வீட்டு வேலை செய்பவர்களுக்கு விமோசனம்?
நாகேஸ்வரி அண்ணாமலை
மோதி அரசு வீடுகளில் வேலைசெய்வர்களுக்கு சில பாதுகாப்புச் சட்டங்களை இயற்றவிருக்கிறது. நாடு முழுவதும் வீட்டு வேலை செய்யும் மூன்று கோடிப் பேரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேசிய அளவில் கொள்கை வகுக்க மத்திய தொழில்துறை நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறதாம். அதன்படி வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும்போது சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகளைக் கட்டாயமாக்கப் போகிறதாம். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எந்தவித ஓய்வும் இன்றி எந்நேரமும் வீட்டு வேலை செய்து உழல்பவர்களைப் பற்றி நான் பல காலமாக, பல விதமாக வேதனைப்பட்டதுண்டு. இப்போது அவர்களுக்கும் ஒரு வழி பிறக்கப் போவதுபோல் தெரிகிறது. இவர்களைப் பற்றி மத்திய அரசு நினைக்க ஆரம்பித்திருப்பதே ஒரு நல்ல அறிகுறி என்றாலும் இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை நினைத்தால் நம்பிக்கை பிறக்கவில்லை.
பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தமிழ்நாடு அரசால் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டபோது அப்போதைய ஆளும் கட்சியின் தொண்டர்களின் பைகளை நிரப்புவதற்காகவும் அத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுவார்கள். அது ஓரளவு உண்மையாயிற்று. ஒரு முறை ஒரு பெண் என்னிடம் அவளுடைய உறவினப் பெண் ஒருத்திக்குச் சத்துணவு மையத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும் அவள் பாடு இனி கவலையில்லாமல் இருக்கும் என்றும் சொன்னாள். அவளுக்கு ஒரு வேலை கிடைத்திருக்கிறது என்பதல்ல அதற்குக் காரணம். இனி அவள் தனக்கு வேண்டிய உணவுப் பதார்த்தங்களை மையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பதால்.
மத்திய அரசின் இந்தத் திட்டமும் இதைப் போன்று முடியுமோ என்றுதான் சந்தேகமாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் அம்சங்களைப் பார்த்தால் அப்படிப்பட்ட சந்தேகம் ஏற்படுகிறது. வீட்டு வேலைக்கு ஆட்களை எடுக்க அரசு ஒப்புதலுடன் ‘ப்ளேஸ்மெண்ட்ஏஜென்சி’ எனப்படும் வேலை அளிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படுமாம். அதில் வேலை கோருபவர்களும் வேலைக்கு ஆட்கள் தேடுபவர்களும் பதிவு செய்துகொள்ள வேண்டுமாம். இந்த அமைப்பின் மூலம் செல்லாமல் தாங்களாக வேலைக்கு ஆட்களை வைத்துக்கொண்டால் அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாம்.
இரண்டாவதாக வேலை செய்யும் இடத்தில் சுமுக சூழ்நிலை, வாரம் ஒரு நாள் விடுமுறை, வருடத்திற்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறை, மகப்பேறு விடுமுறை போன்றவை கட்டாயமாக்கப்படுமாம்.
மூன்றாவதாக வேலை கொடுப்போரும் வேலை தேடுவோரும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட வேண்டுமாம். இதில் வேலை அளிக்கும் அமைப்பும் மூன்றாம் தரப்பாக கையெழுத்துப் போடுமாம்.
நான்காவதாக வேலை நேரம், வேலையின் தன்மை குறித்து ஒப்பந்தத்தில் இரு சாராரும் கையெழுத்து இட வேண்டுமாம். வீட்டிலேயே தங்கி வேலை செய்வோர்களுக்கு தங்குவதற்கு இட வசதி அளிக்க வேண்டுமாம். அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டுமாம். இதற்கு மேல் அவர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ், ஓய்வு காலத்திற்கு வேண்டிய சேமிப்பு நிதி (P.F.) போன்ற வசதிகளும் செய்துகொடுக்க வேண்டுமாம்.
படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது; இதை இப்படியே அமுலுக்குக் கொண்டுவந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் அரசு இதை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதுதான் கேள்வி. ஊழல்கள் மலிந்திருக்கும் நம் நாட்டில் இதை எப்படி அமுல்படுத்தப் போகிறார்கள்? வீட்டு வேலை செய்ய வரும் அத்தனை பேரும் சரியாக விபரம் தெரியாதவர்கள். இப்படி ஒரு சட்டம் இருப்பதே அவர்களுக்குத் தெரிய வழியில்லை. (வீட்டு) வேலை கிடைத்தாலே போதும் என்று நினைப்பவர்கள் எஜமானர்கள் சரியாக நடத்தவில்லையென்றால் வேலை அளிக்கும் அமைப்பிடம் சென்று புகார் கொடுக்கவா போகிறார்கள்? அப்படிக் கொடுத்தாலும் வேலை கொடுக்கும் மற்றவர்களிடமும் அவர்களுடைய மவுசு குறைந்துவிடும் என்று நினைப்பார்கள். வேலை கொடுப்பவர்களும் வேலை தேடுபவர்களும் இப்போது போல் நேரடியாக தொடர்புகொள்ளலாமே. இதில் மத்தியில் வேலை அளிக்கும் அமைப்பு எதற்கு?
இப்போதுள்ள நிலைமையையே வைத்துக்கொண்டு வீடுகளில் வேலை பார்ப்பவர்களைச் சரியாக நடத்துகிறார்களா என்று கண்காணிக்கலாமே. அதிலும் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. ஊழல்கள் மலிந்த நம் நாட்டில் கண்காணிக்கும் அரசு ஊழியர்கள் நியாயமாக நடந்துகொள்வார்களா? ஊழல்களை ஒழிக்கப் பாடுபடுவோம் என்று கூறிப் பதவிக்கு வந்த மத்திய அரசு ஊழல் புரிந்தவர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி வேலை வழங்கும் அமைப்பை ஊழலில்லாமல் நிர்வகிக்கப் போகிறார்கள்?
பிறரின் வீடுகளில் வேலை பார்த்துச் சொற்ப சம்பளம் பெற்றுக்கொள்ள மூன்று கோடி ஏழை ஜனங்கள் நாட்டில் இருக்கும்வரை இவர்களுக்கு எந்த அரசாலும் நியாயம் வழங்க முடியாது. அவர்களை அவர்களின் நிலையிலிருந்து உயர்த்துவதன் மூலம்தான் அவர்களுக்கு நியாயம் வழங்க முடியும். எந்தச் சந்தையும் ‘சப்ளை அண்ட் டிமாண்ட்’ மூலம்தான் இயங்குகிறது. பிறர் வீடுகளில் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்யத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்தால் இவர்களுக்கு டிமாண்ட் கூடிவிடும். பின் அவர்கள் கண்ணியமாகவும் நடத்தப்படுவார்கள்; உரிய சம்பளமும் பெறுவார்கள்..
ஒரு முறை எனக்கு வீட்டைச் சுத்தம் செய்வதில் உதவிய பெண்ணுக்கு நான் ஞாயிறு விடுமுறை கொடுத்தேன். பக்கத்து வீட்டிலும் வேலை செய்த அந்தப் பெண் ஞாயிறன்று அவர்கள் வீட்டிற்கும் வரவில்லை. மறு நாள் திங்கட்கிழமை வேலைக்கு வந்ததும் அந்தப் பெண்ணை பக்கத்து வீட்டு அம்மாள் ‘ஞயிறன்று ஏன் வேலைக்கு வரவில்லை’? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் ‘பக்கத்து வீட்டில் ஞாயிறன்று விடுமுறை’ என்றார். அந்த அம்மணிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. ‘விடுமுறை பக்கத்து வீட்டில்தான், இங்கல்ல’ என்று கத்தித் தீர்த்துவிட்டார். இவர்களை எல்லாம் எப்படி வழிக்குக் கொண்டுவருவது? வேலைக்கு எளிதில் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலை வந்தால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள்.
வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பவற்றிற்குக் கடுமையான சட்டங்கள் இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே கோப்ரகடே போன்றவர்களே – இவர் மெத்தப் படித்தவர்; பெண்களின் நலனைப் பாதுகாக்கும் துறையில் வேலை பார்த்தவர் – இப்படி நடந்துகொண்டால் சாதாரண ஜனங்களைப் பற்றி என்ன சொல்ல?
முதலில் அரசு இந்த ஏழைகளின் நிலையை உயர்த்தட்டும். அமைப்புசாரா தொழிலாளர்களின் (Unorganized labourers) நிலை அமைப்புசார் தொழிலாளர்களைப் போல் (Organized labourers) உயரட்டும். அப்போது அவர்களின் சப்ளை குறைந்துவிடும். அவர்களுக்கு டிமாண்டும் கூடிவிடும். தங்களின் நலனைப் பாதுகாத்துக்கொள்ளும் பக்குவமும் அவர்களுக்குக் கிடைக்கும். கொடுக்கும் ஊதியத்திற்கு அதிகமாக அவர்களை வேலைவாங்கும் வர்க்கமும் இருக்காது. அப்போது இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து ஊழல் புரிபவர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடும்.
