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்
    கோர்த்தோம் சரணா கதிக்கு….(63)….8-10-2010

    தண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்
    நண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்
    அசையும் உயிர்கள், அசையா பொருட்கள்
    விசையுறச் செய்யுமுன் வித்து….(64)….8-10-2010
    கற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்
    உற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்
    என்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்
    அன்றசை(வு) இல்லா அயன்….(OR)
    அன்றிருந்தீர் ஏகம் அடைந்து….(65)….8-10-2010

    பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
    உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
    தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
    விந்தை புரிந்தாய் வகுத்து….(66)….8-10-2010

    ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
    காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
    ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
    வாழி விரிஞ்சன் விறல்….(67)….8-10-2010

    காரணனே பாருக்கு, காரணம் பாராத
    பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
    தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
    இல்லை உமக்கிங்கே ஈடு….(68)….9-10-2010

    தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
    காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
    தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
    ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)….9-10-2010

    திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
    அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
    பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
    ஏராள மானஏ கா….(OR)
    ஏராளம் உந்தன் எடுப்பு….(70)….9-10-2010

    ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
    ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
    செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
    பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….10-10-2010

    காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
    சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
    அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
    சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….10-10-2010

    விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
    தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
    அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
    குயவன் களிமண் கரம்….(73)….10-10-2010

    யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
    தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
    தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
    நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)….10-10-2010

    வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
    சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
    ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
    பேசப் புகுந்தான் பதில்….(75)….10-10-2010

    வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
    போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
    நான்கு முகத்தினால் நான்கு முகமாக
    வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)….11-10-2010

    வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
    அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
    கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
    வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….11-10-2010

    காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
    மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
    கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
    பாட்டன் எனக்குப் பகர்….(78)….11-10-2010

    விருத்திரன் மாய வரைகள் சாய
    நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
    வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
    குச்சியாய் ஆனதேன் கோன்….(79)….11-10-2010

    மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
    தன்திறம் விட்டுத் தவழ்வதேன் -உன்தரப்பு காரணம் என்னவோ கார்முகில் காவலா
    வாருணா கூறுவாய் விட்டு….(80)….11-10-2010

    சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
    அபார கதாயுதம் அற்ற -குபேரா
    கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
    களையிழந்தீர் கூறும் கலி….(81)….11-10-2010

    துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
    கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
    தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
    படியாம் எமனேன் பயம்….(82)….11-10-2010

    வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
    கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
    சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
    வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….11-10-2010

    துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்
    செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்
    வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும்
    சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84)….12-10-2010

    ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை
    தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்
    விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது
    கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85)….12-10-2010

    பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே
    இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்
    உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்
    முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86)….12-10-2010

    தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்
    தேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்
    உள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்
    தெள்ளத் தெளிவாகத் தான்….(87)….12-10-2010

    அண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்
    கொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்
    தேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து
    பூவன் பழமாய்ப் பெற….(88)….12-10-2010

    இந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்
    தன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்
    தேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்

    நாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….12-10-2010

    ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே
    எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே
    தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்
    தீங்குளத் தோரால் தவித்து….(90)….12-10-2010

    விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது
    தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி
    உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்
    பொம்மையாய் ஆனோம் பயந்து….(91)….12-10-2010

    பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்
    வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான
    வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க
    கையினால் பொத்துகிறான் கண்….(92)….12-10-2019

    பாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு
    தாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்
    தாரு வனமழித்த தாணு தலையெழுத்தால்
    சேரும் கலைக்கில்லை ஊறு….(93)….13-10-2010

    மாற்றானாம் தாரகன்தன் மாளிகைத் தோட்டத்தில்
    நேற்றலர்ந்த பூவுக்கும் நோவின்றி -காற்றானான்
    வேர்வைக்கு மட்டும் வளியாகி வீசுதலால்
    பார்வைக்குக் கைவிசிறி பார்….(94)….13-10-2010

    ஆறு ருதுக்களும் வேறு வழியின்றி
    தாருகன் தோட்டத்தில் தொங்கிடும் -நூறுவகைப்
    பூக்களைக் காத்துப் பராமரிப்பு செய்திடும்
    ஆட்களாய் ஆயினர் அங்கு….(95)….13-10-2010

    முத்தை பவழத்தைப் பொத்தி ஜலத்திற்குள்
    நித்தம் அவைமுதிர நோன்பிருந்து -கத்தும்
    கடலரசன் தாருகன் காலடியில் கெஞ்சி
    அடபரிசாய் அந்தோ அளிப்பு….(96)….13-10-2010

    வாசுகியும் தோழர்களும் வீசுமொளி ரத்தினத்தால்
    நீசனவன் மாளிகையில் நள்ளிரவில் -தாசியென
    தீபங்கள் தாங்கித் திரிகின்றார் தேவனே
    பாபமென் செய்தோம் புகல்….(97)….13-10-2010

    கற்பகத் தாருதரும் அற்புதங்கள் யாவையும்
    அற்பனவன் ஆட்சி அருள்வேண்டி -நிற்பவனாம்
    இந்திரனே தாரகன் இன்னல் தவிர்த்திட
    தந்தருளி ஆனான் தொழும்பு….(98)….13-10-2010

    காட்டிடும் அன்புக்குக் கட்டுப் படாதவன்
    வாட்டு கிறான்மூ உலகத்தை -போட்டு
    அடியாத மாடு படியாதாம் என்று
    முடிவாகச் சொன்னான் முனி….(99)….14-10-2010

    இந்திர லோகத்து சுந்தரிகள் வாஞ்சையாய்
    வந்து தளிர்களுக்கு வேதனை -தந்திடாது
    நேசமொடு கொய்திடும் நந்தவனம் தாரகனின்
    நாசத்தால் நாணுது நைந்து….(100)….14-10-2010
    மூச்சுவிடும் காற்றளவு வீச்சடக்கி, தம்கண்ணீர்
    பூச்சொரிய தேவகுலப் பாவையர் -கூச்சமொடு
    தாமரைக் கைகளால் தாரகன் தூங்கிட
    சாமரம் வீசி சளைப்பு….(101)….14-10-2010

    இரவிதன் தேரின் புரவிக் குளம்பு
    உரசுமம் மேரு சிரசை -கருவியவன்
    பேர்த்தெடுத்து மாளிகைப் பூங்காவில் குன்றுகளாய்ப்
    பார்ப்பதவன் கேளிக்கைப் போக்கு….(102)….14-10-2010

    அட்டதிக் கஜங்களின் கொட்டும் மதஜலம்
    மட்டுமே கொண்டதால் மாகங்கை -குட்டையாம்
    பொற்றா மரைப்பயிர் போகமவன் வாவியில்
    குற்றப்பேர் மந்தா கினிக்கு….(103)….14-10-2010

    அமானுஷ் யமாக அவன்வந்தால் போகும்
    சமாச்சாரம் ஆகுமே சோகம் -விமானத்தில்
    ஆதலால் தேவர்கள் பூதலம் சுற்றிடும்
    காதலுக்கு வந்ததாம் கேடு….(104)….14-10-2010

    தீயவன் மூலம் தருமவிர் பாகத்தை
    தீயவன் தாரகன் தேவரெம்முன் -மாயமாய்
    வேள்வியில் அக்கினிக்கு வாரிசாய் வந்துண்டு
    தோல்விக்(கு) அளிப்பான் தபஸ்….(105)….14-10-2010

    மிச்சைஸ்வர் யத்தோடு மந்தரம் சுற்றுங்கால்
    இச்சையாய் இந்திரன் ஈட்டிய -உச்சைச்
    ரவஸ்ஸை அபகரித்த ராட்ஷஸனால் காப்பு
    கவஸம் இழந்தாற்போல் கோன்….(106)….14-10-2010

    கபவாத பித்தம் கலந்திடத் தோன்றும்
    அபவாத மாய்சன்னி பாதம் -உபவேதம்
    தீராப் பிணியென்ற தொல்லை யிதற்கீடாம்
    தாரா சுரன்செய்யும் தீங்கு….(107)….15-10-2010

    வெகுவாக நம்பிய விஷ்ணுவின் ஆழி
    புகவாகு இல்லாத பாறை -நிகர்மார்பில்
    மோதியதால் உண்டான ஜோதியதால் ஆரமாய்
    க்ராதகன் கொண்டான் கழுத்து….(OR)
    பாதகன் கொண்டான் புனைந்து….(108)….15-10-2010

    அயிரா வதமஞ்சும் அவ்வரக்கன் ஆனை
    எயிறால், இமையாதோன் என்றும் -உயிராய்
    வலம்வரும் புஷ்கரா வர்த்தக மஞ்சில்
    ஜலம்தெறிக்க முட்டும் சிதைத்து….(109)….15-10-2010

    கர்மத் தளையகற்றி கர்பப் பிணியறுக்க
    தர்மம் தவதானம் தோன்றலாய் -மர்ம
    பலமுடைய தாரகன் பாதகம் தீர
    தளபதியை தேவர்க்குத் தா….(110)….15-10-2010

    பற்றிச் சிறையில் பகைவனால் பூட்டிய
    வெற்றித் திருமகளை விண்ணரசன் -பெற்றிடவோர்
    ஆணைப் படைத்திடுவீர் சேனைத் தலைவராய்
    வானை வலுப்படுத்து வீர்….(111)….15-10-2010

    முனிவனது பேச்சு முடிந்தது கண்டு
    கனிவுடன் மேலே கமலன் -தணிவுடன்
    கூறியது மேகத்தின் கர்ஜனைக்குப் பின்வரும்
    மாரியதை வெல்லும் மகிழ்வு….(112)….15-10-2010

    நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென
    ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய்
    சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது
    தானல்ல என்றான் தாழ்ந்து….(OR)
    நானல்ல என்றான் நகைத்து….(113)….15-10-2010

    நட்ட மரமது நச்சுமர மாயினும்
    வெட்டுதல் வைத்தோன் வழியன்று -கெட்டவன்
    தாரகன் பெற்ற வரமளித்த நானவன்
    தீரவழி செய்தல் தவறு….(114)….15-10-2010

    மூவுலகைத் தீக்குள் முழுகவைக்கும் வேள்வியை
    தீவிரமாய் செய்தனன் தாரகன் -தாவரம்
    என்றதும் தந்தேன் தவத்தைத் தடுத்திட
    அன்றியவன் நன்மைக்காய் அன்று….(115)….17-10-2010(விட்டுப் போன வெண்பா)

    போராளி யாய்யுத்த பூமியில் பூரிக்கும்
    தாரா சுரன்திகைக்கும் தோள்வலியன் -வேறாள்
    தரணிமிசை உண்டோ, திருநீல கண்டன்
    பரமசிவன் மூலம் பிறப்பு….(116)….16-10-2010

    அறியாமைக்(கு) அப்பால் அறிவுக்(கு) அரணவ்
    இறையொளியை ஆரறிவர் இங்கு -அரியோடு
    அடநானும் அவ்வீசர் ஆழமுச்சி தேடித்
    தொடயேகி அன்றடைந்தோம் தோற்பு….(117)….16-10-2010

    காந்தம் இரும்பைக் கவருதலாய், கைலாச
    சாந்தனை யோகத்தில் சார்ந்தனைஏ -காந்தனை
    பார்வதியின் தோற்றப் பொலிவதால் ஈர்த்திருவர்
    சேர்வதில்தான் தேவர்க்கு தீர்வு….(118)….16-10-2010

    நாங்கள் வெளிப்படுத்தும் நல்லாக்க ஆற்றலை
    தாங்கி வளர்க்கும் திறனுடையோர் -ஈங்கிருவர்
    சம்புவதன் சக்தி சதியேற்க வல்லவள்
    நம்புவது நான்படைப்பில் நீர்….(119)….16-10-2010

    நெற்றி விழியோனின் நீலக் கழுத்தனின்
    வெற்றிப் புதல்வனே வானமகளிர் -கற்றைக்
    சிகைவிரித்துக் கொண்ட சிறையிருந்து மீட்டு
    பகையழிக்கும் சேனை பொறுப்பு….(120)….17-10-2010

    பகர்ந்த படைக்கும் பிரமன் மறைந்து
    நகர்ந்தான் சுரர்களை நீங்கி -தகுந்த
    உபாயம் கொடுத்த உறுதியில் சொர்க
    அபாயம் அகன்றது அன்று….(121)….17-10-2010

    சம்புவை ஈர்த்திடும் சாமர்த் தியமுற்ற
    அம்புவில் மாறன் அதிசியத்தை -நம்பியகோன்
    இந்திரன் நெஞ்சால் இருமடங்கு வேகத்தில்
    வந்திடச் சொன்னான் விரைந்து….(122)….17-10-2010

    ரதிவளையல் காயம் பதிவுசெய்த காயம்,
    நதிவளைவாய் சேர்ந்திருக்கும் நங்கை -நுதல்வளைவாய்
    மன்மதன் வில்லேந்தி மாம்பூ வசந்தனுடன்
    விண்முதலோன் முன்பு வரவு….(123)….17-10-2010

    சர்கம் இரண்டு சுபம்
    —————————-
    —————————————————————————

    சர்கம்- மூன்று
    ——————

    ஆரால் பயனோ அவரன்றி வேறாளைப்
    பாரான் எஜமான் பழகிடினும் -நூறாறு
    நானூறு கண்களால் நோக்கினான் மன்மதனை
    வானூறும் நட்பை விடுத்து….(124)….18-10-2010

    ”அமரிங்கே” என்றன்பாய் ஆசனமும் தந்து
    சமமரி யாதையை செய்ய -அமரர்கோன்,
    புல்லரித்த புஷ்பபாணன் போற்றியெஜ மானரிடம்
    சொல்லலுற்றான் சொந்தச் சரக்கு….(125)….18-10-2010

    மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை
    ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே
    ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும்
    ஆணை எனக்கு அருள்….(126)….18-10-2010

    வானப் பதவி விரும்பித் தவமியற்றும்
    ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம்
    தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப்
    படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127)….18-10-2010

    பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச
    வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை
    நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர்
    பார்க்க மறப்பான் பரம்….(or)
    தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128)….18-10-2010

    சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால்
    அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் -உக்கிரமாய்
    பொங்கும் புனல்கரையைப் பேர்த்தலாய் ஆசையை
    அங்கனுப்பக் கொள்வான் அழிவு….(129)….19-10-2010

    புத்தி புகுந்தவள் பத்தினியே ஆனாலும்
    சித்த சபலத்தில் சேர்த்தவளை -அத்தனுன்மேல்
    இச்சையுறச் செய்வேன் இழுத்தணைக்கச் செல்லுமவள்
    அச்சமட நாணம் பயிர்ப்பு….(130)….19-10-2010

    காமுகரே, குற்றத்தால் காலில் விழுந்தபின்னும்
    தீமுகம் காட்டிய தேவதையார் -பூமுக
    வாளியால் தேகத்தை வாட்டித் தளிர்படுக்கை
    நாளுமவள் நாடவைப்பேன் நான்….(131)….19-10-2010

    வச்சிரம் கண்கள் வளரட்டும் ஓய்வெடுத்து
    இச்சரப் பூக்களை எய்திட -அச்சுறுத்தும்
    உன்னெதிரிக் கூட்டம் உதடு துடித்துறுமும்
    பெண்ணெதிர்க்க ஓடும் பயந்து….(132)….19-10-2010

    பூவென்(று) அலட்சியமாய்ப் பாராய், எனதுகணைப்
    பூவொன்றால் அப்பினாக பாணிக்கே -நோவென்ற
    உள்ளக் குலைவை உதிர்ப்பேன் வசந்தனுடன்
    சொல்லித் தெரிவதில்லை சூது….(133)….19-10-2010

    மடித்து தொடையில் மிடுக்காய்ப் பதித்த
    அடித்தா மரையை அகற்றி – வெடுக்கென
    ஆசன பீடத்தை அங்கீ கரித்தூன்றி
    பேசினான் மாறனைப் பார்த்து….(134)….19-10-2010

    உச்சரித்தக் கீர்த்திகள் நிச்சயமே நண்பனே
    அச்சுறுத்தல் நீங்கி அகமகிழ்ந்தேன் -வச்சிரத்தை
    ஒத்தவனே, உன்படைதான் சித்தமகா யோகியையும்
    தத்தளிக்க வைத்திடும் தைத்து….(135)….19-10-2010

    பூமியை சேடன் பொறுத்தல் திறன்கண்டே
    நேமியன் நாடினான் நீள்துயில் -பூமய
    வில்லாளி நண்பா விறலில் எனையொத்த
    வல்லான் உனக்கோர் வழக்கு….(OR)
    வல்லானுன் வாளிக்கு வாய்ப்பு….(136)….19-10-2010

    காளையார் மீது கணைவிட்(டு) அவர்தவச்
    சோலையை சாய்ப்பதாய் சொன்னதற்கு -வேளைபார்
    வந்தது மன்மதா நொந்திருக்கும் எங்களின்
    அந்தரங்க ஆசி அதற்கு….(137)….20-10-2010

    ஆவலாய் தேவர்கள் அவ்வீசன் சேய்சேனைக்
    காவலாய் வாய்த்திடக் காத்துள்ளார் -ஏவுவாய்
    ஓரம்பால் வேதங்கள் ஆரம்பம் ஆகிடும்
    வேரின்பால் ஆசை விதைத்து….(138)….20-10-2010

    காரியன் நான்முகன் காரணன் ஈசனின்
    வீரியம் தாங்கும் வலுவுடையாள் -கூறினன்
    பார்வதி என்றே புலனடக்கம் பெற்றவளால்
    பார்அவதி உந்தன் பணிக்கு….(139)….20-10-2010

    வெற்பரசன் தந்தை விடுத்ததோர் உத்திரவால்
    சொற்ப சிசுருஷை செய்கின்றாள் -சிற்பமாய்
    உச்சி சிகரத்தில் உள்ளாழ்ந்த ஈசர்க்கு
    எச்சரிக்கை அப்ஸர ஏவு….(140)….20-10-2010

    முப்புறம்மண் சூழ்ந்தும் முளைக்க விதையதற்கு
    அப்புவின் தேவை அவசியம்போல் -ஒப்பறியா
    பார்வதியின் தோற்றப் பொலிவுதவ முற்றுமென்றால்
    நேருவதற்(கு) ஆரம்பம் நீ….(141)….21-10-2010

    சிந்தையில் தோன்றியும் செய்ய முடியாத
    அந்தவோர் காரியத்தை ஆக்குபவன் -விந்தையாம்
    அச்சிவன் மீதுமலர் அம்பெய்தி கீர்த்தியின்
    உச்சிக்குப் போவாய் உயர்ந்து….(142)….21-10-2010

    கொல்வதில்லை ஆனாலும் வில்வதையால் ஆனந்தம்
    கொள்வதனால் காமனுனைக் கூப்பிடுவர் -நல்விதமாய்
    யாசிக்கும் எங்களுக்காய் யோசிக் காதுசெய்வாய்
    பூசிக்கும் பார்மூன்றும் பார்….(143)….21-10-2010

    நாடாது போயினும் நண்பன் வசந்தனுன்
    னோடேதான் நிற்பனென நம்புகிறேன் -ஆடாத
    மொட்டனைய அக்கினியை மூண்டு வளர்த்திட
    கட்டளைக்காய் காக்குமோ காற்று….(144)….22-10-2010

    அனங்கன் அதைக்கேட்(டு) இணங்கி சுரர்கள்
    இனங்கோனின் ஆணையை ஏற்று -வணங்க
    அயிரா வதமடக்கும் ஆஜானு கையை
    தயவோடு வைத்தான் தலை….(145)….23-10-2010

    பயந்த ரதிவசந்தன் பின்தொடர காமன்
    உயர்ந்த இமயம் அமைந்த -நயனனுதல்
    ஆண்டவன் ஆசிரமம் மாண்டாலும் வெற்றியை
    வேண்டியவன் சென்றான் விரைந்து….(146)….23-10-2010

    சிவத்தோடு சேர்ந்தங்கு சித்தம் ஒருமித்த
    தவத்தோர் தரத்தை தகர்க்க -அவித்தைக்(கு)
    இசைந்த களத்தை இயற்றுவோன் ஆனான்
    வசந்த ருதுவாய் வனத்து….(147)….23-10-2010

    மாற்றான் மனைவிரும்பும் மூடனால் பத்தினி
    ஆற்றாமை கொள்ளும் அவலமாய் -மாற்றத்தால்
    விண்முகம் பானு வடக்கேக தென்திசை
    தன்முகம் கொண்டாள் துயர்வு….(148)….23-10-2010

    தளிர்பெண் சிலம்புத் திருவடி பட்டு
    துளிர்க்கும் அசோகமரம் திடுமென்(று) -அளித்த
    வசந்தத்தால் தன்னியல்பை விட்டு மலர்ந்து
    இசைந்ததாம் பூக்கள் இறைத்து….(149)….24-10-2010

    கொய்தமாம் பூவால் கணைக்கு சிறகமைத்து
    செய்திடச்சில் வண்டுகள் சென்றதை -மொய்த்ததைப்
    பார்க்கையில் மன்மதன் பேரையப் பாணத்தில்
    சேர்க்க அமர்ந்ததாய் சாக்கு….(150)….24-10-2010

    கனகமாய்க் கொன்றை குவிந்தும் ரசிகர்
    மணமற்ற தாலே மறுப்பர் -குணமுற்றும்
    கொண்டவனை நான்முகன் கொள்வதில்லை தன்படைப்பில்
    கண்டனம்போல் காளிதாசன் கூற்று….(151)….24-10-2010

    வனமென்ற நங்கை வசந்தனுடன் சேர்ந்த
    கணத்தில் பலாசக் கிளையில் -மினுமினுத்த
    கூன்பிறை மொட்டுக்கள் கீறும் நகமாக
    காண்பது காளிதாசன் கண்….(152)….24-10-2010

    மஞ்சாடி பூக்களவள் செஞ்சாந்து, சுற்றிவரும்
    அஞ்சாத வண்டுகள் ஆங்கேபொட்(டு) -அஞ்சனம்
    மாந்தளிர் வாயதரம் மேவிய செந்நிறத்தால்
    காய்ந்த மதுஸ்ரீ கதிர்….(153)….24-10-2010

    பருவருது கண்டு முரளமர பூக்கள்
    விரவுமது கண்ணிலே வீழ்ந்தும்-திரளும்
    இலையுதிர் காற்றுக் கெதிராக ஓடும்
    கலைமான்கள் கொள்ளும் களிப்பு….(154)….25-10-2010

    தீந்தமிழ்க்(கு) ஈடாக ஆண்குயில் கூவுதல்
    மாந்தளிர் உண்டதால் மட்டுமன்று -தான்திமிர்
    பூரிப்பும் கர்வமும் பெற்றவளை மாற்றிட
    கோரிக்கை காமன் குரல்….(155)….25-10-2010

    குளிர்பனி சென்றதால் கிம்புருடப் பெண்கள்
    தளிரிதழ் தூயவெண் தேகம் -ஒளிர
    நுதற்பொட்டில் கன்னக் கதுப்பு வரியில்
    வெதுவெதுப்பாய் வெய்யிலின் வேர்வு….(156)….26-10-2010

    அகால வசந்தத்தால் அவ்வனம் உற்ற
    தகாத வனப்பால் திகைத்து -எகாலமும்
    உண்மையில் வாழ்வோர் உறுதி குலைந்திடும்
    தன்மையை மாற்றத் தவிப்பு….(157)….26-10-2010

    நாணேற் றியதனுசு நட்புரதி சேர்க்கையில்
    தானேற்ற காரியத்தைத் தீர்த்திட -கானேகி
    நாடிட மன்மதன் ஜோடிகள் காதலாய்க்
    கூடினர் இன்பம் கொழித்து….(158)….26-10-2010

    ஆண்வண்டு காதலியோ(டு) அண்டா மலரமர்ந்து
    தேனுண்டு சொக்கிட தேடிவந்த -மானொன்று
    தீண்டியதால் கண்மூடி தாமதிக்கும் பெண்மானை
    சீண்டியதாம் கொம்பால் சொரிந்து….(159)….26-10-2010

    துதிக்கையால் தாமரைத் தேன்கலந்த நீரை
    மதக்களிறுக்(கு) ஈந்து மடப்பிடி -குதிக்குமாம்
    சாதகமும் தானுண்ட செங்கமலப் பூங்குருத்தை
    பாதியாக்கி பத்தினிக்கு பங்கு….(160)….26-10-2010

    காட்டுமலர் கள்ளுண்டு கண்சுழல கிம்புருட
    வீட்டுமனை பாடுகையில் வேர்த்ததனால் -தீட்டிய
    பூச்சழிய கேள்வனவன் பாட்டுக்(கு) இடையிடையே
    கூர்ச்செறிந்து முத்தமிட்டான் காத்து….(161)….26-10-2010

    கொத்துமலர் கொங்கை, கொடியிடை, கொங்குதளிர்
    முத்தமிடும் வாயிதழ் மங்கையவள் -சுத்தும்
    கரமாம் கிளையால் மரக்கா தலர்க்கு
    அறமாய் அணைப்பு அளிப்பு….(162)….26-10-2010

    அங்குலவும் அப்சர சங்கீதம் கேட்டாலும்
    சங்கரர் யோகத்தை சார்ந்திருந்தார் -தங்களது
    தாவும் மனமதை தடுத்தாண்டு கொன்றவர்மேல்
    ஏவும் கணைகள்தான் ஏது….(163)….26-10-2010

    கொடிமனை வாசலில் கோலூன்றி நிற்கும்
    விடையன் விரலைவாய் வைத்து -அடையாள
    முத்திரை காட்டி முனிவோரை எச்சரித்தான்
    நித்திரையை நீக்கும் நினைப்பு….(164)….26-10-2010

    அசையா மரங்கள் அசலனமாய் வண்டு
    பசையிட்ட வாயாய் பறவை -விசையுறா
    ஊர்வனவாய், அவ்வனம் ஏறவனின் ஆணையால்
    ஓர்வரைவாய் நின்றது ஓய்ந்து….(165)….26-10-2010

    சுக்கிரன் வாழ்கின்ற திக்கினில் செல்வதால்
    விக்கினம் என்று விலக்கலாய் -முக்கணன்
    புன்னை வனத்துள் புகுந்தனன் நந்தியின்
    கண்ணை அனங்கன் கடந்து….(OR)
    கண்ணுக்(கு) அனங்கன் குனிந்து….(166)….26-10-2010

    காலனைக் காணாது காமன் வரிப்புலித்
    தோலனை தேவதாரு தண்டடியில் -கோலமாய்
    வென்று புலனடக்கி வீற்றமுக் கண்ணனை
    சென்று நெருங்கினன் சாவு….(167)….27-10-2010

    வேராய் விறைத்து விருட்சமாய் நீண்டுயர்ந்து
    நேராய் அமர்ந்தார் நமச்சிவாயம் -வீரா
    சனத்தில், விழுதாய் சிவந்தயிரு கைகள்
    பிணைக்கமடி அல்லிப் பிறப்பு….(168)….27-10-2010

    நாகத்தால் கட்டிய நீள்முடியும், நஞ்சுண்ட
    தாகத்தால் காரொத்த தொண்டையால் (OR)
    தாகத்தால் கண்டத்து தேஜசது -தேகமான்
    தோலைக் கருப்பாக்க தோன்றினன் ருத்திராக்ஷ
    மாலையை காதில் முடிந்து….(169)….27-10-2010

    நெறியா புருவம் நகரா இமைகள்
    புரியாதோர் அஞ்சிடும் பார்வை -சரிவாக
    தேசொளி மூவிழியால் நாசி நுனியினை
    ஈசனார் நோக்கு இருப்பு….(170)….27-10-2010

    மின்னலிடி இல்லாத மேகமாய், பொங்கலை
    இன்னதென்(று) அறியாத தண்ணீராய் -விண்ணென
    காற்றற்று நிற்கும் குத்து விளக்காயுள்
    காற்றடக்கி காட்சி கொடுப்பு….(171)….27-10-2010

    முண்டக நூலினை மிஞ்சிடும் மென்மையும்
    கண்டுமதி மங்கும் கிளரொளியும் -மண்டையின்
    உச்சிக்கண் தோன்றும் ஒளிக்குவமை தந்தமர்ந்தான்
    சச்சிதா னந்த சிவன்….(172)….27-10-2010

    ஒன்பது வாயிற்கண் ஓடாது யோகத்தால்
    தன்பதுமை நெஞ்சை தன்னகத்துக் -கண்புதைத்து
    ஆன்றோர் உணர்ந்த அழிவற்ற ஆன்மனில்
    தாந்தோன்றி தன்னுள் திளைப்பு….(173)….27-10-2010

    எண்ணத்தால் கூட எதிர்க்க இயலாமுக்
    கண்ணத்தன் கோலத்தால் காமனஞ்சி -என்னத்தை
    செய்வதென்று சோர்வுற, சொல்லாமல் வில்லம்பு
    மெய்வசத்தை நீங்கி மணல்….(174)….27-10-2010

    உற்சாகம் குன்றி உருக்குலைந்த காமனுக்கு
    நற்சேதி கூறலாய் நேர்ந்தது -தற்செயலாய்
    பொற்சிலை பார்வதி பாங்கியிரு பெண்தொடர
    சிற்சபையில் வைத்தாள் சிலம்பு….(175)….28-10-2010

    ரத்தினப் பூஅசோகம் முத்தாக சிந்துவாரம்
    பத்தரை மாத்துப்பொன் கர்ணிகாரம் -அத்தனை
    போதும் அணியிருந்த போதும் வசந்தத்தின்
    போதணிந்தாள் பார்வதிஅப் போது….(OR)
    போதணிதல் பார்வதியின் போது….(176)….28-10-2010

    மலைப்பூங் கொத்தால் மளுக்கென்று சாயும்
    தளிர்க்கொடி போலத் துவண்ட -மலைப்பெண்
    செங்கதிர் வண்ணத்தில் சேலையில் போந்துகனக்
    கொங்கையாள் ஆனாள் கொடி….(177)….28-10-2010

    மோகமவன் நாணுக்கு மாற்றாய் மகிழம்பூ
    நாகமென மாலையை நுண்ணிடையில் -மேகலையாய்
    பத்திரமாய் வைத்தனன், பார்வதி சாயுமதை
    தத்தளித்தால் தாங்கித் தடுத்து….(178)….28-10-2010

    வாசிவாசி என்றென்றும் நாசி சுவாசிக்கும்
    வாசம் முகர்ந்திட வண்டுவந்து -மூச
    இதழ்கனியைச் சுற்றி, இளங்கமல மொட்டால்
    அதைவிரட்டும் பார்வதி அங்கு….(179)….28-10-2010

    மாசிலா அங்கங்கள் மன்மதன் பத்தினியே
    கூசுவாள் வெட்கி குனிந்துதலை -ஈசன்
    தவதனுசை வெல்ல இவள்மனசே வாளி
    சவமணலில் காமன் செருப்பு….(180)….28-10-2010

    பதியாகப் போகின்ற பாதியின் வாசல்
    சதியாய்ப் பிரிந்தவள் சேர்ந்து -மிதித்தாள் (OR) விதியால்
    உவப்புடன் தன்னுள் சிவபிரான் ஆன்ம
    தவப்பலன் கண்ட தினம்….(182)….29-10-2010

    வாசி அடக்கிய ஈசனார் பாரத்தால்
    காசினியை ஆயிரம் கைத்தலையால் -தூசென
    தாங்கிடும் சேடன் தவித்திட அன்புசிவம்
    ஓங்கு தவம்கலைத்தார் ஓம்….(183)….29-10-2010

    பணிவிடை செய்துவந்த பார்வதியைப் பற்றி
    பனிவிடை ஈசரிடம் போற்ற -கனிவாய்
    புருவத்தைத் தூக்க புரிந்துகொண்ட நந்தி
    வரவேற்றான் கன்றாய் வளைந்து….(OR)
    வரவேற்றான் வாசல் விரித்து….(184)….29-10-2010

    ஆர்வமுடன் அங்குற்ற பார்வதியின் தோழிகள்
    தேர்வுசெய்த பூக்கள் தொகுதியை -நீர்விளங்கும்
    வார்சடையோன் பாதத்தில் வைத்து வணங்கியபின்
    கார்சிதைவாய் தூவிக் களிப்பு….(185)….29-10-2010

    கூந்தலில் சூடிய கோங்குமலர் காதணி
    மாந்தளிர் மண்ணில் மயங்கிவிழ -பாந்தமாய்
    உச்சந் தலைதரையில் உற்றிட பார்வதி
    அச்சிவன் பாதம் அடைவு (OR) அணைப்பு….(186)….29-10-2010

    உன்னையன்றி வேறோர் பெண்ணை மனைவியாய்
    எண்ணாத கேள்வனை ஏற்றிடுவாய் -திண்ணமாய்
    மெய்யதைச் சொன்னான் மகாதேவன், மூத்தோர்கள்
    பொய்யுரைப் பாரோ புகல்….(187)….30-10-2010

    மூளும்தீ வாயில் முழுகப்போம் விட்டிலாய்
    வேளவன் பார்வதி வந்ததால் -தோளின்வில்
    நாணை வருடி நமச்சிவாயர் நெஞ்சென்ற
    தூணை இலக்காய்த் துணிபு….(188)….30-10-2010

    ஆகாச கங்கையில் ஆதவன் கைகளால்
    வேகா(து) உலர்த்திய வாரிசத்தின் -யோகீசர்
    சூடும் மணிச்சரத்தை செய்யகை பார்வதிதென்
    நாடுடையோன் முன்வைத்து நிற்பு….(189)….30-10-2010

    நிச்சயமாய் அன்பர் நிவேதனம் ஏற்றிடும்
    அச்சிவன் மாலையை ஆகம்கொள் -அச்சமயம்
    சம்மோ ஹனஅம்பை தம்வா கனவில்லுக்(கு)
    அம்மால் அனங்கன் அளிப்பு….(190)….30-10-2010

    சந்திரன் தோன்றிட சற்றே கலக்கமுற்று
    வெண்திரை கொந்தளிக்கும் வாரிதியாய் -தன்திரம்
    கொஞ்சம் கலைய ,கனியிதழ் பார்வதியை
    நஞ்சுண்டோன் மூவிழியால் நோக்கு….(191)….30-10-2010

    கேசரங்கள் கொண்ட கதம்பமொத்த அங்கங்கள்
    ஆசையுடன் கூர்ச்செரிந்து ஆர்ப்பரிக்க -நேசமுடன்
    ஓர விழியால், ஒருபக்கம் சாய்ந்தவண்ணம்
    பூரணனைப் பார்வதி பார்ப்பு….(192)….30-10-2010

    புலனடக்கம் செய்வதில் பேர்போன ஈசன்
    நிலநடுக்க மாய்தன் நிலைக்குள் -தலையெடுத்த
    போக்கைத் தகர்த்தெறிந்து தாக்கம் தனையறிய
    நோக்கினார் நாற்திசையும் நன்கு….(193)….31-10-2010

    வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
    காமன் வளைத்துவில்லை கண்வரை -ஆமளவு
    நான்றிட தோளிரண்டும் நாணிழுத்துக் கால்வலதை
    ஊன்றிடப் பார்த்தனன் உற்று….(or)

    வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
    காமன் வளைத்துவில்லை, கண்வரை -ஆமளவு
    நாணிழுத்துக் கால்வலதை ஊனிட தாருக
    கானழித்தோன் கண்ணில் கனல்….(194)….31-10-2010

    அகத்துற்ற உக்கிரம் அச்சமுறும் வண்ணம்
    முகத்தில் புருவ முறிப்பாய் -விதிர்த்திட
    நெற்றி விழிதன்னில் நீண்ட ஒளிபிறப்(பு)
    உற்று வளர்ந்ததாம் ஊழ் (OR) ஓம்….(195)….31-10-2010

    அய்யனே கோபம் அடக்குங்கள் என்றமரர்
    குய்யோ முறையோ குரலொலி -உய்யும்முன்
    சீறும் சிவன்கண் சுடரொளி சூழ்ந்திட
    மாறன் பிடிசாம்பல் மண்….(196)….31-10-2010

    என்ன நடந்ததோ என்றறியா விட்டாலும்
    இன்னலென்றே நெஞ்சு இறைந்திட -தன்னவன்
    சாவை அறியா சதிரதி மூர்ச்சையால்
    பூவெனச் சாய்ந்தாள் புறத்து (OR) புவி….(197)….31-10-2010

    இடிவிழ இற்று ஒடியும் மரமாய்
    இடபர் தவத்திற்க்(கு) இடராய் -விடிந்த
    அனங்கனை சாய்த்து அணங்கினை நீங்கி
    கணங்களுடன் சென்றார் கலைந்து….(198)….31-10-2010

    தந்தை விருப்பமும் தான்சிவன் மேல்கொண்ட
    விந்தையாம் காதலும் வீணாக -நொந்தவள்
    துக்கிரித் தோழியர்முன் தோற்றதால் பார்வதி
    வெக்கமுடன் ஏகினாள் வீடு….(199)….31-10-2010

    சர்கம் மூன்று சுபம்
    ——————————————————————————————–

    சர்கம் நான்கு
    ——————–

    ஆங்கு மயக்கத்தில் ஆழ்ந்த அமைதிக்குத்
    தாங்கொணாத் துன்பம் தெளித்திட -தீங்காம்
    விதியெழுப்பிப் ‘பெண்ணே விதவைநீ’ என்று
    ரதியறியச் செய்வு ரசித்து….(200)….1-11-2010

    மயக்கம் தெளிந்து மருண்ட விழியால்
    தயக்கமாய்க் காமனைத் தேடி -இயற்கையை
    எய்து வசந்தமாய் செய்தோன் இறந்தியற்கை
    எய்தியது காணாள் எழுந்து….(201)….1-11-2010

    சாதலால் போனாயா ? சாதா ரணமாயா ?
    காதலா ஆனதேன் காணாமல் -நாதனைத்
    தேம்பி அழுதபடித் தேடியவள் கண்டனள்
    சாம்பலுரு விலோர் ஜடம்….(202)….2-11-2010

    அழுது தரையில் விழுந்து புரண்டு
    புழுதி உடலில் படிய -விழுதாய்
    குவித்தயிருள் கூந்தல் கலைந்திடக் கானும்
    தவித்ததாம் தானும் துணைக்கு….(203)….2-11-2010

    அழகுக்(கு) உவமையாம் அன்பரும் மேனி
    கழுகுக்கும் ஊணாகா கோலப் -புழுதியைக்
    கண்டும்நான் துண்டாகா பிண்டமாய்ப் போனேனே
    பெண்டிர்மனம் பாறை போல்….(204)….2-11-2010

    அணையுற்ற வெள்ளம் அதுவுடைய தன்னில்
    பிணையுற்ற பூவைப் பிரியும் -எனைவிட்டு
    எங்குநீர் போனீர் எதனால் உடைந்தின்று
    முங்கியது காதல் மதகு….(205)….2-11-2010

    என்மனம் கோணா எதையும்நீ செய்ததில்லை
    நின்மனப் போக்கில் நடந்தவள்நான் -மன்மதா
    வ்யாஜ்ஜியம் அற்றுரதி வாடிப் புலம்பநீ
    பூஜ்ஜியம் ஆனதெங்கு போய்….(206)….2-11-2010

    முன்னை எனையழைக்க மாற்றுப் பெயர்கூற
    கண்ணை மகரந்தம் கூசிட -உன்னை
    மேகலையால் கட்டிமலர் முண்டகத்தால் மொத்தியது
    ஆகலையால் அற்றதோ அன்பு….(207)….2-11-2010

    ரதிநீ மனதில் ரமிக்கிறாய் என்று
    பதிநீ புகன்றது பொய்யே -அதுவே
    நிஜமானால் நிற்பேனா நெற்குதிராய் அந்தோ
    எஜமான்தன் அஸ்திக்(கு) எதிர்….(208)….2-11-2010

    மறுவுலகு ஏகிடும் மன்மதா உந்தன்
    அருகிருக்க நானும் அடைவேன் -வெறுவுலகு
    ஆதலால் பூதலம் ஆனதுன் சாதலால்
    காதலுன் கைரேகைக் கோடு….(209)….2-11-2010

    போதிரவு போர்த்திடும் போதிலே காதலியை
    மோதிடும் மேக முழக்கத்தால் -காதலன்
    காத்துக் கிடக்குமிடம் கூட்டிக் கலங்காது
    சேர்த்துவிட யாரினி சொல்….(210)….2-11-2010

    கெண்டை விழிசிவந்து வண்டாய் சுழன்றிட
    விண்டுரைக்கும் பேச்சில் விரகமுற -பெண்டிர்க்கு
    கள்ளால் வரும்மதம் காமன்நீ இன்றி
    கொள்ளாது போகும் களிப்பு….(OR)
    பொல்லா குடிகாரன் பேச்சு….(211)….2-11-2010

    அங்கம் எரித்ததனால் ஆனாய் சரித்திரமாய்
    தங்கும் மதிவிண் தரித்திரனாய்த் -தொங்குகிறான்
    துக்கம் அனுஷ்டித்த தேய்பிறைதன் தன்மையை
    தக்கவைத்துக் கொண்டான் தவித்து….(OR)
    வெக்கமுடன் விட்டான் வளர்ந்து….(212)….2-11-2010

    இச்சையுடன் உண்ண இனிதாக ஆண்குயிலை
    உச்ச சுரத்தில் உருகவைக்கும் -பச்சை
    சிவப்புநிற மாம்பூவை சாகஸ அம்பாய்
    உவப்பரினி யாரிங்(கு) உரை….(213)….2-11-2010

    அனங்கனுன்வில் நாணில் அமர்ந்திடும் வண்டு
    இனங்களின் ரீங்காரம் இன்று -சிணுங்கலாய்
    மாறித், துயரத்தில் ஊறிய என்னையும்
    மீறிப் புலம்புதென் முன்….(214)….3-11-2010

    பயிலா மலேயே ஒயிலாகக் கூவும்
    குயிலாளைக் காதல் கலவி -செயலாளாய்
    பட்டமளிப் பாய்நீ பழையசுகு மாறனாய்
    தொட்டணைத்துத் தீர்ப்பாய் துயர்….(215)….3-11-2010

    போலியாக வெகுண்டயென் காலைநீ கவ்வியது
    ஆலிங்க னித்ததுபின் ஆவிநடுங்க -காளிங்க
    நர்த்தனமாய் கண்ணாநீ நாகமென்மேல் ஆடியது
    அர்த்தமற்று போச்சே அனைத்து….(216)….3-11-2010ம்

    வசந்தருது தந்த உசந்தமலர் கொண்டு
    அசந்திடச் செய்த அழகு -கசந்ததே
    பெண்ணாளும் வித்தையில் பேராண்மை கொண்டவனே
    கண்ணாளா நீயின்றி காண்….(217)….3-11-2010

    பஞ்சான கைகளால் பாதத்தில் நீயெனக்கு
    விண்சார்ந்த தேவர்க்காய் விட்டகன்று -செஞ்சாந்து
    இட்டபோது சென்றாயே ஈவிரக்கம் அற்றோர்க்காய்
    தொட்டகுறை தீரவந்து தீட்டு….(218)….6-11-2010

    ஊர்வசிகள் உன்னழகால் உன்மத்தம் கொண்டுன்னை
    பார்வசியம் செய்வர் பதுங்கியிரு -பார்மிசையில்
    அக்கினிக்(கு) ஆட்பட்(டு) அனங்கனுன் தோள்சாய
    புக்கிடுவேன் சொர்க புரிக்கு….(219)….6-11-2010

    பாரிந்த பாவிரதி பஞ்சணையான் போனபின்பும்
    பாரிருந்தாள் என்ற பரிகாசம் -வேரூன்ற
    கூசுதே அங்கங்கள், கூடநான் வந்திடுவேன்
    தீசிதை தானிதற்கு தீர்வு….(220)….9-11-2010

    அங்கம் இருக்குமே ஆவி பிரிந்தாலும்
    இங்கிரெண்டும் இல்லையே, இவ்வுலகில் -எங்கனம்
    செய்வேன் இறுதியணி செத்த உடலுக்கு
    உய்வேன் உடன்கட்டை உற்று….(221)….9-11-2010

    நாணிழந்த வில்மடியில் நாணிக் கிடந்திருக்க
    கூனடைந்த அம்பின் குறைநிமிர்த்தி -நீநினது
    நண்பன் வசந்தனுடன் வம்படிக்கும் போதென்னை
    என்புறுகப் பார்ப்பாய் எழு….(222)….9-11-2010

    மனதுக்(கு) இனியோன், மலர்வில்லை செய்து
    நினது கரமளிக்கும் நண்பன் -சினந்த
    விழியால் எரிந்து, வசந்தனும் சாம்பல்
    அழிவை அடைந்தானோ அன்று….(OR) ஆள்….(223)….9-11-2010

    கொஞ்சு மொழிரதியாள் கேவல் புலம்பலது
    நஞ்சு கணையை நிகர்த்தெழுந்து -நெஞ்சை
    துளைக்க வசந்தன் துயருற்றோள் முன்னே
    முளைத்தனன் ஆறுதல் மொண்டு….(224)….9-11-2010

    மதகுடைந்த வெள்ளமாய் மங்கையவள் நெஞ்சக்
    கதவுடைந்து கொட்டியது கண்ணீர் -இதுவசந்தன்
    பக்கம் இருக்கையில் உக்கிரம் ஆனது
    துக்கதிற்(கு) ஏதடைக்கும் தாழ்….(225)….10-11-2010

    சுராரிழுத்துச் சென்ற சகாபார் வசந்தா
    புறாகழுத்துச் சாம்பல் பொடியாய் -தராதலத்தில்
    சிந்திக் கிடப்பதை சீறும் வளியெடுத்து
    எண்திசையில் அஸ்தி இறைப்பு….(226)….10-11-2010

    ஆவலுடன் உன்னருமை சேவகன் காத்துள்ளான்
    தாவசந்தன் காண தரிசனம் -பூவுலகில்
    அன்புக்(கு) அணங்கினும் ஆதரவு ஆருயிர்
    நண்பன்தான் நன்கறிவாய் நீ….(227)….10-11-2010

    தாமரைநூல் நாணிழுத்து பூமருவும் அம்பேற்றி
    நீமரமாய் வில்லேந்தி நிற்கையில் -சாமரமாய்
    வீசும் வசந்தனன்றோ வெற்றிக்(கு) உறுதுணை
    நேசன் அவன்பொருட்டு நில்….(OR)
    நீசாம்பல் விட்டு நிமிர்….(228)….10-11-2010

    வாயு அணைத்த விளக்கிருந்த தீபத்தின்
    தேயுவாய் தோழன் தொலைந்தனனே -காயும்
    திரியாய்த் திகழ்ந்து தகிக்கின்ற என்னை
    பரிவாய் வசந்தனே பார்….(229)….10-11-2010

    ஆதிவிதி அன்று அனங்கனைக் கொன்றது
    பாதிதான் சோதரா மீதிநான் -மோதிடும்
    ஆனை முறித்து அடிமரமே சாயஅது
    பூணும் கொடிபடரும் புல்….(OR)
    பூணும் கொடிக்கேது போக்கு….(230)….10-11-2010

    உடனே எனக்கு உறவினர்கள் செய்யும்
    கடனாமிக் காரியம்கை கூட -சுடலை
    நெருப்பை அளித்து பொறுப்பாய் கணவன்
    இருப்பில் இவளை இடு….(231)….10-11-2010

    விண்ணில் நிலவு விரையுமே சந்திரன்பின்
    மின்னல் மறையுமே மேகத்துடன் -எண்ணும்
    அறிவற்ற பெண்பால்தன் ஆண்பாலை நாட
    நெறியற்று நின்றேனே நான்….(232)….11-11-2010

    சதாசிவன் கண்ணால் உதாசீனம் ஆன
    கதாபுருஷன் சாம்பல் குளித்து -இதோநான்
    உதாரமாய்த் தீயில் நிதானமாய் சாய்வேன்
    அதானென் தளிர்பாய் அணைப்பு….(233)….11-11-2010

    நெஞ்சனும் நானும் நோகா(து) உறங்கிட
    பஞ்செனப் பூக்களால் பாய்விரித்து -மஞ்சத்தை
    வண்ணமாய் செய்த வசந்தனே இன்றெனக்கு
    திண்ணமாய்த் தீப்படுக்கை தா….(234)….11-11-2010

    நானின்றி ஓர்கணமும் வீணென்பார் வில்லாளி
    நீநன்(கு) அறிந்ததே நாணமேன்(நல்லதுகேள்)-நானின்று
    தீநின்ற போதுடனே தென்றலால் தூர்த்ததனை
    வான்நின்ற வாறு வளர்….(235)….11-11-2010

    வெற்பனைய நட்பே வசந்தா இருவர்க்கும்
    தர்பணமாய் தண்ணீர் தருவதற்கு -முற்படுவாய்
    மாறனதை ஏந்தி மறுவுலகில் நான்வந்து
    சேரவுண்பான் பங்கிடாது சேர்ந்து….(236)….11-11-2010

    காமரு மாம்பூவின் கொத்தினைக் கட்டாயம்
    காமனின் ஆன்மா களிப்புற -ஈமச்
    சடங்கில் மறவாது சேர்ப்பாய் வசந்தா
    மடந்தை ரதியாள் மனு….(237)….11-11-2010

    காய்ந்த குளத்துமீன் கண்ணீர் துடைத்தது
    மாய்ந்திடாது காக்கும் முதல்மழையாய் -ஓய்ந்துரதி
    காயம் உகுத்திடக் காத்திருந்த போதுஆ
    காயம் பொழிந்ததோர் கூற்று….(238)….11-11-2010

    விதவையென்(று) எண்ணி சிதையில் புகாதே
    மதனன் மலர்ந்தெழுவான் மீண்டும் -இதுவுறுதி
    அன்பே சிவத்தால் அவனழிந்த காரணத்தை
    உன்பால் உரைப்பேன்கேள் உற்று….(OR)
    நின்பால் உரைத்திடுவேன் நான்….(239)….12-10-2010

    நின்படுக்கை நாயகன் தன்துடுக்கால் நான்முகன்
    கண்துடைப்பாய் அம்பெய்து கோதிழைக்க -தன்படைப்பில்
    தாபமுற்ற கோபத்தால், தீக்கண்ணால் சாம்பலாக
    சாபமுற்று ஆனான் சகி (0R) சவம்….(240)….12-10-2010

    தருமவேள் வேண்ட திசைமுகன் பெய்தான்
    வரமழையாய் சாப விமோசனம் (OR) மாற்று வழியை-பருவத
    புத்திரி ஈசனுக்கு பத்தினியாய் ஆகையில்
    புத்துயிராய் காமன் பிறப்பு….(241)….12-10-2010

    கோடையில் அம்மணத்தை கொண்டநதி மாரிவர
    ஜாடையில் மாறும் சமுத்திரமாய் -பாடொழிந்து
    மாறனுடல் கொண்டுன்னை சேரும் வரைசாம்பல்
    நீறிதனைக் காப்பாய் நிதம்….(or)
    நீறுன் மசக்கை நினைப்பு….(242)….13-10-2010

    தேவதையின் வாக்கால் தணிந்து அனுமரண
    தேவைதனை கைவிட்டாள் தேவிரதி -பூவதையோன்
    நண்பன் வசந்தனும் நம்பிஅச ரீரியை
    தென்பளித்தான் தேறுதல் தந்து….(243)….12-10-2010

    சாபம் முடிக்கும் சிவபார் வதிமணமாம்
    தீபவொளிக்(கு) ஏங்கினாள் தேவிரதி -சோபை
    அறவே இழந்து வரவாம் பகலில்
    இரவெதிர் பார்க்குமாம் இந்து….(OR)
    இரவை எதிர்பார்க்கும் இந்து….(244)….12-10-2010

    சர்கம் நான்கு சுபம்
    ————————–
    ——————————————————————————————-

    சர்கம் ஐந்து
    —————–

    தன்முன்னெ காமன் தவிடுபொடி சாம்பலாய்
    கண்மூன்று கொண்டோரால் காட்சியுற -தன்பெண்மை
    தோற்றதாய் பார்வதிக்கு தோன்றமகா தேவனவன்
    தோற்றதால் பார்வதி தூற்றினாள் ஈசனவன்
    போற்றாத அழகை பழித்து….(OR)
    போற்றாத அழகை பழிப்பு….(245)….12-10-2010
    அன்புச்சிவன் பாலில் அழகுப் பழம்நழுவி
    பெண்பிறப்பு பேறாய் பயனுற -முன்பெவரும்
    காணாத் தவம்புரிந்து காண்போன் கரம்பிடிக்க
    மேனாள் குமாரி முடிவு….(246)….13-10-2010

    பவச்சுவை நீங்க பெரியோர் புரியும்
    தவச்சுமை தாங்காய் தளிரே -அவத்தையேன்
    தானாய் வருவான் தகப்பன் சுவாமியவன்
    மேனாள் உரைத்தாள் மகட்கு….(247)….13-11-2010

    பலனளிக்க வீட்டில் பலதெய்வம் கொண்டும்
    தலையெழுத்தாய் ஏற்கும் தவமேன் -மலைமகளே
    வாகை மலர்தாங்கும் வண்டதன் மேலமர்ந்தால்
    தோகை மயிலமர்ந்தால் தத்து….(248)….13-11-2010

    பள்ளத்தில் பாய்ந்திடும் வெள்ளமும், நிச்சயித்த
    உள்ளத்(து) உறுதியும் ஓயுமோ -மெள்ளத்தன்
    பெண்மனதை மாற்ற பெருமுயற்சி செய்தஅன்னை
    தன்மனதில் ஏற்றனள் தோற்பு….(OR)
    பின்முடிவில் தோற்றாள் பணிந்து….(249)….14-11-2020

    விசுவாச தோழியின் வாயிலாய், அந்த
    பசுவீசர் பாகம் பெறக்கான் -மிசைவாசம்
    ஆண்டுபல ஆயினும் ஆரா தவம்செய்ய
    வேண்டினள் தந்தையின் வாழ்த்து….(250)….14-11-2010

    குன்றெனக் கொள்கையில் நின்றிடும் பார்வதியை
    வென்றிட வெற்பரசன் வாழ்த்திட -சென்றடைந்தாள்
    பின்னால் அவள்பெயரைப் பூண்ட சிகரத்தை
    வண்ண மயில்சூழ்ந்த வாறு….(251)….14-11-2010

    இட்டிழைத்த சந்தனத்தைப் பட்டழித்து பொன்னாய்கண்
    கொட்டுமணி முத்தைக் களைந்தெறிந்தாள் -கட்டுடலில்
    கோலயெழில் பாரத்தால் நூலிழைகள் நீங்கிய
    சேலை மரவுரி சேர்ப்பு….(252)….14-11-2010

    மூசுசில் வண்டு முளரிக்(கு) அழகென்றால்
    பாசியின் சேர்க்கையும் பேரழகே -தேசுடையாள்
    காரணமாய்க் கூந்தல் களைந்துசடை கொண்டாலும்
    பூரணத்திற்க்(கு) ஏது பழுது….(OR)
    பூரணமாய் நின்றாள் பொலிந்து….(OR)
    பூரணத்தின் பின்னமும் பொற்பு….(253)….14-11-2010

    ஒப்புயர்வாய் ஏற்ற ஒழுக்கத் தவத்திற்காய்
    முப்புரி முஞ்சப்புல் மேகலையை -சொப்பிடை
    வேதனையில் ஆழ்ந்து வலித்துச் சிவந்தாலும்
    சோதனையைக் கொண்டாள் சகித்து….(254)….15-11-2010

    தந்தனத்து சந்தனத்தை வந்தெடுத்து செல்கின்ற
    பந்துவிளை ஆடல், பவழவாய் -மென்னதர
    வண்ணமிடல் விட்டுதர்ப்பை விள்ளுகையில் கீறிய
    சன்ன கரத்தால் ஜபம்….(255)….15-11-2010

    பட்டுப் படுக்கையும் பார்வதியை நோகடிக்கும்
    கட்டுக் குழலுதிர்க்கும் மொட்டுறுத்த -கட்டாந்
    தரைவிரித்துக் கையைத் தலையணையாய்க் கொண்டு
    இறைவணக்கம் பாடுகிறாள் இன்று….(256)….16-11-2010

    மடமானின் கண்ணில் மருட்சியைக், காட்டு
    கொடிமா லதிக்கு குதிப்பை-(OR)
    கொடிமேல் அழகுக் குலுங்கல் -அடமானம்
    வைத்தாள் கொடையாய் விரத இறுதிவரை
    மெய்த்தாள் சரணடைந்த மாது….(257)….16-11-2010

    பின்நாள் பிறந்தவிழிப் பிள்ளையைக் காத்ததுபோல்
    முன்நாள் வளர்ந்த மரங்களுக்கும் -தண்ணீரால்
    கொங்கை நிகர்த்தக் குடமேந்தி ஊட்டினாள்
    அங்கையால் தாயாய் அவள்….(258)….16-11-2010

    மானினப் போட்டியாய் மேனைப்பெண் கண்ணுற்றும்
    தானினிக் கானினத் தோழியென -பேணிட
    நாணிஅம் மான்களவள் நீட்டிய கையிலுற்ற
    தானியத்திற்(கு) அச்சமின்றி தாம்….(259)….16-11-2010

    மூடு பனியிலும் முக்கால தீர்த்தமாடி
    ஆடை மரவுரியில் அக்கினி -மேடை
    வடித்தோமம் செய்தாள், வயதேதும் பாரா
    படித்தோர்கண் உற்றார் பனிப்பு….(260)….16-11-2010

    முந்தை பகைமறந்து மேஷம் புலியோடு
    விந்தையாய் ஆட, விருட்சங்கள் -வந்தவர்க்கு
    வாரிப் பழம்வழங்க ,வானெழு அக்கினியால்
    பூரித்த(து) ஆசிரமப் பொற்பு….(261)….16-11-2010

    வேண்டும் பலன்வராத வேதனையால் பார்வதி
    மீண்டும் தவம்புரிந்தாள் மும்முரமாய் -தூண்டும்
    தளிர்மேனித் தன்மை தனைமறந்து செய்தாள்
    களிறாடை பூண்டோன் குறித்து….(262)….17-11-2010

    தன்தேகம் வாட்டும் தவத்தோர் விரதத்தை
    பந்தாட சோர்வுறும் பார்வதி -முந்தினாள்
    மென்மையும் திண்மையும் பெண்மையாய் வந்ததோ
    பொன்மயத் தாமரை போல்….(263)….17-11-2010

    கோடையில் நாற்புறமும் கூடிய அக்கினி
    மேடையின் மத்தியில் மூரலுடன் -ஆடாது
    அஞ்சா விழிகளை ஆதித்தன் பால்வைத்து
    பஞ்சாக் கினித்தவப் பேறு….(264)….17-11-2010

    சூரியன் சுட்டெரித்தும் சூமந் திரக்காளி
    நேரிசைவாய் சோபையுடன் நின்றனள் -வாரிசமாய்
    மையிட் டதுபோல மங்கை கடைக்கண்ணில்
    கையெழுத் திட்டான் கதிர்….(265)….17-11-2010

    அமுதமதை ஊட்ட அழகுநிலா, மேகம்
    சுமுகமழை ஊணாய் சொரிய -சமதையாய்
    காட்டு மரங்கட்கு போட்டியாய் நின்றனள்
    ஆட்டுவிக்கும் ஈசர்க்காய் அங்கு….(266)….17-11-2010

    தேகான்ம பாவம் தொலைத்தும் தகித்தனள்
    ஆகாயம் மற்றும் அவள்வளர்த்த -தீகாய்வால்
    மாரி முதல்மழையில் மன்னிக் கிடந்தவெப்பம்
    பீறிட்டதாம் கோரி பலன்….(OR)
    பீறிட்டுக் கோரும் பலன்….(267)….17-11-2010

    அசையாள் இமையை, அதன்பின் உதடை
    இசைவாய் தனங்கள் இணைப்பை -விசையாய்
    மடிப்பு வயிற்றை மழைநீர் கடந்து
    குடித்ததாம் உந்திக் கனல்….(268)….18-11-2010

    கொட்டும் மழையில் குளிர்காற்றில் பார்வதி
    வெட்டவெளிப் பாறையில் வீழ்ந்துறங்க -பட்டுடல்
    கொண்ட தவத்திற்கு கங்குலே சாட்சியாய்
    கண்டதாம் மின்னற்கண் கொண்டு….(269)….18-11-2010

    சீதளக் காற்றடித்தும் சில்லென்ற வெள்ளத்தில்
    போதிரவில் நீராடும் பார்வதி -சாதகப்புள்
    கூவி நடுயிரவில் கூப்பிடப் பேடையை
    ஈவிரக்கம் கொள்வாள் இணைத்து….(270)….18-11-2010

    வாசத்தால் வாரிசம், வாயதரம் பங்கயம்
    ஆசில்லா தேகம் அரவிந்தம் -வீசும்
    உறைபனிக் காற்றால் உலர்ந்த குளத்தின்
    குறைதணிக்கக் கொண்டாள் குளிப்பு….(OR)
    உறைபனிக் காற்றால் உலர்ந்த குளத்தை
    நிறைவுசெய்ய தாமரையாய் நிற்பு….(271)….18-11-2010

    முதிர்ந்த தவத்தோர் மரத்தி இருந்து
    உதிர்ந்த சருகுகளை உண்பர் -புதிரிவளோ
    உண்ணா மலையாய் உறுதியுடன் நின்றடைந்தாள்
    பின்நாள் அபர்ணா பெயர்….(272)….18-11-2010

    முளரிக் குருத்தன்ன மென்மையாம் மேனி
    தளர வருத்தித் தவத்தால் -ஒளிர
    முனியினத்தோர் செய்த மகத்துவம் எல்லாம்
    இனியிதற்கு முன்னால் இழிவு….(OR)
    இனியிதற்கு ஈடில்லை இவ்வுலகில் என்று
    முனியினத்தோர் கொண்டார் முடிவு….(273)….18-11-2010

    பலாசதண்டம் ஏந்தி கலைமான்தோல் பூண்டு
    விலாசத்தில் வேதாந்தம் வீச -இலாசமமாய்
    யாரோ ஒருபிரமச் சாரி சடையோடு
    நேராய் குடிலுள் நுழைவு….(274)….18-11-2010

    நோற்ற தபோகுணத்தால் வேற்றுமை காட்டாதோள்
    தோற்றத்தில் கம்பீரம் தோரணையில் -ஏற்றமுமாய்
    வந்தவரை வேண்டி விருந்தோம்பல் செய்தனள்
    அந்தரங்கத் தானென்(று) அறிந்து….(275)….19-11-2010

    விருந்தோபல் ஏற்று வருஞ்சோம்பல் போக்கி
    கருந்தாடி கோதிக் கனைத்து -அருஞ்சொற்கள்
    நேரெதிராய்ப் பார்வதியை நோக்கிப் பகர்ந்தனன்
    நீறுதிரா நெற்றிக்கண் ணன்….(276)….19-11-2010

    புனிதப்புல் தர்ப்பை புரசமரக் குச்சி
    நினது குளியலுக்கு நன்நீர் -வனிதையே
    இங்குண்டோ கேட்டவர் இத்தவத்தால் மேனியுற்ற
    பங்கமென்ன கேட்டார் பரிந்து….(277)….21-11-2010

    நங்காய்நீ நின்கையால் நீறூற் றியகொடிகள்
    நன்காய் துளிர்கிறதா நித்தியமும் -சிங்கார
    சுன்னம் இடாமலே செக்கச் சிவந்தயிதழ்
    வண்ணம் தளிரின் வனப்பு….(278)….21-11-2010

    தர்ப்பயை நட்பாக நிர்பயமாய் மான்கவ்வ
    அற்பமாய் கோபம் அடையாது -நிற்பாயா
    நீலக் கமலம் நிகர்த்தநின் கண்களைப்
    போலசைவை கொள்ளஅவை பார்ப்பு….(279)….21-11-2010

    தேசுடையோர் செய்யார் தவறான காரியம்
    வாசகம் மெய்ப்பிக்க வந்தவளே -பேசா
    உபதேசம் உந்தன் உறுதியும் போக்கும்
    தபசால் உயர்ந்தோர் தமக்கு….(280)….22-11-2010

    ஆகுதியாய் அவ்வேழ்வர் அர்பணிக்கும் பூவேந்தும்
    பாகி ரதியால் பரிசுத்தம் -ஆகிறது
    என்பர் அறியார் இமவான் மகளுந்தன்
    பண்பால் பெறுமிப் பொருப்பு….(281)….22-11-2010

    தர்மார்த்த காமத்தில் தர்மமே மேலென்று
    கர்மமாய் ஏற்ற கவினுறு -நிர்மலமே
    பொன்னால் புகழால் பயனில்லை என்பதை
    நின்னால் உணர்ந்துகொண்டேன் நான்….(282)….22-11-2010

    அன்பாய் உபசரித்தாய் அன்னியனாய் எண்ணாதே
    பெண்பாவாய் நண்பனாய்ப் பாரென்னை -பண்பாளர்
    நேசமேழு வார்த்தைகளால் நேர்ந்திடும் என்றறிவாய்
    பேசிடுவாய் நெஞ்சைப் பகிர்ந்து….(283)….22-11-2010

    எந்த நிலையையும் ஏற்கும் பொறையுடைத்தோய்
    அந்தணர்க்கே உண்டான ஆர்வமுற்ற -இந்தநான்
    கேட்பேன் உனையொன்று கூறுவாய் உன்பதிலை
    ஆட்ஷேபம் இன்றேல் அதற்கு….(284)….22-11-2010

    குன்றிமய மேட்டுக் குடிப்பிறப்பு, மூவுலகு
    சென்றாலும் காணா சிலைவடிவு -குன்றாத
    கவ்விடும் யவ்வனம் கொண்டும் தவமேற்று
    இவ்வனம் கொண்டதேன் ஈர்ப்பு….(OR)
    இவ்வனம் ஏனோ இருப்பு….(285)….24-11-2010

    ஆற்றொணா துக்கம் அடைந்தசில மங்கையர்
    மாற்றாய்க் கடுந்தவம் மேற்கொள்வர் -ஆற்றதன்
    நீரோட்டம் போன்ற நினதுயர் வாழ்க்கையில்
    போராட்டம் என்னயிப் போது….(286)….24-11-2010

    அக்கறையாய்த் தந்தை அருகிருக்க ஆருன்னை
    துக்கமுறச் செய்வர் துணிந்திங்கு -உக்கிரமாய்
    சீறும் அரவ சிரசிருக்கும் ரத்தினத்தை
    ஆரிங்(கு) எடுப்பர் அசைத்து….(287)….24-11-2010

    பூப்பிளமைக் காலத்தில் பொன்னணிகள் பூணாமல்
    மூப்படைந்தோர் ஏற்கும் மரவுரியேன் -தோப்பிரவில்
    தாரகைகள் பூக்க தவழ்மதி காய்த்திட
    ஏறுகிழக் கோனங்(கு) எதற்கு….(288)….24-11-2010

    விண்ணோர் விரும்பிடும் வாசத் தலமிருந்து
    நண்ணுதல் சொர்கம் நகைப்பன்றோ -எண்ணுதல்
    கேள்வனெனில் கேலியே, கல்ரத் தினம்போமோ
    ஆளெவன் என்று அலைந்து….(289)….25-11-2010

    வெப்பப் பெருமூச்சால் வேதனை நானறிந்தேன்
    அப்புறமோர் சந்தேகம் அம்மணிநீ -இப்புவியில்
    வேண்டத் தகுந்தவரார் வேண்டி வராதவரார்
    ஆண்டவ னுக்கே அகல்….(290)….25-11-2010

    காதணி நீலக் கமலம் குலாவிடும்
    சீதள கன்னத்தில் செஞ்சடை -மோதவைத்த
    நெஞ்சென்ன பாறையோ, நீலகண்டன் போலிவனும்
    நஞ்சுண்டா னானோ நமுத்து….(291)….26-11-2010

    நிராபரண பாணியாய் நிற்க அருக்கன்
    சரோருகம் என்றெண்ணி சூழ -இராவரும்
    சந்திரன் காலையில் சோபை இழந்தாற்போல்
    நின்திரம் காண்போர் நெகிழ்வு….(292)….26-11-2010

    குடையாய் இமைகள் குவிந்த விழித்தேர்
    படைக்கடிமை ஆக பயந்த -தடைதானா
    அன்றியழ கென்றகர்வம் ஆமெனில் அம்மனிதர்க்(கு)
    இன்றியமை யாத இழப்பு….(293)….26-11-2010

    பங்காய்த் தவப்பலனில் பாதியுனக்(கு) ஈந்திடுவேன்
    நங்காய் அடைந்திடுநின் நாயகனை -சங்காய்
    இருந்தவுன் நெஞ்சை எடுத்தூதும் ஆளை
    அறிந்திடச் செய்வாய் அடுத்து….(294)….27-11-2010

    தன்னிதயம் போலறிந்த அன்னிய அந்தணர்தம்
    பின்னிய பேச்சால் பதிலிழந்து -உன்னியதைக்
    கூறுமாறு மையிடா கண்களால் பார்வதி
    ஆருயிர் தோழிக்(கு) அழைப்பு….(295)….27-11-2010

    வெய்யில் தடுப்பாக வெண்தா மரைக்குடையை
    கையில் எடுத்த கதையாக -தையலிவள்
    கொண்டதவக் காரணத்தைக் கூறுகிறேன் வேதியரே
    உண்டெனில் ஆர்வம் உமக்கு….(296)….27-11-2010

    தேவேந் திராதிகளை திக்பாலர் நால்வரை
    போவென்று நெஞ்சால் புறந்தள்ளி -பூவம்பன்
    மாள வழியின்றி மாற்றாய்த் தவமேற்றாள்
    காளை அமர்ந்தவர்க் காய்….(297)….28-11-2010

    ரீங்காரம் செய்த ரதிமாறன் அம்புசிவன்
    ஹூங்காரத் தாலஞ்சி ஒத்தயினப் -பூங்கோதை
    தையலிவள் நெஞ்சில் திசைமாறித் தைத்திட
    மையலாள் வாடுகிறாள் மாது….(298)….29-11-2010

    நெற்றிக் களபமும் நீறாய் உதிர்ந்தது
    பற்றிய தாபத்தால் பார்வதிக்கு -சுற்றியுள்ள
    மூடு பனியிவள் மூச்சுஷ்ணத் தாலுருகி
    ஓடுநதி ஆனதே ஓய்….(299)….30-11-2010

    சம்புவின் சாகஸ சங்கீதம் பாடுகையில்
    தெம்பிழந்து போவாள் தழுதழுத்து -உம்பரின
    கின்னரத் தோழிகளிவ் இன்னலைக் கண்டழுவர்
    தன்னறமாம் கானம் தவிர்த்து….(300)….30-11-2010

    மூன்றாவது ஜாமத்தில் மூடிய கண்திறந்து
    தோன்றாத ஈசனிரு தோளணைத்து -சான்றாக
    ”போகாதீர்” என்று பிதற்றுமிவள் நோய்தன்னில்
    வேகாதீர் பெண்காள் வீழ்ந்து….(301)….30-11-2010

    ”எங்குமே உள்ளவரென்(று) ஏற்றத்தோர் சொல்வதால்
    இங்கென் மனத்தும் இருப்பதாவீர் -அங்குறையும்
    காதலைக் காணாமுக் கண்ணுற்றீர்” என்றிடுவாள்
    பேதை வரைந்தசிவன் பார்த்து….(302)….30-11-2010

    ஈசனைக் கைப்பிடிக்க ஏற்றவழி யோகமென்று
    யோசனை செய்தெடுத்து இவ்விமய -ராசனாம்
    பெற்றவர் ஆதரவைப் பார்வதி பெற்றபின்பே
    உற்றோமிக் கானில் உவந்து….(303)….1-12-2010

    வனிதையிவள் நட்ட விருட்சங்கள் கூட
    புனித தவத்தினைப் போற்றி -கனிதர
    ஏங்குமிவள் முந்தோன்ரி ஏற்காது ஆலமரம்
    தூங்குமூஞ்சி ஆச்சேயந் தோ….(OR)
    தூங்கு முகமான தே….(304)….2-12-2010

    தவத்தால் இளைத்தனள் தோழிமார் வாட
    அவத்தை அடைந்தனள் அய்யா -சிவத்தினால்
    காய்ந்த விளைநிலத்தில் கொட்டும் மழையாக
    பேய்ந்திடுமோ ஈசன் பரிவு….(305)….2-12-2010

    தோழியின் சொல்கேட்டு ஊழிநாள் ஊர்த்தவர்
    ஆழமாய்ப் பார்வதியின் அன்புணர்ந்தும் –
    ஆழமான அன்புணர்ந்தும் அப்பார்வதியை -சோழியன்போல்
    சும்மா இருந்தபின் சோதித் தறியயெண்ணி
    சும்மா இருந்தபின் சோதிக்கச் சீண்டினார்
    இம்மா மவுனம் எதற்கு….(or)
    இம்மா மவுனமேன் என்று….(306)….2-12-2010

    மொக்குவிரல் ஐயிரெண்டும் மூசக் குவித்ததில்
    தொக்கி ஜமாலை தொங்கிட -நெக்குருக
    நின்றனள் பார்வதி நீண்டபேச் சின்மையால்
    மன்றாடும் அந்தணர் முன்….(307)….3-12-2010

    உண்மைதான் தோழி உரைத்ததெலாம் வேதியரே
    சின்மயத்தை சேரதவம் செய்தனளிப் -பெண்மை
    அரும்பொருள் ஏதுமிலை ஆசைதனக்(கு) எட்டா
    பரம்பொருள்மேல் பார்வதிக்குப் பற்று….(308)….4-12-2010

    அறிவேன் அரனை அரைநிறை ஆக
    வெறியாய் அவனை விரும்பாய் -நெறியாக
    கூசும் அமங்கலக் காரியத்தைக் கொண்டாடும்
    ஈசனவன் மேலுனக்கேன் ஈர்ப்பு….(OR)
    ஈசன்மேல் ஈர்ப்பு இழிவு….(309)….4-12-2010

    அற்பப் பொருளில் அதிகபற்(று) உற்றவளே
    பொற்காப்பு சூடியவுன் பூங்கரம் -சர்பத்தால்
    கங்கணக் காப்பணிந்த காபா லியின்கையை
    எங்கணம் ஏற்கும் இசைந்து….(310)….4-12-2010

    உரித்துப் புதிதாய் உடுத்திய ஆனைக்
    கரித்தோல் குருதியைக் கொட்ட -பொருத்தமாய்
    அன்னம் வரைந்தவெண் அம்பரப் பட்டெழில்
    என்னமாய் ஏற்கும் எதிர்….(311)….4-12-2010

    சேவடி செஞ்சாந்து பூவிரித்த மாளிகையில்
    தூவிடுமுன் கால்சுவட்டைத் தாவிடுங்கால் -சாவடைந்தோர்
    வாழும் தலத்தில் வலதுகால் வைப்பதா
    பாழப் பரமசிவன் போக்கு….(312)….4-12-2010

    சீதக் களப சுகந்த தனங்களில்
    மோதிக் களித்து மருவிடும் -போதவர்
    மார்பினில் பூசிய மாண்டோர்தம் சாம்பலுன்
    சார்பிலும் வீசுமட சட்….(313)….4-12-2010

    உந்து மதகளிற்றில் உட்கார்ந்து புக்ககம்
    வந்திடாமல் அந்த வயோதிக -நந்தி
    முதுகமர்ந்து சென்றால் முறுவலிப்பர் மக்கள்
    இதுமிகுந்த கேலிக்(கு) இடம்….(OR)
    இதுவுகந்து போவாயோ இல்….(314)….5-12-2010

    சந்திரன் கெட்டானாள் சம்பு தலைக்கேறி
    அந்தவழிக்(கு) ஆளாகாய் அம்மணி -இந்தபுவிக்(கு)
    இன்பம் தருமிருவர்க்(கு) ஈசான்ய மூலையா
    துன்பத் தவத்தைத் துற….(315)….6-12-2010

    நேத்திரம் மூன்றுடையோன் நோக்க விகாரமாய்
    கோத்திரம் பெற்றோர் கிடையாதோன் -போர்த்திடுவான்
    திக்கெட்டால் மூடி, திருமணம் கொண்டால்நீ
    திக்கற்றப் பார்வதி தான்….(316)….6-12-2010

    பூவனம் நீயெங்கே, தீவனத்தோன் தானெங்கே
    ஈவனம் விட்டகல், இட்டியின் -காவணக்
    காலேற்கும் பூசையை காட்டுப் பிணஞ்சுடு
    கோலேற்க்க லாகுமோ கூறு….(317)….6-12-2010

    அந்தணர் கூற்றால் அதரம் துடிக்கயிரு
    கண்தணல் கொள்ளக், கொடிப்புருவம் -கொந்தளிக்க
    பார்த்தனள் கோபமாய் பார்வதி பின்தொடர்ந்து
    வார்த்தைகள் சொன்னாள் வெகுண்டு….(318)….7-12-2010

    ஆரணம் போற்றிடும் பூரணப் பெம்மானின்
    காரணக் காரியம் நீரறியீர் -சாரணரே
    கத்தும் கடலாழம் காணுமோ குச்சிஅற்ப
    சித்தத்திற்க்(கு) எட்டார் சிவன்….(319)….7-12-2010

    குறையொன்றும் இல்லா குணத்தோன் அரனுக்(கு)
    அறம்பொருள் இன்பம் எதற்கு -பகர்கின்ற
    மங்களங்கள் எல்லாமே மாண்டு பிறப்போர்க்கே
    எங்களவர் ஆசைக்(கு) எமன்….(320)….7-12-2010

    பிச்சை புகினும் பணக்கா ரணக்காரர்
    இச்சை இடுகாடாய் ஏற்பினும் -முச்சகத்தின்
    மூர்த்தியவர் அச்சத்தை மூட்டினும் காந்தமாய்
    ஈர்த்திடும் ஈசன் இரும்பு….(321)….7-12-2010

    குஞ்சர அம்பரம் கொண்டாலும், ஆபரணம்
    நஞ்சுமிழ் பாம்பாய் நெளிந்தாலும் -நெஞ்சில்
    கபாலங்கள் கோர்த்துக் கிடந்தாலும் என்ன
    சபாபதிக்கு மேனி ஜகம்….(322)….7-12-2010

    ஈசனுடல் மேவி இடுகாட்டுச் சாம்பலும்
    தோஷம்போய் ஆனது தூய்மையாய் -தூசெனில்
    ஆடலின் போது அபிநயத்தால் சிந்துவதை
    சூடுவரோ விண்ணோர் சிரம்….(323)….7-12-2010

    வாரண வாகனன் வானவகோன் வந்தயெதிர்
    ஏறதன் வாகனரை ஏத்துதலாய் -பூரணனின்
    பாதம் சிவக்க புனைந்தசென்னி மந்தார
    தாதவிழ வீழ்வான் தொழுது….(324)….7-12-2010

    குற்றம் உரைப்பதையே கொள்கையாய்க் கொண்டாலும்
    அற்றை மறந்துநீர் ஆதரவாய் -சற்றே
    சகத்தைப் படைத்த சதுர்முகனை ஈன்றோன்
    தகப்பன்தாய் இல்லாதவன் தான்….(325)….7-12-2010

    போதும் விவாதம்நீர் மூதரித்த வண்ணமீசன்
    தீதாய் இருப்பினும் தித்திக்கும் -மாதெனக்கு
    ஆதலால் ஏதுமிப் பேதைபால் ஓதாதீர்
    காதலுக்குக்(கு) இங்கில்லை காது….(326)….8-12-2010

    தோழியே துடிக்கின்ற தாடையார் மீண்டுமேதோ
    கோழிமூட்டக் காத்துள்ளார் காதுகொடாய் -பாழிழுத்து
    பேசம் மகான்களைப் பாவமென்றால் அப்பேச்சை
    ஆசையுடன் கேட்டல் அழிவு….(327)….8-12-2010

    முத்தாய்ப்பாய்ச் சொல்லி மரவுரி மண்நழுவ
    கித்தாய்ப்பாய் பார்வதி கூறியோட -சத்தாய்க்க
    இன்று புறம்மறைத்தோன், அன்று புரமெரித்தோன்
    என்றரனாய் நின்றான் எதிர்….(328)….8-12-2010

    அந்தரத்தில் கால்வைத்து மந்திரித்தாற்ப் போல்நின்று
    சந்திர சூடனை சந்தித்தாள் -இந்தநிலை
    செல்ல முடியாமல் நில்ல மனமின்றி
    கல்லணையால் காவிரிகால் கட்டு….(329)….9-12-2010

    சவுந்தர்ய லாஹிரியே செய்த தவத்தால்
    சிவந்தன்னைச் செய்தாய் சேவகனாய் -உவந்தென்னை
    கொள்ளடிமை என்றதும் துள்ளுகையில் குத்திய
    முள்ளெடுத்த மானானாள் மாது….(330)….9-12-2010

    சர்கம் ஐந்து சுபம்
    ————————
    ——————————————————————————————-

    சர்கம் ஆறு
    ————–

    என்னை எனக்களித்த என்தந்தை சம்மதித்தால்
    என்னை அவர்க்களிப்பேன் என்றுரை -பின்னை
    இறையோன்தான் ஆனால் முறைமீறல் தோழி
    சரியாகேள் பாம்புச் செவிக்கு….(331)….9-12-2010

    தாவிடும் மாங்கொடி மேவும் வசந்தத்தை
    கூவும் குயில்மூலம் கொஞ்சுதலாய் -சேவகியை
    பாலமாக பேசவிட்டு பார்வதி மோனத்தை
    ஆலமர்ந் தோர்க்கே அளிப்பு….(332)….10-12-2010

    முந்தித்தன் முக்கண்ணால் மன்மதனை மாய்த்தவன்
    சிந்தித்தான் சப்தரிஷி சங்கமத்தை -இந்தப்பெண்
    ஆசை மிகுந்தவள் அப்பனிடம் பெண்கேட்க
    ஈசனே ஆயினும் ஈர்ப்பு….(333)….10-12-2010

    தேசொளி வானில் திகழஆ காசமது
    கூசிடும் வண்ணம் கிளர்ந்திட -மாசிலா
    அந்தணர்கள் ஏழ்வர் அருந்ததி முன்வர
    உந்தெருதோன் முன்பு உதிப்பு….(334)….11-12-2010

    அட்டதிக் ஆனைகள் கொட்டும் மதஜலத்தால்
    மட்டிலா வாசமுடன், மந்தார -மொட்டதை
    தீரம் ஒதுக்கும்மந் தாகினியில் ஏழ்வரும்
    ஊறிக் குளித்தங்(கு) உதிப்பு….(335)….11-12-2010

    முத்துடை முப்புரியும், பத்தரைப் பொன்னுரியும்
    ரத்தின ருத்திராக்ஷ ரக்ஷ்ஷையும் -உத்தரித்த
    கேட்டன நல்கிடும் கற்பகச் சோலையாய்
    ஊட்டமுடன் ஏழ்வர் உதிப்பு….(336)….11-12-2010

    தேரழுந்தூர் மார்கத்தைத் தாழ்த்திக் கொடிக்கம்பன்
    வேரழுந்த வைத்து விரைகையில் -சூரியன்
    தன்நமஸ் காரத்தை அண்ணாந்து செய்திட
    உன்னுதல்கண் டேழ்வர் உதிப்பு….(337)….12-12-2010

    ஊழியில் ஏன உருவில் உலகினை
    ஆழியுள் போந்தெடுத்த ஆதிநாள் -ஊழியனின்
    கோரையில் பூதேவி கூடக் களைப்பாறிய
    ஊறைப்பல் ஏழ்வர் உதிப்பு….(338)….12-12-2010

    பாதி படைத்து பிரமன் களைப்புற
    மீதி முடிக்கும் முனிவர்கள் -வேதம்
    தொகுத்த வியாசரே தோத்தரித்து வாழ்த்தை
    உகுத்தஅவ் ஏழ்வர் உதிப்பு….(339)….12-12-2010

    கற்பனைக்கு எட்டாத அற்புத வேள்விகள்
    பற்பல செய்து பலனுற்றும் -அற்பமாய்
    தள்ளி எமக்குத் தொழில்தவம் என்றிருக்கும்
    உள்ளத்தவர் ஏழ்வர் உதிப்பு….(340)….12-14-2010

    வெண்பல் தவத்தர் வசிட்டர் பலன்யாவும்
    பெண்கொள் வடிவெடுத்தாற் போலங்கு -கண்கள்
    பொருந்திடக் கேள்வர் பதத்தில் குனிந்த
    அருந்ததியைப் பார்த்தான் அரன்….(341)….12-14-2010

    புறத்துப்பால் பாரா பெரியோர்கள் போற்றல்
    அறத்துப்பால் வாழ்வோரே ஆவர் -புரத்தின்பால்
    தீவைத்தோன் ஏற்றான் தவத்தேழ்வர்க்(கு) ஒப்பாக
    பூவைத்தப் பத்தினிப் பெண்….(342)….12-15-2010

    அருந்ததி பார்த்த அரன்மனதில் ஆர்வம்
    பிறந்ததாம் இல்லறம் பேண -சிறந்த
    தொழிலாம் அறத்தைத் துணையின்றி செய்தல்
    விழலுக்(கு) இறைத்த வளம்….(343)….12-17-2010

    இல்லறமே நல்லறம் என்றெழில் பார்வதியை
    வெள்ளியிறை ஏற்க விருப்பமுற -கள்ளமதை
    முன்பிழைத்தக் குற்றத்தால் மண்புதைந்த மன்மதன்….(OR)
    முன்பிழைத்து ஓய்ந்து மனம்துவண்ட மன்மதன்
    தன்பிழைப்பில் கண்டான் தடம்….(OR)
    தன்பிழைப்பில் கொண்டான் தெருள்….(344)….12-17-2010

    அங்கம் புளககிக்க ஆரணம் நான்கினை
    அங்கங் களோடறிந்த அவ்வேழு -சிங்கங்கள்
    ஏசிவா சங்கரா என்றீசர் தாள்பணிந்து
    பேசவாய் பொத்தினர் பின்பு….(345)….12-17-2010

    வேதவழி போனதால் வேள்விகள் செய்ததால்
    மாதவத்தில் முக்குளித்து மூழ்கியதால் -ஆதவனாய்
    ஏழ்வரெங்கள் முன்பு எழுந்தருளி நிற்கின்றீர்
    வாழ்வெமக்கு வந்ததிவ் வாறு….(346)….12-19-2010

    எட்டாத கொம்புத்தேன் ஈசன் தரிசனம்
    கிட்டாதா சொட்டேனும் காத்திருந்தோம் -இட்டாயின்(று)
    ஏழுமுனி எங்களையுன் ஏகாந்த நெஞ்சில்ஈர்
    ஏழவனி நாயகா ஏற்று….(347)….12-19-2010

    உம்மை நினைப்போன் உலகிலுயர் பாக்கியவான்
    அம்மா மறைகளின் ஆரம்பம் -உம்மால்
    நினைக்கப் படுமளவு நாங்களுற்ற பேறை
    நினைக்க நயனத்தில் நீர்….(348)….12-19-2010

    ஆதித்தன் அம்புலிக்(கு) அப்பாலுள் அந்தரத்தில்
    ஆதிக்கம் கொண்டோம் அதைவிடுங்கள் -ஜோதிக்கண்
    தென்னவனுன் நெஞ்சில் திளைத்ததால் நாங்களின்று
    உன்னதம் உற்றோம் உயர்ந்து….(349)….12-19-2010

    வாயால் வசிட்டனின் வாழ்த்தைப் பெறுவதற்கே
    நேயன் கவுசிகன் நாட்டமுற்றான் -தூயனே
    ஆதரித்(து) எங்களுக்(கு) அந்தஸ்(து) அளித்ததால்
    காதலித்தோம் எங்களைநாங் கள்….(350)….25-12-2010

    காதலர்க்கு சந்தோஷம் காணக் கிடைத்திடுமே
    ஆதலால் அங்கே(து) அளவளாவல் -சேதனர்கள்
    யாவிலும் நீரந்தர் யாமியாய் நிற்பதால்
    நாவுரைக்கும் நன்றி நனி….(351)….25-12-2010

    நேரில் தரிசித்து நாங்கள் அறிந்தது
    சோறின் பருக்கைச் சமானமே -வேரில்
    பழுத்த பலாவாயெம் புத்திக்(கு) உறைக்க
    முழுத்தன்மை கூறேழ் முனிக்கு….
    தழைத்தோங்க வேண்டும் தயவு….(352)….26-12-2010

    பார்த்துப் பரவசமாய்ப் போற்றிப் பணிந்தயிம்
    மூர்த்தியம் முத்தொழிலின் மொத்தமெனில் -வார்த்தலை
    காத்தலை, தீர்த்தலைக் கண்மூன்றால் செய்வீரோ
    வேத்தியர் ஏழ்வர் வியப்பு….(353)….28-12-2010

    விடையவரே எங்கள் வினாக்களுக்குத் தக்க
    விடையருள்வீர், நாங்களிங்கு வந்த -கடமையை
    செய்து முடித்தபின் ,சொல்வீர் அதற்க்குமுன்
    எய்தகணை யாகஅவ் ஏழு….(354)….7-1-2011

    எழுவர் வினாக்களுக்(கு) ஏற்ற பதிலை
    மழுமான் உடைத்தோன் மலர்ந்த -பொழுது
    தரித்த மதியதன் தண்ணொளியைக் கூட்டும்
    சிரித்தமுல் லைகள் ஜொலித்து….
    சிரித்தவெண் பற்கள் ஜொலித்து….(355)….12-2-2011

    Share
  • அவன்,அது,ஆத்மா (22)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 22

    கரந்தையார்பாளையம்ஸ்ரீ தர்மசாஸ்தா

    கல்லிடைகுறிச்சிக்கு மற்றொரு பெயர் கரந்தையார்பாளையம். இந்த ஊரில் வசிக்கும் அநேகம் குடும்பத்தினருக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா குலதெய்வமாக இருப்பார். இந்த ஊர் என்றில்லை. மதுரையும் மதுரைக்குத் தெற்கே உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, கடையம், தென்காசி, செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், கடையநல்லூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்தராயிருப்பு போன்ற பல ஊர்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஸ்ரீ தர்மசாஸ்தாவே குலதெய்வமாக இருப்பார். பெயர்கள் வேண்டுமானால் சாஸ்தா, ஐயனார், ஐயப்பன், பூதநாதர் என்று இருக்கும். அப்படி அழைக்கிற பெயர்கள் எல்லாமே ஸ்ரீ தர்மசாஸ்தா வைத்தான் குறிக்கும். ஆண்களுக்கு ஹரிஹரன், ஹரிஹரபுத்திரன், ஐயப்பன், பூதத்தான், ஐயனார், குளத்துமணி என்றும், பெண்களுக்கு பூர்ண புஷ்கலாம்பாள் என்றும் பெயர் வைப்பார்கள். அதை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்று கூட எளிதாகச் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு இப்பகுதியில் ஐயப்ப வழிபாடு பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது.

    கம்பங்குடி வம்சம்

    akru

    முன்னொரு காலத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தாவிடம் அளவில்லாத பக்தி கொண்ட விஜயன் என்ற பெயருள்ள அந்தணர் வம்சத்தில் ஒரு தம்பதியர் கரந்தையார்பாளையம் என்ற கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சுவாமி ஐயப்பன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தனர். அவர்களது தன்னலம் இல்லாத பக்தியை மெச்சி அவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்று சுவாமி எண்ணினார். அதன்படி ஒருநாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்த இரவு வேளையில் ஸ்ரீ ஐயப்பன் ஒரு இளைஞன் உருவில் இவர்களது இல்லத்திற்கு வந்தார். வந்த இளைஞனின் பொலிவான முகத்தைப் பார்த்து அந்த தம்பதிகள் அவனைத் தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். மழையில் நனைந்த உடலைத் துடைக்க ஒரு வஸ்திரமும் கொடுத்தனர். வந்த இளைஞன் தன் தலையைத் துவட்டிக்கொண்டே,” அம்மா எனக்கு மிகுந்த பசியாக இருக்கிறது. இந்த மழையில் நடு இரவில் இந்தக் காட்டு வெளியில் உணவுக்கு எங்கு செல்வேன்..நீங்கள் எனக்குக் கொஞ்சம் உணவு தந்தால் என் பசி தீரும்” என்றான். இப்பொழுது எங்கள் வீட்டில் உள்ள “கம்புப் பொடியினால் செய்த கூழ் இருக்கிறது..அதைத் தருகிறோம் …நீ உன் பசியாற்றிக்கொள்” என்று ரொம்பவும் கனிவோடு கூறினார். இளைஞனும் அந்தக் கம்பங்கூழைக் குடித்து விட்டு,” அம்மா இன்று இரவு மட்டும் இங்கே தங்க இடம் தாருங்கள்..இரவில் ஓய்வெடுத்துக் கொண்டு நாளை காலையில் சென்று விடுகிறேன்” என்று பணிவோடு கேட்டான். அந்த தம்பதியர்களும் அந்த இளைஞனுக்கு சமயம் அறிந்து உதவினர். அன்று இரவில் அந்த தம்பதியர்களுக்கு அந்த இளைஞன் ஸ்ரீ தர்மசாஸ்தாவாகத் தோன்றி,” அம்மா..நீங்கள் உங்களின் பக்தியினால் எனக்குத் தந்த “கம்பங்கூழ்” என் பசியைப் போக்கி எனக்கு மிகுந்த சந்தோஷம் தந்தது. இந்தக் “கம்பங்கூழ்” குடும்பத்திற்கே நான் அடிமை. உங்கள் வம்சமே “கம்பங்க்குடி” என்று தொன்றுதொட்டு வழங்கப் படும். உங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் காவலாக நான் இருப்பேன்” என்று கூறி மறைந்து விட்டார். அந்தக் கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான் கரந்தையார்பாளையம் “சாஸ்தா ப்ரீதி” சமயத்தில் பூஜையில் வைக்கப்படும் ஸ்தானிகர் பலகையில் “ஸ்ரீ தர்மசாஸ்தாவாக” அமர்வார்கள். இன்றும் கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்த வயதில் மூத்தவரான ஸ்ரீ கிருஷ்ண ஐயர் மும்பையிலும், ஸ்ரீ சுரேஷ் என்பவர் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். மும்பையில் வசித்து வருகின்ற திரு. வீரமணி, திரு. கணபதி போன்றவர்களும், சென்னையில் வசித்து வருகின்ற கல்லிடைகுறிச்சி தொந்திவிளாகம் தெருவைச் சேர்ந்த “அப்பாச்சி கிருஷ்ணையர்” குடும்பத்தினரும் கம்பங்குடி வம்சாவழியினர் தான். செல்லப்பிள்ளை வம்சத்தில் செல்லவிலாஸ் அப்பளம் ஸ்ரீ முத்துசாமி சாஸ்திரிகளின் குடும்பத்தினரும், ஸ்ரீ செல்லமணி ஐயர் குடும்பத்தினரும் உள்ளனர். இப்பொழுதும் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், கொச்சின், நூரணி போன்ற இடங்களில் நடைபெறும் “சாஸ்தா ப்ரீதி” அன்று கரந்தையார்பாளய சமூகத்துக் கென்று முதல் மரியாதை செய்வார்கள் என்று ப்ரும்மஸ்ரீ ஹரிஹர சாஸ்திரிகளின் புதல்வரும், ஸ்ரீ தர்மசாஸ்தா பூஜா முறைகளில் நல்ல தேர்ச்சி உள்ளவருமான ஸ்ரீ H. குருசாமி அவர்கள் அவனிடம் சொன்னார்.

    கரந்தையார்பாளயம் சாஸ்தா ப்ரீதி

    akal
    கல்லிடைகுரிசியில் மொத்தம் பதினெட்டு அக்கிரஹாரங்கள் இருக்கிறது. அந்த பதினெட்டு அக்கிரஹாரத்தையும் எட்டு கிராமங்களாகப் பிரித்துள்ளனர். அவை வைத்தியப்பபுரம், தொந்திவிளாகம், ராமச்சந்திரபுரம், தென்னூர் கிராமம், ஸ்ரீவராகபுரம், பாட்டநயினார்புரம், முதலியப்பபுரம், ஏகாம்பரபுரம் என்பதாகும். இந்த ஒவ்வொரு கிராமத்தினரும் “கிழிக்காரர்கள்” என்று அழைக்கப்படுவர். ஒவ்வொரு வருடமும் “சாஸ்தா ப்ரீதி” வைபவத்தை ஆடி மாதத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் பார்த்து நடத்துவார்கள். இதைப் “பெரிய அடியேந்திரம்” என்றும் அழைப்பார்கள். அதற்கான கிராமக் கூட்டம் சாஸ்தாங்கோவிலில் வைத்து நடைபெரும். அந்த வருடம் எந்தக் கிராமத்தின் “கிழியோ” அவர்கள் அந்த வருடம் முழுவதும் கிராமத்தில் நடைபெறும் கோவில் விசேஷங்களில் கரந்தையார்பாளையம் சமூகக் கட்டளைகளையும், ஸ்ரீ சங்கர ஜயந்தி, சிருங்கேரி ஆச்சார்யாளின் வர்த்தந்தி தினம் போன்ற உற்ஸவங்களையும் பொறுப்பாக நடத்தவேண்டும். அதற்கான அறக்கட்டளை மூலம் வருகிற வட்டியில் இருந்து இந்த நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டும். முக்கியமாக “சாஸ்தா ப்ரீதி”யை விமர்சையாகக் கொண்டாட வேண்டும். அதற்கு பக்தர்கள் தனியாகவே தாராளமாகக் காணிக்கைகள் கொடுத்து வருகின்றனர்.

    adi

    “சாஸ்தா ப்ரீதி”க்கு முந்திய தினம் வெள்ளிக்கிழமை மாலையில் ஆறு மணிக்கு மேலாக எந்த கிராமத்தின் கிழியோ, அந்த கிராமக் கோவிலில் வைத்திருக்கும் பெரிய “அடியேந்திரம்” (நிறைய ஓலைச்சுவடிகள் நிறைந்த ஒரு பெரிய கட்டு), ஸ்ரீ சாஸ்தாவின் பிரம்பு, “சங்கிலிவட்டை” (ஒரு வகை கை விளக்கு. இந்த விளக்கை முக்கியமாக சாஸ்தா பூஜையில் வைத்துப் பூஜிப்பார்கள்) போன்ற பொருள்களைத் தனித்தனியாக அந்தக் கிராமப் பெரியவர்களோ, கிராமக் கிழிகாரர்களோ கையில் ஏந்திவர, அவர்களுக்குத் தனித்தனியாக வண்ணக் குடையும் பிடித்துக் கொண்டு எல்லா கிராமத்திற்கும் நாதஸ்வர மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து இறுதியாக சாஸ்தாங்கோவிலில் கொண்டு பூசைக்காக வைத்து நமஸ்கரிப்பர்கள்.

    அன்று இரவு சாஸ்தாங்கோவிலில் வைத்து ஸ்ரீதர்மசாஸ்தாவாக ஆசனத்தில் அமரக்கூடியவரின் கையில் ஒரு பெரிய வெள்ளைப் பூசணிக்காயை (சாம்பக்காய்)த் தருவார்கள். அதை அவர் இரண்டாக வெட்டி அங்கிருக்கும் “தலைமைச் சமயல்காரரிடம்” சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரணகோஷத்துடன் தருவார். அதைப் பெற்றுக்கொண்ட சமையல்காரர் சாஸ்தா ப்ரீதிக்கான காய்கறிகளை நறுக்குவதற்க்குத் தயாராகி விடுவார். அதன் பிறகு சாஸ்தா ப்ரீதி அன்று அன்னதானத்திற்குப் பந்தியில் எந்தெந்த கிராமத்துக் காரர்கள் எந்தெந்த உணவு வகைகளைப் பரிமாற வேண்டும் என்று சீட்டு எழுதிக் குலுக்கிப் போடுவாகள். அதில் யார் யாருக்கு என்ன வந்திருக்கிறதோ அதைதான் அந்த கிராமத்துக் காரர்கள் பந்தியில் பரிமாறவேண்டும். கிராமத்தின் ஒற்றுமைக்காக இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களிலும் முன்னோர்கள் எத்தனை கவனமாக இருந்திருக்கின்றனர் என்று அவன் நினைத்துப் பெருமைப் படுவான்.

    மறுநாள் சனிக்கிழமை அன்று சாஸ்தா ப்ரீதி. முன்பெல்லாம் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலில் வைத்துத்தான் சாஸ்தா ப்ரீதி நடக்கும். கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் உள்ள சாஸ்தா மண்டபத்தில்தான் பூஜைகள் நடைபெறும். அழகாக அலங்காரம் செய்திருப்பார்கள். பெரிய விளக்குகளில் சுவாமியை ஆவாகனம் செய்து பூஜிப்பார்கள். ஒரு விளக்கில் குருவையும். ஒரு விளக்கில் கணபதியையும், ஒரு விளக்கில் ஸ்ரீ தர்மசாஸ்தாவையும், ஒரு விளக்கில் பூரண புஷ்கலாம்பாளையும் ஆவாகனம் செய்வார்கள். ஸ்ரீ பூதனாதரை தெற்கு முகமாக வைத்து ஆவாகனம் செய்து அவருக்கு வடைமாலை சாத்துவார்கள். “சங்கிலி வட்டை” விளக்கிற்கும் பூமாலை சாற்றி பூஜையில் வைப்பார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை செய்வார்கள்.

    ஸ்ரீ தர்மசாஸ்தாவாக அமர்பவருக்கான ஸ்தானிகர் பலகையும், ஸ்ரீ தர்மசாஸ்தாவின் செல்லப்பிளைக்கான ஒரு பலகையும், பரிவார தெய்வங்களான யக்ஷி, சங்கிலி பூதத்தார் போன்றவர்களுக்கான பலகையும் போடுவார்கள். ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கான “வரவுப் பாடல்களை” மனம் உருகப் பாடுவார்கள். அதன் பிறகு சுவாமி நீராடச் செல்வார். ஒரு வண்ணக் குடையின் கீழே தர்மசாஸ்தாவாக இருப்பவரை அவரின் இரண்டு பக்கங்களிலும் பக்தர்கள் பிடித்துக் கொண்டு இரட்டை வரிசையாக சுவாமிப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார்கள். அவருக்கு முன்னால் சங்கிலி வட்டை தீபத்தை ஒருவர் இருகைகளிலும் தாங்கிக்கொண்டு வருவார். சாஸ்தாவின் பரிவார தெய்வங்களான சங்கிலி சாஸ்தா, யக்ஷி, குண்டாந்தடி சாஸ்தா போன்றவர்கள் முன்னால் ஆடிக் கொண்டே போவார்கள். அவர்களுக்கு தாகசாந்திக்காக இளநீரை பக்தர்கள் கொடுப்பார்கள். பெருமாள் கோவிலின் மேற்கு வாசல் வழியாக வந்ததும், அங்கு ஒரு வீட்டின் சுவரில் உள்ள சிறிய துவாரம் வழியாக ஸ்ரீ தர்மசாஸ்தா பார்ப்பார். அது பிலாவடி சாஸ்தா, மற்றும் ஆரியங்காவு சாஸ்தாவின் தரிசனம் என்று அவனுக்குப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மேலமாட வீதி வழியாக, ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவிலின் கன்னடியன் கால்வாய்ப் படித்துறையில் சுவாமிகளை நீராட்டுவார்கள். அது முடிந்து நேராக வடக்கு மாடத்தெரு வழியாக பெருமாள் கோவிலுக்குள் சென்று பூஜா மண்டபத்தில் அமர்ந்து சாந்தி பெறுவார்கள். சுவாமிக்கு தீபாராதனை செய்து காலை பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.

