Month: January 2016

  • என்று காண்​போம் இனி?!

    தமிழண்ணலுக்கு இரங்கற்பா

    மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    நல்​லோரும் வல்​லோரும் நயமாகப் பாராட்ட
    நலமாய் தமிழ்வளர்த்த நாயக​னே – எல்​லோரும்
    பார்க்க ஏங்க விட்டாய்  உம்​மை
    என்று காண்​போம் இனி?

    ​நெற்குப்​பை ​பெற்​றெடுத்த பூங்குன்​றே எம்​மைச்
    ​சொற்குப்​பை ஆக்கிவிட்டுச் ​சொர்க்கம் ஏகிவிட்டாய்
    நன்றாய்த் தமிழ்வளர்த்த அண்ண​லே உம்​மை
    என்று காண்​போம் இனி?

    ​மே​லைச் சிவபுரியில் ​மேன்​மைமிகு கல்வியி​னை
    ​மேன்​​மை யுறச்​செய் தா​யே – ​மே​லை
    நா​டெங் கும்தமிழ்ச் ​சே​​யைக் காத்தஉ​மை
    என்று காண்​போம் இனி?

    தாலாட்டுத் தந்தாய் காதல் வாழ்வும்
    தந்தாய் நன்னூல் உ​ரைத​னை​யே -​ பாராட்டத்
    தந்து தண்டி யு​ரையும் தந்தஉ​​மை
    என்று காண்​போம் இனி?

     

     

    Share
  • உன்னையறிந்தால் …. (37)

     நிர்மலா ராகவன்

    நாட்டியத்தால் நாமடையும் நன்மைகள்

    உனையறிந்தால்

    கேள்வி: என் மகள் (30 வயது) கணவனின் கொடுமை தாங்காது, தன் ஐந்து வயதுப் பெண்குழந்தையுடன் சட்டபூர்வமாகப் பிரிந்துவிட்டாள். குழந்தைக்கு எதைக்கண்டாலும் பயம், கூச்சம். அவளை (உளவியல் நிபுணர்களின் துணையின்றி) சரிப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா?

    இருவருமே முறைப்படி நாட்டியம் கற்பதால் பலன் அடையலாம். நாட்டியம் ஒருவித யோகம். உடலையும், மனதையும் ஒருமைப்படுத்துவது. அதனால் அதை பக்தி மார்க்கம் என்றும் கூறலாம்.

    நாட்டியத்தில் தா-தா-தை என்றெல்லாம் காலைத் தரையில் ஓங்கியடிப்பார்கள் இல்லையா? அது அக்குப்ரெஷர். மூளையில் இருக்கும் நியூரான்களை இயக்கும். கணக்குப் பாடம் எளிதாகும்.

    ஆடும் சமயத்தில் வேறு எந்த நினைவும் எழாது. இதனால் ஞாபகசக்தி பெருகும். நாட்டியத்துடன் இசையும் சேர்ந்திருப்பதால், தாழ்மை உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்திலிருந்து நாளடைவில் விடைபெறலாம்.

    சிறுமிகள் பலர் நாட்டிய வகுப்பில் இருப்பார்களே! எல்லாரும் ஒரே வகுப்பில், ஒரே விஷயத்தைக் கற்கும்போது, தானாகவே நெருக்கம் உண்டாகும். சிறுகச் சிறுக கூச்ச சுபாவம் மறைந்து, பிறருடன் கலந்து பழக முடியும். எவருக்குமே தன்னம்பிக்கை அதிகரிக்க, எந்த இடர்ப்பாட்டையும் தாங்கும் சக்தி வருவதோடு, புதிய சவால்களை ஏற்கவும் தயாராக முடியும்.

    நாட்டியம் ஆடுவதால் உடலுக்குப் பயிற்சி என்பதால், உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தனக்குத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வதால்,. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடத் தோன்றாது. ஆதலால், பருமனாகும் அபாயமும் இல்லை!

    குழந்தைகளுக்கு அபாரமான கற்பனைத்திறன் உண்டு. நாட்டிய நாடகம் போன்றவற்றில் பங்கு ஏற்பதால், அத்திறன் மேலும் சிறக்க வழியிருக்கிறது. ஒரு சிறிய பாட்டில், `அரக்கன்’ என்று வரும் இடத்தில் கண்ணைப் பயங்கரமாக உருட்டிய ஒரு சிறு பெண் பலராலும் பாராட்டப்பட்டாள். அதன்பின், அந்த இடம் வருமுன்னரே மேடையில் அவள் உற்சாகமடைந்ததைக் கண்டிருக்கிறேன். (அதற்குமுன் அவளை யாரும் எதற்கும் புகழ்ந்ததில்லை).`என்னிடம் இவ்வளவு திறமை இருக்கிறதா!’ என்று வியந்ததுபோல், அவளது தன்னம்பிக்கை கூடியது.

    ஆனால் ஒன்று. பாடுவது பாட்டுக்காக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஒருவரின் இசையில் பாவம், பக்தி இராது. அதேபோல், நாட்டியமாடுவதால் நடனமணி எவ்வளவு சிறப்புப் பெறுகிறாள் என்பது முக்கியமில்லை. (குழந்தைகளை மன்னிக்கலாம்). அவர்களிடமும், `நீ நன்றாக ஆடுகிறாய். அழகாய் இருக்கிறாய். இது தெரிந்த விஷயம்தானே! பிறர் இதையெல்லாம் புகழ்ந்தால், ரொம்ப மகிழ்ந்துவிடாதே. `நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு! இல்லாவிட்டால், கலை உன்னை விட்டுப்போய்விடும்,’ என்று அறிவுரை கூறி வளர்த்தால், கர்வம் இல்லாமல் வளர்வார்கள். இந்த ஒழுக்கத்தினால், அவர்களால் பல விஷயங்களிலும் வெற்றி பெற முடியும்.

    சரியான முறையில் கையாண்டால், நாட்டியம் மன அமைதியை அளிக்க வல்லது. தன்னையே உணரச் செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால், அமைதி எப்படிக் கிடைக்கும்? The emphasis should be on the dance, not the dancer.பலரும் தம் தனிப்பட்ட புகழுக்கும், பொருளுக்கும் நாட்டியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது போட்டி, பொறாமை, அதனால் விளையும் சச்சரவுகளையே எழுப்பாது?

    ஏதாவது ஒரு காரணத்துக்காக (பேச்சு, பாட்டு, நாட்டியம்) மேடை ஏறுபவர்கள் முதலில் அச்சத்துக்கு உள்ளாவார்கள். உலகப் புகழ் பெற்ற இசை வல்லுனர்களும், நாட்டியமணிகளும்கூட, `மேடை ஏறுமுன் எனக்குள் அட்ரினலின் (adrenaline) ஏகமாகச் சுரந்துவிடும். அதனால் படபடப்பாக இருக்கும். அப்போதுதான் என்னால் நன்றாகச் செயல்பட முடியும்!’ என்று கூறியதாக நீங்கள் படித்திருக்கலாம். இது stage fright அல்லாமல் வேறென்ன! பயம் இல்லாவிட்டால், நிகழ்ச்சி இன்னுமே சிறப்பாக இருக்கும். தன்னை முன்னிறுத்தி, கலையை இரண்டாம்பட்சமாகக் கருதுவதால் வந்த வினை இது.

    யோகாசனம் அமைதியை அளிப்பது, ஆரோக்கியத்தை அளிப்பது, பயில்பவர்கள் விரைவாக மூப்பு அடைய மாட்டார்கள் (retards the decay of cells) என்றெல்லாம் என் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (விளையாட்டாகத்தான் செய்ய ஆரம்பித்தேன். உடனே, மூளை நன்றாக செயல்பட்டது கண்டு, `கல்லூரி நாட்களிலேயே ஆரம்பித்திருக்காமல் போய்விட்டோமே!’ என்ற ஏக்கம் பிறந்தது. நாற்பது வயதுக்குமேல்தான் மூப்பைப்பற்றி அறிந்தேன்).

    விளையாட்டு வீரர்கள் முதலில் குனிந்து, நிமிர்ந்து என்று பல்விதப் பயிற்சிகள் செய்வதைப்போல், வகுப்பிலும் நாட்டியம் ஆடுமுன் செய்தால், உடலில் எந்த வலியும் ஏற்படாது. முதலில் சிறிது உடற்பயிற்சி (stretching exercises), பிறகு சூரிய நமஸ்காரம் என்று ஆரம்பித்தால், களைப்பின்றி வெகு நேரம் ஆட முடியும்.

    மாறாக, ஆரம்பித்தவுடனேயே ஒரு பாடலுக்கு குதித்து ஆடத் துவங்குவதால், காலில் சுளுக்கு, தோள்வலி என்று ஏடாகூடமாக ஏதாவது ஆகும். தவறான `போஸ்’களாலும் இதே விளைவுதான்.

    நாட்டியம் என்றால், கை முத்திரைகளும் அதில் அடங்கும் அல்லவா? ஒவ்வொன்றுக்கும் தனிப் பலன்கள் உண்டு. உதாரணமாக, ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நீட்டி, மற்ற இரண்டையும் கட்டை விரலுடன் சேர்த்துப் பிடித்தால், கண்ணுக்கு நல்லது. ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்!

    இப்போதெல்லாம், நவீன யுகம், எங்கும் பரபரப்பு என்றெல்லாம் கூறி, ஒரு பாடலின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அதிவேகமாக ஆடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லதல்ல. மூச்சிறைக்கும் என்பதோடு, அது இருதயத்துக்கும் ஊறு விளைவிக்கும். (unnatural bio-rhythm).

    எந்த வயதினரும் நாட்டியம் பயிலலாம். மேடையேறுவதே குறிக்கோளாக இல்லாதவரை, நாட்டியத்தால் ஒருவர் பயனடைவது உறுதி. அப்படி மேடையேற வாய்ப்பு இருக்கிறவர்களும், தம் சுயமதிப்பையே பெரிதாக எண்ணாமல், நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளித்தால், பார்ப்பவர்களையும் அந்த அமைதியும், ஆனந்தமும் சென்றடையும்.

