மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு

0

ரெ.கார்த்திகேசு

ark

(2006இல் தமிழ் சிஃபி சார்பில் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் ஒன்று தயாரித்தேன். அதில் நாடுகள்தோறும் தமிழ் என்ற கருப்பொருளில் கட்டுரைகள் பெற்று வெளியிட்டேன். அதற்கு மலேசியாவில் தமிழ் என்ற கருப்பொருளில் கட்டுரை வேண்டி, ரெ.கா.வை அணுகினேன். மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு என்ற தலைப்பில் அருமையான கட்டுரையினை வழங்கினார். அவரது மறைவுக்கு வல்லமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் அந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை இங்கே வெளியிடுகிறோம். – அண்ணாகண்ணன்)

தொடக்கம்:

மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு ஏறக் குறைய 130 ஆண்டுகள் வரலாறு இருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் செய்தி. மலேசியாவில், பினாங்கில் 1876-இல் “தங்கை நேசன்” என்னும் பத்திரிகை அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள செய்தி மலேசிய இலக்கிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப் பட்டுள்ளது. (மா. இராமையா: “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்). சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி” முதலிய நூல்கள் தொடக்கமாக அமைந்தன (ஏ.ஆர்எ. சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக் கவிதைகள்).

இந்தத் தொடக்கங்களிலிருந்து இந்த இலக்கிய வரலாறு எழுச்சியும் தளர்ச்சியும் கண்டு தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. அச்சு வசதியும் ஊடக வளர்ச்சியும், அவற்றைப் பெறவும் பெருக்கவும் நிதி வசதியும் உள்ள இந்த நவீன கால கட்டத்தில் வாழும் நாம், இவையெல்லாம் மிக அரிதாக இருந்த ஒரு மங்கிய தொடக்க காலத்தில் உண்மையான தமிழ் மொழி பண்பாட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன், இந்த இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர்களான நம் முன்னோடிகளை மானசீகமாகப் போற்றி வணங்குதல் வேண்டும்.

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மறுவுயிர்ப்புக் காலமாக 1946-ஐ ஓர் எல்லைக் கோடாகக் காட்டுகிறார் மா. இராமையா. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மத்தியில் சிக்கிச் சீரழிந்த மலேசியாவில் அன்றாட வாழ்க்கையின் அவலங்களுக்கிடையில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க இலக்கியங்கள் ஏதும் தோன்றவில்லை. 1946-க்குப் பிந்திய இலக்கிய வரலாறு சி.வீ. குப்புசாமி எழுதிய “ஜப்பானியர் லாக்கப்பில் ஏழு நாட்கள்”, “யுத்தத்தால் வந்த யுத்தம்”, (இரண்டும் 1946) என்ற நூல்களுடன் தொடங்குவதும் பொருத்தம். சி.வீ.குப்புசாமி இவற்றைத் தொடர்ந்து மலேசியத் தமிழ் இலக்கியத்தின் கிரியா ஊக்கியாகவும், எழுத்தாளர் இயக்கங்களின் நடத்துநராகவும் (மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைமைப் பதவி உட்பட) நெடுநாட்கள் இருந்து மறைந்தார்.

கதை வகுப்பு:

1946-க்குப் பிறகு இந்த நாட்டு தமிழ்ப் புத்திலக்கியத் துறையில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு அக்காலத்து முன்னோடி எழுத்தாளர்களாகவும் விமர்சகர்களாகவும் இருந்த சுப. நாராயணனும் பைரோஜி நாராயணனும் “தமிழ் நேசன்” நாளேட்டில் 1950-இல் நடத்திய “கதை வகுப்பு” ஆகும். “இரண்டு நாராயணன்களும் கூடி நடத்திய கதை வகுப்பு கதை எழுதுவோருக்கு மட்டுமின்றி கவிதை, உரைநடை, நாடகம் ஆகியன எழுதுவோருக்கும் தக்க வழிகாட்டியாக அமைந்தது. இந்நாட்டில் எழுத்தாளர்களை உருவாக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு இ·தோர் சவாலாகவும் அமைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.” (மா. இராமையா: மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு).

இந்த முயற்சியின் உச்சகட்டமாக 1951-இல் கதை வகுப்பு உறுப்பினர்களுக்கு ஒரு பரிட்சையும் வைத்தார்கள். மொழி, எழுத்து, ரசனை போன்றவற்றைப் பற்றியும், கதை வகுப்பு, மனத்தத்துவம், அரசியல் போன்ற குறிப்பிட்ட தலைப்புக்களைப் பற்றியுமான கேள்வி பதிலாக இது அமைந்திருந்தது. இவற்றில் வெற்றி பெற்றவர்களை மேதை எழுத்தாளார், சிறந்த எழுத்தாளர், தேர்ந்த எழுத்தாளர், நல்ல எழுத்தாளர், ஆர்வ எழுத்தாளர் என்று தரம் பிரித்து அறிவித்தார்கள்.

மேதை எழுத்தாளர்கள் மூவர்: பி.ஏ.கிருஷ்ணதாசன் (தைப்பிங்); அ. இராமநாதன் (சுங்கை சிப்புட்); சி.மாரியப்பன் (காஜாங்).

23 பேர் சிறந்த எழுத்தாளர்கள் என அறிவிக்கப் பட்டனர். அவர்களுள் பின்னாளில் இலக்கிய உலகில் முக்கியமானவர்களாக வளர்ந்த பெ.மு. இளம்வழுதி (குவால சிலாங்கூர்); கா.பெருமாள் (ரிங்லட்); சி. வடிவேல் (லாபு); சி. வேலுசாமி (ரந்தாவ்); எஸ்.எஸ். சர்மா (சிங்கப்பூர்) ஆகியோர் அடங்குவர்.

தேர்ந்த எழுத்தாளர்கள் 17 பேர்கள் பட்டியலில் மா.இராமையா (மூவார்); கு.நா. மீனாட்சி (குவால சிலாங்கூர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நல்ல எழுத்தாளர்கள் 14 பேர்; ஆர்வ எழுத்தாளர்கள 18 பேர்.

எழுத்தாளர் பேரவை:

1952-இல் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் இன்னொரு முயற்சியாக சிங்கப்பூர் “தமிழ் முரசு” எழுத்தாளர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இதில் எழுத்தாளர்கள் உறுப்பியம் பெற்றனர். முதலாவதாகப் பேர் பதிந்து கொண்டவர் மா. செ. மாயதேவன். எழுத்தாளர் பேரவையின் விதி முறைகளில் ஒன்று உறுப்பினராகும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு படையலை உருவாக்க வேண்டும் என்பது. மற்றொன்று படைப்பிலக்கியம் எழுதும் எவரும் பேரவையின் வேறு இரண்டு உறுப்பினர்களுக்கு அதனை அனுப்பித் திருத்திய பின்னரே அதனை அச்சில் ஏற்ற வேண்டும் என்பது.

இலக்கிய இதழ்கள்:

46-க்குப் பிந்திய இலக்கிய இதழ்களில் முந்தியது முதலில் கா.இராமநாதனையும் பின்னர் தி.சு.சண்முகத்தையும் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “சோலை” திங்களிதழ் ஆகும். 1952 ஜனவரி தொடங்கி எட்டு மாதங்கள் மட்டுமே வெளிவந்திருந்தாலும் முன்னோடி எழுத்தாளர்களான சி.அன்பரசன், கா. அண்ணாமலை, கா. பிச்சைமுத்து, க.ப.சாமி, இராவணேசப் புலவர் (ஈப்போ), கிருஷ்ணதாசன், மா.செ. மாயதேவன், மா.இராமையா, அ. இராமநாதன் ஆகியோர் இதில் எழுதினர்.

மாணவர் மணிமன்ற மலர்:

1953-இல் “தமிழ் முரசு” நாளிதழ் “மாணவர் மணி மன்ற மலர்” என்ற வார இணைப்பு ஒன்றினைத் தொடங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்களும் சிறுவர்களும் இலக்கிய அறிமுகம் பெற வழியேற்படுத்திக் கொடுத்தது. பல பின்னாள் எழுத்தாளார்களுக்கு இதுவே பயிற்சிக் களமாகவும் அமைந்தது.

மாணவர் மணிமன்ற மலரில் எழுதி பிற்காலத்தில் எழுத்துலகில் முக்கிய எழுத்தாளர்களாக வளர்ந்தவர்களில் ம. முருகையன் (முல்லை), மு. அப்துல் லத்தீப், சு. அப்துல் முத்தலிப், கு.கிருஷ்ணன், மு. சீனிவாசன், மைதி. அசன்கனி, பழ. அடைக்கலம் (தங்காக் தமிழ்ப் பாணன்), நீ.பெ.கலைச் செல்வன், ரெ.கார்த்திகேசு, செ.சின்னையா, அ.சந்திரசேகரன், சா.ஆ.அன்பானந்தன், ப.மு.அன்வர், கே.எம்.யூசுப், வே.சு.இளந்திரையன், மு.பக்ருதீன், மைதி. சுல்தான், அ.ரெசுவப்பா, வீ.தீனரட்சகி, ப.கு.சண்முகம் ஆகியோர் அடங்குவார்கள்.

அந்தக் காலகட்டத்தில் கவிஞர்களாக இருந்த சோமசன்மா, முரசு. நெடுமாறன், கவி மதிதாசன், சி. வேலுசுவாமி, வளர்மதி முதலானோர் மணி மன்ற மலரில் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளனர்.

சிறுகதைப் போட்டிகள்:

50-களின் பிற்பகுதியில் “தமிழ் முரசு” நாளிதழ் மலேசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை நடத்தியது. அப்போது அதன் துணையாசிரியராக இருந்த வை. திருநாவுக்கரசு அவர்களே இந்தப் புதிய முயற்சியை ஊக்குவித்து நடத்தினார். இந்தப் போட்டியில் பிற்காலத்திய பல நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் தங்களை அடையாளம் காட்டினார்கள்: ரெ.கார்த்திகேசு, அ.ந.பெ.சாமி, பெ.மு.இளம்வழுதி, சி.அன்பரசன், மா.இராமையா, அ.கி.அறிவானந்தன், மு.கந்தன், கு.நா.மீனாட்சி, சி.வடிவேலு முதலானோர் இதில் பங்கு பற்றிப் பரிசுகள் பெற்றுள்ளனர்.

ரசனை வகுப்பு:

1953-இல் தமிழ் முரசு “ரசனை வகுப்பு” தொடங்கிற்று. “கதை வகுப்பு” நடத்தியவர்களில் ஒருவரான கந்தசாமி வாத்தியாரே ரசனை வகுப்பையும் நடத்தினார். ரசனை வகுப்பு இதழ்களை மட்டுமன்றி வானொலித் தமிழ் நிகழ்ச்சிகளையும் தீவிரமாக விமர்சனம் செய்தது. எதிலும் புரட்சி செய்ய வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவரான கந்தசாமி வாத்தியார் “அண்ணா அறிஞரா?” என்ற ஒரு கட்டுரையை எழுதி நீண்ட விவாதத்தையும் தொடக்கி வைத்தார்.

தமிழ் எழுத்தாளர் மாநாடு:

கந்தசாமி வாத்தியார் ஆரம்ப காலத்திலிருந்தே “தமிழ் எழுத்தாளர் மாநாடு” ஒன்றினைக் கூட்டும் ஆசை கொண்டிருந்தார். 29/10/55-இல் இது குவாலா லும்பூரில் தமிழ்க் கலை மன்றத்தினரால் கூட்டப் பட்டது. மாநாட்டுத் திறப்பாளராக மா. இராமையா இருந்தார். காலையில் நடைபெற்றக் கலந்துரையாடலுக்கு கோ.சாரங்கபாணி தலைமை தாங்கினார். பிற்பகலில் சி.வீ. குப்புசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆழி.அருள்தாசன் முதலியோர் அதில் பேசினார்கள். 29 பேரே அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றினார்கள். அவர்களில் இர.ந.வீரப்பன், எஸ்.வி.சுப்பிரமணியன், அ.மருதப்பன், சி.அன்பரசன், பெ.மு.இளம்வழுதி, சி.வடிவேல், மு.கந்தன், அ.ந.பெ. சாமி, மு.அப்துல் லத்தீப், கு.நா.மீனாட்சி, பழ. மனோகரன், செ.குணசேகர், அ.கதிர்ச் செல்வன், ஆகியோரும் இருந்தனர். கூட்டம் பற்றித் தலையங்கம் எழுதிய “திருமுகம்” இதழின் ஆசிரியர் மா.செ.மாயதேவன், அந்தக் கால கட்டத்திலேயே மலாயாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கதாகும்.

மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க அமைப்பு:

1955-இல் நடந்த இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர்களுக்கான சங்கம் ஒன்று அமைக்கும் எண்ணம் இவர்களிடையே ஓங்கி வந்தது. 5/7/1958-இல் சி.வேலுசாமி அவர்களின் முயற்சியில் மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க அமைப்புக் கூட்டம் குவால லும்பூர் பங்சார் தமிழ்ப்பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டோர்: தலைவர் சி.வீ.குப்புசாமி, துணைத்தலைவர் தி.சு.சண்முகம், செயலாளர் சி. வேலுசுவாமி, துணைச் செயலாளர் செ.குணசேகர், பொருளாளர் மு.அப்துல் லத்தீப். 2/2/1959-இல் இதற்குப் பதிவு கிடைத்தது.

இதன் ஆண்டுக் கூட்டத்தில் தமிழ் நேசன் துணையாசிரியர் கனகசுந்தரம் புதிய தலைவராகவும் செ.குணசேகர் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதன் பிறகு சங்கம் செயலிழந்து அதன் பதிவும் ரத்தாகிற்று.

அதன் பின் மீண்டும் சி.வேலுசுவாமியின் முயற்சியில் ஒரு அமைப்புக் கூட்டம் 1962-இல் கூட்டப்பட்டு பதிவுக்கான மறுமுயற்சிகள் செய்யப்பட்டன. 26/3/1963-இல் சங்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற புதிய பெயரில் பதிவு பெற்றது. புதிய சங்கத்தின் நிர்வாகிகள் பின் வருமாறு: தலைவர் முருகு சுப்பிரமணியம்; துணைத்தலைவர் சி.வேலுசுவாமி; செயலாளர் சு.கணபதி; பொருளாளர் கு.ஏழுமலை; செயற்குழுவினர் சி.வீ.குப்புசாமி, இர.ந.வீரப்பன், க.கிருஷ்ணசாமி முதலியோர். இந்தச் சங்கத்தின் தொடர்ச்சியே இன்று பெ. ராஜேந்திரனின் தலைமையில் இயங்கி வருவதாகும்.

தமிழர் திருநாள்:

50-களின் மத்திக்கும் 60-களின் மத்திக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில்தான் கோ.சாரங்கபாணி தமிழர்களை ஒருமுகப் படுத்தும் முகமாகவும் தமிழ் மொழி பண்பாட்டு எழுச்சியை ஊட்டும் முகமாகவும் தமிழர் திருநாளைத் தொடங்கினார். பல ஆண்டுகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் இலக்கியப் போட்டிகளையும் விரிவாக நடத்தி இலக்கியத்தை வளர்த்தது.

கு. அழகிரிசாமி:

50-களின் மத்தியில் தமிழ் நாட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி “தமிழ் நேசன்” நாளிதழுக்கு ஆசிரியராக வந்தமர்ந்தார். படைப்பிலக்கியத்தை ஊக்குவிப்பதையும் அவர் ஒரு நோக்கமாகக் கொண்டார். அவரை மையமாகக் கொண்டு குவாலா லும்பூரில் இலக்கிய வட்டம் ஒன்று அமைந்தது. 55-இல் இதனை முன்னின்று அமைத்தவர் கி.மூர்த்தி. மாதம் ஒருமுறை கூடிய இந்த இலக்கிய வட்டத்தில் தலை நகர் தவிர கிள்ளான், செரம்பான், குவால செலாங்கூர் போன்ற இடங்களிலிருந்தும் அன்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள். முதன் முறையாக சிறுகதையின் உத்தி, நடை, கருத்து, அமைப்பு ஆகியவை பற்றி அறிவு பூர்வமான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கு.அ. இலக்கிய வட்டத்தில் வாசிக்கப் பட்ட கதைகளைத் தமிழ் நேசனில் வெளியிட்டும் வந்தார்.

