ஐந்து கை ராந்தல் (25)

வையவன்

இரண்டு அறைகள் கொண்ட ஒரு காட்டேஜில் அவர்கள் இரவு தங்கினார்கள். கம்பளியும் கொசு வலையும் தலையணையும் அங்கே தரப்பட்டன. பிரீதா மட்டும் தனியாக ஓர் அறையில் படுத்துக் கொண்டாள்.

தூரத்தில் கங்கை ஓடும் ஒலி இடைவிடாது கேட்டது. இரவு வெகு நேரம் வரை உறக்கம் வராமல் கங்கையின் ஒலியைக் கேட்டுக் கொண்டே படுத்திருந்தான் சிவா. வெற்றிவேல் ஒரு நேரமாக விழித்துக் கொண்டான்.

“என்ன சிவா, தூக்கம் வரலியா?”
“இல்லே.”
“ஏன்?”
“யோசனைகள்”

வெற்றிவேலுக்கும் தூக்கம் கலைந்தது. கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான்.

“என்ன யோசிக்கறே?”
“ஓசை காதிலே விழுதா?”
வெற்றிவேல் உற்றுக் கேட்டான்.

“கங்கை ஓடுகிறது!”
“ஆமாம்… அந்த ஒலி தான் யோசனையைக் கிளப்பி விட்டது.”

“ம்ம்ம்”
“அந்த மஹா யாத்திரையின் ஒலியில் நெடிய தவம் ஒன்று தென்படறது இல்லியா வெற்றி!”
“எக்ஸாக்ட்லி”
“நன்மை… தீமை… பாவ புண்ணியம்… ஜனன மரணம்னு எல்லாத்தையும் வாரிச் சுமந்து கொண்டு அது ஓடறாப்பிலே எனக்குப் பட்டது.”
“சொல்லு”

“இதுதான் வாழ்க்கை வெற்றிவேல்! இடைவிடாது தன்னை எல்லோருக்கும் அர்ப்பணித்துக் கொண்டு ஓடும் ஓட்டம்”
“வாழ்க்கைப் பற்றி இது இன்னொரு கருதுகோள். அனதர் டெஃபனிஷன்”

“கைலாசத்துக்கு ஓடுவது வாழ்க்கையல்ல”
அவன் எதிர்ப்புணர்ச்சி நடு இரவில் கத்தி போல தன்னைத் தாக்கியதை உணர்ந்தான் வெற்றிவேல்.
“கைலாசத்துக்கு ஓடுவது அல்ல, கைலாசத்திலிருந்து ஓடி வருவது.”

“ஒனக்கு ஏன் பாபா பேரிலே இப்படி ஒரு வெறுப்பு?”
“ஒனக்கு ஏன் பாபா பேரிலே இப்படி ஒரு வியப்பு?”

“சொல்றேன்” என்று மெத்தைக்கடியில் வைத்திருந்த சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்தான் வெற்றிவேல். சிகரெட்டைப் பற்ற வைத்து அவன் உறிஞ்சி இழுத்தான். கனிந்த முனை செம்மையாய்ச் சுடர் விட்டது,

“போன வருஷம் ரிஷிகேஷûக்கு வந்து தங்கினேன். அப்ப ஆச்ரமம் இங்கே இல்லே. கங்கையின் அக்கரையில் இருந்தது. அப்போ சீடர்கள் கூட்டம் இவ்வளவு இல்லே. வரும், போகும். பெர்மனெண்டா யாரும் நிக்க மாட்டாங்க.”
“நீ ஏன் ரிஷிகேஷ் வந்தே?”

“ஆஸ் யூஷூவல்… ஒரு மாறுதலுக்குத்தான். இந்தியனான என்னை ஒரு அமெரிக்க நண்பன் இங்கே அழைச்சுட்டு வந்தான். அவனை நான் கல்கத்தா ஹார்பர்லே மீட் பண்ணேன். பத்து நாள் நானும் அவனும் ஒண்ணா சுத்தினோம். அவன் இங்கே கூட்டி வந்தான்.”

“பாபா கிட்டேயா?”
“ஆமா. அவர் இங்கிலீஷும் ஹிந்தியும் பேசினார். பார்த்தவுடனே எனக்கு அங்க அடையாளங்களை வச்சு இன்னது என்று தோன்ற முடியாத உள்ளுணர்வில் இவர் தான் உன் தந்தை என்று தோணிற்று.”
“விசாரிச்சியா?”

“ஆமாம்; ஒப்புகிட்டார். நீ கேட்டியே அதைவிட அதிகமான கேள்விகளை நான் கேட்டேன்!”
“எப்படி? என்ன கேட்டே?”
“பெண்டாட்டி புள்ளைய விட்டுட்டு அந்த பொறுப்புக்கு பயந்துகிட்டு ஞானம் தேடி வந்தீங்களே… அவங்க என்ன ஆனாங்கண்ணு ஒங்களுக்குத் தெரியுமாண்ணு கேட்டேன்.”

“அவர் என்ன பதில் சொன்னார்?”
“ஈசுவராண்ணார்… அந்த ஈசுவரன் ஒங்க பெண்டாட்டிகிட்டேயும் பிள்ளை கிட்டேயும் தென்படலியாண்ணேன். அவர் மறுபடியும் ஈசுவராண்ணார்.”
“இது ஞானமா…கல்லுளி மங்கத்தனமா?”

“அதையும் நான் கேட்டேன்! அவர் சொன்ன விவரங்கள் மயிர்க் கூச்செறிகிறது, இப்ப நெனச்சாக் கூட”
சிவா நிமிர்ந்து உட்கார்ந்தான். வெற்றிவேலுக்குத் தன் தந்தையின் தாம்பத்தியத்தைப் பற்றி, தனக்குத் தெரிந்ததை விட அதிகமாய் ஏதோ தெரிந்திருக்கிறது என்ற சிலிர்ப்பு எந்தது.

“அவரது இளமைப் பருவத்திலிருந்தே பாபாவுக்குள் ஏதோ ஒரு நூதன அவஸ்தை இருந்து வந்திருக்கிறது. அவருக்குள் ஏதோ ஒரு குரல் இடைவிடாமல் உண்மையைத் தேடு… உண்மையைத் தேடுண்ணு கேட்டுகிட்டே இருந்திருக்கு. ரொம்ப வயசான காலத்திலே உன்னுடைய தாத்தாவுக்கும் பாட்டிக்கும் கொழந்தையா பொறந்திருக்கிறார். அவருக்கு அறிவு உதயமான காலத்தில் உன் தாத்தாவுக்கு அறுபது முடிஞ்சிருக்கு.”

சிவாவுக்கு மார்பு நடுங்கிற்று. இவன் இன்னும் திடுக்கிடக் கூடியதாக எதையோ சொல்லப் போகிறான் அதைக் கேட்க வேண்டாம். அது இவனுக்கும் பாபாவுக்கும் அம்மாவுக்கும் மத்தியிலேயே புதைந்து போகட்டும் என்று நடுக்கம் எழுந்தது.
சீ… உண்மைக்கு நான் ஏன் நடுங்க வேண்டும்?

எதுவாயிருந்தாலும் அந்த உண்மையை நான் சந்திப்பேன் என்று தன்னை திடப்படுத்திக் கொண்டான்.

“ஆறு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்த பின்னால் ஏழாவது குழந்தையாக உன் தந்தை பிறந்திருக்கிறார். ஆறு இறந்த அத்தனை சோகத்தையும் நம்பிக்கையாக மாற்றி இவர் தலை மேல் சுமத்தியிருக்கிறார்கள். ‘மகனே, அதுதான் பந்தத்தின் மீது சுமத்தப்பட்ட பந்தமாக என் தலைமேல் விழுந்ததுண்’ணு சொன்னார்.”

வெற்றிவேல் சிகரெட் சாம்பலை உதறிவிட்டு என்றோ நடந்து முடிந்த ஒரு கதையில் தான் ஒரு பாத்திரமானது போல் தூரத்தில் பார்வையை ஓடவிட்டான்.

“உள்ளத்தை வண்டு குடைவது மாதிரி உண்மையைத் தேடு… உதறி விடு… உதறி விடுண்ணு ஓர் உத்தரவு குடைகிற வேளையில் வயதான பெற்றோர்களின் நம்பிக்கையை மோசம் செய்யாது அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ள முடியவே முடியாது என்று தீவிரமாக மறுத்த வேளையில் உங்க தாத்தா தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டிருக்கிறார். உறவினர்கள் எல்லாம் வந்து திட்டி அந்த திருமணம் நிர்ப்பந்தத் திருமணமா நடந்திருக்கு.”
வெற்றிவேல் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான். ஃஸ்ஸ்ஸ்… என்று வாயிலிருந்த புகை முழுவதையும் ஊதி விட்டு சற்று அமைதியாயிருந்தான்.

சிவா அவனது ஒவ்வோர் அசைவிலும் மனம் பதித்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
“அவர் சாந்தி முகூர்த்தத்தன்று என்ன செய்தார் தெரியுமா?”
சிவா தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.

“நேரா போய் நின்னுகிட்டிருந்த ஒங்க அம்மா கால்லே விழுந்திருக்கார். அவங்க பயந்து போய் அழுதிருக்காங்க. ‘பயப்படாதே, எனக்கு நீ போக வஸ்துவில்லே. புண்ணியம் செய்ய வந்த தெய்வம்’ணு சொல்லியிருக்கார். மூணு வருஷம் அவங்க புருஷன் மனைவியா இல்லாமே ஏதோ ஒரு குடும்பத்து உறுப்பினர் மாதிரி வாழ்ந்திருக்காங்க. வம்ச விருத்தியில்லேண்ணு மனசு ஒடஞ்சு அதை வற்புறுத்தப் பயப்பட்டு சிறுகச் சிறுக வருந்தி ஒங்க தாத்தா செத்திருக்கார். அதுக்கப்புறம் ‘இந்தக் குடும்பம் வௌங்க மடிப்பிச்சை போடுடா’ண்ணு ஒங்க பாட்டி கேட்டிருக்காங்க. ‘நீ பெரிய மகானாக்கூட இருக்கலாம். பட்டினத்தாருக்கு அம்மா மேலே இருந்த பாசம் கூடவா ஒனக்கு இல்லே’ண்ணு தன் மருமகள் எதிரிலேயே வெளிப்படையா கேட்டிருக்காங்க.”

“போதும் வெற்றிவேல்…”
“கேள். இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. ஒரே ஒருமுறை தன் அம்மாவுக்காக பாபா தன் மனைவியோட வாழ்ந்திருக்கிறார். ஒருமுறை…அது எதற்குண்ணு ரெண்டு பேருக்கும் தெரியும். ரெண்டு பேருக்கும் அது சம்மதம். ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணிக்கிட்ட இச்சையில்லாத வம்ச விருத்திக்கான ஒப்பந்தம மாதிரி அது நடந்திருக்கிறது விளைவு…நீ”
சிவாவுக்கு மார்பு பீறிட்டு வெள்ளம் வெள்ளமாக ஒரு துக்கம் மூண்டது. அம்மாவுக்காக…அப்பாவுக்கு ஆறு குழந்தைகளை இழந்த தாத்தாவுக்காக…பாட்டிக்கா… தனக்காக…விதிக்காக….

ஆனால் அழுது யாருக்கு என்ன லாபம்!
தன் ஆண்மை குன்றி விடுகின்ற தன்னிரக்கத்தைத் தானே அனுபவிக்கிற இழிவு தவிர-கழிந்து போன எந்த சரித்திரத்தின் ஏடுகளை இந்தக் கண்ணீர் அழிக்கப் போகிறது?
“வெற்றிவேல், நாம வெளியே போய்ட்டு வருவோமா?” என்றான்.
“எங்கே?”

“எனக்கு நடக்கணும் போலிருக்கு”
“இந்த ராத்திரியிலேயா.”
“ஆர் யூ டயர்ட்?”
“நோ…நாட் அட் ஆல். வா போவோம்.”

அவர்கள் இருவரும் வெளிக் கதவைப் பூட்டிக் கொண்டு கையில் ஒரு டார்ச்சுடன் நடந்தனர்.
கங்கை ஓடும் ஒலியின் பின்னணியில், காலி கம்பள் வாலா மகராஜின் தோட்டத்து மரங்களில் உதிர்த்த இலைச் சருகுகளை அவர்களது காலடி மிதிக்கும் சத்தம் சரசரத்தது.

“மேலே சொல்லு வெற்றிவேல்.”
தூரத்தில் ஒரு கணப்புச் சட்டியருகில் நாலுபேர் உட்கார்ந்து குளிர் காய்ந்தனர். நந்தி மாதிரி செருக்குடன் மதர்த்து வளர்ந்திருந்த ஒரு நேர்த்திக் காளை மெதுவாக அவர்களைக் கடந்து சென்றது.

“உன் பாட்டி இறந்து அவர்களுக்கு ஈமக்கடன் முடித்த வேளையில் பாபா உன் தாயாரிடம் துறவுக்கு உத்தரவு கேட்டிருக்கிறார். உன்னை வளர்த்துப் பராமரிக்க நாலு ஏக்கர் நிலமும் ஒரு பம்பு ஷெட்டும் வைத்துவிட்டுக் கேட்டிருக்கிறார். தன்னுடன் வாழாமல் வெறுமனே உடனிருந்து அவர் கேட்ட உத்தரவைத் தானும் ஒரு சுமையாக இராமல் உன் அம்மா பெருந்தன்மையோடு வழங்கியிருக்கிறார்.”

கம்பளி போர்த்துக் கொண்டு யாரோ ஒரு சாது கஞ்சாக் குழலுடன் உட்கார்ந்திருந்ததை இருவரும் கவனித்தனர்.
“கௌன் ஹோ?” என்று அவர் விசாரித்தார்.

“யாத்ரிக்! நீந்த் நஹி ஆதா. கூம்தா ஹைன்” என்று வெற்றிவேல் பதிலளித்தான்.
“ஹோஷியார் கீஜியே. சோர் ஹைன்.”
“என்ன சொல்கிறார்” என்று விசாரித்தான் சிவா.
“திருடர்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதை” என்கிறார்.
“அவருக்கு நன்றி சொல்.”
“தன்ய வாத் மஹராஜ்.”
“ஜீதே ரஹோ பேடா… ராம் ராம்.”
“ராம்… ராம்.”
அவர்கள் மேலே நடந்தனர்.

“அந்த நாலு ஏக்கர் நிலமும் பம்ப்ஷெட்டும் வெங்களாபுரத்தில் இருந்திருக்கிறது.”
“தெரியும்” என்று அதைப் பற்றி விவரம் தெரிந்ததால், தன் உறவினர்களால் வஞ்சித்து ஏமாற்றப்பட்ட தாய் அதைப் பறிகொடுத்த கதையை மீண்டும் ஒரு முறை கேளாமல் தவிர்த்தான் சிவா.
“பாபா உண்மையைத் தேடி இந்தியா முழுதையும் நடந்தும் அலைந்தும் சாமியார்களிடமும் குருஜிக்களிடமும் திரிந்திருக்கிறார். அவர் கால் படாத புண்ய ஸ்தலம் எதுவும் இந்தியாவில் இல்லை. அவர் நீராடாத தீர்த்தம் எதுவும் இல்லை. ஆனால் உண்மை, அவரை மாநிலம் மாநிலமாக அலைக்கழித்திருக்கிறது. இறுதியில் இங்கே புலப்பட்டிருக்கிறது.”
சிவா பெருமூச்சு விட்டான்.

“ஏன் களைப்பா இருக்கா… திரும்பிடுவோமா?” என்றான் வெற்றிவேல்.
“இல்லை. அவர் தேடிய உண்மையில் அவர் கண்டது என்ன?”
“கண்டவர் விண்டிலர். அதைப் பற்றி அவர் சொல்லவில்லை. அவர் சய்கிறது உபதேசமே இல்லை. தன் மனசிலிருந்து அபூர்வமான ஒரு சாந்தியை அவர் ‘ட்ரான்ஸ்மிட்’ செய்கிறார். கம்பியில்லாத மின் அலை மாதிரி அது நம்மைத் தீண்டுகிறது. ஹாவ்ன்ட்யூ எக்ஸ்பீரியன்ஸ்ட் இட்?
“ஆம்… நானும் அதை அனுபவித்தேன்!”
“பல நேரங்களில் அவர் கண்களை மூடி அமர்ந்திருக்கிறார். அது தியானமோ என்று தோன்றுகிறது! எதைத் தியானிக்கிறீர்கள் பாபா என்று ஒருமுறை நான் கேட்டேன். ‘லோக க்ஷேமத்தை லோக சாந்தியை’ண்ணு புன்முறுவலோடு பதில் சொன்னார்.”
சிவா நின்றான்.

“உலக சேவை என்பது பேசுவதிலும் எழுதுவதிலும் ஓடியாடி உழைப்பதிலும் கூட்டம் கூட்டிப் போரிட்டு ஒன்றை அழித்து இன்னொன்றை உருவாக்குவதிலும் மட்டும்தான் இருக்கிறது என்று நீயும் நம்புகிறாயா சிவா?”
“இல்லை” என்று மறுதளித்தான்.
மனசிற்குள் ஒரு குரல் எழுந்தது.

“அது ஆயிரம் வடிவம் கொண்டது. கருமானின் சுத்தியலும், தச்சனின் இழைப்புளியும், செருப்புத் தொழிலாளியின் ஊசியும், உழவனின் ஏர் முனையும் கூட அதில் ஈடுபட்டிருக்கின்றன.”
“அதுதான் கர்மா” என்று வெற்றிவேல் மேலே போனான்.

“அவை எல்லாமும் பிரதிபலன் எதிர்பார்க்கின்றன. அதனால் அவை கட்டுண்டிருக்கின்றன. வெற்றி தோல்வியுடனும், உழைப்பு கூலியுடனும், புகழ் ஆசையுடனும் கட்டுண்டிருக்கின்றன.”
வெற்றிவேலின் வாக்கு மணிநாதம் போன்று ஒலித்தது.

“பாபா, லோக க்ஷேமத்தை தியானிக்கிறார். எந்த பிரதிபலனையும் அவர் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை. மழை மாதிரி, கங்கை மாதிரி தன் இயல்பு என்ற கர்மாவில் அவர் ஈடுபட்டுத் தியானிக்கிறார். ஞாபகமிருக்கிறதா அந்த திருக்குறள்?”
பளிச்சென்று மின்னலடித்தது போன்று நினைவிலிருந்து அந்தக் குறள் ஓடி வந்தது, சிவாவுக்கு.

வெற்றிவேலே அதை வாய் விட்டுச் சொன்னான். “தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார் அவஞ் செய்வார் ஆசையுட் பட்டு! எல்லாக் காலத்திலும் எந்த யுகத்திலும் இப்படி ஒரு பாபா இருப்பதுண்டு சிவா!”
லக்க்ஷமண் ஜூலா பாலம் வரை சென்று அவர்கள் நின்றனர்.
“பாலத்தைக் கடக்கலாமா?” என்று வெற்றிவேல் கேட்டான்.
“வேண்டாம். திரும்பிடுவோம்”

இருவரும் வந்த வழியே திரும்பினர்.

“மிஸ்டிக்கலா அவர் எந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார். அவர் சித்து விளையாடுவாரா? அவரிடம் அற்புத சக்திகள் உண்டா…ஐ’ம் நாட் இண்ட்ரஸ்டட்.

அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. அக்கறையும் இல்லை. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், இந்த உலகத்திலிருந்து ஒரு சல்லியையோ ஒரு பழத்தையோ கூட எதிர்பாராமல் இந்த உலக க்ஷேமத்தையும் சாந்தியையும் தியானிக்கிற மனிதன்…” அவன் மெதுவாகச் சொல்லிக் கொண்டே மெல்ல நடந்தான்.
சிவா கேட்டுக் கொண்டே வந்தான்.
“தியானம் ஒரு செயல் அல்ல என்று நீ மறுக்கலாம். அதை செயல் என்று-பரிபூரணமான செயல் என்று நான் நம்புகிறேன். அவர்கள் கைலாசத்திற்கு ஏன் போகிறார்கள் தெரியுமா?”
“சொல்”
“உலக க்ஷேமத்திற்காக தியானிக்கவே போகிறார்கள். சொந்த முக்தியைத் தேடி அல்ல.

“உயிர் உள்ளவரை இறுதி மூச்சு இருக்கும் வரை அவர்கள் அப்படியே தியானித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் திரும்ப மாட்டார்கள். இதை அவர்கள் விளம்பரம் செய்யவில்லை.

“வாய்விட்டு எவரிடமும் தெரிவிக்கவில்லை. பாபாவின் போக்கிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.”
அவர்கள் இருவரும் அப்புறம் ஒன்றும் பேசாமல் கங்கையின் ஒலியைக் கேட்டுக் கொண்டே நடந்தனர்.
தங்கள் காட்டேஜை அடைந்து பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.

“சிவா, நீ ஏன் அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன் தெரியுமா?”
சிவா பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

“நாட் பிகாஸ் ஹி ஈஸ் யுவர் ஃபாதர். அவர் உன் தந்தை என்பதற்கும் மேலாக உன் கருத்துப்படி ஏதோ மகான் என்பதற்கும் மேலாக அப்ஸல்யூட்லி டிஃபரன்ட் பெர்ஸனாடிலி என்பதினாலேயே அவரை நீ பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.”
சிவாவின் மார்பு ஒருமுறை விம்மி உயர்ந்தது பின்பு தாழ்ந்தது. அவன் எதையோ கட்டுப்படுத்துகிறான்.
“ஆஸ் எ ரைட்டர்… நீ நம்பிக்கையை விதைக்க விதிக்கப்பட்டவன். விதைகளைத் தூவுகிறவன். இப்படி ஒரு மனிதரை நீ சந்திக்கும் போது உன் விதைக்கூடை நிரம்பும்… இதைத் தவிர எனக்கு வேறு நோக்கம் இல்லை. டு யூ பிலீவ் மீ?”
“நம்புகிறேன் வெற்றிவேல்.”

அவர்கள் இருவரும் அதற்கப்புறம் படுத்துக் கொண்டனர். வெற்றிவேல் விழித்திருந்தான். சிவாவுக்கு சீக்கிரமே தூக்கம் வந்துவிட்டது.
—————————————————————————————————————————————————————————————————–

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.