    நீராடிவிட்டு வரும் ஸ்ரீ தர்மசாஸ்தாவின் கையில் ஒரு பெரிய வாழை இலைக்கட்டு தருவார்கள். அதை அவர் அந்த கிராமக் கிழிக்காரரிடம் தருவார். அதைப் பெற்றுக் கொண்டு உடனேயே அங்கு வந்திருக்கும் அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் பரிமாறத் துவங்கிவிடுவார்கள். மதியம் சுமார் மூன்று மணிவரை அந்த அன்னதானம் நடக்கும். முன்பெல்லாம் பெருமாள் கோவிலின் அனைத்துப் பிராகாரங்களிலும் நான்கு ஐந்து முறை அன்னதானப் பந்திகள் நடைபெறும். பெரிய அடுப்பு தோண்டி அதன்மீது வைக்கப்பட்ட பெரிய வார்ப்புகளில் பாயசம் வைப்பார்கள். அதை இரண்டு மூன்று பேர்கள் கிண்டிக்கொண்டே இருப்பார்கள். (அந்தப் பெரிய வார்ப்புகளைத் தூக்குவதற்கே ஒரு பத்துபேர்கள் இருப்பார்கள். அவை எல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள். பசுமையான நினைவுகள்.

    ak
    இரவிலும் பகலைப் போலவே பூஜை முடிந்து, சுவாமி நீராட்டல் நடக்கும். அதன் முடிவில் நிவேதனம் செய்து, தீபாராதனை செய்து பூர்த்தி செய்வார்கள். மறுநாள் சூரியநாராயண பூஜை. காலையில் ஆத்திய ஹிருதயம், சூரிய நமஸ்கார மந்திரங்கள் சொல்லி நமஸ்கரிப்பார்கள். அன்று காலையில் பத்து மணிக்கெல்லாம் அன்னதானம் துவங்கிவிடும்.

    இரவில் கிராமக் கூட்டம் நடைபெறும். அதில் அடுத்த வருடம் எந்த கிராமத்துக் காரர்களின் கிழியோ அவர்களிடம் “கிழியை” ஒப்படைப்பார்கள். அதை அந்த குறிப்பிட்ட கிழிக்கார கிராமஜனங்கள் சரணகோஷத்துடன் , மேளதாளத்துடன் “அடியேந்திரத்தையும், சாஸ்தாவின் பிரம்பு, சங்கிலி வட்டை தீபத்தையும் ” எடுத்துச் சென்று அவர்களது கிராமக் கோவிலில் வைத்து விட்டு நிவேதனம், தீபாராதனைகள் செய்து பூர்த்தி செய்வார்கள். அன்று இரவு சமூகத்தின் கட்டளையில் ஸ்ரீ ஆதிவாராகப் பெருமாளுக்குச் “சிறப்பு கருடசேவை” நடைபெறும்.

    இப்பொழுதெல்லாம் “சாஸ்தா ப்ரீதி” ஸ்ரீ சாஸ்தாங்கோவிலில் வைத்தே மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோலாகலமான உற்சவத்திற்கு எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தவறாது வந்து கலந்து கொள்கின்றனர். அவனும் சந்தர்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ தரமசாஸ்தாவை எல்லோருக்குமாகப் பிராத்தனை செய்து வருகிறான். சுவாமியே சரணம் ஐயப்பா.

    “தத்வமஸி” – நீயே அதுவாக இருக்கிறாய்.

     அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    thalaivanநீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் …

    1970ல் வெளிவந்த தலைவன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர். வாணிஸ்ரீ நடிக்க, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா குரல் கொடுக்க, கவிஞர் வாலியின் பாடலிது! மெல்லிசை மன்னருக்கு குருவாய் விளங்கிய எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் உருவான கானமிது! வண்ணக்கனவுகளில் வலம் வந்த எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களுக்கு முன்னோடியாய் கறுப்பு வெள்ளை காலத்திலும் இதுபோன்ற இன்னிசையில் பிரபலமான பாடல்கள் பல உண்டு. நினைத்தேன் வந்தாய் (காவல்காரன்) முதலாக இதோ தலைவனில், நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்… பொதுவாக நூற்றுக் கணக்கில் பாடல்கள் உண்டு டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா குரல்களில். இப்பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – பி.சுசீலா குரல்களில்.

    கதையின் நாயகி கனவு காண, அக்கனவில் கதாநாயகன் வந்துசேர, இன்பம் பொங்கும் வெண்ணிலா இருவருக்கும் இடையில் வீற்றிருக்க, அன்புநதி வழிந்தோடி வருகிறது பாருங்கள். அமர்க்களமாய் இசையெழும்பி வழிகிறது, இருவர் குரலில் அமுதம் கிடைக்கிறது! பாட்டுத்தலைவன் நோக்கி பாட்டுடைத்தலைவி பல்லவி தருகின்றாள், செந்தமிழ் இன்பம் செவிகளில் மோத, வந்திடும் பாடல் நம்மை அழைப்பது நீராழி மண்டபத்திற்கு.

    ………………………………………………………………………………………………………………………………

    காணொளி: https://www.youtube.com/watch?v=1HIfx8vuNSY

    https://youtu.be/1HIfx8vuNSY

    ………………………………………………………………………………………………………………………………

    தேனளந்தே இதழ் திறந்திருக்க
    அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க …

    போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
    வா வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க …

    நேரளவில் இருவர் என்றிருக்க
    சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க …

    கீழ் திசையில் கதிர் தோன்றும் வரை
    அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை …

    கற்பனையில் வலம்வந்து கவிதைத்தேன்பொழிந்து காட்டும் வாலி அவர்களின் வல்லமை, இதயத்தில் என்றும் தமிழை நேசிக்க வைக்கிறது! ஆசையில் விழுந்தால் ஆனந்த மயக்கம் வரும் என்பதை இவ்வரிகள் எடுத்துச் சொல்கின்றன! இல்லற இன்பத்தின் உச்சம் தொடுகின்ற பாட்டுவரிகளை பட்டுக்கம்பளத்தில் இட்டு வைக்கிறது இசை! எடுத்துக் காட்டும் குரல்கள்!!

    தலைவி காத்திருக்கிறாளாம், எப்படி பல்லவி விடை தருகிறது! காத்திருக்கும் தலைவியை ஆதரிக்கும் தலைவன் இங்கே!!
    இடம் கொடுப்பதற்கே நாணம்தடை விதிக்கும் என்கிற காதல் இலக்கணத்தை எடுத்துச் சொல்லும் இனிய வரிகள் உள்ளடக்கி, தலைவனின் பாடல் வருகிறது, தங்குதடையில்லாத தமிழோடு.

    பெண்:
    நீராழி மண்டபத்தில் நீராழி மண்டபத்தில்
    தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
    தலைவன் வாராமல் காத்திருந்தாள்
    பெண்ணொருத்தி விழி மலர் பூத்திருந்தாள்

    ஆண்:
    நாடாளும் மன்னவனின் நாடாளும் மன்னவனின்
    இதய வீடாளும் பெண்ணரசி
    தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
    மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்

    பெண்:
    வாடையிலே வாழை இலை குனியும்
    வாடையிலே வாழை இலை குனியும்
    கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
    காதலிலே பெண்மை தலை குனியும்

    ஆண்:
    ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

    பெண்:
    காதலிலே பெண்மை தலை குனியும்
    இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

    ஆண்:
    பெண்ணிலவு அங்கே நாணுவதை கண்டு

    பெண்:
    ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

    ஆண்:
    பெண்ணிலவு அங்கே நாணுவதை கண்டு
    வெண்ணிலவு முகிலில் போய் மறைய
    வெண்ணிலவு முகிலில் போய் மறைய
    காதலனும் நல்ல வேளை கண்டான்
    அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்

    பெண்:
    நீராழி மண்டபத்தில் …

    பெண்:
    தேனளந்தே இதழ் திறந்திருக்க
    அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
    தேனளந்தே இதழ் திறந்திருக்க
    அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க

    ஆண்:
    போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
    போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
    வா வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க

    பெண்:
    நேரளவில் இருவர் என்றிருக்க

    ஆண்:
    சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க

    பெண்:
    கீழ் திசையில் கதிர் தோன்றும் வரை

    ஆண்:
    அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை

    பெண்:
    நீராழி மண்டபத்தில்
    தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
    தலைவன் வாராமல் காத்திருந்தாள்
    பெண்ணொருத்தி விழி மலர் பூத்திருந்தாள்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(158)

    –சக்தி சக்திதாசன்.

     

    Teach English British Council Sri Lanka

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    வாரங்கள் ஒவ்வொன்றாய் ஓடி மறையுது. காலங்கள் காற்றாய் கனவேகத்தில் பறக்குது. ஜனனங்கள் ஒருபுறம், மரணங்கள் ஒருபுறமென இயற்கை தன் செயற்பாடுகளை கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

    வாழ்க்கை நிலைத்திடும் எனும் நினைப்பில் மனிதன் தனது தேவைகளுக்கான தேடல்களில் தன் மகிழ்ச்சியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான்.

    அன்னையின் பாதுகாப்புக் கவசமான கருப்பையிலிருந்து இந்த பூமாதவின் மடியில் விழும்போது வெற்றுக் காகிதம் போல எமது மனங்கள் பால் போல வெளுத்து இருக்கிறது.

    கூட்டிலிருந்து குஞ்சு இரை தேடைப் போகும் முன்னால் அதற்குத் தேவையான பாதுகாப்பு யுத்திகளை தாய்ப் பறவையும், தந்தைப் பறவையும் கற்றுக் கொடுப்பது போல எமது பெற்றோர் நாம் எமது பாடசாலை வாழ்க்கையைத் தொடங்கும் வரை தம்மாலான வகையில் எமக்கு எவை முக்கியமாகத் தேவைப்படுகிறதோ அதைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

    அதன் பின்னால் ஆசிரியர்கள் எமை இந்த உலகிற்குத் தேவையான வகையில் செதுக்கி எடுக்கிறார்கள். ஆனால் எமது செதுக்கல்களுக்கு முற்று முழுதாக ஆசிரியர்கள்தான் காரணமா?

    எமது இல்லங்களில் நாம் வாழும் சூழல்கள் நாம் எவ்வகையில் எதிர்காலத்தில் உருவாக்கப் படப் போகிறோம் என்பது முக்கியமான பங்கை வகிப்பதை மறுக்க முடியாது.

    முன்னைய காலங்களில் எமது தாய்நாடுகளில் பெற்றோரின் பங்களிப்பு மிகவும் நேர்மறையான, மனித தர்மத்திற்கு உட்பட்ட வகையில் எமை வளர்த்தெடுக்க உதவியது எனும் கருத்து நிலவியது.

    புலம்பெயர்ந்த எம் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் வித்தியாசமானவை. ஒரு புதிய நாட்டில் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாமே வேறொரு வகையில் செதுக்கப்படவேண்டியவரானார்கள்.

    அதே சமயம் குடும்ப சமேதரராய் புலம்பெயர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டியவர்களாகவும் இருந்தார்கள்.

    விளைவு !

    புலம் பெயர்ந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாம் தமைச் சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கியே புலம் பெயர்ந்தார்கள்.

    இது இயற்கையே! ஒரு புது இடத்திற்கு நாம் செல்லும் போது எமது வாழ்க்கையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேட விளைவது ஒரு இயற்கையான செய்கையே!

    தாம் தமது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்ட பின்பும் அதே சமூகத்தினுடனேயே தம்மைப் பிணைத்து வைத்திருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதனால் பலர் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாட்டின் மொழியை, கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளவில்லை.

    எங்கே தாம் தமது கலாச்சார அடையாளங்களை, மொழியின் தனித்தன்மையை இழந்து விடுவோமோ எனும் ஆதங்கத்தினால் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதான எண்ணத்தில் அடுத்தவற்றை அறவே ஒதுக்கினார்கள்…

    இதன் தாக்கம் உடனடியாக அவர்களுக்குத் தென்படப்போவதில்லை. தாக்கம் அவர்களின் அடுத்த தலைமுறையைத்தான் தாக்கப் போகிறது, தாக்குக்கிறது.

    எப்படி எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?

    அவ்வடுத்த தலைமுறை பல சந்தர்ப்பங்களில் தாம் யார்? எனும் குழப்பத்திற்குள்ளாகிறார்கள். இரு தோணியில் கால்வைத்துப் பயணம் செய்யும் வாழ்க்கை எனைப் போன்ற முதலாவது புலம்பெயர் தலைமுறையுடன் முடியாது அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது.

    பல்கலாச்சார வாழ்வு முறையைக் கொண்ட இங்கிலாந்து தேசம் எனும் இப்பரந்த பூமியில் நாம் எமது சமூகம் எனும் குறுகிய வலயத்துக்குள் வாழ்ந்து விட்டு பாடசாலையிலும் வேலைத்தளங்களிலும் மற்றைய சமூகத்தினருடன் போட்டி போட வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    சிறுவயது முதலே அனைத்து சமூகத்தினருடனும் கலந்து வாழப்ப்பழகும் ஒருவருக்கும், குறுகிய வலயத்துக்குள் தமது பிள்ளைப்பராயத்தை முடித்து அதன் பின்னே இப்பல்சமூக வலைப்பின்னலுக்கிடையில் தள்ளப்படும் ஒருவருக்கும் இடையிலுள்ள வாழ்வு மீதான கண்ணோட்டத்தின் வித்தியாசம் பாரியது.

    நாம் வாழும் இந்நாட்டின் சமூகப் பின்னனியை அறிந்து கொள்வதும், இந்நாட்டின் சரித்திர வரலாறுகளை அறிந்து கொள்வதும் எமது அடுத்த தலைமுறைக்கல்ல எமக்கே அத்தியாவசியமானது.

    அவற்றின் தெள்ளிய அறிவின் மூலமே நாமும் எமது அடுத்த தலைமுறையும் இந்நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் எமை இணைத்துக் கொள்ளலாம்.

    அரசியல் நீரோட்டத்தில் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் எம்மவர்கள் செய்யும் பங்களிப்புகளே வருங்காலச் சந்ததி இந்நாட்டில் ஒரு ஸ்திரமான வாழ்வை வகுத்துக் கொள்வதற்கு உகந்த செயற்பாடாகும். தமிழ், தமிழர் எனும் எமது அடையாளம் என்றுமே அழிக்கப்படமுடியாதது. எமது இனத்தின் திறமையை, எமது சமூகத்தின் ஆற்றலை, எமது மொழியின் ஆளுமையை அடுத்த இனத்தவரும் புரிந்து கொள்ள வேண்டுமானல் நாமும் இச்சமூகத்துடன் கலந்து செயற்படுவதே புத்திசாலித்தனமான செயலாகும்.

    அன்பினிய நெஞ்சங்களே! எனது இந்தக் கருத்து எமது கலாச்சாரத்தை, எமது மொழியை, எமது அடையாளத்தை இழந்து விட வேண்டும் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    எமது மொழியின் மீது , எமது கலாச்சாரத்தின் மீது நான் கொண்ட காதல் அளப்பரியது. ஆனால், அதற்காக மற்றைய மொழிகள , மற்றைய கலாச்சாரங்களை நாம் முற்றாக ஒதுக்க வேண்டும் என்று எண்ணுவதே தவறானது.

    மற்றைய மொழிகளை அறிவதன் மூலம் எமது குழந்தைகள் தவறான பாதைக்கு, தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட்டு விடுவார்கள் என்று எண்ணுதல் தவறாகும்.

    அப்படியாயின் எமது தாய்நாடுகளிலே வாழும் எவருமே தவறான வழியைப் பின்பற்றக் கூடாதே! அப்படி யாருமே இல்லையா?

    என் இனிய வாசக உள்ளங்களே! அனைத்தையும் அறிவோம், அவற்றை அறிந்ததினால் எமது மொழி உயர்ந்ததென மகிழ்வோம். எமது தமிழ் இனம் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும், அனைவரோடும் ஒத்துப் போகும், ஒரு திறமை மிக்க இனம் என அனைவரும் ஏற்று அதன் மூலம் எமது தமிழன்னைக்குப் புகழ் சேர்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி: English language teaching, teacher training and curriculum development, British Council – http://www.britishcouncil.lk/teach

    Share
  • வளவன் கனவு-8

    சு. கோதண்டராமன்

    காழித் துறைமுகம்

    vallavan-kanavu1111

    அடலே றமருங் கொடியண்ணல்
    மடலார் குழலா ளொடுமன்னுங்
    கடலார் புடைசூழ் தருகாழி
    தொடர்வா ரவர்தூ நெறியாரே

    -சம்பந்தர்

    பரூச்சிலிருந்து புறப்பட்ட படகுகள் பத்து நாட்களில் மங்களூர்த் துறைமுகத்தை அடைந்தன. சரிபாதி தூரம் வந்துவிட்டோம். இதே வேகத்தில் போனால் இன்னும் பத்து நாட்களில் காழியை அடைந்து விடலாம் என்று ஆங்கிரஸ பிரமராயர் கணக்கிட்டார்.

    எல்லாம் மனிதக் கணக்கின்படியா நடக்கிறது? மங்களூரைத் தாண்டியதும் தென்மேற்குப் பருவக்காற்று துங்கியது. பலத்த காற்றில் படகு பின்னோக்கி நகர ஆரம்பித்தது. அவ்வப்போது மழையும் பெய்தது. பாய்களைச் சுருட்டி வைத்துவிட்டு மாலுமிகள் கோலை ஊன்றிப் படகைத் தள்ளத் தொடங்கினர். பயணிகளும் துடுப்புப் போட்டனர். பயணம் மெதுவாகச் சென்றது.

    அடுத்த பத்து நாட்களில் முன் சென்றதில் பாதி தூரம்தான் செல்ல முடிந்தது. கன்னியாகுமரியை அடைந்தார்கள். இங்கு மழை விடாமல் வலுவாகப் பெய்யத் தொடங்கியது. படகில் நிரம்பும் தண்ணீரை அனைவரும் சேர்ந்து இறைத்துக் கொண்டு, நனைந்து கொண்டே படகில் பயணம் செய்தனர். நல்ல வேளையாக உணவுப் பொருட்கள் மரப்பெட்டிகளுக்குள் இருந்தபடியால் அவை நனையாமல் தப்பின. ஆனால் கரையில் இறங்கி உணவு சமைப்பதற்கு வழி இல்லை. இறங்கும் இடத்தில் ஆங்காங்கு கிடைக்கும் எரிதுரும்புகளைச் சேகரித்துத்தான் அடுப்பு மூட்டுவது வழக்கம். கரை நெடுகிலும் சவுக்குத் தோப்புகள் இருந்தன. இது வரை பிரச்சினை ஏற்படவில்லை. இப்போது இறங்கின இடத்தில் சத்தைகள் எல்லாம் நனைந்து கிடந்தன. அரணிக்கட்டையில் உண்டாகும் நெருப்பைப் பற்ற வைக்கப் பயன்படாது.

    இந்த வருடம் பருவக்காற்று நான்கு நாட்கள் முன்னதாகத் துவங்கிவிட்டது. நாம் ஒரு வாரம் முன்னதாகப் புறப்பட்டிருக்க வேண்டும் என்று ஆங்கிரஸ பிரமராயர் நினைத்துக் கொண்டார். நம் செயலில் என்ன இருக்கிறது? எல்லாம் இறைவன் சித்தம் என்று தேர்ந்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பைச் சுமந்திருந்த அவர் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்தித்தார்.

    ஆண்களில் சிலரை அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றார். பொற்காசுகளைக் கொடுத்துப் பழங்கள், காய்கறிகள், தேங்காய்கள் எவ்வளவு கிடைக்குமோ எல்லாவற்றையும் வாங்கிச் சுமந்து கொண்டு எல்லோரும் படகுத் துறைக்கு வந்தனர். அவற்றை உண்டு அன்றைய பொழுதைப் போக்கினர்.

    ராமேசுவரம் வந்தார்கள். அங்கு  மழை  பெய்திருக்கவில்லை. காற்றும் இல்லை. கிழக்குக் கரைக்கு வந்து விட்டோம். இனி பயமில்லை. நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் என்று சொல்வார்கள். இறைவனை நாம் மறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் இவ்வாறு நம்மைச் சோதனை செய்தான் போலும் என்று சமாதானம் செய்துகொண்டார். குமரியை விட்டுப் புறப்பட்ட ஐந்தாம் நாள் மறைக்காடு துறைமுகத்தை அடைந்தார்கள்.

    இறைவனின் சோதனை தொடர்ந்தது. இரண்டு நாட்கள் இரவும் பகலும் மழையில் நனைந்து கொண்டே வந்ததால் அனைவருக்கும் சளி பிடித்தது. எல்லோரும் இருமிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோருக்குக் காய்ச்சலும் வந்து விட்டது. மாலுமிகளும் சோர்ந்து போய்விட்டார்கள். மறைக்காடு துறைமுகத்திலோ அல்லது நாகையிலோ இறங்கிவிடலாம் என்று ஆங்கிரஸ பிரமராயர் முதலில் நினைத்தார். ஆனால் அரச ஆணை காழித் துறைமுகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்பது. காழியில் அரசருக்கு மட்டுமே தெரிந்த ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது, அதை மீறக்கூடாது என்று எண்ணினார். அவருக்கும் உடல்நிலை சரியில்லை என்றாலும் சமாளித்துக்கொண்டு எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். மாலுமிகள் இருக்கின்ற சக்தியை எல்லாம் திரட்டிக் காழித் துறைமுகத்தில் இருந்த உப்பனாற்றில் பயணித்து ஓரிடத்தில் படகை நிறுத்தினார்கள்.

    வடமர்களும் நயினார்களும் மாலுமிகளும் கரையில் இறங்கிப் படுத்துக் கொண்டார்கள். ஆங்கிரஸர் மட்டும் தன் உடல் நோவைப் பொருட்படுத்தாது நடந்து சென்று பஞ்சாயத்துத் தலைவரிடம் போய்த் தெரிவித்தார். சற்று நேரத்தில் அங்கு உள்ளூர் மக்கள் பெரும் திரளாகக் கூடிவிட்டார்கள். அவர்கள் வந்தவர்களுக்குத் தேவையான உணவு சமைத்துக் கொடுத்தார்கள். அந்த உணவும், அவர்களின் அன்பான உபசரிப்பும், இடைவிடாத ஒரு மாதப் பயணத்துக்குப் பின் கிடைத்த ஓய்வும் அவர்களது உடல் நலத்தை மீட்டுத் தந்தன.

    மறைக்காடு வந்தவுடன் ஒரு குதிரை வீரன் மூலமாகச் செய்தி அனுப்பியிருந்ததால் மறுநாள் அரசர் அங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  அதன்படியே அரசர் செந்தீ வளவன் அமைச்சர்கள் குதிரை வீரர்கள் புடைசூழ அங்கு வந்தார். அவரைக் கண்டதும் பிராமணர்கள் ‘ஜய விஜயீ பவ’ என்று வாழ்த்தினர்.

    மூவாயிரம் வடமர்கள் ஒருங்கே நின்ற காட்சி அரசரின் மனத்தை நெகிழவைத்தது. நாட்டின் நலனுக்காகத் தான் போட்டிருக்கும் திட்டம் சரிவர நிறைவேறி வருவதற்காக அவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். நயினார்களைக் கொண்டு அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யச் செய்தார். அப்பொழுது ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் எல்லோரும் சேர்ந்து  ஒரே குரலில் ருத்ரத்தைப் பாராயணம் செய்தனர். சரியான ஸ்வரத்தோடு வந்த அப்பெருங்கோஷம் விண்ணைப் பிளந்தது. கேட்டுக் கொண்டிருந்த அரசருக்கும் மற்ற உள்ளூர் மக்களுக்கும் புல்லரித்தது.

    அரசர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அந்த லிங்கத்தின் முன் விழுந்து வணங்கினார். மந்திரி பிரதானிகள் வியப்பில் வாயடைத்து நின்றனர். அரசர் தரையில் விழுந்து வணங்கிய காட்சி இதுவரையில் அவர்கள் கண்டிராத, கேட்டிராத ஒரு நிகழ்ச்சி.

    எழுந்திருந்த அரசர் பேசத் தொடங்கினார். “வடமர்களைச் சோழநாடு வரவேற்கிறது. நீங்கள் அனைவரும் வீடு, வாசல், சொந்த பந்தம், பிறந்த மண் எல்லாவற்றையும் துறந்து என் வேண்டுகோளை ஏற்று இங்கு வந்ததற்கு நானும் இந்த நாடும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு கிராமத்தில் குடி அமர்த்தப்படும். அங்கு உங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கப்படும். அங்கெல்லாம் ஒரு கோயிலும் கட்டப்படும். அங்கு லிங்கப் பெருமானைப் பூசை செய்ய உள்ளூர் மனிதர் ஒருவர் நியமிக்கப்படுவார். உங்கள் வேலை அங்கு உட்கார்ந்து வேதம் ஓதுதலும், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதும் மட்டுமே. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வேலி நிலம் இறையிலி ஆக்கப்படும். அதாவது அதற்கு வரி அரசு அதிகாரிகளிடம் கட்ட வேண்டியதில்லை. அந்த அளவு தானியம் உங்களுக்கு மானியமாக அளிக்கப்படும். மக்களிடம் பரவியுள்ள நாத்திகத்தைப் போக்கி நல்வழிப்படுத்தும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன்.

    “இன்று நீங்கள் எண்ணூறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழலாம். இந்த எண்ணூறு எட்டாயிரமாக எட்டு லட்சமாகப் பெருகட்டும். அத்தனை பேரும் சோழநாட்டு மக்களாகவே கருதப்படுவீர்கள். உங்களில் வயதில் மூத்த தலைவர்களைக் கொண்ட நூறு குடும்பங்கள் இங்கேயே காழியிலேயே தங்க வைக்கப்படுவீர்கள். முன்னூறு குடும்பங்கள் குடந்தையைத் தலைமையிடமாகக் கொண்டு அருகிலுள்ள கிராமங்களில் குடியமர்த்தப்படுவீர்கள். மற்றொரு முன்னூறு குடும்பங்கள் படகில் அழைத்துச் செல்லப்பட்டு நாகையைத் தலைமையிடமாகக் கொண்டு பக்கத்திலுள்ள கிராமங்களில் குடியமர்த்தப்படுவீர்கள். மீதம் உள்ள நூறு குடும்பங்கள் காஞ்சியில் தங்கவைக்கப்படுவீர்கள். குடந்தை, நாகை, காஞ்சி ஆகிய மூன்று இடங்களிலும் உள்ள கோவில்கள் உங்கள் தாய்நாட்டை நினைவூட்டும் வகையில் காயாவரோகணம் என்று பெயரிடப்படும். ஒவ்வொரு காயாவரோகணத்திலும் ஒரு அரசு அதிகாரி இருப்பார். உங்களுக்கு எந்தக் குறை இருந்தாலும் அவரிடம் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.”

    அரசரின் பின்னால் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த ஆங்கிரஸர் அருகில் இருந்த அச்சுத பிரமராயரிடம் கிசுகிசுத்தார். “அரசர் என்னவோ காஞ்சியில் குடியமர்த்துவோம், கோயில் கட்டுவோம் என்கிறாரே, அது பல்லவர் வசம் அல்லவா இருக்கிறது?” என்றார்.

    அவர் காதோடு அச்சுதர் விடையளித்தார். “நீங்கள் வடநாடு சென்றிருந்த போது நடந்தது உங்களுக்குத் தெரியாது. பல்லவ மன்னனுக்கு நம் அரசர் ஓலை அனுப்பினார். பண்டைத் தமிழ்ச் சமயத்தைப் புதுப்பித்து மக்களிடையே புத்துணர்ச்சி ஊட்டுவதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன். சோழநாட்டில் பிறந்த ஒரு இறையடியார் உங்கள் நாட்டில் சித்தி அடைந்துள்ளார். அவர் நினைவைப் போற்றும் வகையில் அந்த ஊருக்கு ஆலங்காடு என்று பெயரிட வேண்டுகிறேன். மேலும் வடதேசத்திலிருந்து வரும் நூறு அந்தணர்களுக்கு காஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறையிலி நிலம் அளிக்க வேண்டும் என்பதும் என் வேண்டுகோள். உங்கள் ஆட்சிப் பகுதி ஒரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்ற உரிமையில் இதைக் கூறவில்லை. இன்று நாம் இருவருமே களப்பிரர்களுக்கு அடிமையாகச் சம அந்தஸ்தில் இருக்கிறோம். நமக்குள் எதுவும் பகைமை இல்லை. உங்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றும் எண்ணமோ, அதைச் செயலாற்றும் திறனோ எங்களுக்கு இல்லை என்பதை அறிவீர்கள். இது மக்களிடையே இறை உணர்வை வளர்ப்பதற்கான முயற்சியே அன்றி இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. மற்ற விவரங்கள் இது கொண்டுவரும் எங்கள் அரசு அதிகாரி சொல்வார் என்று எழுதி அனுப்பினார். பல்லவ மன்னர் ஒப்புக் கொண்டார். அதனால்தான் காஞ்சியில் சிலரைக் குடியமர்த்தத் திட்டம்.”

    மன்னரின் தொலைநோக்குப் பார்வையை ஆங்கிரஸர் வியந்தார்.

    மன்னர் தொடர்ந்து பேசினார். “சோழநாட்டின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட நான் மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் இறைவன் நிறைவேற்றி வருகின்றான். இந்தக் காழியில் ஒரு மகான் தோன்றி சமணத்தை நிர்மூலமாக்குவதாக ஒரு கனவு கண்டேன். அதனால்தான் நீங்கள் அனைவரும் இந்தக் காழி மண்ணில் காலடி வைக்க வேண்டுமென்று விரும்பினேன்.”

    “நல்ல வேளை. நான் இவர்களை மறைக்காடு அல்லது நாகையில் இறக்கிவிடாமல் இங்கு கொண்டுவந்தேன். அவர் காழிக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் இப்போது புரிகிறது” என்று சொல்லிக்கொண்டார் ஆங்கிரஸர்.

    அரசர் தொடர்ந்தார், “காழியைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. இதுதான் சமணம் குறைவாகப் பரவியுள்ள பகுதியின் வடக்கு எல்லை. கொள்ளிடத்துக்கு வடக்கில் தில்லை, பாடலிபுரம் முதலான இடங்கள் என் ஆட்சிக்கு உட்பட்டவைதான் என்றாலும் இங்கெல்லாம் சமணம் தலை தூக்கி நிற்கிறது. தில்லையில் சமணர்கள் வெறியாட்டம் ஆடுகின்றனர். வேத சமயத்தைச் சார்ந்தோரை வாதத்திற்கு இழுப்பதும், வம்பு செய்வதும் வசை பாடுவதும் எல்லை மீறிப் போகவே அங்குள்ள அந்தணர்கள் மேற்கே மலைநாட்டுக்குப் போய்விட்டனர். அவர்கள் பூசித்து வந்த கோவிந்தராஜர் விண்ணகரம் மூடியே கிடப்பதால் முட்செடிகளும் புதர்களும் மண்டியுள்ளன. அந்த வளாகத்தில் சமணர்கள் யட்சிணிக்கு ஒரு ஆலயம் அமைத்துள்ளனர்.

    “அதற்கும் வடக்கே போனால் காஞ்சிபுரம் சமண சாக்கியக் கல்விக்கூடமாகவே ஆகிவிட்டது. இங்கு பல பிராமணர்கள் சமண சாக்கியக் கல்வி பயின்று கங்கைக்கரையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்கள். காஞ்சிபுரம் பல்லவர் வசம் உள்ளது. தற்போதைய பல்லவ மன்னர் வேத சமயத்தில் பற்று உடையவர். அவருக்குச் சொந்தமான பகுதியில் கோயில் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறார்.  சமணக் கேந்திரமான பாடலிபுரத்தை வடக்கு, தெற்கு ஆகிய இரு புறங்களிலிருந்தும் தாக்குவதுதான் என் திட்டம்.

    “உலக வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் மறு உலகத்தையே நினைத்துக் கொண்டிருக்கிற சோம்பேறி நிலை மாறிச் சோழமக்கள் கல்வியிலும் கலைகளிலும் சிறப்புற்று விளங்க வேண்டும். இறை நம்பிக்கையின் வலிமை பெரியது. அது செயற்கரிய செயல்களைச் செய்விக்கும். காழி மயானத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலுக்கு இப்பொழுது கீற்று வேய்ந்த கூரை போடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அது பெரிய மாளிகையாக உருவாகும். இது போன்ற கோயில்கள் சோழநாடு முழுவதும் பல கட்டப்படும். கருங்கல்லே கிடைக்காத சோழநாட்டில் தொலைதூரத்திலிருந்து கல் கொண்டு வந்து அம்மி கல்லுரல்கள் மட்டும் செய்து கொண்டிருக்கிறோம். வருங்காலத்தில் என்றுமுள ஈசற்கு என்றுமுள கோயிலாகக் கருங்கல்லாலும் கோயில் கட்டுவோம். ஈசனின் பெருமையைத் தொலைதூரம் வரை பறை சாற்றுவதற்காக அவற்றின் மேல் வானை முட்டும் விமானங்கள் கட்டுவோம்.

    “எவர்க்கும் தலைவணங்காத நான் இன்று நிலம் தோய்ந்து வணங்கியது என் நாட்டு மக்களுக்கு வியப்பாக இருக்கும். நானும் என் வம்சத்தவரும் சிவனுக்கு மட்டுமே தலைவணங்குவோம். சிவபாத சேகரர்களாகவே இருப்போம்.”

    அரசர் பேசி முடித்தார். அனைவரும் ‘ஜய விஜயீ பவ’ என்று முழங்கினர்.

    Share
  • கூடு கலைத்(ந்)த கோலம்!

    -றியாஸ்முஹமட்

    எனதன்பு மகளே…
    அங்கே தெரிவது
    வெறும் காட்டுத் தீ அல்ல
    அது நம்ம வீட்டுத் தீ !

    காமவெறியர்களால்
    பந்தாடப்பட்டவர்களில்
    நானும் ஒருத்தி !

    வேங்கை போன்ற உன் தந்தை
    என்னை ஏங்க வைத்துப் போன
    கதை தெரியுமா மகளே?

    நீ பிறந்து உன்னைத் தொட்டிலில் சேர்க்கும் முன்னே !

    உன் தந்தையைக்
    காணாமல் போனோர்
    பட்டியலில் சேர்த்து விட்டார்கள் கண்ணே !

    கிணறுகளிலும் புதர்களிலும்
    பிணங்கள் கண்டெடுக்கப்படும் போதெல்லாம்,

    அடையாளம் காணவென எனக்கு அழைப்பு விடுக்கப்படும் !

    அங்கே அடையாளம் காணச் சென்ற என்னை அடைத்து வைத்து உரியானமாக்கப்படும் !

    போராளி என்று என்னைப் பொல்லால்  அடிப்பான் !
    வந்தேறி என்று வயிற்றில்
    உதைப்பான் !

    சோறு தண்ணீர் இல்லாமல்  சுருண்டு படுப்பேன் !
    திரண்டு வந்து மேய்ந்து விட்டுச் செல்வார் மகளே !

    ஈழத்து ஈசல்கள் நாங்கள்
    ஈவிரக்கமற்ற பாவிகள் அவர்கள்!

    யாரிடம் போய்க் கேட்பது?
    எங்கே போய்  நான் தேடுவது?
    என் கூடு கலைந்த கோலம் பாரு
    இந்தக் குருவிக் கூட்டை கலைத்தவன் யாரு ?

    தேடித் தேடியே சருகானேன்
    வாழாமலேயே வயதானேன்!

    சிறுபான்மையில் சிறுநீர் கழித்துப்
    பெரும்பான்மையில் பன்னீர் தெளிக்கும் காடையர்களின்
    ஆட்சி மகளே
    கபடிகளின் ஆட்சி
    இனி என்றுதான் நமக்கு மீட்சி ?

    அழாதே மகளே அழாதே !
    வெந்து மனம் உருகாதே!

    உன் தந்தை  இருக்கிறார்
    அவர்காணாமல் போனோர்
    பட்டியலில்  பத்திரமாகத்தான்
    இன்றும்  இருக்கிறார் !

    அழாதே மகளே அழாதே !
    வெந்து மனம் உருகாதே!!

     

    Share
  • சூன்யத்தின் மறுபக்கம்…

    -கவிஜி 

     இருமுறை
    தூக்குப் போட்டும்
    தப்பித்துக் கொண்டவர்…
    ஒருநாள்
    திடும்மெனக் காணாமல்
    போனவர்…

    ஏனோ அவரை
    நாங்கள் ஒருபோதும்
    தேடவேயில்லை!

    இன்றும் மிகப் பெரிய
    முகப்பறையில்
    தனியாக, புகைப்படமாய்த்
    தொங்கிக் கொண்டிருக்கும்
    தாத்தா-
    எனக்குச் சொல்ல
    ஒன்றுமில்லை என்பது போலப்
    பார்க்கிறார்!

    நாங்களும் கேட்காத
    காதுடன்தான்
    அறையைக் கடக்கிறோம்!

    அறை முழுக்க
    நிரம்பிக் கிடப்பதாகத்
    தோன்றுகிறது
    சூன்யத்தின் வெளிச்சம்
    அல்லது தாத்தாவின் நீட்சி!

     

    Share
  • காலம் (15)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x1501111111

    விடியும் பொழுதே வினைகள் விலகும் !
    முடியும் முனைப்பே முழுமைத் துடிப்பை
    உணர்த்தி உயர்த்தும் ! உடனே எழுவாய் !
    மணக்கிற வாழ்வுன் மதி. (141) 20.05.2015

    நிலமெல்லாம் வீடானால் நெற்பயிர்க் கெங்கு
    நிலமென்ற கேள்வி நிலைக்கும் – உலகில்
    விவசாயம் ஓங்கினாலே வீடுயரும் ! பச்சை
    நிறச்சாயம் பூமி நிறம். (142) 21.05.2015

    அழுதழுது என்ன ! அகமாத்மா சுத்தம் !
    பழுதேதும் வாராது ! பந்தம் அழுதாலும்
    பத்துநாள் போனவுடன் பாயாசம் தேடுமே !
    முத்த னறிவான் முதல். (143) 22.05.2015

    “ஆண்டவன் சுவாமிகளுக்கு சதாபிஷேகம்”

    பெருமாளைக் கண்டதோர் பேரின்பம் எங்கள்
    குருவின் தரிசனம் கூட்டித் தருகிறது !
    ஆண்டவன் என்றுமே ஆசார்யன் தோற்றமாய்
    வேண்டினேன் ஆண்டவா வீடு. 21.05.2015

    காக்காய் கரைந்தால் கனிவான அன்பர்கள்
    ஷோக்காய் விருந்துக்கு ஜோடியாய் வாக்காய்
    வருவார்கள் ! காக்கை வயிற்றுப் பசியில்
    வரும்சத்தம் “நல்விருந்தே வா !” (144) 23.05.2015

    “பாசம்” கவலையின் பாலுறவு ; “அன்பென்றால்”
    நேசக் கரம்நீட்டும் நெஞ்சுறவு – மாசிலா
    நற்”கருணை” எல்லோரும் நம்முறவாய்ப் பார்க்கின்ற
    பற்றிலா ஞானப் பனி. (145) 24.05.2015

    பணக்கார பந்தாவில் பாயாசம் ஊட்டும்
    மணப்பந்தல் நாடகங்கள் மாயம் – குணத்தோடு
    சும்மா கதைசொல்லிச் சோறுதரும் பெற்றநம்
    அம்மாவி(ன்) அன்பே அமுது. (146) 25.05.2015

    அவன்முங்கிக் கொண்டான் அழகிய முத்து !
    தவமதுதான் ! நன்கு தனியாய் , கவனித்தால்
    பூவாய் மலர்ந்து புறப்படும் வாசமாய்
    ஆவாய் உனக்குள்ளே ஆழ்ந்து. (147) 26.05.2015

    விறுவி ரெனவே விரைந்து நடக்கும்
    எறும்பு ! தடைகளை எல்லாம் திரும்பி
    எதிர்த்துக் குறியாய் இயல்பாகப் போகும் !
    பதறாது சென்றால் பலன். (148) 27.05.2015

    வெற்று மொழிகளில் வேதாந்தம் பேசலாம்
    முற்றும் துறந்த முனிபோலச் சொற்களால்
    பற்றைத் துறக்கலாம் ! பாசாங்கு நாடகங்கள்
    சற்றும் உதவாச் சரக்கு. (149) 28.05.2015

    குப்பையைக் கூட்டிக் குவித்த இடத்தைநாம்
    எப்படியோ தூய்மை இடமாக்க செப்படி
    வித்தைகள் செய்கிறோம் ! வீசிய வாசனை
    மொத்தமாய்ப் போக முயல். (150) 29.05.2015

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 8

    சி. ஜெயபாரதன்.

    kahlil-gibran

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

     

    மகா மேதைகள்

    என் தேசத்தின் ஊழ்விதி
    _____________________________________

    “உன் தேசத்தின் ஊழ்விதியும்
    என் தேசத்தின் ஊழ்விதியும்
    இனி எவ்விதம் இருக்கும் ?
    எந்தப் பூத வேந்தன் பரிதிக்கு
    முன்னால்
    நாம் பிறந்து வளர்ந்து
    நம்மை ஆடவர் மாதராய்
    ஆளாக்கிய குன்றுகளையும்,
    சமவெளிகளையும் ஆக்கிரமிப்பான் ?
    புதிய யுகம் ஒன்று காலையில்
    புலர்ந்து
    லெபனான் சிகரத்தின் மீது தோன்றுமா ?
    ஏகாந்தனாய் உள்ள
    ஒவ்வொரு சமயத்திலும் நான்
    இந்த வினாக்களை
    என் ஆத்மாவிடம் கேட்கிறேன்.
    ஆனால்
    ஊழ்விதி அதிபனைப் போல்
    என் ஆத்மா
    ஊமையாக இருக்கிறது.”

    – கலில் கிப்ரான் (The Giants)

    என் தேசத்தின் ஊழ்விதி
    _____________________________________

    இராப் பகலாகச் சிந்திக் காதவர்
    எவர் உங்களில் இருக்கிறார்
    போதை ஏறிய
    பூத மன்னர் ஆட்சியில்
    விதவைகள் கண்ணீரும்
    அனாதைகள் அழுதிடும் நீரும்
    விழுந்திடும்
    உலகத்து ஊழ் விதியை
    ஒரு பொழு தேனும் எண்ணாமல் ?
    பரிணாம விதியை நம்புவோரில்
    ஒருவன் நானும் !
    பூரண விடுதலைப் புரட்சிகள்
    கோர மாந்தரால்
    உதித்தெழும் என்று
    நம்புவோன் நான் !
    மதங்களும் அரசாங் கமும்
    உன்னத பீடத்துக் குயரும் என்று
    நம்புவோன் நான் !

