பா.ராஜசேகர்
முன்பொருகாலம்
முன்பொருகாலமென
மூச்சைப்பிடித்து
முகவுரையிட்டுக்கொண்டே
வருகிறேன்
என்றாவது ஒருநாள்
முன்பொருகாலம்
மீண்டும்
உயிர்பெறும் கனவுகளோடு!
பா.ராஜசேகர்
முன்பொருகாலம்
முன்பொருகாலமென
மூச்சைப்பிடித்து
முகவுரையிட்டுக்கொண்டே
வருகிறேன்
என்றாவது ஒருநாள்
முன்பொருகாலம்
மீண்டும்
உயிர்பெறும் கனவுகளோடு!
பா.ராஜசேகர்
வீட்டுக்கு புதுவரவு வாசமல்லி
என் பத்துவயது
மகனுக்கு அதிகமகிழ்ச்சி .
மண்வெட்டியைஎடுத்து
முன்வாசலோரம்
குழிதோண்டி பதியம்வைத்து
கொடுத்தப்பணத்தை வாங்கிக்கொண்ட
பூச்செடி விற்பவர்
புள்ளைமாதிரி பாத்துக்குங்க.
சொல்லிக்கொண்டிருக்கும்போது
மனைவிஉரமிட முல்லைக்கு மகன்
தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான்.
வாசலின் இருமருங்கிலும்
செழித்துவளர்ந்தாள்
ஊஞ்சலாடிக்கொண்டே
புன்னகையால் வாசம்பரப்பி
என்வரவேற்பறையை
அலங்கரித்து மகிழ்வாக்கினாள்
வாசமல்லியின் செழுமையில்
எங்கள் மூவரின் பங்கும் இருந்தது.
இப்போது மகனுக்கு திருமணமாகிவிட்டது
வீட்டுக்கு புதுவாசம்தர
வந்திருப்பது மருமகள்.
மருமகளின் தந்தை என்கைகளை
பிடித்துக்கொண்டு
உங்கபுள்ளைமாதிரி பாத்துக்குங்க
எனக்கு புதிதாக எதுவும்தோன்றவில்லை
வாசமல்லியின்வாசம் வீட்டில்மட்டுமல்ல
எங்கள் மனதிலும் நிறைந்திருந்தது
பவள சங்கரி
தீமைகளை அழிக்கவும், தீயவர்களை ஒடுக்கவும் கோபாவேசம் கொண்டு பொங்கி எழுபவள் அன்னை பத்ரகாளி. திருவக்கரை, தில்லை, திருவாலங்காடு, மதுரை ஆகிய தலங்களில் உக்கிரமாகக் காட்சியளிக்கும் காளி அன்னை சினந்தணிந்த அன்பு அன்னையாக புதுச்சேரியிலும், மதுரகாளியாகவும், சிறுவாச்சூரில் லலித காளியாகவும் அருள்பாலிக்கிறாள். அந்தியூர் எனும் அரிய தலத்திலும் சாந்த நாயகியாக அமர்ந்து அருள்புரிகிறாள்.
பொதுவாக நாட்டுப்புறப் பாடல்கள், வில்லுப்பாட்டுகள், கும்மிப் பாடல்கள் போன்றவைகள் பத்ரகாளியம்மனை சிவபெருமானின் துணைவியாக, பராசக்தியின் அம்சமாகவும், திருமாலின் இளைய சகோதரியாகவும் குறிக்கப்படுவதால் சைவம், வைணவம் என இரண்டையும் பாலமாக இணைக்கும் தெய்வம் அன்னை பத்ரகாளி எனக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்த்தெய்வம் என்று மக்களால் அன்பாக போற்றப்படும் பத்ரகாளியன்னை, மாகாளி, ஓம் காளி, கொற்றவை, எல்லைப் பிடாரி, பத்ரகாளி என பல்வேறு திருநாமங்கள்கொண்டு போற்றப்படுகிறாள். காளி என்றால் கறுத்தவள் என்றும் பொருள்படும். பீடையை அறுப்பவள் பிடாரியானாள். தீமைகளை, தீயவர்களை, தீய எண்ணங்களை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவர்கள் பேராண்மை பெற்று விளங்க எண்ணுவோர் காளியை வழிபடுகின்றனர். அதாவது அன்னை அருள்வடிவாய் காட்சியளிக்கும்போது பவானியாகவும், ஆண் சக்தியாக அருள்பாலிக்கும்போது துர்க்கையாகவும் விளங்குகிறாள் என்கின்றனர் ஆன்றோர். அந்த வகையில் பழம்பெரும் நகரமான அந்தியூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் சகல செல்வங்களும் அருளும் வடிவுடை அன்னையாகத் திகழ்கிறாள். இவள் வீற்றிருக்கும் ஆலயமோ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது!
ஈரோட்டிலிருந்து வடக்கு புறம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அந்தியூர். செல்லீசுவரர் திருக்கோவில் மற்றும் அழகராசப் பெருமாள் திருக்கோவிலும் அருகிருக்க இக்கோவில் அந்தியூர் கோட்டையின் உட்புறத்தில் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன், கொங்கர்களும் தனியாட்சி செய்துவந்த நாடு கொங்கு நாடு என்பது. 24 உட்பிரிவுகள் கொண்ட கொங்கு நாட்டில், பவானி ஆற்றின் வடபுறம் உள்ள வடகொங்கு வடகரை நாடு என்பதும் ஒன்றாகும். இந்த வடகரை நாட்டின் தலைநகராக இருந்தது அந்தியூர்.
கொங்கு நாட்டின் வடக்கு எல்லையாக இருப்பது பர்கூர் மலைத்தொடர். சங்க காலச் சிறப்புமிக்க நகரங்களில் முக்கியமானது அந்தியூர். அக நானூறு எனும் சங்க இலக்கியத்தின் 71 ஆம் பாடலைப் பாடிய ‘அந்தி இளங்கீரனார்’ என்ற புலவர் அந்தியூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இவ்வூரின் பழமையை அறிய முடிகிறது. பண்டைக் காலத்தில் மூன்று சுற்றுகளுடன் அகழிப்பாதுகாப்பும் கொண்ட வராக நதிக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்கோட்டை இன்று அழிந்துவிட்டாலும் கோவில்கள் இவ்வூரின் பழம்பெருமையை எடுத்துரைக்கின்றன.
அந்தியூரின் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். கோவிலின் முன்புறம் அறுபது அடி நீளமுள்ள குண்டம் காணலாம். குண்டத்தின் மேற்குப்புறம் கம்பீரமான வடிவுடைய பெரியதொரு கணபதியைக் காணலாம். திருக்கோவில் வாயிலில் அழகும், அச்சமும் ஒருங்கே அமையப்பெற்ற கம்பீரத் தோற்றத்துடன் இரண்டு பூதகணங்கள் காவல்புரியும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்பவை. மகாமண்டபத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.
அன்னை பத்ரகாளியின் திருக்கோவில் அர்த்த மண்டபத்தில் அன்னையின் உற்சவ மூர்த்தம் பொங்கும் புன்னகை தவழ வீற்றிருக்கிறாள். கருவறையில் மகிசாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெண்களுக்கு மாங்கல்ய வரம் அருள்பவள் அன்னை என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அன்னை எட்டு கைகளில், உடுக்கை, கட்கம், கபாலம், சூலம் ஏந்தி, சுடர்விட்டு பரவும் தீச்சுவாலைகள்கொண்ட தலை, மண்டை ஓடு, கிரீடம், மகிசனின் தலைமேல் கால்களை ஊன்றியபடி, நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள்.
மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. பழம்பெரும் ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன.
வேண்டியவருக்கு வேண்டியபடி வரமருளும் அன்னை அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குபவள். ஆயிரம் கண்ணுடையவள் அன்னை என்று பார் போற்றக்காரணம் தீவினை எங்கு எவ்வடிவில் நடந்தாலும் அதைத் தடுத்து பக்தர்களை ஆட்கொண்டு நல்லறம் காத்து நிற்கிறாள் என்பதாலேயே.
பக்தர்களைக் காப்பதில் அம்மனின் கருணைக்கு முன்பு எந்த சக்தியும் ஈடாகாது. ஒரு முறை, அந்தியூரின் வடக்கே உள்ள எண்ணமங்கலம் என்னும் இடத்தில் இளம் பெண் ஒருத்தி கணவனால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருந்தாள். கணவனின் கொடுமையை தாங்க முடியாத ஒரு நிலையில் தன் கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாள். அன்னை இவ்வாலயத்தின் பூசாரியின் கனவில் தோன்றி அதனை உணரச்செய்ய அந்த பூசாரியும் உடனே எழுந்து ஓடிவந்து கிணற்றில் குதித்த அந்த பெண்ணையும், குழந்தையையும் தக்க தருணத்தில் ஓடி வந்து காப்பாற்றிவிட்டார். இந்தச் சம்பவத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். இன்றும் இதுபோன்று அம்மன் பக்தர்களின் கனவில் வந்து பலன் சொல்வதாக மிகுந்த நம்பிக்கை உலவுகிறது. அம்மன் தலையின்மீது பூ வைத்து வாக்கு கேட்பதும் நடைபெறுகிறது. நாள்தோறும் அம்மனுக்கு நான்கு கால வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
சிங்கத்தை வாகனமாகக் கொண்ட இக்காளிதேவி தாய்த் தெய்வம் என்று கருதப்படுபவள். இவள் கொற்றவை என்றும், சாமுண்டா, பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். பத்ரகாளி அன்னையின் கோவில்கள் அனைத்தும் வடக்கு முகமாக அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. காளியன்னை ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறாள். மாகாளி, ஓம் காளி, எண்ணெய்முத்துக்காளி, சீலக்காளி, கல்கத்தா காளி, கடுக்காளி, பாதாள காளி, கரிய காளியம்மன், வீரகாளி, வீரசூரகாளி, வீரமாகாளி, பொங்காளியம்மன், உச்சினி மாகாளி போன்றவை. அபிதான சிந்தாமணி, தமிழ் அகராதிகள் போன்றவைகளும் காளிதேவியின் பல்வேறு திருநாமங்கள் குறித்து தெரிவிக்கின்றன.

மதலோலை எனும் தேவலோகப் பெண், துருவாச முனிவரின் சாபத்தின்படி அம்பரன், அம்பன் என்ற இரு அசுரர்களை மக்களாகப் பெற்றிருக்கிறாள். அவர்கள் இருவரும் அசுர குணத்தின்படி ஊரில் பல பெண்களுடன் திருமணம் செய்துகொள்ளாமலே உறவு வைத்திருந்தனர். இந்தச் செயல்கண்டு வெகுண்ட தேவர்கள் சிவபெருமானிடன் முறையிட்டனர். சிவபெருமான் அவ்விரு அசுரர்களையும் அழிக்கும்பொருட்டு உமாதேவியாரை, மைத்துனர் திருமாலுடன் அனுப்பிவைத்தார். அந்த அசுரர்களை அழிக்க அருள் வடிவான அன்னை உமாதேவியார் கோபாவேசமான பத்ரகாளி உருவெடுத்து அவ்வசுரர்களை அழித்தார் என்கிறது புராணம்.
ஆண்டுதோறும் பங்குனித் திங்களில், அருள்மிகு பத்ரகாளியம்மன் குண்டம் பெருந்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
நவராத்திரி விழா 9 நாட்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருவாதிரை விழா, சித்ரா பௌர்ணமி, தீர்த்தக் குடவிழா, துர்காச்டமி – 108 சங்கு வைத்து பூசை செய்வது போன்ற விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
காளி வழிபாட்டிற்குரிய நாள் செவ்வாய் கிழமையென்றும், எந்த நோயையும் தீர்க்க வல்லவள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.
பத்ரகாளி அம்மன் கருவறைச் சுவர்களில் ‘மீன் சின்னங்கள்’ பொறிக்கப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கல்வெட்டு ஆய்வின்படி இக்கோவில் கட்டப்பட்டது கி.பி.1265 – 1285 என்பதால் அக்காலகட்டத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள் யாரேனும் இக்கோவிலை அமைத்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.
க. பாலசுப்பிரமணியன்
இது என்ன பயணம்..
இருளிலிருந்து இருளை நோக்கி… ?
விடியலிலிருந்து மாலை வரை..
உழைத்து..
அனுபவித்து
அறிந்து..
புதிய ஞானத்துடன் ..
மாலையில் பயணத்தைத் தொடங்கினால்
அது மீண்டும் மீண்டும் ..
இருளுக்குள்…
காலம் பின்னோக்கிச் செல்ல..
மீண்டும் நேற்றைய விடியல் v
இன்று…
ஆமாம்..
எங்கள் நாட்டு விடியல்கள்
நேற்றே நடந்துவிட்டாலும்
அனுபவங்களையும்..
மேதாவிலாசங்களையும் ..
நாங்கள் மண்ணில் புதைத்துவிட்டு.
மீண்டும் .,
அந்த அறிவை..
அனுபவங்களை ஜெனிக்க..
அதே விடியலையத் தேடி ..
கடல்களுக்கு அப்பால் ..
இது என்ன பயணம்?
இருளிலிருந்து இருளை நோக்கி..
நேற்றைய விடியலை..
மீண்டும் நாளைக்
காலையில் பிரசவிக்க …?
அன்பினியவர்களே!
அடுத்தொரு வாரத்தில் என் அன்பு கலந்த வணக்கங்கள். இன்ன பல எண்ணங்களைச் சுமந்து கொண்டு மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். மனித சமுதாயத்தின் வளர்ச்சியும், வரலாறும் பல சரித்திரத் திருப்புமுனைகளை உள்ளடக்கியவை. காலத்துக்குக் காலம் மனிதன் தன்மீது வீசப்பட்ட சவால்களைத் தன் திறமையின் மூலம் எதிர்கொண்டே வளர்ச்சியடைந்திருக்கிறான். ஆனால், அவ்வளர்ச்சிக்கான வரலாற்றுச் சரித்திரத்தினை உள்வாங்கிக் கொண்டு அதனுடைய உண்மையான விளைவினையும் அவ்விளைவினால் மனிதன் அடைந்த மேம்பாட்டு வளர்ச்சியையும் சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றுதான் மனித நாகரிகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.
ஆதிமனிதன் காட்டுக்குள் வேட்டையாடி வாழ்ந்ததிலிருந்து இன்று செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு மனித அறிவின் வளர்ச்சிக்கான விலைகள் கொடுக்கப்படாமலில்லை. தாம் அடைந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தமது வாழ்வினையும், அதற்கான வசதியையும் உறுதிப்படுத்துவதற்காகவும் அந்நியநாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது மேலைத்தேச நாடுகளின் அன்றைய வரலாற்றுத் தேவையாயிருந்தது. விளைவாக நாடுகளின் பேராசை பெருத்து காட்டைவிட்டு நாட்டுக்குள் வந்த நாகரிகமடைந்த மனிதன் அடுத்த நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அதீதப் பேராசையினால் முதலாம் உலக மகாயுத்தம், இரண்டாம் உலக மகாயுத்தம் எனும் மனிதப் பேரழிவுக்கு அடிவகுத்தான்.
பேராதிக்க ஆசை கொண்ட நாட்டின் அதிபர்களின்
அபிலாஷைகளுக்காகத் தமது இன்னுயிரைக் காவு கொடுத்தோர் எண்ணிக்கையிலடங்காதோர். தாம் பிறந்த மண்ணின் பாதுகாப்புக்காக நாட்டின்
தலைவர்களினதும், அரசினதும் ஆணையை ஏற்றுப் போர்க்களத்தினுள் குதித்த பல்லோப லட்ச வீரர்கள் பல போர்களில் தமது இன்னுயிரைத் தமது நாட்டிற்காகத் தியாகம் செய்துள்ளார்கள். அதேவேளை சில சர்வாதிகாரிகளால் அடுத்த நாடுகளின் மீது திணிக்கப்படும் போர்களில் வலுக்கட்டாயமாக ஈடுபட வேண்டிய நிர்பந்தத்திற்குப் பலர் உள்ளாக்கப்படுகிறார்கள். அத்தகையதோர் போர் ஜனநாயகம் எனும் போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகாரத்தினால் இன்ன பல கொடுமைகளைப் புரிந்த ஹிட்லரின் அராஜகத்தைத் தவிர்ப்பதற்காக ஏற்பட்டது சரித்திரத்தில் மாறாத கறையாகப் படிந்துள்ளது.
சரித்திர நிகழ்வுகளையும், சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளையும் போற்றி அவற்றினை மறக்காது
நினைவுபடுத்தி வாழும் நாடுகளில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11ஆம் திகதியை முப்படைகளையும், மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிகளையும் கெளரவிக்கும் தினமாக ஐக்கிய இராச்சியம் கடைப்பிடித்து வருகிறது. நவம்பர் 11ஆம் திகதியை அடுத்து வரும் ஞாயிறு தினத்தை ஒரு நினைவு ஞாயிறு ( Remembarance Sunday ) என்று ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் லண்டன் மாநகரில் அமையப்பெற்ற படைவீரர்கள் நினைவுத்தூபியின் முன்னால் இங்கிலாந்து மகாராணியர் உட்பட அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிழல் அமைச்சர்கள், மற்றும் பல முன்னணி நபர்கள் அணிவகுத்துப் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்கள். பின்னர் அனைவரும் அந்த நினைவுத்தூபியின் அடியில் மலர்வளையம் சாத்தித் தமது நினைவாஞ்சலிகளையும், நன்றியறிதல்களையும் மறைந்த படைவீரர்களுக்குத் செலுத்துவார்கள். படையினரின் அணிவகுப்பின்போது போர்ப்படைகளில் சேவையாற்றி ஓய்வுபெற்ற வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
சரியாக அந்த ஞாயிறு காலை 11 மணிக்கு அனைவரும் தாம் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலிகளைச் செலுத்திக் கொள்வார்கள்.
இதேபோன்ற நினைவுத்தூபிகள் ஒவ்வொரு நகரிலும் நிறுவப்பட்டுள்ளது. அத்தகையதோர் நினைவுத்தூபி நாம் வாழும் “கென்லி” (Kenley) எனும் நகரிலும் நிறுவப்பட்டுள்ளது.போர்க்காலத்தில் போர்விமானங்கள் தரிக்கும் ஓர் படைத்தள விமான ஓடுபாதை ” கென்லி வான்படைத்தளம்” (Kenley Aerodrome) என்றழைக்கப்படும் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ளது. இத்தூபியின் முன்னால் அஞ்சலி மதியம் ஒருமணிக்குச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நானும், மனைவியும் அவ்விடத்திற்கு மதியம் 12 மணிக்கே வந்து விட்டோம். “அடடா ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து விட்டோமே! “ என்று அங்கலாய்த்தபோது, எமது தினசரி நடைப்பயிற்சியை இங்கேயே செய்து விடுவோமே என்றார் என் மனைவி. சுமார் இரண்டரை மைல் சுற்றளவு கொண்ட அம் மைதானத்தைச் சுற்றி வர சுமார் 45 நிமிடங்கள் பிடித்தது. 12.50க்கு அவ்விடத்தை வந்தடைந்தோம்.
சுளீரென ஆதவன் தனது கதிர்களை அள்ளிவீசிக் கொண்டிருந்தான். அக்கதிர்கள் எம்மீது விழுந்ததினால் நவம்பர் மாதக் குளிர் கொஞ்சம் விலகிப்போனது. மெதுவாகக் கூட்டம் சேரத் தொடங்கியது. மாநகரக் கவுன்சில் தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், ஆகாயப்படை அதிகாரிகள் எனப் பலரும் குழுமியிருந்தனர். நேரம் ஒன்றைத் தாண்டி விட்டிருந்தது. ஏன் தாமதமாகிறது என்று நாம் சிந்தித்த வேளை குறைடன் நகர மேயரின் வரவுக்காகக் காத்திருப்பதாக அருகிலிருந்தவர் கூறினார். சுமார் 1.15 அளவில் குறைடன் நகர மேயரும், உதவி மேயரும் வந்து சேர்ந்தார்கள்.
அனைவரும் அணிவகுத்து நிற்க, பிரித்தானிய விமானப்படை சிறியோர் பயிற்சிப் பிரிவினர் தமது அணிவகுப்பினை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக அணிவகுத்து நின்ற அங்கத்தினர்கள் தாம் கைவசம் கொண்டு வந்திருந்த மலர் வளையத்தினை அந்நினைவுத்தூபியின் அடியிலே வைத்துத் தலைவணங்கினர். அதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த சுமார் முந்நூறு பொதுமக்கள் (நாம் உட்பட ) அந்த நினைவுத்தூபின் முன்னால் ஒவ்வொருவராகச் சென்று தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். இறுதியாக விமானப்படை அதிகாரியொருவர் சிறிய கவிதை ஒன்றைப் படித்தார். ஆங்கிலக்கவிதையின் இறுதி வரிகள்,
”இந்நினைவை உங்களோடு
எடுத்துச் செல்லுங்கள்
உங்களின் இன்றைகளுக்காக எமது
நாளைகளை நாம் தியாகம் செய்தோம்”
என்று முடிவடைகிறது.
இந்நிகழ்வினில் கலந்துவிட்டு வீடு செல்லும்போது நெஞ்சு கனத்தது. உலகம் சுதந்திரமாக இருக்க வேண்டும், உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடிய லட்சக்கணக்கானோர் தமது உயிரை மிகவும் இளமையிலேயே இழந்து போயிருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களில் நாம் இன்று வசதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களை நினைந்து கொள்வதற்காக வருடத்தில் ஒருநாளை ஒதுக்கி அவர்களுக்கான கெளரவத்தை வழங்கி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை முக்கியமாக்கும் ஐக்கிய இராச்சியத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் முயற்சி உள்ளத்தைத் தொடுகிறது. இன்றைய எமது நல்வாழ்வுக்காகத் தமது அன்றைகளைத் தியாகம்செய்த அவர்களின் அளப்பரிய தியாகம் வானளாவி நிற்கிறது.
அது மட்டுமல்ல, முதலாம் , இரன்டாம் உலகமகாயுத்தங்களில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் நினைவுகூர்வது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
–உமாஸ்ரீ
எழுத்தாளர் ரேவதி பாலுவிடம் நேர்காணல்
எல்லோரும் சிறுகதை எழுதலாம். ஆனால் ஒரு நல்ல சிறுகதை எழுதுவது சுலபமல்ல. எப்படி ஒரு ஜாங்கிரியைச் சிலரால்தான் நன்றாக உருவாக்க முடியுமோ அதுபோல் சிலரால்தான் நல்ல சிறுகதையை எழுத முடியும்.
எழுத்தாளர் ரேவதி பாலு ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். சிறந்த சிறுகதைகளை எழுதிக் கொண்டிருப்பவர். அவர் கதைகள் பல பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் வந்து கொண்டிருக்கும்.
திருமதி ரேவதி பாலு பிரபல எழுத்தாளர் ரசவாதியின் மகள். ரசவாதியின் “ ”ஆதார ஸ்ருதி” மிகவும் சுவாரஸ்யமான நாவல். தந்தையைப் போலவே மகளும் நல்ல எழுத்தாளர். கம்பன் வீட்டு அம்மி குழவியும் கவிபாடும் என்பதை நிரூபித்து விட்டார். சுருங்கச் சொல்லவேண்டுமானால்
புல்லாங்குழல் இன்னிசைக்கு மயங்காதவர் யார்?
மழலை மிழற்றலுக்கு மகிழ்ச்சியடையாதவர் யார்?
பூசும் சந்தனம் நறுமணத்திற்கு ஆனந்தமடையாதவர் யார்?
ரேவதி பாலு படைப்புகளைப் படித்து களிப்படையாதவர் யார்?
நான்குக்கும் வசப்படுவதைத் தடுப்பார் யார்?
நவம்பர் 2016 கலைமகள் இதழில் அவர் எழுதிய “சொல்லாமலே“ என்னும் சிறுகதை பிரசுரம் ஆகியிருக்கிறது. மனைவியை இழந்த மாமாவைப் பார்க்கப் போன வாணி, பக்கத்து போர்ஷனில் இருக்கும் பரிமளாவுக்கு அவரிடம் இருக்கும் தோழைமையைக் கண்டு வியக்கிறாள். விடைபெறும்போது, ”நா ஒங்களை ’மாமீ’ என்று கூப்பிடவா?”என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றி அழுத்திவிட்டுப் பேருந்து நிலையத்தை நோக்கி மனநிறைவோடு நடக்க ஆரம்பித்தாள். திருமதி ரேவதி பாலு சொல்ல வந்ததைச் ’ சொல்லாமலே’ சொல்லுகிறார்.
அவருடையை நேர்காணலைப் பார்ப்போம்.
நான் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவள். வசிப்பது சென்னையில். ஒரு மகன், ஒரு மகள். கணவரும் சொந்தத் தொழில் புரிந்து ஓய்வுபெற்றவர்.
1974இல் ”ஜூலி” என்கிற இந்திப் படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் திரு. சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த திணமணிக்கதிர் பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அப்போது எனக்கு 21 வயது. அதைப் பிரசுரித்ததோடில்லாமல் என்னைப் பாராட்டி “உங்களுக்கு மிகநன்றாக எழுத வருகிறது தொடர்ந்து எழுதுங்கள்!” என்று திரு. சாவி அவர்கள் எனக்கு எழுதிய கடிதமே (இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்), என்னை எழுத்தாளராக மாற்றியது என்று சொல்லலாம். ஆனால் உடனே தொடர்ந்து எழுத ஆரம்பிக்கவில்லை.
1983இல் என்று நினைக்கிறேன். “கொழுக்கவோ இளைக்கவோ!“ என்கிற என் முதல் சிறுகதை “மங்கையர் மலர்“ மாத இதழில் பிரசுரமாயிற்று.
என்னைப் பாதிக்கும் விஷயங்களை, என் உணர்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.
எல்லாப் படைப்புகளிலும் நம் அனுபவங்கள் இருக்கும். முதலாவது நமது நேரடி அனுபவங்கள், இரண்டாவது நாம் கேள்விப்படுவது. இவைகளோடு சரியான விகிதத்தில் கற்பனையும் கலந்து ஒரு ஆரம்பம், ஒரு முடிவு என்று தீர்மானித்து எழுதும்போது அது ஒரு சிறுகதையாக மாறுகிறது.
யாரைச் சொல்வது? யாரைச் சொல்லாமல் விடுவது? தந்தை எழுத்தாளராக இருந்ததால் சிறுவயதிலிருந்தே புத்தகங்களோடேயே வளர்ந்த அனுபவத்தில் நிறைய மூத்த எழுத்தாளர்கள், தி. ஜானகிராமன், லா.ச.ரா., ஜெயகாந்தன், படைப்புகளிலிருந்து, சம காலத்தவர்களான சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, மாலன் என்று எல்லோருடைய படைப்புகளையும் ரசித்துப்படித்து உருவானவள்தான் நான்.
அநேகமாக எல்லா தமிழ் வார/ மாதப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. சமீபத்தில் அமுதசுரபி தீபாவளி மலர், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர், ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர், கலைமகள் தீபாவளி சிறப்பிதழ் போன்றவற்றில் வெளியாகியுள்ளன.
8. தங்கள் படைப்புகளில் தங்களுக்கு மிகவும் பிடித்தது?
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சில குறுநாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் (பொதிகை – சென்னைத் தொலைகாட்சியில் – என்னுடைய நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளன.) தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன. எழுத்துலகத்திலும் எல்லாத் துறைகளிலும் தடம்பதித்துப் பல பரிசுகளைப் பெற்றபோதிலும் நான் மிகவும் விரும்பி எழுதுவது ‘சிறுகதைகள்’ தான். அந்த விதத்தில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை ‘மெளனமாக ஒரு ராகம்.’
9. எழுத விரும்புவோருக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை/யோசனை ஏதாவது…
திரு. சுஜாதா அவர்கள் சொல்லுவார்கள்…
”நாம் பார்க்கும் எல்லாவற்றிற்குள்ளும் ஒரு கதை இருக்கிறது” என்று.
திரு. லா.ச.ரா அவர்கள் சொல்லுவார்கள்…
“எழுதுபவர்களிடம் எப்போதும் ஒரு ‘தேடல்” அடங்காத தாகமாக இருக்க வேண்டும்” என்று.
என் தந்தை கூறுவார்…
“நிறைய வேறுபட்ட எழுத்துக்களை படிக்கவேண்டும்” என்று.
இவர்களையெல்லாம் படித்து வளர்ந்த நானும் இதையே கூற விரும்புகிறேன். இவற்றோடு தொடர்ந்த முயற்சியும் இருந்தால் நிச்சயமாக எல்லோராலும் எழுதமுடியும்.
நேர்காணலில் அவர் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றினால் எழுத்தை ஆளுமை செய்து சீரிய கதைகளை ஒருவரால் எழுதமுடியும்.
திருமதி ரேவதி பாலு சீரடி சாய்பாபாவிடம் அகண்ட பக்தி கொண்டவர். எல்லாம் வல்ல சீரடி சாய்பாபா அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும், வீட்டில் இல்லை என்ற குறை இல்லாமலேயும் இருக்க அருள்வாராக. திருமதி ரேவதி பாலு சாய்ராம் அருளால் ஓய்வுபெறாமல் மேலும் பல படைப்புகளைப் படைத்துப் புகழ்பெற வாழ்த்துக்கள்!!
பா.ராஜசேகர்
அன்று நான்
நள்ளிரவுவரை
வீடுதிரும்பாத நாளில்
வாசலுக்கும் வீட்டுக்கும்
அலைந்த கண்ணுக்குத்தெரியாத
தந்தையின் கால்தடங்களை
மகனின் வருகைக்கு
காத்திருக்கும்
இன்றைய பொழுதுகளில்
தேடித்தேடி பதியமிடுகிறது
என் கால்கள்!
-மேகலா இராமமூர்த்தி
காவிரிப்புனல் தமிழகத்தைப் பொன்கொழிக்கச் செய்தது கன்னடரின் மனத்தில் அனலை மூட்டியது போலும்! நம் மன்னர்களின் கை ஓங்கியிருந்த போதெல்லாம் ஒடுங்கியிருந்த அவர்களின் நரித்தனம், நம் பிடி சற்றுத் தளர்ந்தபோதெல்லாம் நர்த்தனம் ஆடியிருக்கின்றது!
மைசூரை ஆண்ட போசள மன்னனான முதலாம் நரசிம்மன், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மைசூருக்கருகே காவிரியில் அணைகட்டி அதன் சோழமண்டலப் பாசனத்தைத் தடுக்க முயன்றிருக்கின்றான். பிற்காலச் சோழர்களின் ஆட்சி நம் தமிழகத்தில் மாட்சியோடு நடைபெற்றுக்கொண்டிருந்த காலமது. அப்போது ஆண்டுகொண்டிருந்த இரண்டாம் குலோத்துங்கன், தன் மகனான இரண்டாம் இராசராசனிடம் ஓலை தந்து, அவனைப் போசள மன்னனிடம் அனுப்பி, அணை கட்டும் முயற்சியைக் கைவிடும்படிக் கேட்டிருக்கின்றான். போசள மன்னன் அதற்கு இணங்க மறுக்கவே, மறவர்படையோடு சென்று போசளன் கட்டிய அணையை உடைத்தெறிந்து காவிரியை விடுவித்திருக்கின்றான் இரண்டாம் இராசராசன்!
பிரச்சனை அத்தோடு முடிந்ததா…? இல்லை! மீண்டும் தலையெடுத்தது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில். (இதற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பிரச்சனை எந்த நிலையில் இருந்தது என அறியக்கூடவில்லை.) மைசூரை ஆண்ட சிக்கதேவராயன் என்ற மன்னன், காவிரியின் குறுக்கே செயற்கை மலை(!) ஒன்றை உருவாக்கிக் காவிரிநீர் தமிழகத்துக்கு வரமுடியாமல் தடுக்கப் பார்த்திருக்கிறான். அப்போது தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சாகசி, மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் படையின் துணையோடு காவிரியில் உருவாக்கப்பட்ட அந்தச் செயற்கை மலையை அகற்றப் புறப்பட்டான். இப்படை, அங்குச் செல்லும் முன்பாகவே மைசூர் மாநிலத்தில் பெய்த பெருமழை, சிக்க(ல்)தேவராயன் உருவாக்கிய அந்தச் செயற்கை மலையை அடித்துச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. தமிழர்க்குத் துணைசெய்த அம் மாமழையைப் போற்றுவோம்!
கன்னடத்துக்கும் தமிழகத்துக்குமிடையே பேராறாக ஓடிப் பெருவளம் தந்த காவிரி, கொஞ்சங்கொஞ்சமாய்ப் பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்ததை மேற்கண்ட வரலாறுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் இப்பிரச்சனை மேலும் தீவிரமடையத் தொடங்கிற்று. கருணையற்ற கன்னடஅரசு காவிரியின் குறுக்கே பல அணைகளைக் கட்டித் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரைத் தடைசெய்து, நம் காவிரிடெல்டா விவசாயிகளைக் கண்ணீரில் நீந்தச்செய்து வருவது நாமறிந்ததே.
இமயத்தில் புலிச்சின்னம் பொறித்த இணையற்ற மாவீரன் கரிகாலனின் வளநாட்டில் பிறந்து,
”மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனும் நன்மொழிக்கிணங்க, ஊருக்கே உண்டிகொடுத்து உயிர்கொடுத்தச் சோழநாட்டு விவசாயிகள் இன்று தமக்கே உணவின்றித் தவிப்பதும், வேளாண்மை செய்யவியலா விரக்தியில் அவர்கள் தற்கொலைசெய்து மரிப்பதும்…அந்தோ! காணச் சகியாத கலியின் கொடுமைகள்!
இது ஒருபுறமிருக்க, காய்தல் உவத்தலின்றி அனைத்து மாநிலங்களிடமும் நடுநிலையோடு நடந்துகொள்ளவேண்டிய நடுவணரசோ, அரசியல் சுயலாபத்திற்காகக் கன்னடத்தைப் பகைத்துக்கொள்ள பயந்து பதுங்குகின்றது. உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்டுத் தரும் தீர்ப்புகளையோ கன்னடம் துச்சமெனத் தூக்கியெறிகின்றது. ’தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்’ என்றான் பாரதி. ’தமிழகத்துக் காவிரிநீரைக் கருநாடகம் வவ்வும்’ என்று அதனை மாற்றிப் பாடவேண்டிய அவலநிலை நமக்கு இப்போது நேர்ந்திருக்கின்றது.
சங்கடமான இத்தருணத்தில் தமிழகஅரசு செய்யவேண்டியது என்ன?
தமிழகத்தில் விவசாயம் தழைக்கவும், விவசாயிகள் பிழைக்கவும், தமிழக அரசு தன்னுடைய செயலற்ற ’கோமா’ நிலையிலிருந்து வேகமாய் விடுபட்டு, தமிழகத்துக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய காவிரிநீருக்காக உரிமைக்குரல் எழுப்புவதும், நீதி கிடைக்கும்வரைத் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதும் அவசியம்!
எதிர்பாராத காரணங்களினால் ஆட்சியின் ’தலைமை’ப் பொறுப்பிலிருப்போர் செயலிழக்கும் சூழலில், மக்களைக் காக்கவேண்டிய கடப்பாடு தலைமையின்கீழ் இயங்கும் ’கரைவேட்டிகளுக்கு’ (அமைச்சர்களுக்கு) இருக்கிறது. அக்கரைவேட்டிகள் வையத்தை வாழ்விக்கும் விவசாயிகள் நலனில் அக்கறைகாட்டாது, ’தலைமை’யின் நிலைமை குறித்தே அல்லும் பகலும் கவலைகொள்வதும், தமக்கான அரசியற் கடன்களை இடமறிந்து, காலமறிந்து நேர்த்தியாய்ச் செய்வதைவிடுத்து, (ஆலயங்களில்) ’நேர்த்திக் கடன்’ செலுத்துவதிலேயே தம் பொன்னான நேரத்தைக் கொன்னே கழிப்பதும் கடுங் கண்டனத்துக்குரியது!
இது நிற்க. நம் உரிமைகளுக்காக நாம் போராடும் அதே வேளையில், நம் கடமைகளையும் சரிவரச் செய்தல் அவசியமன்றோ?
என்ன கடமைகள் அவை?
பாழ்பட்டுவரும் காவிரியையும், அதையொத்த பிற தமிழக ஆறுகளையும் ஒழுங்காகத் தூர்வாரிப் பராமரிப்பதும், வெள்ளக் காலங்களில் கிடைக்கின்ற அதிகப்படியான நீரை, நீர்நிலைகளில் பாதுகாப்பாய்த் தேக்கிவைப்பதும், ஆற்றுநீரில் ஆலைக்கழிவுகள் கலந்து அதனை நஞ்சாக மாற்றுவதைத் தடுப்பதும், ஆறுகள் வறண்டிருக்கும் காலங்களில் அங்கே மணலை அள்ளுவது, குடியிருப்புக்களை உருவாக்குவது போன்ற முறைகேடுகளைத் தவிர்ப்பதும் காலந்தாழ்த்தாது நாம் ஆற்றவேண்டிய அருங்கடமைகளாகும். ஆறுகளும் ஏரிகளும் சரியாகப் பராமரிக்கப்படாததாலன்றோ சென்ற ஆண்டு நம் செந்தமிழ்நாட்டுக்கு ’வாராதுபோல் வந்த மாமழை’ வடதமிழகத்தையே தண்ணீரிலும் கண்ணீரிலும் மூழ்கடித்தது!
பண்டைச் சோழர்கள் காவிரிப் பேராற்றைத் தக்கமுறையில் பேணி, கரையெடுத்துக் காத்ததாலேயே அது சோழநாட்டை சோற்றுப் பஞ்சமற்ற வளநாடாக்கியது என்பதை நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டும்!
காவிரி புரக்கும் நாடாய்ச் சோழவளநாடு பீடுநடை போட்டதைப் பண்டை இலக்கியங்கள் ஐயத்திற்கிடமின்றி நமக்கு அறியத்தருகின்றன. ஆயிரங்கலம் நெல்விளைத்த வியன்கழனிகளும், திடர்தோறும் உயர்ந்துநின்ற நெற்கூடுகளும், சோறுவடித்த கொழுங்கஞ்சி ஆறாய்ப் பெருகியோடிய அகன்ற தெருக்களும், வான்பொய்ப்பினும் தான்பொய்யாது ஓடிய காவிரியின் கடும்புனல் வெள்ளமும், அப்புதுப்புனலில் நீந்திக்களித்த மக்களின் ஆரவாரமும் நம் நெஞ்சைவிட்டகலா அற்புதக் காட்சிகள்!
அப்பொற்காலம் நம் தமிழர்க்கு மீண்டு(ம்) வாராதோ?
(முற்றும்)
*****
படத்துக்கு நன்றி: http://www.mapsofindia.com/my-india/cities/cauvery-river-water-dispute
“கொள்ளைபுண் ணாக்கை கொடுக்கின்றான், கீதையில்
முள்ளும் மலரான மாலவன் ;-எள்ளினுள்
எண்ணையாய் ஏளிடும், ஏகாந்த வாத்சல்ய,
கண்ணனை நெஞ்சே கருது “….கிரேசி மோகன்….!
இழுபறிவைத்தியம்
இன்னம்பூரான்
14 11 2016

கலோனிய அரசு கெடுபிடிகள் பல காட்டினாலும், திலகரின், காந்திஜியின், பாரதியாரின் எழுத்துரிமையையும், பேச்சுரிமையையும் முச்சூடும் பறிக்கவில்லை. தடா போட்டுப் பார்த்ததுடன் சரி. காந்திஜியுடன் வைஸ்ராய் இர்வின் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். நீதித்துறை தன் பெருமையைக் காத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் என்பார்கள். ஆனால், மதராஸ் ஹைகோர்ட்டில் ஒரு ஜட்ஜை வழக்கறிஞர் ஒருவர் நாய் என்று பொருள்பட நகைத்தார். சிரித்துக்கொண்டு விட்டு விட்டார்கள். ஏனெனில், அது பூடகமான நகைச்சுவையாக இருந்தது. சினம்பொங்க, ஒரு ஜட்ஜ் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா?’ என்று வினவ, பழம் தின்னிக் கொட்டை போட்ட வக்கீல் ஐயா, ‘ஆஹா! தெரியுமே! ஒரு ஒல்லிப்பிச்சான் [puisne] ஜட்ஜிடம் பேசுகிறேன்.’ என்றார். எல்லாரும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள், ஜட்ஜ் உள்பட.
அத்தகைய அலாதி உறவு எல்லாம், சுதந்திர இந்தியாவில் பறிபோகத் தொடங்கின, கொஞ்சம், கொஞ்சமாக.
எனக்கு ஒரு கெட்ட வழக்கம். இங்கிலாந்தில் படித்து வந்த காலகட்டத்தில் உயர் நீதிமன்ற (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) தீர்ப்புகளைத் தினம்தோறும் படிப்பேன். கறாரில் மையக்கரு நகைச்சுவையிலும், அலட்டிக்கொண்ட தீர்ப்பில் தர்மமும் இருக்கும். எல்லாம் பாடமே. இந்திய அரசியல் சாஸனத்தில் நீதித்துறைக்கு மவுசு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பீல் என்ற சட்ட நடவடிக்கை இருப்பதே, நீதிபதிகள் தெய்வாம்சம் கொண்டவர்கள் அல்ல, ஒருவர் அளித்த தீர்ப்பை மேலா ரத்து செய்யலாம் என்பதால், தீர்ப்புகளை விமர்சனத்துக்கு உட்பட்டவை என்பதை குறிக்கிறது. அதே விமர்சனத்தை மக்களில் ஒருவர் செய்வது வரவேற்கபடுவதில்லை. அப்படிச் செய்தாலும், கவனமாக நீதிபதியைக் கொஞ்சம் வெளிப்படையாக விமர்சித்தால் கோர்ட்டை அவமதித்தாக எடுத்துக்கொண்டு, ஆறு மாதம் ஜெயிலில் போடலாம்.
அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்திவாரமே சற்றே தடுமாற்றம்தான். வில்மாட், வில்மாட் என்று ஒரு ஜட்ஜ் 1765இல் ‘கோர்ட்டை அவமதிப்பது குற்றமே’ என்று ஒரு நிருபர் மேல் எழுந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் எழுதி இருந்தாலும், டெக்னில் காரணங்களால். அது குறைப்பிரசவம் ஆனது; வில்மாட்டின் மைந்தர் காலம் சென்ற தந்தையின் படைப்புகளைப் பதிவு செய்தபோது, சட்டத்தை அணுகாத அந்தக் கருத்து ஒரு மரபு ஆகிவிட்டது. அப்புறம் என்ன? நீதி அரசர்கள், நீதி மன்னர்களானார்கள், சில இடங்களில் நீதி தேவர்களும் ஆனார்கள் – இந்தியாவில். இங்கிலாந்தில் மரபைப் பதிவுசெய்து விட்டு, காமன் சென்ஸ் படி நடந்து கொண்டார்கள். பொதுவாகச் சொன்னால், அங்கே நீதிபதிகள் அமரிக்கையாக இருந்தார்கள்.
மேல்நாட்டு ஊடகங்கள் எந்த உத்தமபுத்திரனையும் உச்சாணிக்கிளையில் அமர்த்தி மெய்கீர்த்தி பாடமாட்டார்கள். தடாலடியை எல்லாம் இறக்கி வைத்து வேப்பிலை அடிப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னால் [1985?] நீதிபதிகளின் தலைமை போன்ற டெம்பிள்டன் பிரபு, பிரபல வழக்கறிஞர்களும், நீதிபதிகளின்புடை சூழ, இந்தியா வந்திருந்தார். அப்போது, ‘ ஊடகங்களின் எழுத்துரிமை ‘கனம் கோர்ட்டாரை அவமதித்தால்..!?.’ என்ற பட்டிமன்றம் நடந்தது. அப்போது அவர் 1987இல் உலகெங்கும் பேசப்பட்ட ஸ்பைகேட்சர் புத்தகம் பற்றிய தீர்ப்பில், அந்நூலின் ஆசிரியர் பீட்டர் ரைட் வாக்கு மீறி அரசு ஒற்றர்களின் ரகசியங்களை (ஒரளவு லீக் ஆனவைதான்) பிரசுரம் செய்யக்கூடாது என்று தானும், இரு சக ஜட்ஜ்கள் மெஜாரிட்டி தீர்ப்புக் கொடுத்ததை ஊடகங்கள் பரிகசித்தன. மூவரின் படங்களை தலைகீழாக மாட்டி, ‘மூன்று முட்டாள்கள்’ என்ற தலைப்பை டைலி டெலிக்ராஃப் பிரசுரம் செய்தது. ஐயா அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தார். என்ன? அதைத் தன் வரவேற்பு அறையில் அலங்காரமாக மாட்டிவிட்டு, தினம் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்.
[தொடரும்]
***
-எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா
சர்க்கரைநோய் நோயல்ல எனச்சாற்றும் உரைகேட்பார்
சந்தோஷக் கடல்மூழ்கிச் சர்க்கரையை நினைந்திடுவார்
சர்க்கரைநோய் விளைவுபற்றிச் சரியாக விளங்காமல்
தாம்விரும்பும் சர்க்கரையைத் தனியாகச் சுவைத்துநிற்பார்!
உரைகள் பலகேட்டாலும் உளமதனில் இருத்தாவிடின்
விளைவு பலவந்தெம்மை வீழ்த்திவிடும் எனுமெண்ணம்
பலர்மனதில் பதியாமல் பாதிவழி நிற்பதுவே
நலனிழந்து போவதற்கு நற்சான்றாய் இருக்குதன்றோ !
நோய்க்கெல்லாம் தாயாகச் சர்க்கரைநோய் விளங்குதென
நாட்டிலுள்ள வைத்தியர்கள் நாளாந்தம் சொல்லுகிறார்
பேய்க்குணத்தால் இவையெதையும் எம்மனது ஏற்காமல்
வாய்க்கின்ற உணவையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்துவிடும்!
சமாதானம் பலசொல்லிச் சர்க்கரையை எடுத்திடுவார்
சலரோகம் அவரிடத்தில் சன்னதமே ஆடிநிற்கும்
சிலவேளை மருந்தெடுப்பார் பலவேளை அதைமறப்பார்
அதனாலே அவரின்பம் அத்தனையும் பறிகொடுப்பார்!
உடல்பருக்கும் உடல்மெலியும் உற்சாகம் குறைந்துவிடும்
நடைகூடத் தளர்ந்துவிடும் நடுக்கமும் வந்துநிற்கும்
இவையெல்லாம் இனிப்பென்னும் இம்சைதரும் விளைவாகும்
இன்சுலினை எடுத்தெடுத்து எல்லோரும் ஏங்கிநிற்பார்!
இனிப்புக் கண்டவிடமெல்லாம் இளித்துநிற்கக் கூடாது
தனித்துநின்று இனிப்பதனைச் சுவைத்துநிற்றல் கூடாது
மனம்விரும்பும் உணவுகளை வாயில்போடக் கூடாது
மருந்தோடு உடற்பயிற்சி மறந்துவிடல் கூடாது !
நேரங்கெட்ட நேரத்தில் நிறையவுண்ணக் கூடாது
நாருள்ள உணவுகளை நாம்மறக்கக் கூடாது ஊர்விட்டுச் சென்றாலும் உணவுண்ணும் முறையனைத்தும்
மாறாமல் இருப்பதற்கு மறந்துவிடக் கூடாது!
பச்சையாய்க் காய்கறிகள் பழவகைகள் எடுக்கவேணும்
இச்சையுடன் நாமவற்றை எப்பொழுதும் ஏற்கவேணும்
அச்சம்தரும் உணவுகளில் ஆசைகொள்ளல் தவிர்த்துவிட்டால்
அநேகம்பேர் நிம்மதியை அடைவதினைக் கண்டிடலாம்!
நாவிரும்பும் உணவுகளை நாமொதுக்க எண்ணிடுவோம்
நலன்விளைக்கும் உணவுகளை நாவேற்கச் செய்திடுவோம்
நோய்பற்றித் தெளிவுற்று நுடங்காது இருந்திடுவோம்
வாழ்நாளை மனமிருத்தி வாழ்ந்திடுவோம் நல்வழியில்!
மைசூர்பாகை மறந்துவிடு
மணக்குமல்வாவைத் தூக்கியெறி
கேசரிகிட்டவே போகாதே
கிறுகிறுப்புனக்கு வந்துவிடும்
எந்தலட்டையும் எடுக்காதே
வந்திடுமுனக்குச் சங்கடமே
இனிப்புமுறுக்கை எடுத்துவிடின்
தவித்துநிற்பாய் நோயாலே
சர்க்கரைப்பொங்கலை தவிர்த்துவிடு
சந்தோஷமுன்னைத் தேடிவரும்
இனிப்பைக்கண்டால் நாவூறும்
இவைகளனைத்தும் இடையூறே
இனிப்பைப்பற்றி நினையாமல்
இனிப்பாய்வாழ எண்ணிடுவோம்!
வருமுன்னர்க் காப்பதற்கு வழிகள்பல இருக்கிறது
வந்தபின்னர் எமைக்காக்கும் வழிகளுமே விரிகிறது
தினமும்நாம் நலன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்
தினமுமே எம்வாழ்வு தித்திப்பாய் இருக்குமன்றோ!
பவள சங்கரி
Thenkasi, Kasi Viswanathar temple- Tirunelveli disrict – Tamil Nadu


Tenkasi is a small town which is at a distance of 50 kms. from Tirunelveli and also has a railway station. The main deity Kasi Viswanathar , a huge Sivalingam which is wonderful and has exceptional grace. This is a swayambhu Lingam. At the background of the temple we could see the Podighai hills full of herbs and medicinal plants and picturesque view. Tenkasi is located at 8.97°N 77.3°E. It has an average elevation of 143 metres (469 ft) and it is surrounded by the western ghats in three sides. This temple has a magnificent tower that stands 180 feet tall . This temple is in Tiruvenlveli district of Tamilnadu and is 5 kms from Coutrallam This is the second highest gopuram in Tamil nadu. The Gopuram of the temple welcomes pilgrims with a pleasant cool breeze straight from the nearby Thirikooda Malai. Pandya kings were patrons of the temple. Each pillar of this temple is adorned with excellent sculptures of Gods and Godesses. Lord Siva’s consort is known as Ulgammal.
திருநெல்வேலி மாவட்டத்தில், 50 கி.மீ தொலைவில், கேரள நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வரும் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது தென்காசி, காசி விசுவநாதர் ஆலயம்.
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில், 700 ஆண்டுகளுக்கு முன்பு பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஆலயம் இது. 180 அடி உயரத்தில் அழகான கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இதன் கோபுரம் தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம். வடக்கே காசியிலுள்ள விசுவநாதரை தரிசித்த பலனை இங்குள்ள ஈசுவரனை தரிசிப்பதன் மூலம் பெறலாம் என்ற நம்பிக்கை பரவலாக உண்டு. இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் . இத்திருத்தலத்தில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை . குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் , மஹாவிஷ்ணு, கம்பீரமான காளி தேவி போன்ற அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.