கு.அ.வின் கணிப்பில் சிறந்த எழுத்தாளர்களாகச் சிலர் குறிக்கப் பட்டனர். அவர்களுள் மு.அப்துல் லத்தீப், வி.ச.முத்தையா, மு.இராச இளவழகு, மா.செ.மாயதேவன், மா.இராமையா, சி.வடிவேலு, செ.குணசேகர், சி.வேலுசாமி, பொ.ச.பரிதிதாசன், சி.அன்பரசன், சி.கமலநாதன், நாகு மணாளன், அ.பேச்சிமுத்து, அ.கி.அறிவானந்தன், ந.அநந்தராஜ் ஆகியோர் இருந்தனர். கு.அ. 1957-இல் தமிழ் நாடு திரும்பு முன் இலக்கிய வட்டம் நிறுத்தப் பட்டது.

நூல் வெளியீடு:

1952-இல்தான் புத்திலக்கியப் படைப்பு நூலாக மா.இராமையா, மா.செ. மாயதேவன் இருவரும் இணைந்து எழுதிய சிறுகதைத் தொகுப்பான “இரத்த தானம்” வந்தது. இந்த நூல் குறித்து எழுத்தாளர் பேரவை “பேரவைக்குப் பூரிப்பு; மலாயாத் தமிழ்ப் பெருமக்களுக்கு பெருமை” என எழுதியது.

மலாயா சுதந்திரம் பெற்ற 1957-இலிருந்து இங்கு எழுதப்படும் படைப்பிலக்கியங்கள் பெருகின. பல நூல்களும் வெளியாயின. வார, மாத இதழ்கள் பலவும் தோன்றி படைப்பாளர்களுக்கு உள்ள வாய்ப்புக்களை விரிவாக்கின. மலாயா (பின்னர் மலேசியா) தமிழ் எழுத்தாளர் இயக்கமும் படைப்பிலக்கியத்துக்கு தொடர்ந்து உயிரும் உணர்ச்சியும் ஊட்டி வந்தது.

மணிக்கதைகள்

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தனது சமுகப் பணிகளுக்கிடையே ஆற்றி வந்த இலக்கியப் பணியின் ஒரு உச்சமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றினைக் கொண்டு வந்தது. 1968-இல் வெளிவந்த “மணிக்கதைகள்” என்னும் தொகுப்பு அக்கால கட்டத்தில் மலேசிய இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சியை நன்கு பிரதிபலிப்பதாக அமைந்தது. “தீபம்” நா. பார்த்தசாரதியின் முன்னுரையுடனும், டாக்டர் இராம சுப்பையாவின் அணிந்துரையுடனும், இலங்கை இரசிகமணி கனக. செந்தில்நாதனின் ஆய்வுரையுடனும், மன்றத்தலைவர் க.கிருஷ்ணசாமியின் முகமனுடனும் வெளியான இந்நூலில் சா.ஆ.அன்பானந்தன், க.கிருஷ்ணசாமி, சாமி.மூர்த்தி, ரெ.கார்த்திகேசு, எம்.குமாரன், சை.பீர் முகம்மது, பரிதாமணாளன், பாதாசன், மு.க.மா. முத்தமிழ்ச் செல்வன், சோ.பரஞ்சோதி ஆகியோரின் கதைகள் இடம் பெற்றிருந்தன.

பவுன் பரிசுகள்:

சிறுகதைத் துறைக்கு முருகு சுப்பிரமணியனை ஆசிரியராகக் கொண்ட “தமிழ் நேசன்” 1972-இல் தொடங்கிய பவுன் பரிசுத் திட்டம் ஒரு பெரும் புத்துணர்ச்சியைத் தந்தது. இதில் நடுவர்களாக இருந்து கதைகளைத் தேர்ந்தெடுக்க நல்ல இலக்கியவாதிகளையும் முருகு தன்னுடன் துணைக்கு அழைத்துக் கொண்டார். அவர்களுள் டாக்டர் ஆர்.தண்டாயுதம், புலவர் சேதுராமன், எஸ்.ஆர்.எம்.பழனியப்பன், ரெ.கார்த்திகேசு, டாக்டர் பிரமீளா கணேசன் ஆகியோரும் அடங்குவர்.

சி.அன்பானந்தம், அரு.சு.ஜீவானந்தன், இராம வீரசிங்கம், மு.அன்புச்செல்வன், எம்.ஏ.இளஞ்செல்வன், இராம கண்ணபிரான், ஆர்.சண்முகம், இ.தெய்வானை, சாமி மூர்த்தி, சீ.முத்துசாமி, பாவை, சி.வடிவேல், ந.மகேசுவரி, மா. இராமையா ஆகியோர் பவுன் பரிசு பெற்றோர் பட்டியலில் அடங்குவார்கள். முதல் ஆண்டில் பரிசு பெற்றவர்களைக் கூட்டித் தமிழ் நேசன் ஒரு உபசரிப்பு விருந்து நடத்தி அனைவருக்கும் பரிசு வழங்கியதுடன் முதல் பனிரெண்டு கதைகளை “பவுன் பரிசுக் கதைகள்” என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பாகவும் கொண்டு வந்தது.

இதன் பின்னர் தொடங்கப்பட்ட கவிதைக்கான பவுன் பரிசுப் போட்டியில் வே.மகேந்திரன், கரு வேலுசாமி, ஆதம் குமார், எல்லோன், கன்னல் கவி கரீம், வீரமான், காரைக்கிழார், சோம சன்மா, கரு.திருவரசு, எஸ்.கே. வடிவேலு, சங்கு சண்முகம் முதலியோர் பரிசு பெற்றனர்.

மாதாந்திரச் சிறுகதைக் கருத்தரங்கம்:

தமிழ் நேசன் வழியாக எழுத்தாளர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிவந்த முருகு, அதே நேரத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பேற்று சில ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல் படுத்தி வந்தார். அவற்றுள் முக்கியமானது சிறுகதைக்கான மாதாந்திரக் கருத்தரங்கங்களைக் கூட்டி ஒவ்வொரு மாதத்திற்கும் சிறந்த ஒரு கதைக்கு 50 ரிங்கிட் பரிசு வழங்கி வந்ததாகும்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் முதல் தொகுதி 1974-இல் “பரிசு” என்னும் தலைப்பில் வெளியானது. 14 கதைகள் இதில் இடம்பெற்றன. இவற்றை எழுதிய எழுத்தாளர்கள்: மீனா நடராஜா, ரெ.கார்த்திகேசு, ஆ.சாரதா, சாமி மூர்த்தி, சுமதி தங்கராஜ், த.ப.இலட்சுமணன், சக்கரவர்த்தி சுப்பிரமணியன், ஐ.இளவழகு, சி.வடிவேல், மா.சுப்பிரமணியம், மா.இராமையா, இரா.ச. இளமுருகு, துளசி, நாடோடி.

ஒரு சில ஆண்டுகள் விடுபட்டிருந்த மாதாந்திரத் தங்கப் பதக்க விருதளிப்பு ஆதி குமணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குத் தலைவராக வந்த பிறகு உயிர்ப்பிக்கப் பட்டுத் தொடர்ந்து இன்றும் நடை பெற்று வருகிறது. இதனை அடியொற்றி கவிதைக்கும் இப்போது காலவாரியாகக் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

பேரவைக் கதைகள்:

1970-களில் இரா.தண்டாயுதம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் துறையில் புத்திலக்கிய விரிவுரையாளராக வந்து சேர்ந்தார். மலேசியப் படைப்பிலக்கியத்துக்கு அவர் ஆற்றிய சேவைகள் அதிகம். அவருடைய ஆலோசனையின் கீழ் மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் முயற்சியில் தொடங்கப்பட்ட ஆண்டுச் சிறுகதைப் போட்டி இந்த நாட்டின் சிறுகதை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக ஆகியுள்ளது. 1986 முதல் இதில் பரிசு பெற்ற கதைகள் நூல் உருவில் வந்து கொண்டுள்ளன.

மலேசியத் தமிழ் இலக்கியம்:

இரா. தண்டாயுதம் பதவிக் காலம் முடிந்து தமிழகம் திரும்பி அங்கே அகால மரணமடைந்த பிறகு அவருடைய நினைவாக “டாக்டர் தண்டாயுதம் நினைவிலக்கியப் பேரவை” தொடங்கப் பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர் அவருடைய நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான வீ.செல்வராஜ் ஆகும். பேரவை மூலம் வீ. செல்வராஜ் ஆற்றிய முக்கிய பணி ஆண்டு தோறும் “மலேசியத் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் சிறுகதைகள், கவிதைகள், ஒரு குறுநாவல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுப்பை வெளியிட்டதாகும். இந்தத் தொகுப்புக்களை குறிப்பாக வெளிநாட்டுத் தமிழர்களிடையே மலேசிய இலக்கியத்தை அறிமுகப் படுத்தும் கருவியாக செல்வராஜ் கருதி அப்படியே செயல் படுத்தினார். 1988 – 1994 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு தொகுப்புகள் வெளியாகின.

நூல் பதிப்புகள்

1950-களிலிருந்தே இந்த நாட்டின் எழுத்தாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் புத்தகப் பதிப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். கட்டுரைத் தொகுப்புகள், ஆய்வு நூல்கள், கவிதைத் தொகுப்புகள், காவியங்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், புதுக்கவிதைத் தொகுப்புகள் ஆகியவை காலந்தோறும் பதிப்பிக்கப்பட்டு மலேசியத் தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்துள்ளன.

1995-இல் இலங்கை எழுத்தாளரான மாத்தளை சோமு, மலேசியச் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து “மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் தமிழ் நாட்டில் பதிப்பித்தார். இந்தத் தொகுப்பு பின்னர் மலேசிய இடை நிலைப் பள்ளிகளில் பாடப் புத்தகமாகவும் வைக்கப் பட்டது.

1998-இல் “மலேசிய நண்பன்” நாளிதழ் சிறந்த எழுத்தாளர்கள் பதின்மூவரை அழைத்து சிறுகதைகள் எழுதச் சொல்லி அவர்களுக்கு ஆளுக்கொரு உயர்ந்த ரகக் கடிகாரத்தையும் பரிசாக அளித்தது. “கடிகாரக் கதைகள்” என்ற தொடரில் வெளியான இக்கதைகளைப் பின்னர் “சமுதாயக் கதைகள்” (1999) என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட்டு அதற்குப் பெரும் வெளியீட்டு விழாவையும் நடத்தியது.

2003-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் பழம்பெரும் இதழான “கலைமகள்” ஆசிரியர் கீழாம்பூர் அவர்களின் முயற்சியில் 32 மலேசியச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகள் “மலேசியச் சிறுகதைகள்” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன.

ஆண்டு தோறும் விருதுகள்:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998 முதல் காலஞ் சென்ற அமைச்சர் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் நினைவாக ஆண்டின் ஒரு சிறந்த நூலுக்கு “டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு” என்ற பெயரில் சான்றிதழும் 5000 ரிங்கிட் ரொக்கமும் அளித்துக் கௌரவித்து வருகிறது. இந்தப் பரிசை இதுவரை வென்றவர்கள்: “மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்னும் நூலுக்காக முரசு நெடுமாறன் (1998); “அந்திம காலம்” நாவலுக்காக ரெ.கார்த்திகேசு (1999); “சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்” என்னும் ஆய்வுக் கட்டுரை நூலுக்காக கே.எம்.குணா (2000); “அமாவாசை நிலவு” நாவலுக்காக மா. இராமையா (2001); “ஆர். சண்முகம் கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்காக ஆர். சண்முகம் (2002); “செய்கு கனான் காவியம்“ நூலுக்காக ப.மு.அன்வர் (2003), “மனமே சுகமே” கட்டுரை நூலுக்காக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி (2004); “ஊசி இலை மரம்” சிறுகதைத் தொகுபுக்காக ரெ.கார்த்திகேசு (2005).

