கூடு கலைத்(ந்)த கோலம்!
-றியாஸ்முஹமட்
எனதன்பு மகளே…
அங்கே தெரிவது
வெறும் காட்டுத் தீ அல்ல
அது நம்ம வீட்டுத் தீ !
காமவெறியர்களால்
பந்தாடப்பட்டவர்களில்
நானும் ஒருத்தி !
வேங்கை போன்ற உன் தந்தை
என்னை ஏங்க வைத்துப் போன
கதை தெரியுமா மகளே?
நீ பிறந்து உன்னைத் தொட்டிலில் சேர்க்கும் முன்னே !
உன் தந்தையைக்
காணாமல் போனோர்
பட்டியலில் சேர்த்து விட்டார்கள் கண்ணே !
கிணறுகளிலும் புதர்களிலும்
பிணங்கள் கண்டெடுக்கப்படும் போதெல்லாம்,
அடையாளம் காணவென எனக்கு அழைப்பு விடுக்கப்படும் !
அங்கே அடையாளம் காணச் சென்ற என்னை அடைத்து வைத்து உரியானமாக்கப்படும் !
போராளி என்று என்னைப் பொல்லால் அடிப்பான் !
வந்தேறி என்று வயிற்றில்
உதைப்பான் !
சோறு தண்ணீர் இல்லாமல் சுருண்டு படுப்பேன் !
திரண்டு வந்து மேய்ந்து விட்டுச் செல்வார் மகளே !
ஈழத்து ஈசல்கள் நாங்கள்
ஈவிரக்கமற்ற பாவிகள் அவர்கள்!
யாரிடம் போய்க் கேட்பது?
எங்கே போய் நான் தேடுவது?
என் கூடு கலைந்த கோலம் பாரு
இந்தக் குருவிக் கூட்டை கலைத்தவன் யாரு ?
தேடித் தேடியே சருகானேன்
வாழாமலேயே வயதானேன்!
சிறுபான்மையில் சிறுநீர் கழித்துப்
பெரும்பான்மையில் பன்னீர் தெளிக்கும் காடையர்களின்
ஆட்சி மகளே
கபடிகளின் ஆட்சி
இனி என்றுதான் நமக்கு மீட்சி ?
அழாதே மகளே அழாதே !
வெந்து மனம் உருகாதே!
உன் தந்தை இருக்கிறார்
அவர்காணாமல் போனோர்
பட்டியலில் பத்திரமாகத்தான்
இன்றும் இருக்கிறார் !
அழாதே மகளே அழாதே !
வெந்து மனம் உருகாதே!!