-மேகலா இராமமூர்த்தி

காவிரிப்புனல் தமிழகத்தைப் பொன்கொழிக்கச் செய்தது கன்னடரின் மனத்தில் அனலை மூட்டியது போலும்! நம் மன்னர்களின் கை ஓங்கியிருந்த போதெல்லாம் ஒடுங்கியிருந்த அவர்களின் நரித்தனம், நம் பிடி சற்றுத் தளர்ந்தபோதெல்லாம் நர்த்தனம் ஆடியிருக்கின்றது!

மைசூரை ஆண்ட போசள மன்னனான முதலாம் நரசிம்மன், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மைசூருக்கருகே காவிரியில் அணைகட்டி அதன் சோழமண்டலப் பாசனத்தைத் தடுக்க முயன்றிருக்கின்றான். பிற்காலச் சோழர்களின் ஆட்சி நம் தமிழகத்தில் மாட்சியோடு நடைபெற்றுக்கொண்டிருந்த காலமது. அப்போது ஆண்டுகொண்டிருந்த இரண்டாம் குலோத்துங்கன், தன் மகனான இரண்டாம் இராசராசனிடம் ஓலை தந்து, அவனைப் போசள மன்னனிடம் அனுப்பி, அணை கட்டும் முயற்சியைக் கைவிடும்படிக் கேட்டிருக்கின்றான். போசள மன்னன் அதற்கு இணங்க மறுக்கவே, மறவர்படையோடு சென்று போசளன் கட்டிய அணையை உடைத்தெறிந்து காவிரியை விடுவித்திருக்கின்றான் இரண்டாம் இராசராசன்!

பிரச்சனை அத்தோடு முடிந்ததா…? இல்லை! மீண்டும் தலையெடுத்தது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில். (இதற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பிரச்சனை எந்த நிலையில் இருந்தது என அறியக்கூடவில்லை.) மைசூரை ஆண்ட சிக்கதேவராயன் என்ற மன்னன், காவிரியின் குறுக்கே செயற்கை மலை(!) ஒன்றை உருவாக்கிக் காவிரிநீர் தமிழகத்துக்கு வரமுடியாமல் தடுக்கப் பார்த்திருக்கிறான். அப்போது தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சாகசி, மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் படையின் துணையோடு காவிரியில் உருவாக்கப்பட்ட அந்தச் செயற்கை மலையை அகற்றப் புறப்பட்டான். இப்படை, அங்குச் செல்லும் முன்பாகவே மைசூர் மாநிலத்தில் பெய்த பெருமழை, சிக்க(ல்)தேவராயன் உருவாக்கிய அந்தச் செயற்கை மலையை அடித்துச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. தமிழர்க்குத் துணைசெய்த அம் மாமழையைப் போற்றுவோம்!

கன்னடத்துக்கும் தமிழகத்துக்குமிடையே பேராறாக ஓடிப் பெருவளம் தந்த காவிரி, கொஞ்சங்கொஞ்சமாய்ப் பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்ததை மேற்கண்ட வரலாறுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

cauvery-river-water-disputeஇருபதாம் நூற்றாண்டில் இப்பிரச்சனை மேலும் தீவிரமடையத் தொடங்கிற்று. கருணையற்ற கன்னடஅரசு காவிரியின் குறுக்கே பல அணைகளைக் கட்டித் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரைத் தடைசெய்து, நம் காவிரிடெல்டா விவசாயிகளைக் கண்ணீரில் நீந்தச்செய்து வருவது நாமறிந்ததே.

இமயத்தில் புலிச்சின்னம் பொறித்த இணையற்ற மாவீரன் கரிகாலனின் வளநாட்டில் பிறந்து,

”மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
எனும் நன்மொழிக்கிணங்க, ஊருக்கே உண்டிகொடுத்து உயிர்கொடுத்தச் சோழநாட்டு விவசாயிகள் இன்று தமக்கே உணவின்றித் தவிப்பதும், வேளாண்மை செய்யவியலா விரக்தியில் அவர்கள் தற்கொலைசெய்து மரிப்பதும்…அந்தோ! காணச் சகியாத கலியின் கொடுமைகள்!

இது ஒருபுறமிருக்க, காய்தல் உவத்தலின்றி அனைத்து மாநிலங்களிடமும் நடுநிலையோடு நடந்துகொள்ளவேண்டிய நடுவணரசோ, அரசியல் சுயலாபத்திற்காகக் கன்னடத்தைப் பகைத்துக்கொள்ள பயந்து பதுங்குகின்றது. உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்டுத் தரும் தீர்ப்புகளையோ கன்னடம் துச்சமெனத் தூக்கியெறிகின்றது. ’தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்’ என்றான் பாரதி. ’தமிழகத்துக் காவிரிநீரைக் கருநாடகம் வவ்வும்’ என்று அதனை மாற்றிப் பாடவேண்டிய அவலநிலை நமக்கு இப்போது நேர்ந்திருக்கின்றது.

சங்கடமான இத்தருணத்தில் தமிழகஅரசு செய்யவேண்டியது என்ன?

தமிழகத்தில் விவசாயம் தழைக்கவும், விவசாயிகள் பிழைக்கவும், தமிழக அரசு தன்னுடைய செயலற்ற ’கோமா’ நிலையிலிருந்து வேகமாய் விடுபட்டு, தமிழகத்துக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய காவிரிநீருக்காக உரிமைக்குரல் எழுப்புவதும், நீதி கிடைக்கும்வரைத் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதும் அவசியம்!

எதிர்பாராத காரணங்களினால் ஆட்சியின் ’தலைமை’ப் பொறுப்பிலிருப்போர் செயலிழக்கும் சூழலில், மக்களைக் காக்கவேண்டிய கடப்பாடு தலைமையின்கீழ் இயங்கும் ’கரைவேட்டிகளுக்கு’ (அமைச்சர்களுக்கு) இருக்கிறது. அக்கரைவேட்டிகள் வையத்தை வாழ்விக்கும் விவசாயிகள் நலனில் அக்கறைகாட்டாது, ’தலைமை’யின் நிலைமை குறித்தே அல்லும் பகலும் கவலைகொள்வதும், தமக்கான அரசியற் கடன்களை இடமறிந்து, காலமறிந்து நேர்த்தியாய்ச் செய்வதைவிடுத்து, (ஆலயங்களில்) ’நேர்த்திக் கடன்’ செலுத்துவதிலேயே தம் பொன்னான நேரத்தைக் கொன்னே கழிப்பதும் கடுங் கண்டனத்துக்குரியது!

இது நிற்க. நம் உரிமைகளுக்காக நாம் போராடும் அதே வேளையில், நம் கடமைகளையும் சரிவரச் செய்தல் அவசியமன்றோ?

என்ன கடமைகள் அவை?

பாழ்பட்டுவரும் காவிரியையும், அதையொத்த பிற தமிழக ஆறுகளையும் ஒழுங்காகத் தூர்வாரிப் பராமரிப்பதும், வெள்ளக் காலங்களில் கிடைக்கின்ற அதிகப்படியான நீரை, நீர்நிலைகளில் பாதுகாப்பாய்த் தேக்கிவைப்பதும், ஆற்றுநீரில் ஆலைக்கழிவுகள் கலந்து அதனை நஞ்சாக மாற்றுவதைத் தடுப்பதும், ஆறுகள் வறண்டிருக்கும் காலங்களில் அங்கே மணலை அள்ளுவது, குடியிருப்புக்களை உருவாக்குவது போன்ற முறைகேடுகளைத் தவிர்ப்பதும் காலந்தாழ்த்தாது நாம் ஆற்றவேண்டிய அருங்கடமைகளாகும். ஆறுகளும் ஏரிகளும் சரியாகப் பராமரிக்கப்படாததாலன்றோ சென்ற ஆண்டு நம் செந்தமிழ்நாட்டுக்கு ’வாராதுபோல் வந்த மாமழை’ வடதமிழகத்தையே தண்ணீரிலும் கண்ணீரிலும் மூழ்கடித்தது!  

பண்டைச் சோழர்கள் காவிரிப் பேராற்றைத் தக்கமுறையில் பேணி, கரையெடுத்துக் காத்ததாலேயே அது சோழநாட்டை சோற்றுப் பஞ்சமற்ற வளநாடாக்கியது என்பதை நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டும்!

காவிரி புரக்கும் நாடாய்ச் சோழவளநாடு பீடுநடை போட்டதைப் பண்டை இலக்கியங்கள் ஐயத்திற்கிடமின்றி நமக்கு அறியத்தருகின்றன. ஆயிரங்கலம் நெல்விளைத்த வியன்கழனிகளும், திடர்தோறும் உயர்ந்துநின்ற நெற்கூடுகளும், சோறுவடித்த கொழுங்கஞ்சி ஆறாய்ப் பெருகியோடிய அகன்ற தெருக்களும், வான்பொய்ப்பினும் தான்பொய்யாது ஓடிய காவிரியின் கடும்புனல் வெள்ளமும், அப்புதுப்புனலில் நீந்திக்களித்த மக்களின் ஆரவாரமும் நம் நெஞ்சைவிட்டகலா அற்புதக் காட்சிகள்!

அப்பொற்காலம் நம் தமிழர்க்கு மீண்டு(ம்) வாராதோ?  

(முற்றும்)

 

*****

படத்துக்கு நன்றி: http://www.mapsofindia.com/my-india/cities/cauvery-river-water-dispute

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *