க. பாலசுப்பிரமணியன்

education-1-1-1

கற்றலில் தடங்கல்களும் அதற்கான தனிப்பட்ட கற்றல் முறைகளும்

மூளையின் சில பகுதிகளில் எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டாலும் ஒருவருடைய கற்றலின் திறன்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. சில சிறப்பான  விதிமுறைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் அந்த பாதிப்புகளின் தாக்கங்களை ஓரளவுக்குச்  சீர் செய்து அவர்களை மற்ற திறன் உள்ளவர்களோடு இணையாக உருவாக்கவும் கருதவும்  முடியும்.

கனடாவைச் சேர்ந்த பார்பாரா ஆர்ரோவ் ஸ்மித் யங் என்ற பெண்மணி 1951ல் பிறந்தவர். இவருக்கு இளம் வயதிலிருந்தே கற்றலில் பல தடைகள் இருந்தன. மருத்துவ முறையில் சோதித்த பொழுது இவரது மூளையில் சில வலைத்தளங்களிலும் மூளையின் இருபகுதிகளின் இணைப்பிலும் சில தடங்கல்கள் இருந்தது கண்டறியப்பட்டது.  இவர் முதலாவது வகுப்பு படிக்கும் பொழுதே எழுத்துக்களை ஒருங்கிணைத்துப் படிப்பதிலும்  மற்றும் எண்களை அறிந்துகொள்வதிலும் கணிப்பதிலும் குறைகள் அறியப்பட்டன. அவரது தாயார் ஒரு ஆசிரியையாக இருந்ததனால் சிறிதளவு உதவி கிடைத்தாலும் படிக்கும் பொழுது எழுத்துக்களை பின்னிருந்து முன்னோக்கிப் படிக்கின்ற முறையைப் பின் பற்றினார்.

தன்னுடைய  கற்றலின் தடைகளை முற்றிலும் உணர்ந்த அவருடைய ஆர்வம் கற்றலிலிருந்து சற்றும் குறையவில்லை. பின்பு ஆராய்ச்சிகளின் மூலம் கற்றலுக்கான வலைத்தளங்களில் தடங்கல்கள் இருந்தாலும் வேறு முறைகள் மூலம் கற்றலைச் சீரமைக்க முடியும் என்பதை அறிந்த அவர், இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். இவருடைய ஆராய்ச்சியின்படி கற்றலில் தடங்கல்களையும் சோதனைகளையும் சந்திப்பவர்களுக்கு கற்றலின்  நேரத்தை மட்டும் அதிகரித்தால் பயன் ஏற்படுவதில்லை என்றும், ஒவ்வொரு அறிதல் புரிதலின் நிகழ்வுகளையும் அதில் ஏற்படும் தடங்கல்களை தனிப்படுத்தி அதற்கான தனிப்பட்ட கற்றல் முறைகளை வகுத்தல் அவசியம் என்றும் கண்டறிந்தார்.

அதற்கு முதல் பயனாளியாகத் தன்னையே வைத்துக்கொண்டு தனது கற்றலின் முறைகளை மாற்றியமைத்து வெற்றியும் கண்டார். அதன் அடிப்படையில் தன்னைப் போன்று கற்றலில் சோதனைகளைச் சந்திக்கும் குழந்தைகளுக்காக தனிப்பட்ட ஒரு பள்ளியையும் தொடங்கினார்.

“ஆர்ரோவ்ஸ்மித் யங் பள்ளி” என அழைக்கப்படும் இப்பள்ளியில் ஒவ்வொரு மாணவருக்கான கற்றலின் வழிமுறைகளும் அதனுடைய வளர்ச்சியின் வெற்றிப்படிகளைத் தொடர்ந்து கண்காணித்து மேலும் கற்றலுக்கான வழிகளை வகுத்தும் கல்விமுறை செயல் படுத்துப்படுகிறது. உலக அளவில் புகழ்பெற்ற இந்தப் பள்ளி கனடாவில் உள்ள “டொராண்டோ” என்ற நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் வெற்றி உலக அளவில் கற்றலில் சோதனைகளை சந்திக்கும் மாணவர்களுக்கு வழிமுறைகளை வகுப்பதற்கு முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

போலாந்தைச் சேர்ந்த மைகேல் நஜாப் என்பவர் ஒரு சிறந்த சதுரங்க விளையாட்டு வல்லுநர். இவர் உலக அளவிலே பல சாதனைகளை படைத்தவர். 1939 ம் ஆண்டு இரண்டாவது உலகப் போரின் பொழுது ஜெர்மனி இவருடைய நாட்டைத் தாக்கிய பொழுது இவர் வெளிநாட்டில் சதுரங்க விளையாட்டில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். தன்னுடைய குடும்பத்தாருக்குத் தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் வண்ணம் உலக சாதனையைச் செய்ய விரும்பிய இவர் தன் கண்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு விளையாட நினைத்தார். அதன்படி தன் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் 45 சதுரங்க  ஆட்டங்களை ஆடினார். இவற்றில் 39 ஆட்டங்களில் வெற்றியும் 4 ஆட்டங்களில் டிராவையும் பெற்று இரண்டு ஆட்டங்களில் மட்டும் தோல்வியுற்றார். கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் மற்றவர்கள் தங்கள் காய்களை எங்கே நகற்றுகிறார்கள் என்று காதால் மட்டும் கேட்டுத் தன் மனக்கண்களால் சதுரங்கத்தை தன் மூளையிலே ஆடிக்கொண்டிருந்தார்.

இதன் மூலம் ஒருவருக்கு உடலின் ஒரு பாகம் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ செயலிழக்கப்பட்டாலும் மற்ற உறுப்புக்களின் உதவிகொண்டு மூளையை பயன் படுத்தி வெற்றி பெற முடியும் என்பதற்குச் சான்று கிடைத்தது. இந்தக் கருத்து பலவகையில் ஊனமுற்றவர்கள் திறன்களை மேம்படுத்துவதிலும் அவர்களை மற்றவர்களுக்குச் சரிநிகர் சமானமாக செயல் படுத்த வைப்பதற்கும் துணையாக அமைந்தது.  . இதனால்தான் மாற்றுத் திறனாளிகளில் பலருக்கு அங்க ஊனங்கள் இருந்தாலும் அவர்களுடய வேறுபட்ட திறன்கள் மிகச் சிறப்பாகவும் மற்றவர்களுடைய திறன்களுக்குச் சமமாக ஈடுகொடுக்கும் நிலையிலும் அமைகின்றது. இதை உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்த பழமொழி ” நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறையில் நான் கற்றுக்கொள்ளவில்லை என்றால் . நான் கற்றுக்கொள்ளும் முறையில் நீங்கள் எனக்கு கற்றுக்கொடுங்கள் *( If I don’t learn the way you teach, teach me the way I learn)” என்பதே.

இன்றய காலகட்டத்தில் கற்றலில் சோதனையுடைய மாணவர்களை தனிப்படுத்தாமல் அவர்களை மற்றவர்களுடன் ஒன்றுபடுத்தி ஒருங்கிணைந்த கல்வியை (Inclusive education) அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப் படுகின்றது.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *