பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

14593578_1113862175334647_387500738_n

32535581n07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 15.10.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on "படக்கவிதைப் போட்டி .. (82)"

  1. சேவல் கூவிதான் பொழுது விடியுது

    கோழி தன் இரையைத் தேடி அலையுது

    ஆண் சம்பாதித்தால்தான் குடும்பத்திற்கு விடிவு

    பெண் சம்பாத்தியம், பற்றாக்குறைக்கு ஓர் தீர்வு !

    சேவலும்,நீர்நிலைக்கு தன் பெட்டையுடன் செல்கின்றனது,

    தாகம் தீர்க்கவும், இரைதேடவும் வழி காண்பிக்கின்றது

    தன் தலைவன் வழியே தன் வழி என பின்தொடர்கின்றது

    தன் குஞ்சுகளையும் காப்பாற்றும் என எண்ணுகின்றது

    கோழி தன் குஞ்சுகளுடன் சேர்ந்தே இரைதேடி உண்ணும்

    சிலசமயங்களில் சேவலுடன் சேர்ந்தே இரை தேடி உண்ணும்

    ஆணும் பெண்ணும் பணத்திற்காக வேறிடம் செல்கின்றனரே

    குழந்தைகளிடம் அன்பை காட்ட நேரமில்லை என கூறுகின்றனரே !

    கூரை ஏறி கோழி கூவினாலும் ஓசையில்லை

    கோழி முட்டை இட்டாலும் சேவல் அடைகாப்பதில்லை

    ஆண்களும், பெண்களும்,பொருள் ; ஈட்டாமலில்லை

    குழந்தைகளுக்கு நல்ல உணவும், கல்வியும் அளிக்காமலில்லை!

    சேவலுக்கு கொண்டை அழகு, மயிலுக்கு தோகை அழகு,

    சேவலுக்குப் பின் இரண்டடி பின்னே வீட்டுக் கொடுத்து செல்கிறதே

    ஆணும்,பெண்ணும், வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதே அழகு

    நல்ல கணவனுக்கு உத்யோகமும், பண்பும் அழகு

    சேவல் கூவி அழைத்து பொழுதினை உணர்த்துகின்றது,

    கோழி முட்டை ஆரோக்கியமானது என உணர்த்தப்படுகின்றது

    மனிதனே ! பொழுதோடு உழைத்து,இரவில் களைப்பாறுவாயா

    ஐந்தறிவு பறவை கூவுவதை அலட்சியமாக நினைப்பாயா !

    ரா.பார்த்தசாரதி

  2. வருத்தத்தில்…

    மனவருத்தம் கோழிகளுக்கு,
    மனிதன் மீது..

    இனவிருத்திக்கென்று முட்டையிட்டால்,
    இவன் விருந்தாக்கிவிடுகிறான்..

    சாமி பேரைச்சொல்லி
    பலியிட்டு எங்களைச்
    சாப்பாடாக்கிக் கொள்கிறான்..

    விருந்து இவனுக்கு வந்தால்,
    வருந்தவேண்டியது நாங்கள்-
    அறுத்துவிடுகிறான் கழுத்தை..

    செல்லப் பிராணிகளாய்
    வளர்ப்பது,
    கொல்வதற்குத்தானோ..

    இனியும்
    இவனுடனிருந்தால் ஆகாதென,
    சேவலும் கோழியும்
    சேர்ந்தே கிளம்பிவிட்டன-
    காட்டுக்கு…!

    -செண்பக ஜெகதீசன்…

  3. அக்கரையில் வளமிருக்கு கொக்கரக்கோ – நாம்
    அங்க போயி சீ(வி)ச்சுக்கலாம் கொக்கரக்கோ
    இக்கரையில் எதுவுமில்லக் கொக்கரக்கோ -நாம்
    எதுக்கு இங்க வாழ வேணும் கொக்கரக்கோ.

    சொந்த மண்ணு கெட்டியெண்ணு கொக்கரக்கோ – நீ

    சொகுசு தேடி அலையாத கொக்கரக்கோ
    இந்த மண்ணும் நல்லதுதான் கொக்கரக்கோ – கொஞ்சம்
    எறங்கிப்புட்டா பொழச்சுக்கலாம் கொக்கரக்கோ

    பூச்சி புழு தேவையெண்ணா கொக்கரக்கோ – அங்க
    போயிச் சீச்சி எடுத்துக்கலாம் கொக்கரக்கோ
    ஏச்சிக் கூடப் பொழச்சுக்கலாம் கொக்கரக்கோ – உடன்
    என்னோட வந்துரு நீ கொக்கரக்கோ

    பொழப்புக் கெட்டு வாழுறது கொக்கரக்கோ-நமக்கு
    பொருந்தாது திரும்பிடலாம் கொக்கரக்கோ
    ஒழச்சு வாழப் பழகிக்குவோம் கொக்கரக்கொ – நம்ம
    ஊரிலேயே இருந்திடுவோம் கொக்கரக்கோ.

  4. கிராம நாகரிகம்
    நாகரிகப் படையெடுப்பால்
    நசிந்து வரும் கிராமியச்சூழல்
    ஆறுகளும் குளங்களும் காடுகளும் சோலைகளும்
    ஆரோக்கியம் தரும் காற்றும் நீரும் கரைந்து போயின
    நாட்டுக் கோழி நாட்டுச்சேவல்
    நம் நாட்டின் பாரம்பரிய உணவு,உடை,கலாச்சாரம்…
    நாட்டுணா்வு என அடுத்தடுத்த நன்மைகள்
    நலக்கேடாய் மரணப்படுக்கையில்
    நீரோடைகளும் சார்ந்திருக்கும் மரங்களும்
    ஆதரக்க ஆளின்றி
    நிழலின்றி கருகின
    எப்போதோ நம் புகைப்படப்பதிவுகளில்
    புதைந்திருக்கும் இயற்கை காட்சிகள்
    விழிகளுக்குப் புத்துணர்வு தருகின்றன
    வருங்காலத்தினர் இயற்கை காட்சிகளை
    ஆவணப்படங்களில் காணும் அவலம்
    குறுகிய கால உற்பத்தியால்
    விலங்குகளும்,பறவைகளும் வளர்ந்தாலும்
    நமது பாரம்பரிய அடையாளம் தொலைந்து போவது
    நமக்கு ஏன் புரியாமல் போனது?
    நீரும் நிலனும் செழிக்க
    விலங்கும் பறவையும் காக்க
    நலம் பயக்கும் கிராமியச் சூழலை வளர்ப்போம்
    நாகரிக நஞ்சால் மாண்டு போவதை தடுப்போம்

  5. கொண்டை சேவல் போகுது
    ****கோழி பின்னே தொடருது !
    தண்ணீர்க் குளத்தைத் தேடியே
    ****தாகத் தோடு செல்லுது !
    மண்ணில் புழுக்கள் இல்லையோ
    ****மயங்கி இங்கே வந்ததோ ?
    கெண்டை மீனைப் பிடிக்கவோ
    ****கிளம்பி இரண்டும் வந்தது !
    கண்ணில் பட்டால் காலிதான்
    ****கறியாய் மணப்பீர் வீட்டிலே !
    புண்ணாய் நெஞ்சம் வலித்திடும்
    ****புரிந்து விரைந்தே ஓடுவீர் !
    எண்ணம் அறிந்து செயல்பட
    ****என்னால் முடிந்த உதவியே !
    வண்ண உலகில் மகிழ்ச்சியாய்
    ****வாழ்க நீவிர் இருவரும் !!!

  6. ஆணுக்கு சேவல் என்றும்
    பெண்ணுக்குப்பேடு என்றும்
    பெயர் வைத்தார்
    மனிதனின் உணவுக்காக
    சேவலையும் பேடையும்
    வளர்த்திட்டார்
    மனம்கிழ்ச்சிக்காக
    சேவலையும் சேவலையும் மோதவிட்டு
    வெற்றிபெறும் சேவலை வளர்த்தவன்
    சேவல் வீரன் என்று மார்தட்டுவான்
    விவரம் புரியாத சேவல்
    கால நேரம் பார்த்து கூவிஎழுப்பும் மனிதனை
    காலம் ஆகப்போவது தெரியாமல்
    குப்பையைக்கிளறும் கோழிகள்
    கடைசியில் மனிதனின் வயிற்றுக்குள் போக
    இறக்கைகள் எல்லாம் குப்பையாய்போகும்
    பிறருக்கெனவேவாழ்ந்திடவே சேவலைப் படைத்த
    இறைவன் கொடியவனே
    சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.