Month: January 2016

  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 50

    –சி. ஜெயபாரதன்.

     

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “சொத்தைப் பல்லைப் “பிடுங்கு” என்று சொன்னால் பல் டாக்டர் உன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவார். காரணம் நோயை மறைக்கும் பல் டாக்டர் கலைத்திறனை இதுவரை நீ கற்றுக் கொள்ள வில்லை. அழுத்திக் கேட்டால் இப்படிச் சொல்லிக் கொண்டு உன்னை விட்டு ஒதுங்கிச் செல்வார் : “இந்த உலகில் தூய கருத்தியல்வாதிகள் (Idealists) எனப்படும் பல மனிதர் பலவீனக் கனவுகள் உடையவர்.” கலில் கிப்ரான். (Decayed Teeth)

    “பிதற்றுபவரைப் பார்த்து அவரது பிதற்றலைக் கேட்டு நான் சலிப்படைந்து விட்டேன். அவரை வெறுக்கிறது எனது ஆத்மா. காலை எழுந்து தினச் செய்தித் தாளையோ கடிதங்களையோ படிக்கப் போனால், அவை முழுவதிலும் வெறும் வம்பளப்புகளைத்தான் காண்கிறேன். தொங்கிக் கொண்டிருக்கும் பொருளற்ற வாசகம் அவற்றில் வஞ்சகம் கலந்து எழுதப் பட்டுள்ளன.” கலில் கிப்ரான். (Mister Gabber)

    ___________________

    காரணம்
    (Reasoning)
    ___________________

    காரணம் உன்னிடம் பேசினால்
    காது கொடுப்பாய் !
    பாதுகாப் புறுதி அது !
    அதன் உதவியை நாடு !
    அறிவுக்கு
    ஆயுதம் அளிக்கும் உனக்கு !
    ஆண்டவன்
    உனக் களித்த வற்றுள்
    காரணத் தைப் போல்
    வலுவான கை
    வேறு ஒன்றில்லை !
    காரணம்
    உன்னிடம் பேசும் போது
    உதாரணம் நீ அதற்கு
    இச்சைக்கு எதிராக !
    காரணம்
    உனக்கு எச்சரிக்கை மந்திரி
    நம்பத் தகும் வழிகாட்டி !
    ஞான அறிவூட்டி !
    இருளில் ஒளிகாட்டி !
    சினம் என்பது ஒளி ஊடே
    இருள் போன்றது !
    அறிவுக்குக் கதவைத்
    திறந்து வை !
    காரணம் தெரிந்திடச்
    சாளரம் திறந்திடு !
    அவசரப் புத்தியைத் தவிர்ப்பாய் !
    அவ்வுரைதான் உனக்குச்
    செவ்வழி காட்டும் !
    ___________________

    கவனமாய்க் கேள் !
    காரணம்
    உதவி யின்றிப் போகும்
    உன் கையில்
    அறிவின்றிப் போனால் !
    உடன் பிறப்புச் சகோதரி
    அறிவு இல்லாமை
    காரணத் துக்கு
    வீடில் லாத வறுமை !
    அறிவுக்குக்
    காரணம் இல்லாமை
    கதவில் லாத வீடாகும் !
    காரணம் இல்லாமல் போயின்
    காதல், நீதி, நேர்மைக்கு
    ஆதார மின்றி முறியும் !
    ___________________

    நீதி, நெறி இல்லாத
    கல்வி கற்ற மனிதன்
    நிராயுத பாணியாய்ப்
    போருக்குச் செல்லும்
    வீரனுக்கு ஒப்பா வான் !
    போர்ச் சினம்
    வாழ்க்கையில் வீணாகும்
    அவன் இனத்துக்கு !
    தூய்மை யான
    நீர்க் குடத்தில் கலந்த
    கத்தாழை வித்துப் போலாகும் !
    காரணங் களோடு
    கல்வி கற்பது
    உடலும் ஆத்மாவும்
    உறவாடல் போலாகும் !
    உடல் இல்லா விட்டால்
    ஆத்மா வுக்கு
    ஒன்று மில்லை !
    வெறும் காற்றாய்ப் போகும் !
    ஆத்மா இல்லா விடில்
    உணர்வற்ற கூடாகும்
    உடம்பு !
    ___________________

    Share
  • வானலைத் தொடர்பு முன்னோடி வல்லுநர் மார்க்கோனி

    மார்க்கோனி

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    கம்பியிலாத் தந்தி கண்டுபிடிப்பு

    1895 ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானி வில்ஹெம் ராஞ்சன் [Wilhelm C. Roentgen] ஊடுருவிச் செல்லும் எக்ஸ்ரே கதிர்களைக் [X-Rays] கண்டுபிடித்துத் தன் கையின் எலும்புக் கூட்டைப் படமெடுத்துக் காட்டி ஓர் அற்புதம் செய்தார். ஓராண்டு கழிந்து இத்தாலிய மேதை மார்க்கோனி, பல மைல் தூரம் மாயமாய் ஊடுருவிப் பாயும் ‘விண்ணலைத் தொலைவரைவு ‘ [Wireless Telegraph] என்னும் ‘கம்பியிலாத் தந்தியை ‘ அனுப்பித் தொடர்பு மார்க்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கினார். எக்ஸ்ரே கதிர்கள் சிறிது தடிமன் உள்ள மரப்பலகை, அல்லது அட்டையைத்தான் கடந்து சென்றன. ஆனால் மின்னலைத் [Electrical Waves] தொலைப் பதிவோ எப்பொருளையும் ஊடுருவி எந்த தூரத்தையும் கடந்து சென்றது! இதனை அனுப்ப மின்சாரக் கம்பிகள் எதுவும் தேவையில்லை! இப் புதிய நூதன மின்னலைகள் சுவரின் ஊடே, வீட்டின் ஊடே, நகரின் ஊடே, நாட்டின் ஊடே, கடல் கடந்து, மலை கடந்து, விண்வெளியில் பாய்ந்து, பூகோளத்தில் எந்த மூலைக் குள்ளும் புகுந்துவிடும்.

    1997 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இயங்கும் ‘ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி ‘, மார்க்கோனி வானொலி மார்க்கத்திற்கு வழி திறந்த நூற்றாண்டு வெற்றி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. மார்க்கோனி தனது விண்ணலைத் தொடர்புச் சாதனத்தை வர்த்தகத் துறையில் முதன் முதல் பதிவு செய்த நாள் 1897 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி. பதிவு செய்த நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி! மார்க்கோனி இங்கிலாந்தில் துவங்கிய முதல் ரேடியோ [Radio] நிறுவனத்துக்குத் தன் பெயரையும் சேர்த்து ‘GEC-Marconi Company ‘ எனப் பெயரிடவும் அனுமதியும் கொடுத்தார். தனது 22 ஆம் வயதில் விண்ணலைத் தொடர்பு ஆய்வுகளில் வெற்றி பெற்றதைக் காட்ட, இங்கிலாந்துக்கு வந்த மார்க்கோனி, அங்கே நிரூபித்து மின்னலை வர்த்தகத் துறையையும் துவக்கி வைத்தார். ஆனால், அவர் உருவாக்கிய ஒப்பற்ற விண்ணலைக் கருவியின் மேன்மை, அவரது இத்தாலிய நாட்டு மக்களின் குறுகிய பார்வைக்குத் தென்படவில்லை!

    இத்தாலில் இருக்குமிடம் தெரியாமல் மூலையில் மறைந்திருந்த மார்க்கோனி, திடீரென உலக வல்லுநர் கண்களுக்கு ஓர் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாய்த் தோன்றினார்! எஞ்சினியர் பார்வைகளுக்கும், காற்படை, கப்பற்படை, விமானப்படை இயக்குநர்களுக்கும், யுத்தத் தளபதிகளுக்கும், பெளதிக விஞ்ஞானிகளுக்கும் மார்க்கோனி, ஓர் ஓங்கிய கலங்கரைத் தீபமாய்க் காட்சி அளித்தார். வானொலிக்கு வேண்டிய கருவிகள்: அனுப்பும் இடத்திலிருந்து தொடர்புச் செய்தியை மின்னலையாக ஆக்கிச் செலுத்திட ஓர் ‘அலையனுப்பி ‘ [Transmitter], செய்தியைப் பெறும் இடத்தில் மின்னலையை இழுத்து செய்தியாக மாற்ற ஓர் ‘அலை ஈர்ப்பி ‘ [Receiver] ஆகிய இரண்டும் தேவைப்படும். அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிசன் [1847-1931] தான் படைத்த ‘பறக்கும் ரயில்தொடரில் ‘ மார்க்கோனியின் தொலைப் பதிவுக் கருவியை இணைத்துச் சோதனை செய்தார். இப்போது உலகின் எல்லா முனைகளும் வானலைத் தொடர்புப் பிணைப்பால் ஒருங்கே இணைக்கப் பட்டுள்ளன. 1909 இல் மார்க்கோனிக்கும், ஜெர்மன் விஞ்ஞானி கார்ல் பிரெளனுக்கும் ‘விண்ணலைத் தொலைவரைவு ‘ பெளதிக விஞ்ஞானத்திற்கு, நோபல் பரிசு பங்கிடப்பட்டு அளிக்கப்பட்டது.

    மார்க்கோனியின் வாழ்க்கை வரலாறு.

    பெளதிக விஞ்ஞானத்திற்கு நோபெல் பரிசு பெற்ற, மார்க்கோனி ஓர் எலக்டிரிகல் எஞ்சினியர். 1874 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 இல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். தாய், பல ஆங்கிலப் பிரமுகர் நட்புடைய, ஓர் அயர்லாந்து மாது. அயர்லாந்து, இங்கிலாந்து தேசங்களுக்கு, அடிக்கடி உறவினர்களை, மற்றும் நண்பர்களைக் காண, மார்க்கோனி இள வயதில் தாயுடன் கூடச் செல்வார். அன்னிய மொழி ஆங்கிலம் மார்க்கோனிக்குத் தாய்மொழி போல் பழக்கம் ஆனதற்கு இதுதான் காரணம். மார்க்கோனிக்கு இத்தாலிய மொழி, ஆங்கில மொழி இரண்டிலுமே இணையான பேச்சு, எழுத்துத் திறமைச் சிறு வயதிலிருந்தே உண்டு. இத்தாலில் பொலொனா பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். மார்க்கோனிக்கு உயர்ந்து வளர்ந்த ஒல்லியான தோற்றம். 23 வாலிப வயதில் 30 வயது முதிர்ச்சி முகம்! அமைதியான முகக்களை இருந்தாலும், சற்று கடுப்பான முகம்! உரையாடும் போது அழுத்தமுள்ள உறுதியான பேச்சு! விஞ்ஞான நிபுணருக்குரிய மிடுக்கில்லாத மென்மையான தன்மை! ‘எப்படி ரேடியோவைக் கண்டு பிடித்தாய் ‘, என்று யாராவது வினாவினால், ‘சோதனையில் சில மெய்ப்பாடுகளைக் கண்டேன்; அவற்றை நிறைவேற்றக் கருவிகளை அமைத்தேன். அவ்வளவுதான்! ‘ என்று சில வார்த்தைகளில் முடித்து விடுவார்!

    பதினாறு வயதிலேயே, [1890] மார்க்கோனிக்குக் கம்பியிலாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம் வயதில் [1895] முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில் ‘திசைதிரும்பும் மின்கம்பம் ‘ [Directional Antenna] மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். 1897 இல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899 இல் இங்கிலிஷ் சிறுகடலைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார்.

    ஜெர்மன் விஞ்ஞான மேதை, ஹெர்ட்ஸ் [Hertz] ‘மின்காந்த அலைகளை ‘ [Electro Magnetic Waves] எழுப்பி தொலைப்பதிவு செய்ய முயன்றார். மின்காந்த அலைகள் மரம், செங்கல் சுவர் ஆகியவற்றை ஊடுருவினாலும், உலோகத்தைக் கடக்க முடியவில்லை. ஹெர்ட்ஸ் பயன்படுத்திய மின்காந்த அலைச் சாதனத்தில் அசையும் பாகங்கள் இருந்தன. மார்க்கோனி சாதனத்திலோ அசையா மின்னிலைப் [Electro Static] பாகங்கள் அமைந்திருந்தன. விண்ணலையின் ஊடுருவுச் சக்தி, மின்காந்த அலையின் நுழைவுச் சக்தியை விட, எண்ணற்ற அளவுச் சக்தி உடையது!

    இத்தாலியர் ஆரம்பத்தில் மார்க்கோனியின் அரிய ரேடியோக் கருவியின் பெருமையைக் கண்டு கொள்ள வில்லை! மார்க்கோனியின் அதிசயக் கருவியின் மகிமையைக் கண்டவர்கள், முதலில் ஆங்கிலேயர்! அதிலும் குறிப்பாக, பிரிட்டிஷ் தபால் துறை அதிபர், வில்லியம் பிரீஸ் [W.H. Preece]. பிரீஷ் ஓர் மின்சார எஞ்சினியர். அவர் பல வருடங்களாகக் கம்பியிலாத் தந்திக்குச் சோதனைகள் செய்து வந்தார். ஒரு சமயம் இங்கிலாந்திற்கும் முல் [Mull] தீவிற்கும் இடையே தந்திக் கம்பி அறுந்து விட்டது. கடற் கரையின் துண்டான இரு கம்பிகளைத் தனியாகவே விட்டு வைத்து 4 மைல் தூரம், மின்தூண்டல் [Electrical Induction] மூலம் அலை எழுப்பித் தொடர்பு உண்டாக்கினார்! அதன்பின் ‘மோர்ஸ் குறி ‘ [Morse Code] ஆணையில் 156 செய்திகளை முதன் முதலில் அனுப்பி வெற்றி பெற்றார். அதில் ஒரு செய்தி 120 சொற்களைக் கொண்டது. அவர் முயன்ற முறை, மின்காந்த [Electro-Magnetic] அலைகளை எழுப்பித் தொடர்பை உண்டாக்கிச் செய்திகளை அனுப்பியது. மார்க்கோனியின் ரேடியோ சாதனம், சக்தி மிக்க மின்னியல் [Electro Static] அலைகளை எழுப்பி, செய்தி அதிக தூரம் சென்றதால், பிரீஸ் தன் முயற்சியைக் கைவிட்டு அவருக்கு ஊக்கம் அளித்தார். இங்கிலாந்தில் பல கப்பல் வர்த்தகர்கள் ஆதரிக்கவும், மார்க்கோனியின் கருவி பன்மடங்கு வளர்ச்சி அடையவும், பிரீஸ் பல வழிகளில் உதவி செய்தார்.

    கனடாவின் வடகிழக்குக் கடல்கரையில் மார்க்கோனி.

    1901 இல் முதன் முதலாக 2000 மைல் தூரத்தில் அட்லண்டிக் பெருங்கடலைத் தாண்டி விண்ணலைத் தொடர்பை இணைத்து, தொலைத் தொடர்பில் ஒரு புரட்சியை உண்டாக்கினார். இங்கிலாந்தின் தென்மேற்கு முனையிலிருந்து [Poldhu in Cornwall] கனடாவின் வடகிழக்கு வாசலுக்கு [St. John in Newfoundland] ரேடியோத் தொடர்பை இணைத்துக் காட்டினார். 1902 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி கனடாவின், கேப் பிரடன் [Cape Breton in Nova Scotia] தீவின் ‘கிலேஸ் வளைகுடாக் ‘ [Glace Bay] கரை ஓரத்திலிருந்து இங்கிலாந்தில் உள்ள நகர்களுக்கு மார்க்கோனி செய்தி அனுப்பினார். பதினொரு வருடங்கள், கனடாவின் கேப் பிரடன் தீவுக் கரையோரத்தில் தங்கி, மார்க்கோனி ரேடியோச் சாதனங்களை விருத்தி செய்தார். அங்கே மூன்று ‘அட்லாண்டிக் மார்க்க விண்ணலைத் தொடர்பு நிலையங்களை ‘ [Transatlantic Wireless Stations] நிறுவினார். ஒன்று ‘மேஜைத்தலை ‘ [Table Head] என்னும் இடம். மார்க்கோனி ஒரு காலத்தில் தன் இல்லமாக வாழ்ந்து சரித்திரப் புகழ் பெற்ற ஒரு தேசீயத் தளம்! மார்க்கோனி பயன்படுத்திய ரேடியோ அலையனுப்பி [Radio Transmitter], ஓங்கி நிற்கும் 210 அடி உயர மின்கம்பம் [Aerial Towers] இப்போதும் அவரது நினவுச் சின்னங்களாக ஆங்கே வைக்கப் பட்டுள்ளன. இரண்டாவது நிலையம் 1907 இல் ‘மார்க்கோனி கம்பத்தில் ‘ [Marconi Towers] விண்ணலை அனுப்ப [Transmitting Station] நிர்மாணிக்கப் பட்டது. மூன்றாவது நிலையம் 1913 இல் லூயிஸ்பர்க் ஊரில் விண்ணலை ஈர்க்கும் நிலையமாக [Receiving Station] அமைக்கப் பட்டது.

    முதல் உலக மகா யுத்தத்தின் போது மார்க்கோனி இத்தாலிய கம்பியிலாத் தொடர்புப் பணியின் பொறுப்பாளராக இருந்து, ரகசிய ராணுவக்குறி ஆணைகளைச் ‘சிற்றலைத் தொடர்பு ‘ [Shortwaves Transmission] மூலம் அனுப்பினார். பிறகு அவர் வாழ்நாள் முழுவதும் சிற்றலை [Shortwaves], மற்றும் நுண்ணலைத் [Microwaves] தொடர்புகளில் மிகுந்த நாட்டம் செலுத்தி புதுச் சாதனங்களைப் படைத்துச் சோதனை செய்து கொண்டிருந்தார்.

