தமிழ்த்தேனீ

இதோ  பாருங்க  எறும்பு  நிறைய வர ஆரம்பிச்சிடிச்சு,  முதல்லே போயி  எறும்புப் பவுடர் வாங்கிண்டு வந்து  போடணும் ,இல்லேன்னா  எல்லா சாப்பாட்டுப் பொருள்ளேயும்  எறும்பு வந்துடும் ,  அப்புறம் நாம சாப்படற  காப்பியிலேயும் மிதக்கும், ஏன்னா சர்க்கரையிலே எறும்பு இருக்கும், பால்லே எறும்பு வரும், அதைக் கவனிக்காம நாம காப்பி கலந்து  குடிப்போம் , அப்போ காப்பியிலே எறும்பு வரும் , சாப்படவும் முடியாது கீழே கொட்டவும் மனசு வராது  என்றாள் காமாட்சி.

ஆமாம் காமாக்‌ஷி   மழைக்காலம் வருது , நாம வேணா  மழைக்காலத்துக்கு என்ன சேமிச்சு வெச்சுக்கணும்னு தெரியாம இருப்போம், ஆனா  நம்மவிட அறிவு குறைவுன்னு நாம சொல்றோமே  அந்த ஜீவராசி எல்லாம் புத்திசாலியா இருக்கு . எங்கேயாவது  உணவுப் பொருளைப் பார்த்தால்  உடனே  தன்னோட இருக்கற   எல்லாத்துக்கும் அதைச் சொல்லி  எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துடுது.

எப்பிடி எல்லாத்துக்கும் புரியவைக்குதுன்னே  தெரியலே.  வெய்யில் காலம் முடியறதுக்குள்ளே  தங்களோட சக்திக்கும் மீறி  தங்களோட உடல் பலத்துக்கும் அதிகமான உணவுப் பொருட்களை  தங்களோட வாயாலே கவ்வி  முதுகிலே சுமந்துண்டு போயி  சேமிச்சு வெச்சிக்கும் என்றார் ஏகாம்பரம்.  அதெல்லாம் சரி,  நாட்டு மருந்துக் கடைக்கு போயி எறும்பு பௌவுடர்ன்னு ஒண்ணு விக்கறான், அதை வாங்கிண்டு வந்து வீட்டைச் சுத்தி  போட்டா  எறும்பு வராது  . முதல்லே போயி அதை வாங்கிட்டு வந்து வீட்டைச் சுத்திப் போடுங்க  என்றாள் காமாட்சி  .

நாட்டு மருந்துக்  கடைக்குப் போயி  எறும்புப் பௌடர் இருக்கானு கேட்டார் ஏகாம்பரம். சார்  ஸ்டாக் தீந்து போச்சு, நீங்க ரெண்டு நாளைக்கு அப்புறம் வாங்க என்றார். என்னா வெலை சார் என்றார் கடைக்காரரிடம் .    சார்  எல்லாக் கடையிலேயும்  ஒரு பாக்கட்  10 ரூபாதான் சார் . ஆனா இப்பவே சொல்லிட்டேன்  நம்ம கடையிலே  ஸ்பெஷல்  அதுனாலே  15 ரூபா ஆவும் என்றார் கடைக்காரர்.

அப்பிடி என்னா ஸ்பெஷல்  உங்க கடையிலே  என்ற ஏகாம்பரத்திடம், சார் இப்போ சொன்னா உங்களுக்கு புரியாது , ரெண்டு நாளைக்கு அப்புறம் வாங்க  எடுத்து வைக்கிறேன் என்றார்  கடைக்காரர்.

 இரண்டு நாட்கள் கழித்து  கடைக்கு சென்று அந்த  ஸ்பெஷல்  எறும்பு பவுடரை  ஒரு பாக்கெட்  வாங்கிக் கொண்டு வந்து வீட்டைச் சுற்றிப் போட்டார் ஏகாம்பரம். அப்போதும் எறும்பு வருவது குறையவில்லை.

கடைக்காரரிடம் சென்று என்னா ஸ்பெஷல்  எறும்பு மருந்து  அப்பிடீன்னீங்க, இன்னமும் எறும்பு  வந்துகிட்டே இருக்குதே  என்ற ஏகாம்பரத்தைப் பார்த்து  சார் உங்களுக்காக  ரெண்டு நாள்  கஷ்டப்பட்டு  நிறைய எறும்பெல்லாம் பிடிச்சு  அதைக் காய வெச்சு  பொடி செஞ்சு குடுத்திருக்கேன்  அதுனாலேதான்  ஐந்து ரூபாய் அதிகம் வாங்கினேன் என்றார் கடைக்காரர்.

அதெல்லாம் சரி.   நான் அந்த எறும்பு பவுடரை  எடுத்துகிட்டுப் போயி  வீட்டைச் சுத்திப் போட்டேனே  என்றார் அவர்.     எப்பிடிப் போட்டீங்க  என்றார் கடைக்காரர் .

என்னாங்க இது கூட எனக்குத் தெரியாதா.  அந்தப் பொட்டலத்தை கையிலே வெச்சுகிட்டு  வீட்டு முன்னாலே  நின்னுகிட்டு  மூணு தரம் வலப்புறமாவும் மூணு தரம் இடப்புறமாவும் சுத்திட்டு  ,அதுவும் போதாததுக்கு  ஒரு தடவை வீட்டை கிழக்குலேருந்து ஆரம்பிச்சு   வலமா வந்து   நல்லா  சுத்திட்டு  அதுலே து துன்னு   ரெண்டு வாட்டி  துப்பிட்டு   அதுக்கு அப்புறம்  முச்சந்தியிலே   கொண்டு போயி போட்டுட்டு  திரும்பிப் பாக்காம வந்துட்டேனே என்றார்   ஏகாம்பரம்.

சார்   எலி மருந்து வேணும்னாக் கூட  சொல்லுங்க  ஸ்பெஷல் எலி மருந்து தரேன் என்றார் கடைக்காரர்.

இப்படி இருக்கிறது நாடு. மொத்தத்தில்   பெருச்சாளிகளுக்கும் , எலிகளுக்கும் , எறும்புகளுக்கும்  மட்டுமே  கொண்டாட்டமாய் இருக்கிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க