இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(213)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். ஆயுதபூஜை , விஜயதசமி என முக்கிய தினங்களை முடித்துக் களிப்புடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மடலை எழுத ஆரம்பித்ததிற்கும், எழுதி முடிப்பதற்கும் இடையில் இருந்த இடைவெளி கொடுத்த தாக்கத்தின் பிரதிபலிப்பில் இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்னதான் நடந்தது அவ்விடைவெளியில் என்று நீங்கள் வினவக்கூடும்.

இதோ!

1984-ஆம் ஆண்டு முதல் நான் அறிந்திருந்த நன்கு பழகியிருந்த ஒரு அன்புத் தோழர் கடந்த 9ஆம் திகதி அதிகாலை இயற்கையெய்தினார். இன்று காலை அவரது இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தது. . என்னை விட ஏறத்தாழ 6 மாதங்களே வயதில்மூத்த இந்த நல்ல மனிதனின் வாழ்வை எண்ணிப் பார்க்கிறேன். யாழ்மண்ணிலே பிறந்து லண்டனுக்குப் புலம்பெயர்ந்து மாணவனாகத் தனது வாழ்வை ஆரம்பித்த அவர் தானும் தன் வாழ்வு எனும் சிறுவட்டத்திற்குள் தனது வாழ்வை வாழ்ந்து முடித்தவரல்ல.

jeyamநாடு, சமூகம் எனத் தனக்குமுன்னே இருந்த தனது கடமைகளை முழுமூச்சாக ஆற்றிய ஒரு மனிதர். பெற்றோருக்கு ஒரு நல்ல மைந்தனாக, தங்கைக்கு ஓர் அண்ணனாக, மனைவிக்குக் கணவனாக, அன்புக்குழந்தைகளுக்குத் தந்தையாகத் தனது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது தனது தாய்மண்ணில் தனது சகோதர, சகோதரிகள்படும் துயரைக் கண்டு துடித்தெழுந்து மனிதாபிமான உதவிகளை முன்னின்று வழங்கியவர். அத்தகைய அரிய செயல்களினால் அவர் தன் பிரத்தியேக வாழ்வில் அடைந்த இன்னல்கள் பல; அவையனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர்.

காலம் அவர்மீது தன் சவால்களைத் தூக்கி வீசத் தவறவில்லை. அவரது உடல் நோய்களினால் தாக்கப்பட்டு நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டபோதும், ஈழத்தில் தமிழ்மக்களின் இன்னல்களுக்குத் தன்னால் என்ன செய்யமுடியு,ம் எனத்துடித்துத் தனது பங்களிப்பைத் தனது உடல் ஈடுகொடுக்குமளவிற்குச் செய்துவந்தவர். தாய்மண்ணில் தனக்குக் கல்வியறிவை ஈந்த பாடசாலை பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து, தனது நாட்டு மாணவர்களின் வாழ்வு மேம்படத் தன்னாலான உதவிகளைப் புரிந்தவர்.

குடிசை வீட்டில் எரியும் ஒரேயொரு குப்பிவிளைக்கைப் புயற்காற்று அணைத்துவிட்டதைப் போல அவரது மனைவியும், அவரது இரண்டு மகள்களும் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நிலை. இயற்கை அளித்த வாழ்வைத் திரும்ப இயற்கையே பறித்துக் கொள்வது இயற்கையே! ஆனால் பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட அந்தக் காலத்தை எவ்வகையில் வாழ்ந்து முடிக்கிறோம் என்பதிலேயே ஒரு மனிதனின் வாழ்வின் வெற்றி அமைந்திருக்கிறது. ஒரு மனிதனின் கடமை என்பது அவனது பிரத்தியேக சொந்தவாழ்வுடன் முடிந்து விடுவதில்லை. தன் வாழ்வும், சமூகத்தினரின் இன்பதுன்பங்களில் பங்கெடுப்பதும் அம்மனிதனின் கடமைகளில் ஒன்றாகிறது. ஆனால் அதை நிறைவேற்றக்கூடிய வல்லமை, துணிச்சல் அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட துணிச்சலையும் கடமையுணர்வையும் கொண்ட ஓர் உன்னத மனிதனே என் தோழன் வேலாயுதபிள்ளை ஜெயபாலன்.

உள்ளத்தில் வடியும் ஆறாத துயரத்திற்கு வடிகாலாக இம்மடலை வரைந்து விட்டேன். இவ்வினிய தோழனின் உற்றார், உறவினரின் சாந்திக்காகவும், அவனது ஆத்மசாந்திக்காகவும் அனைத்துக்கும் மேலான, அனைவர்க்கும் பொதுவான இறையை வேண்டுகிறேன்.

தோல்விகள் உனக்கில்லை தோழா!
தாய்மண்ணின் கனவுகளை உந்தன்
நெஞ்சினில் சுமந்தே நடந்தனை
நேராக நிமிர்ந்தே நின்றனை நீயே!

ஜெயம் என்பதனை உந்தன் பெயரில்
ஜெபமாய்க் கொண்டவன் தோழா!
தோழரின் துணையாக என்றுமவரை அருகில்
தூணாகத் தாங்கிக்கொண்டே வாழ்ந்தாய்!

யாழ் கொக்குவில் தனில் உதித்தாய்
யாழ் இந்துவின் மைந்தனாய் வளர்ந்தாய்
தமிழ்த்தாயின் பெருமைதனை உணர்ந்ததினால்
தணியாத வேகத்துடன் தமிழுக்காய் உழைத்தாய்!

அன்னை மண்ணின் அழிவுகளைத் தடுக்க
அர்ப்பணித்த ஓர் தோழனாய்க் கண்டேன்
எதிர்கொண்ட இடர்கள் அனைத்தையும்
ஏற்றுக்கொண்டே வாழ்ந்தனை நண்பா!

மறையாத புன்னகை உன் வதனத்தில்
மாறாத கொள்கைகள் உன் எண்ணத்தில்
சீரான சிந்தனை என்றும் உன்னுள்ளத்தில்
தீராத சோகம் இன்று எமது நெஞ்சங்களில்!

அன்பான மனைவியும் பண்பான மகள்களும்
ஆண்டவன் உனக்களித்த இனிய பரிசுகள்
காலத்தின் சோதனை நீ வாழ்வில் கண்ட
கணக்கற்ற வேதனைகள் தோழா!

சரீர உபாதைகள் தந்திட்ட தடைகளையும்
தகர்த்தெறிந்து நீயும் தமிழ்ச் சோதரருக்காய்
ஆற்றிய பணிகள் பகன்றிடும் உந்தன்
அனைத்து அகக்குறைகளையும் உடைத்தெறியும்
ஆற்றல்தனை அன்னை மண்ணின் சொந்தங்களுக்கு

மரணம் என்பது முடிவல்ல தோழா!
மரணித்து வாழும் மனிதருள் மாணிக்கம்
ஆன்மாவின் பயணத்தின் ஒரு பகுதியின் முடிவு
அனைவரின் நினைவுடனும் உந்தன் ஆன்மிகக் கலப்பு!

அன்பினிய தோழா! பண்பினிய ஜெயபாலா!
அன்னை மண்ணின் உறவுகளின் வாழ்வின்
அமைதி ஒன்றே உனக்கு என்றுமே
ஆத்மசாந்தி அளித்திடும் என்பதுவே உண்மை!

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

Leave a Reply

Your email address will not be published.