படக்கவிதைப் போட்டி (46)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
இருப்பதைக் கொண்டு
மகிழ்வுடன் இங்கு
இருப்பதே வாழ்க்கை…..இதைக்
கருத்துடன் கூறும்
சிறுவனின் சிறுமுகம்
சிந்தனை நோக்கை.
எத்தனை துயரம்
இடரெது வரினும்
இலேசாய்க் கொண்டால்…மனமே
அத்தனைத துயரையும்
அழிந்திடச் செய்யும்
அகத்தில் குழந்தை ஆனால்.
ஊஞ்சல் என்பது
ஆடிடும் வாழ்க்கை
யார்க்கும் எளிதாய் அமைவது…அதை
ஆடும் விதத்தில்
ஆடி மகிழ்ந்தால்
அற்புதமாகும் வாழ்வது.
சிதைந்த ஊஞ்சல்
அறுந்த சங்கிலி
சிந்தையில் காட்டும் பாடமிது…இந்தத்
திறந்த வெளியே
பாடம் புகட்டும்
சிறந்த பள்ளிக் கூடமிது.
பூக்கள் மலரும்
குழந்தையின் சிரிப்பில்
பூங்காவாகும் நாட்கள்….கவிப்
பாக்களில் வளரும்
பருவங்கள் தோறும்
வாழ்க்கைப் புத்தகத் தாட்கள்.
எல்லாம் அறிவோம்
எதுவும் அறியோம்
என்பது தானிங்கு வாடிக்கை….இதை
எண்ணி ஒவ்வொரு
மணித்துளிஂவாழ்நதால்
வாழ்க்கை வாண வேடிக்கை.
,கவிஞர் “இளவல்” ஹரிஹரன், மதுரை.
வஞ்சமிலா நெஞ்சு…
வஞ்சித்துவிட்டாலும் வறுமை,
வஞ்சம் கொஞ்சமுமில்லை
பிஞ்சுகள் நெஞ்சினிலே,
அதனால்
பஞ்சமில்லை சிரிப்புக்கு..
ஊனமான பொம்மையிலும்,
உடைந்த ஊஞ்சலிலும்
கிடைத்துவிடுகிறது பேரானந்தம்..
அடைத்துவிடுகிறது இந்த
அமுத நீரூற்று,
போதுமென்ற பெருந்தனம்
போய்விடுகிறது,
பிள்ளை
பெரியவன் ஆனதும்..
மாறுவானா மனிதன்
மழலையரைப் பார்த்தாவது…!
-செண்பக ஜெகதீசன்…
இல்லாத தேசத்தில்
இரை தேடும்
பறவையொன்றின்
தொலைந்து போன
ஒரு பாதை
நீண்டு கிடப்பதான
கற்பனையில்
உதிர்க்கின்ற ஒரு இறகு
புது உலகை
விதைக்கத் தொடங்குகிறது,
அது இவன் புன்னகையாகவும்
இருக்கலாம்…..
கவிஜி
பாடம்
போகி யால்
யாரோ போக்கிய
உடைந்த ஊஞ்சல்
பழைய இரும்பு
எடுப்பவனிடம் சிக்க
பழசானாலும்
புதிதாய் தெரிந்தது
அவன் மகனுக்கு
அடுத்த நாளே அதை
அரசு கட்டிலாக்கி
அரியணனை ஏறினான்
ஆனந்தமாய் வீசிவீசிஆட
தூசியாய் தெரிந்தது துயரம்
மகனின் உல்லாசம்
பெற்றவனையும்
தொற்றிக்கொண்டது
சுடுபட்ட வாழ்க்கை
விடு பட்டதுபோல்
ஊஞ்சல் ஆட்டம்
உல்லாசமானதுதான்
சிதறிக்கிடக்கும்
சீர் கெட்டவாழ்க்கை
உதறி உந்தி உந்தி ஆடி
உவகை அடைந்தான்
கிடைப்பதைக் கொண்டு
திருப்தி படும்வாழ்க்கை
புரிந்து சகித்து
பொருந்தியே வாழும்
பாடம் எல்லோருக்கும்
பொருந்தும்தானே !
சரஸ்வதி ராசேந்திரன்
பட வரி 46
” ஏழைக்கேத்த எள்ளுருண்டை! ”
நாணிட வேண்டிய விடயம்
பேணிப் பாதுகாக்காத விளையாட்டிடம்!
ஆணி களட்டிய பலகையது
ஆணிக்கையாகத் துணிந்து ஆசனமாக்கியது.
பட சட்டத்தின் நடுவில்
அடக்கிக் கட்டி, அமர்ந்து
படபடப்பின்றி ஆடுகிறான் ஊஞ்சல்!
அடடா! ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!
விழுந்திடாது பிடிக்கும் உறுதியும்
வழுகும் பலகையைக் கால்களால்
அழுத்தும் சாதுரியச் சிரிப்பும்
வாழ்வின் சவாலின் ஏற்பு!
துள்ளும் மகிழ்வில் ஆடுகிறான்
உள்ளதை வள்ளிசாக அனுபவித்துப்
பிள்ளைகள் மகிழ்வாரவர் குணமது!
அள்ளும் வாழ்க்கைப் பாடமது!
பிள்ளைகள் விளையாட்டிடத்தை வளமாக
பிரிதியுடன் பராமரித்தல் அவசியம்
பிற்போக்கு நிலைமை மாறட்டும்!
பிரதான கடமை மேலிடத்திற்கு!
(ஆணிக்கை – உறுதி)
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
9-1-2016.
அறமே வெல்லுமென அறி!
xxx xxx xxxx
கிடைப்பது எதுவாகக் கிடந்தாலும் அதைவைத்தே
இடைவிடா அரும்புகின்ற இனிதான நினைவோடு
சிரித்திடும் பயமில்லாச் சிறுபிள்ளை பரவசம்போல்
விரியுமாம் நல்வாழ்வு விரைந்து!
ஊஞ்சலில் அமர்ந்துந்தி ஒருகணம் உலகிதைத்தான்
வாஞ்சையோ டிருகண்ணால் வடிவாகத் தினம்காணும்
கனவினைக் கரம்பற்றிக் களிக்கிறான் அதுபோல
நினைவோடும் சுகித்திடுவோம் நினைந்து!
வறுமையின் வடுக்களாக மனம்படி உருவிருந்தும்
நிறுத்திடாப் பிடிகரமும் நிலவெனவொ ளிதருகண்ணும்
அவனெதிர் வரும்பகையை அழித்திடுமாம் எறிகணையாய்
உவப்பொடு பார்த்திடுவோம் உணர்ந்து!
சிதைந்திடு பலகையொன்று திருத்திடாச் சங்கிலியில்
இதமொடு பொருத்தினாற்போல் இருக்குமாம் வாழ்வென்று
அறிவுரை உரைப்பதுவாய் அழகுறு அவனாட்டம்
அறம்வெல்லும் மென்பதையே யறி!
வ-க-பரமநாதன்.