இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(158)
–சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
வாரங்கள் ஒவ்வொன்றாய் ஓடி மறையுது. காலங்கள் காற்றாய் கனவேகத்தில் பறக்குது. ஜனனங்கள் ஒருபுறம், மரணங்கள் ஒருபுறமென இயற்கை தன் செயற்பாடுகளை கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கை நிலைத்திடும் எனும் நினைப்பில் மனிதன் தனது தேவைகளுக்கான தேடல்களில் தன் மகிழ்ச்சியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான்.
அன்னையின் பாதுகாப்புக் கவசமான கருப்பையிலிருந்து இந்த பூமாதவின் மடியில் விழும்போது வெற்றுக் காகிதம் போல எமது மனங்கள் பால் போல வெளுத்து இருக்கிறது.
கூட்டிலிருந்து குஞ்சு இரை தேடைப் போகும் முன்னால் அதற்குத் தேவையான பாதுகாப்பு யுத்திகளை தாய்ப் பறவையும், தந்தைப் பறவையும் கற்றுக் கொடுப்பது போல எமது பெற்றோர் நாம் எமது பாடசாலை வாழ்க்கையைத் தொடங்கும் வரை தம்மாலான வகையில் எமக்கு எவை முக்கியமாகத் தேவைப்படுகிறதோ அதைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
அதன் பின்னால் ஆசிரியர்கள் எமை இந்த உலகிற்குத் தேவையான வகையில் செதுக்கி எடுக்கிறார்கள். ஆனால் எமது செதுக்கல்களுக்கு முற்று முழுதாக ஆசிரியர்கள்தான் காரணமா?
எமது இல்லங்களில் நாம் வாழும் சூழல்கள் நாம் எவ்வகையில் எதிர்காலத்தில் உருவாக்கப் படப் போகிறோம் என்பது முக்கியமான பங்கை வகிப்பதை மறுக்க முடியாது.
முன்னைய காலங்களில் எமது தாய்நாடுகளில் பெற்றோரின் பங்களிப்பு மிகவும் நேர்மறையான, மனித தர்மத்திற்கு உட்பட்ட வகையில் எமை வளர்த்தெடுக்க உதவியது எனும் கருத்து நிலவியது.
புலம்பெயர்ந்த எம் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் வித்தியாசமானவை. ஒரு புதிய நாட்டில் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாமே வேறொரு வகையில் செதுக்கப்படவேண்டியவரானார்கள்.
அதே சமயம் குடும்ப சமேதரராய் புலம்பெயர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டியவர்களாகவும் இருந்தார்கள்.
விளைவு !
புலம் பெயர்ந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாம் தமைச் சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கியே புலம் பெயர்ந்தார்கள்.
இது இயற்கையே! ஒரு புது இடத்திற்கு நாம் செல்லும் போது எமது வாழ்க்கையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேட விளைவது ஒரு இயற்கையான செய்கையே!
தாம் தமது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்ட பின்பும் அதே சமூகத்தினுடனேயே தம்மைப் பிணைத்து வைத்திருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதனால் பலர் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாட்டின் மொழியை, கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளவில்லை.
எங்கே தாம் தமது கலாச்சார அடையாளங்களை, மொழியின் தனித்தன்மையை இழந்து விடுவோமோ எனும் ஆதங்கத்தினால் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதான எண்ணத்தில் அடுத்தவற்றை அறவே ஒதுக்கினார்கள்…
இதன் தாக்கம் உடனடியாக அவர்களுக்குத் தென்படப்போவதில்லை. தாக்கம் அவர்களின் அடுத்த தலைமுறையைத்தான் தாக்கப் போகிறது, தாக்குக்கிறது.
எப்படி எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?
அவ்வடுத்த தலைமுறை பல சந்தர்ப்பங்களில் தாம் யார்? எனும் குழப்பத்திற்குள்ளாகிறார்கள். இரு தோணியில் கால்வைத்துப் பயணம் செய்யும் வாழ்க்கை எனைப் போன்ற முதலாவது புலம்பெயர் தலைமுறையுடன் முடியாது அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது.
பல்கலாச்சார வாழ்வு முறையைக் கொண்ட இங்கிலாந்து தேசம் எனும் இப்பரந்த பூமியில் நாம் எமது சமூகம் எனும் குறுகிய வலயத்துக்குள் வாழ்ந்து விட்டு பாடசாலையிலும் வேலைத்தளங்களிலும் மற்றைய சமூகத்தினருடன் போட்டி போட வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
சிறுவயது முதலே அனைத்து சமூகத்தினருடனும் கலந்து வாழப்ப்பழகும் ஒருவருக்கும், குறுகிய வலயத்துக்குள் தமது பிள்ளைப்பராயத்தை முடித்து அதன் பின்னே இப்பல்சமூக வலைப்பின்னலுக்கிடையில் தள்ளப்படும் ஒருவருக்கும் இடையிலுள்ள வாழ்வு மீதான கண்ணோட்டத்தின் வித்தியாசம் பாரியது.
நாம் வாழும் இந்நாட்டின் சமூகப் பின்னனியை அறிந்து கொள்வதும், இந்நாட்டின் சரித்திர வரலாறுகளை அறிந்து கொள்வதும் எமது அடுத்த தலைமுறைக்கல்ல எமக்கே அத்தியாவசியமானது.
அவற்றின் தெள்ளிய அறிவின் மூலமே நாமும் எமது அடுத்த தலைமுறையும் இந்நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் எமை இணைத்துக் கொள்ளலாம்.
அரசியல் நீரோட்டத்தில் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் எம்மவர்கள் செய்யும் பங்களிப்புகளே வருங்காலச் சந்ததி இந்நாட்டில் ஒரு ஸ்திரமான வாழ்வை வகுத்துக் கொள்வதற்கு உகந்த செயற்பாடாகும். தமிழ், தமிழர் எனும் எமது அடையாளம் என்றுமே அழிக்கப்படமுடியாதது. எமது இனத்தின் திறமையை, எமது சமூகத்தின் ஆற்றலை, எமது மொழியின் ஆளுமையை அடுத்த இனத்தவரும் புரிந்து கொள்ள வேண்டுமானல் நாமும் இச்சமூகத்துடன் கலந்து செயற்படுவதே புத்திசாலித்தனமான செயலாகும்.
அன்பினிய நெஞ்சங்களே! எனது இந்தக் கருத்து எமது கலாச்சாரத்தை, எமது மொழியை, எமது அடையாளத்தை இழந்து விட வேண்டும் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
எமது மொழியின் மீது , எமது கலாச்சாரத்தின் மீது நான் கொண்ட காதல் அளப்பரியது. ஆனால், அதற்காக மற்றைய மொழிகள , மற்றைய கலாச்சாரங்களை நாம் முற்றாக ஒதுக்க வேண்டும் என்று எண்ணுவதே தவறானது.
மற்றைய மொழிகளை அறிவதன் மூலம் எமது குழந்தைகள் தவறான பாதைக்கு, தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட்டு விடுவார்கள் என்று எண்ணுதல் தவறாகும்.
அப்படியாயின் எமது தாய்நாடுகளிலே வாழும் எவருமே தவறான வழியைப் பின்பற்றக் கூடாதே! அப்படி யாருமே இல்லையா?
என் இனிய வாசக உள்ளங்களே! அனைத்தையும் அறிவோம், அவற்றை அறிந்ததினால் எமது மொழி உயர்ந்ததென மகிழ்வோம். எமது தமிழ் இனம் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும், அனைவரோடும் ஒத்துப் போகும், ஒரு திறமை மிக்க இனம் என அனைவரும் ஏற்று அதன் மூலம் எமது தமிழன்னைக்குப் புகழ் சேர்ப்போம்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படம் உதவி: English language teaching, teacher training and curriculum development, British Council – http://www.britishcouncil.lk/teach