சு. கோதண்டராமன்

காழித் துறைமுகம்

vallavan-kanavu1111

அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே

-சம்பந்தர்

பரூச்சிலிருந்து புறப்பட்ட படகுகள் பத்து நாட்களில் மங்களூர்த் துறைமுகத்தை அடைந்தன. சரிபாதி தூரம் வந்துவிட்டோம். இதே வேகத்தில் போனால் இன்னும் பத்து நாட்களில் காழியை அடைந்து விடலாம் என்று ஆங்கிரஸ பிரமராயர் கணக்கிட்டார்.

எல்லாம் மனிதக் கணக்கின்படியா நடக்கிறது? மங்களூரைத் தாண்டியதும் தென்மேற்குப் பருவக்காற்று துங்கியது. பலத்த காற்றில் படகு பின்னோக்கி நகர ஆரம்பித்தது. அவ்வப்போது மழையும் பெய்தது. பாய்களைச் சுருட்டி வைத்துவிட்டு மாலுமிகள் கோலை ஊன்றிப் படகைத் தள்ளத் தொடங்கினர். பயணிகளும் துடுப்புப் போட்டனர். பயணம் மெதுவாகச் சென்றது.

அடுத்த பத்து நாட்களில் முன் சென்றதில் பாதி தூரம்தான் செல்ல முடிந்தது. கன்னியாகுமரியை அடைந்தார்கள். இங்கு மழை விடாமல் வலுவாகப் பெய்யத் தொடங்கியது. படகில் நிரம்பும் தண்ணீரை அனைவரும் சேர்ந்து இறைத்துக் கொண்டு, நனைந்து கொண்டே படகில் பயணம் செய்தனர். நல்ல வேளையாக உணவுப் பொருட்கள் மரப்பெட்டிகளுக்குள் இருந்தபடியால் அவை நனையாமல் தப்பின. ஆனால் கரையில் இறங்கி உணவு சமைப்பதற்கு வழி இல்லை. இறங்கும் இடத்தில் ஆங்காங்கு கிடைக்கும் எரிதுரும்புகளைச் சேகரித்துத்தான் அடுப்பு மூட்டுவது வழக்கம். கரை நெடுகிலும் சவுக்குத் தோப்புகள் இருந்தன. இது வரை பிரச்சினை ஏற்படவில்லை. இப்போது இறங்கின இடத்தில் சத்தைகள் எல்லாம் நனைந்து கிடந்தன. அரணிக்கட்டையில் உண்டாகும் நெருப்பைப் பற்ற வைக்கப் பயன்படாது.

இந்த வருடம் பருவக்காற்று நான்கு நாட்கள் முன்னதாகத் துவங்கிவிட்டது. நாம் ஒரு வாரம் முன்னதாகப் புறப்பட்டிருக்க வேண்டும் என்று ஆங்கிரஸ பிரமராயர் நினைத்துக் கொண்டார். நம் செயலில் என்ன இருக்கிறது? எல்லாம் இறைவன் சித்தம் என்று தேர்ந்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பைச் சுமந்திருந்த அவர் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்தித்தார்.

ஆண்களில் சிலரை அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றார். பொற்காசுகளைக் கொடுத்துப் பழங்கள், காய்கறிகள், தேங்காய்கள் எவ்வளவு கிடைக்குமோ எல்லாவற்றையும் வாங்கிச் சுமந்து கொண்டு எல்லோரும் படகுத் துறைக்கு வந்தனர். அவற்றை உண்டு அன்றைய பொழுதைப் போக்கினர்.

ராமேசுவரம் வந்தார்கள். அங்கு  மழை  பெய்திருக்கவில்லை. காற்றும் இல்லை. கிழக்குக் கரைக்கு வந்து விட்டோம். இனி பயமில்லை. நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் என்று சொல்வார்கள். இறைவனை நாம் மறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் இவ்வாறு நம்மைச் சோதனை செய்தான் போலும் என்று சமாதானம் செய்துகொண்டார். குமரியை விட்டுப் புறப்பட்ட ஐந்தாம் நாள் மறைக்காடு துறைமுகத்தை அடைந்தார்கள்.