    பி. கு. அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் (பஞ்சாபி) பெண்ணும், அவள் மகளும் என் பெண்ணின் இலவச நாட்டிய வகுப்பில் சேர்ந்து, பெரிதும் பலன் பெற்றிருக்கிறார்கள். சிறுமி கலகலப்பாக ஆகிவிட்டாள். தமிழில் கூடவே பாடுகிறாள்! 35-வயதான மாது மிகுந்த தயக்கத்துடன் சேர்ந்தாள். இப்பவும் ஒரே negative. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பதால், சுயபச்சாதாபம், பயம். வயதில் சிறியவர்களை மாற்றுவது எளிது.

    தொடருவோம்

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (10)  

    க. பாலசுப்பிரமணியன்

     சூழ்நிலைகளும் குழந்தைகளின் கற்றலும்

    education1

    ஒரு குழந்தையிடம் குடும்பத்தினர் பேசும் பொழுதும் பழகும் பொழுதும் அவர்களுடைய குரலும்  உடல் மொழிகளும் நம்பிக்கையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். அதட்டிப் பேசும் பொழுதும் கடுமையாகப் பேசும் பொழுதும் அந்தக் குரலின் ஏற்றதாழ்வுகள் குழந்தையின் உள்மனத்தை பாதிப்பதாக உள்ளன. இந்த பாதிப்புகளை குழந்தைகள் தங்கள் கண்களின் மூலமாகவோ அல்லது தங்கள் உடல் அசைவுகள் மூலமாகவோ வெளிப்படுத்துகின்றன. சில நேரங்களில் கடுமையான சொற்களைக் குழந்தைகள் புரிந்து கொள்ளாவிட்டாலும் அந்தச் சொற்களின் உள்நோக்கத்தை புரிந்து கொள்கின்றன. இதனால் குழந்தைகள் மனதில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

    இந்த பயத்தின் காரணமாக குழந்தைகள் ஒரு செயலைச் செய்ய விரும்பாமலோ அல்லது முயற்சிக்காமலோ இருக்கலாம். அல்லது சில சம்பந்தப்பட்ட செயல்கள் மீது விரும்பத்தகாத ஒரு வெறுப்பும் ஏற்படலாம்.

    ஒரு உரையாடல் நடக்கும் பொழுது குழந்தைகள் சம்பந்தப்பட்ட நபர்களின் உடல் மொழியை உன்னிப்பாக கவனிக்கின்றன. உடல் மொழிகள் வார்த்தைகளைவிட அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

    உதாரணமாக கைகளை  நீட்டிப் பேசுதல், விரல்களால் அவர்களை குறித்துப் பேசுதல், அலட்சியமான முகத்தையும் பார்வையையும் கொண்டு பேசுதல், கோபத்தையும் வெறுப்பையும் காட்டுகின்ற பார்வைகொண்டு பேசுதல் போன்றவேற்றை  முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்.  அனேக நேரங்களில் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உடல் மொழிகளை அப்படியே பிரதிபக்கின்றன. சில நேரங்களில் இந்த மாதிரியான கற்றல் ஆழமாக நினைவுகளில் பதிந்து பல ஆண்டுகள் வரை அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    வளரும் பருவத்தில் கற்றல் நேர்முகமாக  (direct learning )   இல்லாமல் அதிகமான விழுக்காடு மறைமுகமாக (indirect  learning ) ஏற்படுகின்றது. குழந்தைகள் பெற்றோர்கள் மட்டுமின்றி தன் வயதுசார்ந்த மற்ற குழந்தைகள் மூலமாகவும் கற்றுக் கொள்கின்றன. தங்களைப் போன்ற  மற்ற குழந்தைகள் என்ன செய்கின்றன, எப்படிச் செய்கின்றன எதற்க்காகச் செய்கின்றன என்ற  கேள்விகள் குழந்தைகள் மனதில்  எழுகின்றன..  அவர்களின்  செயல்களைப்  பார்த்தவுடன் தானும் அதேபோல் செய்யவேண்டும் என்ற ஒரு உந்துதல் உள் மனத்தில் எழுகின்றது. மனநல மற்றும் மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மூளையில் உள்ள “கண்ணாடி நியூரான்கள் ” (Mirror neurons ) மூலம் ஏற்படும் பாதிப்புக்களை ஆராய்ந்து “சமூகக் கற்றல்” (social learning )எவ்வாறு நம்முடைய கற்றல் திறன்களை பாதிக்கின்றது என்று விளக்கியிருக்கின்றனர்.

    பொதுவாகக் குழந்தைகள் தங்கள் விளையாட்டுக்களை ஆரம்பிக்கும் பொழுது  முதலில் ‘அப்பா-அம்மா’ விளையாட்டைத் தொடங்குகின்றன. பின்பு “டீச்சர்’ மாணவர் சூழ்நிலையை முன்னிறுத்தி  விளையாடுகின்றன.இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஒரு கருத்தை முன்னிறுத்தி செயல் படுகின்றன. இவை அனைத்தும் சூழ்நிலைகளிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்டவை.

    சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆக்கபூர்வமாகவும் இருக்கலாம் அல்லது கேடுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆகவே குழந்தைகளின் வளர்ச்சிப் பாதையை மன நலத்திற்கு ஏற்றதாக அமைத்துத் தருதல் குடும்பத்தில் உள்ள அனைவரின் பொறுப்பாகும்.

    Share
  • வளவன் கனவு (25)

    சு. கோதண்டராமன்

    வெப்பு நோய்

    vallavan-kanavu1

    ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
    போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
    தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

    -சம்பந்தர்.

    குலச்சிறையார் ஒற்றர் படையைச் சேர்ந்த நான்கு வீரர்களைத் தனியாகக் கூப்பிட்டு, சம்பந்தரின் இருப்பிடம் அறிந்து போகச் சொன்னார். அவர்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சம்பந்தரின் தொண்டர்களாக அவர் பின்னாலேயே போக வேண்டும், அவருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்.

    பாண்டியநாட்டை நோக்கி சிவக்கன்று வருவதை அறிந்த சமணர்கள் மன்னன் மீது தங்கள் பிடியை இறுக்கினர். சமணத்தின் இறுதிக் கோட்டை அது. அது வீழ்ந்துவிட்டால் தமிழ் மண்ணில் சமணம் இனித் தலை தூக்கவே வாய்ப்பு இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சம்பந்தர் ஆலவாய் நகர எல்லைக்குள் புக விடாமல் தடுக்க வேண்டும் என மன்னனிடம் வேண்டினர். மன்னனும் உடன்பட்டார்.

    குலச்சிறையார் ஆலவாய் நகரின் கிழக்கு எல்லையில் ஒரு வீட்டைச் சம்பந்தரும் அவரது அடியார்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இருட்டியபின் உள்ளே இருந்தவர்களைக் கொல்லைப் புறமாக வெளியேற்றி வேறொரு வீட்டில் தங்க வைத்து அதற்குக் காவல் இட்டார்.

    முதல் வீட்டில் சம்பந்தர் தங்கியிருப்பதாக நினைத்த சமணர்கள் அதற்குத் தீ வைத்தனர். வீடு எரிந்து சாம்பலாகியது. எதிரி ஒழிந்தான் என்று அவர்கள் கொக்கரித்தனர்.

    இரவோடு இரவாகச் சம்பந்தரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்த குலச்சிறையார் அரசிக்கு மட்டும் செய்தி எட்டச் செய்தார்.

    அரசர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசி கேட்டார், “அன்பரே, சமணத்தின் முக்கியக்கொள்கை அகிம்சை தானே?”

    தன் மனைவிக்கும் சமணத்தின் மீது பற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து அரசர் மகிழ்ந்தார். “ஆம், எந்த உயிர்க்கும் துன்பம் இழைக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்.”

    “நம் மகன் வயது உடைய ஒரு பாலகனை உயிரோடு எரித்துக் கொல்ல உத்திரவிட்டிருக்கிறீர்களே, இதுதான் அகிம்சையா?”

    “யார், யார், என்ன சொல்கிறாய்?”

    “சோழநாட்டிலிருந்து வந்துள்ள சிவனடியார் தங்கி இருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா?”

    “இல்லை தேவி. அவர் சமணத்துக்கு விரோதமாகப் பேசுகிறார் என்பதால் அவரை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கத்தான் உத்திரவிட்டேன். என்னை மீறிச் சமணர்கள் அவருக்குத் தீ வைத்துவிட்டார்களா? என்ன கொடுமை இது? அகிம்சை பேசுபவர்கள் இப்படிக் கூடச் செய்வார்களா? அவர்களை நம்பி மோசம் போனேனே!”

    “கேட்பார் பேச்சைக் கேட்டு அறிவில்லாமல் செயல்படுவது உங்கள் பரம்பரைக்கே வழக்கம். முன்பு ஒரு பொற்கொல்லர் பேச்சைக் கேட்டு நிரபராதியான கோவலனைக் கொன்றதும் அதன் காரணமாக இந்த மதுரை தீக்கிரையானதும் உலகமே அறியும்.”

    அரசர் மிக வேதனை அடைந்தார். ‘என் மகன் போல ஒரு பாலகனைத் தீக்கிரையாக்கிய பாவத்தைச் செய்து விட்டேனே, இதை எப்படிப் போக்கிக் கொள்வேன்? இத்தகைய இழி செயல் செய்ய இடம் கொடுத்த  என்னை நாட்டு மக்கள் இகழ்வார்களே. நான் எப்படித் தலை நிமிர்ந்து நடப்பேன்? என்னைக் கூன்பாண்டியன் என்று மக்கள் பரிகசிப்பார்களே’ என்று சிந்தித்த வண்ணம் உறங்கப் போனார். உறக்கம் வரவில்லை.

    நள்ளிரவில் அவருக்கு உடம்பில் எரிச்சல் கண்டது. அரசியை எழுப்பினார். ‘உடல் முழுவதும் பற்றி எரிகிறது, தாங்க முடியவில்லை’ என்று கதறினார். அரசி அங்கிருந்த சந்தனக் குழம்பை அவர் உடல் முழுவதும் தடவினார். எரிச்சல் அடங்கவில்லை. பணிப்பெண்ணை அழைத்து அரண்மனை வைத்தியரை அழைத்து வரச் சொன்னார்.

    வைத்தியர் வந்து பார்த்தார். ஒரு தொட்டியில் அரசரை உட்கார வைத்தார். அவரது கழுத்து வரை நீர் நிரப்பச் சொன்னார். ஒரு பானையில் நீர் நிரப்பிச் சொட்டுச் சொட்டாக அரசர் தலையில் விழுமாறு செய்தார். ‘சூரிய உதயம் வரை இப்படியே இருந்தால் சரியாகி விடும்’ என்றார். சற்று நேரத்தில் தொட்டி நீர் சூடேறி ஆவி மேலெழுந்தது. வைத்தியர், ‘இதற்கு மேல் வைத்திய சாத்திரத்தில் வழி இல்லை. ஏதேனும் மந்திரம் மாயம்தான் செய்ய வேண்டும்’ என்றார்.

    ஊர் பூராவும் இந்தச் செய்தி பரவியது. சமண குருமார்கள் ஓடி வந்தனர். அரசருக்கு அவர்கள் முகத்தில் விழிக்கவே பிடிக்கவில்லை. “பேசுவது அகிம்சை, செய்வது கொலைத் தொழில். போங்கள் வெளியே” என்று கத்தினார்.

    “இல்லை மன்னா, நாங்கள் மந்திரத்தின் மூலம் உங்கள் நோயை நீக்கிவிடுகிறோம்” என்றார்கள்.

    குலச்சிறையார் அரசர் காதில் கிசுகிசுத்தார். “நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சமண குருமார்களை மிகவும் போற்றி வணங்குகிறார்கள். அவர்களை உடனடியாக வெளியேற்றினால் மக்கள் புரட்சியை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் ஒரு பக்கம் மந்திரம் செய்யட்டும். இன்னொரு பக்கம் சைவ குருமார் மந்திரம் செய்யட்டும். எது பலித்தாலும் நமக்கு நல்லதுதான்.”

    அரசர் உடன்பட்டார். குலச்சிறையார் தன் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பந்தரை அழைத்து வரச் செய்தார்.

    படுத்திருந்த அரசர் சம்பந்தரைப் பார்த்தார். “இவர்தான் அந்த சைவ குருவா? நேற்று அரசி சொன்ன பாலகர் இவர் தானா? இவர் உயிருடன் இருக்கிறாரா? நல்ல வேளை பெரும் பாவத்திலிருந்து தப்பினேன். என் மகன் போலத்தான் இருக்கிறார். அந்தப் பால் வடியும் முகத்தில்தான் என்ன தெய்வீகம்!, கண்களில் என்ன ஒளி!” என்று வியந்தார்.

    வலப்பக்கம் சம்பந்தரும் இடப்பக்கம் சமணரும் மந்திரம் செய்து குணப்படுத்த வேண்டும் என்று முடிவாயிற்று. சம்பந்தர் ‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கி ஒரு பதிகம் பாடி அரசரின் உடலில் வலப்பக்கத்தில் திருநீற்றைப் பூசினார். ‘அடாடா என்ன மென்மையான கைகள்! என் குழந்தை ஒரு வயதில் என் முகத்தைத் தடவியது போல இருக்கிறதே! அந்த அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அவருடைய இன்னிசையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது’ என நினைத்த அரசரின் வலப்பக்கத்தில் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இடப்பக்கம் மிக அதிகமாக எரியத் தொடங்கியது. சமண குருமார்களைப் பார்த்து, “நீங்கள் போகலாம். சம்பந்தரே இடப்பக்கத்துக்கும் மருத்துவம் செய்யட்டும்” என்றார் அரசர்.

    பதிகம் பாடி முடிவதற்குள் அரசர் வெப்பு நோயிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று எழுந்தார். தலை நிமிர்ந்து, ‘நின்ற சீர் நெடுமாறனாக’ விளங்கினார்.

    சமணர்கள் விடவில்லை. “இவர் ஏதோ ஒரு பேயை வசப்படுத்தி அதன் மூலம் நோய் குணமானதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவரிடம் உண்மையான தகுதி இருந்தால் எங்களுடன் வாதம் செய்து வெல்லட்டும்” என்றார்கள்.

    அரசர் உடன்பட்டார். அரண்மனை முற்றத்தில் மக்கள் முன்னிலையில் நாளைக் காலை விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கச் செய்தார்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(102)

    செண்பக ஜெகதீசன்

    ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்.   (திருக்குறள் -763: படைமாட்சி)

    புதுக் கவிதையில்…

    எத்தனைபேர் என்ற
    எண்ணிக்கையில் அல்ல,
    பலத்தில் உள்ளது
    படையின் பெருமை… 

    எலிகள்பல படையாய்ச்சேர்ந்து
    எதிர்த்தாலும்,
    எழுந்துசீறும் நாகத்தின்முன்
    எல்லாம் ஓடி அழியும்…!

    குறும்பாவில்…

    எலிப்படையால் எதுவும் ஆகாது,
    படமெடுத்துச் சீறிவரும் பாம்பின்முன்
    பயந்தோடும் எல்லாம் ஒன்றாய்…!

    மரபுக் கவிதையில்…

    படையின் பெருமை வீரமன்றிப்
    -பலரைச் சேர்த்தும் பலனில்லை,
    அடைய முடியா வெற்றிக்கே
    -அணியாய்த் திரளும் எலிக்கூட்டப்
    படையால் ஆவது ஏதுமில்லை,
    -படமதைக் காட்டிச் சீறியெழும்
    புடைவாழ் பாம்பைக் கண்டவுடன்
    -பதறி யடித்தே ஓடிடுமே…!

    லிமரைக்கூ…

    பலம்வீரம் இருந்தால்தான் சிறந்தவொரு படை
    பார்க்கும் அதிக எண்ணிக்கையல்ல,
    பாம்புசீறத் தடைப்படுமே எலிப்படையின் நடை…!

    கிராமிய பாணியில்…

    படயில்ல படயில்ல
    பெருங்கூட்டம் படயில்ல,
    வீரமிருந்தா படயாவும்
    வெரட்டியடிக்கும் படயாவும்… 

    எலியெல்லாஞ் சேந்தாலும்
    எல்லாம்படயா வந்தாலும்,
    பாம்பப்பாத்தா பயந்தோடும்
    பாம்புசீறுனா பாஞ்சோடும்… 

    அதால,
    படயில்ல படயில்ல
    பெருங்கூட்டம் படயில்ல,
    வீரமிருந்தா படயாவும்
    வெரட்டியடிக்கும் படயாவும்…!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (46)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12463850_939138782806988_1760068728_n

    வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • முரண்களின் முரண்!

    -கவிஜி 

    நதி எரிக்கிறது
    குளிர்உதிர்த்த
    மதியின் நிறம்!

    ——–

    இறுதி ஊர்வலத்தில்
    தெரியாமல் விழுந்துவிட்ட
    ஒரேஒரு முள்கூட
    மரணத்தை
    வன்மையாகக் கண்டிக்கிறது!

    ——–

    எல்லா ஊர்க்
    கோவில்
    ஆலய
    மசூதி
    வாசல்களிலும்
    இந்தியப் பிச்சைக்காரர்கள்!

    ——–

    தலைகீழாய்த்
    தொங்கும் கயிற்றில்
    நேராக இறங்குகிறது
    எறும்பு…!

     

    Share
  • மார்கழி மணாளன்  -19 பத்ரிநாத் – ஸ்ரீ பத்ரி நாராயணர்    

     க. பாலசுப்பிரமணியன்

    83faee00-5aec-4ba4-a5b4-01671653a8ee

    பனிமலையைத் திருமலையாய் கொண்டே

    அருள்  மழையால் கலி தீர்க்கும் நவநீதா !

    ஊனுருக நினைத்தோரைத் தன்னருகில் வைத்தே

    வானுயர்ந்த வளம் தருகின்ற குணசீலா !

     

    பாதங்கள் ஆயிரம் நான் போற்றினாலும்

    பத்ரிவாசா ! புகல் பாதம் உனதன்றோ  ?

    பத்மாசனத்தில் அமர்ந்தோனே ! பரந்தாமா!

    பால்வண்ணப் பனிமலையில் கார்வண்ணா !

     

    பனிகாத்தாள் பொற்செல்வி பத்ரிமரமாய்

    புவிகாக்க நீ அமர்ந்தாய்   புனிதனாய் !

    புகழ்பாடும் நாரதனும் புகல் கேட்டான்

    புண்ணியனே ! போற்றியதே மண்ணினமே !

     

    ஆன்மாவிற்குப் பொருள் சொன்ன பரமாத்மா

    ஆனந்தா ! அலர்மேல் மன்னா ! அச்சுதா!

    மோனத்தில் தியானத்தில் அமர்ந்த முகுந்தா !

    வானத்தில் இருப்போரும் வணங்கும் வைகுந்தா !

     

    வேதத்தில் நாதத்தில் விளைந்தோனே விஸ்வரூபா !

    தேகத்தில் உயிராய் திகழ்வோனே தாமோதரா !

    பாசத்தில் அழைத்தோர் அன்பினிலே ஆதிமூலா!

    பாசத்தின் வேடங்கள் உடலென்ற பத்ரிநாராயணா !!

     

    காலங்கள் அனைத்திற்கும் பாலம் நீயன்றோ !

    கடமைகள் முடிந்திடவே காட்சியும் உனதன்றோ !

    கற்பனையில் கண்டாலும் கணத்தினிலே வந்திடுவாய் !

    கண்ணா! மணிவண்ணா! காலமெல்லாம் நீயே காப்பு !

    Share
  • படக்கவிதைப் போட்டி 45-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவான புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் வல்லமைஇதழ் நன்றி நவில்கின்றது.

    headstand kids

    தாம் சாதிக்க நினைப்பதைத் தலைகீழாக நின்றாகவேனும் சாதித்துவிடத் துடிக்கும் இந்த இளஞ்சிறார்களின் அரியமுயற்சி திருவினையாகட்டும்!

    இனி, இவ்வாரப் போட்டிக்கான கவிதைகளில் நம் கருத்தைச் செலுத்துவோம்!

    ***

    பட்டம்போலப் பறந்து பரவசத்தில் திளைக்கும் பிள்ளைகளுக்கு அழகிய ‘பிள்ளைத்தமிழ்’ பாடியிருக்கின்றார் திரு. வ.க. பரமநாதன்.

    பட்டம்   போலப்  பறக்கிறார்
    பரவ சத்தில் மிதக்கிறார்
    கட்டி நிழலை இழுக்கிறார்
    களிப்பி லாடிக் கிடக்கிறார்
    எட்டி நின்று பார்ப்பதில்
    எழுந்து ஓடத் துடிப்பதில்
    சுட்டிப் பிள்ளை யிவர்போலச்
    சுகிக்க மனதும் ஏங்குதாம்

    ***

    ’தலைகீழ் விகிதங்களாய் வாழ்க்கை இருக்கையில் இருகையை ஊன்றிச் சிரசாசனம் செய்துதானே சிம்மாசனம் பிடிக்கவேண்டியிருக்கின்றது’ என்று இந்தப் பிள்ளைகளின் சார்பில் வாதிடுகின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

    தலைகீழ் விகிதங்களாய்
    வாழ்க்கை இருக்கையில்
    சிரசாசனம் செய்தே
    சிம்மாசனம் பிடிக்க வேண்டியுள்ளது

    சூரியனும்
    எங்கள் நிழலைச்
    சுட்டெரிக்குமோ……
    மகிழ்ச்சிக் கடல்
    பொதுவன்றோ எல்லோருக்கும்
    அந்த வானம் போல….

    கைநிறைய அள்ளுவோம்,
    களிப்பில் துள்ளுவோம்
    தொடுவானம் போலத்
    தொலைதூரம் செல்வதல்ல
    வாழ்க்கை……

    தொட்டுவிடும் தூரந்தான்,
    கையூன்றி நிலத்தைக்
    கைப்பிடிப்போம்
    நமக்கான இடம்
    எப்போதும் உள்ளது
    வாருங்கள் வாழலாம்….
    எல்லோரையும வாழ்த்தலாம்,
    வாழவைப்போம் என்றென்றும்..

    ***

    ’மண்ணில் தலைகீழாய் நின்றேனும் விண்ணைத்தாண்டிப் பறக்கவிழையும் இச்சிறாரை, பாசமெனும் வலைவிரித்து அடக்கிவிடாதீர்! அவர்தம் முன்னேற்றத்தை முடக்கிவிடாதீர்!’ என்று வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வஞ்சமெனும் பெரும்பாரம்
    நெஞ்சில் புகாதவரை,
    பிஞ்சுக் குழந்தைகள் இதயம்
    பஞ்சுபோல் மெல்லியதுதான்..

    அதனால்,
    இறக்கைகள் இல்லாமலே
    பறப்பரிவர் விண்ணைத் தாண்டியே..

    பறக்கட்டும் இந்தப்
    பட்டாம்பூச்சிகள்,
    பாசவலை விரித்து
    முடக்கிவிடாதீர்கள் இவர்கள்
    முன்னேற்றத்தை..

    பறக்கட்டும் பறக்கட்டும்
    இந்தப்
    பட்டாம்பூச்சிகள்…!

    ***

    ’சிறுவர்காள்! துள்ளிவிளையாடும் பிள்ளைப்பருவ விளையாட்டுக்கள் உள்ளம் தொடுபவைதாம்! ஆயினும் இவற்றோடு நின்றுவிடாது எதிர்கால வாழ்வையும் சீராய்த் திட்டமிடுங்கள்! சிகரம் தொடுங்கள்! என்று இன்னுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    உண்மை உணர்க !
    உருண்டு திரண்டு
    உழன்று சுழன்று
    மண்ணில் இருந்து
    விண்ணில் பறக்க
    முயன்று பார்ப்பது
    பள்ளிசெல்லும் வயதில்
    துள்ளிப் பறப்பதும்
    இயல்புதான் இது
    விளையாட்டுதான் !
    ஆனால் வாழ்க்கையில்
    கெட்ட வழியில்
    சொத்து சேர்த்து உயராமல் நல்
    முத்தாய் பெயர் பெற
    நயம்பட உழைத்தும்
    சுயமாய் நேர்பட நின்றும்
    உயரம் ஏறி
    சிகரம் தொட்டு
    உயரும் நிலைதான்
    பிறப்பின் சிறப்பே
    எந்த நிலையிலும்
    உயர உயரப் பறந்தாலும்
    ஓர் நாள் பறவை கீழிறங்கும்
    உண்மைதனை உணர்க பிள்ளைகளே

    ***

    சுட்டித்தனம் செய்யும் இந்தக்கெட்டிக்காரச்சிறுவர்களுக்கு மண்ணில் நீந்துவதும் தலைகீழாய் நடப்பதும் சர்வசாதாரணந்தான்! என்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    கடற்கரையில் சிரசாசனம் யோகாசனம்
    படம் தலைகீழான பதிவினம்
    வானம் கீழே கைமுட்டியின்று
    வாலாய உடலின் சாகசம்.
    மனமொரு நிலைப்படுத்தும் ஆசனம்
    தனம் தலையோடிணைந்து உறுப்புகளிற்கு
    உயிர்சத்து, தடையற்ற இரத்தோட்டம்
    உயர் ஞாபகசக்தி, குரலினிமையுருவாகும்.

    சிட்டுக் குருவிகள் சிறகடிப்பாய்
    சுட்டித்தனச் சிறுவருக்கிது சர்வசாதாரணம்.
    தண்ணீரில் நீந்துவது போன்றிவர்
    மண்ணில் நீந்துமிது கைநடை.
    தலைகீழ் நடையொரு சாகசம்
    விலையேதுமில்லை சுட்டிச் சிறுவருக்கு.
    கையால் சாகசம் செய்யுமிவருக்கு
    வாழ்க்கையொரு விளையாட்டுச் சதுரங்கம்.

    *** 

    தலைகீழாய் நின்று தவம்புரியும்(!) இந்தச் சிறுவர்களின் சாகசத்திற்குச் சிறந்த விளக்கங்களைத் தம் பாக்களின்வழி வழங்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    நம் அடுத்தவேலை…இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திப்பது!

    இன்றைய இளையபாரதத்தினர் நாளைய உலகை நன்முறையில் சமைக்கப்போகும் நவயுகத்தின் சிற்பிகள்! ஆதலால், கட்டுறுதிமிகு உடல்திறனை அவர்கள் இளமையிலேயே பெறுதற்குப் பெரியோர் துணை நிற்கவேண்டும். மண்ணிலும் கல்லிலும் மலையிலும் மழையிலும் துள்ளிவிளையாடினாலன்றோ உடல் உறுதிபெறும்? அதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், சிறார்களின் உலகை வீட்டுக்குள்ளேயே முடக்கிவிடாது, சிட்டுக்குருவிகளைப்போல் அவர்களைச் சுதந்திரமாய்த் திரிந்து பறந்துவரப் பெரியோர் அனுமதிக்க வேண்டும். ’கல்விப்பட்டங்கள்’ மட்டுமே வாழ்க்கை என்று எண்ணிவிடாது, சிறுவர்கள் வானைநோக்கி ஏவும் வண்ணப்பட்டங்களுக்குள்ளும் அவர்களின் மகிழ்ச்சியும் இன்பமும் மறைந்திருப்பதைப் பெரியோர் அறியவேண்டும்.

    அவ்வாறு, சிறுவர்களின் உலகத்தில் பயணித்து அவர்களின் உணர்வுகளைப் பொருளுள்ள வார்த்தைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிதையொன்று வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள… “நீங்கள் நினைக்கலாம் எங்கள் கைகளில் இருப்பது பட்டமென்று… பட்டமல்ல அது! விழுந்துவிட எத்தனிக்கும் பூமியைப் 
    பிஞ்சுக் கரங்களால் தாங்கிப் பிடிக்கும் காகிதச் சும்மாடு” என்ற வரிகளை மிகவும் நேசித்தேன்.

    அக்கவிதை…

    நம்பிக்கைச் சிறகுகள் போதும் எமக்கு.
    விண்ணை மண்ணாய் மாற்றும்
    வித்தைகள் கற்ற நாங்கள்
    வார்த்தைகள் கொண்டு தம்பட்டம்  அடியாமல்
    வானத்தில் பறந்து  எம் பட்டம்  விடுவோம் !

    நீங்கள் நினைக்கலாம்
    எங்கள் கைகளில் இருப்பது
    பட்டமென்று ,
    பட்டமல்ல அது.
    விழுந்துவிட எத்தனிக்கும் பூமியை
    பிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடிக்கும்
    காகிதச் சும்மாடு .

    எங்களை  எங்கள் உலகத்தில் நின்று பாருங்கள்
    உங்களிலிருந்து உதிர்ந்துபோன
    எங்களின் காலம் உங்களை
    எங்கள் உலகத்துக்கே
    மறுபடியும் அழைத்துப் போகக்கூடும் .

    வாருங்கள் எம்மோடு வந்து
    விளையாடுங்கள்.
    உங்கள் வறட்டுப் பிடிவாதங்களை
    எடுத்து வீசிவிட்டு
    எங்கள் மனதோடு எங்களிடம் வரும் உங்களை
    இந்த வானம் மட்டுமல்ல
    எந்த வானமும் நிராகரிக்காது.

    பெரியோர்களைச் சிறார்களின் உலகிற்கு இருகரம்நீட்டி வரவேற்கும் இந்தக் கவிதையைத் தீட்டியிருக்கும் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்துள்ளேன்.

    ***

     

    சிறாருக்கும் அவர்தமைவிட்டு விலகியே நிற்கும் பெரியோருக்கும் இடையேயுள்ள வாழ்வியல் முரண்பாடுகளை அழகாய் விவரிக்கும் மற்றொரு கவிதையும் கண்டேன்! ”காடுகள் மரங்களோடு கடவுளையும் வளர்க்கத் தெரிந்தவர்கள் நீங்கள்!” என்று பெரியோரின் செயலைச் சரியாய்ச் சுட்டும் அறிவார்ந்த சிறுவர்களை இக்கவிதை நமக்கு அடையாளம் காட்டுகின்றது!

    எங்கள் உலகை
    உங்கள் சாவிகள்
    ஒருபோதும் திறக்காது

    அது மலைகள் வளர்ந்த
    தேசமாக இருக்கையில்
    உங்கள் கழுத்து ஓர்  எல்லையில்
    நின்று விடும்

    அருவிகள் செய்பவர்கள் நாங்கள்
    என்பதால் உங்கள்
    கேள்விகள் எங்களை
    நனைப்பதில்லை

    காடுகள் மரங்களோடு
    கடவுளையும் வளர்க்கத்
    தெரிந்தவர்கள்உங்கள்
    பிரார்த்தனைகளை நாங்கள்
    உதைத்துத் தள்ளுகிறோம்

    புல்வெளிகள் புதிது என்பது
    எங்கள் தத்துவம், மாயங்கள் என்பது
    உங்கள் முகம்..
    அது ஒப்பனைஎங்களுக்கு வேண்டாம்..

    எந்தப் பூட்டிலும் எங்கள்  உலகம்
    நுழைந்து
    வெளி வந்து விடும்அதற்கு
    உங்கள் சாவிகள் தேவையில்லை..

    காரணமற்ற எங்களை
    முறைத்து விட்டு நீங்கள்
    சென்றால்
    சரி என்று குட்டிக்கரணம்
    போட்டு விட்டு
    கடந்து
    விடுவோம் …
    பிறகு காட்டாறு என்று
    கூறுவது உங்கள் இஷ்டம்
     

    ஒப்பனைநிறைந்த பெரியோரின்உலகை வெறுக்கும் சிறாரையும், அவர்தரப்பு நியாயங்களையும் நிரலாய்ப் பட்டியலிட்டுள்ள திரு. கவிஜியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுத்துள்ளேன். 

    மலர்ந்துள்ள இந்தப் புதியஆண்டில் கவிஞர்தம் கற்பனைகள் மேன்மேலும் சிறக்க என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

     

    Share
  • மார்கழி மணாளன்  18   திருநின்றவூர் –  பக்தவத்சலப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

    47a6a26e-3644-41a2-9986-08739acdfc47

    வான்வீதி வலம் வந்த  வருணன் மகளும்

    விண்வெளி போலொரு மண்வெளி கண்டாள் !

    கண்விழியில் விண்வெளியைக் கொண்டவளே

    மண்வெளியில் கண்விழியால் கோயில் படைத்தாள் !

     

    திருநின்ற ஊரிலே வான் வந்த திருநின்றது

    திருமகளின் மனம் நிறைந்த எழில் வந்தது !

    திருமகளின் வழியே திருமாலின் மனம் வந்தது

    திருமாலின் மனத்தோடு திருவருளும் வந்தது !

     

    பார்த்தனுக்கே கீதை சொன்ன பக்தவத்சலன்

    பாவம் அழிக்க பத்து வண்ணம் கண்டவன்

    வில்லான் வராகன் வேதியன் யாதவன்

    நாரணன் நரசிம்மன் நாமங்கள் ஆயிரம் !

     

    நின்றவன் நிறையவன் நீலன் நிகரில்லான்

    நிலமகள் அலைமகள் துணை கண்டான் !

    வல்லான் நல்லான் வறுமையை அறுப்பான்

    விடுகதை வாழ்விற்கு விடைகள் தருவான் !

     

    அவலின் அன்பிற்குப் பொன்னைத் தந்தவன்

    அனுமன் அன்பிற்குத் தன்னைத் தந்தவன்

    அரக்கன் தம்பிக்கு அரியணை தந்தவன்

    அடியவர் பக்திக்கு எதையும் தருபவன் !

     

    குறைவின்றிப் பொருளெல்லாம் குவலயத்தில் வைத்தான்

    குறைதேடும் மனம் மட்டும் கூட்டினில் வைத்தான்

    கணநேரம் நினைப்போரிடமும் கருணை வைத்தான்

    காதலித்த நெஞ்சங்களில் தன்னை வைத்தான் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆண்டாள் – 17 ….
    ——————————————-

    5256383f-c1d2-4c9c-b7ba-89cd4c96abbb

    அம்பரமே, வேளாண்மை அண்ணன் பலராமன்
    தம்பியென்று ஆண்டாள் திருப்பாவை, -நெம்பியும்
    தூங்கிடும் பாவாய் , தூக்கம் விடுத்தெழுந்து,
    சாங்கியம் சொன்னவனைச் சேர் …. கிரேசி மோகன்….

    Share
  • சனிக்கோளின் மகத்தான ஒளிவளையங்கள் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

    chris

    (1629-1695)

    சி. ஜெயபாரதன், கனடா

    ஒவ்வொன்றும் ஒருவேளை இருக்கலாம் என்று எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு.

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

    நியூட்டன் கூறும் பிரபஞ்சவியல் ஈர்ப்பு நியதியை (The Theory of Universal Gravitation) நான் நம்பவில்லை. அது ஒரு பிதற்றலாய்த் தெரிகிறது எனக்கு.

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

    “பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாமதை வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்ள இயலாது.”

    காலிலியோ

    துணிச்சலான ஓர் ஊகிப்பில்லாது பெரிய கண்டுபிடிப்பு எதுவும் உருவாக வில்லை.

    நாம் பல்வேறு சுவர்கள் எழுப்புவதைத் தவிர போதிய பாலங்களைக் கட்டுவதில்லை.

    இந்த உன்னத எழில் அமைப்பாடு (பிரபஞ்சம்) ஞானப் பேராற்றல் படைத்த ஓர் உயிர் இறைமையின் ஆட்சியால்தான் உருவாகி இருக்க முடியும்.

    ஐஸக் நியூட்டன்

    நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை! நாமறியாதவை அளவில் எண்ணற்றவை! புரிந்து கொள்ள முடியாத கரையற்ற கடல் நடுவே, ஒரு சிறு தீவில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம்! நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவிக் காலத்திலும் மேலும் சிறிது நிலத்தைக் கைப்பற்றுவதுதான்!

    தாமஸ் ஹக்ஸ்லி (1825-1895)

    காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி

    இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறக்கும் போது, அதே ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறக்கும் போது, வாழ்ந்து வந்த டச் பெளதிக ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு உன்னத முன்னோடி விஞ்ஞானிகள் படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலை நோக்கியை விருத்தி செய்தவர், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனி வளையத்தைக் கண்டவர், காலிலியோவின் ஊசல் கோட்பாடை [Pendulum Theory] விருத்தி செய்து முதல் ஊசல் கடிகாரத்தை [Pendulum Clock] உண்டாக்கியர் யாரென்று வினாவினால், அவர் ஹியூஜென்ஸ் ஒருவரே! ஐஸக் நியூட்டன் எழுதிய முதல் நகர்ச்சி விதியை [First Law of Motion] காலிலியோ, டெஸ்கார்டிஸ் [Descartes], அடுத்து ஹியூஜென்ஸ் மூவருமே அவருக்கு முன்பாக அறிந்திருந்தனர்! அடுத்து இரண்டாம் நகர்ச்சி விதிக்கு [Second Law of Motion] விஞ்ஞானக் கருத்தை உதவி, நியூட்டனது நன்றிக்கும் நட்புக்கும் உரியவர் ஆனவர், ஹியூஜென்ஸ்!

    நியூட்டனின் ‘ஒளியியல் நியதி’ [Thery of Light] சுயவொளி எழுப்பும் ஓர் அண்டத்தின் ஒளி, ‘துகள்களின் ஓடை’ [Stream of Corpuscles] என்று கூறிடும் போது, அதை மறுத்து ஒளி அலை அலையாகப் பாய்கிறது என்னும் ‘ஒளியின் அலை மயமான நியதியை’ [Wave Theory of Light] முதன் முதல் அறிவித்தவர், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்!

    பிரென்ச் விஞ்ஞானக் கணித மேதை ரேனி டெஸ்கார்டிஸ் [Rene Descartes (1596-1650)] ஹியூஜென்ஸ் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர். டெஸ்கார்டிஸ் தந்த ஊக்கத்தால், ஹியூஜென்ஸ் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் வல்லவராக முன்னேற முடிந்தது! மற்றும் ஐரோப்பிய மாமேதைகள் லைப்னிட்ஸ் [Leibnitz], பாஸ்கல் [Pascal], ராபர்ட் பாயில் [Robert Boyle], நியூட்டன், எட்மன்ட் ஹாலி [Edmond Halley], ராபர்ட் ஹுக் [Robert Hooke] ஆகியோரது பழக்கமும், நட்பும் ஹியூஜென்ஸ் பெளதிகத்தில் மகத்தான சாதனைகளைச் சாதிக்க ஏதுவாயின !

    ஹியூஜென்ஸ் படைத்த விஞ்ஞானப் பொறியியல் சாதனைகள்

    1680 ஆண்டுகளில் ஹியூஜென்ஸ் தனது துணையாளி டெனிஸ் பாப்பினுடன் [Denis Papin] சேர்ந்து, புற வெப்பத்தில் இயங்கும் ‘நீராவி எஞ்சின் ‘ [Steam Engine] போலின்றி உள் வெப்பத்தில் எரிந்து இயங்கும் ‘அகத்தணல் எஞ்சினை ‘ [Internal Combustion Engine] உண்டாக்க முதலில் முயன்றதாக அறியப் படுகிறது! பீரங்கிக் குழல்களில் பயன்படும் வெடித்தூளை [Gun Powder] உபயோகித்து, வெப்ப சக்தியை யந்திர சக்தியாக மாற்ற இருவரும் முற்பட்டனர்! அதனால் அவரது முயற்சிகள் எதிர்பார்த்தவாறு முன்னேற வில்லை! நூற்றி எண்பது ஆண்டுகள் கழித்து, 1862 இல் பிரென்ச் எஞ்சினியர் ரோச்சாஸ் [Beau de Rochas] சிந்தித்த ‘வெப்பயியக்கச் சுற்றியல் ‘[Thermodynamic Cycle] கோட்பாடை அறிந்த ஜெர்மன் எஞ்சினியர் ஆட்டோ, 1876 இல் எரிவாயுவைப் பயன்படுத்தித் தனது ‘ஆட்டோ சுற்றியலைப்’ [Otto Cycle] பின்பற்றி முதன் முதலில் ‘நாலுதைப்பு ஆட்டோ எஞ்சினைத்’ [Four Stroke Otto Engine] தோற்றிவித்தார்!

    1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலை நோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலை நோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! அடுத்து சனிக் கோளின் ஒளி பொருந்திய கவின்மிகு வளையத்தைக் கண்டு பிடித்தார்! தொலை நோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்! காலிலியோ கூறிய ‘ஊசலின் ஏகக்கால ‘[Isochronicity of Pendulum] ஒழுங்கைப் பின்பற்றி, கனப்பளுக்கள் கொண்ட துல்லிய மான கடிகாரத்தைப் படைத்தார்! நேரத்தைச் சரியாகக் காட்டும் இத்தகைய அரிய கடிகாரத்துக்கு உலகம் பல நூற்றாண்டுகள் காத்துக் கொண்டிருந்தது!

    ஹியூஜென்ஸின் முன்யூகக் கருத்து ‘சக்தியின் அழிவின்மை நியதியை’ [Law of Conservation of Energy] உருவாக்க உதவியது! 150 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மன் விஞ்ஞானி ஹெல்மோல்ட்ஸ் [Helmholtz Hermann (1821-1894)] சக்தியின் அழிவின்மையை விரிவாக்க வழி வகுத்தது! நியூட்டனின் ‘ஒளித்துகள் நியதியை ‘ஒப்பாது அவர் வெளியிட்ட ‘ஒளியலை நியதி ‘ முதலில் புறக்கணிக்கப் பட்டாலும், பிற்காலத்தில் உலகிலே அது பெரும் வரவேற்பைப் பெற்றது! அண்டங்கள் மீது விசைகள் புரியும் வினைகளை விளக்கும் ‘இயக்கவியல்’ [Dynamics] விஞ்ஞானத்திற்கு ஹியூஜென்ஸ் ஆக்கங் களை அளித்துள்ளார்.

    ‘பிண்டத் துகள்கள் [Particles of matter] சூன்யத்தில் கடக்கின்றன ‘ என்று டெஸ்கார்டிஸ் கூறிய பிரபஞ்சத்தை, ஹியூஜென்ஸ் ஒப்புக் கொள்ள வில்லை! ‘துகள்களைப் பிளக்க முடியா தென்றும், அவை மோதிக் கொள்ளும் போது, முழுவதும் ‘இழுப்பியல்பு’ [Elastic] பண்பைக் கொண்டவை என்றும் நம்பினார்! கிரேக்க மேதை டெமாகிரிடஸ் [Democritus (460-370 B.C.)] கூறியவாறு, பண்டங்கள் கொண்டுள்ள பல்வேறு அமைப்புக்களில் இருக்கும் பல்லினத் துகள்களை, ஹியூஜென்ஸ் ஒப்புக் கொண்டார். யந்திரவியல் முறைகள் மீது அவருக்கிருந்த உறுதிப்பாட்டில், நியூட்டனின் ‘பிரின்ஸிபியா’ [Principia] நூல் கூறும், ‘ஈரண்டங்கள் எந்த வித யந்திரவியல் தொடர்பு இல்லாமலே, ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்கின்றன’ என்னும் கருத்தை, ஹியூஜென்ஸ் ஏற்றுக் கொள்ள வில்லை!

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வாழ்க்கை வரலாறு

    1629 ஏப்ரல் 14 ஆம் தேதி, நெதர்லாந்தில் உள்ள ஹேக் [Hague] நகரில் கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஓர் செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் கவிஞர், இசை ஞானி, அரசியல் வாதி. அடிக்கடி இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குப் பயணம் செய்பவர். இரு நாடுகளின் மேதைகள், காவியக் கலைஞர்களின் தொடர்பு, நட்பைக் கொண்டவர்! குறிப்பாக பிரென்ச் கணித, விஞ்ஞான, வேதாந்த மேதை ரேனி டெஸ்கார்டிஸ் [Rene Descartes], ஆங்கிலக் கவி ஜான் டன் [John Donne] இருவரும் தந்தையாரின் நெருங்கிய நண்பர்கள்!

    கிரிஸ்டியான் சிறுவனாக இருந்த போதே, யந்திரத் துறையில் நுணுக்கமான அறிவுடன், கணிதத்தில் வல்லமையோடு வரையும் கைத்திறமும் பெற்றிருந்தான். வீட்டுக்கு விஜயம் செய்த டெஸ்கார்டிஸ், கிரிஸ்டியானின் ஜியாமெட்ரி ஞானத்தை மெச்சி, மேற்கல்வி பயில ஊக்கம் அளித்தார். 1645 இல் கிரிஸ்டியான் லைடன் பல்கலைக் கழகத்தில் [University of Leiden] சேர்ந்தார்.

    அங்கே கணிதமும், சட்டக் கல்வியும் கற்றார். அப்போதே தூய கணிதம், பயன்பாட்டுக் கணிதம், யந்திரவியல், ஒளியியல், வானியல் ஆகிய துறைகளில் சிறப்பான மேதமையைக் காட்டினார்! கல்லூரியில் கற்கும் போது விஞ்ஞானக் கல்விப் போதிப்பில், யந்திரவியல் விளக்கங்கள் எவ்வளவு முக்கிய மானவை என்று நன்கு அறிந்து கொண்டார். அந்த விளக்கங்கள் பின்னால் அவருக்கு ஈர்ப்பியல், ஒளியியல் நியதிகளுக்கு மிகவும் பயன்பட்டன.

    துல்லிய நேரத்தைக் காட்டும் முதல் ஊசல் கடிகாரத்தைப் [Pendulum Clock] படைத்து, கப்பல் போக்கிற்கு [Navigation] குறுக்கு ரேகையைக் [Longitude] கணக்கிட அது பயன்படுத்தப் பட்டு, ஐரோப்பாவில் புகழ் பெற்றார்! ஊசல் கோட்பாடில் பொதுவாகச் ‘சீரொழுங்கு ஆட்டத்தை’ [Harmonic Oscillation] ஹியூஜென்ஸ் விருத்தி செய்தார். நீரழுத்த வியலில் [Hydrostatics] கணித ஆய்வுகளுடன் 1650 இல் ஓர் அரிய கட்டுரையை வெளியிட்டார். விஞ்ஞான நண்பர், டெஸ்கார்டிஸ் எழுதிய ‘மோதல் விதிகளை ‘ [Laws of Impact] நம்பாமல், மோதும் பளு அண்டங்களின் ‘பளுவேக அழிவின்மை விதியைக் ‘ [Law of Conservation of Momentum] கண்டு பிடித்தார். அவ்விதிப்படி ‘மோதும் இரு அண்டங்கள் மோதுவதற்கு முன்னுள்ள மொத்த பளுவேகம் [Momentum], மோதிய பின்பு விளையும் அவற்றின் மொத்த பளுவேகத்துக்குச் சமமானது’ என்று அறியப் படுகிறது.

    1657 இல் ஊசல் கட்டுப் படுத்தும் முதல் கடிகாரத்தை, ஹியூஜென்ஸ் தயாரித்த பின்பு, ஓராண்டுக்குள் ஹாலந்தின் பெரிய ஊர்களில் பல இடங்களில் ‘ஊசல் கோபுரக் கடிகாரங்கள்’ [Pendulum Tower Clocks] காணப் பட்டன! 1658 இல் அவரைப் பின்பற்றி, பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹுக் [Robert Hooke (1635-1703)], சுருள் கம்பியை [Spiral Spring] முதலாகப் பயன்படுத்திக் கைக் கடிகாரத்தைத் [Watch] தயாரித்தார்! ஹியூஜென்ஸ் பொறியியல் துறையில் முன்னேற்றம் காட்டி, கணித வடிவில் ஊசல் ஆட்டத்தின் ‘ஒழுங்குக் காலத்துக்கும் ‘ [Period of Pendulum], ஊசல் நீளத்துக்கும் உள்ள, கீழ்க் காணும் ஓர் உறவுப் பாடைக் கணித்தார். அப்போது முதன் முதல் g இன் [32 feet/sec per sec] மதிப்பைக் கண்டு பிடித்தார்.

    1654 இல் கணித நூல் [De Circli Magnitudine Inventa] ஒன்றை எழுதி, ஹியூஜென்ஸ் ஐரோப்பாவில் புகழ் பெற்றவர். 1660 இல் பாரிஸுக்குச் சென்ற போது பிரென்ச் கணித விஞ்ஞானி, பாஸ்கலைச் [Blaise Pascal (1623-1662)] முதன் முதல் சந்தித்தார்! அதற்கு முன்பே அவர் கணிதப் பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டுப் பல தடவைக் கடிதங்கள் எழுதிப் பாஸ்கலுடன் பழகி யிருக்கிறார்.

    அடுத்துத் தானே கைகளால் அரைத்த குவி ஆடிகளைக் [Lens] கொண்டு, 50 மடங்கு பெருக்கும் சக்தி வாய்ந்த தொலை நோக்கியைச் செய்து, 1655 இல் சனிக் கோளின் ஒரு துணைக் கோளையும் [Satellite Titan], 1656 இல் ஓரியன் நிபுளாவையும் [Orion Nepula], 1659 இல் சனியின் நூதன வளையத்தையும் அதன் அமைப்பையும் கண்டு உலகுக்கு அறிவித்து விஞ்ஞான வரலாற்றில் பெரும் மைல் கல்லை நாட்டியவர்! விண்வெளியில் அண்டக் கோள்களின் நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கணித்திட, அவரது ஊசல் கடிகாரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

    1666 முதல் 1681 வரை ஹியூஜென்ஸ் பாரிஸில் வாழ்ந்தார். அப்போது முக்கியமாக அவர் ஜெர்மன் கணித மேதை லைப்னிட்ஸுடன் [Leibnitz] தொடர்பு கொண்டார். அவர்களது நட்பு வாழ்நாள் முழுதும் நீடித்தது! பாரிஸில் வாழ்ந்த போது 1673 இல் ஊசல் கோட்பாடு [Oscillation of Pendulum] பற்றி ஹியூஜென்ஸ் எழுதிய நூல் வெளியானது. அந்நூலில் ‘வளைவின் கணிதக் கோட்பாடு ‘ [Theory on Mathematics of Curvature], ஊசல் ஆட்டத்தின் காலத்தைக் காணும் கூறுபாடு [Formula for the Time of Oscillation of Pendulum], அசைப்பியல் பிரச்சனைகள் [Problems of Dynamics], சீரான வட்ட நகர்ச்சிக்குச் சுழலீர்ப்பு விதிகள் [Laws of Centrifugal Force for Uniform Circular Motion] ஆகியவை இருந்தன.

    பெயர் பெற்ற மேதைகளைக் கெளரவிக்கும், பிரிட்டனின் பேரவையான ராஜீயக் குழுவகம் [Royal Society] போன்று, பிரான்ஸிலும் அமைக்க வேண்டுமெனத் திட்டமிட்டு 1666 இல் பிரென்ச் விஞ்ஞானப் பேரவையை [French Academy Science] நிறுவனம் செய்து அதை ஆரம்பித்து வைத்தார். கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் உடல் நலமற்று, அடிக்கடி நோயில் துன்புற்றார். 1670, 1681 ஆண்டு களில் மிகத் தீவிர நோயுற்று, சாகக் கிடந்து மீண்டும் உயிர் பெற்றார். கடைசி ஐந்து ஆண்டுகள் உடல் நிலைச் செம்மையாகாது, தனிமை யிலும் மனக் கவலையிலும் உழன்று 1695 ஆம் ஆண்டில் கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் காலமானார்!

    ஒளி நுண்ணிய துகள்களின் ஓடையா ? அதிர்வு அலைகளின் நீச்சலா!

    பண்டை காலம் தொட்டே ஒளியின் நேர்முகப் போக்கைப் பற்றிக் [Linear Propagation of Light] கிரேக்க ஞானிகளுடன், பூர்வீக மாந்தரும் அறிந்திருந்ததாகக் காணப் படுகிறது! ஐஸக் நியூட்டன் பழைய வேதாந்தக் கருத்தை எடுத்தாண்டு, ஒளி நுண்ணிய துகள்களின் ஓட்டம் என்று கூறினார்! ஆனால் ஹியூஜென்ஸ் ஓரண்டத்தின் கனலும், அது எழுப்பும் ஒளியும் ஒரு வித அதிர்வு [Vibration] என்று நம்பினார். வெப்பம் ஒளியைப் போல் நேர் திக்கில் செல்வதில்லை! நியூட்டனின் ஒளித்துகள் நியதியை மறுத்து விளக்க முயன்று, இறுதியில் தனது புதிய ஒளியலை நியதியை அவர் எழுத நேரிட்டது! குவி ஆடிகளைச் [Lens] செய்யும் திறமை மிக்க ஹியூஜென்ஸ், காற்றிலிருந்து ஒளி நீரைக் கடக்கும் போது, அல்லது பளிங்கு ஊடகம் வழியாகச் செல்லும் போது, ஒளி திரிபுறும் விதியை [Refraction of Light] நன்கு அறிந்தவராக இருந்தார். அவரது ஒளியலை நியதி, எதிரொளிப்பு [Reflection], திரிபு [Refraction] ஆகிய முறைகளை எடுத்துக் காட்டி, ஒளியின் முக்கியக் கோட்பாடை நிரூபிக்கிறது!

    1678 இல் எழுதத் தொடங்கி 1690 இல் முடித்த ‘ஒளியைப் பற்றிய தொகுப்பிலும்’ [Treatise on Light] ஒளியியற் பண்பின் யந்திரவியல் விளக்கம் காணப் பட்டது. அந்நூலில் ‘எதிரொளி’ [Reflection], ‘திரிபொளி ‘ [Refraction] பற்றி அவர் எழுதியுள்ள மகத்தான கருத்துக்கள், நியூட்டன் ஒளியைப் பற்றி ஆக்கிய விளக்கங்களை விடப் பலபடி உயர்ந்தவை யாக இருந்தன! ஆனால் யந்திரவியல் விளக்கம் இல்லாமலே, ‘ஒளியின் துவித அலை முற்றம் என்னும் ஹியூஜென்ஸின் கொள்கை’ [Huygens ‘ Principle of Secondary Wave Fronts] தெளிவாகக் காணப் பட்டது.

    ஒளியானது, நுண்ணிய துகள்கள் மண்டிய ஈதர் ஊடகத்தின் [Ether Medium] மீது கடக்கிறது என்று ஹியூஜென்ஸ் நம்பினார்! ஒளியில் பிண்டம் [Matter] எதுவும் கிடையாது! ஈதர் துகள்களின் நகர்ச்சி மூலம் ஒளி கடந்து செல்கிறது என்று கூறினார், ஹியூஜென்ஸ். ஆனால் ஈதர் துகள்களின் நகர்ச்சியைக் கண்டு பிடிக்க முடியாது! ஈதர் துகள்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு, தொடர்ந்து அலை எழுப்பிக் கண்களில் தெரியும் ஒளியாகப் பரவுகிறது என்று கூறினார், ஹியூஜென்ஸ்.

    அவரது பெயரில் நிலவும் ‘ஹியூஜென்ஸ் கொள்கை ‘ [Huygens ‘ Principle] என்பது என்ன ? ‘ஒளியின் அலை முற்றத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும், மூலத்தைப் போல ஒரே அதிர்வு வீதம், வேகம், அலை நீளம் கொண்ட துவித அலைகளை மையத்தி லிருந்து எழுப்பும் சுரபியாகக் கருதப் படுகிறது ‘ [Every point on a wave front of light may be considered to be the source of secondary waves that radiate from their centers with the same frequency, velocity & wavelength as their parent]. மேற்கண்ட கருத்துக்கள் யாவும், ஹியூஜென்ஸ் எழுதிய ‘ஒளியைப் பற்றிய தொகுப்பு’ [Treatise of Light] என்னும் நூலிலிருந்து எடுக்கப் பட்டவை.

    முதன் முதல் சனிக்கோளின் சந்திரன்கள், வளையங்கள் கண்டுபிடிப்பு

    பண்டைக் காலம் தொட்டே மாந்தர் வெறும் கண்களால் பார்த்தே சனிக் கோளைச் சூரிய மண்டலக் கோள்களில் ஒன்றாய்க் கருதி வந்துள்ளார்கள்! பரிதிக்குத் வெகு தொலைவில் மெதுவாகச் செல்வது, சனிக்கோள்! 1610 ஆம் ஆண்டில் காலிலியோ தனது பிற்போக்கான தொலை நோக்கியில் கண்ட சனிக்கோளின் வளையம் தெளிவாகத் தெரியாது, அதன் வரைவடிவம் [Geometry] புரியாது, முதலில் சனி முக்கோள் அண்டம் [Triple Planet] என்றும், அடுத்து 1612 இல் நோக்கியதில் அது நீள்வட்ட வடிவ முள்ளது [Elliptical Planet] என்றும் தவறாகக் கருதினார்! சாய்ந்த வளையம் கொண்ட சனி, சூரியனைச் சுற்றும் போது, சனியின் தோற்றம் மாறுவதால், காலிலியோ அவ்வாறு கண்டதற்குக் காரணமானது!

    காலிலியோவின் தொலை நோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலை நோக்கியைத் தயாரித்து, 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதன் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றி வரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு’ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ என்றும் கூறினார்! பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகியவற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸீனி [Giovanni Cassini (1625-1712)] கண்டு பிடித்தார்.

    அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடைவெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

    1789 இல் பிரென்ச் விஞ்ஞானி பியர் ஸைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] சனிக்கோளின் வளையங்கள் மிகச் சிறிய துணுக்குகள் கொண்டவை என்றும், அவையே சூரிய ஒளியைப் பிரதிபலித்துச் சுடரொளி வீசுகின்றன என்று விளக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் [James Maxwell (1831-1879] 1857 ஆம் ஆண்டில், பேரளவு எண்ணிக்கை யுள்ள துணுக்குகள் தூரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேகங்களில் சுற்றிக் கொண்டிருப் பதால்தான் வளையங்கள் நீடித்துச் சனிக் கோளைச் சுற்றி நிலை பெற முடியும் என்று கணித மூலம் நிரூபித்துக் காட்டினார்! சனியைச் சுற்றி திடவ வளையமோ [Solid Ring], திரவ, வாயு வளையமோ [Fluid Ring] இருந்தால் அவை சனியின் பூதக் கவர்ச்சி விசையால் நொறுங்கிப் போய்விடலாம் என்றும் மாக்ஸ்வெல் கூறினார்!

    சூரிய கும்பத்தில் பூதக்கோள் வியாழனுக்கு அடுத்தபடி இரண்டாவது பெரிய கிரகம், சனி! பூமியைப் போல் சனி 95 மடங்கு பெரியது! தன்னைத் தானே 10.5 மணி நேரத்திலும், பரிதியை ஒரு முறை 29.5 ஆண்டுகளிலும் சனி சுற்றி வருகிறது! சனிக்கோளின் மத்திய விட்டம் 75,000 மைல்! துருவங்கள் தட்டையாகி, துருவ விட்டம் 7000 மைல் குன்றி 68,000 மைல் அகண்டது! சனியின் வெளிப்புற வளையத்தின் விட்டம் 169,000 மைல் நீட்சி யுடைய தென்று அறியப் படுகிறது!

    மேலும் தனியாக 100,000 வளையல்கள் [Ringlets] சனியைச் சுற்றுகின்றன என்றும் கணக்கிடப் பட்டுள்ளது! வளையத்தின் தடிமன் 10 மைல் முதல் சிறுத்தும் 50 மைல் வரை பெருத்தும் இருப்பதாய்ச் என்று சொல்லப் படுகிறது!

    சனியின் 18 துணைக் கோள்களில் பெரியது, டிடான் [Titan]. சூரிய மண்டலத்தின் துணைக் கோள்களில் அது இரண்டாது பெரிய சந்திரனாகக் கருதப்படுகிறது! பூதக்கோள் வியாழனின் சந்திரன், 3270 மைல் விட்ட முள்ள கானிமேடு [Ganymede] யாவற்றிலும் பெரியது! கோள வடிவான டிடானின் விட்டம் 3200 மைல். 3100 மைல் விட்ட முள்ள புதன் டிடானை விடச் சிறியது! மேலும் 2160 மைல் விட்ட முள்ள நமது பூமியின் நிலா டிடானை விடச் சிறியது! சனிக் கோளின் மத்திய ரேகைக்கு [Equator] இணையாக டிடான் 750,000 மைலுக்கு அப்பால், வட்டச் சுழல் வீதியில் [Circular Orbit] 16 பூகோள நாட்களுக்கு ஒருமுறைச் சனியைச் சுற்றி வருகிறது. டிடான் சூழ் மண்டலத்தில் மீதேன் வாயு [Methane Gas] மண்டி யுள்ளதாக விஞ்ஞானி கியூப்பர் [Kuiper] 1944 இல் கூறியிருக்கிறார்.

    நியூட்டனுடன் தொடர்பு கொண்டிருந்த டச் விஞ்ஞானி

    1689 இல் ஹியூஜென்ஸ் லண்டனுக்கு விஜயம் செய்து ஐஸக் நியூட்டனைச் சந்தித்தார். அங்கே ராஜீயக் குழுவினர் முன்பாக, ஹியூஜென்ஸ் தனது ‘ஈர்ப்பியல் நியதியைப் ‘ [Theory of Gravitation] பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார். மகத்தான கணிதப் படைப்பான ‘பிரின்ஸிபியாவை ‘ [Principia] வியந்து, நியூட்டனின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார், ஹியூஜென்ஸ்! வெளிப்படை யாக நியூட்டனின் ஈர்ப்பியல் நியதியைத் தாக்காமல் இருந்தாலும், அவரது கருத்துக்களை ஒப்புக் கொள்ளாது கடிதங்கள் மூலம், ஹியூஜென்ஸ் தனது மறுப்புக்களைத் தெரிவித்திருந்தார்! அடிப்படையாக எவ்வித யந்திரவியல் விளக்கமும் இல்லாத நியூட்டனின் ஈர்ப்பியல் நியதியை ஒப்புக் கொள்ள முடியாது என்று ஹியூஜென்ஸ் எழுதி யிருந்தார்!

    1690 இல் ஹியூஜென்ஸ் தனது, ‘ஈர்ப்பியல் ஏற்பாடின் உரையாடலை’ [Discourse on the Cause of Gravity] வெளியிட்டார். அவரது ஈர்ப்பியல் கோட்பாடில் வளர்வேகம், தளர்வேகம் பற்றி எழுதப் படவில்லை! அந்நூலில் தனது ஈர்ப்பியல் நியதிக்குக் ‘கார்டிஸியன் சுழற்சியைக்’ [Cartesian Vortices] காட்டிப் போதிய யந்திரவியல் விளக்கங்களை ஹியூஜென்ஸ் எழுதி யிருந்தார்! ஆனால் நியூட்டன் கார்டிஸியன் சுழற்சிக் கோட்பாடை ஒப்புக் கொள்ள வில்லை! பூமியின் ஈர்ப்பியல் தன்மையே, சுழலீர்ப்பு விசையை [Centripetal Force] உண்டாக்கி, நிலவை இழுத்துப் பூமியைச் சுற்றிவரச் செய்கிறது என்று நியூட்டன் விளக்கம் தந்தார்! அதே போல், பரிதியின் ஈர்ப்பியல் பண்பே சுழலீர்ப்பு விசையை எழுப்பி, பூமி போன்று மற்ற அண்ட கோளங்களையும் தன்வசம் இழுத்துச் சுற்ற வைக்கிறது என்பது நியூட்டனின் கோட்பாடு!

    நாசாவின் நான்கு விண்சிமிழ்கள் சனிக்கோளுக்குப் பயணம்!

    ஹியூஜென்ஸ் ஓர் கணித நிபுணர். அவர் மேதைகள் வரிசையில் நிலைபெற ஏனோ தகுதி பெறவில்லை! லைப்னிட்ஸ் போன்ற மேதைகளின் படைப்புகளைப் புரிந்து கொள்ள, அவர் சற்று சிரமப் பட்டார்! தனது ஈர்ப்பியல் நியதியை முழுமையாக ஒப்புக் கொள்ளா விட்டாலும், பூர்வீகத் தொகுப்பு முறைகளைக் கையாண்ட [Old Synthetic Methods] கிரிஸ்டியான் ஹியூஜென்ஸை, நியூட்டன் மிகவும் நேசித்தார்! ‘விஞ்ஞானக் கருத்துக்களை விளக்குவதில், கைதேர்ந்த ஓர் சிறந்த எழுத்தாளர்’ என்று நியூட்டன் அவருக்குப் புகழ் மாலை சூடினார்! ஏறக்குறைய பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் அவரது அசைப்பியல், ஒளியியல் கோட்பாடுகள், மகத்தான நியூட்டன் நியதிகள் முன் மறைந்து போயின! ஆனால் அவரது ‘அலை மயமான ஒளியியல் நியதி ‘ [Wave Theory of Light], மற்றும் ‘சுற்றும் அண்டங் களின் அசைப்பியல் ‘[Dynamics of Rotationg Bodies] மகத்தான மூல விஞ்ஞானப் படைப்புகளாய்க் கருதப் பட்டு, அவரது பெயரில் ‘ஹியூஜென்ஸ் நியதி ‘[Huygens’ Principle] என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்னணியில் நிற்கின்றன!

    இருபதாம் நூற்றாண்டில் நாசா [National Aeronautic & Space Adminitration (NASA)] சனிக்கோளைச் சுற்றி ஆராய்ச்சி செய்ய நான்கு விண்வெளிச் சிமிழ்களை ஏவியது! விண்சிமிழ் பயனீயர் 11 [Pioneer-11 (1973)], வாயேஜர் 1, 2 [Voyager-1,-2 (1977)], வெற்றிகரமாக விண்வெளியில் சனிக்கோளை நெருங்கி அரிய தகவல்களையும், அழகிய படங்களையும் அனுப்பி யுள்ளன! மனிதன் அனுப்பிய பயனீயர் 1979 இல் சனிக்கோளின் வளையத்தினுள் நுழைந்து, சனிக்கருகே 12000 மைலுக்கு அப்பால் பறந்து சென்று, மகத்தான விஞ்ஞான நிகழ்ச்சி யாக வரலாற்றில் இடம் பெற்றது! வாயேஜர்-1,-2 முறையே 1980, 1981 ஆண்டுகளில் சனிக்கோளை அருகி, உயர்ந்த படங்களைப் பூமிக்கு அனுப்பி யுள்ளன! அண்ட வெளியில் பூமியைச் சுற்றி வரும், ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கி [Hubble Space Telescope] 1990 இல் சனிக் கோளில் மாபெரும் வெண்ணிறத் தளத்தைப் [Great White Spot] படம் எடுத்துள்ளது!

    1998 ஆம் ஆண்டில் ஈசா எனப்படும் ‘ஈரோப்பியன் விண்வெளி ஆணையகம் ‘ [European Space Agency (ESA)] அனுப்பிய ‘உட்சிவப்பு அண்டவெளி நோக்காய்வுத் ‘ [Infrared Space Observatory (ISO)] துணைக்கோள், டைடான் சூழ் மண்டலத்தில் நீர்மய ஆவி [Water Vapour] இருப்பதற்குச் சான்றுகளைக் கண்டுள்ளது! 1997 அக்டோபரில் நாசா ஏவி அண்ட வெளியில் பயணம் செய்யும் ‘காஸ்ஸீனி விண்சிமிழ் ‘ [Cassini Spacecraft] 2004 ஆம் ஆண்டில் சனிக் கோளை அடைந்து, புதிய விஞ்ஞானத் தகவல்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது! விண்சிமிழில் இணைந்துள்ள ‘ஹியூஜென்ஸ் உளவி ‘ [Huygens Probe] சனிக்கோளின் துணைக் கோளான டைடானின் [Titan] சூழ்ப்புறத்தில் இறங்கி ஆராயத் திட்ட மிடப் பட்டுள்ளது!

    +++++++++++++++++++++++++++++++

    Share
  • புத்தாண்டுக்கான  புதுக்குறள்

    -முனைவர் து. சந்தானலெட்சுமி
      உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,
     அ .வ .அ. கல்லூரி,
     மன்னம்பந்தல், மயிலாடுதுறை. 

    இனிமை நிறைந்து  இயற்கை செழித்து
    மனிதம் நிலைக்கச்
    செய்!

    அதிக வளமும் அளவாய் மழையும்
    எதிலும் நிறைவும்  கொடு!

    சிறந்த மனமும்  செறிந்த குணமும்
    நிறைந்த மனமும் அருள்!

    மடமை  அகற்றி மனிதம் போற்றி
    இடரைக்  களைந்துவிடு!

    கொடுமை அகன்று
    குடிகள் தழைக்க
    இடும்பை  ஒழித்துவிடு!

    நடுநிலை நற்செயல்
    நற்பண்பு   நாட்டில்
    குடிகொள வேண்டும் இன்று!

    நன்மையும் உண்மையும்
    நேர்மையும் செம்மையும்
    தண்மையும்  வேண்டும்  எமக்கு!

    லஞ்சமில்லா நாட்டில்
    நலமுடன்  வாழ்ந்திட
    லஞ்சமென்ன வேண்டும் உனக்கு?

    இயற்கையைக் காத்து
    இடரின்றி வாழ
    முயற்சியை மேற்கொளச் செய்!

    உழைப்பால் உயர்ந்து
    சிறப்பாய்த் திகழ
    அழைப்பாய் உலகை அணைத்து!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    4f8d8b92-81a6-46d8-9fb5-15ae72a4ebaf

    ”ஆண்டாள் -16”….
    —————————————–

    daf91fd0-193e-481a-b8a8-578416780b79

    ”நாயகன் நந்தகோபன் நாதாங்கி காப்போனே
    தாயகம் வந்துள்ளோம் தாள்திறவாய், -ஆயன்சேய்
    மத்தாண்ட கண்ணன்மேல் முப்பது செப்பினேன்
    புத்தாண்டு வாசல் புக”….கிரேசி மோகன்….

    Share
  • இனிய புத்தாண்டே மலர்க!

    பவள சங்கரி

    kondrai

    புத்தாண்டு மலர்ந்தது!
    வைகறை மலர்ந்த இன்பொழுதில்
    கவினுறு காட்சிகளின் அணிவகுப்பு!
    மின்னும் நட்சத்திரம், மிதக்கும் மேகம்
    குளிர்தென்றல், கொஞ்சும் புறாக்கள்,
    எங்கும் மனம்நிறை பேரமைதி,
    ஆழுலகொன்றின் முகட்டில் உறைதருணம்
    உளமறியாதொரு கணப் பொழுதில்
    பசுமைக்களஞ்சியமாய் முளைத்தெழுந்த அன்பில்
    கோட்டுப்பூவாம் கொன்றையிலுறையும் கோபதியாய்
    மறைகண்ட மங்கல மயோரனவன்
    கறைக்கண்டன் கற்பகத்தருவானவன்
    முயற்புல்லிற் பனித்துளியானவன்
    மிறல்நகை கயற்கண்ணியின் சிற்றம்பலவன்
    சிறிபலம் நாடும் சுடலையாடியவன்
    பற்பதமதில் பற்றாயர் கோலம்கொண்டவனவன்
    பற்றாயமாய் சுபங்கரியின் மனத்திலுறைபவனவன்
    சுப்பிரதீபம் நாடுவானவன் தினம்! தினம்!
    மலர்ந்த 2016 வெற்றி! எதிலும் வெற்றியே!

    Share