உமாஸ்ரீ

எழுத்தாளர் ரேவதி பாலுவிடம் நேர்காணல்

எல்லோரும் சிறுகதை எழுதலாம். ஆனால் ஒரு நல்ல  சிறுகதை எழுதுவது சுலபமல்ல.  எப்படி ஒரு ஜாங்கிரியைச் சிலரால்தான் நன்றாக உருவாக்க முடியுமோ அதுபோல் சிலரால்தான் நல்ல சிறுகதையை எழுத முடியும்.

revathy-balu-photo-3எழுத்தாளர் ரேவதி பாலு ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். சிறந்த சிறுகதைகளை எழுதிக் கொண்டிருப்பவர். அவர் கதைகள் பல பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் வந்து கொண்டிருக்கும்.

திருமதி ரேவதி பாலு பிரபல எழுத்தாளர் ரசவாதியின் மகள்.    ரசவாதியின்  “ ”ஆதார ஸ்ருதி”  மிகவும் சுவாரஸ்யமான  நாவல். தந்தையைப் போலவே மகளும்  நல்ல எழுத்தாளர். கம்பன் வீட்டு அம்மி குழவியும் கவிபாடும் என்பதை நிரூபித்து விட்டார். சுருங்கச் சொல்லவேண்டுமானால்

புல்லாங்குழல் இன்னிசைக்கு மயங்காதவர் யார்?
மழலை மிழற்றலுக்கு மகிழ்ச்சியடையாதவர் யார்?
பூசும் சந்தனம் நறுமத்திற்கு ஆனந்தமடையாதவர் யார்?
ரேவதி பாலு படைப்புகளைப் படித்து களிப்படையாதவர் யார்?
நான்குக்கும் வசப்படுவதைத் தடுப்பார் யார்? 

revathy-baluநவம்பர் 2016 கலைமகள் இதழில் அவர் எழுதிய “சொல்லாமலே“ என்னும் சிறுகதை பிரசுரம் ஆகியிருக்கிறது. மனைவியை இழந்த மாமாவைப் பார்க்கப் போன வாணி, பக்கத்து போர்ஷனில் இருக்கும் பரிமளாவுக்கு அவரிடம்  இருக்கும் தோழைமையைக் கண்டு வியக்கிறாள். விடைபெறும்போது, ”நா ஒங்களை ’மாமீ’  என்று கூப்பிடவா?”என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றி அழுத்திவிட்டுப் பேருந்து நிலையத்தை நோக்கி மனநிறைவோடு நடக்க ஆரம்பித்தாள். திருமதி ரேவதி பாலு சொல்ல வந்ததைச் ’ சொல்லாமலே’ சொல்லுகிறார்.

அவருடையை  நேர்காணலைப் பார்ப்போம்.

  1. தங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவும்.

நான் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவள். வசிப்பது சென்னையில். ஒரு மகன், ஒரு மகள். கணவரும் சொந்தத் தொழில் புரிந்து ஓய்வுபெற்றவர்.

  1. தாங்கள் எப்பொழுதிலிருந்து எழுதுகிறீர்கள்? தாங்கள் எழுதுவதற்குப் பிரபல எழுத்தாளரான தங்கள் தந்தை கொடுத்த ஊக்கம்தான் ஒரு காரணமா?

revathy41974இல் ”ஜூலி” என்கிற இந்திப் படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் திரு. சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த திணமணிக்கதிர் பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அப்போது எனக்கு  21 வயது. அதைப் பிரசுரித்ததோடில்லாமல் என்னைப் பாராட்டி “உங்களுக்கு மிகநன்றாக எழுத வருகிறது தொடர்ந்து எழுதுங்கள்!” என்று திரு. சாவி  அவர்கள் எனக்கு எழுதிய கடிதமே (இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்), என்னை எழுத்தாளராக மாற்றியது என்று சொல்லலாம். ஆனால் உடனே தொடர்ந்து எழுத ஆரம்பிக்கவில்லை.

  1.  தாங்கள் முதலில் எழுதிய கதை எது?

1983இல் என்று நினைக்கிறேன். “கொழுக்கவோ இளைக்கவோ!“ என்கிற என் முதல் சிறுகதை “மங்கையர் மலர்“ மாத இதழில் பிரசுரமாயிற்று.

  1. தாங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

என்னைப் பாதிக்கும் விஷயங்களை, என் உணர்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.

  1. படைப்புகளாக மாறிய சில அனுபவங்களைப் பற்றி…

எல்லாப் படைப்புகளிலும் நம் அனுபவங்கள் இருக்கும். முதலாவது நமது நேரடி அனுபவங்கள், இரண்டாவது நாம் கேள்விப்படுவது. இவைகளோடு சரியான விகிதத்தில் கற்பனையும் கலந்து ஒரு ஆரம்பம், ஒரு முடிவு என்று தீர்மானித்து எழுதும்போது அது ஒரு சிறுகதையாக மாறுகிறது.

  1. தங்களுடைய ஆதர்ச எழுத்தாளர் யார்? (தங்களுடைய தந்தையைத் தவிர)

யாரைச் சொல்வது? யாரைச் சொல்லாமல் விடுவது? தந்தை எழுத்தாளராக இருந்ததால் சிறுவயதிலிருந்தே புத்தகங்களோடேயே வளர்ந்த அனுபவத்தில் நிறைய மூத்த எழுத்தாளர்கள், தி. ஜானகிராமன், லா.ச.ரா., ஜெயகாந்தன், படைப்புகளிலிருந்து, சம காலத்தவர்களான சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, மாலன் என்று எல்லோருடைய படைப்புகளையும் ரசித்துப்படித்து உருவானவள்தான் நான்.

  1. தங்களுக்கு மிகவும் பிடித்த கதைப் புத்தகங்கள் நான்கை கூறவும்.
    1. சில நேரங்களில் சில மனிதர்கள் 2. தரையில் இறங்கும் விமானங்கள், 3. அலையோசை 4. பாற்கடல்.தாங்கள் எழுதிய நூல்கள்/கதைகள் வெளிவந்த பத்திரிகைகள் பற்றிக் கூறவும்.

அநேகமாக எல்லா தமிழ் வார/ மாதப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. சமீபத்தில் அமுதசுரபி தீபாவளி மலர், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர், ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர், கலைமகள் தீபாவளி சிறப்பிதழ் போன்றவற்றில் வெளியாகியுள்ளன.

   8. தங்கள் படைப்புகளில் தங்களுக்கு மிகவும் பிடித்தது?     

   நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சில குறுநாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் (பொதிகை – சென்னைத் தொலைகாட்சியில் – என்னுடைய நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளன.) தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன. எழுத்துலகத்திலும் எல்லாத் துறைகளிலும் தடம்பதித்துப் பல பரிசுகளைப் பெற்றபோதிலும் நான் மிகவும் விரும்பி எழுதுவது ‘சிறுகதைகள்’ தான். அந்த விதத்தில் எனக்கு  மிகவும் பிடித்த சிறுகதை ‘மெளனமாக ஒரு ராகம்.’

     9. எழுத விரும்புவோருக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை/யோசனை ஏதாவது…

திரு. சுஜாதா அவர்கள் சொல்லுவார்கள்…

நாம் பார்க்கும் எல்லாவற்றிற்குள்ளும் ஒரு கதை இருக்கிறது” என்று.

திரு. லா.ச.ரா அவர்கள் சொல்லுவார்கள்…

எழுதுபவர்களிடம் எப்போதும் ஒரு ‘தேடல்அடங்காத தாகமாக இருக்க வேண்டும் என்று.

என் தந்தை கூறுவார்…

“நிறைய வேறுபட்ட எழுத்துக்களை படிக்கவேண்டும் என்று.

இவர்களையெல்லாம் படித்து வளர்ந்த நானும் இதையே கூற விரும்புகிறேன். இவற்றோடு தொடர்ந்த முயற்சியும் இருந்தால் நிச்சயமாக எல்லோராலும் எழுதமுடியும்.

நேர்காணலில் அவர் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றினால் எழுத்தை ஆளுமை செய்து சீரிய கதைகளை ஒருவரால் எழுதமுடியும்.

திருமதி ரேவதி பாலு சீரடி சாய்பாபாவிடம் அகண்ட பக்தி கொண்டவர். எல்லாம் வல்ல சீரடி சாய்பாபா அவருக்கு நீண்ட ஆயுளையும்,  நல்ல ஆரோக்கியத்தையும், வீட்டில் இல்லை என்ற குறை இல்லாமலேயும் இருக்க அருள்வாராக. திருமதி ரேவதி பாலு சாய்ராம் அருளால் ஓய்வுபெறாமல் மேலும் பல படைப்புகளைப் படைத்துப் புகழ்பெற வாழ்த்துக்கள்!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *