Featuredஇலக்கியம்

அவன்,அது,ஆத்மா (25)

(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 25

ஆடியமாவாசையும் பாபநாச பாணதீர்த்தமும்

பாணதீர்த்த அருவி ஒன்று (1)
அவனுக்குப் பாபநாசமும், பாணதீர்த்த அருவியும் ரொம்பவும் பிடித்த இடங்கள். அவனது கிராமத்தில் இருந்து ஆடியமாவாசைக்காக பாணதீர்த்தம் சென்று நீராடிவிட்டு வருகிறவர்களை சிறுவயதில் அவன் பார்த்திருக்கிறான். அவனுக்குத் தாத்தாவும் அப்பாவும், சின்னம்பிச் சித்தாப்பாவும், அவர்களது நண்பர்களும் ஆடியமாவாசைக்கு முந்தயதினமே நடந்து அம்ம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாகவோ அல்லது சிங்கம்பட்டி, மணிமுத்தாறு மலைப்பகுதி வழியாகவோ சென்று பாணதீர்த்த அருவியில் நீராடிவிட்டு வருவார்கள். அவனுக்கு நண்பர்களான சன்னதித்தெரு கண்ணனும் (சங்குருசாரின் மகன் கே.எஸ்.நாராயணன்) , கபாலி, குட்டிச் சங்கரும்கூடப் போவார்கள். அவர்கள் போகும் பொழுது அவனையும் வந்து கூப்பிடுவார்கள். அவன் அவனுக்கு அம்மாவிடம் பாணதீர்த்தம் போய்வர அனுமதி கேட்பான். “சாயங்காலமாப் போலாம்” என்று அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு, அவனுக்கு நண்பர்கள் வந்து கூப்பிடும் பொழுது அவனை அனுப்பமாட்டாள். அவன் அவனது வீட்டு ரேழியில் உருண்டு, புரண்டு அழுது சாகசம் செய்வான். அதற்கெல்லாம் அவனுக்கு அம்மா மசிய மாட்டாள். “அங்க ரொம்ப ஜலம் இருக்கும். ஒனக்கு அருவியக் கண்டா கண்ணு மண்ணு தெரியாது…அங்க போய் அருவிலேந்து வெளிலயே வரமாட்டாய்…இப்ப ஒன்ன விட மாட்டேன்…கொஞ்சம் பெரியவனானபரமா அனுப்பறேன்…இப்ப ஆத்தங்கரைல போய் குளிச்சுட்டுவா…அந்த பாணதீர்த்த ஜலம்தானே இங்கயும் வரத்து …” என்று சொல்லி அவனுக்கு நண்பர்களை அனுப்பி விடுவாள். “சரிடா..கண்ணா..அடுத்தவருஷம் நாம போயிட்டு வரலாம்..நீ ஒங்க அம்மா சொன்னத்தக் கேளு ” என்று சன்னதித்தெரு கண்ணன் சொல்லிவிட்டு குத்துக்கல்தெரு வழியாக நடந்து செல்வதை அவன் கண்களில் நீருடன் வீட்டு வாசலில் உள்ள சிறிய திண்ணையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டே இருப்பான். கண்ணனும் அவனைத் திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் செல்வான்.

amv1

இரண்டு நாட்கள் கழிந்த பின்பு அவனிடம் அவனுக்கு நண்பன் கண்ணன் “பாணதீர்த்தக் கதைகளை”ச் சொல்லுவான். பாபநாசத்தின் சாலையின் இரண்டு புறங்களிலும் உள்ள நாவல் பழ மரங்களில் இருந்து கீழே விழுந்து சிதறிக் கிடைக்கும் நாவல் பழங்களின் ருசியையும், அதை எடுத்துப் டிராயர்ப் பைகளில் போட்டுக் கொண்டதால் உண்டான நாவல்பழக்கறையையும் காட்டி கண்ணன் சொல்லும் அழகில் சிரித்து மிகுந்த மகிழ்ச்சி அடைவான். கையில் ஒரு பெரிய பிரம்பை வைத்துக் கொண்டு அந்தக் காடுகளில் நடந்து சென்றதையும், சொரிமுத்தையனார் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் பெருங்கூட்டத்தின் பேரிரைச்சலையும் , அங்கு நடைபெறும் அன்னதானச் சிறப்பையும் அவனுக்கு நண்பன் கண்ணன் சொல்வதை ஒரு கனவோடு கேட்டுக் கொண்டிருப்பான். பெரியவனாக ஆனபின்பு எத்தனையோ முறைகள் அவன் பாணதீர்த்த அருவியில் குளித்த்திருக்கிறான். அதைப் போன்றதொரு ஆனந்தத்தை அவன் வேறு எந்த அருவிக் கரைகளிலும் அனுபவித்ததில்லை. ஆனால் இன்றுவரை ஒருமுறை கூட “ஆடியமாவாசை” அன்று பாபநாசத்தின் பாணதீர்த்தத்தில் குளிக்கவே இல்லை. அந்த ஒரு “சின்னச் சின்ன ஆசை” மட்டும் இன்றுவரை அவனுக்கு நிறைவேறவில்லை. இருந்தாலும் அவனுக்கு அம்மாவையும், அந்த பாணதீர்த்த அருவியையும் உயிர்மூச்சு இருக்கும் வரை அவன் மறக்கவே மாட்டான். அந்த இரண்டுமே அவனுக்கு மிகவும் புனிதமான நினைவுதான்.

மாட்டுவண்டியில் பயணம்

ஆடியமாவாசைக்கு முதல்நாள் கிராமத்தில் உள்ள பெரியவர்கள், முக்கியமாக பாட்டிமார்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு மாட்டு வண்டியில் பாணதீர்த்தத்திற்குப் பயணப்படுவார்கள். அப்பொழுதெல்லாம் கிராமத்தின் தேரடியில் (பெருமாள் கோவில் தேர் நிற்கும் இடத்தின் பக்கத்தில்) நிறைய மாட்டு வண்டிகள் இருக்கும். இப்பொழுது மாட்டுவண்டிக் காலம் சென்று, “கார்காலம்” வந்து விட்டதால் தேரடிகூட காரடியாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இராமையா மாட்டுவண்டி, சுப்பையா மாட்டு வண்டி என்றுதான் அழைப்பார்கள். (தொந்திவிளாகம் தெருவில் இருந்த “மணி டாக்டர்” அந்த இராமையா வண்டியில்தான் ஒவ்வொரு தெருவாக வந்து நோயாளிகளைப் பார்த்து மருந்து தருவார். அதன்பிறகுதான் அவரது “கிளீனிக்” இருக்கும் வீரப்பபுரம் தெருவுக்குச் செல்வார். அந்த வண்டி மெதுவாகத்தான் செல்லும்.)

பாணதீர்த்தத்திற்குச் செல்லும் வண்டியின் உட்புறத்தில் நிறைய வைக்கோல்களைப் பரப்பி மெத்தையைப் போலச் செய்திருப்பார்கள். அதில்தான் பெரியவர்கள் சுகமாக அமர்ந்து செல்வார்கள். வண்டிக்காரனை கீழ்ப்படியில் உட்காரச் சொல்லி “கோஸ்பெட்டி”யில் உட்கார்ந்துகொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே செல்லும் பாட்டிமார்களும் உண்டு. வழியில் நொறுக்குத் தீனியாக முறுக்கு, தட்டை, மா உருண்டை, வாழைபழம் என்று “பத்துப்படாத” உணவுகளை வைத்திருப்பார்கள். வண்டியில் மேல்புறத்தில் ஒரு “ஆர்ச்” வடிவத்தில் வளைவாக நிறைய வைக்கோல்களைக் கட்டி, பொதிபோல வண்டிக்காரர் வைத்திருப்பார் . அதுதான் வண்டி மாடுகளுக்கு இரண்டு நட்களுக்கான தீனி.

ஆடியமாவாசைக்கு முன்தினம் காலையில் சுமார் பத்து மணிக்கெல்லாம் இந்த வண்டிகள் வரிசையாகச் சென்று பிரதான சாலைவழியாக பாபநாசம் நோக்கிப் பயணமாகும் அழகை அவன் பார்த்து ரசித்திருக்கிறான். இதே போல ஒவ்வொரு தெருவில் இருந்தும் “ஜில்லு, ஜில்லு” என்ற சலங்கை ஒலியோடு மாட்டு வண்டிகள் வந்து கல்லிடைக்குறிச்சியின் பிரதான சாலையான, “சர்மாஜி சாலையில்” மற்ற வண்டிகளின் வெள்ளத்தில் கலந்து கொள்ளும். பாபனாசத்திற்குப் போகும் பொழுதே வழியில் இருக்கும் கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்வார்கள்.

ஆடியமாவாசை அன்னதானம்

“பாபநாசம் மலைப்பகுதியில் நிறையப் புல்லுப்பிறைகள் கட்டி இருப்பார்கள். வண்டியை ஒரு இடத்தில் அவிழ்த்து விட்டு இறங்கி நடந்து சென்று, இரவில் அந்தப் புல்லுப்பிறைகளில் தங்கிக் கொள்வார்கள். வருகிறவர்களுக்கு உணவளிக்க அங்கு ஒரு பெரிய பந்தல் போட்டிருப்பார்கள். சமையல் செய்வதற்கும் சௌகர்யாமாக அருகிலேயே இடம் அமைத்திருப்பார்கள். அங்குதான் அன்னதானம் நடைபெறும். பக்தர்களுக்கு இரவில் ஆகாரமாக “உப்புமா” செய்து கொடுப்பார்கள். காலையில் பாணதீர்த்த அருவியில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கான தர்பணங்களை (நீத்தார்கடன்) தந்தை இல்லாதவர்கள் செய்வார்கள். அவர்களுக்கு கல்லிடைக்குறிச்சியில் இருந்து வந்துள்ள “ரங்கவாத்யார், சுந்தரவாத்யார்” போன்றவர்கள் அந்தத் தர்பணங்களைச் செய்து வைப்பார்கள். அதன் பிறகுதான் தர்ப்பணம் செய்தவர்கள் உணவு கொள்வார்கள். மற்ற ஆண்களும், பெண்களும், மூதாட்டியர்களும் அருவியில் நீராடி விட்டு தங்களது முன்னோர்களையும் இறைவனையும், தொழுது விட்டுச் சாப்பிடுவார்கள். காலையில் பத்து மணிக்குத் துவங்கி மதியம் மூன்று மணிக்கு மேலும் அறுசுவை அன்னதானம் தொடர்ந்து நடைபெறும். அதற்கான அரிசி, பருப்பு வகைகளையும், காய்கறிகளையும், காணிக்கைகளையும் முதலியப்பபுரம் தெருவில் இருந்த “ஐயா சாமிகள்” கல்லிடைக் குறிச்சி, வீரவநல்லூர், காருகுறிச்சி, சேர்மாதேவி, பத்தமடை, களக்காடு, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கடையம் போன்ற ஊர்களில் இருந்தெல்லாம் வாங்கிவருவார். செங்கோட்டையில் இருந்து நிறையத் தேங்காய்கள் வரும். எல்லோருமே இந்த தர்மத்திற்கு உதவுவார்கள். இரண்டு நாட்கள் முன்பாகவே கல்லைடைகுறிச்சியில் இருந்து சமையற்காரர்கள் பாணதீர்த்தம் சென்று விடுவார்கள். “ஐயாசாமிகளுக்கு” உதவியாக ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள் இருப்பார். ஐயாசாமிகளுக்குப் பிறகு “ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள்”கள் இந்த தர்மத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது பிள்ளைகளும், கிராம மகாஜனங்களும் இருந்து வந்தனர். மதிய உணவுக்குப் பிறகு எல்லோரும் பழைய பாபநாசம் படித்துறைக்கு எதிரில் இருக்கும் சிவன் கோவிலில் இரவில் நடைபெறும் “வெள்ளி ரிஷபவாகன”க் காட்சியை தரிசனம் செய்தபிறகு, காலையில் பழைய பாபனாசப் படித்துறையில் பாய்ந்தோடுகின்ற தாமிரபரணியில் குளித்து விட்டு, ஸ்ரீஉலகநாயகி உடனுறை ஸ்ரீ பாபநாசரையும் தரிசனம் செய்த பின்புதான் ஊருக்குத் திரும்புவார்கள்” என்று அவனுக்கு அப்பா கூறினார்.