    எனைச் சுற்றி இருப்பவர்
    அனைவரும்
    பூதங்கள் உதிப்பதைக் காணும்
    குள்ளர்கள் !
    தவளைகள் போல்
    கத்துவார் இந்தக் குள்ளர் !
    இவ்வுலகம் காட்டு மிராண்டிகள்
    இருப்பிட மாய்த்
    திருப்பி வந்துள்ளது !
    விஞ்ஞானக் கல்வி படைத்தவை
    இந்தப் புது ஆதி வாசிகளால்
    அந்த மாகி அழிந்தன !
    கற்காலத்துக் குகை வாசிகளாய்
    தற்போது மாறி விட்டோம் !
    நாம் படைத்த
    நாச எந்திரங்களும்
    நுணுக்கத் தொழிற் துறைக்
    கொலைக் கருவிகளும்
    மினுப்பதைத் தவிர
    நம்மை வேறெதுவும்
    தனித்துக் காட்டு வதில்லை !
    ___________________________

    தகவல் :

    1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

    2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

    3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

    4. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris [1968]

    5. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

    For further reading:

    This Man from Lebanon by B. Young (1945);

    This Man from Lebanon by B. Young (1945);

    Kahlil Gibran: A Biography by M. Naimy (1959);

    The Parables of Kahlil Gibran by A.S. Otto (1963);

    Kahlil Gibran by K.S. Hawi (1963);

    An Introduction to Kahlil Gibran by S.B. Bushrui (1970);

    Kahlil Gibran: The Nature of Love by A.D. Sherfan (1971);

    Kahlil Gibran by J. Gibran and K. Gibran (1975);

    Gibran of Lebanon, ed. by S.B. Bushrui and P. Gotch (1975);

    The Meaning of Kahlil Gibran by M.S. Daoudi (1982);

    The Lebanese Prophets of New York by N. Naimy (1985);

    Kahlil Gibran of Lebanon by S.B. Bushrui (1987);

    Modern Arabic Poetry, ed. by Salma Khadra Jayyusi (1987);

    Kahlil Gibran: A Prophet in the Making by W. Shehadi (1991);

    Kahlil Gibran: His Life and World by Jean Gibran [1998]

    For further information:

    The Prophet By Kahlil Gibran

    A Multi media Tribute – Suom.: Gibranin keskeinen tuotanto on julkaistu suomeksi nimellயூ Idn ja lnnen profeetta, teos Ajan virta sislt Gibranin mietelauseita. Teokseen Mestarin sanoja (1993) on koottu Gibranin kaksitoista kirjaa.

    Selected works:

    • AL-MUSIQA, 1905

    • ARA’IS AL MURUDJ, 1906 – Nymphs of the Valley

    • STONEFOLDS, 1907

    • ON THE TRESHOLD, 1907

    • AL-ARWAH AL-MUTAMARRIDA, 1908 – Spirits Rebellious – Kapinalliset henget

    • DAILY BREAD, 1910

    • FIRES, 1912

    • AL-AGNIHA AL-MUTAKASSIRA, 1912 – The Broken Wings – Srkyneet siivet

    • DAM’AH WA-IBTISAMAH, 1914 – A Tear and a Smile

    • THE MADMAN, 1918 – Jumalan tuli

    • TWENTY DRAWINGS, 1919

    • AL-MAWAKIB, 1919 – The Procession

    • AL-’AWASIF, 1920

    • THE FORERUNNER, 1920 – Edellkvij

    • THE PROPHET, 1923 – Profeetta

    • AL-BADA’I’ WA-AL-TARA’IF, 1923

    • SAND AND FOAM, 1926 – Merta ja hiekka

    • JESUS, THE SON OF MAN, 1928 – Jeesus, ihmisen poika, suom. Helmi Krohn

    • THE EARTH GODS, 1931 – Maan jumalat

    • THE WANDERER, 1932 – Vaeltaja

    • GARDEN OF THE PROPHET, 1933 – Profeetan puutarha

    • PROSE POEMS, 1934 – Temppelin portilla

    • TEARS AND LAUGHTER, 1946

    • THE SECRETS OF THE HEART, 1947

    • SPIRIT REBELLIOUS, 1948

    • NYMPHS OF THE VALLEY, 1948

    • A TREASURY OF KAHLIL GIBRAN, 1951

    • THE BROKEN WINGS, 1957

    • THE PROCESSION, 1958

    • A SELF PORTRAIT, 1959

    • THOUGHTS AND MEDITATIONS, 1960

    • A SECOND TREASURY OF KAHLIL GIBRAN, 1962

    • SPIRITUAL SAYINGS, 1962

    • THE VOICE OF THE MASTER, 1963 – Mestarinni

    • MIRRORS OF THE SOUL, 1965

    • THE WISDON OF GIBRAN, 1966

    • SPIRITUAL SAYINGS, 1970

    • PROPHESIES OF LOVE, 1971

    • BELOVED PROPHET, 1972

    • LAZARUS AND HIS BELOVED, 1973

    • THE DEATH OF THE PROPHET, 1979 (as remembered by Almitra, channeled through Jason M. Leen)

    • DRAMAS OF LIFE, 1982

    • BLUE FLAME, 1983

    • KAHLIL GIBRAN: PAINTINGS AND DRAWINGS 1905-1930, 1989

     

    Share
  • பொருளாதாரத்தின், புதிய வளர்ச்சி வங்கி

    பவள சங்கரி

    தலையங்கம்

    brics-bankபன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப், மற்றும் உலக வங்கி ஆகியவைகளுக்கு மாற்று வங்கியாக செயல்படும், ‘புதிய வளர்ச்சி வங்கி’ திறப்பு விழா, சமீபத்தில் சீன வர்த்தக நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரில் நடந்தேறியது. பிரிக்ஸ் நாடுகளான, பிரேசில், உருசுயா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து இந்த வங்கியை துவக்கியுள்ளது. இவ்விழாவில் காமத் , சீன நிதியமைச்சர் லூ ஜிவெய் மற்றும் ஷாங்காய் மேயர் யாங் சியாங் ஆகியோர் கலந்துகொண்டனர். சென்ற ஆண்டு (2014) ஜூலை மாதம் பிரேசில் நாட்டின் போர்டலிசா நகரில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் முதல் நாள் உச்சி மாநாட்டில் இறுதி வடிவம் பெற்ற, வங்கியை உருவாக்கும் இத்தீர்மானத்தின்படி ‘புதிய வளர்ச்சி வங்கி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் நிர்வாகத்தில் பிரிக்ஸ் நாடுகளான ஐந்து நாடுகளும் சம பங்கு வகித்திருக்கும். உறுப்பினர்களின் கோரிக்கைகளை கவனத்துடன் கேட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவிருக்கும் இந்த வங்கிக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்க வேண்டி இதன் முதல் தலைவரான இந்தியாவைச் சேர்ந்த, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் உயரதிகாரியான கே.வி.காமத் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நிர்வாக முறைகளில் புதிய முறைகளைக் கடைபிடிக்கவுள்ளதாகக் கூறிய சீன நிதியமைச்சர் லூ ஜீவெய் , இந்த புதிய வளர்ச்சி வங்கி ஏற்கெனவே இயங்கி வரும் பன்னாட்டு நிதியமைப்புகளுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாகவும் செயல்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தொடக்கத்தில் 50 பில்லியன் டாலர்களுடன் தொடங்கப்படும் இந்த வங்கி அடுத்த 2 ஆண்டுகளில் 100பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்படும் வகையில், வளரும் நாடுகளில், தேவையுள்ள நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு இந்த வங்கி பெரிதும் உதவக்கூடிய வகையில் செயல்படும் என்றார். பிரிக்ஸ் நாடுகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் கூட்டு நிதித் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டதே இந்த வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் தங்கள் உள்நாட்டு திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளுக்காகத் தேவைப்படும் பெரியளவிலான நிதிகளை பன்னாட்டு நிதியம் அல்லது உலக வங்கியிடம்தான் கடன் வாங்கவேண்டி உள்ளது. கடன் பெறுவதில் சில நேரங்களில் அமெரிக்காவின் நெருக்கடிகளையும் சந்திக்கவேண்டிய இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த வங்கி உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. உலக பொருளாதாரத்தில் 2-வது இடத்தில் இருக்கும் சீனா, முதல் 20 ஆண்டுகளுக்கு இந்த வங்கி நிர்வாகத்திற்கு தலைமை ஏற்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளது.

    இந்த வங்கியில் மொத்த மூலதனத்தின் பெரும் பகுதி, சீனா மற்றும் இந்தியா அளித்துள்ளனர். இந்த வங்கி தெற்காசிய நாடுகளை இணைத்து பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புவோம். ஐரோப்பிய நாடுகள் இணைந்து யூரோவை உருவாக்கியது போன்று தெற்காசிய நாடுகள் அனைத்தும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வங்கி மூலமாக பணப்பரிமாற்றத்திற்கு ஒரு பொது காரணியை உருவாக்கினால், தெற்காசிய நாடுகளும், கிழக்காசிய நாடுகளும் மிகுந்த வளர்ச்சியடைந்து ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு ஒரு மாற்று பொருளாதாரமாக உருவெடுக்கும். சந்தை மதிப்பிலிருந்து டாலர் மற்றும் யூரோவின் மதிப்புகளும் சரியும் வாய்ப்பும் அதிகரிக்கலாம். இந்தியா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாகவும் இவை உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.

    Share
  • பாரதிக்குத் தெரிந்த மொழிகள் (2)

    ஹரி கிருஷ்ணன்
    பாரதி தன் வடமொழிப் புலமையைப் பற்றி ஓரிடத்தில் போகிற போக்கில் குறிப்பிட்டிருக்கிறான். தற்போது சுயசரிதை என்றறியப்படும் ‘கனவு‘ நெடும்பாபடலில் குருதரிசனம் என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு சொல்கிறான்:
    அன்றொருநாள் புதுவைநகர் தனிலே கீர்த்தி
    அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
    என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
    இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
    முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
    மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
    என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
    இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 

     

    புதுவையில் ஈசுவரன் தர்மாராஜா வீதியில் இருந்த இராஜாராமையர் என்ற நாகப்பட்டனத்துப் பார்ப்பனர் ஒருவர் தன்னுடைய தந்தை முன்பொருமுறை உபநிஷதை தமிழில் மொழிபெயர்த்திருப்பதை என்னிடம் கொடுத்துத் திருத்தச் சொன்னார். நானும் அவர் வீட்டுக்குச் சென்று அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது குள்ளச்சாமி அங்கே வந்தார்.

     

    இந்த உபநிஷதின் மொழிபெயர்ப்பைத் திருத்தச் சொல்லிக் கேட்டுக் கொண்டாரல்லவா, அந்த இராஜாராமையர் பிற்காலத்தில் பன்னிரு உபநிடத நூல் என்ற பெயரில் அந்நூலை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து திரு மோகனரங்கன் எழுதியிருந்ததிலிருந்து: “”த்வாதச உபநிஷத்” (த்வாதச – 12)என்னும் தலைப்பில் ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் சாராம்சங்கள் அடங்கிய தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று 1914ஆம் ஆண்டு நா சு ராஜாராமய்யரால் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கப்ப்பட்டது. தமிழ் மிகவும் எளிய தமிழ் நடை. அந்தக் காலத்தில் உபநிஷத நூல்களை இந்த அளவிற்கு எளிமைப் படுத்தி வெளியிட்ட ராஜாராமன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.”

     

    ஆகவே இது ஏதோ ஒரு உபநிஷத் அன்று; பன்னிரண்டு உபநிஷதங்களின் தொகுப்பு என்று தெரிகிறது. இப்படி ஒரு மொழிபெயர்ப்பைத் திருத்தச் சொல்லி ஒருவர் பாரதியைக் கேட்டுக்கொண்டார் என்பது, பாரதியின் வடமொழிப் புலமைக்கு; போதுமானதற்கும் மேற்பட்ட சான்று.

    அடுத்ததாக ஹிந்திக்கு வருவோம்.

    சென்னை திருவல்லிக்கேணியில் ஹிந்தி வகுப்புகள் நடத்தியிருக்கிறான் பாரதி. இதுகுறித்து அவன் திலகருக்கு எழுதிய கடிதம்:
     
    hari
     
    மேற்படி கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு:
    பால பாரதா ஆபீஸ்
    திருவல்லிக்கேணி
    மதராஸ்
    தேதி: 29 மே 1908

     

    ஸ்ரீமான் பி.ஜி. திலக் அவர்களுக்கு, புனா.

     

    அன்பார்ந்த குருஜீ,

     

    சென்னை ஜன சங்கம் ஆதரவில் சென்னையில் ஒரு ஹிந்தி வகுப்பு துவக்குமாறு கேட்டுக்கொண்டு ஒரு கடிதம் கிருஷ்ண வர்மாவிடமிருந்து வந்துள்ளது. நாங்கள் ஏற்கெனவே ஒரு சிறிய வகுப்பு துவக்கியுள்ளோம். போகப் போக அதில் நிறையப் பேர் கலந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். அதனுடைய முன்னேற்றம் பற்றிப் பின்னர் தெரிவிக்கிறேன்.

     

    கல்கத்தா காங்கிரசில் வகுத்த முறைப்படி சென்னையில் ஒரு தேசிய மாகாண மாநாடு நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடுத்த காங்கிரஸ் மகாசபைக் கூட்ட விஷயம் என்ன ஆயிற்று? நமது தேசிய செயலாளர் ஸ்ரீ. சிதம்பரம் தற்போது எங்கே இருக்கிறார். உங்களுக்குத்தான் தெரியுமே. இந்த விஷயம் பற்றி எங்கள் சங்கத்துடன் கடிதத் தொடர்பு கொள்ளும்படி ஸ்ரீ கேல்கரிடம் கூறுங்கள்.

     

    தங்களன்புள்ள,
    சி. சுப்பிரமணிய பாரதி.

    (மொழிபெயர்ப்புக்கு நன்றி: சித்திர பாரதி, ஆசிரியர் ரா அ பத்மநாபன்)பாரதியின் ஹிந்தி மொழிப்புலமைக்கு வேறென்ன சாட்சியம் வேண்டும்?

     

    இதற்கு முன்னால் ஐந்து மொழிகளைக் குறிப்பிட்டிருந்தேன். வடமொழியறிவுக்கு கூடுதல் ஆதாரம் கொடுத்திருக்கிறேன். இப்போது ஹிந்திக்கான ஆதாரத்தைக் கொடுத்திருக்கிறேன். ஃபிரெஞ்சு மொழியறிவுக்கான ஆதாரம் இன்னமும் தரப்படவில்லை. தேடி எடுத்துத் தருகிறேன்.  இதுவரை ஆறுமொழிகள் கணக்கில் வந்திருக்கின்றன.  ஐந்துக்கு ஆதாரம் கொடுத்தாயிற்று.  ஒன்று நிலுவையிலிருக்கிறது.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    கண்ணிநுண் தாம்பினால் தாய் யசோதை தன்னைக்
    கட்டியது போல், பசுவை தன்கரம் என்னும் வாத்சல்யக்
    கண்ணிநுண் தாம்பினால் கட்டிப்பிடிக்கின்றான்
    கண்ணன்….தாயைப் போல் பிள்ளை….

    ”வாசல்யத் தாம்பினால் வாசுதே வன்மாடை
    சேர்த்தணைத் துக்கொள்ளும் செய்கையின், -தாத்பர்யம்,
    ”தாயைப்போல் பிள்ளை”, தரணிக்(கு) உணர்த்தவே,
    ஆயர் குலத்தோனின் அன்பு”….கிரேசி மோகன்….

    Share
  • பாரதிக்குத் தெரிந்த மொழிகள்

    ஹரி கிருஷ்ணன்

    பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது இணையத்தில் நெடுங்காலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. விக்கிபீடியா பாரதிக்கு 29 இந்திய மொழிகளும் 3 வெளிநாட்டு மொழிகளும் தெரிந்திருந்தது என்று சொல்கிறது. https://en.wikipedia.org/wiki/Subramania_Bharati இது மிகவும் தவறான தகவல். என்னதான் பாரதி நம் நேசத்துக்குரியவன் என்றாலும் இப்படிப்பட்ட மிகைநவிற்சிகள், சொல்லப்படுவதன் நம்பகத் தன்மையைப் பெரிதும் பாதிக்கின்றன. இந்தியாவின் அலுவல் மொழிகள் (official languages) மொத்தமே 22 என்னும்போது, இவற்றைத் தாண்டி வேறு என்னென்ன ஏழு மொழிகளை பாரதி அறிந்திருக்கக்கூடும் என்ற கேள்வி பிறக்கிறது.

    இது ஒருபுறமிருக்க. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் பின்வருமாறு சொல்லியிருப்பதாக ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது:

    https://www.facebook.com/note.php?note_id=124816804709

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடிய பாரதிக்கே நான்கு மொழிகள்தான் தெரியும். பதினெட்டு மொழிகள் தெரிந்த பேரா. ஹார்ட் சொன்னது அதிகாரபூர்வமாகவும் நடுநிலையாகவும் மிகச் செம்மையாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் அமைந்திருக்கிறது” என்று நெகிழ்கிறார் பேரா. மறைமலை.

    இப்போது இவற்றில் எது நடுநிலை, எது நம்பத் தகுந்தது என்றால், பாரதி எழுத்துகளின் அகச்சான்று, பாரதியுடன் நெருங்கிப் பழகினவர்களின் அகச்சான்று மூலமாகத் தொகுப்பதுதான். சற்று கடினமாக உழைக்க வேண்டிய பணி. இதற்கு சற்று காலம் பிடிக்கும் என்றாலும், ஆதாரப்பூர்வமான விவரங்களைத் தொகுக்கத் தலைப்பட்டிருக்கிறேன். இங்கே ஒரு நினைவுக் குறிப்பாக இட்டு வைக்கிறேன். எங்கெங்கே தேடவேண்டும் என்பதற்கு எனக்கே உதவக்கூடிய குறிப்புகள் என்பதால் இதை இப்போதைக்கு இங்கே போட்டு வைக்கிறேன். இந்த விவரங்களைத் தொகுத்து முடிக்கும் வரை இதில் விவாதங்கள் எழுந்தால் என்னால் விடை சொல்ல இயலாது. தொகுத்து முடிந்ததும் சொல்கிறேன் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

    இதுவரையில் மேற்போக்காகத் தொகுத்திருப்பதே ஐந்து மொழிகள். இன்னமும் இருக்கின்றன. தேடித் தருகிறேன்.

    இதுவரை தொகுத்தது:

    பாரதிக்குத் தெரிந்த மொழிகள் ஒண்ணொண்ணா ஆதாரப்பூர்வமா சொல்லிட்டே வரேன்.

    பாரதிக்குத் தமிழும் ஆங்கிலமும் தெரியும் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. கீதை உட்பட பல உபநிஷத்களை மொழிபெயர்த்திருக்கிறார். வேதரிஷிகளின் கவிதை போன்ற மொழிபெயர்ப்புகள் உள்ளன. பதஞ்சலி யோக சூத்திரத்தை மொழிபெயர்த்திருக்கிறார். ஈஸாவாஸ்யோபநிஷத், கேநோபிநிஷத் ஆகியவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். பாஞ்சாலி சபதம் வரிக்கு வரி வியாச மூலத்தின் மொழிபெயர்ப்பே என்பதை என் உரைகளின் மூலம் நிரூபித்திருக்கிறேன். ஆகவே வடமொழிப் புலமையைப் பற்றி ஐயத்துக்கிடமில்லை.

    ரெயில்வே ஸ்தானம் என்ற கட்டுரையில் பாரதி பின்வருமாறு குறிப்பிடுகிறான்: ‘எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும்.’

    பாரதி தன் கவிதையை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்து ஃப்ரெஞ்ச் பத்திரிக்கைக்கு அனுப்பியதாக பாரதிதாசன் கூறுகிறார். இடத்தை பிறகு மேற்கோள் காட்டுகிறேன்.

    பாரதியே தான் எழுதிய சீட்டுக் கவியில்,

    பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
    புலவோரும் பிறரு மாங்கே
    விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
    தாமுமிக வியந்து கூறிப்
    பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
    போற்றுகின்றார்;பாரோ ரேத்துந்
    தராதிபனே!இளசை வெங்க டேசுரெட்டா!
    நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன்

    தன் கவிதை ஃப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறான். லா மார்ஸே கீதத்தை ஒட்டித் தமிழில் ஒரு பாடல் செய்திருக்கிறான். இவையெல்லாம் என் நினைவுக்குறிப்பாகச் சொல்லி வைக்கிறேன். இதற்குரிய ஆதாரங்களையும் எடுத்துத் தருகிறேன்.

    இதுவரைக்கும் ஐந்து மொழிப் புலமை வெளிப்பட்டிருக்கிறது. மேலும் சொல்கிறேன்.

    Share