Month: August 2015

  • அவன்,அது,ஆத்மா (25)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 25

    ஆடியமாவாசையும் பாபநாச பாணதீர்த்தமும்

    பாணதீர்த்த அருவி ஒன்று (1)
    அவனுக்குப் பாபநாசமும், பாணதீர்த்த அருவியும் ரொம்பவும் பிடித்த இடங்கள். அவனது கிராமத்தில் இருந்து ஆடியமாவாசைக்காக பாணதீர்த்தம் சென்று நீராடிவிட்டு வருகிறவர்களை சிறுவயதில் அவன் பார்த்திருக்கிறான். அவனுக்குத் தாத்தாவும் அப்பாவும், சின்னம்பிச் சித்தாப்பாவும், அவர்களது நண்பர்களும் ஆடியமாவாசைக்கு முந்தயதினமே நடந்து அம்ம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாகவோ அல்லது சிங்கம்பட்டி, மணிமுத்தாறு மலைப்பகுதி வழியாகவோ சென்று பாணதீர்த்த அருவியில் நீராடிவிட்டு வருவார்கள். அவனுக்கு நண்பர்களான சன்னதித்தெரு கண்ணனும் (சங்குருசாரின் மகன் கே.எஸ்.நாராயணன்) , கபாலி, குட்டிச் சங்கரும்கூடப் போவார்கள். அவர்கள் போகும் பொழுது அவனையும் வந்து கூப்பிடுவார்கள். அவன் அவனுக்கு அம்மாவிடம் பாணதீர்த்தம் போய்வர அனுமதி கேட்பான். “சாயங்காலமாப் போலாம்” என்று அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு, அவனுக்கு நண்பர்கள் வந்து கூப்பிடும் பொழுது அவனை அனுப்பமாட்டாள். அவன் அவனது வீட்டு ரேழியில் உருண்டு, புரண்டு அழுது சாகசம் செய்வான். அதற்கெல்லாம் அவனுக்கு அம்மா மசிய மாட்டாள். “அங்க ரொம்ப ஜலம் இருக்கும். ஒனக்கு அருவியக் கண்டா கண்ணு மண்ணு தெரியாது…அங்க போய் அருவிலேந்து வெளிலயே வரமாட்டாய்…இப்ப ஒன்ன விட மாட்டேன்…கொஞ்சம் பெரியவனானபரமா அனுப்பறேன்…இப்ப ஆத்தங்கரைல போய் குளிச்சுட்டுவா…அந்த பாணதீர்த்த ஜலம்தானே இங்கயும் வரத்து …” என்று சொல்லி அவனுக்கு நண்பர்களை அனுப்பி விடுவாள். “சரிடா..கண்ணா..அடுத்தவருஷம் நாம போயிட்டு வரலாம்..நீ ஒங்க அம்மா சொன்னத்தக் கேளு ” என்று சன்னதித்தெரு கண்ணன் சொல்லிவிட்டு குத்துக்கல்தெரு வழியாக நடந்து செல்வதை அவன் கண்களில் நீருடன் வீட்டு வாசலில் உள்ள சிறிய திண்ணையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டே இருப்பான். கண்ணனும் அவனைத் திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் செல்வான்.

    amv1

    இரண்டு நாட்கள் கழிந்த பின்பு அவனிடம் அவனுக்கு நண்பன் கண்ணன் “பாணதீர்த்தக் கதைகளை”ச் சொல்லுவான். பாபநாசத்தின் சாலையின் இரண்டு புறங்களிலும் உள்ள நாவல் பழ மரங்களில் இருந்து கீழே விழுந்து சிதறிக் கிடைக்கும் நாவல் பழங்களின் ருசியையும், அதை எடுத்துப் டிராயர்ப் பைகளில் போட்டுக் கொண்டதால் உண்டான நாவல்பழக்கறையையும் காட்டி கண்ணன் சொல்லும் அழகில் சிரித்து மிகுந்த மகிழ்ச்சி அடைவான். கையில் ஒரு பெரிய பிரம்பை வைத்துக் கொண்டு அந்தக் காடுகளில் நடந்து சென்றதையும், சொரிமுத்தையனார் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் பெருங்கூட்டத்தின் பேரிரைச்சலையும் , அங்கு நடைபெறும் அன்னதானச் சிறப்பையும் அவனுக்கு நண்பன் கண்ணன் சொல்வதை ஒரு கனவோடு கேட்டுக் கொண்டிருப்பான். பெரியவனாக ஆனபின்பு எத்தனையோ முறைகள் அவன் பாணதீர்த்த அருவியில் குளித்த்திருக்கிறான். அதைப் போன்றதொரு ஆனந்தத்தை அவன் வேறு எந்த அருவிக் கரைகளிலும் அனுபவித்ததில்லை. ஆனால் இன்றுவரை ஒருமுறை கூட “ஆடியமாவாசை” அன்று பாபநாசத்தின் பாணதீர்த்தத்தில் குளிக்கவே இல்லை. அந்த ஒரு “சின்னச் சின்ன ஆசை” மட்டும் இன்றுவரை அவனுக்கு நிறைவேறவில்லை. இருந்தாலும் அவனுக்கு அம்மாவையும், அந்த பாணதீர்த்த அருவியையும் உயிர்மூச்சு இருக்கும் வரை அவன் மறக்கவே மாட்டான். அந்த இரண்டுமே அவனுக்கு மிகவும் புனிதமான நினைவுதான்.

    மாட்டுவண்டியில் பயணம்

    ஆடியமாவாசைக்கு முதல்நாள் கிராமத்தில் உள்ள பெரியவர்கள், முக்கியமாக பாட்டிமார்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு மாட்டு வண்டியில் பாணதீர்த்தத்திற்குப் பயணப்படுவார்கள். அப்பொழுதெல்லாம் கிராமத்தின் தேரடியில் (பெருமாள் கோவில் தேர் நிற்கும் இடத்தின் பக்கத்தில்) நிறைய மாட்டு வண்டிகள் இருக்கும். இப்பொழுது மாட்டுவண்டிக் காலம் சென்று, “கார்காலம்” வந்து விட்டதால் தேரடிகூட காரடியாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இராமையா மாட்டுவண்டி, சுப்பையா மாட்டு வண்டி என்றுதான் அழைப்பார்கள். (தொந்திவிளாகம் தெருவில் இருந்த “மணி டாக்டர்” அந்த இராமையா வண்டியில்தான் ஒவ்வொரு தெருவாக வந்து நோயாளிகளைப் பார்த்து மருந்து தருவார். அதன்பிறகுதான் அவரது “கிளீனிக்” இருக்கும் வீரப்பபுரம் தெருவுக்குச் செல்வார். அந்த வண்டி மெதுவாகத்தான் செல்லும்.)

    பாணதீர்த்தத்திற்குச் செல்லும் வண்டியின் உட்புறத்தில் நிறைய வைக்கோல்களைப் பரப்பி மெத்தையைப் போலச் செய்திருப்பார்கள். அதில்தான் பெரியவர்கள் சுகமாக அமர்ந்து செல்வார்கள். வண்டிக்காரனை கீழ்ப்படியில் உட்காரச் சொல்லி “கோஸ்பெட்டி”யில் உட்கார்ந்துகொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே செல்லும் பாட்டிமார்களும் உண்டு. வழியில் நொறுக்குத் தீனியாக முறுக்கு, தட்டை, மா உருண்டை, வாழைபழம் என்று “பத்துப்படாத” உணவுகளை வைத்திருப்பார்கள். வண்டியில் மேல்புறத்தில் ஒரு “ஆர்ச்” வடிவத்தில் வளைவாக நிறைய வைக்கோல்களைக் கட்டி, பொதிபோல வண்டிக்காரர் வைத்திருப்பார் . அதுதான் வண்டி மாடுகளுக்கு இரண்டு நட்களுக்கான தீனி.

    ஆடியமாவாசைக்கு முன்தினம் காலையில் சுமார் பத்து மணிக்கெல்லாம் இந்த வண்டிகள் வரிசையாகச் சென்று பிரதான சாலைவழியாக பாபநாசம் நோக்கிப் பயணமாகும் அழகை அவன் பார்த்து ரசித்திருக்கிறான். இதே போல ஒவ்வொரு தெருவில் இருந்தும் “ஜில்லு, ஜில்லு” என்ற சலங்கை ஒலியோடு மாட்டு வண்டிகள் வந்து கல்லிடைக்குறிச்சியின் பிரதான சாலையான, “சர்மாஜி சாலையில்” மற்ற வண்டிகளின் வெள்ளத்தில் கலந்து கொள்ளும். பாபனாசத்திற்குப் போகும் பொழுதே வழியில் இருக்கும் கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்வார்கள்.

    ஆடியமாவாசை அன்னதானம்

    “பாபநாசம் மலைப்பகுதியில் நிறையப் புல்லுப்பிறைகள் கட்டி இருப்பார்கள். வண்டியை ஒரு இடத்தில் அவிழ்த்து விட்டு இறங்கி நடந்து சென்று, இரவில் அந்தப் புல்லுப்பிறைகளில் தங்கிக் கொள்வார்கள். வருகிறவர்களுக்கு உணவளிக்க அங்கு ஒரு பெரிய பந்தல் போட்டிருப்பார்கள். சமையல் செய்வதற்கும் சௌகர்யாமாக அருகிலேயே இடம் அமைத்திருப்பார்கள். அங்குதான் அன்னதானம் நடைபெறும். பக்தர்களுக்கு இரவில் ஆகாரமாக “உப்புமா” செய்து கொடுப்பார்கள். காலையில் பாணதீர்த்த அருவியில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கான தர்பணங்களை (நீத்தார்கடன்) தந்தை இல்லாதவர்கள் செய்வார்கள். அவர்களுக்கு கல்லிடைக்குறிச்சியில் இருந்து வந்துள்ள “ரங்கவாத்யார், சுந்தரவாத்யார்” போன்றவர்கள் அந்தத் தர்பணங்களைச் செய்து வைப்பார்கள். அதன் பிறகுதான் தர்ப்பணம் செய்தவர்கள் உணவு கொள்வார்கள். மற்ற ஆண்களும், பெண்களும், மூதாட்டியர்களும் அருவியில் நீராடி விட்டு தங்களது முன்னோர்களையும் இறைவனையும், தொழுது விட்டுச் சாப்பிடுவார்கள். காலையில் பத்து மணிக்குத் துவங்கி மதியம் மூன்று மணிக்கு மேலும் அறுசுவை அன்னதானம் தொடர்ந்து நடைபெறும். அதற்கான அரிசி, பருப்பு வகைகளையும், காய்கறிகளையும், காணிக்கைகளையும் முதலியப்பபுரம் தெருவில் இருந்த “ஐயா சாமிகள்” கல்லிடைக் குறிச்சி, வீரவநல்லூர், காருகுறிச்சி, சேர்மாதேவி, பத்தமடை, களக்காடு, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கடையம் போன்ற ஊர்களில் இருந்தெல்லாம் வாங்கிவருவார். செங்கோட்டையில் இருந்து நிறையத் தேங்காய்கள் வரும். எல்லோருமே இந்த தர்மத்திற்கு உதவுவார்கள். இரண்டு நாட்கள் முன்பாகவே கல்லைடைகுறிச்சியில் இருந்து சமையற்காரர்கள் பாணதீர்த்தம் சென்று விடுவார்கள். “ஐயாசாமிகளுக்கு” உதவியாக ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள் இருப்பார். ஐயாசாமிகளுக்குப் பிறகு “ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள்”கள் இந்த தர்மத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது பிள்ளைகளும், கிராம மகாஜனங்களும் இருந்து வந்தனர். மதிய உணவுக்குப் பிறகு எல்லோரும் பழைய பாபநாசம் படித்துறைக்கு எதிரில் இருக்கும் சிவன் கோவிலில் இரவில் நடைபெறும் “வெள்ளி ரிஷபவாகன”க் காட்சியை தரிசனம் செய்தபிறகு, காலையில் பழைய பாபனாசப் படித்துறையில் பாய்ந்தோடுகின்ற தாமிரபரணியில் குளித்து விட்டு, ஸ்ரீஉலகநாயகி உடனுறை ஸ்ரீ பாபநாசரையும் தரிசனம் செய்த பின்புதான் ஊருக்குத் திரும்புவார்கள்” என்று அவனுக்கு அப்பா கூறினார்.

    பாபநாசம் சிவன் கோவில்

    பாபநாசத்தில் உள்ள சிவன்கோவில் பாடல் பெற்ற தலமாகும். அருமையான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும், வண்ணக் கோலமாகக் காட்சிதரும் சித்திரங்களும் இக்கோவிலுக்குப் பெருமை சேர்க்கின்றன. திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் போன்ற சமயக்குரவர்கள் வழிபட்டுப் பாடிய பெருமானே இந்த “பாபவினாசர்”. இறைவியின் பெயர் “லோகநாயகி”, “உலகம்மை”. இக் கோவிலின் தல விருக்ஷம் “களா மரம்” . தீர்த்தம்: தாமிரபரணி. அகத்தியர் அருவிக்கு மேலே இருக்கிறது “கல்யாண தீர்த்தம்” .இத்திருக்கோவில் இறைவனுக்கு நிவேதனமாக “எண்ணைச் சாதமும், துவையலும்” தருவார்கள் என்று அவனுக்கு நண்பர் ஹெச் (ஹ). கிருஷ்ணன் சொன்னார்.

    இக்கோவிலின் எதிரில் உள்ள படித்துறையில் நீந்தும் மீன்களைப் பற்றி மகாகவி பாரதியார் பரவசப்பட்டு தனது கட்டுரையில் எழுதி இருக்கிறார். தாமிரபரணியின் தண்ணீர் மூலிகைகளில் பட்டு வருவதால் அதற்கொரு மருத்துவ குணமும், தனிச் சுவையும் உண்டு. இங்குள்ள அகஸ்தியர் அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். அவனும், அவனுக்கு நண்பர்களும் இங்கு அடிக்கடி வந்து குளிப்பதுண்டு. அவனுக்கு மகனும், மகளும் இந்த அருவியில் ரசித்துக் குளிப்பார்கள். அந்த அருவிக்குக் கீழேதான் “ஸ்ரீ அகஸ்தியர், லோபாமுத்திரை” கோவிலும் உள்ளது. இமயத்தில் நடந்த சிவபெருமானின் திருக்கல்யாணத்தின் பொழுது வடக்கு தாழ்ந்தும் தெற்கு உயர்ந்தும் விட்டதால், அதை சமன் செய்ய இறைவனே அகத்தியரை தென்பொதிகை மலைக்கு அனுப்பி வைத்தார். அதனால் இறைவன் தன் திருக்கல்யாணக் கோலத்தில் அகத்தியருக்கு இத்தென்பொதிகையில் காட்சி கொடுத்தருளினார் என்பது தல வரலாறு. அதனால் இங்கு சந்தனமும், தமிழும் நன்றாக மணம் வீசுகிறது. வற்றாத ஜீவநதியாக தாமிரபரணியும் பாய்ந்து வளம்சேர்க்கிறது.

    1992ம் வருடத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாணதீர்த்தம் செல்லும் காட்டுப் பாதைகள் சேதமடைந்த பின்பு இப்பொழுது யாரும் அங்கு செல்ல முடிவதில்லை. ஆடியமாவாசை நேரத்தில் காரையார் அணையில் நீர் நிறைய இருக்கும் சமயத்தில் படகுகள் மூலமாக பக்தர்கள் அருவிக்குச் சென்று நீராடி வழிபடுகின்றனர். அணைக்குக் கீழே இருக்கும் “சொரிமுத்தையனார்” கோவிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடி வழிபடுவார்கள். ஸ்ரீ சாஸ்தாவின் இன்னொரு பெயர்தான் சொரிமுத்தையனார். இவருக்கு நிவேதனப் பொருள் வடை. இந்தக் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையினர்தான் இருந்து வருகின்றனர். இந்த பொதிகைமலைத் தொடரில் சுமார் எண்பதினாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமாக இருந்திருக்கிறது. இந்த அடர்ந்த காட்டுப் பகுதிகளே புலிகளின் சரணாலயமாக இருக்கிறது. அதற்குள் இந்த சொரிமுத்தையனாரின் கோவிலும் உள்ளதால், அதுவும் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. பிறகு அரசியல் மாற்றங்களால் தற்பொழுது ஜமீன் முறை மாறி விட்டாலும் அந்தப் பாரம்பர்யம் மாறாமல் தொடர்கிறது. ஆடியமவாசையை ஒட்டி “ராஜ தர்பார்” (ராஜ தரிசனம்) நிகழ்ச்சி இன்றும் பொலிவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பட்டத்தில் இருக்கும் , நன்கு படித்திருக்கும் சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையின் T. N. S. சேதுபதி ராஜா அவர்களே தர்பாரில் அமர்ந்து இரவில் நடைபெறும் “தீமிதி” நிகழ்ச்சியையும், வான வேடிக்கைகளையும் பார்வையிட்டு பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறார்.

    amv

    1981ம் வருடம் நவம்பர் மாதம் கல்லிடைக்குறிச்சிக்கு விஜயம் செய்திருந்த சிருங்கேரி ஜகத்குரு நாதர்கள் ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த ஸ்ரீ மகாசந்நிதானமும், ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்ரீ சந்நிதானமும் இந்தப் புண்ணிய பாணதீர்த்தத்தில் நீராட விருப்பங்கொண்டு, நீராடி விட்டு ஸ்ரீ பாபவிநாசரையும் தரிசனம் செய்து விட்டு கல்லிடைக்குறிச்சிக்குத் திரும்பி வந்துள்ளனர். வந்த பின்புதான் ஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் தான் அணிந்திருந்த “ருத்ராக்ஷ மாலையை” அருவிக்கரையிலிருந்து எடுக்காமல் வந்ததைப் பற்றி அங்கிருந்த K. S . காசிவிஸ்வநாத ஐயரிடம் (காசி ஐயரிடம்) தெரிவித்திருக்கிறார். உடனே அவர் அவர்களுடன் சென்ற அம்பாசமுத்திரம் சித்ரா ஸ்டுடியோ புகைப்படக் கலைஞர் “டேவிட்”டிடம் விபரத்தைக் கூற, அப்பொழுதே பாணதீர்த்தத்தில் எடுத்த புகைப்படச் சுருள்களைப் படமாக்கி அப்படத்தின் மூலமாக அந்த ருத்ராக்ஷ மாலை இருக்கும் பாறையைத் தெரிந்து கொண்டு, உடனேயே வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் அந்த அருவிக் அக்கரைக்குச் சென்று அந்த மாலையை இரவு பூஜைக்கு முன்பாகவே எடுத்து வந்து ஸ்ரீ மகாசந்நிதானத்திடம் கொடுத்தனராம். அடுத்த நிமிடமே ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகள் விபரங்களைத் தெரிந்து கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடு, புகைப்படக் கலைஞர் “டேவிட்” அவர்களின் சமயோசித புத்தியைப் பாராட்டி அவருக்கு ஒரு பெரிய வெள்ளி ஸ்ரீ சாரதாம்பாள் டாலரும், பிரசாதமும் தந்து ஆசீர்வதித்தார் என்று அவனுக்கு நண்பன் GLAD. கணேசன் சொல்லியிருக்கிறான். “ஸ்ரீ மகாசன்னிதானம் பாணதீர்த்த அருவிக்கரையில் ஒரு பாறையின் மீது நடந்து செல்வதுபோலவும், அதற்குப் பின்புலமாக மலையழகும், நீர்த்தேக்கமும் இருப்பது போன்ற அற்புதமான அழகிய அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அந்தப் புகைப்படக் கலைஞர் “டேவிட்”டும், நண்பன் கணேசனும், எந்நாளும் ஜீவநதியாகப் பாய்ந்து எல்லோருக்கும் பயனுள்ளதாக வாழ்கின்ற தாமிரபரணியும்தான் நினைவுக்குவரும்.

    13.08.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • முழுமையான சுதந்திரம்!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    கண்ணாய்த் தலைவர்கள்
    காத்து நமக்களித்த
    சுதந்திரத்தைக் காத்தோமா?
    ஊரெங்கும் கொலை கொள்ளை களவு
    லஞ்சம் வஞ்சம் பகை
    இவைதானே செழித்துக்கிடக்கிறது ?

    நட்ட நிசியில் என்று ஒரு பெண்
    பயமின்றி  நடக்கிறாளோ
    அன்றுதான் உண்மைச்
    சுதந்திரம் என்றார்; இங்கோ
    பட்டப் பகலிலேயே
    மனிதனின் காமம்
    மரணக் குழிவெட்டும் சோகம்
    மலராத மொட்டுகளைக் கூடக்
    கசக்கியெறியும்
    கயவர்கள் கூட்டம்
    இதுவா சுதந்திரம் ?!

    குடிக்கும் குளிர்பானம்
    குளிக்கும் சோப்புகள்
    துலக்கும் பற்பசைகள்
    உண்ணும் உணவுவகைகள் என
    வெளிநாட்டுப் பொருட்களை
    உபயோகிப்பதா சுதந்திரம்?

    அந்நியனை விரட்டியது மட்டுமல்ல
    அவர்களின் பொருளாதார
    ஆதிக்கத்தையும் என்று விரட்டுகிறோமோ
    அன்றுதான் முழுமையான சுதந்திரம்!

    போனது போகட்டும்; இனியாவது
    கலாம் போல், காமராஜர் போல்
    நாட்டு நலனில் அக்கறை எடுப்போம்
    சுதந்திர தினத்தில் மட்டும்
    கொடியைத் தூசிதட்டி ஏற்றி
    இனிப்பு வழங்கி அன்றோடு
    சுதந்திர தினத்தை மறக்காமல்
    கெட்டவைகளைக் களைந்து
    சத்தியம்  தர்மம் நேர்மை
    சட்டம் ஒழுங்கு உண்மை
    இவைகளைக் கடைப்பிடித்து
    இந்தியாவை வல்லரசாக்க
    முழுமூச்சோடு பாடுபடுவோம்!

     

    Share
  • வீட்டு வேலை செய்பவர்களுக்கு விமோசனம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மோதி அரசு வீடுகளில் வேலைசெய்வர்களுக்கு சில பாதுகாப்புச் சட்டங்களை இயற்றவிருக்கிறது.  நாடு முழுவதும் வீட்டு வேலை செய்யும் மூன்று கோடிப் பேரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேசிய அளவில் கொள்கை வகுக்க மத்திய தொழில்துறை நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறதாம்.  அதன்படி வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும்போது சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகளைக் கட்டாயமாக்கப் போகிறதாம்.  கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.  எந்தவித ஓய்வும் இன்றி எந்நேரமும் வீட்டு வேலை செய்து உழல்பவர்களைப் பற்றி நான் பல காலமாக, பல விதமாக வேதனைப்பட்டதுண்டு.  இப்போது அவர்களுக்கும் ஒரு வழி பிறக்கப் போவதுபோல் தெரிகிறது.  இவர்களைப் பற்றி மத்திய அரசு நினைக்க ஆரம்பித்திருப்பதே ஒரு நல்ல அறிகுறி என்றாலும் இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை நினைத்தால் நம்பிக்கை பிறக்கவில்லை.

    பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தமிழ்நாடு அரசால் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டபோது அப்போதைய ஆளும் கட்சியின் தொண்டர்களின் பைகளை நிரப்புவதற்காகவும் அத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.  அது ஓரளவு உண்மையாயிற்று.  ஒரு முறை ஒரு பெண் என்னிடம் அவளுடைய உறவினப் பெண் ஒருத்திக்குச் சத்துணவு மையத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும் அவள் பாடு இனி கவலையில்லாமல் இருக்கும் என்றும் சொன்னாள்.  அவளுக்கு ஒரு வேலை கிடைத்திருக்கிறது என்பதல்ல அதற்குக் காரணம்.  இனி அவள் தனக்கு வேண்டிய உணவுப் பதார்த்தங்களை மையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பதால்.

    மத்திய அரசின் இந்தத் திட்டமும் இதைப் போன்று முடியுமோ என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.  இந்தத் திட்டத்தின் அம்சங்களைப் பார்த்தால் அப்படிப்பட்ட சந்தேகம் ஏற்படுகிறது.  வீட்டு வேலைக்கு ஆட்களை எடுக்க அரசு ஒப்புதலுடன் ‘ப்ளேஸ்மெண்ட்ஏஜென்சி’ எனப்படும் வேலை அளிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படுமாம்.  அதில் வேலை கோருபவர்களும் வேலைக்கு ஆட்கள் தேடுபவர்களும் பதிவு செய்துகொள்ள வேண்டுமாம்.  இந்த அமைப்பின் மூலம் செல்லாமல் தாங்களாக வேலைக்கு ஆட்களை வைத்துக்கொண்டால் அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாம்.

    இரண்டாவதாக வேலை செய்யும் இடத்தில் சுமுக சூழ்நிலை, வாரம் ஒரு நாள் விடுமுறை, வருடத்திற்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறை, மகப்பேறு விடுமுறை போன்றவை கட்டாயமாக்கப்படுமாம்.

    மூன்றாவதாக வேலை கொடுப்போரும் வேலை தேடுவோரும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட வேண்டுமாம்.  இதில் வேலை அளிக்கும் அமைப்பும் மூன்றாம் தரப்பாக கையெழுத்துப் போடுமாம்.

    நான்காவதாக வேலை நேரம், வேலையின் தன்மை குறித்து ஒப்பந்தத்தில் இரு சாராரும் கையெழுத்து இட வேண்டுமாம்.  வீட்டிலேயே தங்கி வேலை செய்வோர்களுக்கு தங்குவதற்கு இட வசதி அளிக்க வேண்டுமாம்.  அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டுமாம்.  இதற்கு மேல் அவர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ், ஓய்வு காலத்திற்கு வேண்டிய சேமிப்பு நிதி (P.F.) போன்ற வசதிகளும் செய்துகொடுக்க வேண்டுமாம்.

    படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது; இதை இப்படியே அமுலுக்குக் கொண்டுவந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.  ஆனால் அரசு இதை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதுதான் கேள்வி.  ஊழல்கள் மலிந்திருக்கும் நம் நாட்டில் இதை எப்படி அமுல்படுத்தப் போகிறார்கள்?  வீட்டு வேலை செய்ய வரும் அத்தனை பேரும் சரியாக விபரம் தெரியாதவர்கள்.  இப்படி ஒரு சட்டம் இருப்பதே அவர்களுக்குத் தெரிய வழியில்லை.  (வீட்டு) வேலை கிடைத்தாலே போதும் என்று நினைப்பவர்கள் எஜமானர்கள் சரியாக நடத்தவில்லையென்றால் வேலை அளிக்கும் அமைப்பிடம் சென்று புகார் கொடுக்கவா போகிறார்கள்?  அப்படிக் கொடுத்தாலும் வேலை கொடுக்கும் மற்றவர்களிடமும் அவர்களுடைய மவுசு குறைந்துவிடும் என்று நினைப்பார்கள்.  வேலை கொடுப்பவர்களும் வேலை தேடுபவர்களும் இப்போது போல் நேரடியாக தொடர்புகொள்ளலாமே.  இதில் மத்தியில் வேலை அளிக்கும் அமைப்பு எதற்கு?

    இப்போதுள்ள நிலைமையையே வைத்துக்கொண்டு வீடுகளில் வேலை பார்ப்பவர்களைச் சரியாக நடத்துகிறார்களா என்று கண்காணிக்கலாமே.  அதிலும் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. ஊழல்கள் மலிந்த நம் நாட்டில் கண்காணிக்கும் அரசு ஊழியர்கள் நியாயமாக நடந்துகொள்வார்களா?  ஊழல்களை ஒழிக்கப் பாடுபடுவோம் என்று கூறிப் பதவிக்கு வந்த மத்திய அரசு ஊழல் புரிந்தவர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.  இவர்கள் எப்படி வேலை வழங்கும் அமைப்பை ஊழலில்லாமல் நிர்வகிக்கப் போகிறார்கள்?

    பிறரின் வீடுகளில் வேலை பார்த்துச் சொற்ப சம்பளம் பெற்றுக்கொள்ள மூன்று கோடி ஏழை ஜனங்கள் நாட்டில் இருக்கும்வரை இவர்களுக்கு எந்த அரசாலும் நியாயம் வழங்க முடியாது.  அவர்களை அவர்களின் நிலையிலிருந்து உயர்த்துவதன் மூலம்தான் அவர்களுக்கு நியாயம் வழங்க முடியும்.  எந்தச் சந்தையும் ‘சப்ளை அண்ட் டிமாண்ட்’ மூலம்தான் இயங்குகிறது.  பிறர் வீடுகளில் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்யத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்தால் இவர்களுக்கு டிமாண்ட் கூடிவிடும்.  பின் அவர்கள் கண்ணியமாகவும் நடத்தப்படுவார்கள்; உரிய சம்பளமும் பெறுவார்கள்..

    ஒரு முறை எனக்கு வீட்டைச் சுத்தம் செய்வதில் உதவிய பெண்ணுக்கு நான் ஞாயிறு விடுமுறை கொடுத்தேன்.  பக்கத்து வீட்டிலும் வேலை செய்த அந்தப் பெண் ஞாயிறன்று அவர்கள் வீட்டிற்கும் வரவில்லை.  மறு நாள் திங்கட்கிழமை வேலைக்கு வந்ததும் அந்தப் பெண்ணை பக்கத்து வீட்டு அம்மாள் ‘ஞயிறன்று ஏன் வேலைக்கு வரவில்லை’? என்று கேட்டார்.  அதற்கு அந்தப் பெண் ‘பக்கத்து வீட்டில் ஞாயிறன்று விடுமுறை’ என்றார்.  அந்த அம்மணிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.  ‘விடுமுறை பக்கத்து வீட்டில்தான், இங்கல்ல’ என்று கத்தித் தீர்த்துவிட்டார்.  இவர்களை எல்லாம் எப்படி வழிக்குக் கொண்டுவருவது?  வேலைக்கு எளிதில் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலை வந்தால்தான் இவர்கள்  வழிக்கு வருவார்கள்.

    வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பவற்றிற்குக் கடுமையான சட்டங்கள் இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே கோப்ரகடே போன்றவர்களே – இவர் மெத்தப் படித்தவர்; பெண்களின் நலனைப் பாதுகாக்கும் துறையில் வேலை பார்த்தவர் – இப்படி நடந்துகொண்டால் சாதாரண ஜனங்களைப் பற்றி என்ன சொல்ல?

    முதலில் அரசு இந்த ஏழைகளின் நிலையை உயர்த்தட்டும்.  அமைப்புசாரா தொழிலாளர்களின் (Unorganized labourers) நிலை அமைப்புசார் தொழிலாளர்களைப் போல் (Organized labourers) உயரட்டும்.  அப்போது அவர்களின் சப்ளை குறைந்துவிடும்.  அவர்களுக்கு டிமாண்டும் கூடிவிடும்.  தங்களின் நலனைப் பாதுகாத்துக்கொள்ளும் பக்குவமும் அவர்களுக்குக் கிடைக்கும்.  கொடுக்கும் ஊதியத்திற்கு அதிகமாக அவர்களை வேலைவாங்கும் வர்க்கமும் இருக்காது.  அப்போது இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து ஊழல் புரிபவர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடும்.

    Share
  • சுதந்திரம் எங்கே?

    -ரா. பார்த்தசாரதி 

    நள்ளிரவில்  சுதந்திரம் பெற்றோம்
    வெள்ளையனே வெள்ளியேறு  எனச் சொன்னோம்!

    அரசியல்வாதிகள்  ஊழலை மறைப்பதற்குச் சுதந்திரம்
    ஏன்  என்று கேட்பவர்களுக்குச் சிறையே  அடைக்கலம்!

    நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள்  தியாகம்
    இன்று கெடுதல் நடக்காமலிருக்க ஓர் யாகம்!

    ஆன்மிகவாதிகளுக்கும் அரசியல்வாதிக்கும் சுதந்திரம்
    நல்லதைச் செய்பவர்களைத்   தடைசெய்யுதே  சுதந்திரம்!

    பறவைகள்  பறப்பதற்கு  என்றும்  சுதந்திரம்
    பாவைகளுக்கு  எதிலே  இன்று சுதந்திரம்?

    அறுபத்தொன்பது  ஆண்டுகள் ஆயினும்  வறுமைக்கோடு
    இன்றோ ஏழை  கூக்குரலின்  கூப்பாடு !

    கவிஞர்கள் முழக்கிய  சுதந்திரம்  எங்கே?
    இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே!

    இளைஞர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள் !
    தாய்நாட்டின் முன்னேற்றத்திற்குக் கடினமாய் உழைத்திடுங்கள் !

    ஊழலையும் கொடுமைகளையும்  எதிர்த்துப் போராடுங்கள் !
    ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !

    சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை  என நினையுங்கள் !
    அதுவே  பல தியாகிகளின்  தியாகம் என நினைந்திடுங்கள் !

    இன்று சுதந்திரத்தின்  உள்ளுணர்வு உங்களைத் தூண்டட்டும் !
    இன்றைய பாரத இளைஞர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் !

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 176

     -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    கோவலனுக்குக் கண்ணகி உணவு படைத்தல்

    பனையால் செய்த ஓலைகொண்டு
    கைவேலை செய்யும் மகளிர் அழகாய் முடைந்த
    வேலைப்பாடுகள் அமைந்த தடுக்கில்
    கோவலன் அமர்ந்தான்
    அதன்பின் கண்ணகி                                              food
    செந்தாமரை மலர் போன்ற
    தன் கைகளைக் குவித்துச்
    சுட்ட மண்கலத்தில் உள்ள நீர்கொண்டு
    அவன் பாதங்களைக் கழுவி வணங்கினாள்.

    மண்மகளின் மயக்கத்தைத் தெளிவிப்பவள் போல்
    இலைபோடும் இடத்தில் தரையை மெழுகி,
    குலைதராத வாழை இலையை
    அதன் உள்பக்கம் வெளித்தோன்றுமாறு
    பக்குவமாய் விரித்து,
    அதில் சமைத்த உணவினைப் படைத்து
    ‘அடிகளே! உணவு உண்ணுங்கள்’
    என்று கூறி நின்றாள்.

    அரசர்க்கு அடுத்த நிலையில் வைத்து
    மதிக்கப்படும் வணிக மரபில் வந்தவர்
    உணவு உண்ணத் தொடங்கும் போது
    கடைப்பிடிக்க வேண்டிய மரபுகளான
    வாய்ப்பூச்சு, பலியிடுதல்
    முதலியவற்றை எல்லாம் செய்தபின்
    கோவலன் உணவு உண்ணத் தொடங்கினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 35 – 45

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

    படத்திற்கு நன்றி: கூகுள்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 161 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் இந்தவாரம் உங்களை இம்மடல் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    தான் பிறந்த நாட்டில் தான் வாழ்வதற்கு பாதுகாப்பின்றி, வாழ்வாதாரத்திற்கு எந்தவித உத்தரவாதமும் கிடைக்காமல் தன்னுடைய நாட்டையும் தனது உற்றார், உறவினர்களையும் பிரிந்து தமது உயிரை கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு நாடு தமது உயிருக்கும் வாழ்விற்கும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆதரவளிக்கும் எனும் நம்பிக்கையில் தமது நாட்டை விட்டு வெளியேறுவதே ” அகதிகள் ” எனும் பதத்தின் பொருளாகிறது.

    இன்றைய உலகின் பல மூலைகளில் பலவிதமான வகைகளினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உள்நாட்டு யுத்தம், இனப்படுகொலைகள் , வறுமை, பாலியல் கொடுமைகள் என பலவகையான தாக்கங்களுக்கு பல நாடுகளில் பல மக்கள் உள்ளாகிறார்கள்.

    இன்றைய இங்கிலாந்து அரசியல் வானிலே அரசியல்வாதிகளை மிகப்பூதாகரமாக எதிர்நோக்கும் பிரச்சனை “குடிவரவு” (Immigration ) எனும் பிரச்சனையே !

    லிபியா , சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஜரோப்பாவை நோக்கி வெளியேறும் பலர் இத்தாலி, கிறீஸ் போன்ற நாடுகளை நோக்கி கடல் பயணத்திற்கு ஒவ்வாத படகுகளில் ஆட்கடத்தல் செய்வோரிடம் பணம் கொடுத்து தமது பிரயாணத்தை ஆரம்பிக்கிறார்கள்.

    இப்படி ஆரம்பிப்பவர்கள் பலர் படகுகள் கடலில் கவிழ்ந்து விடுவதால் பரிதாபகரமாக தமது பிரயாணத்தை முடிக்காமல் கடலிலேயே தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள் .

    இத்தகைய வகையில் கடந்த சில மாதங்களில் 2000 பேர் கடலில் உயிர் நீத்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.

    இத்தகைய ஆபத்தைக் கடந்து பெரும்பான்மையான திரளில் இத்தாலியக் கரையை வந்தடையும், இவர்கள் ஜரோப்பிய நாடுகளுக்கூடாக இடம் பெயர்கிறார்கள்.

    இப்படி இடம் பெயர்பவர்கள் தமது நிலைப்பாட்டிற்கேற்ப தாம் வாழ்வதற்கு ஒரு ஜரோப்பிய நாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

    ஆனால் பலரோ அனைத்து நாடுகளையும் கடந்து தமது இலக்காக இங்கிலாந்தை கொள்கிறார்கள்.

    பிரான்ஸு நாட்டை அடைந்து இங்கிலாந்துக்குச் செல்லும் கரையான “கலே ” எனும் இடத்தை வந்தடைந்து இங்கிலாந்துக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அங்கே தடைச்சுவர்களும், எல்லைகளும் போடப்பட்டு காவலுக்கு பிரெஞ்சு காவல்துறை படை, குடிவரவு அதிகாரிகள் போன்றவர்களால் அவர்கள் தடை செய்யப்படுகிறார்கள்.

    ஆனால் தமது இலக்கான இங்கிலாந்து நாட்டை அடைவதே இலட்சியமாகக் கொண்டுள்ள இவர்கள் அக்கரையிலேயே தங்கி விடுகிறார்கள்.

    இப்படியானவர்கள் சுமார் 5000 பேர் வரையில் தங்கியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

    ஆனால் சமீபத்தில் இப்பிரச்சனை ஒரு புது வடிவத்தை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கும் , பிரான்சுக்கும் இடையில் ஆங்கிலக் கால்வாய் என அழைக்கப்படும் சிறிய கடற் பரப்புக்கு அடியினூடாக ” சனல் டனல் ” என்றழைக்கப்படும் இரெயில் சுரங்கப்பாதை உள்ளதை பலரும் அறிந்திருப்பீர்கள்.

    இந்த ரயில் பயணிக்கும் சுரங்கப் பாதையினூடாக ஊடுருவி இங்கிலாந்துக்குள் புகுவதற்கு தினமும் ஒரு 200 பேர் முயற்சிக்கிறார்கள் .

    asak

    அப்படி முயற்சிப்பவர்கள் இரெயில் பாதையில் தமது உயிர்களைப் பலியிடாதிருப்பதற்காக இந்த ரயில் பாதையை மூடி பல பாதுகாப்பு நடவடிக்கைகளில் இங்கிலாந்து எல்லைக் காவல் படையினர் ஈடுபடுகிறார்கள்.

    asak1

    அதனால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரி வண்டிகளின் பயணம் தடைப்பட்டு அவைகள் சாரி, சாரியாக மோட்டார் வே என்றழைக்கப்படும் நெடுஞ்சாலைகளில் இந்த சுரங்க ரெயில்பாதையை அண்மித்த பகுதிகளில் நிறுத்தப்படுகிறது.

    இத்தகைய நடவடிக்கை அப்பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது.

    சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் தமது பிரயாணத்தை பாதியிலே நிறுத்தி தாமதப்படுத்துவதனால் அக்கம்பெனிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.

    அது மட்டுமின்றி “அகதிகள்” எனும் போர்வையில் சில பயங்கரவாதிகள் நாட்டிற்குள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக ஊடுருவலாம் எனும் அச்சம் ஒரு பகுதி மக்களிடமிருந்தும், சில அரசியல்வாதிகளிடமிருந்தும் கிளம்புகிறது..

    இங்கிலாந்து இப்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது. சமீபத்தில் மீண்டும் பிரதமர் பதவியேற்ற டேவிட் கமரன் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ஜரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிப்பதா ? இல்லையா ? எனும் சர்வஜன வாக்கெடுப்பு 2017ம் ஆண்டுக்கு முன்னால் நடத்தப்பட வேண்டும்.

    அதற்கு முன்னதாக ஜரோப்பிய ஒன்றியத்தில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தால் ஒழிய ஜரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிப்பது என்பது சந்தேகத்திற்கிடமானதே !

    இம்மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக மற்றைய ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பலரை சமீபத்தில் அடுக்கடுக்காகச் சந்தித்து தமது நிலைப்பாட்டை எடுத்து விளக்கினார் திரு டேவிட் கமரன்.

    ஆனால் அவரின் இம்முயற்சிகளுக்கு இடையூறாக இந்த “குடிவரவு” பிரச்சனை கிளம்பியுள்ளது

    ஜரோப்பிய ஒன்றியத்தில் ஒன்றான பிரான்சு நாடு இவ்வகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்தாது தமது நாட்டில் தங்காமல் இங்கிலாந்துக்குள் நுழைவதற்கு ஏதுவாக அவர்களை இங்கிலாந்து கரையோடு தங்க வைத்திருக்கிறார்கள்.

    ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் இதைத் தமது வாதத்திற்கு துணையாகக் கொள்கிறார்கள்.

    ஆயிரக்கணக்கில் இங்கிலாந்துக்குள் நுழைய முயற்சிக்கும் இவ்வகதிகள் இங்கிலாந்து வருவதற்குக் காரணம் இங்கு அகதிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றைய ஜரோப்பிய நாடுகளை விட அதிகமானது என்பது பல இங்கிலாந்து மக்களின் அபிப்பிராயம்.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் தான் இத்தகைய வெளிநாட்டோரின் வருகை இங்கு அதிகரிக்கிறது என்பது மற்றொரு வாதம்.

    லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இங்கிலாந்து தலையீடு செய்ததால் தான் இன்று பல அகதிகள் குறிப்பாக லிபியா அகதிகள் இங்கிலாந்தை நோக்கி வருகிறார்கள் என்று இங்கிலாந்து வெளிநாட்டுக் கொள்கையைக் காரணம் காட்டுகிறார்கள் ஒரு பகுதியினர்.

    இப்பிரச்சனை எடுத்திருக்கும் முக்கிய பங்கினால் அவசரமாக பிரான்சு நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்காக இங்கிலாந்து பல மில்லியன் நிதி அளித்துள்ளது.

    “அகதி” என்பது ஒரு அந்தஸ்து அல்லது அவதியான ஒரு வாழ்நிலை. எதிர்காலம் என்னவென்று புரியாத நிலையில் கடந்தகால பந்தங்களை உதறி விட்டு அந்நியநாட்டின் உதவும் மனப்பான்மையை நம்பி உயிரைப் பணயம் வைத்து எடுக்கும் ஒரு தீர்மானம்.

    ஆனால் அதே சமயம் அடுத்த பக்க வாதத்தைப் பார்த்தால் இங்கிலாந்து போன்ற ஒரு சிறிய தீவினுள் எண்ணிக்கையற்றோரை ஏற்றுக் கொள்ள முடியுமா?

    தன்னுடைய பிரஜைகளின் அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற அல்லாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து எப்படி லிபியா போன்ற நாடுகளில் இருந்து முற்றாக இடம்பெயரும் அத்தனை பேரையும் தம்முள் உள்வாங்கிக் கொள்ள முடியுமா?

    இத்தகைய பெருமளவிலான வெளிநாட்டவரின் வருகை இனவிரோத சக்திகளின் கரங்களை வலுப்படுத்தி புலம்பெயர்ந்து வாழும் பலரின் வாழ்வில் பல நெருக்கடிகளை ஏற்படுத்துமா? எனும் கேள்வியும் எழுகிறது.

    தம்முடைய நாடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்கிறார்கள் என்றால் அந்நாடுகளில் இருக்கும் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு இங்கிலாந்து, மற்றும் ஜரோப்பிய நாடுகள் முன்வரவேண்டும் எனும் கருத்தும் முன்னெடுக்கப்படுகிறது.

    எது எப்படி இருப்பினும் இது பலரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஒரு பாரதூரமான நிகழ்வாகும்.

    இந்நிலையை இங்கிலாந்து அரசியல்வாதிகள் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்

    கவிஞர் காவிரிமைந்தன்

    சோளிங்கர் கம்பைன்ஸ் தயாரிப்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற அகிலனின் கணையாழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்! எம்.ஜி.ஆர். நடித்து வெளியான கடைசித் திரைப்படமிது என்கிற பெருமையும் இதற்கு உண்டு! சரித்திர காலப் பின்னணியில் கவித்துவ பலத்துடன் புலவனாக – கதையின் நாயகன் இடம்பெற இடம்பெற்ற இரண்டு காதல் பாடல்களும் உயிர்பெற்று நம் கண்முன்னே உலவுகின்றன என்றால் மறுப்பதற்கில்லை!

    akavi

    அமுதத் தமிழில் எழுதும் கவிதை படைத்த புலவர் புலமைப்பித்தன் வரைந்தளித்த மற்றுமொரு தென்றல் காற்று இந்தப் பாடலில் கூந்தலில் ஆடுகின்ற காட்சி.. மெல்லிசை மன்னரால் வடித்தெடுக்கப்பட்ட இசை ஆபரணமிது என்று சொன்னாலும் அது மிகையாகாது!

    ஜெயச்சந்திரனுடன் வாணிஜெயராம் இருவர் குரலில் கவித்துவமிக்க பாடல்வரிகள் தங்கம்போல் ஜொலிக்க எம்.ஜி.ஆர். லதா இருவரின் நடிப்பில் இமைப்பூக்கள் தலைகவிழ இதயநதி வழிந்தோடும் இன்பக்காதலிது – இன்னும் கேட்கலாம்! என்றும் மகிழலாம்!!

    https://www.youtube.com/watch?v=4I_BHvRR0hA&list=PLUSRfoOcUe4apYw16vNhK6WuFAiwyZTy_

    தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம் – என்
    தேவதைஅமுதம்சிந்திடும்நேரம்இனிஎன்னநாணம்இனிஎன்னநாணம்?
    மன்னவன்உங்கள்பொன்னுடலன்றோஇந்திரலோகம்? அந்தி
    மாலையில்இந்தமாறனின்கணையில்ஏனிந்தவேகம்ஏனிந்தவேகம்?
    பாவையுடல்பாற்கடலில்பள்ளிகொள்ளநான்வரவோ?
    பனிசிந்தும்கனிகொஞ்சும்பூவிதழில்தேன்பெறவோ?
    மாலைவரும்நேரமெல்லாம்மன்னன்வரப்பார்த்திருந்தேன்
    வழியெங்கும்விழிவைத்துப்பார்த்தவிழிபூத்திருந்தேன்
    ஆலிலையின்ஓரத்திலேமேகலையின்நாதத்திலே
    இரவென்றும்பகலென்றும்காதல்மனம்பார்ப்பதுண்டோ?
    கள்ளவிழிமோகத்திலேதுள்ளிவந்தவேகத்திலே
    இதழ்சிந்தும்கவிவண்ணம்காலைவரைகேட்பதுண்டோ?
    காலைவரைகேட்பதுண்டோ?
    தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம்
    கற்பகத்துச்சோலையிலேபூத்தமலர்நீயல்லவோ?
    விழியென்னும்கருவண்டுபாடவந்தபாட்டென்னவோ?
    காவியத்துநாயகினின்கட்டழகின்மார்பினிலே
    சுகமென்னசுகமென்றுமோகனப்பண்பாடியதோ?
    மோகனப்பண்பாடியதோ?
    தென்றலில்ஆடும்கூந்தலில்கண்டேன்மழைகொண்டமேகம் – என்
    தேவதைஅமுதம்சிந்திடும்நேரம்இனிஎன்னநாணம்இனிஎன்னநாணம்

    புலவர்தம் கற்பனையின் உச்சங்கள் கைதட்டி அழைக்க காதலின் ஊர்வலம் நடந்தேறுகிறது! அன்பின் அரங்கேற்றம் என்பதால் அணைப்பு அவசியமாகிறது! கண்கள் நடத்திடும் தேர்வு என்பதால் காட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன! கவிதைப் பாற்குடம் கரைபுரண்டு காதல் சாம்ராஜ்ஜியத்தில் வழிந்தோடுகிறது.

    மெல்லிய தென்றல் தாலாட்டும் முன்னிரவில் அன்பே உன் மடியில் தலைசாய்த்து இப்பாடலைக் கேட்டால் சுகம்! சுகம்! சுகமே!!

    பாடல்:தென்றலில் ஆடும்.. கூந்தலில் கண்டேன்
    திரைப்படம்: மதுரையைமீட்டசுந்தரபாண்டியன்
    பாடியவர்: வாணிஜெயராம், ஜெயச்சந்திரன்
    இயற்றியவர்: புலவர் புலமைப்பித்தன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1978

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”அரியா தவனை, அறியா தவரே,
    அறிய முயல்வர் அறிவால்: -எறியா(து),
    ஒளிந்த நெருப்பை, உணர மரத்தைப்,
    பிளந்த குருடனைப் போல்”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”பூபாள வேளையில், பால்பசு மேய்க்கவே,
    கோபாலன் வந்தனன் கோகுலம், -மாபார,
    பூலோகம் பார்த்ததால் பாரதம் செய்தானே,
    மாலோல னுக்கும் மறப்பு’’….கிரேசி மோகன்….

    ———————————————

    சூரி நாகம்மாளின் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….அஸிஸ்டெண்ட் லைப்ரேரியனை பகவான் சேவைக்கு பணித்தபோது
    அவரது புத்தக தாபத்தை போக்குவதற்காக அவரிடம் பகவான் ஆறுதலாக ‘’சப்த ஜால மஹாரண்யம், சித்த பிரமண காரகம்’’ என்று பரிவோடு சொல்லி அவரை தேற்றினாராம்…..சாஸ்திரங்களைக் கற்றல், புலமை முதலானவை வாழ்க்கையில் புகழை தருமே தவிர ‘’முக்திக்கு முகுந்தனே’’….

    ‘’சொற்கள் பெருங்காடு, சித்தம் குழம்பிடும்
    அற்பம் அவற்றுள் அணுகாதே, -தர்கத்திற்(கு)
    ஆகவே கல்வி, அனுபூ தியைப்பெற
    பாகவத பாலனிடம் போ’’….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர்

    பழமொழி: தோற்பனகொண்டு புகாஅர் அவை

     

    கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
    வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் – வேட்கையால்
    வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன
    கொண்டு புகாஅ ரவை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
    வேட்கை அறிந்து, உரைப்பார் வித்தகர்;-வேட்கையால்
    வண்டு வழி படரும் வாள் கண்ணாய்!-தோற்பன
    கொண்டு புகாஅர், அவை.

    பொருள் விளக்கம்:
    சொல்வதைக் கவனமுடன் கேட்கக் கூடியவரிடம் சென்று, தான் சொல்வதைக் கேட்பதிலும் அவருக்கு விருப்பம் இருக்குமா எனத் தெரிந்து கொண்டு சொல்பவரே அறிவாளி. விருப்பத்துடன் வண்டு (மலரென நினைத்து) மொய்க்க வரும் ஒளிபொருந்திய மலர்களை ஒத்த கண்களைக் கொண்ட பெண்ணே! சபை ஏறாது தனது கருத்து என்று தெரியுமாயின் அவையினரிடம் கொண்டு செல்லத் தேவையில்லை.

    பழமொழி சொல்லும் பாடம்:
    அறிவாளிகள் விரும்பிக் கேட்கக் கூடியவர்களிடம் மட்டுமே சென்று தனது கருத்தைக் கூறுவார், சபை ஏற்காது புறக்கணிக்கும் என்று தெரியுமாயின் கருத்துகளைச் சொல்ல முற்படார். இக்கருத்தைக் கூறும் வள்ளுவரின் வாக்கு,

    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர். (குறள்: 711)

    சொற்களின் திறன் அறிந்த அறிஞர்கள், அவற்றை அவையினரின் தரமறிந்து, சபையின் தன்மைக்கு ஏற்ப சொல்லுவர் என்று குறிப்பிடுகிறது.

    Share
  • ஐந்து கை ராந்தல் (25)

    வையவன்

    இரண்டு அறைகள் கொண்ட ஒரு காட்டேஜில் அவர்கள் இரவு தங்கினார்கள். கம்பளியும் கொசு வலையும் தலையணையும் அங்கே தரப்பட்டன. பிரீதா மட்டும் தனியாக ஓர் அறையில் படுத்துக் கொண்டாள்.

    தூரத்தில் கங்கை ஓடும் ஒலி இடைவிடாது கேட்டது. இரவு வெகு நேரம் வரை உறக்கம் வராமல் கங்கையின் ஒலியைக் கேட்டுக் கொண்டே படுத்திருந்தான் சிவா. வெற்றிவேல் ஒரு நேரமாக விழித்துக் கொண்டான்.

    “என்ன சிவா, தூக்கம் வரலியா?”
    “இல்லே.”
    “ஏன்?”
    “யோசனைகள்”

    வெற்றிவேலுக்கும் தூக்கம் கலைந்தது. கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான்.

    “என்ன யோசிக்கறே?”
    “ஓசை காதிலே விழுதா?”
    வெற்றிவேல் உற்றுக் கேட்டான்.

    “கங்கை ஓடுகிறது!”
    “ஆமாம்… அந்த ஒலி தான் யோசனையைக் கிளப்பி விட்டது.”

    “ம்ம்ம்”
    “அந்த மஹா யாத்திரையின் ஒலியில் நெடிய தவம் ஒன்று தென்படறது இல்லியா வெற்றி!”
    “எக்ஸாக்ட்லி”
    “நன்மை… தீமை… பாவ புண்ணியம்… ஜனன மரணம்னு எல்லாத்தையும் வாரிச் சுமந்து கொண்டு அது ஓடறாப்பிலே எனக்குப் பட்டது.”
    “சொல்லு”

    “இதுதான் வாழ்க்கை வெற்றிவேல்! இடைவிடாது தன்னை எல்லோருக்கும் அர்ப்பணித்துக் கொண்டு ஓடும் ஓட்டம்”
    “வாழ்க்கைப் பற்றி இது இன்னொரு கருதுகோள். அனதர் டெஃபனிஷன்”

    “கைலாசத்துக்கு ஓடுவது வாழ்க்கையல்ல”
    அவன் எதிர்ப்புணர்ச்சி நடு இரவில் கத்தி போல தன்னைத் தாக்கியதை உணர்ந்தான் வெற்றிவேல்.
    “கைலாசத்துக்கு ஓடுவது அல்ல, கைலாசத்திலிருந்து ஓடி வருவது.”

    “ஒனக்கு ஏன் பாபா பேரிலே இப்படி ஒரு வெறுப்பு?”
    “ஒனக்கு ஏன் பாபா பேரிலே இப்படி ஒரு வியப்பு?”

    “சொல்றேன்” என்று மெத்தைக்கடியில் வைத்திருந்த சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்தான் வெற்றிவேல். சிகரெட்டைப் பற்ற வைத்து அவன் உறிஞ்சி இழுத்தான். கனிந்த முனை செம்மையாய்ச் சுடர் விட்டது,

    “போன வருஷம் ரிஷிகேஷûக்கு வந்து தங்கினேன். அப்ப ஆச்ரமம் இங்கே இல்லே. கங்கையின் அக்கரையில் இருந்தது. அப்போ சீடர்கள் கூட்டம் இவ்வளவு இல்லே. வரும், போகும். பெர்மனெண்டா யாரும் நிக்க மாட்டாங்க.”
    “நீ ஏன் ரிஷிகேஷ் வந்தே?”

    “ஆஸ் யூஷூவல்… ஒரு மாறுதலுக்குத்தான். இந்தியனான என்னை ஒரு அமெரிக்க நண்பன் இங்கே அழைச்சுட்டு வந்தான். அவனை நான் கல்கத்தா ஹார்பர்லே மீட் பண்ணேன். பத்து நாள் நானும் அவனும் ஒண்ணா சுத்தினோம். அவன் இங்கே கூட்டி வந்தான்.”

    “பாபா கிட்டேயா?”
    “ஆமா. அவர் இங்கிலீஷும் ஹிந்தியும் பேசினார். பார்த்தவுடனே எனக்கு அங்க அடையாளங்களை வச்சு இன்னது என்று தோன்ற முடியாத உள்ளுணர்வில் இவர் தான் உன் தந்தை என்று தோணிற்று.”
    “விசாரிச்சியா?”

    “ஆமாம்; ஒப்புகிட்டார். நீ கேட்டியே அதைவிட அதிகமான கேள்விகளை நான் கேட்டேன்!”
    “எப்படி? என்ன கேட்டே?”
    “பெண்டாட்டி புள்ளைய விட்டுட்டு அந்த பொறுப்புக்கு பயந்துகிட்டு ஞானம் தேடி வந்தீங்களே… அவங்க என்ன ஆனாங்கண்ணு ஒங்களுக்குத் தெரியுமாண்ணு கேட்டேன்.”

    “அவர் என்ன பதில் சொன்னார்?”
    “ஈசுவராண்ணார்… அந்த ஈசுவரன் ஒங்க பெண்டாட்டிகிட்டேயும் பிள்ளை கிட்டேயும் தென்படலியாண்ணேன். அவர் மறுபடியும் ஈசுவராண்ணார்.”
    “இது ஞானமா…கல்லுளி மங்கத்தனமா?”

    “அதையும் நான் கேட்டேன்! அவர் சொன்ன விவரங்கள் மயிர்க் கூச்செறிகிறது, இப்ப நெனச்சாக் கூட”
    சிவா நிமிர்ந்து உட்கார்ந்தான். வெற்றிவேலுக்குத் தன் தந்தையின் தாம்பத்தியத்தைப் பற்றி, தனக்குத் தெரிந்ததை விட அதிகமாய் ஏதோ தெரிந்திருக்கிறது என்ற சிலிர்ப்பு எந்தது.

    “அவரது இளமைப் பருவத்திலிருந்தே பாபாவுக்குள் ஏதோ ஒரு நூதன அவஸ்தை இருந்து வந்திருக்கிறது. அவருக்குள் ஏதோ ஒரு குரல் இடைவிடாமல் உண்மையைத் தேடு… உண்மையைத் தேடுண்ணு கேட்டுகிட்டே இருந்திருக்கு. ரொம்ப வயசான காலத்திலே உன்னுடைய தாத்தாவுக்கும் பாட்டிக்கும் கொழந்தையா பொறந்திருக்கிறார். அவருக்கு அறிவு உதயமான காலத்தில் உன் தாத்தாவுக்கு அறுபது முடிஞ்சிருக்கு.”

    சிவாவுக்கு மார்பு நடுங்கிற்று. இவன் இன்னும் திடுக்கிடக் கூடியதாக எதையோ சொல்லப் போகிறான் அதைக் கேட்க வேண்டாம். அது இவனுக்கும் பாபாவுக்கும் அம்மாவுக்கும் மத்தியிலேயே புதைந்து போகட்டும் என்று நடுக்கம் எழுந்தது.
    சீ… உண்மைக்கு நான் ஏன் நடுங்க வேண்டும்?

    எதுவாயிருந்தாலும் அந்த உண்மையை நான் சந்திப்பேன் என்று தன்னை திடப்படுத்திக் கொண்டான்.

    “ஆறு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்த பின்னால் ஏழாவது குழந்தையாக உன் தந்தை பிறந்திருக்கிறார். ஆறு இறந்த அத்தனை சோகத்தையும் நம்பிக்கையாக மாற்றி இவர் தலை மேல் சுமத்தியிருக்கிறார்கள். ‘மகனே, அதுதான் பந்தத்தின் மீது சுமத்தப்பட்ட பந்தமாக என் தலைமேல் விழுந்ததுண்’ணு சொன்னார்.”

    வெற்றிவேல் சிகரெட் சாம்பலை உதறிவிட்டு என்றோ நடந்து முடிந்த ஒரு கதையில் தான் ஒரு பாத்திரமானது போல் தூரத்தில் பார்வையை ஓடவிட்டான்.

    “உள்ளத்தை வண்டு குடைவது மாதிரி உண்மையைத் தேடு… உதறி விடு… உதறி விடுண்ணு ஓர் உத்தரவு குடைகிற வேளையில் வயதான பெற்றோர்களின் நம்பிக்கையை மோசம் செய்யாது அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ள முடியவே முடியாது என்று தீவிரமாக மறுத்த வேளையில் உங்க தாத்தா தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டிருக்கிறார். உறவினர்கள் எல்லாம் வந்து திட்டி அந்த திருமணம் நிர்ப்பந்தத் திருமணமா நடந்திருக்கு.”
    வெற்றிவேல் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான். ஃஸ்ஸ்ஸ்… என்று வாயிலிருந்த புகை முழுவதையும் ஊதி விட்டு சற்று அமைதியாயிருந்தான்.

    சிவா அவனது ஒவ்வோர் அசைவிலும் மனம் பதித்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
    “அவர் சாந்தி முகூர்த்தத்தன்று என்ன செய்தார் தெரியுமா?”
    சிவா தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.

    “நேரா போய் நின்னுகிட்டிருந்த ஒங்க அம்மா கால்லே விழுந்திருக்கார். அவங்க பயந்து போய் அழுதிருக்காங்க. ‘பயப்படாதே, எனக்கு நீ போக வஸ்துவில்லே. புண்ணியம் செய்ய வந்த தெய்வம்’ணு சொல்லியிருக்கார். மூணு வருஷம் அவங்க புருஷன் மனைவியா இல்லாமே ஏதோ ஒரு குடும்பத்து உறுப்பினர் மாதிரி வாழ்ந்திருக்காங்க. வம்ச விருத்தியில்லேண்ணு மனசு ஒடஞ்சு அதை வற்புறுத்தப் பயப்பட்டு சிறுகச் சிறுக வருந்தி ஒங்க தாத்தா செத்திருக்கார். அதுக்கப்புறம் ‘இந்தக் குடும்பம் வௌங்க மடிப்பிச்சை போடுடா’ண்ணு ஒங்க பாட்டி கேட்டிருக்காங்க. ‘நீ பெரிய மகானாக்கூட இருக்கலாம். பட்டினத்தாருக்கு அம்மா மேலே இருந்த பாசம் கூடவா ஒனக்கு இல்லே’ண்ணு தன் மருமகள் எதிரிலேயே வெளிப்படையா கேட்டிருக்காங்க.”

    “போதும் வெற்றிவேல்…”
    “கேள். இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. ஒரே ஒருமுறை தன் அம்மாவுக்காக பாபா தன் மனைவியோட வாழ்ந்திருக்கிறார். ஒருமுறை…அது எதற்குண்ணு ரெண்டு பேருக்கும் தெரியும். ரெண்டு பேருக்கும் அது சம்மதம். ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணிக்கிட்ட இச்சையில்லாத வம்ச விருத்திக்கான ஒப்பந்தம மாதிரி அது நடந்திருக்கிறது விளைவு…நீ”
    சிவாவுக்கு மார்பு பீறிட்டு வெள்ளம் வெள்ளமாக ஒரு துக்கம் மூண்டது. அம்மாவுக்காக…அப்பாவுக்கு ஆறு குழந்தைகளை இழந்த தாத்தாவுக்காக…பாட்டிக்கா… தனக்காக…விதிக்காக….

    ஆனால் அழுது யாருக்கு என்ன லாபம்!
    தன் ஆண்மை குன்றி விடுகின்ற தன்னிரக்கத்தைத் தானே அனுபவிக்கிற இழிவு தவிர-கழிந்து போன எந்த சரித்திரத்தின் ஏடுகளை இந்தக் கண்ணீர் அழிக்கப் போகிறது?
    “வெற்றிவேல், நாம வெளியே போய்ட்டு வருவோமா?” என்றான்.
    “எங்கே?”

    “எனக்கு நடக்கணும் போலிருக்கு”
    “இந்த ராத்திரியிலேயா.”
    “ஆர் யூ டயர்ட்?”
    “நோ…நாட் அட் ஆல். வா போவோம்.”

    அவர்கள் இருவரும் வெளிக் கதவைப் பூட்டிக் கொண்டு கையில் ஒரு டார்ச்சுடன் நடந்தனர்.
    கங்கை ஓடும் ஒலியின் பின்னணியில், காலி கம்பள் வாலா மகராஜின் தோட்டத்து மரங்களில் உதிர்த்த இலைச் சருகுகளை அவர்களது காலடி மிதிக்கும் சத்தம் சரசரத்தது.

    “மேலே சொல்லு வெற்றிவேல்.”
    தூரத்தில் ஒரு கணப்புச் சட்டியருகில் நாலுபேர் உட்கார்ந்து குளிர் காய்ந்தனர். நந்தி மாதிரி செருக்குடன் மதர்த்து வளர்ந்திருந்த ஒரு நேர்த்திக் காளை மெதுவாக அவர்களைக் கடந்து சென்றது.

    “உன் பாட்டி இறந்து அவர்களுக்கு ஈமக்கடன் முடித்த வேளையில் பாபா உன் தாயாரிடம் துறவுக்கு உத்தரவு கேட்டிருக்கிறார். உன்னை வளர்த்துப் பராமரிக்க நாலு ஏக்கர் நிலமும் ஒரு பம்பு ஷெட்டும் வைத்துவிட்டுக் கேட்டிருக்கிறார். தன்னுடன் வாழாமல் வெறுமனே உடனிருந்து அவர் கேட்ட உத்தரவைத் தானும் ஒரு சுமையாக இராமல் உன் அம்மா பெருந்தன்மையோடு வழங்கியிருக்கிறார்.”

    கம்பளி போர்த்துக் கொண்டு யாரோ ஒரு சாது கஞ்சாக் குழலுடன் உட்கார்ந்திருந்ததை இருவரும் கவனித்தனர்.
    “கௌன் ஹோ?” என்று அவர் விசாரித்தார்.

    “யாத்ரிக்! நீந்த் நஹி ஆதா. கூம்தா ஹைன்” என்று வெற்றிவேல் பதிலளித்தான்.
    “ஹோஷியார் கீஜியே. சோர் ஹைன்.”
    “என்ன சொல்கிறார்” என்று விசாரித்தான் சிவா.
    “திருடர்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதை” என்கிறார்.
    “அவருக்கு நன்றி சொல்.”
    “தன்ய வாத் மஹராஜ்.”
    “ஜீதே ரஹோ பேடா… ராம் ராம்.”
    “ராம்… ராம்.”
    அவர்கள் மேலே நடந்தனர்.

    “அந்த நாலு ஏக்கர் நிலமும் பம்ப்ஷெட்டும் வெங்களாபுரத்தில் இருந்திருக்கிறது.”
    “தெரியும்” என்று அதைப் பற்றி விவரம் தெரிந்ததால், தன் உறவினர்களால் வஞ்சித்து ஏமாற்றப்பட்ட தாய் அதைப் பறிகொடுத்த கதையை மீண்டும் ஒரு முறை கேளாமல் தவிர்த்தான் சிவா.
    “பாபா உண்மையைத் தேடி இந்தியா முழுதையும் நடந்தும் அலைந்தும் சாமியார்களிடமும் குருஜிக்களிடமும் திரிந்திருக்கிறார். அவர் கால் படாத புண்ய ஸ்தலம் எதுவும் இந்தியாவில் இல்லை. அவர் நீராடாத தீர்த்தம் எதுவும் இல்லை. ஆனால் உண்மை, அவரை மாநிலம் மாநிலமாக அலைக்கழித்திருக்கிறது. இறுதியில் இங்கே புலப்பட்டிருக்கிறது.”
    சிவா பெருமூச்சு விட்டான்.

    “ஏன் களைப்பா இருக்கா… திரும்பிடுவோமா?” என்றான் வெற்றிவேல்.
    “இல்லை. அவர் தேடிய உண்மையில் அவர் கண்டது என்ன?”
    “கண்டவர் விண்டிலர். அதைப் பற்றி அவர் சொல்லவில்லை. அவர் சய்கிறது உபதேசமே இல்லை. தன் மனசிலிருந்து அபூர்வமான ஒரு சாந்தியை அவர் ‘ட்ரான்ஸ்மிட்’ செய்கிறார். கம்பியில்லாத மின் அலை மாதிரி அது நம்மைத் தீண்டுகிறது. ஹாவ்ன்ட்யூ எக்ஸ்பீரியன்ஸ்ட் இட்?
    “ஆம்… நானும் அதை அனுபவித்தேன்!”
    “பல நேரங்களில் அவர் கண்களை மூடி அமர்ந்திருக்கிறார். அது தியானமோ என்று தோன்றுகிறது! எதைத் தியானிக்கிறீர்கள் பாபா என்று ஒருமுறை நான் கேட்டேன். ‘லோக க்ஷேமத்தை லோக சாந்தியை’ண்ணு புன்முறுவலோடு பதில் சொன்னார்.”
    சிவா நின்றான்.

    “உலக சேவை என்பது பேசுவதிலும் எழுதுவதிலும் ஓடியாடி உழைப்பதிலும் கூட்டம் கூட்டிப் போரிட்டு ஒன்றை அழித்து இன்னொன்றை உருவாக்குவதிலும் மட்டும்தான் இருக்கிறது என்று நீயும் நம்புகிறாயா சிவா?”
    “இல்லை” என்று மறுதளித்தான்.
    மனசிற்குள் ஒரு குரல் எழுந்தது.

    “அது ஆயிரம் வடிவம் கொண்டது. கருமானின் சுத்தியலும், தச்சனின் இழைப்புளியும், செருப்புத் தொழிலாளியின் ஊசியும், உழவனின் ஏர் முனையும் கூட அதில் ஈடுபட்டிருக்கின்றன.”
    “அதுதான் கர்மா” என்று வெற்றிவேல் மேலே போனான்.

    “அவை எல்லாமும் பிரதிபலன் எதிர்பார்க்கின்றன. அதனால் அவை கட்டுண்டிருக்கின்றன. வெற்றி தோல்வியுடனும், உழைப்பு கூலியுடனும், புகழ் ஆசையுடனும் கட்டுண்டிருக்கின்றன.”
    வெற்றிவேலின் வாக்கு மணிநாதம் போன்று ஒலித்தது.

    “பாபா, லோக க்ஷேமத்தை தியானிக்கிறார். எந்த பிரதிபலனையும் அவர் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை. மழை மாதிரி, கங்கை மாதிரி தன் இயல்பு என்ற கர்மாவில் அவர் ஈடுபட்டுத் தியானிக்கிறார். ஞாபகமிருக்கிறதா அந்த திருக்குறள்?”
    பளிச்சென்று மின்னலடித்தது போன்று நினைவிலிருந்து அந்தக் குறள் ஓடி வந்தது, சிவாவுக்கு.

    வெற்றிவேலே அதை வாய் விட்டுச் சொன்னான். “தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார் அவஞ் செய்வார் ஆசையுட் பட்டு! எல்லாக் காலத்திலும் எந்த யுகத்திலும் இப்படி ஒரு பாபா இருப்பதுண்டு சிவா!”
    லக்க்ஷமண் ஜூலா பாலம் வரை சென்று அவர்கள் நின்றனர்.
    “பாலத்தைக் கடக்கலாமா?” என்று வெற்றிவேல் கேட்டான்.
    “வேண்டாம். திரும்பிடுவோம்”

    இருவரும் வந்த வழியே திரும்பினர்.

    “மிஸ்டிக்கலா அவர் எந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார். அவர் சித்து விளையாடுவாரா? அவரிடம் அற்புத சக்திகள் உண்டா…ஐ’ம் நாட் இண்ட்ரஸ்டட்.

    அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. அக்கறையும் இல்லை. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், இந்த உலகத்திலிருந்து ஒரு சல்லியையோ ஒரு பழத்தையோ கூட எதிர்பாராமல் இந்த உலக க்ஷேமத்தையும் சாந்தியையும் தியானிக்கிற மனிதன்…” அவன் மெதுவாகச் சொல்லிக் கொண்டே மெல்ல நடந்தான்.
    சிவா கேட்டுக் கொண்டே வந்தான்.
    “தியானம் ஒரு செயல் அல்ல என்று நீ மறுக்கலாம். அதை செயல் என்று-பரிபூரணமான செயல் என்று நான் நம்புகிறேன். அவர்கள் கைலாசத்திற்கு ஏன் போகிறார்கள் தெரியுமா?”
    “சொல்”
    “உலக க்ஷேமத்திற்காக தியானிக்கவே போகிறார்கள். சொந்த முக்தியைத் தேடி அல்ல.

    “உயிர் உள்ளவரை இறுதி மூச்சு இருக்கும் வரை அவர்கள் அப்படியே தியானித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் திரும்ப மாட்டார்கள். இதை அவர்கள் விளம்பரம் செய்யவில்லை.

    “வாய்விட்டு எவரிடமும் தெரிவிக்கவில்லை. பாபாவின் போக்கிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.”
    அவர்கள் இருவரும் அப்புறம் ஒன்றும் பேசாமல் கங்கையின் ஒலியைக் கேட்டுக் கொண்டே நடந்தனர்.
    தங்கள் காட்டேஜை அடைந்து பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.

    “சிவா, நீ ஏன் அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன் தெரியுமா?”
    சிவா பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

    “நாட் பிகாஸ் ஹி ஈஸ் யுவர் ஃபாதர். அவர் உன் தந்தை என்பதற்கும் மேலாக உன் கருத்துப்படி ஏதோ மகான் என்பதற்கும் மேலாக அப்ஸல்யூட்லி டிஃபரன்ட் பெர்ஸனாடிலி என்பதினாலேயே அவரை நீ பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.”
    சிவாவின் மார்பு ஒருமுறை விம்மி உயர்ந்தது பின்பு தாழ்ந்தது. அவன் எதையோ கட்டுப்படுத்துகிறான்.
    “ஆஸ் எ ரைட்டர்… நீ நம்பிக்கையை விதைக்க விதிக்கப்பட்டவன். விதைகளைத் தூவுகிறவன். இப்படி ஒரு மனிதரை நீ சந்திக்கும் போது உன் விதைக்கூடை நிரம்பும்… இதைத் தவிர எனக்கு வேறு நோக்கம் இல்லை. டு யூ பிலீவ் மீ?”
    “நம்புகிறேன் வெற்றிவேல்.”

    அவர்கள் இருவரும் அதற்கப்புறம் படுத்துக் கொண்டனர். வெற்றிவேல் விழித்திருந்தான். சிவாவுக்கு சீக்கிரமே தூக்கம் வந்துவிட்டது.
    —————————————————————————————————————————————————————————————————–

    தொடரும்

    Share
  • பிள்ளையார் வெண்பாக்கள்

    ஓங்கார முகன் ஓவியம் ஹிண்டு கேசவ்….
    —————————————————————————-

    பிள்ளையார் வெண்பாக்கள்
    ———————————–
    Narthana Vinayaka.

    கேசவ் ஓவியம் பார்த்து எழுதியது
    ——————————————–
    ‘’ஆத்தாவோ கற்பகம், அப்பன் கபாலீசர்,
    மூத்தோனாய் ஆனாய் முருகனுக்கு, -கூத்தாட,
    பத்தாக் குறைக்கு பவளக் கொடியாக
    மத்தாளும் கண்ணன்மா மன்”….(1)

    ‘’வானந்த கைலாஸம் வாழும் வினாயகர்,
    ஆனந்தம் கொண்டிங்கே ஆடுகிறார், -ஆநந்தன்(ஆக்களை மேய்க்கும் நந்தகோபன்)
    -பையனுக்கு முன்பே, பிறந்தநாள் காரணம்:
    அய்யனுக்கு பின்பே அரி’’….(2)
    ’’சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
    சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
    சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
    வக்கிர துண்டனை வாழ்த்து….(3)

    ’’தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
    தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
    ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
    காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(4)

    ’’தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
    முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
    அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
    முரசடித்தேன் தந்திக்கு முந்து….(5)
    ’’ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
    சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
    தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
    ஊன்றிய வேழா உதவு….(6)
    ’’அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
    உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
    அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
    உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(7)

    ’’கணபதி ராயா மனிதச காயா
    பனிபதி கைலாசப் பையா -தனபதி
    மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
    கோல வினாயகனே காப்பு….(8)

    ’’கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
    மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
    பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
    அள்ளித் தருவான் அவன்….(9)
    ’’அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
    மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
    நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
    ஆனைமுகம் ஆக்கும் அரசு….(10)

    ’’cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    mouseயிக வாகனா மோதகா -houseனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு’’….(11)

    ’’மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
    பாஷைகள் போற்றும் ப்ரணவனை –வேஷமாய்
    வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
    ஏழைகள் ஈசனை ஏத்து….(12)
    ’’அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
    உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
    எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
    சதிராக யாதுமருள் வான்….(13)

    செங்கழுநீர் பிள்ளையார்….
    ————————————————–
    ’’கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
    சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
    செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
    சங்கத் தமிழ்மூன்றும் தா….(14)

    ’’தந்தி உடைய தரையில் அவசரமாய்
    முந்தி முருகனுக்கு முன்னால் -தொந்தி
    கணபதி தாய்ப்பால் உணவுண்ணும் காட்சி
    மனமதில் கொள்ள மகிழ்வு….(15)

    மலைக்கோட்டை வினாயகர் திருச்சி….
    ———————————————————-
    ’’மெச்சிட பக்தர்கள் மேதினியில் மாலவனை
    குச்சுக் குடித்தனம் கொள்ளவைத்த -உச்சி
    மலைக்கோட்டை பிள்ளாய் மனமுவப்பீர் நாடகக்
    கலைக்கோட்டை காபந்துன் கால்….(16)

    மனக்குள வினாயகர் புதுச்சேரி….
    ———————————————————-
    ‘’எனக்குள்ளே என்றும் மணத்திடும் வேழ
    மனக்குள மாலோன் மருகா -மனத்துள்ளே
    தோண்டி அழுக்கெடுப்பாய் வேண்டி விழைந்திடுவேன்
    பாண்டி வருகையில் பார்த்து….(17)

    ’’பந்திக்கு முந்தும் படபடப்பாய் பேர்புகழ்
    சந்திக்க ஓடி சலிப்படைவோம் -சிந்திக்க
    தொந்தி கணபதியை முந்தி வினாயகனை
    எண்திக்கும் ஏவல் எமக்கு….(18)

    வியாசன் உரைக்க வினாயகன் பாரதம் எழுதுதல்….
    —————————————————————————————-

    ’’முனிவன் உரைத்த மகாபா ரதத்தை
    பணிவும் குறும்பும் பெருகும் -வினய
    முகத்துடன் மூஷிக வாகனன் தந்த
    நகத்தால் வடித்தல் நயம்….(19)

    MOP வைஷ்ணவா காலேஜ் வினாயகர்
    ———————————————-
    ’’வயணமாய்க் குந்தி மரமருள்எம் ஓபி
    வயிணவக் கல்லூரி வேழா -பயனிவன்
    கேட்டதைத் தந்து குளிர்ந்திடச் செய்திடு
    வீட்டதன் சோகம் விலக்கு….(20)

    ’’காரைக்குடி சென்றபோது பிள்ளையார் பட்டி
    வினாயகர் தரிசனம்….
    ————————————————————-
    ’’கொள்ளை அழகனாய் பிள்ளைப் பெருமாளாய்
    வெள்ளைப் பணியார வேழத்தை -பிள்ளையார்
    பட்டிவாழ் வெல்லத்தை செட்டிமார் செல்லத்தை
    மட்டிலா மகோதரனை மேவு….(21)

    ’’வெற்பைப் பிளந்து வெளிவந்(து) அடியார்க்கு
    கற்பகமாய்க் கொட்டும் கணபதியே -நிர்பய
    நெஞ்சில் நினைவற்ற நிம்மதியைத் தந்தருள்வீர்
    அஞ்சு கரத்தால் எனக்கு….(22)

    வினாய சதுர்த்தியன்று எழுதியது….
    ———————————————
    ‘’பந்தியிடும் பார்வதி பாலுக்காய் தம்பியை
    முந்திட ஒற்றை மருப்புடைய -தொந்தி
    சரியத் தவழும் சதுர்த்தித் தலைவா
    விரியத் திறப்பாய் விழி….(23)

    ’’சலித்தது வாழ்வு சதுர்த்தி இறைவா
    வலுத்தது நெஞ்சில் விரக்தி -அளித்திடு
    ஆன்ம உணவுணர்வை ஆறா பசிதீர
    வான்மழை போல்பெய் விருந்து….(24)

    ’’கணபதி ராயா மனித சகாயா
    பனிபதி வாசரின் பையா -கனிதனை
    வென்றன்று பெற்றோர் வலம்வந்தோய் என்னுச்சி
    சிண்டென்றும் உன்தாள் சரண்….(25)

    ’’எருக்கம் அணிந்து எலிமீ(து) அமர்ந்து
    இருக்கும் இடத்தில் இருந்து -ஒருகொம்பன்
    வேண்டியதை நல்கிடும் வேற்றுமை பாராமல்
    ஆண்டிமுதல் ஆண்டான் அருள்….(26)

    ’’மாம்பலத்தில் கடல் குளியலுக்கு தயாராக
    உள்ள கணபதியைப் பார்த்து….
    ——————————————————
    ’’எருக்கம் அணிந்து எலிமீ(து) அமர்ந்து
    இருக்கும் இடத்தில் இருந்து -ஒருகொம்பன்
    வேண்டியதை நல்கிவிட்டு வாரிதியில் மூழ்கிடும்
    பாண்டிபஜார் பிள்ளையார் பார்….(27)

    ’’அப்பன் கனியருந்தி தொப்பையும் தொந்தியுமாய்
    சப்பை எலியேறி, சங்கடத்தைச் -செப்பிட,
    அக்கணமே வந்தருள்வான் விக்கினம் நீங்கிட
    பக்கவிளை(வு) இல்லா பலன்’’….(28)
    புது டிராமா ‘’கூகிள் கடோத்கஜனுக்காக’’ வேண்டி எழுதியது….
    ————————————————————————————————————-
    ’’அப்பனன்று செப்பிடாது முப்புரம் சென்றபோது
    சப்பர சக்கிரத்தை சோதித்த -அப்பனே
    கூகிள் கடோத்கஜன் கம்ப்யூட்டர் டவுன்லோடாய்
    ஏகஅஞ்சல் லாங்வேஜ் எழுத்து….(29)

    ’’சதுர்த்தி முடிந்தது சங்கடம் தீர்க்க
    உதித்த கணேசா உடனே -குதித்திட
    தங்கை மகன்காண தாய்மாமன் காத்திருக்கான்
    வங்கக் கடலோரம் வா….(30)

    ’’நான்ற வயிறாட, நாசிக் கரமாட
    மூன்று விழியாட மூஞ்சூரில் -தோன்றி
    நடமாடும் நீல நிறத்து கணேசா
    கடலாடப் போனதேன் கூறு….(31)

    ’’சீதப் பதங்களும் மோதகம் ஏந்துகையும்
    போதெருக்கம் மாலை புரள்மார்பும் -காதசைப்பும்
    ஆழ நினைந்து அழுது அழைத்திட
    வேழம் துணைக்கு வரும்….(32)

    பலஸ்ருதி….
    ———————–
    ’’பதினாறைப் பெற்று பெருவாழ்வு வாழ
    பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
    அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
    மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து’’….(33)….

    பதினாறு பேர்களைப் பெற்ற-ஷோடஸ கணபதி பதினாறு பெயருடையவர்….

    Share
  • “தமிழர்தம் கம்பீரம்” – கர்மவீரர் காமராசர்!

    — வில்லவன்கோதை.

    தமிழகத்தின் தென்பகுதி …
    வணிகச்சந்தைக்குப் பெயர் பெற்ற விருதுநகர்…
    ஆயிரத்து தொள்ளாயிரத்து மூன்று, ஜூலை பதினைந்து …

    மிகமிகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த ஒரு சாமான்ய குடும்பத்தில் பிறக்கிறது ஓர் அபூர்வக்குழந்தை. பிற்காலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் இந்தத் தமிழ் மண்ணுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, வரலாற்று ஏடுகளில் தன்னை எழுதிக்கொள்ளப்போகிறது என்ற தகவலை அன்று எந்தச்சோதிடனும் கணித்திருக்க முடியாது.

    குலதெய்வம் காமாட்சியின் திருப்பெயரை குழந்தைக்குச் சூட்டுகிறது அந்தக்குடும்பம். தாயார் சிவகாமிஅம்மாளோ மகனை ராசா ராசா என்று செல்லமாக அழைக்கிறார். காலப்போக்கில் காமாட்சி என்ற திருப்பெயர் காமராசாவாகிறது.

    விருதுநகர் சத்திரிய வித்யாலயாவில் சேர்க்கப்பட்ட காமராஜ் ஆறாம் வகுப்புக்குமேல் வாசிக்க முடியாமற் போயிற்று. இளம்வயதிலேயே தந்தையை இழக்கிறார். பள்ளிப்படிப்பில்லாதபோது வியாபாரம் பழக தாய்மாமன் நடத்திய துணிக்கடைக்கு அனுப்பப்படுகிறார். அதையும் கடந்து அடுத்தடுத்து குறுக்கிட்ட எந்தவேலைகளும் அவருக்கு நிலைக்காமற் போயிற்று.

    தேசமே வெள்ளையர் ஆதிக்கத்தில் அடிமையுற்றிருந்த காலம். நாடெங்கும் விடுதலைவேட்கை புயலாக வீசிற்று. தேசப்பிதா காந்தியின் தென்னிந்திய வருகை காமராஜரின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திற்று. அண்ணலின் விருப்பத்திற்கிணங்க கதராடைகளை அணியத் துவங்குகிறார் காமராஜர்.தமிழகக் காங்கிரஸ் தலைவர்களின் சூறாவளிப்பிரச்சாரம் காமராஜரின் அரசியல் வாழ்வுக்கு அடிகோலுகிறது. தீரர் திருமயம் சத்தியமூர்த்தியின் எழுச்சிமிக்க உரைகள் காமராஜரை அவர்காலடியில் கொண்டுசேர்க்கிறது.

    பதினாறு பதினேழு வயதிலேயே அவரது முழுநேர அரசியல்வாழ்வு தொடங்கிவிட்டது. தொடர்ந்து போராட்டங்கள் சத்யாகிரகங்கள். தொள்ளாயிரத்து முப்பதிலிருந்து நாற்பத்தியேழுவரை மாறிமாறி சிறைவாசம். விருதுநகரில் காமராஜர் ஒரு தவிர்க்கஇயலாத அடையாளமாகிறார்.

    நாற்பத்தியேழில் தேசம் விடுதலையுற்றபோது அந்த ஆனந்தத்தைக் கொண்டாட அவரது தலைவர் சத்யமூர்த்தி இல்லை. ஓடோடிச்சென்று அவர்வீட்டு வாயிலில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்.

    மூதறிஞர் ராஜாஜி முதல்வராகிறார். ஐம்பத்துமூன்றில் ராஜாஜியின் குலக்கல்வித்திட்டத்திற்கேற்பட்ட பேரெதிர்ப்பு காமராஜரை தமிழ்நாட்டின் முதல்வராக்குகிறது.

    எட்டே எட்டு அமைச்சர்கள்!
    தன்னையெதிர்த்து ராஜாஜியின் நல்லாசியுடன் போட்டியிட்ட சி. சுப்ரமணியம் அவர்களையும் அவரது சகாவான பக்தவசலம் அவர்களையும் தன் அமைச்சரவையில் அரவணைத்துக்கொள்கிறார்.

    அதுமட்டுமல்ல. தேர்தலில் காங்கிரசையே எதிர்த்துப் போட்டிட்டு திமுகவின் ஆதரவோடு வெற்றிபெற்ற காங்கிரஸ்கார்களான ராமசாமிப்படையாச்சி , மாணிக்கவேலு இருவரையும்கூட அமைச்சர்களாக்கி அரசுக்கும் கட்சிக்குமான இடர்களைக் களைகிறார். பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவருக்கு அறநிலையத்துறையைக் கொடுத்து தனக்கிருந்த பகுத்தறிவையும் ராஜதந்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

    தமிழ் ஆங்கிலம் இந்தி மட்டுமின்றி வேறு சில மொழிகளையும் அவர் அறிந்திருந்தார். பள்ளிக்கல்வி அவருக்கு கிட்டாமற் போனாலும் படிக்கவேண்டிய நூல்களை படிக்கத்தவறியதில்லை. எப்போதும் கற்றவர்களை தன்னோடு சோர்த்துக்கொண்டது அவரது வெற்றியின் ரகசியம் என்றே கருதுகிறேன்.

    புதிய ஐந்தாட்டுக்கான திட்டங்கள் வரையப்பட்டன .
    காமராஜர் தமிழக காங்கிரஸ் இயக்கத்தில் தன்னிகரற்ற தலைவராக விளங்கினார். மத்தியிலும் அவர் கட்சியே ஆட்சியில் இருந்ததால் ஐந்தாண்டுத்திட்டங்களில் தமிழகத்தின் பங்கு கணிசமாக அதிகரித்தது.

    விவசாயத்துக்குப் பெரிதும் முக்கியத்துவம் அளித்த மத்தியஆட்சியில் தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழில்துறையில் இன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நீர்மின்திட்டங்கள் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் அவர் காலத்தில் ஏற்பட்டவை.

    ஆட்சி அதிகாரங்கள் கட்சிக்குக்கிடைத்தபோது அரசு எந்திரங்களை முடிக்கிவிடக் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் எல்லாம் அரசில் பங்கேற்கிறார்கள். அதேசமயம் தேசவிடுதலைக்குக் காரணமாய் இருந்த காங்கிரஸ் இயக்கம் தனிமைப்படுகிறது. ஆட்சிக்கட்டிலில் இளைஞர்களுக்கு வழிவிட்டு முதியவர்கள் கட்சியைக்காக்க தயாராகவேண்டுமென்ற திட்டத்தை முன்வைக்கிறார் காமராஜர்.

    காமராஜர் எல்லாருக்கும் முன்மாதிரியாக முதன்மந்திரி பொறுப்பில் இருந்து விலகி வழிகாட்டுகிறார். அறுபத்திமூன்றில் ஏற்பட்ட அத்தகைய சிந்தனை கே – ப்ளான் என்று அரசியல் நோக்கர்களால் பெரிதும் பேசப்பட்டது.

    அறுபத்திநான்கில் பண்டிதநேரு மரணமுற்றபோதும் அறுபத்தியாறில் லால்பகதூர் மறைந்தபோதும் சரியான காய்களை நகர்த்திக் காங்கிரசின் சிக்கலைத் தவிர்த்தவர் பெருந்தலைவரே.

    தமிழகம் முழுதும் வீசத்தொடங்கிய திராவிடக்காற்று காமராஜரையும் விட்டுவைக்கவில்லை. அறுபத்தியேழு சட்டமன்றத்தேர்தலில் திமுகவின் மேடைப்பேச்சும் சாதீயக்கட்டமைப்புகளும் பெருந்தலைவரைத் தோற்கடிக்கிறது

    அடுத்து நேருவின் மகளோடு ஏற்பட்ட மனக்கசப்பு சிண்டிகேட் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தோன்றுதர்க்குக் காரணமாகிறது. எழுபத்தைந்தில் இந்திராகாந்திக்கு நெருக்கடி ஏற்பட்டபோது அவர் பிகடனப்படுத்திய நெருக்கடி நிலை தேசத்தையே அதிர்வுக்குள்ளாக்குகிறது. தேசியத்தலைவர்கள் அத்தனைபேரும் இரவோடுஇரவாகச் சிறைப்படுத்தப் படுகின்றனர். காமராஜர் மனமுறிந்து போகிறார்

    வரப்போகும் விடுதலை நாளில் எல்லாம் சரியாகுமென்று நம்பிய அவர் ஆச்சாரிய க்ருபளானியும் கைதானபோது அதிர்ச்சிக்குள்ளானார்

    அதே ஆண்டு அக்டோபர் இரண்டில் காந்தி பிறந்தநாளன்று இந்தக் கருப்பு காந்தி விடைபெறுகிறார்.

    காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் திராவிடக்கட்சிகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்து ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்குமேல் கடந்து விட்டது. அந்தக் கட்சியின் தலைவர் காமராஜரோ இந்த மண்ணில் மறைந்து நாற்பது வருடங்கள் ஓடிவிட்டது. இந்த நிலையிலும் காமராஜரின் பொற்காகல ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்ற சிந்தனையை இன்றையக்கட்சிகள் வாக்குறுதியாகச் பேசுவதும் அதையும் இன்றையதலைமுறை கனவுகளாக எதிர்நோக்குவதும் அத்தனை இயல்பாக நிகழக்கூடியதல்ல. அதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்.

    தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காலங்காலமாக மாறிமாறி ஆண்டு வந்தவர்கள் குறுநிலமன்னர்கள். அவர்கள் காலங்களில் எப்போதோ சிலசமயம் பொற்கால ஆட்சி நிகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. தம்மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்துகொடுத்த எந்தக்குறுநிலமன்னனும் தம்குடிமக்களுக்குக் கல்வியைப் போதித்ததாக வரலாறு இல்லை.

    அவர்களுக்குப்பிறகு வந்த ஆங்கிலேயர் இந்தநாட்டின் சகல வளங்களையும் மாறிமாறிச் சுரண்டினர். இருந்தபோதும் அவர்களுடைய தேவைக்காக அவர்களுடைய நிர்வாக வசதிக்காக இந்தத்தேசத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் நவீன திட்டங்கள் நமக்கு முதன்முதலாக அறிமுகமாயிற்று. அவற்றில் அவர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முதன்மையானது.

    வெள்ளையரின் கொள்ளையில் சிதறிக்கிடந்த இந்த மண்ணைச்சீரமைத்துத் தான் பயிலாத கல்வியின் ருசியை எப்பாடு பட்டாயினும் எம்மக்களுக்குக் காட்டிவிட்டால் இந்தத்தேசம் எப்படியும் முன்னுக்கு வந்துவிடக்கூடுமென்று காமராஜர் நம்பினார். முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் ராஜாஜியின் கல்விக்கொள்கையால் மூடப்பெற்ற ஏழாயிரம் பள்ளிகளைத் திறந்து மேலும் இருபத்தேழாயிரம் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டார்.

    தமிழகமெங்கும் பள்ளிகள் பரவலாகத் திறக்கப்பட்டு விட்டாலும் மாணவர் சேர்க்கை உயர்ந்துவிடவில்லை. அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இந்தச் சிக்கலை எளிதில் விடுவிக்கிறது.

    ஒருமுறை பொதுநிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தன் சகாவான தொழிலமைச்சர் வெங்கட்ராமனுடன் திரும்பிக்கொண்டிருந்தார். இடையே குறுக்கிட்ட ரயில்வே க்ராசிங்கில் அவர்கள் காத்திருக்க நேரிட்டது. அப்போது ஒரு சிறுவன் கையில்குச்சியுடன் நின்றிருந்தான்.

    ‘’ தம்பி நீ பள்ளிகொடம் போவலியா…ஓங்க ஊர்லதான் சர்க்கார் பள்ளிக்கொடம் தொறந்திருக்காங்களே ‘’

    அவன் தோளைப்பிடித்து அன்பாக வினவுகிறார் காமராஜ்.

    ‘’ நான் பள்ளிக்கொடம் போனா சோத்துக்கு என்னய்யா பண்ணுவன்? ரெண்டு மாடுமேச்சா ஒருவேள சோறாவது கெடைக்கும்,‘’ என்றவாறே மெல்ல நகர்கிறான் அந்தச் சிறுவன்.

    காமராஜரின் முகம் மாறுகிறது.

    ‘’ அவன் சொல்றதும் ஞாயந்தாண்ணே… இந்தப் பிள்ளைகளுக்கு ஒருவேளை சோறுபோட்டா எப்படியும் படிப்போட ருசியை காட்டில்லாம். வெங்கட்ராமன் அதுக்கு ஒரு திட்டம் வேணுமிண்ணே. ‘’

    வெங்கட்ராமன் மெல்லிதாகப் புன்னகைக்கிறார். முதலமைச்சரின் இந்தச் சிந்தனை சிறுபிள்ளைத்தனமானது என்று அவர் கருதியிருக்கக்கூடும். சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் இதுபோன்றதொரு திட்டம் நீதிக்கட்சிகாலத்தில் தொடங்கி நடத்தப்பட்டது அவர் நினைவுக்கு வந்தது

    ஆனால் தமிழ்நாடு முழுதுமா?

    அவருக்குச் சாத்தியம் என்று தோன்றவில்லை.

    ‘’ ஸ்ட்டேட் முழுதுமா நாட் பாசிபிள். சட்டத்ல எட்டமில்ல சார் ‘’

    அவசரம் அவசரமாகக் குறுக்கிட்டார் உடன்வந்த ஒர்உயரதிகாரி.

    ‘’ என்னண்ணே. நான் புள்ளைங்களுக்குச் சோறுபோடனுமிண்ணு சொல்றேன். நீ சட்டம் பேசிறியே. சட்டத்த யாருபோட்டா. யாருக்காகப் போட்டீங்க. செய்யரத்துக்கான வழிய பாருண்ணேன். ’’

    கண்கள் சிவக்க பொரிந்து தள்ளுகிறார் காமராஜர்.

    அடுத்தச் சில வாரங்களில் ஒருசில பள்ளிகளில் அவசரம் அவசரமாகத் துவக்கப்பெற்ற மதிய உணவுத்திட்டம் மெல்லமெல்ல விரிவாக்கப்பட்டுப் பரவலாகத் தமிழகம் முழுதும் நிறைவேற்றப்படுகிறது. அடுத்தடுத்து வந்த ஆட்சிகளும் இந்தத் திட்டத்தைப் பல்வேறு வடிவங்களில் விரிவாக்கி சத்துணவு திட்டமென்று செயல்படுத்திவருகிறது. தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்விக்கு இருந்த இடையூறை நீக்கி படிப்பில் ருசி காட்டியவர் காமராஜரே.

    வெறும் ஏழு விழுக்காடாக இருந்த மாணவர் வருகை அவர் காலத்தில்தான் முப்பத்தேழு விழுக்காடாயிற்று. பள்ளிகளின் வேலைநாட்கள் நூற்றுயெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தப்பட்டதும் அவருடைய காலத்தில்தான். அனைத்து தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்க்கு ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்தவர் காமராஜரே.

    அவர் முதல்வரான பிறகு அரசு விருந்தினராக அயல்தேசத்திலிருந்து வந்த பெண்மணி ஒருவர் காமராஜரிடம் எழுப்பிய வினா இப்போது நினைவுக்கு வருகிறது.

    ‘’நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை? ‘’

    ‘’ மேடம் எங்கதேசத்தில் திருமண வயதுக்குவந்த பெருவாரியான சகோதரிகளுகளுக்கே இன்னமும் திருமணம் ஆகாமலிருக்கு. ‘’

    பெருந்தலைவரின் பதில் அந்த அம்மையார் சற்றும் எதிர்பாராதது. இந்த மண்ணின் மக்களோடு இந்தமனிதர் எத்தனை கலந்து நிற்கிறார் என்றுணர்ந்து நெகிழ்ந்து போகிறார்.

    அண்ணல் காந்தியின் வாழ்வியலை முழுமையாக கடைபிடித்தவர் காமராஜ். அதேசமயம் பண்டித நேருவின் உலகளாவிய விருப்பங்கள் இந்ததேசத்து மக்களுக்கு கிடைக்கவேண்டுமென கருதியவர் .

    காமராஜரின் கால்த்தடங்கள் படாத சிற்றூர்கள் தமிழகத்தில் இல்லையென்றே சொல்லலாம்.
    வெயில் புயல் மழை …..
    வேட்டியைத் தூக்கிப்பிடித்து நடை நடை நடைதான்.

    ஒவ்வொன்றையும் நேரில் ஆய்வுசெய்து காரியத்தை முடித்த தலைவர் காமராஜ். அவரைப்பொறுத்தவரைச் சட்டங்கள் மக்களுக்காகவே. சட்டத்தின் வரைவுகளை வெறுமனே சொல்லி அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நலன்களை எவரும் தடுத்துவிடக்கூடாதென்பதில் உறுதியாக நின்றார். அவரது வாழ்வில் ஒவ்வொரு தருணங்களிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் இதைத்தான் பறைசாற்றுகின்றன.

    இன்னொருமுறை அவருடைய சகோதரிபேரன் கனகவேல் மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேருவதற்குத் தாத்தாவின் பரிந்துரைக்கு வந்திருந்தார்.

    ‘’கனகவேலு ! மெடிக்கல் காலேஜில சேர சர்க்கார் கமிட்டில்லாம் வெச்சிருக்கு. அத அவுங்கதாண்ணே முடிவு பண்ணணும். ஒனக்கு தகுதி இருந்தா நிச்சியம் கெடைக்கும். இல்லேண்ணா கோயமுத்தூர்ல அக்ரில சேந்துக்க ‘’

    தங்கள் தலைவரின் இந்தப்பதில் சூழ்ந்திருந்தோர்க்குப் பெருவியப்பைத் தந்தது. இதே தலைவரின் இன்னொரு செயல் …

    தஞ்சை மாவட்டத்திலோ கோவையிலோ சுற்றுப்பயணம் மேற் கொண்டபோது மருத்துவக்கல்லூரி பரிந்துரைக்கான விண்ணப்பம் ஒன்று அவர் பார்வைக்கு வருகிறது.

    மருத்துவக்கல்லூரியில் சேருவதென்பது அன்று பிராமணர்களுக்கே உரியதாயிருந்தது. முன்னதாக நீதிக்கட்சி ஆட்சியில்தான் விண்ணப்பத்தில் அந்தப்பகுதி நீக்கப்பட்டதைப் படித்திருக்கிறேன். விண்ணப்பத்தைப் புரட்டிப்பார்த்த காமராஜர் கையெழுத்திட்டு கொடுக்கிறார்

    இதுபற்றி வினவியபோது, ‘’ கீழ பாத்தில்ல… அவுங்கப்பன் கைநாட்டு வச்சிருக்காண்ணே. அது போதாதா” என்றவாறே நடக்கிறார் தலைவர்.

    உறவுகளில் இருந்து எத்தனை விலகி மக்களை நெருங்கியவர் காமராஜ். தன்னுடைய நெடும் பயணத்தில் உற்றார் உறவினருக்கு ஒருபோதும் இடமில்லை என்பதில் உறுதியாயிருந்தவர். வயது முதிர்ந்த பெற்றதாயைக் கூடத் தன்னோடு இணைத்துக்கொள்ளாமல் ஒர் எளிமையான வாழ்க்கைக்குப் பழக்கியவர் காமராஜ்.

    தமிழர்தம் கம்பீரத்துக்கு அடையாளமாக திகழ்ந்த காமராஜரின் கடைசிக்காலம் அத்தனை சுவாரஸ்யமானாக இல்லை. கப்பலோட்டிய தமிழன், வா உ சியின் கடைசி நாட்கள்தாம் என் நினைவுக்கு வருகிறது.

    பத்தாண்டுகளுக்குக்குமேலாக காங்கிரஸ்கட்சிக்கு தலைவரகவும் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகவும் இருந்த காமராஜ் உயிர் பிரிந்தபோது அவர் கையில் இருந்ததென்னவோ நூற்று அறுபது ரூபாய்தானாம். அசையும் சொத்துக்களையோ அசையா சொத்துக்களையோ அவர் விட்டுச்செல்லவில்லை. தனக்கென நேரடியான எந்த உறவுகளையும் அவர் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. நம்புங்கள்.

    இப்படியொரு தன்னலமற்ற அரசியல் தலைவர் இனி காண்பதற்கு கிடைப்பாரா? அரசியல்வாதிக்கான அர்த்தம் அவரோடு போய்விட்டதாகவே கருதுகிறேன்.

    காந்திக்கப்பறம் காமராஜ் என்றுதானே இன்னமும் தமிழ்நாட்டில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

     

    Share
  • சிவபிரதோஷம்

    -மீ.விசுவநாதன்

    விடங்கொண்டாய் ! சுடலையில் உள்ள
    -விபூதி உடல்கொண்டாய் ! நாகப்                       சங்கரலிங்கம் சுவாமி
    படங்கண்டு கையிலே கொண்டாய்
    -பச்சை வில்வத்தைச் சூடி!
    இடங்கொண்ட பெண்ணுடன் இன்ப
    -இச்சை கொண்டாடு கின்றாய் !
    நடங்கொள்வாய் என்சிறு நெஞ்சின்
    -“நான்நச் சழிப்பா”யென் சிவனே !

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், விளம், மா, மா,காய், மா)

    Share
  • மக்கள் இல்லா மக்கள் சபை

    — க. சிவா.

    Panchayat_India_1இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தத்தின்படி, கிராமசபை மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புக்களின் அடித்தளமாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடித்தட்டிலுள்ள கிராம மக்கள், தங்களைத் தாங்களே நேரடியாக நிர்வகித்துக் கொள்ளவும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மறைமுக மக்களாட்சி நிர்வாக செயல்பாட்டுக்கும் ஒரு வழிகாட்டி. அதனைக் கண்காணிக்கும் ஒரு மேன்மையான அமைப்பாகவும் கிராமசபை உள்ளது. கிராம சபையே மக்களாட்சியின் ஆணிவேராகவும், மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் செயல்பட வேண்டும். இது வெறும் கிராம சபை அல்ல முழுக்க முழுக்க மக்களுக்கான மக்கள் சபை. கிராம சபைதான் பஞ்சாயத்து நிர்வாகம் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்ட பொறுப்பான நிர்வாகம் அமைப்பதற்கும் வழிவகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை, இதை மறுப்பதற்கில்லை. ஆனால் மக்களின் பங்களிப்பும், பங்கேற்பும் கிராம பஞ்சாயத்தின் அங்கமான கிராம சபை என்ற மக்கள் சபையில் குறைந்து வருகிறது என்பது தான் இன்றைய எதார்த்த நிலை.

    கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் நடப்பதாக இருந்த கிராம சபை கூட்டத்தை, சில காரணங்களினால் மாவட்ட நிர்வாகம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பிறகு 12-ஆம் தேதி நடக்கவிருந்த கிராம சபை கூட்டத்தில் பங்கு கொள்ளவும், ஒரு பார்வையாளனாகவும் இருப்பதற்காகத் தேனியில் உள்ள ஒரு பஞ்சாயத்திற்குச் சென்றேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே அந்த பஞ்சாயத்திற்குச் செல்ல பேருந்தில் பயணமானேன். பேருந்திலோ கூட்டம் அலைமோத, பெரும் மோதல்களுக்கிடையே சிக்கிக் கொண்டு வியர்வை சொட்ட சொட்டப் பயணத்தை தொடங்கினேன். பேருந்து நடத்துனருடன் வாக்குவாதம் காரணம் சரியான பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாதது, மற்றும் சரியான சில்லறை கொடுக்க மறந்ததுமே. மக்களின் விழிப்புணர்வு மற்றும் உரிமைக்குக் குரல் கொடுப்பது போன்றவற்றையும் அந்தப்பயணத்தில் காணமுடிந்தது. நான் செல்வதென்னவோ கிராம சபை(எ)மக்கள் சபை கூட்டத்திற்கு, பேருந்தில் நடப்பதென்னவோ மக்கள் கூட்டத்தின் நடுவே ஜனநாயக மக்கள் சபை. மக்கள் தங்களின் உரிமை மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது பஞ்சாயத்தில் மட்டுமல்ல அனைத்துப் பொது இடங்களிலும் என்பது அப்போதுதான் புரிந்தது எனக்கு.

    இந்தச் சம்பவம் ஒரு ஒத்திகையாக இருக்கிறதே என்ற எண்ணம் மனதில் ஓட, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்தப் பயணம் நான் செல்லவிருந்த ஊரை அடைந்தது. பேருந்தை விட்டு இறங்கியதும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டு ஊரை நோக்கி நடந்தேன். எதிரே ஓர் முதியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் பஞ்சாயத்து அலுவலகம் எங்கு உள்ளது என்று கேட்க அவரோ நேராக இந்த ரோட்டுல போய் மேற்கால திரும்புப்பா என்றார். முதியவர் கூறிய திசையை நோக்கி நடந்தேன். பஞ்சாயத்து அலுவலகம் தெரிந்தது, மனதுக்குள் ஒரு சிரு சந்தோசம், அந்தச் சந்தோசம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் பூட்டிய கதவை பார்த்தவுடன். கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கவில்லை என்பது ஒரு பக்கம் மனதில் ஓட, மறுபக்கம் படித்தது நினைவிற்கு வந்தது. கிராம சபை கூட்டத்தைப் பஞ்சாயத்து எல்லைக்குள் ஏதேனும் ஒரு பொது இடத்தில்தான் நடத்த முடியும் என்று எண்ணியவாறே அருகிலிருந்த மளிகைக்கடையில் உங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் எங்கே நடக்கிறது என்றேன். அதற்கு அவர் கிராம சபையா அப்படி என்றால் என்ன என்பது போல பார்த்தார். அவருக்குப் புரியவில்லை என்றெண்ணி பஞ்சாயத்து கூட்டம் என்றேன். அதற்கு அவர் சட்டென்று தெரியவில்லை என்று கூறிக்கொண்டே கடையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரி,பரவாயில்லை பஞ்சாயத்து அலுவலகம் பூட்டியுள்ளது எனவே பஞ்சாயத்து தலைவரின் தொலைபேசி எண் உங்களிடம் உள்ளதா என்று கேட்க, அவரோ அதோ அந்தப் பலகையில் உள்ளது பாருங்கள் அதுதான் என்று கூறினார். பலகையிலோ தலைவர் என்று எழுதி அதனருகில் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது.

    அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் ஒரு ஆண் குரல். சார், நீங்கள் பஞ்சாயத்து தலைவரா என்று நான் கேட்க, அவரோ ஆம் என்றார். நான் வெளியூல் இருந்து இன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தை பார்வை இட வந்ததாகவும், கூறி கிராமசபை கூட்டம் எப்போது, எங்கு நடக்கும் என்று கூறுங்கள் நான் தற்போது பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கிறேன் என்றேன். அவரோ சிறிது நேரம் அலுவலகத்தில் காத்திருங்கள் என்றும் உடனே வந்துவிடுவதாகவும் கூறினார். இதற்கிடையில் அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் பஞ்சாயத்து பற்றியும் அவ்வூரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். பின்பு நேரடியாகக் கிராம சபை கூட்டத்தை பற்றியும் கேட்டேன். அந்தக் கிராம மக்களோ தாங்கள் கூறும் பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படுவது இல்லை, அதனால் அதற்குத் தாங்கள் செல்வதும் கிடையாது என்றும்; அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பஞ்சாயத்து தலைவரிடமும், வார்டு உறுப்பினர்களிடமும் தான் கேட்க வேண்டும் என்றனர். மக்கள் இப்படி தங்களின் ஜனநாயக உரிமைகளையும், தங்களுக்கான அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் இருப்பதை அந்த ஊரின் மக்கள் சிலரிடம் பேசியதில் இருந்து எனக்குப் புரிந்தது.

    இதற்கிடையில் பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தார். அவருடன்பேசிய போது கிராமசபை கூட்டத்தை நான் பார்வையிடவந்துள்ளதாகக் கூற, அவரோ சற்று தயங்கிய குரலில் சார் … என்று இழுத்தார். ஒரு வேளைக் கிராம சபைக்கூட்டம் முடிந்துவிட்டதோ என்று எண்ணியவாறே கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 10.30 தான் ஆனது. இதைக் கவனித்த பஞ்சாயத்துத் தலைவர் எங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் என்று எதுவும் நடக்காது. அப்படி கூட்டம் கூட்டினாலும் மக்களும் வருவது இல்லை என்றார். அப்படி என்றால் கிராம மக்கள் தங்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கிராம சபையில் எடுத்துக் கூற மாட்டார்களா, அவர்களின் பங்கேற்பு இல்லாத பட்சத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியலை எப்படித் தயாரிப்பீர்கள், பஞ்சாயத்து அமைப்பின் ஆண்டறிக்கை மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களை பற்றியெல்லாம் எப்படி மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்கள் என்று கேள்விகளை அடுக்கினேன்.

    பஞ்சாயத்துத் தலைவரோ கூட்டம் கூட்டினாலும் மக்களும் வருவது இல்லை அதனால் நாங்களாகவே வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, கிராம சபை நடந்ததற்கான வருக்கைப்பதிவேட்டில் பொதுமக்கள் பங்கேற்பு இருப்பதைப் போன்றும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் மற்றும் தீர்மான போன்றவற்றைத் தயாரிக்க வார்டு உறுப்பினர்களே உதவுவதாகவும் கூறினார். பஞ்சாயத்துத் தலைவர் சொன்னதில் உண்மை கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் கூறிய எதார்த்தத்தில் உள்ள உண்மை இரண்டு காரணங்களால் நிகழலாம். ஒன்று மக்களிடையே எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பது, மற்றொன்று மக்கள் பஞ்சாயத்து தலைவரின் மீதும் வார்டு உறுப்பினர்களின் மீதும் நம்பிக்கையில்லா நிலை மற்றும் மக்கள் கிராம சபை (எ) மக்கள் சபையின் மீது விழிப்புணர்வு இல்லாததுமே தான் காரணங்களாக இருக்கக்கூடும்.

    வருடத்தில் நான்கு முறை நடக்கும் கிராம சபை கூட்டத்திற்கு கிராமசபை கூட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் யாரும் வருவதில்லையா என்றக்கேள்விக்கு; அதிகாரிகள் வருவார்கள் என்றும் அவர்கள் வருவதற்கு முன்பு போன் செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்றார். அதிகாரிகள் வரும்போது அவர்கள் கையொப்பமிட வேண்டிய ஆவணங்களைத் தயார்படுத்தி வைத்துக் கொள்வோம். வந்தவுடன் கையொப்பமிட்டுவிட்டு உடனடியாகச் சென்றுவிடுவார்கள் என்று கூறிய பஞ்சாயத்துத் தலைவரின் பதிலின் மூலம், அதிகாரிகளின் அலட்சியப்போக்கும் மற்றும் அக்கறையின்மையையும் தெரிகிறது. கிராமசபை கூட்டத்தை கண்காணிக்கும் அதிகாரிகளே கடமையை சரியாகச் செய்யாததினாலும், தவறுக்குத் துணைபோவதினாலும் மக்கள் இல்லா கிராம சபை (எ) மக்கள் சபை நடத்தப்பட்டு உருவாக்கப்படும் போலியான ஆவணங்கள் கூட உண்மையான கிராம சபை நடத்தப்பட்டு மக்கள் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் போல ஆகிவிடுகின்றது.

    அதுமட்டுமின்றி வார்டு உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் போலியானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகமக்களுக்கு மட்டும் சாதகமாகவும் உள்ளது. உண்மையிலேயே பாதிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்களை எதிர் நோக்கிக் காத்திருக்கும் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. சில சமயங்களில் உண்மையான பயனாளிகளுமே லஞ்சம் கொடுத்துத்தான் வளர்ச்சி திட்டத்தின் பயனை அடையவேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலைதான் அந்தப் பஞ்சாயத்தின் நிலையாக இருக்கக் கூடும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகப் பஞ்சாயத்து தலைவர் கூறுவதில் இருந்து அறிய முடிந்தது.

    73- வது இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கூறும் பஞ்சாயத்து அமைப்புகளின் அடித்தளமே கிராம சபை (எ) மக்கள் சபைதான். இதன் மூலமே மக்களின் நேரடி ஜனநாயகத்தை உருவாக்க முடியும், அந்த அமைப்பு தான் மக்களை அதிகாரப்படுத்தும் என்று கூறும் பஞ்சாயத்துச் சட்டங்கள் எழுதப்பட்டிருந்தாலும் கூட அது அதன் செயல் பாட்டில் பல குறைபாடுகளுடன் தான் உள்ளது. இதைச் சரிய செய்ய வேண்டிய அதிகாரிகளின் அலட்சியப் போக்குமே மக்கள், மக்கள் ஜனநாயகத்தையும், அவர்களின் அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. ஒருவேளை மக்களின் பங்கேற்பு மக்கள் சபையில் இல்லை என்றாலும் அதை விழிப்புணர்வு என்ற கோணத்திலாவது அதிகாரிகள் கிராம சபை (எ) மக்கள் சபையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற முற்பட்டிருக்க வேண்டுமே தவிர கிராம சபை என்ற பார்வையில் நடத்தப்படும் அதிகார சபைக்கு துணை நிற்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

    கிராம சபை (எ) மக்கள் சபையின் மூலம் பாமரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், நலிந்தோர், எளியோர் மற்றும் பெண்கள் என அணைத்து தரப்பினரையும் வேறுபாடின்றி நேரடியாக அடித்தள நிர்வாகத்தில் பங்குபெற முடியும். அவர்களே அவர்களின் முன்னேற்றத்திற்கு நேரடியாகவே திட்டமிடுதலும் திட்டச் செயலாக்கத்திலும் பங்கு கொள்ள வழிவகுக்கிறது. கிராம சபை (எ) மக்கள் சபை. எனவே, மக்கள் இல்லாத மக்கள் சபையை ஆதரிப்பதை விடுத்து உண்மையான மக்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை (எ) மக்கள் சபையை முறையாகக் கட்டமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதிகாரங்களும் மக்களும் தங்களின் முழுமையான பங்கேற்பையும் கொடுக்க முற்பட்டாலொழிய மக்கள் இல்லா மக்கள் சபை பல பஞ்சாயத்துகளிலும் தொடரும் என்பது தான் எதார்த்தமான உண்மை.

    க. சிவா,
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    அரசியல் மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல் துறை,
    காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராம்–624302.

    படம் உதவி: விக்கிபீடியா

    Share