இறைவனின் சோதனை தொடர்ந்தது. இரண்டு நாட்கள் இரவும் பகலும் மழையில் நனைந்து கொண்டே வந்ததால் அனைவருக்கும் சளி பிடித்தது. எல்லோரும் இருமிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோருக்குக் காய்ச்சலும் வந்து விட்டது. மாலுமிகளும் சோர்ந்து போய்விட்டார்கள். மறைக்காடு துறைமுகத்திலோ அல்லது நாகையிலோ இறங்கிவிடலாம் என்று ஆங்கிரஸ பிரமராயர் முதலில் நினைத்தார். ஆனால் அரச ஆணை காழித் துறைமுகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்பது. காழியில் அரசருக்கு மட்டுமே தெரிந்த ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது, அதை மீறக்கூடாது என்று எண்ணினார். அவருக்கும் உடல்நிலை சரியில்லை என்றாலும் சமாளித்துக்கொண்டு எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். மாலுமிகள் இருக்கின்ற சக்தியை எல்லாம் திரட்டிக் காழித் துறைமுகத்தில் இருந்த உப்பனாற்றில் பயணித்து ஓரிடத்தில் படகை நிறுத்தினார்கள்.

வடமர்களும் நயினார்களும் மாலுமிகளும் கரையில் இறங்கிப் படுத்துக் கொண்டார்கள். ஆங்கிரஸர் மட்டும் தன் உடல் நோவைப் பொருட்படுத்தாது நடந்து சென்று பஞ்சாயத்துத் தலைவரிடம் போய்த் தெரிவித்தார். சற்று நேரத்தில் அங்கு உள்ளூர் மக்கள் பெரும் திரளாகக் கூடிவிட்டார்கள். அவர்கள் வந்தவர்களுக்குத் தேவையான உணவு சமைத்துக் கொடுத்தார்கள். அந்த உணவும், அவர்களின் அன்பான உபசரிப்பும், இடைவிடாத ஒரு மாதப் பயணத்துக்குப் பின் கிடைத்த ஓய்வும் அவர்களது உடல் நலத்தை மீட்டுத் தந்தன.

மறைக்காடு வந்தவுடன் ஒரு குதிரை வீரன் மூலமாகச் செய்தி அனுப்பியிருந்ததால் மறுநாள் அரசர் அங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  அதன்படியே அரசர் செந்தீ வளவன் அமைச்சர்கள் குதிரை வீரர்கள் புடைசூழ அங்கு வந்தார். அவரைக் கண்டதும் பிராமணர்கள் ‘ஜய விஜயீ பவ’ என்று வாழ்த்தினர்.

மூவாயிரம் வடமர்கள் ஒருங்கே நின்ற காட்சி அரசரின் மனத்தை நெகிழவைத்தது. நாட்டின் நலனுக்காகத் தான் போட்டிருக்கும் திட்டம் சரிவர நிறைவேறி வருவதற்காக அவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். நயினார்களைக் கொண்டு அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யச் செய்தார். அப்பொழுது ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் எல்லோரும் சேர்ந்து  ஒரே குரலில் ருத்ரத்தைப் பாராயணம் செய்தனர். சரியான ஸ்வரத்தோடு வந்த அப்பெருங்கோஷம் விண்ணைப் பிளந்தது. கேட்டுக் கொண்டிருந்த அரசருக்கும் மற்ற உள்ளூர் மக்களுக்கும் புல்லரித்தது.

அரசர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அந்த லிங்கத்தின் முன் விழுந்து வணங்கினார். மந்திரி பிரதானிகள் வியப்பில் வாயடைத்து நின்றனர். அரசர் தரையில் விழுந்து வணங்கிய காட்சி இதுவரையில் அவர்கள் கண்டிராத, கேட்டிராத ஒரு நிகழ்ச்சி.

எழுந்திருந்த அரசர் பேசத் தொடங்கினார். “வடமர்களைச் சோழநாடு வரவேற்கிறது. நீங்கள் அனைவரும் வீடு, வாசல், சொந்த பந்தம், பிறந்த மண் எல்லாவற்றையும் துறந்து என் வேண்டுகோளை ஏற்று இங்கு வந்ததற்கு நானும் இந்த நாடும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு கிராமத்தில் குடி அமர்த்தப்படும். அங்கு உங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கப்படும். அங்கெல்லாம் ஒரு கோயிலும் கட்டப்படும். அங்கு லிங்கப் பெருமானைப் பூசை செய்ய உள்ளூர் மனிதர் ஒருவர் நியமிக்கப்படுவார். உங்கள் வேலை அங்கு உட்கார்ந்து வேதம் ஓதுதலும், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதும் மட்டுமே. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வேலி நிலம் இறையிலி ஆக்கப்படும். அதாவது அதற்கு வரி அரசு அதிகாரிகளிடம் கட்ட வேண்டியதில்லை. அந்த அளவு தானியம் உங்களுக்கு மானியமாக அளிக்கப்படும். மக்களிடம் பரவியுள்ள நாத்திகத்தைப் போக்கி நல்வழிப்படுத்தும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன்.

“இன்று நீங்கள் எண்ணூறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழலாம். இந்த எண்ணூறு எட்டாயிரமாக எட்டு லட்சமாகப் பெருகட்டும். அத்தனை பேரும் சோழநாட்டு மக்களாகவே கருதப்படுவீர்கள். உங்களில் வயதில் மூத்த தலைவர்களைக் கொண்ட நூறு குடும்பங்கள் இங்கேயே காழியிலேயே தங்க வைக்கப்படுவீர்கள். முன்னூறு குடும்பங்கள் குடந்தையைத் தலைமையிடமாகக் கொண்டு அருகிலுள்ள கிராமங்களில் குடியமர்த்தப்படுவீர்கள். மற்றொரு முன்னூறு குடும்பங்கள் படகில் அழைத்துச் செல்லப்பட்டு நாகையைத் தலைமையிடமாகக் கொண்டு பக்கத்திலுள்ள கிராமங்களில் குடியமர்த்தப்படுவீர்கள். மீதம் உள்ள நூறு குடும்பங்கள் காஞ்சியில் தங்கவைக்கப்படுவீர்கள். குடந்தை, நாகை, காஞ்சி ஆகிய மூன்று இடங்களிலும் உள்ள கோவில்கள் உங்கள் தாய்நாட்டை நினைவூட்டும் வகையில் காயாவரோகணம் என்று பெயரிடப்படும். ஒவ்வொரு காயாவரோகணத்திலும் ஒரு அரசு அதிகாரி இருப்பார். உங்களுக்கு எந்தக் குறை இருந்தாலும் அவரிடம் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.”

அரசரின் பின்னால் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த ஆங்கிரஸர் அருகில் இருந்த அச்சுத பிரமராயரிடம் கிசுகிசுத்தார். “அரசர் என்னவோ காஞ்சியில் குடியமர்த்துவோம், கோயில் கட்டுவோம் என்கிறாரே, அது பல்லவர் வசம் அல்லவா இருக்கிறது?” என்றார்.

அவர் காதோடு அச்சுதர் விடையளித்தார். “நீங்கள் வடநாடு சென்றிருந்த போது நடந்தது உங்களுக்குத் தெரியாது. பல்லவ மன்னனுக்கு நம் அரசர் ஓலை அனுப்பினார். பண்டைத் தமிழ்ச் சமயத்தைப் புதுப்பித்து மக்களிடையே புத்துணர்ச்சி ஊட்டுவதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன். சோழநாட்டில் பிறந்த ஒரு இறையடியார் உங்கள் நாட்டில் சித்தி அடைந்துள்ளார். அவர் நினைவைப் போற்றும் வகையில் அந்த ஊருக்கு ஆலங்காடு என்று பெயரிட வேண்டுகிறேன். மேலும் வடதேசத்திலிருந்து வரும் நூறு அந்தணர்களுக்கு காஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறையிலி நிலம் அளிக்க வேண்டும் என்பதும் என் வேண்டுகோள். உங்கள் ஆட்சிப் பகுதி ஒரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்ற உரிமையில் இதைக் கூறவில்லை. இன்று நாம் இருவருமே களப்பிரர்களுக்கு அடிமையாகச் சம அந்தஸ்தில் இருக்கிறோம். நமக்குள் எதுவும் பகைமை இல்லை. உங்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றும் எண்ணமோ, அதைச் செயலாற்றும் திறனோ எங்களுக்கு இல்லை என்பதை அறிவீர்கள். இது மக்களிடையே இறை உணர்வை வளர்ப்பதற்கான முயற்சியே அன்றி இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. மற்ற விவரங்கள் இது கொண்டுவரும் எங்கள் அரசு அதிகாரி சொல்வார் என்று எழுதி அனுப்பினார். பல்லவ மன்னர் ஒப்புக் கொண்டார். அதனால்தான் காஞ்சியில் சிலரைக் குடியமர்த்தத் திட்டம்.”

மன்னரின் தொலைநோக்குப் பார்வையை ஆங்கிரஸர் வியந்தார்.

மன்னர் தொடர்ந்து பேசினார். “சோழநாட்டின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட நான் மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் இறைவன் நிறைவேற்றி வருகின்றான். இந்தக் காழியில் ஒரு மகான் தோன்றி சமணத்தை நிர்மூலமாக்குவதாக ஒரு கனவு கண்டேன். அதனால்தான் நீங்கள் அனைவரும் இந்தக் காழி மண்ணில் காலடி வைக்க வேண்டுமென்று விரும்பினேன்.”

“நல்ல வேளை. நான் இவர்களை மறைக்காடு அல்லது நாகையில் இறக்கிவிடாமல் இங்கு கொண்டுவந்தேன். அவர் காழிக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் இப்போது புரிகிறது” என்று சொல்லிக்கொண்டார் ஆங்கிரஸர்.

அரசர் தொடர்ந்தார், “காழியைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. இதுதான் சமணம் குறைவாகப் பரவியுள்ள பகுதியின் வடக்கு எல்லை. கொள்ளிடத்துக்கு வடக்கில் தில்லை, பாடலிபுரம் முதலான இடங்கள் என் ஆட்சிக்கு உட்பட்டவைதான் என்றாலும் இங்கெல்லாம் சமணம் தலை தூக்கி நிற்கிறது. தில்லையில் சமணர்கள் வெறியாட்டம் ஆடுகின்றனர். வேத சமயத்தைச் சார்ந்தோரை வாதத்திற்கு இழுப்பதும், வம்பு செய்வதும் வசை பாடுவதும் எல்லை மீறிப் போகவே அங்குள்ள அந்தணர்கள் மேற்கே மலைநாட்டுக்குப் போய்விட்டனர். அவர்கள் பூசித்து வந்த கோவிந்தராஜர் விண்ணகரம் மூடியே கிடப்பதால் முட்செடிகளும் புதர்களும் மண்டியுள்ளன. அந்த வளாகத்தில் சமணர்கள் யட்சிணிக்கு ஒரு ஆலயம் அமைத்துள்ளனர்.

“அதற்கும் வடக்கே போனால் காஞ்சிபுரம் சமண சாக்கியக் கல்விக்கூடமாகவே ஆகிவிட்டது. இங்கு பல பிராமணர்கள் சமண சாக்கியக் கல்வி பயின்று கங்கைக்கரையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்கள். காஞ்சிபுரம் பல்லவர் வசம் உள்ளது. தற்போதைய பல்லவ மன்னர் வேத சமயத்தில் பற்று உடையவர். அவருக்குச் சொந்தமான பகுதியில் கோயில் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறார்.  சமணக் கேந்திரமான பாடலிபுரத்தை வடக்கு, தெற்கு ஆகிய இரு புறங்களிலிருந்தும் தாக்குவதுதான் என் திட்டம்.

“உலக வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் மறு உலகத்தையே நினைத்துக் கொண்டிருக்கிற சோம்பேறி நிலை மாறிச் சோழமக்கள் கல்வியிலும் கலைகளிலும் சிறப்புற்று விளங்க வேண்டும். இறை நம்பிக்கையின் வலிமை பெரியது. அது செயற்கரிய செயல்களைச் செய்விக்கும். காழி மயானத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலுக்கு இப்பொழுது கீற்று வேய்ந்த கூரை போடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அது பெரிய மாளிகையாக உருவாகும். இது போன்ற கோயில்கள் சோழநாடு முழுவதும் பல கட்டப்படும். கருங்கல்லே கிடைக்காத சோழநாட்டில் தொலைதூரத்திலிருந்து கல் கொண்டு வந்து அம்மி கல்லுரல்கள் மட்டும் செய்து கொண்டிருக்கிறோம். வருங்காலத்தில் என்றுமுள ஈசற்கு என்றுமுள கோயிலாகக் கருங்கல்லாலும் கோயில் கட்டுவோம். ஈசனின் பெருமையைத் தொலைதூரம் வரை பறை சாற்றுவதற்காக அவற்றின் மேல் வானை முட்டும் விமானங்கள் கட்டுவோம்.

“எவர்க்கும் தலைவணங்காத நான் இன்று நிலம் தோய்ந்து வணங்கியது என் நாட்டு மக்களுக்கு வியப்பாக இருக்கும். நானும் என் வம்சத்தவரும் சிவனுக்கு மட்டுமே தலைவணங்குவோம். சிவபாத சேகரர்களாகவே இருப்போம்.”

அரசர் பேசி முடித்தார். அனைவரும் ‘ஜய விஜயீ பவ’ என்று முழங்கினர்.

1 thought on “வளவன் கனவு-8

  1. Excellent description of the events. Though historical, the reading experience is really magnificent.

Leave a Reply

Your email address will not be published.