பாபநாசம் சிவன் கோவில்

பாபநாசத்தில் உள்ள சிவன்கோவில் பாடல் பெற்ற தலமாகும். அருமையான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும், வண்ணக் கோலமாகக் காட்சிதரும் சித்திரங்களும் இக்கோவிலுக்குப் பெருமை சேர்க்கின்றன. திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் போன்ற சமயக்குரவர்கள் வழிபட்டுப் பாடிய பெருமானே இந்த “பாபவினாசர்”. இறைவியின் பெயர் “லோகநாயகி”, “உலகம்மை”. இக் கோவிலின் தல விருக்ஷம் “களா மரம்” . தீர்த்தம்: தாமிரபரணி. அகத்தியர் அருவிக்கு மேலே இருக்கிறது “கல்யாண தீர்த்தம்” .இத்திருக்கோவில் இறைவனுக்கு நிவேதனமாக “எண்ணைச் சாதமும், துவையலும்” தருவார்கள் என்று அவனுக்கு நண்பர் ஹெச் (ஹ). கிருஷ்ணன் சொன்னார்.

இக்கோவிலின் எதிரில் உள்ள படித்துறையில் நீந்தும் மீன்களைப் பற்றி மகாகவி பாரதியார் பரவசப்பட்டு தனது கட்டுரையில் எழுதி இருக்கிறார். தாமிரபரணியின் தண்ணீர் மூலிகைகளில் பட்டு வருவதால் அதற்கொரு மருத்துவ குணமும், தனிச் சுவையும் உண்டு. இங்குள்ள அகஸ்தியர் அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். அவனும், அவனுக்கு நண்பர்களும் இங்கு அடிக்கடி வந்து குளிப்பதுண்டு. அவனுக்கு மகனும், மகளும் இந்த அருவியில் ரசித்துக் குளிப்பார்கள். அந்த அருவிக்குக் கீழேதான் “ஸ்ரீ அகஸ்தியர், லோபாமுத்திரை” கோவிலும் உள்ளது. இமயத்தில் நடந்த சிவபெருமானின் திருக்கல்யாணத்தின் பொழுது வடக்கு தாழ்ந்தும் தெற்கு உயர்ந்தும் விட்டதால், அதை சமன் செய்ய இறைவனே அகத்தியரை தென்பொதிகை மலைக்கு அனுப்பி வைத்தார். அதனால் இறைவன் தன் திருக்கல்யாணக் கோலத்தில் அகத்தியருக்கு இத்தென்பொதிகையில் காட்சி கொடுத்தருளினார் என்பது தல வரலாறு. அதனால் இங்கு சந்தனமும், தமிழும் நன்றாக மணம் வீசுகிறது. வற்றாத ஜீவநதியாக தாமிரபரணியும் பாய்ந்து வளம்சேர்க்கிறது.

1992ம் வருடத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாணதீர்த்தம் செல்லும் காட்டுப் பாதைகள் சேதமடைந்த பின்பு இப்பொழுது யாரும் அங்கு செல்ல முடிவதில்லை. ஆடியமாவாசை நேரத்தில் காரையார் அணையில் நீர் நிறைய இருக்கும் சமயத்தில் படகுகள் மூலமாக பக்தர்கள் அருவிக்குச் சென்று நீராடி வழிபடுகின்றனர். அணைக்குக் கீழே இருக்கும் “சொரிமுத்தையனார்” கோவிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடி வழிபடுவார்கள். ஸ்ரீ சாஸ்தாவின் இன்னொரு பெயர்தான் சொரிமுத்தையனார். இவருக்கு நிவேதனப் பொருள் வடை. இந்தக் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையினர்தான் இருந்து வருகின்றனர். இந்த பொதிகைமலைத் தொடரில் சுமார் எண்பதினாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமாக இருந்திருக்கிறது. இந்த அடர்ந்த காட்டுப் பகுதிகளே புலிகளின் சரணாலயமாக இருக்கிறது. அதற்குள் இந்த சொரிமுத்தையனாரின் கோவிலும் உள்ளதால், அதுவும் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. பிறகு அரசியல் மாற்றங்களால் தற்பொழுது ஜமீன் முறை மாறி விட்டாலும் அந்தப் பாரம்பர்யம் மாறாமல் தொடர்கிறது. ஆடியமவாசையை ஒட்டி “ராஜ தர்பார்” (ராஜ தரிசனம்) நிகழ்ச்சி இன்றும் பொலிவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பட்டத்தில் இருக்கும் , நன்கு படித்திருக்கும் சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையின் T. N. S. சேதுபதி ராஜா அவர்களே தர்பாரில் அமர்ந்து இரவில் நடைபெறும் “தீமிதி” நிகழ்ச்சியையும், வான வேடிக்கைகளையும் பார்வையிட்டு பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறார்.