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1983 தொடங்கி எழுத்தாளர்களுக்கும் எழுத்துத் துறைக்குப் பணி புரிந்தவர்களுக்கும் ஆண்டு தோறும் தங்கப் பதக்கங்கள் வழங்கிப் பெருமைப் படுத்தி வருகிறது. இவை மலேசியாவில் தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த பெரியவர்கள் பெயர்களில் வழங்கப் படுகின்றன: மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் பேராசிரியர் தனிநாயக அடிகளார், தமிழர் திருநாளின் தந்தை தமிழவேள் கோ.சாரங்கபாணி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அடிநாள் தலைவரும் பத்திரிகையாசிரியருமான திரு சி.வீ.குப்புசாமி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பத்திரிகையாசிரியரும் இலக்கியவாதியுமான முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன், தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தலைவரும் கலைஞரும் எழுத்தாளருமான சமூகக் கலைமாமணி சா.ஆ.அன்பானந்தன் ஆகியோரின் நினைவாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுவரை சுமார் 80 பேருக்கு இவ்விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் மறைந்த பத்திரிகாசிரியரும் அரசியல்வாதியும் அமைச்சருமான டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் பெயரிலும் அவருடைய குடும்பத்தாரின் ஆதரவுடன் ஆண்டு தோறும் விருதுகளும் நிதியும் அளிக்கப்படுகிறது.
இது தமிழ் எழுத்து, பண்பாடு, கலை என்ற பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு அளிக்கப் படுகிறது. இதுவரை ஏறக் குறைய 45 பேர் இந்தப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

மலேசிய பாரதிதாசன் இலக்கிய அமைப்பும் ஆண்டு தோறும் பெரிய அளவில் “எழுத்தாளர் தினம்” ஒன்றினை நடத்தி எழுத்தாளர்களுக்கு விருதுகள் அளித்துக் கௌரவித்து வருகிறது. இவற்றுள் சிறந்ததாக சங்கிலிமுத்து – அங்கம்மாள் விருது ஒவ்வொரு ஆண்டும் 5000 ரிங்கிட் பணத்துடன் அளிக்கப்பட்டு வருகிறது.

இவற்றோடு மலேசியப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கும் டத்தோ பத்மனாதன் விருதும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை தனது ஆண்டுக் கூட்டத்தின் போது வழங்கும் விருதுகளும் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து முயற்சிகளுக்குப் பெரும் தூண்டுகோல்களாக விளங்கி வருகின்றன.

முடிவுரை:

தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கையைத் தவிர்த்து மலேசியாவில்தான் தமிழ் இலக்கிய உற்பத்தி அடர்த்தியாக இருக்கிறது. மலேசியத் தமிழ் நாளிதழ்களும் காலவாரி இதழ்களும் படைப்பிலக்கியத்துக்கு மிகச் சிறந்த ஆதரவை அளித்து வருகின்றன. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இந்நாட்டில் படைப்பிலக்கியத்தை செழுமைப் படுத்த தொடர்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மலேசியத் தமிழ் சமுதாயத்தில் தீவிரமான தமிழ்ப் பற்றும் தமிழைக் காலங் காலமாக வாழ வைக்க வேண்டும் என்னும் அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளன. இவை தொடர்ந்து நிலைத்திருக்கும் வரையிலும் படைப்பிலக்கியச் செழுமை தொடர்ந்து அதிகரித்தே வரும்.

(முடிந்தது)

நன்றி: தமிழ் சிஃபி – தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் 2006

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *