இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 161 )
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் இந்தவாரம் உங்களை இம்மடல் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
தான் பிறந்த நாட்டில் தான் வாழ்வதற்கு பாதுகாப்பின்றி, வாழ்வாதாரத்திற்கு எந்தவித உத்தரவாதமும் கிடைக்காமல் தன்னுடைய நாட்டையும் தனது உற்றார், உறவினர்களையும் பிரிந்து தமது உயிரை கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு நாடு தமது உயிருக்கும் வாழ்விற்கும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆதரவளிக்கும் எனும் நம்பிக்கையில் தமது நாட்டை விட்டு வெளியேறுவதே ” அகதிகள் ” எனும் பதத்தின் பொருளாகிறது.
இன்றைய உலகின் பல மூலைகளில் பலவிதமான வகைகளினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உள்நாட்டு யுத்தம், இனப்படுகொலைகள் , வறுமை, பாலியல் கொடுமைகள் என பலவகையான தாக்கங்களுக்கு பல நாடுகளில் பல மக்கள் உள்ளாகிறார்கள்.
இன்றைய இங்கிலாந்து அரசியல் வானிலே அரசியல்வாதிகளை மிகப்பூதாகரமாக எதிர்நோக்கும் பிரச்சனை “குடிவரவு” (Immigration ) எனும் பிரச்சனையே !
லிபியா , சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஜரோப்பாவை நோக்கி வெளியேறும் பலர் இத்தாலி, கிறீஸ் போன்ற நாடுகளை நோக்கி கடல் பயணத்திற்கு ஒவ்வாத படகுகளில் ஆட்கடத்தல் செய்வோரிடம் பணம் கொடுத்து தமது பிரயாணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
இப்படி ஆரம்பிப்பவர்கள் பலர் படகுகள் கடலில் கவிழ்ந்து விடுவதால் பரிதாபகரமாக தமது பிரயாணத்தை முடிக்காமல் கடலிலேயே தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள் .
இத்தகைய வகையில் கடந்த சில மாதங்களில் 2000 பேர் கடலில் உயிர் நீத்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.
இத்தகைய ஆபத்தைக் கடந்து பெரும்பான்மையான திரளில் இத்தாலியக் கரையை வந்தடையும், இவர்கள் ஜரோப்பிய நாடுகளுக்கூடாக இடம் பெயர்கிறார்கள்.
இப்படி இடம் பெயர்பவர்கள் தமது நிலைப்பாட்டிற்கேற்ப தாம் வாழ்வதற்கு ஒரு ஜரோப்பிய நாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் பலரோ அனைத்து நாடுகளையும் கடந்து தமது இலக்காக இங்கிலாந்தை கொள்கிறார்கள்.
பிரான்ஸு நாட்டை அடைந்து இங்கிலாந்துக்குச் செல்லும் கரையான “கலே ” எனும் இடத்தை வந்தடைந்து இங்கிலாந்துக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அங்கே தடைச்சுவர்களும், எல்லைகளும் போடப்பட்டு காவலுக்கு பிரெஞ்சு காவல்துறை படை, குடிவரவு அதிகாரிகள் போன்றவர்களால் அவர்கள் தடை செய்யப்படுகிறார்கள்.
ஆனால் தமது இலக்கான இங்கிலாந்து நாட்டை அடைவதே இலட்சியமாகக் கொண்டுள்ள இவர்கள் அக்கரையிலேயே தங்கி விடுகிறார்கள்.
இப்படியானவர்கள் சுமார் 5000 பேர் வரையில் தங்கியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
ஆனால் சமீபத்தில் இப்பிரச்சனை ஒரு புது வடிவத்தை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கும் , பிரான்சுக்கும் இடையில் ஆங்கிலக் கால்வாய் என அழைக்கப்படும் சிறிய கடற் பரப்புக்கு அடியினூடாக ” சனல் டனல் ” என்றழைக்கப்படும் இரெயில் சுரங்கப்பாதை உள்ளதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
இந்த ரயில் பயணிக்கும் சுரங்கப் பாதையினூடாக ஊடுருவி இங்கிலாந்துக்குள் புகுவதற்கு தினமும் ஒரு 200 பேர் முயற்சிக்கிறார்கள் .
அப்படி முயற்சிப்பவர்கள் இரெயில் பாதையில் தமது உயிர்களைப் பலியிடாதிருப்பதற்காக இந்த ரயில் பாதையை மூடி பல பாதுகாப்பு நடவடிக்கைகளில் இங்கிலாந்து எல்லைக் காவல் படையினர் ஈடுபடுகிறார்கள்.
அதனால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரி வண்டிகளின் பயணம் தடைப்பட்டு அவைகள் சாரி, சாரியாக மோட்டார் வே என்றழைக்கப்படும் நெடுஞ்சாலைகளில் இந்த சுரங்க ரெயில்பாதையை அண்மித்த பகுதிகளில் நிறுத்தப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கை அப்பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது.
சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் தமது பிரயாணத்தை பாதியிலே நிறுத்தி தாமதப்படுத்துவதனால் அக்கம்பெனிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.
அது மட்டுமின்றி “அகதிகள்” எனும் போர்வையில் சில பயங்கரவாதிகள் நாட்டிற்குள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக ஊடுருவலாம் எனும் அச்சம் ஒரு பகுதி மக்களிடமிருந்தும், சில அரசியல்வாதிகளிடமிருந்தும் கிளம்புகிறது..
இங்கிலாந்து இப்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது. சமீபத்தில் மீண்டும் பிரதமர் பதவியேற்ற டேவிட் கமரன் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ஜரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிப்பதா ? இல்லையா ? எனும் சர்வஜன வாக்கெடுப்பு 2017ம் ஆண்டுக்கு முன்னால் நடத்தப்பட வேண்டும்.
அதற்கு முன்னதாக ஜரோப்பிய ஒன்றியத்தில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தால் ஒழிய ஜரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிப்பது என்பது சந்தேகத்திற்கிடமானதே !
இம்மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக மற்றைய ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பலரை சமீபத்தில் அடுக்கடுக்காகச் சந்தித்து தமது நிலைப்பாட்டை எடுத்து விளக்கினார் திரு டேவிட் கமரன்.
ஆனால் அவரின் இம்முயற்சிகளுக்கு இடையூறாக இந்த “குடிவரவு” பிரச்சனை கிளம்பியுள்ளது
ஜரோப்பிய ஒன்றியத்தில் ஒன்றான பிரான்சு நாடு இவ்வகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்தாது தமது நாட்டில் தங்காமல் இங்கிலாந்துக்குள் நுழைவதற்கு ஏதுவாக அவர்களை இங்கிலாந்து கரையோடு தங்க வைத்திருக்கிறார்கள்.
ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் இதைத் தமது வாதத்திற்கு துணையாகக் கொள்கிறார்கள்.
ஆயிரக்கணக்கில் இங்கிலாந்துக்குள் நுழைய முயற்சிக்கும் இவ்வகதிகள் இங்கிலாந்து வருவதற்குக் காரணம் இங்கு அகதிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றைய ஜரோப்பிய நாடுகளை விட அதிகமானது என்பது பல இங்கிலாந்து மக்களின் அபிப்பிராயம்.
ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் தான் இத்தகைய வெளிநாட்டோரின் வருகை இங்கு அதிகரிக்கிறது என்பது மற்றொரு வாதம்.
லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இங்கிலாந்து தலையீடு செய்ததால் தான் இன்று பல அகதிகள் குறிப்பாக லிபியா அகதிகள் இங்கிலாந்தை நோக்கி வருகிறார்கள் என்று இங்கிலாந்து வெளிநாட்டுக் கொள்கையைக் காரணம் காட்டுகிறார்கள் ஒரு பகுதியினர்.
இப்பிரச்சனை எடுத்திருக்கும் முக்கிய பங்கினால் அவசரமாக பிரான்சு நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்காக இங்கிலாந்து பல மில்லியன் நிதி அளித்துள்ளது.
“அகதி” என்பது ஒரு அந்தஸ்து அல்லது அவதியான ஒரு வாழ்நிலை. எதிர்காலம் என்னவென்று புரியாத நிலையில் கடந்தகால பந்தங்களை உதறி விட்டு அந்நியநாட்டின் உதவும் மனப்பான்மையை நம்பி உயிரைப் பணயம் வைத்து எடுக்கும் ஒரு தீர்மானம்.
ஆனால் அதே சமயம் அடுத்த பக்க வாதத்தைப் பார்த்தால் இங்கிலாந்து போன்ற ஒரு சிறிய தீவினுள் எண்ணிக்கையற்றோரை ஏற்றுக் கொள்ள முடியுமா?
தன்னுடைய பிரஜைகளின் அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற அல்லாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து எப்படி லிபியா போன்ற நாடுகளில் இருந்து முற்றாக இடம்பெயரும் அத்தனை பேரையும் தம்முள் உள்வாங்கிக் கொள்ள முடியுமா?
இத்தகைய பெருமளவிலான வெளிநாட்டவரின் வருகை இனவிரோத சக்திகளின் கரங்களை வலுப்படுத்தி புலம்பெயர்ந்து வாழும் பலரின் வாழ்வில் பல நெருக்கடிகளை ஏற்படுத்துமா? எனும் கேள்வியும் எழுகிறது.
தம்முடைய நாடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்கிறார்கள் என்றால் அந்நாடுகளில் இருக்கும் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு இங்கிலாந்து, மற்றும் ஜரோப்பிய நாடுகள் முன்வரவேண்டும் எனும் கருத்தும் முன்னெடுக்கப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் இது பலரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஒரு பாரதூரமான நிகழ்வாகும்.
இந்நிலையை இங்கிலாந்து அரசியல்வாதிகள் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்