குறளின் கதிர்களாய்…(102)
–செண்பக ஜெகதீசன்
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். (திருக்குறள் -763: படைமாட்சி)
புதுக் கவிதையில்…
எத்தனைபேர் என்ற
எண்ணிக்கையில் அல்ல,
பலத்தில் உள்ளது
படையின் பெருமை…
எலிகள்பல படையாய்ச்சேர்ந்து
எதிர்த்தாலும்,
எழுந்துசீறும் நாகத்தின்முன்
எல்லாம் ஓடி அழியும்…!
குறும்பாவில்…
எலிப்படையால் எதுவும் ஆகாது,
படமெடுத்துச் சீறிவரும் பாம்பின்முன்
பயந்தோடும் எல்லாம் ஒன்றாய்…!
மரபுக் கவிதையில்…
படையின் பெருமை வீரமன்றிப்
-பலரைச் சேர்த்தும் பலனில்லை,
அடைய முடியா வெற்றிக்கே
-அணியாய்த் திரளும் எலிக்கூட்டப்
படையால் ஆவது ஏதுமில்லை,
-படமதைக் காட்டிச் சீறியெழும்
புடைவாழ் பாம்பைக் கண்டவுடன்
-பதறி யடித்தே ஓடிடுமே…!
லிமரைக்கூ…
பலம்வீரம் இருந்தால்தான் சிறந்தவொரு படை
பார்க்கும் அதிக எண்ணிக்கையல்ல,
பாம்புசீறத் தடைப்படுமே எலிப்படையின் நடை…!
கிராமிய பாணியில்…
படயில்ல படயில்ல
பெருங்கூட்டம் படயில்ல,
வீரமிருந்தா படயாவும்
வெரட்டியடிக்கும் படயாவும்…
எலியெல்லாஞ் சேந்தாலும்
எல்லாம்படயா வந்தாலும்,
பாம்பப்பாத்தா பயந்தோடும்
பாம்புசீறுனா பாஞ்சோடும்…
அதால,
படயில்ல படயில்ல
பெருங்கூட்டம் படயில்ல,
வீரமிருந்தா படயாவும்
வெரட்டியடிக்கும் படயாவும்…!