amv

1981ம் வருடம் நவம்பர் மாதம் கல்லிடைக்குறிச்சிக்கு விஜயம் செய்திருந்த சிருங்கேரி ஜகத்குரு நாதர்கள் ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த ஸ்ரீ மகாசந்நிதானமும், ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்ரீ சந்நிதானமும் இந்தப் புண்ணிய பாணதீர்த்தத்தில் நீராட விருப்பங்கொண்டு, நீராடி விட்டு ஸ்ரீ பாபவிநாசரையும் தரிசனம் செய்து விட்டு கல்லிடைக்குறிச்சிக்குத் திரும்பி வந்துள்ளனர். வந்த பின்புதான் ஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் தான் அணிந்திருந்த “ருத்ராக்ஷ மாலையை” அருவிக்கரையிலிருந்து எடுக்காமல் வந்ததைப் பற்றி அங்கிருந்த K. S . காசிவிஸ்வநாத ஐயரிடம் (காசி ஐயரிடம்) தெரிவித்திருக்கிறார். உடனே அவர் அவர்களுடன் சென்ற அம்பாசமுத்திரம் சித்ரா ஸ்டுடியோ புகைப்படக் கலைஞர் “டேவிட்”டிடம் விபரத்தைக் கூற, அப்பொழுதே பாணதீர்த்தத்தில் எடுத்த புகைப்படச் சுருள்களைப் படமாக்கி அப்படத்தின் மூலமாக அந்த ருத்ராக்ஷ மாலை இருக்கும் பாறையைத் தெரிந்து கொண்டு, உடனேயே வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் அந்த அருவிக் அக்கரைக்குச் சென்று அந்த மாலையை இரவு பூஜைக்கு முன்பாகவே எடுத்து வந்து ஸ்ரீ மகாசந்நிதானத்திடம் கொடுத்தனராம். அடுத்த நிமிடமே ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகள் விபரங்களைத் தெரிந்து கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடு, புகைப்படக் கலைஞர் “டேவிட்” அவர்களின் சமயோசித புத்தியைப் பாராட்டி அவருக்கு ஒரு பெரிய வெள்ளி ஸ்ரீ சாரதாம்பாள் டாலரும், பிரசாதமும் தந்து ஆசீர்வதித்தார் என்று அவனுக்கு நண்பன் GLAD. கணேசன் சொல்லியிருக்கிறான். “ஸ்ரீ மகாசன்னிதானம் பாணதீர்த்த அருவிக்கரையில் ஒரு பாறையின் மீது நடந்து செல்வதுபோலவும், அதற்குப் பின்புலமாக மலையழகும், நீர்த்தேக்கமும் இருப்பது போன்ற அற்புதமான அழகிய அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அந்தப் புகைப்படக் கலைஞர் “டேவிட்”டும், நண்பன் கணேசனும், எந்நாளும் ஜீவநதியாகப் பாய்ந்து எல்லோருக்கும் பயனுள்ளதாக வாழ்கின்ற தாமிரபரணியும்தான் நினைவுக்குவரும்.

13.08.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    நல்ல விவரம், பாவநாசம் இயற்கைஎழிலை அப்படியே படம்பிடித்துக்காட்டியுள்ளனை. வாழ்க,
    யோகியார்

  2. Avatar

    Excellent I really lament “That GOLDEN DAYS MAY NOT COME AGAIN? THANKS 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க