Year: 2016

  • சுட்டும் விழிச்சுடர்! – மூட நம்பிக்கை

    பவள சங்கரி

    சமீபத்தில் ஆன்மீகம் – தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து பட்டினி போட்டு கொன்ற சம்பவம் சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    father

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் உயிர் நீத்துள்ளார். சமண சமயத்தைச் சேர்ந்த சிறுமி ஆராதனா சம்தரியா. சமயக் கடமை என்ற பெயரில் தண்ணீர் மட்டுமே குடித்து 68 நாட்கள் தொடர் விரதம் இருந்து வந்துள்ளார். விரதம் முடிந்ததைக் குறிக்கும் வகையில் ஆராதனாவின் பெற்றோர் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துச்சென்று ‘பாரானா’ என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில், தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மராவ் கவுட், தலைமை விருந்தினராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆராதனா, சென்ற ஆண்டிலும் இதேபோன்று 68 நாள் விரதம் மேற்கொண்டதை சிறார் உரிமை அமைப்பு மூலம் அறியமுடிகிறது. செகந்திராபாத்தில் நகைக்கடை உரிமையாளரின் மகளான, எட்டாம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் இப்படிப்பட்ட ஒரு விரதத்தை மேற்கொண்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. விரதம் முடிந்து உடல் பலகீனமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அக்டோபர் 3ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.

    இந்திய மக்கள் தொகையின் 0.4 விழுக்காடு உள்ள சமணர்கள் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள். சமணர்களின் முதன்மையான வழிபடு தெய்வங்கள் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் ஆவர். தீர்த்தங்கரர் என்பவர் ‘அருகபதவி’ அதாவது பேரின்ப நிலையை அடைந்தவர். தீர்த்தங்கரரை அருகர் என்று அழைக்கிறார்கள். அருகரை வணங்குபவர் ஆருகதர் என்று அழைக்கப்பட்டனர். 24ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் , மற்றும் இந்திரன், யக்ஷி, ஜ்வாலாமாலினி, சாஸ்தா போன்ற சிறு தெய்வங்களையும் சமணர்கள் வழிபடுகின்றனர். தீர்த்தங்கரர்கள் மனிதர்களாகப் பிறந்து, வாழ்ந்து உயர்நிலையை அடைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜினகாஞ்சி,வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள அரந்தை, திறக்கோல், திருப்பாண்மலை, ஈரோடு அருகில் விசயபுரி போன்ற இடங்களில் 60க்கும் மேற்பட்ட பழைமையான சமணக் கோயில்கள் உள்ளன.

    jain11

    தீர்த்தங்கரர் என்றால் புலன்களையும் கர்மங்களையும் வென்றவர்கள் என்று பொருள். மனிதர்கள் முக்தி அடைவதற்கான வழியைக் காட்டியவர்கள் தீர்த்தங்கரர்கள். கடவுள் நிலை ஒன்றே என்றாலும் கடவுளர்கள் பலர். மனிதர்கள் அனைவருமே கடவுள் நிலையை அடைய தகுதி உடையவர்களே என்கிறது சமணம். இதற்கு நல்லொழுக்கம், நல்ஞானம், நற்காட்சி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என ரிஷப தீர்த்தங்கரர் வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

    நன்றி - செல்வன்
     சிகாகோ சமணர் ஆலயம்  – வடக்கிருந்து உயிர் துறந்தவர் –  நன்றி : செல்வன்

     

    சமணக் கோயில்களின் அமைப்பு முறை சைவ, வைணவக்கோயில்களின் அமைப்பு முறையைப் பெரிதும் ஒத்துள்ளது. அதாவது சைவ,வைணவக் கோயில்களில் உள்ளது போலவே மூலவர், உற்சவமூர்த்தி ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சமணர்கள் திகம்பரர் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இக்கோயில்களில் உள்ள திருவுருவங்கள் ஆடையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. கோமதேசுவரர் இவ்வகையைச் சார்ந்தவர். சைவ, வைணவக் கோயில்களைப் போலவே சமணக் கோவில்களிலும் திருவிழாக்களும், இறைவன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதுமட்டுமன்றி, தீபாவளி, சிவராத்திரி போன்ற சில பண்டிகைகள், விழா கொண்டாடும் முறைகள், நாட்கள் என அனைத்தும் ஒன்றுபோல் அமைந்திருப்பதையும் அறிய முடிகிறது. முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் என்கிற ஆதிநாதர் வீடுபேறு அடைந்த நாளையே சமணர்கள் சிவராத்திரியாகக் கொண்டாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சமணம்: காவல் தெய்வங்கள் விஜி சக்கரவர்த்தி
    சமணம்: காவல் தெய்வங்கள்
    விஜி சக்கரவர்த்தி

    “சமணர்கள் இல்லாதிருந்திருந்தால் தமிழுக்கு இலக்கண இலக்கியங்கள் செம்மையாக அமைந்திருக்குமா என்றே ஐயம் எழுகிறது. தொல்காப்பியம், அதன் உரையாசிரியர் இளம்பூரணவடிகள், நன்னூல், குறள், நாலடி, சிலம்பு, அதன் உரையாசிரியர் அடியார்க்குநல்லார், சிந்தாமணி (சிந்தாமணியை கொங்குநாட்டு நூல் என்கிறார் உவேசா அவர்கள்), நிகண்டுகள் (பிங்கலந்தை பொள்ளாச்சி சிவன்பிள்ளை அச்சாக்கினார்கள்), நன்னூல் ஆசிரியர் போலவே அதன் உரைகாரர் மயிலைநாதர் கொங்கு நாட்டினர் என்ப. மயிலைநாதர் உரையைப் பின்பற்றிச் சைவபரமான உரைகள் பின்னாளில் எழுந்துள்ளன” – மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், (பக். 554-555)

    இவைதான் சமண மதத்தினரின் அடிப்படை ஆன்மீகக் கொள்கைகள். இதன் அடிப்படையிலேயே ஒரு 13 வயது சிறுமியை வற்புறுத்தி, தெய்வ நிலை என்ற பெயரில் பட்டினிச்சாவு ஏற்படுத்தியுள்ளது மிகவும் கொடுமையான விசயம். சிறுமி ஆராதனாவின் இறுதி ஊர்வலத்தில், சமண மதத்தைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துள்ளார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அப்பெண்ணின் இறப்பையும் தெய்வச் செயலாகக் கருதியதோடு, தவ வலிமை பெற்ற பால யோகி என்ற முறையில் அந்த மரணத்தையும் ‘ஷோபா யாத்திரை’ என்று கொண்டாடியிருக்கிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

    சித்தர்கள், முதுபெருமக்கள் போன்றோர் உணவு, நீரின்றி கடும் தவத்தில் ஈடுபடுவது நாம் அறிந்திருக்கிறோம். அதுவும் பெரும்பாலும் பல காலங்களுக்கு முன்பு நடந்த விசயங்கள் இவை. 13 வயதே ஆன சிறுமியை வற்புறுத்தி உண்ணாவிரதம் இருக்கவைத்து மரணம் ஏற்படுத்தியதை கொலை என்றே கொள்ள முடிகிறது. சாப்பாட்டிற்கே வசதியில்லாதவர்கள்கூட செய்யத் துணியாத இப்படியொரு காரியத்தை ஆன்மீகம் என்ற பெயரில் செல்வந்தரான இவர்கள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியல்தானேயொழிய அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கை அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். ஆன்மீக ஞானிகளின் சித்தாந்தங்கள், வேதங்கள் என அனைத்தும் பெரும்பாலும் அறிவியலின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதே நிதர்சனம். அதாவது அறிவியல் சார்ந்த ஆன்மீகம் மட்டுமே மனிதர்களுக்கு அமைதியையும், வெற்றியையும் அருளக்கூடியவை என்பதை உணர்ந்தால் மட்டுமே ஆன்மீகம் என்பதன் முழு பலனையும் அனுபவிக்க முடியும் என்பதே சத்தியம். தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் இயக்கங்களையும், அதன் தொடர்புடைய தம் வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள வேண்டியே மனிதன் ஆரம்ப காலம் முதலே ஆழ்ந்த தேடல் கொண்டிருக்கிறான். இந்தத் தேடல்களின் ஒரு பகுதியே அறிவியலாகவும், மற்றொரு பகுதி ஆன்மீகமாகவும் உருவெடுத்துள்ளன. ஒரு வகையில் ஆன்மீகமும், அறிவியலும் நெருங்கிய தொடர்புடையவையே எனலாம். அறிவியலைப் பொருத்தவரை தமது வாழ்க்கைத் தேவைகளுக்கேற்றவாறு தன்னைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்தை வளைக்க முற்படுகிறது. ஆன்மீகத்தைப் பொருத்தவரை தாம் வாழும் உலகிற்கேற்றவாறு தம்மை அனுசரித்துக்கொள்ளும் போக்கு. மனிதர் அறிவியல் சார்ந்த ஆன்மீகம் கடைபிடிப்பதே சிறந்த வாழ்வியல் நெறி. உதாரணமாக இயற்கைப் பேரழிவுகளின் சேதாரங்களை ஆன்மீக நம்பிக்கையுடன் அறிவியல்பூர்வமாக அணுகி தீர்வு காண்பது போன்றது. அதாவது ஆன்மீகம் என்பது வழிபாடுகளில் மட்டும் அடங்கிவிடுவதில் அல்ல, அதையும் மீறி சிறந்த முறையில் வாழ்ந்து காட்டுவதில் உள்ளது என்பதே சத்தியம்.

    மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பை தெளிவுற விளங்குதல் அவசியம். அறிவியலுடன், ஆன்மீகமும் மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைப்பட்டாலும், ஆன்மீகத்தை குறிப்பிட்டதொரு வரையறைக்குள் வைத்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் வாழும் சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு சிலபல கோட்பாடுகளை ஏற்படுத்தி அதன்படி வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் பல மதத் தலைவர்களும் முக்கியமான கோட்பாடுகளை ஒதுக்கிவிட்டு, சில கட்டுக் கதைகளை பரப்பிக்கொண்டிருப்பதன் விளைவே இது போன்று மூட நம்பிக்கைகளையும், உயிர் பலியையும் ஏற்படச்செய்துள்ளன.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எப்படியாவது வாழ்க்கையின் உச்சத்தை அடையவேண்டும் என்ற வேட்கை புதைந்துள்ளது. ஆன்மாவை உணர்ந்து அமைதியான பாதையில் அடுத்தவருக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ்வதே ஆன்மீகம். இந்த ஆன்மாவை உணரும்பொருட்டு பல ஆன்மிக வழிகளை நம் முன்னோர் உருவாக்கினர். அவையாவும் நற்செயல்களை புண்ணியமாகவும், தீயச்செயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியுள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தாம் வாழுவதற்காக, தம் சுயநலத்திற்காக எத்தகைய பாவச்செயலையும் செய்யத் துணியும் மனிதரையே பரவலாகக் காணமுடிகிறது. அந்த வகையில், இந்த இளம் பெண்ணின் தந்தையின் நகைக்கடையை பிரபலப்படுத்தவே இந்த உண்ணாவிரதம் கடைபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

    புதுமணப் பெண்ணைப்போல் அலங்கரித்து தங்க முலாம் பூசப்பட்ட ரதத்தில் அமர்ந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆராதனாவின் ‘சந்த்தாரா’ எனப்படும் இந்த உண்ணாவிரதச் சடங்கு பத்தாவது வாரத்தை நெருங்கியபோது உள்ளூர் ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்கள் வந்துள்ளன. அத்தோடு பலர் அந்த பாலயோகியுடன் தம்படம் எடுத்துக்கொள்ளவும் முனைந்துள்ளனர் என்பதும் ஆதாரமாக உள்ளது.

    இனிமேலும் இதுபோன்று ஒரு குற்றம் நடக்காமல் இருக்க வேண்டுமானால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(213)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். ஆயுதபூஜை , விஜயதசமி என முக்கிய தினங்களை முடித்துக் களிப்புடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மடலை எழுத ஆரம்பித்ததிற்கும், எழுதி முடிப்பதற்கும் இடையில் இருந்த இடைவெளி கொடுத்த தாக்கத்தின் பிரதிபலிப்பில் இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்னதான் நடந்தது அவ்விடைவெளியில் என்று நீங்கள் வினவக்கூடும்.

    இதோ!

    1984-ஆம் ஆண்டு முதல் நான் அறிந்திருந்த நன்கு பழகியிருந்த ஒரு அன்புத் தோழர் கடந்த 9ஆம் திகதி அதிகாலை இயற்கையெய்தினார். இன்று காலை அவரது இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தது. . என்னை விட ஏறத்தாழ 6 மாதங்களே வயதில்மூத்த இந்த நல்ல மனிதனின் வாழ்வை எண்ணிப் பார்க்கிறேன். யாழ்மண்ணிலே பிறந்து லண்டனுக்குப் புலம்பெயர்ந்து மாணவனாகத் தனது வாழ்வை ஆரம்பித்த அவர் தானும் தன் வாழ்வு எனும் சிறுவட்டத்திற்குள் தனது வாழ்வை வாழ்ந்து முடித்தவரல்ல.

    jeyamநாடு, சமூகம் எனத் தனக்குமுன்னே இருந்த தனது கடமைகளை முழுமூச்சாக ஆற்றிய ஒரு மனிதர். பெற்றோருக்கு ஒரு நல்ல மைந்தனாக, தங்கைக்கு ஓர் அண்ணனாக, மனைவிக்குக் கணவனாக, அன்புக்குழந்தைகளுக்குத் தந்தையாகத் தனது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது தனது தாய்மண்ணில் தனது சகோதர, சகோதரிகள்படும் துயரைக் கண்டு துடித்தெழுந்து மனிதாபிமான உதவிகளை முன்னின்று வழங்கியவர். அத்தகைய அரிய செயல்களினால் அவர் தன் பிரத்தியேக வாழ்வில் அடைந்த இன்னல்கள் பல; அவையனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர்.

    காலம் அவர்மீது தன் சவால்களைத் தூக்கி வீசத் தவறவில்லை. அவரது உடல் நோய்களினால் தாக்கப்பட்டு நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டபோதும், ஈழத்தில் தமிழ்மக்களின் இன்னல்களுக்குத் தன்னால் என்ன செய்யமுடியு,ம் எனத்துடித்துத் தனது பங்களிப்பைத் தனது உடல் ஈடுகொடுக்குமளவிற்குச் செய்துவந்தவர். தாய்மண்ணில் தனக்குக் கல்வியறிவை ஈந்த பாடசாலை பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து, தனது நாட்டு மாணவர்களின் வாழ்வு மேம்படத் தன்னாலான உதவிகளைப் புரிந்தவர்.

    குடிசை வீட்டில் எரியும் ஒரேயொரு குப்பிவிளைக்கைப் புயற்காற்று அணைத்துவிட்டதைப் போல அவரது மனைவியும், அவரது இரண்டு மகள்களும் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நிலை. இயற்கை அளித்த வாழ்வைத் திரும்ப இயற்கையே பறித்துக் கொள்வது இயற்கையே! ஆனால் பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட அந்தக் காலத்தை எவ்வகையில் வாழ்ந்து முடிக்கிறோம் என்பதிலேயே ஒரு மனிதனின் வாழ்வின் வெற்றி அமைந்திருக்கிறது. ஒரு மனிதனின் கடமை என்பது அவனது பிரத்தியேக சொந்தவாழ்வுடன் முடிந்து விடுவதில்லை. தன் வாழ்வும், சமூகத்தினரின் இன்பதுன்பங்களில் பங்கெடுப்பதும் அம்மனிதனின் கடமைகளில் ஒன்றாகிறது. ஆனால் அதை நிறைவேற்றக்கூடிய வல்லமை, துணிச்சல் அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட துணிச்சலையும் கடமையுணர்வையும் கொண்ட ஓர் உன்னத மனிதனே என் தோழன் வேலாயுதபிள்ளை ஜெயபாலன்.

    உள்ளத்தில் வடியும் ஆறாத துயரத்திற்கு வடிகாலாக இம்மடலை வரைந்து விட்டேன். இவ்வினிய தோழனின் உற்றார், உறவினரின் சாந்திக்காகவும், அவனது ஆத்மசாந்திக்காகவும் அனைத்துக்கும் மேலான, அனைவர்க்கும் பொதுவான இறையை வேண்டுகிறேன்.

    தோல்விகள் உனக்கில்லை தோழா!
    தாய்மண்ணின் கனவுகளை உந்தன்
    நெஞ்சினில் சுமந்தே நடந்தனை
    நேராக நிமிர்ந்தே நின்றனை நீயே!

    ஜெயம் என்பதனை உந்தன் பெயரில்
    ஜெபமாய்க் கொண்டவன் தோழா!
    தோழரின் துணையாக என்றுமவரை அருகில்
    தூணாகத் தாங்கிக்கொண்டே வாழ்ந்தாய்!

    யாழ் கொக்குவில் தனில் உதித்தாய்
    யாழ் இந்துவின் மைந்தனாய் வளர்ந்தாய்
    தமிழ்த்தாயின் பெருமைதனை உணர்ந்ததினால்
    தணியாத வேகத்துடன் தமிழுக்காய் உழைத்தாய்!

    அன்னை மண்ணின் அழிவுகளைத் தடுக்க
    அர்ப்பணித்த ஓர் தோழனாய்க் கண்டேன்
    எதிர்கொண்ட இடர்கள் அனைத்தையும்
    ஏற்றுக்கொண்டே வாழ்ந்தனை நண்பா!

    மறையாத புன்னகை உன் வதனத்தில்
    மாறாத கொள்கைகள் உன் எண்ணத்தில்
    சீரான சிந்தனை என்றும் உன்னுள்ளத்தில்
    தீராத சோகம் இன்று எமது நெஞ்சங்களில்!

    அன்பான மனைவியும் பண்பான மகள்களும்
    ஆண்டவன் உனக்களித்த இனிய பரிசுகள்
    காலத்தின் சோதனை நீ வாழ்வில் கண்ட
    கணக்கற்ற வேதனைகள் தோழா!

    சரீர உபாதைகள் தந்திட்ட தடைகளையும்
    தகர்த்தெறிந்து நீயும் தமிழ்ச் சோதரருக்காய்
    ஆற்றிய பணிகள் பகன்றிடும் உந்தன்
    அனைத்து அகக்குறைகளையும் உடைத்தெறியும்
    ஆற்றல்தனை அன்னை மண்ணின் சொந்தங்களுக்கு

    மரணம் என்பது முடிவல்ல தோழா!
    மரணித்து வாழும் மனிதருள் மாணிக்கம்
    ஆன்மாவின் பயணத்தின் ஒரு பகுதியின் முடிவு
    அனைவரின் நினைவுடனும் உந்தன் ஆன்மிகக் கலப்பு!

    அன்பினிய தோழா! பண்பினிய ஜெயபாலா!
    அன்னை மண்ணின் உறவுகளின் வாழ்வின்
    அமைதி ஒன்றே உனக்கு என்றுமே
    ஆத்மசாந்தி அளித்திடும் என்பதுவே உண்மை!

    அஞ்சலிகளுடன்
    சக்தி சக்திதாசன்

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • படைப்பாளி

     

    சி. ஜெயபாரதன், கனடா

    aq
    படைப்பும் நானே
    படைத்ததும் நானே
    திட்டமும் நானே
    திட்ட மிட்டதும் நானே.
    அணுவும் நானே
    அகிலமும் நானே
    ஆதியும் நானே
    அந்தமும் நானே
    ஒளியும் நானே
    இருளும் நானே
    எங்கும் நானே
    இல்லாததும் நானே
    உயிரும் நானே
    உடலும் நானே
    கல்லும் நானே
    கடலும் நானே
    புல்லும் நானே
    புழுவும் நானே
    பிறப்பும் நானே
    இறப்பும் நானே
    இளமையும் நானே
    முதுமையும் நானே
    வளமையும் நானே
    வறுமையும் நானே
    கறுப்பும் நானே
    வெளுப்பும் நானே
    உருவ மில்லை எனக்கு
    அருவத் தோற்றம் எனக்கு
    ஒளிமய மான நான்
    உலவுவது இருட்டில் தான்.

    +++++++++++++++++++++++

    Share
  • போதிமரத்தடியில்…

    -க. பாலசுப்ரமணியன்

     

    bhudda

     

    போதிமரத்தடியில் புனிதமாய் ஒளிரும் பேரொளி
    புன்னகையைக் கண்களில் செதுக்கிய புதுமொழி
    புலனடக்கி மனமடக்கி புவிவென்ற நல்வழி
    புரியாத வாழ்க்கைக்கு வழிகாட்டும் அன்புநெறி!

    கரைகடந்த வெள்ளமென நிலைமறந்து தவித்துடுமே
    கள்ளுண்ட போதையெனக் கலங்கிடும் ஆசைமனமே!
    உள்ளடங்கா மாந்தருக்கு உடலென்றும்  போர்க்களமே
    உண்மை உணர்த்த வந்ததுவே போதிசத்வமே!

    சித்தனில்லை புத்தனவன் விவேகத்தின் எல்லை
    மோகமில்லை முக்தனவன் முடிதுறந்த முல்லை
    சோகமில்லை சுந்தரனே சுகம்விடுத்த பாதை
    தேடவில்லை தேறியவன் தானறிந்த உலகமறை!

    வானுயரப் புகழ்வந்தும் வாடிவிடும் மானுடமே!
    ஊனுருக நாடிச்சென்றால் உண்மை ஒளிர்ந்திடுமே!
    தானறியத்  தனித்திருந்தால் நிகரில்லாத் தவமே!தானடங்கிய உள்ளத்தில் தெளிவது அன்புமயமே!

     

     

    Share
  • நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

     

       ( எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

     

    மாநிலத்தில் நாமுயர ஏணியாய் இருந்தார்கள்

    மாசகற்றி எம்மனதை மாண்புபெறச் செய்தார்கள்

    தாம்படித்து எமக்களித்து தலைநிமிர வைத்தார்கள்

    தாமுரமாய் ஆகிநின்றார் தலைசிறந்த ஆசான்கள் !

     

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமானார்

    ஆசான்கள் எம்வாழ்வில் அனைத்துக்கும் தெய்வமானார்

    ஆன்மாவை தூய்மையாய் ஆக்கிவிடும் அவர்களின்

    அடியினைத் தொழுதுநாம் அவராசி பெறுவோமே !

     

    வாழ்வெனும் பாதையில் வழுக்கிடா வண்ணம்

    தாழ்வெனும் சிக்கலில்  மாட்டிடா வண்ணம்

    ஆளுமை எம்மிடம் வளர்ந்திடும் வண்ணம்

    ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் அன்றோ  !

     

    நீதிநெறி நடவென்பார் நெஞ்சைதூய்மை ஆக்குவென்பார்

    போதனைகள் பலசொல்லி பொறுப்பதனை உணர்த்திடுவார்

    பேதமிலா மனம்வளர பெருங்கதைகள் பலவுரைப்பார்

    பாதகங்கள் களைந்தெறிவார் பண்புநிறை ஆசான்கள் !

     

    பாகற்காய் படிப்பையெலாம் பக்குவமாய் எமக்காக

    பதப்படுத்தி சுவையேற்றி பதியவைப்பார் நல்லாசான்

    சோதனைகள் வந்தாலும் சுமையின்றி நாம்படிக்க

    சாதகமாய் வழிசொல்வார் சரியான ஆசான்கள் !

     

    பள்ளிசென்று நாம்படிக்க உள்ளமதில் ஆசைதனை

    மெல்ல மெல்ல நுழைப்பதற்கு நல்லவழி கண்டுநிற்பார்

    கள்ளமனம் கரைந்தோட கனிவுடனே வகுப்பெடுத்து

    உள்ளமதில் அமர்ந்திடுவார் உண்மைநிறை ஆசான்கள் !

     

    ஒருநேரம் அடித்தாலும் பலநேரம் அரவணைப்பார்

    சிலநேரம் திட்டிடினும் அருள்வாக்காய் அமைந்துவிடும்

    குறைகண்டு விட்டாலும் நிறைவாக்க நினைந்திடுவார்

    அறிவுடனே அணுகிடுவார் அன்புநிறை ஆசான்கள் !

     

    பட்டம்பல பெற்றாலும் பதவிதனில் உயர்ந்தாலும்

    படிப்பித்த ஆசான்கள் பக்கத்தில் இருப்பார்கள்

    அவர்களது ஆசிகளும் அவர்களது வாழ்த்துகளும்

    அனைத்துமே எமையிப்போ அகமகிழ வைக்கிறதே !

     

    நல்லாசான் வாய்த்துவிட்டால் நமெக்கென்றும் ஒளிமயமே

    நல்லாசன் நம்வாழ்வில் நாழுமே வந்துநிற்பார்

    நல்லாசன் கிடைத்தவர்கள் நாளுமே உயர்ந்திடுவார்

    நல்லாசான் வாழ்த்துப்பெற்று நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

    Share
  • நான் ரசித்த புத்தகம்

    -உமாஸ்ரீ

    மோகனா ஓ மோகனா” – என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்த கண்ணும் மனசும் களிக்கின்றன.

    mohana-oneதிரு. கே. சிவா ரெட்டியின் தேர்ந்தெடுத்த 35 தெலுங்குக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புதான் “மோகனா ஓ மோகனா”. தமிழில் மொழி பெயர்த்தவர் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் திருமதி சாந்தா தத். 112 பக்கங்கள் கொண்ட இந்தக் கவிதை தொகுப்பு ஒரு சாகித்திய அகாதமி வெளியிடு.

    பிரஞ்சு இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞரான விக்தர் ஹீயூகோ எழுதிய நூலை “ஏழை படும்பாடு“ என்ற பெயரில் மொழி பெயர்த்தவர்  யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதி. தமிழாக்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யோகி  சுத்தானந்த பாரதியின் மொழிபெயர்ப்பு பலருக்கு வழிகாட்டி.

    அதுபோல் திருமதி சாந்தா தத்…. அருமையான மொழிபெயர்ப்பு. ஒரு சில கவிதைகளைப் பார்ப்போம். அவற்றில் தேர்ந்தெடுத்த வரிகள் உங்கள் பார்வைக்கு.

    சாமி நீதி – முதல் கவிதை

    செல்வம் அளிக்கட்டும்
    ஆனந்தம் அளிக்கட்டும்

    அலை –  நீண்ட  கவிதை – 7 பக்கங்கள்

    வுகள் நனவாகும்
    வுகள் நனவாகும்

    தரையில் பாதம் ஊன்று

    பொங்கி வரும் ஆவேச முத்திரத்தைப்
    பார்வைகளில் நிரப்புகிறாய். 

    மோகனா ஓ மோகனா – கவிதைப் புத்தகத்தின் தலைப்பு

    என்னுள் எந்நேரமும் அசைந்தபடி நீ
    ஹோட்டல் அறையில் பரம்புரம்
    ஆசை மடியாது, வெப்பம் தணியாது

    வேட்கை

    என் மரணத்தைவிட என் வாழ்க்கை
    பெருமிதமாவதே என் விருப்பம்

    மற்றொரு காலைப் பொழுது

    எவராயினும் சரி கைநிறைய நீரெடுத்து
    வாழ்க்கைக்கு அர்ப்பணித்து
    வாழப் புறப்பட்டாக வேண்டும்.

    குளிர்கால வெயில்

    நான் வலைபின்னி விதைகள் விதைத்துச்
    ற்றுத் தொலைவாய் அமர்ந்திருக்கிறேன்

    வாகன நெரிசல்

    இவ்வாகன நெரிசல் இரக்கமற்றது
    இதயமற்றது

    mohana-2திரு கே. சிவா கவிதைகளைச் செப்பிய விதம் மாறுபட்டது; வேறுபட்டது. மிக யதார்த்தமாய்…

    திருமதி சாந்தா தத்தின் மொழிபெயர்ப்பு அபாரம்.

    பரம்புரம் என்னும் கடுமையான வார்த்தையைப்  பயன்படுத்தியிருக்கிறார்.  வீரமாமுனிவர் காலத்தில் உபயோகப்படுத்திய வார்த்தை என நினைக்கிறேன்.

    அதுபோல் ’வெய்யில்’ என்னும் வார்த்தையும் ’குளிர்கால வெய்யில்’ என்னும் கவிதையில் சர்வ சாதரணமாய் உபயோகப்படுத்தியிருக்கிறார். எழுதும்போது பலர் வெயில் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவர். உதாரணத்துக்கு ஒரு குறள்.

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.

    திருமதி சாந்தா தத் மொழிபெயர்ப்புக்கு முன்னோடியாய்க் கொள்ளலாம்.  சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். எல்லாக் கவிதைகளும் நெஞ்சைத் தொடுகின்றன. மனம் சலனமடைந்திருக்கும்போது இந்த கவிதைகளைப் படிக்கலாம்.

    திருமதி சாந்தா தத்திற்கு மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருதை விட  மிகப்பெரிய விருது வழங்கப் பட வேண்டும்.என்பது என் அவா.

    கடைசியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

    கவிதைகளைப் படித்துக் கண்ணும் மனமும் களிக்கின்றன.

                          

     

    Share
  • மனிதநேயம் எங்கே போகிறது!

    -மணிமுத்து

    அழகான அந்திமாலை மெதுவாகத் தன்னை மறைத்துக்கொண்டிருந்த நேரம். சூரியனுக்கு பயந்து ஒளிந்திருந்த நட்சத்திரங்கள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன.

    போக்குவரத்து நிறைந்த பழைய மகாபலிபுரம் ரோட்டினில் ஒரு பெரிய தெரு. எப்போதோ ரோடு போடுவதற்காகத் தோண்டிய குழிகள் ஆங்கங்கே வாயைப்பிளந்து கொண்டிருந்தன.

    எவ்வளவு பெரிய வித்தகனும் அவனுடைய வண்டியினுடைய வேகத்தை அங்குக் காட்டமுடியாது.

    மென்பொறியாளர்கள் அதிகம் வாழும் ஏரியாவாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லோர் கழுத்திலும் ஏதோ ஒரு நிறத்தில் அவர்களை அறிமுகப்படுத்தும் அட்டை தொங்கிக்கொண்டிருந்தது.

    சில பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். சிலர் கைகளில் காய்கறிக்கூடை மறுநாள் சமையலுக்கு மட்டுமில்லாமல், மறுநாள் நிச்சயம் வாழ்வோம் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதாய். ஏனோ எனக்குள் காய்கறிக் கூடையில் உள்ள கத்திரிக்காயும், முள்ளங்கியும் பேசிக் கொண்டதுபோல் ஓர் உணர்வு. நாளை சம்பாருக்கு நீயா இல்லை நானா என்று சிரித்தபடி. வாழ்க்கை முடியப் போகிறபோதும் கூட சிரிக்கின்ற அவைகளுக்குத் தெரியும் உண்மை “எதுவும் நிரந்தரமில்லை.” ஏனோ நம்மால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாததாய்.

    ஒருசில பள்ளிச்சிறுவர்கள், மாலை வகுப்பு முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர் மிதிவண்டியில் நண்பர்களுடன் பேசியபடி.

    அவளும் வேலைமுடிந்து திரும்பிக் கொண்டிருந்தாள் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தப்படி. அவளும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் வேலை செய்யவேண்டும், அவள் கழுத்திலும் ஊதா நிறத்தில் அவளுடைய அறிமுகம் தொங்கிக் கொண்டிருந்தது.

    களைத்துக் கூடு திரும்புகின்ற குருவிகள்போல எல்லோர் முகங்களிலும் ஒரு நிம்மதி; காலை நேரப் பரபரப்பு சுத்தமாக வடிந்திருந்தது. ஆனால் அவளிடம் மட்டும் திடீரென்று ஒரு பரபரப்பு… வேகமாக ஒடினாள்.

    மத்திய வயதுடைய ஒரு மனிதர் ஐம்பதைத் தொடக்கூடும், நடுரோட்டில் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கோ குடிபோதையில் வழி ஞாபகமில்லாமல் நடுரோட்டில் அமர்ந்திருப்பதைப்போல் தோன்றியது.

    அருகிலேயே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலை ஓரக்கடை, கடையைச் சுற்றியிலும் வண்டாக மொய்த்த சிலர். அவரவர் கதைகளைப் பேசியப்படி தட்டில் இருப்பதை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர்.

    நமக்கெதற்குப் பஞ்சாயத்து என்று எல்லோரும் ஒதுங்கிப்போக, எதிரே வேகமாக வந்த சீருந்தோ அவரை இடிக்காமல் அதுவும் ஓரமாக ஒதுங்கிச்சென்றது. சுற்றிலும் எத்தனைபேர் இருந்தபோதிலும் ஏன் என்று கேட்க ஒருவர் இல்லை; ஆனால் அவளோ வேகமாகச்சென்று அவரின் கையைப்பிடித்து ஓரமாக ஒருமரத்தின் அடியில் அமர வைத்தவள், பின்பு அவரை விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவருக்கு மாலையில் பார்வை அவ்வளவாகத் தெரியாதென்று. அவர் நடுரோட்டில் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதே அவள் சொல்லித்தான் உணர்ந்துகொண்டார்.

    மனது கசந்தது அவளுக்கு. ஏனிப்படி மனிதநேயம் இல்லாமல் போனது நமது சமுகத்தில் என்று. கலங்கிய கண்களுடன் சுற்றி நோட்டம் விட, அப்போதும் அவரவர் வேலையில் கண்ணாக இருந்தனர்.

    பிறகு அவருக்கு அங்கிருந்த கடையில் சாப்பிட வாங்கிக்கொடுத்தவள், அவரிடம் தொலைபேசி எண்ணை விசாரித்தாள், அவருடைய வீட்டிற்கு தொடர்புகொள்ள.

    ஆனால் அவரிடம் தொலைபேசி எண் எதுவும் இல்லை, அந்த மரத்தின் கீழேயே தங்கிவிட்டுக் காலையில் செல்வதாகக் கூறினார்.

    அவரை அங்கேயே விட்டுவிட்டு வேகமாகச் சென்றவள், சென்ற வேகத்தில் திரும்பிவந்தாள், கைகளில் தண்ணீர் பாட்டிலுடன். அதை அவர் கையில் கொடுத்துவிட்டு அவளும் சென்றாள் மனதில் கனத்துடன்.

    நம்மிடம் கருணை இல்லாமல் போகவில்லை. இன்னும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது, அவளைப் போல.

    வாழ்க்கை மிகவும் அழகானதுதான் நமக்காக வாழும்போது மட்டுமல்ல பிறரிடம் சிறிது அன்பைச் செலுத்தும் போதும்தான்!

    நமக்கென்ன என்றொதுங்கி நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்தோம்?

    நாம் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருப்பதாக நினைக்கிறோம், அது முழுவதும் நிஜமா?

    நம்முள் பலருக்கும் கேள்வி எனக்கு யார் உதவினார்கள் என்பதுதானே?

    நமக்குத் தெரிந்தே நாம் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம்!

    இதுவா நம் முன்னோர்கள் நம்மைப்பற்றிக் கனவுகண்ட ஒற்றுமையான சமுகம்?

    ”இல்லை!”

    சிறு தீக்குச்சிதான் பெரிய பொறியாக மாறும்.

    நாம் முதலில் சிறிய தீக்குச்சியாக இருப்போம்!

    எல்லாப் புரட்சிக்கும் எப்போதுமே ஏதாவது ஒரு சிறிய செயல்தான் தூண்டுகோலாய் இருந்தது!

    அந்த ஒருவனை ஏன் நாம் மற்றவனில் தேட வேண்டும்?

    மாற்றத்தை மற்றவர்களில் காண நமக்குள் மாற்றத்தை விதைப்போம் தோழா!

    Share
  • படக்கவிதைப் போட்டி 81-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சென்றவாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தின் ஒளிப்பதிவாளர் திருமிகு. ஷாமினி. அதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இவ்விருவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி.

    man-and-dog

    பாய்ந்துவரும் வெள்ளத்தில், தோளில் ஞமலியையும் உள்ளத்தில் உறுதியையும் சுமந்தபடி இந்த மனிதர் போவது எங்கே?

    விடைசொல்ல வருகின்றனர் சிந்தனைத் திறமிகு நம் கவிஞர்கள்!

    ****

    விசுவாசத்தோடு வீட்டில் வாசம்செய்யும் நாயின் நன்றியறிதலைத் தன்  கவிதையில் விவரமாய் விளக்கியுள்ளார் திரு. ரா. பார்த்தசாரதி.

    உலகில் நன்றியுள்ள பிராணி நாய் என்று சொல்வதுண்டு
    உலகில் நன்றிகெட்டவன் என்று மனிதனை சொல்வதுண்டு
    நாயை செல்லமாக வளர்ப்பவன், எல்லையை மீறக்கூடாது!
    அதனைஅதிகம் தூக்கி வைத்து கொண்டாடவும் கூடாது!
    நாயும் எஜமானன் போடும் உணவிற்காக நன்றியினை காட்டும்
    சிலசமயம் அடித்து துரத்தினாலும் அவனிடமே வந்து சேரும்
    கடலில் அவன் வீசிய பொருளை நீந்தி சென்று எடுத்து வரும்
    கடலில் குளித்தாலும் தோளையும் தாவி பிடித்து உறவாடும்!
    வீட்டில் திருடர்கள் வந்தால் குரைத்து மனிதனை எழுப்பும்
    எஜமானன் தொலைவில் இருந்தாலும் அவன் வரவை உணர்த்தும்
    தன் எஜமானுக்காக உயிரையும் கொடுத்து செய்நன்றி காட்டும்
    யாருமில்லாத தனிமனிதனுக்கு நண்பனாய் துணையிருக்கும்!
    பொய்யும்,புரட்டும் பேசுபவர்களிடம் ஜாக்கிரதையாக பேசுவோம்
    நாய் ஜாக்கிரதை என்ற பலகையை வீட்டு வாசலில் மாட்டுவோம்
    உலகில் நாய் வளர்ப்பதே ஓர் நாகரிக பொழுது போக்காகும்
    என்றைக்கும் நன்றியுடனே நம்மையும்,வீட்டையும் காக்கும்!
    […]

    ****

    மழைதந்த பெருவெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் நிலையிலும், வாயில்லாப் பிராணியான நாயையும் காப்பாற்ற விழையும் இந்த மனிதரின் மனிதாபிமானத்தை இல்லை…இல்லை ’மிருகாபிமானத்தைப்’ பெருமிதத்தோடு போற்றுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    நீராதாரங்கள்
    அடையாளமில்லாமல்
    அழிக்கப்பட்டு
    அடுக்குமாடி கட்டடங்கள் ஆயின
    ஏரிகளும் குளங்களும்
    யாரிடம் முறையிடும்?
    தன் குறையை
    மனிதனின்பிழை கண்ட
    இறைவனின் இழையே
    மழையாககொட்டி
    வெள்ளமாக பெருக்ககெடுக்க
    ஏழை பணக்காரன்
    வித்தியாசமின்றி விரட்ட
    உயிர்களையும்
    உடமைகளையும்
    இழந்தாலும்
    இந்த ஐந்தறிவு உயிரை
    முதுகில் அணைத்து
    கரை சேர்த்த இந்தமனிதனின்
    மனிதாபிமானம்
    மறக்கமுடியாது

    ****

    ”காதலுக்கு எப்படிச் சாதியும் மதமும் தடையில்லையோ அதுபோல் தோழமைக்கும் அவை தடையில்லை. உருவம் பார்த்து வருவதில்லை நட்பு; உள்ளத்து அன்பில் மலர்வது அது! இங்கு நாம்காணும் இவ்விரு உயிர்களையும் பிணைத்திருப்பது அத்தகு அன்பே!” என்று வியக்கிறார் முனைவர் மா. பத்ம பிரியா. 

    தோழமைக்கு இனமேது குலமேது
    ஐந்தறிவு ஆறறிவு பேதமெல்லாம்
    அன்புக்கு முன் நில்லாது
    உருவத்தில் இல்லை உயர்வு தாழ்வு
    உயர்ந்த உள்ளத்தில் தான் உள்ளது
    அன்பு செய்யும் அஃறிணை கூட  உயர்திணையே!
    அன்பில்லாத உயர்திணையும் அஃறிணையே!
    குறும்பு செய்யும் மழலையாக,தோழனாக,தோழியாக
    ஒவ்வொரு வீட்டிலும் காவலனாக…
    பன்முக உறவினைப் பரிமாறும் பற்றாளன்
    கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் செல்லப்பிராணியிடம்
    தோளில் வளர்ந்த பிள்ளைகள் கூட
    தூர நிற்பர் ஒருகாலத்தில்
    காலில் விழும் செல்லப்பிராணியோ
    தாவி அணைக்கும்  தவணையின்றி
    அதனை உணர்ந்த மானிடர்கள்
    தோளில் இடம் தந்துள்ளனர் போலும்
    தோளோடு தோளாகத் தோழமை செய்ய
    உன்னத அன்பே போதும். 

    ****

    மனிதர்மீது நாய்காட்டும் அன்பை நெகிழ்ச்சியோடு தம் பாக்களில் பதிவுசெய்துள்ள கவிஞர் பெருமக்களுக்குப் பாராட்டுக்கள்! 

    ****

    அன்று உழவருக்கு உற்றதோழனாய்த் திகழ்ந்தவை மாடுகள். அந்த மாடுகளையே செல்வமெனக் கருதி சிறப்போடு வாழ்ந்த இனம் நந்தமிழினம்! இன்றோ…மாடு வளர்ப்பது மடமை; நாய் வளர்ப்பதே நாகரிகம் என்றாகிவிட்டது நம்மவர்க்கு!” என உண்மை விளம்பும் கவிதையொன்று நெஞ்சைத் தொ(சு)டுகிறது!

    எல்லை தாண்டிப் பேகும்போது,
    செல்லப் பிராணியும்
    தொல்லைதான்…
    மாட்டின் பின்னே செல்வது
    மடமை என்றாக்கி,
    நாயின் பின்னே செல்வதை
    நாகரிகமாக்கிக்கொண்டோம்!
    அதனால்தான்,
    நாயும் ஏறுது
    நம் தலையில்…
    இடத்தைக் கொடுத்தால்,
    மடத்தைப் பிடிப்பது
    மனிதனிடம் கற்றதுதானோ…!

    கால்நடைகளோடு நமக்குள்ள காலத்தைவென்ற உறவை நினைவூட்டிக் கவிவடித்திருக்கும் கவிஞர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • சகலகலா வல்லியைப் போற்று!

    கிரேசி மோகன்

    crazy5

    நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி
    விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன
    இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்
    கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….(1)

    சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்
    கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்
    கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்
    தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….(2)

    மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு
    தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு
    நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு
    பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….(3)

    ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்
    மாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்
    சேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்
    தாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….(4)

    போகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்
    ராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்
    ஆதரவிக்கிங்கென்றும் அவளருளே போதும்
    ஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….(5)

    சாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு
    கோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு
    நாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட
    தாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….(6)
    கல்வியவள் அருளால் கலவியாகப் படியும்
    வல்வினைகள் மாறி விளையாட்டாய் முடியும்
    செல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்
    அல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….(7)

    ஸ்திரபுத்தியோடு ஸ்திதப் ப்ரஞ்ஞனாக
    பெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக
    அறுபத்தி நான்கு ஆயகலை தம்மை
    குருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….(8)

    ராணி லலிதாங்கி ராஜ சியாமளா
    வாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே
    பூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ
    நான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….(9)
    மகரயாழை மடியினில் நீட்டி
    அகர உகர மகரம் மீட்டி
    சிகரமேரு சிரத்தினில் வீற்ற
    சகலகலா வல்லியைப் போற்று….(10)
    —————-

    Share
  • உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    1286636471_127469105_1-numerology-astrology-and-namalogy-choolaimedu-1286636471

    நீ என்பதா? இல்லை
    நானென்பதா?
    தனிமையில் உன்னை நான்
    நானென்பதா? தன்னந்
    தனிமையில் என்னை நான்
    நீயென்பதா?

    உன்விழி அசைவில் என்னுயிர் ஆடும்
    புன்னகை மலர்ந்தால் புதுக்கவி பாடும்
    உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி
    இன்னமும் ஏனம்மா துன்பத்தின் இடைவெளி (நீ)

    விரைந்து வரும் அலையில் வீற்றிருக்கும் மலையில்
    இதயத்திலே இரண்டும் சமன்பெறும் ஒரு நிலையில்
    கரைந்து கரைந்து கண்ணீராய் வீழ்கிறேன்
    கடைசி ஒருதுளியில் உன்முகம் காண்கிறேன் (நீ)

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (82)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14593578_1113862175334647_387500738_n

    32535581n07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 15.10.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.

    aj

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    https://youtu.be/Da9FXXsPrMs

    https://youtu.be/kQHuyu7KQe4

    https://www.youtube.com/watch?v=Bj7Bls1aaRg?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent

    +++++++++++++++

    earth-fuel

    +++++++++++++

    காலக் குயவன் ஆழியில் படைத்த
    ஞாலத்தின் மையத்தில்
    அசுர வடிவில்
    அணுப்பிளவு உலை இயங்கி
    கணப்பளித்து வருகுது
    பில்லியன் ஆண்டுகளாய் !
    எருக்கருவை இடையே
    பெருக்கும்
    வேகப் பெருக்கி அணு உலை !
    உட்கரு உள்ளே
    கட்டுப் பாடுடன் இயங்கியும்
    நிறுத்தம் அடைந்தும்
    விட்டு விட்டு வேலை செய்வது !
    வெளிக் கருவிலே
    கனல் குழம்பைச் சமைத்துக்
    கொதிக்க வைக்குது !  கனல் குழம்பு
    குவல யத்தைக்
    குத்தூசி போல் குடைந்து
    பீறிட்டெழும் எரிமலைகள் !
    தாறு மாறாய்
    ஏறி, இறங்கி ஊர்ந்திடும்
    தாரணியின் குடல் தட்டுகள் !
    அங்கிங் கெனாதபடி
    பொங்கிப் பீறிடும்
    பூதக் கனல் எரிமலைகள் !
    நர்த்தனம் புரியும் புவித்தளம் !
    அணு உலை வெப்ப மீறலைப் புவியில்
    தணிப்பவை அவை !
    உட்கருவின்
    பூத அணு உலையின்
    மிச்ச எரிசக்தி அளவை
    2025 ஆண்டுக்குள் கணித்து
    உறுதி செய்வார்  !

    ++++++++++

    புதிய உமர் கயாம்

    earth-hottest-core

    நாலாயிரம் மைல் ஆழத்தில் பூமியின் உட்கருவில் ஐந்து மைல் விட்டத்தில் கோள வடிவில் யுரேனியம் & புளுடோனியம் எரிசக்தி உண்டாக்கும் பூத வேகப் பெருக்கி அணுக்கரு உலை இயங்கி வருவதற்கு வலுவான ஆதாரம் இருப்பதைக் கண்டறிந்தோம்.  அந்த அணு உலை இயங்கிடும் போது புதிய எருக்கருவையும் தொடர்ந்து ஈன்று பெருக்கிறது.

    அதனால் ஏற்படும்  பெரு விளைவு என்ன வென்றால், அந்த அணு உலை ஒருநாள் எரிசக்தி பூராவும் தீர்ந்துபோய், நம்மைப் பாதுகாக்கும் பூகாந்தம் மறைந்து, உயிரினங்களும் ஒருங்கே மரித்துவிடும்.

    மர்வின் ஹெர்ன்டான் [ Oak Ridge Researcher, USA]

    earth-fuel-calculation

    பூமிக்கு தேவையான இன்றைய எரிசக்திக்கு உகந்த புவிக் கூட்டுக் கணினி மாடலை முன்னறிவித்த விஞ்ஞானிகளில் ஒருவனாக என்னைக் கருதுகிறேன்.  இப்போது யூகிப்புக் கோட்பாடுகளில்தான் இருக்கிறோம். இன்றைய நிலையில் அது சரியோ, தப்போ என்று நான் கவலைப்படப் போவதில்லை.

    வில்லியம் மெக்டோனா [பேராசிரியர் பூதளவியல், மாரிலாண்டு பல்கலைக் கழகம்] 

    பூமிக்குத் தொடர்ந்து தேவைப்படும் எரிசக்தி

    பாதுகாக்கும் பூகாந்தத் தேவைக்கும், எரிமலை, பூகம்ப  அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] இயக்கத்துக்கும், பூமிக்குத் தொடர்ந்து எரிசக்தி ஊட்ட எருக்கரு [Fuel] அவசியமாகிறது.  பூமி தனது எந்திரத்தை இயக்க இருமுறைகளில் எரிசக்தியை எடுத்துக் கொள்கிறது.  கோள் உண்டாகக் கிடைத்த பூர்வ வெப்பசக்தி [Primordial Heat Energy], அடுத்து உட்கருவில் இயங்கும் யுரேனிய அணுப்பிளவில் கிடைக்கும் அணுக்கருச் சக்தி. விஞ்ஞானிகள் இதுவரைப் பல்வேறு கணினிப் போலி மாடல்களின் மூலம், பூமியில் எவ்வளவு அளவு யுரேனியம் /தோரியம் மிச்சமுள்ளது  என்று கூற முடியவில்லை.

    2016 செப்டம்பரில் புதியதோர் வெளியீட்டில் பூதளவாதிகளில் ஒரு குழுவினரும், நியூடிரினோ பௌதிகவாதிகளில் ஒரு குழுவினரும் 2025 ஆண்டுக்குள் பூமிக்குள் எவ்வளவு அணுவியல் எருக்கரு மிச்சமுள்ளது என்று கணித்துவிடுவோம் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்கள்.  அந்த வெளியீடு 2016 செப்டம்பர்  “இயற்கை” [Nature Journal] விஞ்ஞான அறிவிப்பாக வந்துள்ளது.  அதில் ஈடுபாட்ட விஞ்ஞானிகள் :

    1.  மாரிலாண்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
    2. பிரேகில், சார்லஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
    3. சைனா  பூதளவியல் கல்விப் பேரவை, விஞ்ஞானிகள்.

    பூமிக்குள் இருக்கும் மிச்ச எரிசக்தியைக் கணிப்பது எப்படி ?

    2025 ஆண்டுக்குள் பூமியின் உட்கருவில் மிஞ்சியுள்ள எரிசக்தி அளவைக் கணிக்க விஞ்ஞானிகள், தாமறிந்த மிக நுண்ணிய துகள்களைக் [Tiniest Subatomic Particles like Geo-neutrinos] கருவிகள் மூலம் கண்டறிய வேண்டும். இந்த எதிர் நியூட்ரினோக்கள் [Antineutrino Particles] மனிதர் அமைத்த அணுமின் நிலையங்கள், சூப்பர்நோவா, கருந்துளைகள், சூரியன்  போன்ற விண்மீன்களுக்குள் நிகழும் அணுக்கரு இயக்கங்களில் உண்டாகும் கிளை விளைவுகள்.  அந்த நியூட்ரினோக்கள் புவி மைய அணுக்கரு உலை இயக்கக் கதிரியக்கத் தேய்விலும் [Radioactive Decay] தோன்றுகின்றன.

    canadian-sno-facility

    அந்த எதிர் நியூட்ரினோக்கள் ஹைடிரஜன் அணுக்களுக்குள் விழும்போது, அந்நிகழ்ச்சியைக் கண்டுபிடிக்கும் கருவியானது இரு தனித்துவ ஒளிப் பொறிகளை  [Light Flashes] உண்டாக்கி நிகழ்ச்சியை அறிவிக்கும். அத்தகைய ஒளிப்பொறி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை எத்தனை யுரேனியம் & தோரியம் அணுக்கள் பூமிக்குள் உள்ளன என்று நேரடி விகிதத்தில் காட்டும்.  யுரேனியத் தோரிய தேய்வு வெப்பசக்தி, மற்றும் பொட்டாசியம் உண்டாக்கும் வெப்பசக்தி ஆகியவையே பெரும்பான்மை எரிசக்தியாக பூமிக்குள் இயங்கி வருகிறது.  எரிமலை வாயுக்கள் எழுச்சிகளில் காணும் ஹீலியம்-3 வாயுவே பூமிக்குள் இருக்கும் யுரேனிய/ தோரிய அணு உலை இருப்பை உறுதிப்படுத்துகிறது.

    இந்நிகழ்ச்சி எண்ணிக்கையைக் கணக்கிடுவது மிக மிக மெதுவானது. உலகிலே உள்ள ஐந்து நியூட்ரினோ கணக்கிடும் கருவிகள் ஓராண்டுக்கு 16 நிகழ்ச்சிகளே பதிவு செய்கின்றன.  அவை ஜப்பான் [KamLAND], இத்தாலி [Borexino], கனடா [SNO+ Detector], சைனா [JUNO] & அண்டார்க்டிகா [Neutrino Dtector] அமைப்புகளில் இராப் பகலாய் பதிவாகின்றன.  2022 ஆண்டில் இன்னும் மூன்று கருவிகள் இயங்கி ஆண்டுக்கு 536 நிகழ்ச்சிகள் பதிவாகும்.  புவி மைய அணுக்கரு எரிசக்தி மிச்ச இருப்பதைக் கணிப்பதால் பூமியின் முடிவை அறிய முடியும். எரிசக்தி வெளியீடு 4 மில்லியன் மெகாவாட் என்று முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பூமியின் ஆயுள் 4.5 பில்லியன் ஆண்டுகள் என்ற முந்தைய யூகிப்பு, எரிசக்தி முழுதும் தீர்ந்து, ஆயுள் 2 பில்லியன் ஆண்டுகள் என்றாகிப் போய்விடலாம் !


    “பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ?  உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது.  அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

    “பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”

    மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

    “ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

    பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)


    பூகோள மையத்தில் இயங்கும் பூத வேகப் பெருக்கி அணு உலை

    உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல !  கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார்.  காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார்.  டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். ஐந்து மைல் விட்டமுள்ள கோள வடிவில் யுரேனியம் [+தோரியம்] நிறைந்த பூத வேகப் பெருக்கி அணுசக்தி உலை அது.  அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது.  அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது.  தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !

    பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது !  துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல !  இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது !

    ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன !  2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது ! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன !  அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ?  அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !


    பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

    கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன.  1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது.  மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன !  நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது.  சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன.  பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும்.  2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ?  அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை.  ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.

    பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது !  புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம்.  அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது !  அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !

    பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

    ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம்.  சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி !  திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது.  யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.

    உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm).  யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது.  தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ.  இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.

    தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது.  அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.

    யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன.  பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது.  ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன.  அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும்.  அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும்.  திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.

    வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும்.  மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும்.  யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும்.  இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன.  அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள்.  நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது.  இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

    விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை

    பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.  அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor).  அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை.  மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும்.  தானாக நிறுத்தம் அடையும்.  அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது.  இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும்.  நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும்.  பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் !  இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.

    பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் !  அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு !  உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும்.  அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது.  செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது.  செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது !  செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது.  ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான்.  அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது.  இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !

    (தொடரும்)

    +++++++++++++++++

    Images :  BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

    Information  :

    1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
    2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
    3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
    4. Encyclopedia Britannica 15 Edition [1978]
    5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
    6. National Geographic Frontiers of Science [1982]
    7. The Vesuvius Volcano at the Bay of Naples.
    8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
    9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
    10. Inside the Volcano, National Geographic [November 2000].
    11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html(Italian Volcano))
    11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html(Hawaii Volcano)
    12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
    13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
    14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
    15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
    16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
    17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
    18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
    19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
    20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
    21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
    22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
    23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
    24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
    26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
    27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
    28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
    29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
    30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
    31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
    31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
    32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
    33.  Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
    34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
    35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
    36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
    37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
    38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)
    39 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)

    40.  http://understandearth.com/Georeactor.htm

    41. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor  [February 7, 2016.

    42.  http://nuclearplanet.com/Herndon’s%20Nuclear%20Georeactor.html

    43. https://www.sciencedaily.com/releases/2016/09/160909094848.htm   [September 9, 2016]

    44.  http://www.natureworldnews.com/articles/28504/20160911/scientists-to-calculate-how-much-fuel-is-left-on-earth-by-2025.htm [September 11, 2016]

    45. http://timesofindia.indiatimes.com/articleshowprint/54291564.cms  [September 12, 2016]

    46.http://www.spacedaily.com/reports/Scientists_expect_to_calculate_amount_of_fuel_inside_Earth_by_2025_999.html[September 13, 2016]

    47. http://www.spacedaily.com/news/earth-03k.html  [May 31, 2003]

    48.  http://geothermalenergy.webnode.com/geothermal-energy-the-description/

    49.  http://rense.com/general25/vore.htm

    50.  https://en.wikipedia.org/wiki/Sudbury_Neutrino_Observatory [May 31, 2016]

    51.  https://en.wikipedia.org/wiki/Neutrino_detector [July 20, 2016]

    52. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor [September 30, 2016]

    ********************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 8,  2016]

    Attachments area
    Preview YouTube video Scientists find oddly behaving ‘inner-inner core’ at Earth’s center

    Scientists find oddly behaving ‘inner-inner core’ at Earth’s center

    Preview YouTube video We Discovered A Massive Amount Of Water Near The Earth’s Core!

    We Discovered A Massive Amount Of Water Near The Earth’s Core!

    Preview YouTube video 7 Things You Didn’t Know About Inner Earth

    7 Things You Didn’t Know About Inner Earth
    Share
  • அழகு

    கவிஞர் ஜவஹர்லால்

    எதுஅழகு ? எப்படி? இப்படிப் பார்க்கலாமா?
    எதிலழ கில்லை? ஏனழ கங்கில்லை ?

    அழகு நிலவுவது எதிலே ? சேர்க்கையில்
    அழகெனப் படுவது பொருளிலா ? பார்வையிலா ?

    காக்கை கருப்புத்தான்; காக்கைக் கதுவெறுப்பா?
    சேர்க்கையில் அவைசிரித்துச் சிலிர்ப்பதில் அழகிலையா?

    மண்ணை இருட்டாக்கும் வான்மேகக் கருங்கூட்டம்
    எண்ணத்தை மயக்கும் இனிய அழகிலையா ?

    வண்ணத்தி லாஅழகு ? இல்லை; பார்க்கும்நம்
    எண்ணத்தில் எதுவினிக்கும் அதிலே அழகிருக்கும்.

    பூத்துச் சிரிக்கின்ற புதுமலர் தானழகா ?
    காற்றில் உதிர்கின்ற மலரிதழில் அழகிலையா ?

    நெடிதோங்கி நிமிர்ந்தாடும் நெடுமரம் தானழகா ?
    ஒடிந்தே அசைகின்ற சிறுகொம்பில் அழகிலையா ?

    மான்களின் கண்மருட்சி அழகுதான்; ஆனாலும்
    கான்திரியும் கொடும்புலியின் முறைப்பும் அழகுதானே !

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நிமிர்ந்தவையா? வளைந்தவையா? எதற்குமே அடங்காமல்
    திமிர்ந்தவையா? திரிபவையா? திருடி வாழ்பவையா?

    எதுவாக இருந்தாலும் அதுவாக அதுவிருந்தால்
    எதுபோழ்தும் அதுவழகு; இதயங்கள் கொளலழகு.

    கண்ணழகு; மூக்கழகு; காணும் முகவழகு;
    முன்னழகு; பின்னழகு; இவைக்கெது அளவுகோல் ?

    இடையழகு எதிலிருக்கும் ? இல்லாம லிருப்பதிலா ?
    நடையசைவில் ஒடிந்துவிடும் கொடியிடையின் அசைவினிலா ?

    ஒருவனுக்கு வானவில் வண்ணம் பேரழகு;
    ஒருவனுக் கவ்வில்லின் வளைவு பேரழகு;

    வண்ணமா ? வளைவா? எதிலே அழகிருக்கும் ?
    எண்ணத்தி லெதுபதியும்? அதிலே அழகிருக்கும்.

    கொடியிடையின் அசைவுநடம் அழகுதான்; ஆனாலும் துடிப்படங்கித் தடுமாறும் தளர்நடையில் அழகிலையா ?

    இளஞ்சேயின் சிறுமழலை அழகுதான்; ஆனாலும்
    நலஞ்சிதைந்த முதியோர்தம் நடுக்கம் அழகிலையா?

    பனிமொழியின் இதழ்சுரக்கும் நீர்நலந்தான்; ஆனாலும்
    கனிந்தகிழத் திதழொழுகும் கடைவாய்நீர் அழகிலையா ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பதிலே அகம்தழுவின் அழகுவரும்.

    காலைக் கதிரொளியின் களிநடனம் தானழகா ?
    மாலைக் கருக்கிருட்டின் மைநடனம் அழகிலையா ?

    இருளோட்டும் கதிரோனின் எழிற்பயணம் தானழகா ?
    மருளூட்டும் இருள்வானச் சுடர்மீன்கள் அழகிலையா?

    இருட்டில் அழகிலையா ? இளஞ்சோடி சொல்லட்டும்.
    இருட்டறையில் குருட்டாட்ட இயக்கம் அழகிலையா ?

    சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்; ஆனாலும்
    அங்கிருக்கும் குள்ளநரித் தந்திரமும் அழகுதானே !

    கொல்லேற்றின் திமிலசைவு அழகுதான்; ஆனாலும்
    நல்லதொரு தாய்ப்பசுவின் மடியசைவும் அழகுதானே ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நங்கநல்லூர்—20-02-2000

    Share
  • மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு

    ரெ.கார்த்திகேசு

    ark

    (2006இல் தமிழ் சிஃபி சார்பில் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் ஒன்று தயாரித்தேன். அதில் நாடுகள்தோறும் தமிழ் என்ற கருப்பொருளில் கட்டுரைகள் பெற்று வெளியிட்டேன். அதற்கு மலேசியாவில் தமிழ் என்ற கருப்பொருளில் கட்டுரை வேண்டி, ரெ.கா.வை அணுகினேன். மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு என்ற தலைப்பில் அருமையான கட்டுரையினை வழங்கினார். அவரது மறைவுக்கு வல்லமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் அந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை இங்கே வெளியிடுகிறோம். – அண்ணாகண்ணன்)

    தொடக்கம்:

    மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு ஏறக் குறைய 130 ஆண்டுகள் வரலாறு இருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் செய்தி. மலேசியாவில், பினாங்கில் 1876-இல் “தங்கை நேசன்” என்னும் பத்திரிகை அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள செய்தி மலேசிய இலக்கிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப் பட்டுள்ளது. (மா. இராமையா: “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்). சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி” முதலிய நூல்கள் தொடக்கமாக அமைந்தன (ஏ.ஆர்எ. சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக் கவிதைகள்).

    இந்தத் தொடக்கங்களிலிருந்து இந்த இலக்கிய வரலாறு எழுச்சியும் தளர்ச்சியும் கண்டு தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. அச்சு வசதியும் ஊடக வளர்ச்சியும், அவற்றைப் பெறவும் பெருக்கவும் நிதி வசதியும் உள்ள இந்த நவீன கால கட்டத்தில் வாழும் நாம், இவையெல்லாம் மிக அரிதாக இருந்த ஒரு மங்கிய தொடக்க காலத்தில் உண்மையான தமிழ் மொழி பண்பாட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன், இந்த இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர்களான நம் முன்னோடிகளை மானசீகமாகப் போற்றி வணங்குதல் வேண்டும்.

    மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மறுவுயிர்ப்புக் காலமாக 1946-ஐ ஓர் எல்லைக் கோடாகக் காட்டுகிறார் மா. இராமையா. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மத்தியில் சிக்கிச் சீரழிந்த மலேசியாவில் அன்றாட வாழ்க்கையின் அவலங்களுக்கிடையில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க இலக்கியங்கள் ஏதும் தோன்றவில்லை. 1946-க்குப் பிந்திய இலக்கிய வரலாறு சி.வீ. குப்புசாமி எழுதிய “ஜப்பானியர் லாக்கப்பில் ஏழு நாட்கள்”, “யுத்தத்தால் வந்த யுத்தம்”, (இரண்டும் 1946) என்ற நூல்களுடன் தொடங்குவதும் பொருத்தம். சி.வீ.குப்புசாமி இவற்றைத் தொடர்ந்து மலேசியத் தமிழ் இலக்கியத்தின் கிரியா ஊக்கியாகவும், எழுத்தாளர் இயக்கங்களின் நடத்துநராகவும் (மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைமைப் பதவி உட்பட) நெடுநாட்கள் இருந்து மறைந்தார்.

    கதை வகுப்பு:

    1946-க்குப் பிறகு இந்த நாட்டு தமிழ்ப் புத்திலக்கியத் துறையில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு அக்காலத்து முன்னோடி எழுத்தாளர்களாகவும் விமர்சகர்களாகவும் இருந்த சுப. நாராயணனும் பைரோஜி நாராயணனும் “தமிழ் நேசன்” நாளேட்டில் 1950-இல் நடத்திய “கதை வகுப்பு” ஆகும். “இரண்டு நாராயணன்களும் கூடி நடத்திய கதை வகுப்பு கதை எழுதுவோருக்கு மட்டுமின்றி கவிதை, உரைநடை, நாடகம் ஆகியன எழுதுவோருக்கும் தக்க வழிகாட்டியாக அமைந்தது. இந்நாட்டில் எழுத்தாளர்களை உருவாக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு இ·தோர் சவாலாகவும் அமைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.” (மா. இராமையா: மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு).

    இந்த முயற்சியின் உச்சகட்டமாக 1951-இல் கதை வகுப்பு உறுப்பினர்களுக்கு ஒரு பரிட்சையும் வைத்தார்கள். மொழி, எழுத்து, ரசனை போன்றவற்றைப் பற்றியும், கதை வகுப்பு, மனத்தத்துவம், அரசியல் போன்ற குறிப்பிட்ட தலைப்புக்களைப் பற்றியுமான கேள்வி பதிலாக இது அமைந்திருந்தது. இவற்றில் வெற்றி பெற்றவர்களை மேதை எழுத்தாளார், சிறந்த எழுத்தாளர், தேர்ந்த எழுத்தாளர், நல்ல எழுத்தாளர், ஆர்வ எழுத்தாளர் என்று தரம் பிரித்து அறிவித்தார்கள்.

    மேதை எழுத்தாளர்கள் மூவர்: பி.ஏ.கிருஷ்ணதாசன் (தைப்பிங்); அ. இராமநாதன் (சுங்கை சிப்புட்); சி.மாரியப்பன் (காஜாங்).

    23 பேர் சிறந்த எழுத்தாளர்கள் என அறிவிக்கப் பட்டனர். அவர்களுள் பின்னாளில் இலக்கிய உலகில் முக்கியமானவர்களாக வளர்ந்த பெ.மு. இளம்வழுதி (குவால சிலாங்கூர்); கா.பெருமாள் (ரிங்லட்); சி. வடிவேல் (லாபு); சி. வேலுசாமி (ரந்தாவ்); எஸ்.எஸ். சர்மா (சிங்கப்பூர்) ஆகியோர் அடங்குவர்.

    தேர்ந்த எழுத்தாளர்கள் 17 பேர்கள் பட்டியலில் மா.இராமையா (மூவார்); கு.நா. மீனாட்சி (குவால சிலாங்கூர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நல்ல எழுத்தாளர்கள் 14 பேர்; ஆர்வ எழுத்தாளர்கள 18 பேர்.

    எழுத்தாளர் பேரவை:

    1952-இல் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் இன்னொரு முயற்சியாக சிங்கப்பூர் “தமிழ் முரசு” எழுத்தாளர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இதில் எழுத்தாளர்கள் உறுப்பியம் பெற்றனர். முதலாவதாகப் பேர் பதிந்து கொண்டவர் மா. செ. மாயதேவன். எழுத்தாளர் பேரவையின் விதி முறைகளில் ஒன்று உறுப்பினராகும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு படையலை உருவாக்க வேண்டும் என்பது. மற்றொன்று படைப்பிலக்கியம் எழுதும் எவரும் பேரவையின் வேறு இரண்டு உறுப்பினர்களுக்கு அதனை அனுப்பித் திருத்திய பின்னரே அதனை அச்சில் ஏற்ற வேண்டும் என்பது.

    இலக்கிய இதழ்கள்:

    46-க்குப் பிந்திய இலக்கிய இதழ்களில் முந்தியது முதலில் கா.இராமநாதனையும் பின்னர் தி.சு.சண்முகத்தையும் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “சோலை” திங்களிதழ் ஆகும். 1952 ஜனவரி தொடங்கி எட்டு மாதங்கள் மட்டுமே வெளிவந்திருந்தாலும் முன்னோடி எழுத்தாளர்களான சி.அன்பரசன், கா. அண்ணாமலை, கா. பிச்சைமுத்து, க.ப.சாமி, இராவணேசப் புலவர் (ஈப்போ), கிருஷ்ணதாசன், மா.செ. மாயதேவன், மா.இராமையா, அ. இராமநாதன் ஆகியோர் இதில் எழுதினர்.

    மாணவர் மணிமன்ற மலர்:

    1953-இல் “தமிழ் முரசு” நாளிதழ் “மாணவர் மணி மன்ற மலர்” என்ற வார இணைப்பு ஒன்றினைத் தொடங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்களும் சிறுவர்களும் இலக்கிய அறிமுகம் பெற வழியேற்படுத்திக் கொடுத்தது. பல பின்னாள் எழுத்தாளார்களுக்கு இதுவே பயிற்சிக் களமாகவும் அமைந்தது.

    மாணவர் மணிமன்ற மலரில் எழுதி பிற்காலத்தில் எழுத்துலகில் முக்கிய எழுத்தாளர்களாக வளர்ந்தவர்களில் ம. முருகையன் (முல்லை), மு. அப்துல் லத்தீப், சு. அப்துல் முத்தலிப், கு.கிருஷ்ணன், மு. சீனிவாசன், மைதி. அசன்கனி, பழ. அடைக்கலம் (தங்காக் தமிழ்ப் பாணன்), நீ.பெ.கலைச் செல்வன், ரெ.கார்த்திகேசு, செ.சின்னையா, அ.சந்திரசேகரன், சா.ஆ.அன்பானந்தன், ப.மு.அன்வர், கே.எம்.யூசுப், வே.சு.இளந்திரையன், மு.பக்ருதீன், மைதி. சுல்தான், அ.ரெசுவப்பா, வீ.தீனரட்சகி, ப.கு.சண்முகம் ஆகியோர் அடங்குவார்கள்.

    அந்தக் காலகட்டத்தில் கவிஞர்களாக இருந்த சோமசன்மா, முரசு. நெடுமாறன், கவி மதிதாசன், சி. வேலுசுவாமி, வளர்மதி முதலானோர் மணி மன்ற மலரில் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளனர்.

    சிறுகதைப் போட்டிகள்:

    50-களின் பிற்பகுதியில் “தமிழ் முரசு” நாளிதழ் மலேசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை நடத்தியது. அப்போது அதன் துணையாசிரியராக இருந்த வை. திருநாவுக்கரசு அவர்களே இந்தப் புதிய முயற்சியை ஊக்குவித்து நடத்தினார். இந்தப் போட்டியில் பிற்காலத்திய பல நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் தங்களை அடையாளம் காட்டினார்கள்: ரெ.கார்த்திகேசு, அ.ந.பெ.சாமி, பெ.மு.இளம்வழுதி, சி.அன்பரசன், மா.இராமையா, அ.கி.அறிவானந்தன், மு.கந்தன், கு.நா.மீனாட்சி, சி.வடிவேலு முதலானோர் இதில் பங்கு பற்றிப் பரிசுகள் பெற்றுள்ளனர்.

    ரசனை வகுப்பு:

    1953-இல் தமிழ் முரசு “ரசனை வகுப்பு” தொடங்கிற்று. “கதை வகுப்பு” நடத்தியவர்களில் ஒருவரான கந்தசாமி வாத்தியாரே ரசனை வகுப்பையும் நடத்தினார். ரசனை வகுப்பு இதழ்களை மட்டுமன்றி வானொலித் தமிழ் நிகழ்ச்சிகளையும் தீவிரமாக விமர்சனம் செய்தது. எதிலும் புரட்சி செய்ய வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவரான கந்தசாமி வாத்தியார் “அண்ணா அறிஞரா?” என்ற ஒரு கட்டுரையை எழுதி நீண்ட விவாதத்தையும் தொடக்கி வைத்தார்.

    தமிழ் எழுத்தாளர் மாநாடு:

    கந்தசாமி வாத்தியார் ஆரம்ப காலத்திலிருந்தே “தமிழ் எழுத்தாளர் மாநாடு” ஒன்றினைக் கூட்டும் ஆசை கொண்டிருந்தார். 29/10/55-இல் இது குவாலா லும்பூரில் தமிழ்க் கலை மன்றத்தினரால் கூட்டப் பட்டது. மாநாட்டுத் திறப்பாளராக மா. இராமையா இருந்தார். காலையில் நடைபெற்றக் கலந்துரையாடலுக்கு கோ.சாரங்கபாணி தலைமை தாங்கினார். பிற்பகலில் சி.வீ. குப்புசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆழி.அருள்தாசன் முதலியோர் அதில் பேசினார்கள். 29 பேரே அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றினார்கள். அவர்களில் இர.ந.வீரப்பன், எஸ்.வி.சுப்பிரமணியன், அ.மருதப்பன், சி.அன்பரசன், பெ.மு.இளம்வழுதி, சி.வடிவேல், மு.கந்தன், அ.ந.பெ. சாமி, மு.அப்துல் லத்தீப், கு.நா.மீனாட்சி, பழ. மனோகரன், செ.குணசேகர், அ.கதிர்ச் செல்வன், ஆகியோரும் இருந்தனர். கூட்டம் பற்றித் தலையங்கம் எழுதிய “திருமுகம்” இதழின் ஆசிரியர் மா.செ.மாயதேவன், அந்தக் கால கட்டத்திலேயே மலாயாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கதாகும்.

    மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க அமைப்பு:

    1955-இல் நடந்த இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர்களுக்கான சங்கம் ஒன்று அமைக்கும் எண்ணம் இவர்களிடையே ஓங்கி வந்தது. 5/7/1958-இல் சி.வேலுசாமி அவர்களின் முயற்சியில் மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க அமைப்புக் கூட்டம் குவால லும்பூர் பங்சார் தமிழ்ப்பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டோர்: தலைவர் சி.வீ.குப்புசாமி, துணைத்தலைவர் தி.சு.சண்முகம், செயலாளர் சி. வேலுசுவாமி, துணைச் செயலாளர் செ.குணசேகர், பொருளாளர் மு.அப்துல் லத்தீப். 2/2/1959-இல் இதற்குப் பதிவு கிடைத்தது.

    இதன் ஆண்டுக் கூட்டத்தில் தமிழ் நேசன் துணையாசிரியர் கனகசுந்தரம் புதிய தலைவராகவும் செ.குணசேகர் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதன் பிறகு சங்கம் செயலிழந்து அதன் பதிவும் ரத்தாகிற்று.

    அதன் பின் மீண்டும் சி.வேலுசுவாமியின் முயற்சியில் ஒரு அமைப்புக் கூட்டம் 1962-இல் கூட்டப்பட்டு பதிவுக்கான மறுமுயற்சிகள் செய்யப்பட்டன. 26/3/1963-இல் சங்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற புதிய பெயரில் பதிவு பெற்றது. புதிய சங்கத்தின் நிர்வாகிகள் பின் வருமாறு: தலைவர் முருகு சுப்பிரமணியம்; துணைத்தலைவர் சி.வேலுசுவாமி; செயலாளர் சு.கணபதி; பொருளாளர் கு.ஏழுமலை; செயற்குழுவினர் சி.வீ.குப்புசாமி, இர.ந.வீரப்பன், க.கிருஷ்ணசாமி முதலியோர். இந்தச் சங்கத்தின் தொடர்ச்சியே இன்று பெ. ராஜேந்திரனின் தலைமையில் இயங்கி வருவதாகும்.

    தமிழர் திருநாள்:

    50-களின் மத்திக்கும் 60-களின் மத்திக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில்தான் கோ.சாரங்கபாணி தமிழர்களை ஒருமுகப் படுத்தும் முகமாகவும் தமிழ் மொழி பண்பாட்டு எழுச்சியை ஊட்டும் முகமாகவும் தமிழர் திருநாளைத் தொடங்கினார். பல ஆண்டுகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் இலக்கியப் போட்டிகளையும் விரிவாக நடத்தி இலக்கியத்தை வளர்த்தது.

    கு. அழகிரிசாமி:

    50-களின் மத்தியில் தமிழ் நாட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி “தமிழ் நேசன்” நாளிதழுக்கு ஆசிரியராக வந்தமர்ந்தார். படைப்பிலக்கியத்தை ஊக்குவிப்பதையும் அவர் ஒரு நோக்கமாகக் கொண்டார். அவரை மையமாகக் கொண்டு குவாலா லும்பூரில் இலக்கிய வட்டம் ஒன்று அமைந்தது. 55-இல் இதனை முன்னின்று அமைத்தவர் கி.மூர்த்தி. மாதம் ஒருமுறை கூடிய இந்த இலக்கிய வட்டத்தில் தலை நகர் தவிர கிள்ளான், செரம்பான், குவால செலாங்கூர் போன்ற இடங்களிலிருந்தும் அன்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள். முதன் முறையாக சிறுகதையின் உத்தி, நடை, கருத்து, அமைப்பு ஆகியவை பற்றி அறிவு பூர்வமான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கு.அ. இலக்கிய வட்டத்தில் வாசிக்கப் பட்ட கதைகளைத் தமிழ் நேசனில் வெளியிட்டும் வந்தார்.

    கு.அ.வின் கணிப்பில் சிறந்த எழுத்தாளர்களாகச் சிலர் குறிக்கப் பட்டனர். அவர்களுள் மு.அப்துல் லத்தீப், வி.ச.முத்தையா, மு.இராச இளவழகு, மா.செ.மாயதேவன், மா.இராமையா, சி.வடிவேலு, செ.குணசேகர், சி.வேலுசாமி, பொ.ச.பரிதிதாசன், சி.அன்பரசன், சி.கமலநாதன், நாகு மணாளன், அ.பேச்சிமுத்து, அ.கி.அறிவானந்தன், ந.அநந்தராஜ் ஆகியோர் இருந்தனர். கு.அ. 1957-இல் தமிழ் நாடு திரும்பு முன் இலக்கிய வட்டம் நிறுத்தப் பட்டது.

    நூல் வெளியீடு:

    1952-இல்தான் புத்திலக்கியப் படைப்பு நூலாக மா.இராமையா, மா.செ. மாயதேவன் இருவரும் இணைந்து எழுதிய சிறுகதைத் தொகுப்பான “இரத்த தானம்” வந்தது. இந்த நூல் குறித்து எழுத்தாளர் பேரவை “பேரவைக்குப் பூரிப்பு; மலாயாத் தமிழ்ப் பெருமக்களுக்கு பெருமை” என எழுதியது.

    மலாயா சுதந்திரம் பெற்ற 1957-இலிருந்து இங்கு எழுதப்படும் படைப்பிலக்கியங்கள் பெருகின. பல நூல்களும் வெளியாயின. வார, மாத இதழ்கள் பலவும் தோன்றி படைப்பாளர்களுக்கு உள்ள வாய்ப்புக்களை விரிவாக்கின. மலாயா (பின்னர் மலேசியா) தமிழ் எழுத்தாளர் இயக்கமும் படைப்பிலக்கியத்துக்கு தொடர்ந்து உயிரும் உணர்ச்சியும் ஊட்டி வந்தது.

    மணிக்கதைகள்

    மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தனது சமுகப் பணிகளுக்கிடையே ஆற்றி வந்த இலக்கியப் பணியின் ஒரு உச்சமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றினைக் கொண்டு வந்தது. 1968-இல் வெளிவந்த “மணிக்கதைகள்” என்னும் தொகுப்பு அக்கால கட்டத்தில் மலேசிய இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சியை நன்கு பிரதிபலிப்பதாக அமைந்தது. “தீபம்” நா. பார்த்தசாரதியின் முன்னுரையுடனும், டாக்டர் இராம சுப்பையாவின் அணிந்துரையுடனும், இலங்கை இரசிகமணி கனக. செந்தில்நாதனின் ஆய்வுரையுடனும், மன்றத்தலைவர் க.கிருஷ்ணசாமியின் முகமனுடனும் வெளியான இந்நூலில் சா.ஆ.அன்பானந்தன், க.கிருஷ்ணசாமி, சாமி.மூர்த்தி, ரெ.கார்த்திகேசு, எம்.குமாரன், சை.பீர் முகம்மது, பரிதாமணாளன், பாதாசன், மு.க.மா. முத்தமிழ்ச் செல்வன், சோ.பரஞ்சோதி ஆகியோரின் கதைகள் இடம் பெற்றிருந்தன.

    பவுன் பரிசுகள்:

    சிறுகதைத் துறைக்கு முருகு சுப்பிரமணியனை ஆசிரியராகக் கொண்ட “தமிழ் நேசன்” 1972-இல் தொடங்கிய பவுன் பரிசுத் திட்டம் ஒரு பெரும் புத்துணர்ச்சியைத் தந்தது. இதில் நடுவர்களாக இருந்து கதைகளைத் தேர்ந்தெடுக்க நல்ல இலக்கியவாதிகளையும் முருகு தன்னுடன் துணைக்கு அழைத்துக் கொண்டார். அவர்களுள் டாக்டர் ஆர்.தண்டாயுதம், புலவர் சேதுராமன், எஸ்.ஆர்.எம்.பழனியப்பன், ரெ.கார்த்திகேசு, டாக்டர் பிரமீளா கணேசன் ஆகியோரும் அடங்குவர்.

    சி.அன்பானந்தம், அரு.சு.ஜீவானந்தன், இராம வீரசிங்கம், மு.அன்புச்செல்வன், எம்.ஏ.இளஞ்செல்வன், இராம கண்ணபிரான், ஆர்.சண்முகம், இ.தெய்வானை, சாமி மூர்த்தி, சீ.முத்துசாமி, பாவை, சி.வடிவேல், ந.மகேசுவரி, மா. இராமையா ஆகியோர் பவுன் பரிசு பெற்றோர் பட்டியலில் அடங்குவார்கள். முதல் ஆண்டில் பரிசு பெற்றவர்களைக் கூட்டித் தமிழ் நேசன் ஒரு உபசரிப்பு விருந்து நடத்தி அனைவருக்கும் பரிசு வழங்கியதுடன் முதல் பனிரெண்டு கதைகளை “பவுன் பரிசுக் கதைகள்” என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பாகவும் கொண்டு வந்தது.

    இதன் பின்னர் தொடங்கப்பட்ட கவிதைக்கான பவுன் பரிசுப் போட்டியில் வே.மகேந்திரன், கரு வேலுசாமி, ஆதம் குமார், எல்லோன், கன்னல் கவி கரீம், வீரமான், காரைக்கிழார், சோம சன்மா, கரு.திருவரசு, எஸ்.கே. வடிவேலு, சங்கு சண்முகம் முதலியோர் பரிசு பெற்றனர்.

    மாதாந்திரச் சிறுகதைக் கருத்தரங்கம்:

    தமிழ் நேசன் வழியாக எழுத்தாளர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிவந்த முருகு, அதே நேரத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பேற்று சில ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல் படுத்தி வந்தார். அவற்றுள் முக்கியமானது சிறுகதைக்கான மாதாந்திரக் கருத்தரங்கங்களைக் கூட்டி ஒவ்வொரு மாதத்திற்கும் சிறந்த ஒரு கதைக்கு 50 ரிங்கிட் பரிசு வழங்கி வந்ததாகும்.

    இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் முதல் தொகுதி 1974-இல் “பரிசு” என்னும் தலைப்பில் வெளியானது. 14 கதைகள் இதில் இடம்பெற்றன. இவற்றை எழுதிய எழுத்தாளர்கள்: மீனா நடராஜா, ரெ.கார்த்திகேசு, ஆ.சாரதா, சாமி மூர்த்தி, சுமதி தங்கராஜ், த.ப.இலட்சுமணன், சக்கரவர்த்தி சுப்பிரமணியன், ஐ.இளவழகு, சி.வடிவேல், மா.சுப்பிரமணியம், மா.இராமையா, இரா.ச. இளமுருகு, துளசி, நாடோடி.

    ஒரு சில ஆண்டுகள் விடுபட்டிருந்த மாதாந்திரத் தங்கப் பதக்க விருதளிப்பு ஆதி குமணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குத் தலைவராக வந்த பிறகு உயிர்ப்பிக்கப் பட்டுத் தொடர்ந்து இன்றும் நடை பெற்று வருகிறது. இதனை அடியொற்றி கவிதைக்கும் இப்போது காலவாரியாகக் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

    பேரவைக் கதைகள்:

    1970-களில் இரா.தண்டாயுதம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் துறையில் புத்திலக்கிய விரிவுரையாளராக வந்து சேர்ந்தார். மலேசியப் படைப்பிலக்கியத்துக்கு அவர் ஆற்றிய சேவைகள் அதிகம். அவருடைய ஆலோசனையின் கீழ் மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் முயற்சியில் தொடங்கப்பட்ட ஆண்டுச் சிறுகதைப் போட்டி இந்த நாட்டின் சிறுகதை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக ஆகியுள்ளது. 1986 முதல் இதில் பரிசு பெற்ற கதைகள் நூல் உருவில் வந்து கொண்டுள்ளன.

    மலேசியத் தமிழ் இலக்கியம்:

    இரா. தண்டாயுதம் பதவிக் காலம் முடிந்து தமிழகம் திரும்பி அங்கே அகால மரணமடைந்த பிறகு அவருடைய நினைவாக “டாக்டர் தண்டாயுதம் நினைவிலக்கியப் பேரவை” தொடங்கப் பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர் அவருடைய நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான வீ.செல்வராஜ் ஆகும். பேரவை மூலம் வீ. செல்வராஜ் ஆற்றிய முக்கிய பணி ஆண்டு தோறும் “மலேசியத் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் சிறுகதைகள், கவிதைகள், ஒரு குறுநாவல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுப்பை வெளியிட்டதாகும். இந்தத் தொகுப்புக்களை குறிப்பாக வெளிநாட்டுத் தமிழர்களிடையே மலேசிய இலக்கியத்தை அறிமுகப் படுத்தும் கருவியாக செல்வராஜ் கருதி அப்படியே செயல் படுத்தினார். 1988 – 1994 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு தொகுப்புகள் வெளியாகின.

    நூல் பதிப்புகள்

    1950-களிலிருந்தே இந்த நாட்டின் எழுத்தாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் புத்தகப் பதிப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். கட்டுரைத் தொகுப்புகள், ஆய்வு நூல்கள், கவிதைத் தொகுப்புகள், காவியங்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், புதுக்கவிதைத் தொகுப்புகள் ஆகியவை காலந்தோறும் பதிப்பிக்கப்பட்டு மலேசியத் தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்துள்ளன.

    1995-இல் இலங்கை எழுத்தாளரான மாத்தளை சோமு, மலேசியச் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து “மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் தமிழ் நாட்டில் பதிப்பித்தார். இந்தத் தொகுப்பு பின்னர் மலேசிய இடை நிலைப் பள்ளிகளில் பாடப் புத்தகமாகவும் வைக்கப் பட்டது.

    1998-இல் “மலேசிய நண்பன்” நாளிதழ் சிறந்த எழுத்தாளர்கள் பதின்மூவரை அழைத்து சிறுகதைகள் எழுதச் சொல்லி அவர்களுக்கு ஆளுக்கொரு உயர்ந்த ரகக் கடிகாரத்தையும் பரிசாக அளித்தது. “கடிகாரக் கதைகள்” என்ற தொடரில் வெளியான இக்கதைகளைப் பின்னர் “சமுதாயக் கதைகள்” (1999) என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட்டு அதற்குப் பெரும் வெளியீட்டு விழாவையும் நடத்தியது.

    2003-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் பழம்பெரும் இதழான “கலைமகள்” ஆசிரியர் கீழாம்பூர் அவர்களின் முயற்சியில் 32 மலேசியச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகள் “மலேசியச் சிறுகதைகள்” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன.

    ஆண்டு தோறும் விருதுகள்:

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998 முதல் காலஞ் சென்ற அமைச்சர் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் நினைவாக ஆண்டின் ஒரு சிறந்த நூலுக்கு “டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு” என்ற பெயரில் சான்றிதழும் 5000 ரிங்கிட் ரொக்கமும் அளித்துக் கௌரவித்து வருகிறது. இந்தப் பரிசை இதுவரை வென்றவர்கள்: “மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்னும் நூலுக்காக முரசு நெடுமாறன் (1998); “அந்திம காலம்” நாவலுக்காக ரெ.கார்த்திகேசு (1999); “சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்” என்னும் ஆய்வுக் கட்டுரை நூலுக்காக கே.எம்.குணா (2000); “அமாவாசை நிலவு” நாவலுக்காக மா. இராமையா (2001); “ஆர். சண்முகம் கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்காக ஆர். சண்முகம் (2002); “செய்கு கனான் காவியம்“ நூலுக்காக ப.மு.அன்வர் (2003), “மனமே சுகமே” கட்டுரை நூலுக்காக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி (2004); “ஊசி இலை மரம்” சிறுகதைத் தொகுபுக்காக ரெ.கார்த்திகேசு (2005).

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1983 தொடங்கி எழுத்தாளர்களுக்கும் எழுத்துத் துறைக்குப் பணி புரிந்தவர்களுக்கும் ஆண்டு தோறும் தங்கப் பதக்கங்கள் வழங்கிப் பெருமைப் படுத்தி வருகிறது. இவை மலேசியாவில் தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த பெரியவர்கள் பெயர்களில் வழங்கப் படுகின்றன: மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் பேராசிரியர் தனிநாயக அடிகளார், தமிழர் திருநாளின் தந்தை தமிழவேள் கோ.சாரங்கபாணி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அடிநாள் தலைவரும் பத்திரிகையாசிரியருமான திரு சி.வீ.குப்புசாமி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பத்திரிகையாசிரியரும் இலக்கியவாதியுமான முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன், தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தலைவரும் கலைஞரும் எழுத்தாளருமான சமூகக் கலைமாமணி சா.ஆ.அன்பானந்தன் ஆகியோரின் நினைவாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுவரை சுமார் 80 பேருக்கு இவ்விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் மறைந்த பத்திரிகாசிரியரும் அரசியல்வாதியும் அமைச்சருமான டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் பெயரிலும் அவருடைய குடும்பத்தாரின் ஆதரவுடன் ஆண்டு தோறும் விருதுகளும் நிதியும் அளிக்கப்படுகிறது.
    இது தமிழ் எழுத்து, பண்பாடு, கலை என்ற பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு அளிக்கப் படுகிறது. இதுவரை ஏறக் குறைய 45 பேர் இந்தப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

    மலேசிய பாரதிதாசன் இலக்கிய அமைப்பும் ஆண்டு தோறும் பெரிய அளவில் “எழுத்தாளர் தினம்” ஒன்றினை நடத்தி எழுத்தாளர்களுக்கு விருதுகள் அளித்துக் கௌரவித்து வருகிறது. இவற்றுள் சிறந்ததாக சங்கிலிமுத்து – அங்கம்மாள் விருது ஒவ்வொரு ஆண்டும் 5000 ரிங்கிட் பணத்துடன் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவற்றோடு மலேசியப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கும் டத்தோ பத்மனாதன் விருதும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை தனது ஆண்டுக் கூட்டத்தின் போது வழங்கும் விருதுகளும் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து முயற்சிகளுக்குப் பெரும் தூண்டுகோல்களாக விளங்கி வருகின்றன.

    முடிவுரை:

    தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கையைத் தவிர்த்து மலேசியாவில்தான் தமிழ் இலக்கிய உற்பத்தி அடர்த்தியாக இருக்கிறது. மலேசியத் தமிழ் நாளிதழ்களும் காலவாரி இதழ்களும் படைப்பிலக்கியத்துக்கு மிகச் சிறந்த ஆதரவை அளித்து வருகின்றன. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இந்நாட்டில் படைப்பிலக்கியத்தை செழுமைப் படுத்த தொடர்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மலேசியத் தமிழ் சமுதாயத்தில் தீவிரமான தமிழ்ப் பற்றும் தமிழைக் காலங் காலமாக வாழ வைக்க வேண்டும் என்னும் அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளன. இவை தொடர்ந்து நிலைத்திருக்கும் வரையிலும் படைப்பிலக்கியச் செழுமை தொடர்ந்து அதிகரித்தே வரும்.

    (முடிந்தது)

    நன்றி: தமிழ் சிஃபி – தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் 2006

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 47

    க. பாலசுப்பிரமணியன்

    education-1-1-1

    கற்றலில் தடங்கல்களும் அதற்கான தனிப்பட்ட கற்றல் முறைகளும்

    மூளையின் சில பகுதிகளில் எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டாலும் ஒருவருடைய கற்றலின் திறன்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. சில சிறப்பான  விதிமுறைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் அந்த பாதிப்புகளின் தாக்கங்களை ஓரளவுக்குச்  சீர் செய்து அவர்களை மற்ற திறன் உள்ளவர்களோடு இணையாக உருவாக்கவும் கருதவும்  முடியும்.

    கனடாவைச் சேர்ந்த பார்பாரா ஆர்ரோவ் ஸ்மித் யங் என்ற பெண்மணி 1951ல் பிறந்தவர். இவருக்கு இளம் வயதிலிருந்தே கற்றலில் பல தடைகள் இருந்தன. மருத்துவ முறையில் சோதித்த பொழுது இவரது மூளையில் சில வலைத்தளங்களிலும் மூளையின் இருபகுதிகளின் இணைப்பிலும் சில தடங்கல்கள் இருந்தது கண்டறியப்பட்டது.  இவர் முதலாவது வகுப்பு படிக்கும் பொழுதே எழுத்துக்களை ஒருங்கிணைத்துப் படிப்பதிலும்  மற்றும் எண்களை அறிந்துகொள்வதிலும் கணிப்பதிலும் குறைகள் அறியப்பட்டன. அவரது தாயார் ஒரு ஆசிரியையாக இருந்ததனால் சிறிதளவு உதவி கிடைத்தாலும் படிக்கும் பொழுது எழுத்துக்களை பின்னிருந்து முன்னோக்கிப் படிக்கின்ற முறையைப் பின் பற்றினார்.

    தன்னுடைய  கற்றலின் தடைகளை முற்றிலும் உணர்ந்த அவருடைய ஆர்வம் கற்றலிலிருந்து சற்றும் குறையவில்லை. பின்பு ஆராய்ச்சிகளின் மூலம் கற்றலுக்கான வலைத்தளங்களில் தடங்கல்கள் இருந்தாலும் வேறு முறைகள் மூலம் கற்றலைச் சீரமைக்க முடியும் என்பதை அறிந்த அவர், இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். இவருடைய ஆராய்ச்சியின்படி கற்றலில் தடங்கல்களையும் சோதனைகளையும் சந்திப்பவர்களுக்கு கற்றலின்  நேரத்தை மட்டும் அதிகரித்தால் பயன் ஏற்படுவதில்லை என்றும், ஒவ்வொரு அறிதல் புரிதலின் நிகழ்வுகளையும் அதில் ஏற்படும் தடங்கல்களை தனிப்படுத்தி அதற்கான தனிப்பட்ட கற்றல் முறைகளை வகுத்தல் அவசியம் என்றும் கண்டறிந்தார்.

    அதற்கு முதல் பயனாளியாகத் தன்னையே வைத்துக்கொண்டு தனது கற்றலின் முறைகளை மாற்றியமைத்து வெற்றியும் கண்டார். அதன் அடிப்படையில் தன்னைப் போன்று கற்றலில் சோதனைகளைச் சந்திக்கும் குழந்தைகளுக்காக தனிப்பட்ட ஒரு பள்ளியையும் தொடங்கினார்.

    “ஆர்ரோவ்ஸ்மித் யங் பள்ளி” என அழைக்கப்படும் இப்பள்ளியில் ஒவ்வொரு மாணவருக்கான கற்றலின் வழிமுறைகளும் அதனுடைய வளர்ச்சியின் வெற்றிப்படிகளைத் தொடர்ந்து கண்காணித்து மேலும் கற்றலுக்கான வழிகளை வகுத்தும் கல்விமுறை செயல் படுத்துப்படுகிறது. உலக அளவில் புகழ்பெற்ற இந்தப் பள்ளி கனடாவில் உள்ள “டொராண்டோ” என்ற நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் வெற்றி உலக அளவில் கற்றலில் சோதனைகளை சந்திக்கும் மாணவர்களுக்கு வழிமுறைகளை வகுப்பதற்கு முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

    போலாந்தைச் சேர்ந்த மைகேல் நஜாப் என்பவர் ஒரு சிறந்த சதுரங்க விளையாட்டு வல்லுநர். இவர் உலக அளவிலே பல சாதனைகளை படைத்தவர். 1939 ம் ஆண்டு இரண்டாவது உலகப் போரின் பொழுது ஜெர்மனி இவருடைய நாட்டைத் தாக்கிய பொழுது இவர் வெளிநாட்டில் சதுரங்க விளையாட்டில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். தன்னுடைய குடும்பத்தாருக்குத் தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் வண்ணம் உலக சாதனையைச் செய்ய விரும்பிய இவர் தன் கண்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு விளையாட நினைத்தார். அதன்படி தன் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் 45 சதுரங்க  ஆட்டங்களை ஆடினார். இவற்றில் 39 ஆட்டங்களில் வெற்றியும் 4 ஆட்டங்களில் டிராவையும் பெற்று இரண்டு ஆட்டங்களில் மட்டும் தோல்வியுற்றார். கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் மற்றவர்கள் தங்கள் காய்களை எங்கே நகற்றுகிறார்கள் என்று காதால் மட்டும் கேட்டுத் தன் மனக்கண்களால் சதுரங்கத்தை தன் மூளையிலே ஆடிக்கொண்டிருந்தார்.

    இதன் மூலம் ஒருவருக்கு உடலின் ஒரு பாகம் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ செயலிழக்கப்பட்டாலும் மற்ற உறுப்புக்களின் உதவிகொண்டு மூளையை பயன் படுத்தி வெற்றி பெற முடியும் என்பதற்குச் சான்று கிடைத்தது. இந்தக் கருத்து பலவகையில் ஊனமுற்றவர்கள் திறன்களை மேம்படுத்துவதிலும் அவர்களை மற்றவர்களுக்குச் சரிநிகர் சமானமாக செயல் படுத்த வைப்பதற்கும் துணையாக அமைந்தது.  . இதனால்தான் மாற்றுத் திறனாளிகளில் பலருக்கு அங்க ஊனங்கள் இருந்தாலும் அவர்களுடய வேறுபட்ட திறன்கள் மிகச் சிறப்பாகவும் மற்றவர்களுடைய திறன்களுக்குச் சமமாக ஈடுகொடுக்கும் நிலையிலும் அமைகின்றது. இதை உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்த பழமொழி ” நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறையில் நான் கற்றுக்கொள்ளவில்லை என்றால் . நான் கற்றுக்கொள்ளும் முறையில் நீங்கள் எனக்கு கற்றுக்கொடுங்கள் *( If I don’t learn the way you teach, teach me the way I learn)” என்பதே.

    இன்றய காலகட்டத்தில் கற்றலில் சோதனையுடைய மாணவர்களை தனிப்படுத்தாமல் அவர்களை மற்றவர்களுடன் ஒன்றுபடுத்தி ஒருங்கிணைந்த கல்வியை (Inclusive education) அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப் படுகின்றது.

    (தொடரும் )

    Share