    விண்வெளி யுகத்தில் மார்க்கோனியின் கருவிகள்

    1905 இல் வர்த்தகக் கப்பல்கள், யுத்தப்படைக் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியிலாத் தந்திக் கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து பிரிட்டிஷ், இத்தாலிய கடற்படைக்கு அதிகமாகப் பயன் பட்டன. 1907 இல் அவை இன்னும் சீர்ப்படுத்தப் பட்டு அட்லண்டிக் தொலைத் தொடர்பு மார்க்கம் எல்லோரது பொதுப் பழக்கத்திற்கும் உபயோக மானது. 1912 இல் பனிப் பாறையில் மோதி விபத்துக் குள்ளான டைட்டானிக் [Titanic] கப்பலில் கூட, மார்க்கோனியின் கம்பியிலாத் தந்தி பயன்பட்டு, கப்பல் மூழ்கிப் போவதை தொலைத் தொடர்பு மூலம் வெளியாக்கிக் கனடா, அமெரிக்க நாடுகளை விளித்ததாக அறியப் படுகிறது!  இரண்டு உலக மகா யுத்தங்களிலும் ரேடியோத் தொலைத் தொடர்புக் கருவிகள் பலவிதங்களில் மிகவும் பயன்பட்டிருக் கின்றன.

    வான வீதியில் 1957 அக்டோபர் 4 ஆம் நாள், ரஷ்யா முதன் முதல் ‘ஸ்புட்னிக் ‘ [Sputnik-1] விண்குமிழ்க் கோளத்தை பூகோள நீள்வட்டத்தில் [Orbits] சுயமாகச் சுற்றவைத்து உலகைப் பிரமிப்பில் ஆழ்த்தி, புது விண்வெளி யுகத்தைத் [Space Age] துவக்கி விட்டது! 1958 ஜனவரி 31 ஆம் தேதி அமெரிக்கா தன் முதல் விண்குமிழ் ‘விண்ணோக்கியை ‘ [Explorer-1] வான்வெளியில் ஏவியது. 1961 இல் அரசினர் அல்லாதார் ஏவப்பட்ட ஆஸ்கர் [Oscar-1] என்னும் ‘சுற்றிவரும் விண்சிமிழ் ‘ [Orbiting Satellite] முதன் முதல் அமெச்சூர் ரேடியோ சாதனத்தை ஏற்றிக் கொண்டு, அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்சிமிழ் மூலம் நேரடித் தொடர்பு [Direct-Satellite Communications] கொள்ள வசதி உண்டானது. 1980 இன் கணக்குப்படி 1.5 மில்லியன் அமெச்சூர் ரேடியோ இயக்குநர்கள் உலகமெங்கும் லைசென்ஸ் பெற்று மார்க்கோனியின் விருத்தி செய்யப்பட்ட ரேடியோக் கருவியை உபயோகித்து வந்தார்கள்.

    முதலில் கம்பியிலாத் தந்தியைக் கண்டு பிடித்தவர் யார் ?

    மார்க்கோனியின் காலத்திலேயே இப்படி ஒரு வினா எழுந்தது. அவர் ரேடியோ ஆராய்ச்சிகள் நடத்தி வந்த சமயத்தில், ஈரோப்பில் வேறு சில விஞ்ஞானிகளும் ரேடியோ அலைகளில் ஆய்வுகள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் குறிப்பாக, ஜெர்மன் எஞ்சினியர், கார்ல் பிரெளன் [Carl F. Braun] [1850-1918]. 1899 இல் மார்க்கோனியின் கருவியைச் சீர்ப்படித்தி ஒருதிசை அலை யனுப்பியைப் படைத்தார். அதுவே பின்னால், வானொலி, ரேடார் குடைநோக்கி, தொலைக்காட்சி [Radio, Radar, Television] சாதனங்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நேர்முனைக் கதிர்க் குமிழி [Cathode Ray Tube] மூலம், முதன் முதல் ‘அலைமானியைப் ‘ [Oscilloscope] படைத்தவர். பின்னால் மார்க்கோனியின் தொலைத் தொடர்பைச் செப்பனிட்டவர். பிரெளன் இச்சாதனைகளைக் காட்டி, 1909 இல் மார்க்கோனியின் பாதி நோபெல் பரிசைப் பிடுங்கிக் கொண்டார்!

    ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov] [1859-1905] செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் படித்து, அதன் ஆசிரியராகிப் பின்பு பெளதிகத் துறையின் தலைமைப் பொறுப் பேற்றவர். 1895 இல் மார்க்கோனி, போபாவ் இருவருமே, ‘கொஹெரர் ‘ [Coherer] கண்காணியைப் [Detector] பயன் படுத்தி ரேடியோ சாதனத்தை உருவாக்கினர். போபாவின் கருவி வெளிச்சுற்றுக் கால நிலையைக் கண்காணித்துப் பதிவு செய்ய மட்டும் தயாரிக்கப் பட்டது. தொலைத் தொடர்புப் பணிகள் செய்வதற்காக அல்ல!

    ரஷ்யா, இத்தாலி இரு நாடுகளும் தம்தம் விஞ்ஞானிதான் ரேடியோவை முதன் முதல் கண்டு பிடித்தவர், என்று உரிமை கொண்டாடி பறைசாற்றினர்! ஆனால் ரஷ்யாவோ அதை நிரூபிக்க, அச்சடிக்கப்பட்ட எந்த ஆதாரமும் காட்ட முடியவில்லை! மேலும், 1896 மார்ச் 24 ஆம் தேதி, போபாவின் கருவி முழுமையாய் வேலை செய்யாது முடங்கி விட்டதாகப் பின்னால் அறியப்பட்டது! பின்னால், இரண்டாம் உலகப் போர் முடிந்தபின், 1945 இல் தளபதி ஸ்டாலின் வெற்றி வீராப்பில், ரஷ்ய விஞ்ஞானிகளின் பெருமைகளைப் பீற்றிக் கொள்ளச் செய்தது போல் தெரிகிறது.

    மார்க்கோனியின் யோகம், இங்கிலாந்து பக்க பலமாக இருந்து எல்லாவித வெளியீடு, நிரூபணங்களைக் காட்டி, ‘கம்பியிலாத் தந்தியின் தந்தை ‘ மார்க்கோனியே என்று உலகச் சரித்திரத்தில் பதிவு செய்யச் சான்று நாடாக இருந்தது! 1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி தனது 63 ஆவது வயதில் மார்க்கோனி இத்தாலில் காலமானார். அவரது உடல் கிரிஃப்போன் புதைமாளிகையில் [Villa Griffone Mausoleum] அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ++++++++++

    ஆதாரம்: 

    1.  General Electric Company, U.K.

    2.  Journal of Technology. 1997 Vol 12. No.2

    3.  https://en.wikipedia.org/wiki/Guglielmo_Marconi  [January 17, 2016]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  January 18, 2016  

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    27ee860c-cdac-47b8-99dd-3a55b2edbf2e

    ”ஆராய்ந்து பார்த்தென்ன, ஆழ்ந்து படித்தென்ன,
    சீராயர் சேயை சரண்புகு, -பேராயிரம்,
    கொண்ட பரம்பொருள், கோகுலம் வந்தவன்
    அண்டங்காக் காயாம் அவன்’’….கிரேசி மோகன்….

    அண்டங் காக்காய் -பூபாரம் தீர்த்து காத்தவன்….இந்தக்
    ‘’காக்கை சிறகினில்தான்’’ பாரதியார் பரம்பொருளைப் பார்த்தார்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    7af69250-02ed-4633-b5c4-f2cf43277f63

    ”அரியா தவனை அறியா தவரே
    அறிய முயல்வர் அறிவால்: -எரியா(து),
    ஒளிந்த நெருப்பை உணர மரத்தைப்,
    பிளந்த குருடனைப் போல்”….கிரேசி மோகன்….

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 193

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    பாட்டு

    மாயவனது வருகையையும் குழலோசையையும் பாடுதல்

    வஞ்சத்தால் வந்து நின்ற கன்றினைக்
    குறுந்தடியாகக் கொண்டு
    விளாமரத்தின் கனிகளை உதிர்த்த மாயவன்,
    இன்றைய பொழுதில்
    நம் ஆநிரைப்பக்கம் வருவானாயின்   krishna

    அவன் ஊதும் கொன்றைக் குழலின்
    இனிய இசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

    பாம்பினைக் கயிறாகக் கொண்டு
    கடல் கடைந்த மாதவன்,
    இன்றைய பொழுதில்
    நம் ஆநிரைப்பக்கம் வருவானாயின்
    அவன் ஊதும் ஆம்பற் குழலின்
    இனிய இசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

    நமது கொல்லையைச் சார்ந்த இடத்தில்
    வஞ்சத்தால் வந்து நின்ற
    குருந்தமரத்தினை முறித்தெறிந்த மாயவன்,
    நம் வழிபாட்டின் பயனால்
    இன்றைய பொழுது
    நம் ஆநிரைக்கு வருவானாயின்
    அவன் ஊதும் முல்லைக் குழலின்
    இனிய ஓசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • படக்கவிதைப் போட்டி (48)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12583686_946026822118184_1224948226_n
    27182698@N05_rதிருமதி ராமலஷ்மி ராஜன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • பிரபஞ்ச மூலத் தோற்றம் விளக்கும் பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு [Mirage] யூகிப்பே

    fig-1a-the-biig-bang-theory

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-Ro7rprA9EM

    https://youtu.be/dLG0-tmimsc

    https://youtu.be/VOz4PkdY7aA

    https://youtu.be/ofI03X9hAJI

    https://youtu.be/4eKIjkk0NVY

    https://youtu.be/g-MT4mIyqc0

    ++++++++++++++++

    ஒவ்வொரு கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு.

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

    ஒற்றைத்திண்மை அல்லது ஒற்றைத்திணிவு [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு வெடிப்புக் கோட்பாடு ஒரு புனைவு [Mirage] யூகிப்பே. உள் விரிவுக் கோட்பாடு [Inflation Theory] சரியே என்று பிளாங்க் முடிவு செய்தாலும், உள் விரிவு எப்படி நேர்ந்திருக்கும் என்னும் வினா எழுகிறது.

    நியாயேஷ் ஆஃப்ஷோர்டி [Niayesh Afshordi, Astrophysicist, Premeter Institute for Theoretical Physics, Waterloo, Ontario, Canada]

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான சித்தாந்தங்களை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    “நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்ற வில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள்வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

    மார்டின் போஜோவால்டு, (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

    பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு யூகிப்பே

    2016 ஆண்டு ஆரம்பத்தில் “பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு” விடை கொடுத்து விடலாம் என்று சில பௌதிக விஞ்ஞானிகள் கூறுகிறார். பிரபஞ்சவியல் நிபுணர் [Cosmologists], நாற்புறப் பரிமாண விண்மீன் [Four-Dimensional Star] சிதைவாகிக் கருந்துளைக்குள் விழுந்து சிதறிய எச்சங்களிலிருந்து, நமது பிரபஞ்சம் உருவானது என்று இப்போது ஒரு புதியதோர் கோட்பாட்டை அறிவித்துள்ளார். இந்தப் புதுக் கோட்பாடு, ஏன் பிரபஞ்சம் எல்லாத் திசைகளிலும் சமநிலையில் [Uniform State] காணப் படுகிறது என்பதற்கு விளக்கம் தருகிறது.

    பெரு வெடிப்பு நேர்ச்சி மாடல் “ஒற்றைத்திண்மை, அல்லது ஒற்றைத்திணிவு ” [Singularity] எனப்படும் எல்லையற்ற திணிவு நிலைப் புள்ளி [Infinitely Dense Point] வெடிப்பிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது எனக் கூறுகிறது. ஆனால் இந்த வெடிப்பு எப்படித் தூண்டப் பட்டது என்று யாரும் விளக்கம் தரவில்லை. நமக்குத் தெரிந்த பௌதிக விதிகளும் [Laws of Physics] அந்த வினாடியில் என்ன நேர்ந்தது என்று கூற இயலவில்லை. மேலும் எப்படிக் கொந்தளிப்பான பெரு வெடிப்பில் முழுமையான சமநிலை உஷ்ணத்துடன் பிரபஞ்சம் நிலை பெற்றது என்று விளக்குவதும் மிகச் சிரமமானது. காரணம் நிரந்தர உஷ்ண நிலை பரவிடப் போதுமான தருணம் இருக்கவில்லை.

    வாடர்லூ கல்விக் கூடத்தைச் சேர்ந்த கனேடியன் வானியல் பௌதிக விஞ்ஞானி நியாயேஷ் ஆஃப்ஷோர்டி கூறுவது இதுதான்: நமது பிரபஞ்சம், உயர் பரிமாண பொதிப்பளு அடங்கிய ஒரு சவ்வு [A Brane contained within A Higher-Dimensional Bulk Universe] என்பதே.

    Bye Bye to Big Bang Theory

    பிரமஞ்சத்தின் மூலத் தோற்றத்துக்குப் பெரு வெடிப்புக் கோட்பாடு

    பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும் [Microscopic], விரிந்து குமிழிபோல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய [Macroscopic] எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்! அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்! பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்! அடுத்து அணுக்கருப் பெளதிகத்தின் [Nuclear Physics] ஆரம்ப கால அடிப்படை வளர்ச்சியில், காமாவ் மிகவும் ஈடுபட்டவர். அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உயிரியல் விஞ்ஞானத்தில் [Biology] ஆர்வம் கொண்டு, இனவிருத்தி யில் டிஎன்ஏ [DNA] பற்றி ஆராய்ந்து, நவீன மூலவி நியதியில் [Modern Genetic Theory] ஓர் அடிப்படைத் தத்துவத்தை ஜார்ஜ் காமாவ் இயற்றி யுள்ளார். மேலும் புரோடான் சேர்க்கை [Protein Synthesis] விளக்கத்தில் ஒரு முக்கியமான பகுதியை ஆக்கியுள்ளார் காமாவ்.

    The Big Bang was Mirage

    அகிலத்தின் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்

    பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீஃபென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர்! உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பௌதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர். பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட “பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச்” [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன, நர்லிகரின் அடிப்படைப் பணிகள்!

    ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher]. அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது. பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ? அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது? ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ? அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ? அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ? பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ? அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

    1948 இல் விஞ்ஞானி ரால்ஃப் ஆல்ஃபருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலைக் கதிர்வீச்சு [Residual Microwave Radiation] இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப் படுத்தினர்!

    பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை’ [Big Bang Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள் முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

    பிரபஞ்சப் பிறப்பைக் கூறும் பெரு வெடிப்பு நியதி

    பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு நியதியைத்’ தற்போது பெரும்பான்மை யான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெட்பக் கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஓர் அகிலப் பெரு வெடிப்பு நிகழ்ந்து [Cosmic Explosion], அதன்பின் பிரபஞ்சம் பெருகி, விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது!

    பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி விளைவித்த ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ் அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பின்னும் அபிவிருத்தி செய்தார்.

    அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது! பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று முன்னறி வித்தார்கள்! அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக் கதிர்வீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)], 1960 இல் பின்வந்த விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப் பட்டு, பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டிருந்தது!

    பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற்சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Force], மின்காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது! விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திர வியலையும் [Quantum Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டுபிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி’ [String Theory] அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி’ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி’ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும் மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்! பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றிப் பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

    பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டிஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்! பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித் திருக்கலாம்! ஆகவே பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று மூளையைக் குழப்புவதில் அர்த்த மில்லை!

    பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

    பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின!

    விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

    பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்களுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன.

    இந்த மாறுதல் கதிர்வீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல கதிர்வீச்சு’ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல் அகிலவியல் பின்புல கதிர்வீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

    1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல கதிர்வீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி’ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல கதிர்வீச்சு அடர்த்தியை [Intensity of the Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல கதிர்வீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப் படுகின்றன!

    பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு! ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘மாக்ஸ் பிளான்க் வளைகோடு’ முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/- 450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும் ‘சம வெப்பநிலை’ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

    [தொடரும்]

    ++++++++++++++

    Images : NASA, Wikipedia

    Information :

    1. Physicists – The Biographical Dictionary of Scientists Edited By : David Abbott, Ph.D. (1984)

    2. Wikipedia – George Gamow (February 13, 2011)

    3. George Gamow – Answers.com

    4. https://en.wikipedia.org/wiki/Big_Bang [January 4, 2016]

    5. http://www.nature.com/news/did-a-hyper-black-hole-spawn-the-universe-1.13743 [September 13, 2013]

    6. http://www.huffingtonpost.ca/2013/09/17/4-dimensional-black-hole-big-bang_n_3941690.html [September 11, 2013]

    7. http://www.ibtimes.co.uk/alternate-big-bang-theory-universe-mirage-black-hole-4d-alternate-realm-1460640 [August 11, 2014]

    8. http://www.dailygalaxy.com/my_weblog/2015/02/-the-big-bang-was-a-mirage-from-a-collapsing-higher-dimensional-star.html [February 14, 2015]

    9. http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/the-big-bang-was-a-mirage-todays-most-popular.html [November 13, 2015]

    10. http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/the-big-bang-was-a-mirage-todays-most-popular.html [November 3 2015]

    11. http://jessbarkertheuniverse.weebly.com/origin-of-the-universe.html [Origin of the Universe]

    ++++++++++

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 32

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    பொதுவாக நாம் பேசும்போது இடத்திற்குத் தக்கவாறு பேச வேண்டும்! நாம் நம்முடன் நன்கு பழகிய நண்பர்களுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசுவோம்! ஆனால், கற்றறிந்தோர் இருக்கும் அவையில் சற்று அச்சத்துடன்தான் பேச வேண்டும்! திருவள்ளுவர் சான்றோர் அவை, எளியோர் அவை என்று அவையை இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார்! அவர் மிகச்சிறந்த நல்ல கருத்துக்களை அவையினர் ஏற்றுக் கொள்ளும்படிப் பேசுவோர், சிற்றறிவினர் உள்ள அவைக்குள் இருக்க நேரிட்டால், அங்கே இருக்கும் மக்களுக்கு ஏற்றவாறு, அறிவுக்குப் பொருந்தாத மலிவான நகைச்சுவைக் கருத்துக்களைப் பேசலாம்! ஆனால் சிறந்த அறிவு படைத்த அறிஞர்கள், எக்காரணத்தைக்கொண்டும் சிற்றறிவினர் இருக்கும் அவைக்குச் சென்றால், மறந்தும் கூட, உயர்ந்த நல்லறிவுக் கருத்துக்களை சொல்லக் கூடாது என்கிறார், அதனை …

    ”புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லு வார்!”(719)

    என்று பாடுகிறார்! அவையறிதல் என்ற அதிகாரத்தில், தம்மினும் தாழ்ந்தோர்அவை, தமக்கு இணையானார்அவை, தம்மினும் உயர்ந்தோர் அவை என்ற மூவகை அவையைப் பரிமேலழகர் வகுக்கிறார் விநாயக புராணம்’

    தொகைபடு செஞ்சொல் இலக்கணைச் சொல்லே
    சூழ்ந்திடும் குறிப்புச்சொல் மூன்றின்
    வகையறிந் துயர்ந்தவர் ஒத்தவர் தாழ்ந்தோர்
    மருவுமூன்று அவையுமா ராய்ந்து,
    தகையற வுணர்ந்தோர் அவையின் முந்துரையார்
    சமத்தின் எவ்வாற்றினும் கிளப்பார்,
    நகைபடு தாழ்வின் ஒன்றையும் உரையார்
    நவைபடாச் சொற்பொருள் ஆய்ந்தோர்!

    என்று பாடுகிறது! இதனை ‘அவையறிதல்’ அதிகாரத்தில், சொல்லின் தொகை, சொல்லின் நடை, சொல்லின் வகை என்ற மூன்று தொடர் களால் விளக்குகிறார்.

    சொல்லின் தொகை என்பது சொல்லின் குழு ஆகும். அது செஞ்சொல், இலக்கணைச் சொல், குறிப்புச்சொல் ஆகிய சொற்கள் கொண்டது! செஞ்சொல் என்பது வெளிப்படையாகத் தனக்குரிய பொருள் தருவது! இலக்கணை என்பது புதிய பொருளை ஆக்கிக் கொள்ளும் சொல்! அவை ஆகுபெயர் போன்றன! குறிப்புச்சொல் என்பது, வெளிப்படையாக ஒரு பொருளும், குறிப்பாக வேறு பொருளும் தரும் சொல்! அவற்றை ஆராய்ந்து, உரியவாறு பயன்படுத்த வேண்டும்!

    சொல்லின் நடை என்பது அந்த அந்தச்சொல் அதற்கு உரிய செம்பொருளையோ , இலக்கணைப் பொருளையோ, குறிப்புப் பொருளையோ, வழங்கிக் கேட்போர் புரிந்து கொள்ளுமாறு, கூறுதல்!

    சொல்லின் வகை என்பது கேட்போர் புரிந்து, ஏற்றுக் கொள்ளும்வகையில், அவையினரின் உணர்வின் வகைமைக்கேற்ப அமைதலாகும்! அதாவது கேட்போரின் திறத்துக்கேற்ற சொல்வகைகளை அறிந்து கூறுதலாகும்!

    அவ்வாறு சொல்லுதலின் சிறப்பை , ‘செலச்சொல்லுதல்’ என்ற தனித்த தொடரால் குறிக்கிறார்! வள்ளுவர் செலச் சொல்லுதல் என்ற தொடரை மூன்று குறட்பாக்களில் பயன் படுத்தியுள்ளார்! அவை,

    ”புல்லவையில் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லு வார்” (719)

    ”கற்றாருட் கற்றார் எனப்படுவார் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்” (722)

    ”கற்றாருள் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்!”(724)

    என்பனவாகும்! இவற்றுள் , ”நல்லவையுள் நன்கு செலச்சொல்லுதல்” என்ற தொடர், நல்லஅவை யினர் ஏற்றுப் போற்றும்படி அறிவார்ந்த சொற்களைக் கூறுதல் என்று பொருள் படும்! ”கற்றாருள் கற்ற செலச்சொல்லுதல்” என்ற தொடர், கற்றோரிருந்த அவையின்கண், தம் அறிவார்ந்த கருத்தினை அஞ்சாமல் கூறுதல் என்று பொருள் படும்! பலநூல்களைக் கற்ற அவையினரிடம் தாம் கற்ற நூலின் கருத்தினை அவர் உள்ளம் கொள்ளும் வகையில் சொல்லுதல் என்றும் பொருள் படும்!

    இவற்றுள், கற்றார் முன் கற்ற செலச்சொல்லுதல், என்பது பலநூல்களைக் கற்றவர்களிடம் தாம் கற்றவற்றைக் கூறுவதுடன், அக்கற்றார் கூறும் அறிவார்ந்த கருத்துக்களை ஏற்றுப் போற்றித் தம்மை வளர்த்துக் கொள்வதையும் குறித்தது! ஒருவர் தம் அறிவுத்திறனைப் பிறருக்குப் புலப்படுத்தும்போதே, பிறரின் அறிவுத்திறனையும், அவர் வாய்ச்சொற்களின் வழியே புரிந்து கொள்ளுதலாகிய பயனை அடையலாம் என்பதையே இக்குறட்பாவின் புதிய விளக்கமாக நாம் காண்கிறோம்! இதனை மேலும் விளக்கும் வகையில், பிறர்கூறும் சொல்லின் சிறந்த கருத்தைக் கேட்டறிந்து கொள்வோரின் வாயிலிருந்து, பணிவான இனிய சொல்லே புறப்படும்! அவ்வாறு பிறர் கூறும் சொற்களின் சிறந்த பொருளை, நுட்பமாக உணராதவர்கள், பணிவும் இனிமையும் உடைய சொற்களைக் கூறுதல் அரிதாகும்! இதனை,

    ”நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
    வாயினர் ஆதல் அரிது!”(419)

    என்ற குறட்பா தெளிவாக்குகிறது! ஆகவே ஓர் அவையின்கண் பேசுவார், அந்த அவையினர் பலகற்ற அறிஞராயின், அவர்களிடமிருந்து தாம் அறியாத நல்லவற்றையும் கற்றுக்கொள்ளலாம் என்பது புலனாகின்றது. ஒரு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் வாதிடும்போது, எதிர் வழக்காடுபவரின் அறிவார்ந்த, அனுபவம் வாய்ந்த வாதங்களின் மூலம் தம் பிழைகளை உணர்ந்து கொள்வார்! மேலும் எவ்வாறு வாதிடுவது என்ற புதிய முறைகளையும் கற்றுக் கொள்வார்! மேலும் தாம் வைத்த வாதங்களின் சிறப்புகள், சிறப்பின்மைகள் ஆகியவற்றையும் மதிப்பிட்டு நீதிபதி வழங்கும் கருத்துக்களின் மூலம் புதிய அறிவை வழக்கறிஞர் அடைவார்! அவ்வாறே சான்றோர் அவையில் ஒருவர் கூறும் கருத்துக்கள், சான்றோர்களின் எதிர்வினைகளால் செழுமைப் படுத்தப் பெறும்!

    இந்தக் குறளை அடுத்து வரும் குறளில் சொல்லிலக்கணம் கற்றவர், அளவை நூலையும் கற்றறிந்தால், எந்த அவையிலும் யாருக்கும் விடை கூறலாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்! இதனை விளக்கும் பரிமேலழகர், நியாய சாத்திரத்தின் வாதம்,செற்பம்,விதண்டை, சலம், சாதி, முதலானவும், மேற்கோள், வேற்றுப்பொருள், போன்ற தருக்க சாத்திரக் கருத்துக்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறுகிறார்! ஆகவே நாம் புதிய விளக்கம் காண எடுத்துக் கொண்ட குறட்பாவில் இத்தனைக் கருத்துக்களும் அடங்கியமை யால் இக்குறள் இக்கால வழக்கறிஞர்களின் வாதத் திறமையை மேம்படுத்துகிறது!

    ‘அவையஞ்சாமை’ அதிகாரத்தில் உள்ள இக்குறட்பாவை மீண்டும் கற்போம்!

    ”கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல் (724)

    இதன் ஆங்கில மொழியாக்கம் : Speak with assurance before the learned that which thou hast mastered; and that which thou knowest not , learn from them that excel therein. v.v.s. aiyar.

     

    Share
  • மனிதனுக்குள் மிருகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனிதன் மிருகங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதனாலோ என்னவோ மனிதனுக்குள் நிறைய மிருக உணர்வுகள் உள்ளன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.  மனிதன் ‘நாகரிகம்’ பெற்றுப் படிப்படியாக வளர்ந்து அவனுக்குள் இருந்த மிருக உணர்வுகள் ஒவ்வொன்றாக அவனை விட்டுப் போய்விட்டதாக எல்லோரும் நினைத்தாலும் அவை இன்னும் மனிதனுக்குள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். வெகு ஆழமாக மனிதனின் மனதிற்குள் போய்விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அவ்வப்போது அந்த மிருக உணர்வுகள் வெளியே வரத்தான் செய்கின்றன.

    கால்பந்து. ஃபேட்மிண்டன் டென்னிஸ், ஹாக்கி போன்ற எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன.  இருவரோ பலரோ இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விளையாடி யாரோ ஒருவர் அதில் வெற்றி பெறுகிறார்.  அதில் இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்துவதில்லை.  அந்த விளையாட்டுக்களைக் கண்டு பலர் மகிழ்ச்சி அடைகின்றனர்.  அதில் தவறு ஏதும் இல்லை.  ஆனால் இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும், துன்புறுத்தும் குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுக்களில் மனிதர்கள் என்ன சந்தோஷம் காண்கிறார்கள் என்று எனக்கு எப்போதும் புரிந்ததில்லை.  நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் எங்கள் ஊரில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குத்துச்சண்டையைத் தவறாமல் பார்த்து வருவார்.  அவருக்கு அது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.  அப்போதே இதில் என்ன சந்தோஷம் காண்கிறீர்கள் என்று கேட்டுவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றும்.  ஆனால் அவர் வயதில் பெரியவர்.  அவரிடம் அப்படிக் கேட்கும் தைரியம் ஒருபோதும் எனக்கு வந்ததில்லை.  தொலைக்காட்சிப் பெட்டியில் பல சானல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போதோ விளம்பரங்களிலோ குத்துச்சண்டை என் கண்களில் பட்டுவிட்டால் சில வினாடிகள் கூட அதை என்னால் சகிக்க முடியாது.  அந்த அளவிற்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உடல் அளவில் துன்புறுத்துவதை என்னால் பார்க்க முடியாது.

    அதே மாதிரி மாமிசபட்சிணிகளான புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் அப்பாவி மான்களையோ ஆடுமாடுகளையோ அடித்துக் கொல்லுவதையும் என்னால் படங்களில்கூட பார்க்க முடியாது.  எப்படித்தான் மனிதன் மிருகங்களை வேட்டை ஆடுகிறானோ.  அவை துடித்து உயிர்விடுவதைப் பார்க்கும் மனிதனுக்கு மிருக உணர்வு இல்லையென்று எப்படிக் கூறுவது?

    இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் அரசர்கள் ஆண்டுகொண்டிருந்தபோது சில காட்டுப் பன்றிகளை பயிர்கள் உள்ள விளைநிலத்திற்குள் விரட்டிப் பின் அவர்கள் வளர்க்கும் நாய்களை அவற்றின் பின்னால் ஓடவிட்டு அந்த நாய்கள் அந்தக் காட்டுப் பன்றிகளைக் குதறுவதைப் பார்த்து ரசிப்பார்களாம்.. இப்போதும் அந்த அரசர்களின் வழியில் வந்தவர்கள் இம்மாதிரி விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்களாம்.  மனிதன் எந்த அளவிற்கு மிருகம்போல் நடந்துகொள்கிறான்.  மிருகங்கள்கூட தங்கள் உணவுக்காகவும் பாதுகாப்பிற்காகவும்தான் மற்ற மிருகங்களைத் துன்புறுத்துகின்றன.  மனிதனைப்போல் அந்த துன்பத்தில் இன்பம் காணுவதாகத் தெரியவில்லை.

    2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ‘தமிழர்களின் வீரவிளையாட்டான’ ஜல்லிக்கட்டைத் தடைசெய்திருந்தது.  ஆனால்,  மத்திய அரசு அந்தத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.  ‘வீரர்கள்’ எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.  காளைகளை அந்த ’வீரர்கள்’ துன்புறுத்தப் போவதை வேடிக்கை பார்க்கப் பலர் ஆவலோடு காத்திருந்தார்கள்!  அந்த வீரவிளையாட்டில் அவர்கள் காளைகளின் வாலை முறுக்குவதையும் அவற்றின் தலையைத் திருகுவதையும் அவற்றின் முதுகில் குத்துவதையும் பார்ப்பதில் என்ன சந்தோஷம் இருக்கிறது?  காளைகள் மட்டுமல்ல, பல ‘வீரர்’களும் அல்லவா காயமடைகிறார்கள்?  அதையும் பார்த்து மகிழ ஒரு கும்பல் இருக்கிறது என்றால் இது மிருக உணர்வு அல்லாமல் வேறு என்ன?

    தமிழகத்தில் தொன்றுதொட்டே ஏறு தழுவுதல் என்ற மரபு இருந்தது என்று இலக்கியம் கூறுகிறது..  இப்போதைய ஜல்லிக்கட்டின் முன்னோடி என்கிறார்கள் இதை.  வசதி படைத்த சீமான்கள்  காளைகளை வளர்த்து அவற்றை அடக்குபவர்களுக்குத்தான் தங்கள் மகள்களைத் திருமணம் செய்துகொடுப்பார்களாம்.  அப்படிப்பட்டவனை மணக்கத்தான் பெண்ணும் விரும்புவாளாம்.  அவன் அறிவிலியாகவோ முரடனாகவோ இருந்துவிட்டால் அவளுடைய கதி என்ன?  அப்படி இருந்தாலும் வீரனாக – அதாவது காளையை அடக்குபவனாக – இருந்தால் மட்டும் போதும் என்று பேசாமல் இருந்துவிடுவாளா?  அப்படியே இந்த மரபு அப்போது இருந்திருந்தாலும் இப்போதைய கணினி யுகத்தில் எந்தப் பெண் இப்படி காளையை அடக்குபவனை விரும்பி மணந்துகொள்வாள்?

    பழைய ரோம சாம்ராஜ்ஜியத்தில் குற்றம் புரிந்தவர்களை உயிரோடு பசியோடு இருக்கும் சிங்கத்திற்கு இரையாக்குவார்களாம்.  இதை ரசித்துப் பார்க்க ஊரே கூடுமாம்.  இன்னும் அந்த மனோபாவத்தில்தான் நாம் இருக்கிறோமா?  மனிதன் எவ்வளவோ வளர்ச்சி பெற்று நாகரிகம் அடைந்துவிட்டதாகக் கூறிக்கொள்வதெல்லாம் உண்மை இல்லையா? மிருக உணர்விலிருந்து அவன் எப்போதுமே விடுதலை பெறப் போவதில்லையா?

    தினம் தினம் மனிதன் மற்ற உயிரினங்களைக் கொன்று தன் பசியைப் போக்கிக்கொள்கிறானே அது எப்படி சரியாகும் என்று சிலர் கேட்கலாம்.  அதுவும் சரியல்ல, இதுவும் சரியல்ல.  மனிதனால் மிருகங்களை அடக்கி ஆள முடியும் என்ற ஒரே காரணத்தால் அவற்றை மனிதன் கொன்று தின்பது மிகவும் கொடியது.  அமெரிக்காவை எதிலும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் நாம் கோழிகளை அமெரிக்காவில் போல் ஈவு இரக்கமில்லாமல் அவற்றிற்கு வேதனை ஏற்படுத்தும் வகையில் குறுகிய காலத்திலேயே கொழுக்கவைத்து உண்கிறோம்.  அமெரிக்காவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.  தேவை இல்லாததை விட்டுவிட்டு தேவையானதை கற்றுக்கொள்ளலாமே.  இப்போது அமெரிக்காவில் மிருகங்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக் கூடாது, அதனால் பால், வெண்ணெய் போன்ற பதார்த்தங்களையும் விட்டுவிடும் கூட்டம் பெருகி வருகிறது.

    மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று நிர்வாக ஆணைப் பிறப்பித்து, அதை பீட்டா போன்ற மிருக ஆர்வலர்கள் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் அந்த ஆணையை ரத்துசெய்து, அதன் பிறகு தமிழக இளைஞன் ஒருவன் தீக்குளித்து இப்போது எல்லாம் முடிவடைந்தது என்று கொள்ளலாம்.  ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் சிலர் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.  என்னைப் பொறுத்தவரை பல காளைகள் மனிதனின் துன்புறுத்தலுக்கு இலக்காகாமல் தப்பின என்ற விஷயம் மனதுக்கு ஒரு நிம்மதியையே கொடுக்கிறது..

    Share
  •   கற்றல் -ஒரு ஆற்றல் (12)

    க. பாலசுப்பிரமணியன்

    கண்ணோடு கண் நோக்கின்…

    education11

    குழந்தையின் வளர்ச்சியின் படிக்கட்டுக்களில் ஒரு முக்கியமான நிகழ்வு “கண்ணோடு கண் நோக்குதல் “. இதைப் பற்றி நாம் குழந்தை பிறந்த சில வாரங்களில் ஏற்படும் வளர்ச்சியின் போது அறிந்தோம்..ஆனால் ஒரு குழந்தை ஐந்து அல்லது ஆறு மாதங்கள் ஆகிய பின் இதே நிகழ்வினால்  வேறு பல தாக்கங்கள்  ஏற்படுகின்றன.

    தன் தாயின் கண்களோடு உறவாடும் குழந்தை அந்தத் தாயின் உணர்வு நிலைகளை எளிதாகப் புரிந்துகொள்கின்றது. அதே போல் மற்றவர்கள் நோக்கும் பொழுதும் அவர்களின் கண்பார்வையின் பொருளை அறிந்து கொள்ள முற்படுகின்றது. சில நேரங்களில் மற்றவர்களின் பார்வை பயத்தை தூண்டுவதாகவோ அல்லது ஏதாவது அச்சத்தை எற்படுத்துவதையோ குழந்தை உணர்கின்றது. உடனே அதன் கண் விழிகள் தாமாகவே கீழ்நோக்கிச் செல்கின்றன. அதே போல் மற்றவர்களுடைய பார்வை ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்தால் விழிகள் மேல்நோக்கியோ அல்லது சுழன்றோ தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.  “கண்ணோடு கண்” நோக்கும் பொழுது மற்றவர்களிடமிருந்து தமக்கு பாதுகாப்புக்கான உத்திரவாதம் கிடைக்கிறதா என்று உணருகின்றது.  அந்த நேரங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அழுதோ அல்லது மறுப்பைத் தெரிவித்தோ உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது.

    மற்றவர்களுடைய கண்களைப் படிக்கும் குழந்தை – கோபமுள்ள முகங்கள், மலர்ந்த முகங்கள், துயரமான முகங்கள் மற்றும் ஏளனம், வீராப்பு போன்ற உணர்வுகளைக் காட்டும்  முகங்களை அடையாளம் கண்டு கொள்கின்றது. அந்தக் குழந்தைக்கு இந்த உணர்வுகளைப் பற்றி ஏதும் தெரியாமலிருந்தாலும் அந்த உணர்வுகள் தனக்கு ஒரு  சாதகமான சூழ்நிலையை  (Comfort  zone )உருவாக்கவில்லை என்பதை மட்டும் புரிந்துகொள்கின்றது.

    கண்ணோடு கண் நோக்கும் இந்தச் செயல் மூளையில்  அறிதல், புரிதல் ஆகிய நிகழ்வுகளுக்கு அடிவாரமாக அமைகின்றன. மற்றும் ஒரு குழந்தையின் உணர்வு நிலைகளை (emotional status) பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. ஆகவே பெற்றோர்கள் குழந்தைகள் தங்களோடும் மற்றவர்களோடும் உறவாடும் பொழுது அவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

    மேலும் மொழி வளர்ச்சிக்கும், உச்சரிப்புகளின் மேன்மைக்கும், உடல் மொழிகளை பக்குவப்படுத்துவதற்க்கும் இந்த கண்ணோடு-கண் நோக்கும் (eye-eye coordination) செயல் மிக்க பயனுள்ளதாக அமைகின்றது. குழந்தை பருவத்தில் இதை நாம் முகம் படித்தல் (face reading ) என்று சொல்லலாம் .

    “கண்ணோடு கண் நோக்குதல்” உளவியல் கருத்துகளின்படி ஒருவருடய கவனம் (attention) மற்றும் ஈடுபாடுகளை (Focus) வளர்க்க உதவுகின்றது., மேலும் மற்றவர்களுடைய  கருத்துக்களை ஊர்ந்து ஆழமமாக கேட்பதற்கும் (Listening Skills ) அறிவதற்கும் (cognition) இந்த நிகழ்வு  முதல் படியாக இருக்கின்றது.

    பின் காலங்களில் வளர்ச்சியின் மேல்படிகளில் நிற்கும்பொழுது இந்தக் கற்றல் மற்றவர்களை புரிந்து கொள்ளவும், (understanding behaviours) எடை போடவும், (evaluate) மற்றவர்களோடு தக்க முறையில் உறவாடவும் ( Relationship management ) உதவுகின்றது.

    மூளை வளர்ச்சி பற்றி ஆராயும் வல்லுனர்கள் எவ்வாறு இந்த நிகழ்வின் தாக்கம் கண்ணாடி  நியூரான்களின் மேல் (Mirror Neurons ) ஏற்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். மூளை வளர்ச்சியில் சில குறைபாடுகள்  ஏற்படும் பொழுது இந்த “கண்ணோடு கண் நோக்கும் செயல் ” பாதிக்கப் படுகின்றது, அதன் காரணமாக வளர்ச்சியின் சில வடிவங்கள் அதிகமாக பாதிக்கப் படுகின்றன.

    டேனியல் கோல்மான் என்ற அறிஞர் தன்னுடைய “Social intelligence” என்ற புத்தகத்தில் ஒரு மனிதனுடைய சமூக புத்திகூர்மைக்கு “கண்ணோடு கண் நோக்கும் ” செயலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார். ஒரு சமூகத்தில் நாம் வாழும் பொழுதும் மற்றவர்களோடு பேசும் பொழுதும் நாம் அவர்களுடைய கண்களிலிருந்து பலவற்றைப் புரிந்து கொள்கின்றோம். “வாய் பேசாததையெல்லாம் கண் பேசியது ” என்று சொல்கின்றோம். ஆகவே குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில்  “கண்ணோடு கண் நோக்கும்” செயலை நாம் “கண்ணாக” கவனிப்போம்.

    தொடரும்…..

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 18, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. இ. மயூரநாதன் அவர்கள்

    e mayuranathan

     

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் கனடா நாட்டின் “தமிழ் இலக்கியத் தோட்டம்” (http://www.tamilliterarygarden.com/) என்ற தமிழை வளர்க்கும் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் 17 ஆவது இயல் விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. இ. மயூரநாதன் (R.Mayooranathan) அவர்கள். வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த இயல் விருதின் 2015 ஆண்டிற்கான விருதினைப் பெறவிருக்கும் திரு. மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவருபவர். விருது வழங்கும் விழா கனடா நாட்டின் டொராண்டோ நகரில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் இரத்தினவேலு தங்கலட்சுமி இணையருக்குப் பிறந்த திரு. மயூரநாதன் அவர்கள் மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்ற கட்டிடவியல் கலைஞர் (architect). கடந்த 35 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வரும் திரு. மயூரநாதன் கொழும்பில் 16 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1993-ல் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பணியாற்றிவருகிறார்.

    e mayuranathan1

    இந்த வாரம் (ஜனவரி 15, 2016) தனது 15 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமான விக்கிப்பீடியா. விக்கிப்பீடியா துவங்கி இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே, அதில் ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கை 200,000யும் கடந்த பின்னரே, தனி ஒரு மனிதராகத் திரு. மயூரநாதன் அவர்கள் செப்டெம்பர் 2003 ஆம் ஆண்டு  தமிழ்மொழி விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தைத்  துவக்கியுள்ளார். அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கியதுடன், அதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்திருக்கிறார். அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். அதுவே முதல் முறையாகத் தமிழ் விக்கிப்பீடியா உருவான வரலாறு. அன்றிலிருந்து தனது ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காகவே ஆக்கப்பூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவர் 12 ஆண்டுகள் 4 மாதங்களுக்குத் தொடர்ந்து பங்களித்து வருவது சற்றொப்ப 4,500 நாட்களாகும், இவர் பங்களிப்பில் உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் அடங்கும். நாளொன்றுக்கு ஒரு கட்டுரை என்ற அளவில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார் திரு. மயூரநாதன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் துவங்கிய நாளில் இருந்து, சென்னையைச் சேர்ந்த தொழில் நுட்பவியலாளர் திரு. சுந்தர் இவருடன் இந்தத் தன்னார்வப் பணியில் கைகோர்க்கும் வரையில் ஒரு தனி மனிதராகவே ஓராண்டுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வந்திருக்கிறார் திரு. மயூரநாதன். புதிய பங்களிப்பாளர்கள் பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்வதற்கான இடமான ஆங்கிலத்தில் “sand box” என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியா பயிற்சி தளத்திற்கு “மணல் தொட்டி” என மொழி பெயர்த்து பெயர் கொடுத்தவரும் இவரே. மணலில் எழுதி பயிற்சி பெறும் வழக்கத்தை ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் திரு. மயூரநாதன்.

    e mayuranathan2தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுதுவதில் துவங்கியது திரு. மயூரநாதன் அவர்களின் எழுத்தார்வம். பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுதே ஐந்து மாணவர்களுடன் இணைந்து “விஞ்ஞானி” என்னும் கையெழுத்து மாத இதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவரது இந்த எழுத்து ஆர்வமே பிற்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது எனலாம். ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்ததால் இவர் துவக்கிய தமிழ் விக்கிப்பீடியா பணி, இன்று தரமான கட்டுரைகள் கொண்ட தகுதியில் ‘ஷிஜு அலெக்ஸ்’ (Shiju Alex) 2010 ஆண்டில் செய்த தர ஒப்பீட்டின் அடிப்படையில் இந்திய மொழிகளில் முதலாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தையும், விக்கியில் இடம்பெறும் 291 உலக மொழிகளில் தமிழ் மொழி 61 இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா இடம் பெறும் நிலையில் உள்ளது. தற்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 83,000. இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் தன்னார்வப் பயனர்களாக தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா குழுவில், சுமார் 100 தொடர் பங்களிப்பாளர்களும் அடங்குவர். தமிழ் விக்கிப்பீடியா விரிவாக்கத்திலும், பிற பங்களிப்பாளர்களுடன் இணைந்து சிறப்பாக இயங்கும் கூட்டுக்குழுமமாக அது உருவாகவும் வழிவகுத்தமைக்காக திரு. மயூரநாதன் அவர்களைப் பாராட்டுவது சாலப் பொருந்தும்.

    தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தமிழின் எதிர்கால வளர்ச்சியின் இன்றியமையாப் பங்கு அளிக்கிறது என்று இந்நாட்களில் உணரப்பட்டு, மரபுவழி தமிழ் வளர்ச்சியில் காட்டப்படும் அதே அக்கறை தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் சில திட்டங்களில் தமிழ் விக்கிபீடியாவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணையக் கல்விக்கழகம்,  த. இ. க. – தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சியாக தனக்கு பதிப்புரிமை உள்ள ஊடக வளங்கள், கணிமை வளங்களை கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

    ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவதிலும், உலக அங்கீகாரம் பெற்ற திட்டமொன்றில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருவதாகக் கூறும் திரு. மயூரநாதன் தான் ஒரு வீக்கிபீடியனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். முதல் பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்த வல்லமையாளரைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    __________________________________________________________
    வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
    மின்னஞ்சல்: rmayooranathan@gmail.com
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/mayooranathan.ratnavelupillai?ref=br_rs
    விக்கிப்பீடியா: https://ta.wikipedia.org/wiki/பயனர்:Mayooranathan

    தகவல் தந்துதவிய இணையதளங்கள்:
    http://www.tamilliterarygarden.com/
    http://annakannan-interviews.blogspot.in/2009/12/blog-post_4780.html
    http://www.thehindu.com/news/cities/chennai/tamil-wikipedia-brings-together-generations/article5183023.ece
    http://www.muthukamalam.com/interview/p7.html
    https://ta.wikipedia.org/s/4ka9

    __________________________________________________________

    Share
  • ஒருகாம்பிருதலையும் பூ

    திரு நரசய்யா எழுதிய முதற்கதை விகடனில் 1964 ஆம் வருடம் செப்டம்பரில் வெளியானது. இக்கதை 100 கதைகளைத் தாண்டியது. திரு நரசய்யா அவர்களின்  அரை நூற்றாண்டு இலக்கியப் பயணத்தின் நினைவாக!

    நரசய்யா

    “கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
    வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
    ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்

    பாங்கனுக்குப் பாங்கன் பயன்றிவான் மன்ற
    அறிவா ரறிவா ரறியா ரறியார்
    ஒருகாம் பிருதலையும் பூ”

    பெருந்தொகை பாட்டு எண் 1800

    அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
    (கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று
    இறங்குக்காற் பாடியது )

    சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை
    நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!

    அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப்பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார் 10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்க முன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து 13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்த போது இன்னும் சிலர் சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றில் மீது நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து விடவே உறசாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செயத ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ தலையில் அடித்துக் கொண்டான்.

    ********

    இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண
    வரவேற்புக்காக; அந்த ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும. திருமண வரவேற்பு எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு
    வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . . எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கின்றனர்!

    அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருளகளும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் அந்த ஹாலின் அருகில், துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும்
    அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருளகளைத் தந்து மகிழ்ந்தனர். அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.

    “புஷபவதி ஆன… ” அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரமயா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். “ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.

    சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?’

    “சீ” * * * *

    திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் கை வைத்துக் கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன். “என்னாச்சு?” “என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம் இப்போ பாருங்கோ
    திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொலறா. .”

    தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும் தான் தெரியும் அப்பெண் பூப்பெய்து விட்டது; அதைத்தான அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும்
    சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. துண்டில் கிடந்த சில்லரையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று
    அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்து விட்டு கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் தொழுது நிற்கையில் அப்போதே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகார் நாராயண சாஸ்திரியைப்
    பார்த்து அம்மாது சொன்னாள்: “சாமி, எம்பொண்ணு பெரியவளாயிட்டா; கும்பிடறேன்” என்றாள். “அப்பிடியா! இனணிக்கு திதி நடசத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா” என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

    தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம் தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் அளிக்க வேண்டும்? கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அதுவும் ஒரு ஓசை தான்; ஏன் ஒரு ஓலம் தான்! நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத் தான்அவ்வாறு ஓலத்தை ச் செயது கொண்டு அவரும் பாவம் செல்கிறார்!

    அதிலிருப்பபவரும் மனிதன் தான். அரசியல் வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரியவேண்டுமா? “சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!” எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொன்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த”பெரிய” மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

    இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில் கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக “சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்” எனச் சொல்லலாம்! வேறுபாடுகள் இவ்வளவா?

    ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்தி தான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! ஆனால் மனிதர்களுள எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டு
    கயிற்றையும் சுற்றிக கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் கண்கள் அகல விரிந்தன. “ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடே நல்லா இருக்கணுமய்யா!” என்ற போது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல் வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, ” மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்” என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் வியாபித்து, எல்லா பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்! அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!

    Share
  • அருமருந்தே காளியம்மா!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     பல்லவி

    எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது காளியம்மா
             மண்ணிலே நல்லவண்ணம் வாழுதற்குத் துணையானாய்     (எண்ணமெலாம்)

     

     அனுபல்லவி

       கண்ணாலே உனைப்பார்த்தால் கவலையெல்லாம் தீருமம்மா
             கண்மணியே காளியம்மா காலடியைப் பற்றுகின்றோம்              (எண்ணமெலாம்)
            சரணம்


              தீராத காதலுடன் தினமும்வரும் அடியவரை
              நோகாமல் காத்திடுவாய் நுண்ணறிவின் இருப்பிடமே
              ஆராதனை செய்து அனுதினமும் பாடுகின்றோம்
              நேராக எமைபார்த்து நின்னருளைத் தருவாயே!

              மருதமர நிழலினலே வாழுகின்ற தாயேநீ
              உரிமையுடன் வருமடியார் உள்ளமதில் உறைந்திடம்மா
              வருவினைகள் எமையணுகா வகையினிலே காத்திடுவாய்
              அருமருந்தே காளியம்மா அனைவருமே தொழுகின்றோம்             (எண்ணமெலாம்)  

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(104)

    செண்பக ஜெகதீசன்

    ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை.    (திருக்குறள் -656: வினைத்தூய்மை)

    புதுக் கவிதையில்…

    பெற்ற தாயைப்
    பசியில் தவிக்கவிடுதல்
    பெரும் பாவம்…

    தாயவள் பசியில்
    தவிக்கக் காணினும்,
    என்றுமே செய்யாதே
    அறிவுடைச் சான்றோர்கள்
    பழித்துச்சொல்லும் செயலை…!

    குறும்பாவில்… 

    தாயவள் தவித்தாலும் பசியில்,
    தொடங்காதே
    தூய சான்றோர் வெறுக்கும் செயலை!

    மரபுக் கவிதையில்… 

    முன்னறி தெய்வம் இரண்டினிலே
      –முதலாம் தெய்வம் நமைப்பெற்ற
    அன்னை பசியில் வாடிநிற்கும்
      –அவல நிலையே வந்தாலும்,
    முன்னைப் பெரியோர் சான்றோர்கள்
      –முழுதாய்ப் பழிக்கும் செயலதைத்தான்
    என்ன காரணம் காட்டியுமே
      –என்றும் நீதான் செய்திடாதே!

    லிமரைக்கூ… 

    கொடிய பசிதனில் வாடிடும் அன்னை
    துயர்கண்டும், பெரியோர் பழிக்கும்
    செயலது செய்ய மாற்றிடாதே உன்னை!

    கிராமிய பாணியில்… 

    செய்யாத செய்யாத
    கொடுஞ்செயலச் செய்யாத… 

    செய்யாத செய்யாத
    பெரியவங்க விரும்பாததச்
    செய்யாத செய்யாத,
    பெரியவங்க பழிக்கிறதச்
    செய்யாத செய்யாத… 

    பெத்தவளே பசியோட
    பட்டினியாக் கெடந்தாலும்
    அதச்
    செய்யாத செய்யாத… 

    செய்யாத செய்யாத
    கொடுஞ்செயலச் செய்யாத! 

     

    Share
  • கேட்டாளே ஒரு கேள்வி!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம் 

    சும்மா இருப்பதல்ல ஓய்வுக் காலம்
    சுகமான கனவுகள் நிறைவேற்றும் காலம்
    சுதந்திர மனம், ஆரோக்கிய உடல்
    சுறுசுறுப்பு  அனுபவம் சுயமாய் இயங்குதல்.

    உடற் பயிற்சி, உகந்த வெளியுலா,                             woman
    உணர்வின் மனச்சுளுக்கு எடுக்கப் பல
    உற்சாகம் தரும் நூல்கள் வாசிப்பு
    உள்ளம் மகிழ உறவுகளின் கூட்டுறவு.

    அச்சச்சோ நேரம் போதவில்லையேயெனும்போது
    உச்சக் கேள்வியொன்று  பக்கம் விழுந்தது
    ”என்ன வீட்டிலிருந்து சமையல் செய்கிறீர்களா?என்ன உடல் பருத்து  விட்டதா?”

    விரியும் தமிழும் நானுமொரு பக்கம்
    தெரியாதா  என் தமிழ் பற்றி இவளுக்கு?!புரியாது சமைக்கப் பிறந்தவள் என்கிறாளே!சிரிப்புத்தான் வந்ததிவள் கேள்வியால் எனக்கு!

    ஓய்வூதியம் எடுத்த பின்னும் மனிதன்
    ஓய்வதில்லை; ஓடியாடிய உடல் ஓயாது
    ஓய்ந்திருத்தல் என்பதும் மனதுக்கும் இல்லை
    ஓடை போன்று ஓடுவதே வாழ்வு!

    பல வகையாக வாழும் விதம் உண்டு
    கலகலப்பான வாழ்க்கை விதம் ஒன்று
    நலமற்ற கறாரான வாழ்வு வேறு
    விலகுங்கள் என் வழி வேறு!

    (வேறு)

    குமையும் பெண் மனங்களே!
    அமைந்த வாழ்வை அற்புதமாக்குங்கள்!
    சமையலே வாழ்வு அல்ல!
    சமையல் சிறு பாகமே!

     

    Share