சு. கோதண்டராமன்

வெப்பு நோய்

vallavan-kanavu1

ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

-சம்பந்தர்.

குலச்சிறையார் ஒற்றர் படையைச் சேர்ந்த நான்கு வீரர்களைத் தனியாகக் கூப்பிட்டு, சம்பந்தரின் இருப்பிடம் அறிந்து போகச் சொன்னார். அவர்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சம்பந்தரின் தொண்டர்களாக அவர் பின்னாலேயே போக வேண்டும், அவருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்.

பாண்டியநாட்டை நோக்கி சிவக்கன்று வருவதை அறிந்த சமணர்கள் மன்னன் மீது தங்கள் பிடியை இறுக்கினர். சமணத்தின் இறுதிக் கோட்டை அது. அது வீழ்ந்துவிட்டால் தமிழ் மண்ணில் சமணம் இனித் தலை தூக்கவே வாய்ப்பு இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சம்பந்தர் ஆலவாய் நகர எல்லைக்குள் புக விடாமல் தடுக்க வேண்டும் என மன்னனிடம் வேண்டினர். மன்னனும் உடன்பட்டார்.

குலச்சிறையார் ஆலவாய் நகரின் கிழக்கு எல்லையில் ஒரு வீட்டைச் சம்பந்தரும் அவரது அடியார்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இருட்டியபின் உள்ளே இருந்தவர்களைக் கொல்லைப் புறமாக வெளியேற்றி வேறொரு வீட்டில் தங்க வைத்து அதற்குக் காவல் இட்டார்.

முதல் வீட்டில் சம்பந்தர் தங்கியிருப்பதாக நினைத்த சமணர்கள் அதற்குத் தீ வைத்தனர். வீடு எரிந்து சாம்பலாகியது. எதிரி ஒழிந்தான் என்று அவர்கள் கொக்கரித்தனர்.

இரவோடு இரவாகச் சம்பந்தரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்த குலச்சிறையார் அரசிக்கு மட்டும் செய்தி எட்டச் செய்தார்.

அரசர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசி கேட்டார், “அன்பரே, சமணத்தின் முக்கியக்கொள்கை அகிம்சை தானே?”

தன் மனைவிக்கும் சமணத்தின் மீது பற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து அரசர் மகிழ்ந்தார். “ஆம், எந்த உயிர்க்கும் துன்பம் இழைக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்.”

“நம் மகன் வயது உடைய ஒரு பாலகனை உயிரோடு எரித்துக் கொல்ல உத்திரவிட்டிருக்கிறீர்களே, இதுதான் அகிம்சையா?”

“யார், யார், என்ன சொல்கிறாய்?”

“சோழநாட்டிலிருந்து வந்துள்ள சிவனடியார் தங்கி இருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா?”

“இல்லை தேவி. அவர் சமணத்துக்கு விரோதமாகப் பேசுகிறார் என்பதால் அவரை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கத்தான் உத்திரவிட்டேன். என்னை மீறிச் சமணர்கள் அவருக்குத் தீ வைத்துவிட்டார்களா? என்ன கொடுமை இது? அகிம்சை பேசுபவர்கள் இப்படிக் கூடச் செய்வார்களா? அவர்களை நம்பி மோசம் போனேனே!”

“கேட்பார் பேச்சைக் கேட்டு அறிவில்லாமல் செயல்படுவது உங்கள் பரம்பரைக்கே வழக்கம். முன்பு ஒரு பொற்கொல்லர் பேச்சைக் கேட்டு நிரபராதியான கோவலனைக் கொன்றதும் அதன் காரணமாக இந்த மதுரை தீக்கிரையானதும் உலகமே அறியும்.”

அரசர் மிக வேதனை அடைந்தார். ‘என் மகன் போல ஒரு பாலகனைத் தீக்கிரையாக்கிய பாவத்தைச் செய்து விட்டேனே, இதை எப்படிப் போக்கிக் கொள்வேன்? இத்தகைய இழி செயல் செய்ய இடம் கொடுத்த  என்னை நாட்டு மக்கள் இகழ்வார்களே. நான் எப்படித் தலை நிமிர்ந்து நடப்பேன்? என்னைக் கூன்பாண்டியன் என்று மக்கள் பரிகசிப்பார்களே’ என்று சிந்தித்த வண்ணம் உறங்கப் போனார். உறக்கம் வரவில்லை.

நள்ளிரவில் அவருக்கு உடம்பில் எரிச்சல் கண்டது. அரசியை எழுப்பினார். ‘உடல் முழுவதும் பற்றி எரிகிறது, தாங்க முடியவில்லை’ என்று கதறினார். அரசி அங்கிருந்த சந்தனக் குழம்பை அவர் உடல் முழுவதும் தடவினார். எரிச்சல் அடங்கவில்லை. பணிப்பெண்ணை அழைத்து அரண்மனை வைத்தியரை அழைத்து வரச் சொன்னார்.

வைத்தியர் வந்து பார்த்தார். ஒரு தொட்டியில் அரசரை உட்கார வைத்தார். அவரது கழுத்து வரை நீர் நிரப்பச் சொன்னார். ஒரு பானையில் நீர் நிரப்பிச் சொட்டுச் சொட்டாக அரசர் தலையில் விழுமாறு செய்தார். ‘சூரிய உதயம் வரை இப்படியே இருந்தால் சரியாகி விடும்’ என்றார். சற்று நேரத்தில் தொட்டி நீர் சூடேறி ஆவி மேலெழுந்தது. வைத்தியர், ‘இதற்கு மேல் வைத்திய சாத்திரத்தில் வழி இல்லை. ஏதேனும் மந்திரம் மாயம்தான் செய்ய வேண்டும்’ என்றார்.

ஊர் பூராவும் இந்தச் செய்தி பரவியது. சமண குருமார்கள் ஓடி வந்தனர். அரசருக்கு அவர்கள் முகத்தில் விழிக்கவே பிடிக்கவில்லை. “பேசுவது அகிம்சை, செய்வது கொலைத் தொழில். போங்கள் வெளியே” என்று கத்தினார்.

“இல்லை மன்னா, நாங்கள் மந்திரத்தின் மூலம் உங்கள் நோயை நீக்கிவிடுகிறோம்” என்றார்கள்.

குலச்சிறையார் அரசர் காதில் கிசுகிசுத்தார். “நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சமண குருமார்களை மிகவும் போற்றி வணங்குகிறார்கள். அவர்களை உடனடியாக வெளியேற்றினால் மக்கள் புரட்சியை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் ஒரு பக்கம் மந்திரம் செய்யட்டும். இன்னொரு பக்கம் சைவ குருமார் மந்திரம் செய்யட்டும். எது பலித்தாலும் நமக்கு நல்லதுதான்.”

அரசர் உடன்பட்டார். குலச்சிறையார் தன் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பந்தரை அழைத்து வரச் செய்தார்.

படுத்திருந்த அரசர் சம்பந்தரைப் பார்த்தார். “இவர்தான் அந்த சைவ குருவா? நேற்று அரசி சொன்ன பாலகர் இவர் தானா? இவர் உயிருடன் இருக்கிறாரா? நல்ல வேளை பெரும் பாவத்திலிருந்து தப்பினேன். என் மகன் போலத்தான் இருக்கிறார். அந்தப் பால் வடியும் முகத்தில்தான் என்ன தெய்வீகம்!, கண்களில் என்ன ஒளி!” என்று வியந்தார்.

வலப்பக்கம் சம்பந்தரும் இடப்பக்கம் சமணரும் மந்திரம் செய்து குணப்படுத்த வேண்டும் என்று முடிவாயிற்று. சம்பந்தர் ‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கி ஒரு பதிகம் பாடி அரசரின் உடலில் வலப்பக்கத்தில் திருநீற்றைப் பூசினார். ‘அடாடா என்ன மென்மையான கைகள்! என் குழந்தை ஒரு வயதில் என் முகத்தைத் தடவியது போல இருக்கிறதே! அந்த அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அவருடைய இன்னிசையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது’ என நினைத்த அரசரின் வலப்பக்கத்தில் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இடப்பக்கம் மிக அதிகமாக எரியத் தொடங்கியது. சமண குருமார்களைப் பார்த்து, “நீங்கள் போகலாம். சம்பந்தரே இடப்பக்கத்துக்கும் மருத்துவம் செய்யட்டும்” என்றார் அரசர்.

பதிகம் பாடி முடிவதற்குள் அரசர் வெப்பு நோயிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று எழுந்தார். தலை நிமிர்ந்து, ‘நின்ற சீர் நெடுமாறனாக’ விளங்கினார்.

சமணர்கள் விடவில்லை. “இவர் ஏதோ ஒரு பேயை வசப்படுத்தி அதன் மூலம் நோய் குணமானதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவரிடம் உண்மையான தகுதி இருந்தால் எங்களுடன் வாதம் செய்து வெல்லட்டும்” என்றார்கள்.

அரசர் உடன்பட்டார். அரண்மனை முற்றத்தில் மக்கள் முன்னிலையில் நாளைக் காலை விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கச் செய்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *