ஹரி கிருஷ்ணன்
பாரதி தன் வடமொழிப் புலமையைப் பற்றி ஓரிடத்தில் போகிற போக்கில் குறிப்பிட்டிருக்கிறான். தற்போது சுயசரிதை என்றறியப்படும் ‘கனவு‘ நெடும்பாபடலில் குருதரிசனம் என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு சொல்கிறான்:
அன்றொருநாள் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 

 

புதுவையில் ஈசுவரன் தர்மாராஜா வீதியில் இருந்த இராஜாராமையர் என்ற நாகப்பட்டனத்துப் பார்ப்பனர் ஒருவர் தன்னுடைய தந்தை முன்பொருமுறை உபநிஷதை தமிழில் மொழிபெயர்த்திருப்பதை என்னிடம் கொடுத்துத் திருத்தச் சொன்னார். நானும் அவர் வீட்டுக்குச் சென்று அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது குள்ளச்சாமி அங்கே வந்தார்.

 

இந்த உபநிஷதின் மொழிபெயர்ப்பைத் திருத்தச் சொல்லிக் கேட்டுக் கொண்டாரல்லவா, அந்த இராஜாராமையர் பிற்காலத்தில் பன்னிரு உபநிடத நூல் என்ற பெயரில் அந்நூலை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து திரு மோகனரங்கன் எழுதியிருந்ததிலிருந்து: “”த்வாதச உபநிஷத்” (த்வாதச – 12)என்னும் தலைப்பில் ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் சாராம்சங்கள் அடங்கிய தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று 1914ஆம் ஆண்டு நா சு ராஜாராமய்யரால் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கப்ப்பட்டது. தமிழ் மிகவும் எளிய தமிழ் நடை. அந்தக் காலத்தில் உபநிஷத நூல்களை இந்த அளவிற்கு எளிமைப் படுத்தி வெளியிட்ட ராஜாராமன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.”

 

ஆகவே இது ஏதோ ஒரு உபநிஷத் அன்று; பன்னிரண்டு உபநிஷதங்களின் தொகுப்பு என்று தெரிகிறது. இப்படி ஒரு மொழிபெயர்ப்பைத் திருத்தச் சொல்லி ஒருவர் பாரதியைக் கேட்டுக்கொண்டார் என்பது, பாரதியின் வடமொழிப் புலமைக்கு; போதுமானதற்கும் மேற்பட்ட சான்று.

அடுத்ததாக ஹிந்திக்கு வருவோம்.

சென்னை திருவல்லிக்கேணியில் ஹிந்தி வகுப்புகள் நடத்தியிருக்கிறான் பாரதி. இதுகுறித்து அவன் திலகருக்கு எழுதிய கடிதம்:
 
hari
 
மேற்படி கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு:
பால பாரதா ஆபீஸ்
திருவல்லிக்கேணி
மதராஸ்
தேதி: 29 மே 1908

 

ஸ்ரீமான் பி.ஜி. திலக் அவர்களுக்கு, புனா.

 

அன்பார்ந்த குருஜீ,

 

சென்னை ஜன சங்கம் ஆதரவில் சென்னையில் ஒரு ஹிந்தி வகுப்பு துவக்குமாறு கேட்டுக்கொண்டு ஒரு கடிதம் கிருஷ்ண வர்மாவிடமிருந்து வந்துள்ளது. நாங்கள் ஏற்கெனவே ஒரு சிறிய வகுப்பு துவக்கியுள்ளோம். போகப் போக அதில் நிறையப் பேர் கலந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். அதனுடைய முன்னேற்றம் பற்றிப் பின்னர் தெரிவிக்கிறேன்.

 

கல்கத்தா காங்கிரசில் வகுத்த முறைப்படி சென்னையில் ஒரு தேசிய மாகாண மாநாடு நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடுத்த காங்கிரஸ் மகாசபைக் கூட்ட விஷயம் என்ன ஆயிற்று? நமது தேசிய செயலாளர் ஸ்ரீ. சிதம்பரம் தற்போது எங்கே இருக்கிறார். உங்களுக்குத்தான் தெரியுமே. இந்த விஷயம் பற்றி எங்கள் சங்கத்துடன் கடிதத் தொடர்பு கொள்ளும்படி ஸ்ரீ கேல்கரிடம் கூறுங்கள்.

 

தங்களன்புள்ள,
சி. சுப்பிரமணிய பாரதி.

(மொழிபெயர்ப்புக்கு நன்றி: சித்திர பாரதி, ஆசிரியர் ரா அ பத்மநாபன்)பாரதியின் ஹிந்தி மொழிப்புலமைக்கு வேறென்ன சாட்சியம் வேண்டும்?

 

இதற்கு முன்னால் ஐந்து மொழிகளைக் குறிப்பிட்டிருந்தேன். வடமொழியறிவுக்கு கூடுதல் ஆதாரம் கொடுத்திருக்கிறேன். இப்போது ஹிந்திக்கான ஆதாரத்தைக் கொடுத்திருக்கிறேன். ஃபிரெஞ்சு மொழியறிவுக்கான ஆதாரம் இன்னமும் தரப்படவில்லை. தேடி எடுத்துத் தருகிறேன்.  இதுவரை ஆறுமொழிகள் கணக்கில் வந்திருக்கின்றன.  ஐந்துக்கு ஆதாரம் கொடுத்தாயிற்று.  ஒன்று நிலுவையிலிருக்கிறது.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதிக்குத் தெரிந்த மொழிகள் (2)

  1. அன்புள்ள ஐயா, பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்ற கட்டுரையைப் படித்தேன். இந்தத் தலைப்பில் எங்கள் திருவையாறு பாரதி இயக்கத்தின் வெள்ளிவிழா மலரில் (2004இல்) சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.ராமச்சந்திரன் அவர்கள் “மகாகவியின் பன்மொழிப் புலமை” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதனை மீள்பதிவு செய்து என்னுடைய வலைப்பூவான  www.bharathipayilagam.blogspot.in  இல் வெளியிடுகிறேன். தயைகூர்ந்து அதையும் படிக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன். நன்றி.
    தங்கள் அன்புள்ள, தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *