கவிதைகள்மின்னூல்கள்

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 50

–சி. ஜெயபாரதன்.

 

 

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“சொத்தைப் பல்லைப் “பிடுங்கு” என்று சொன்னால் பல் டாக்டர் உன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவார். காரணம் நோயை மறைக்கும் பல் டாக்டர் கலைத்திறனை இதுவரை நீ கற்றுக் கொள்ள வில்லை. அழுத்திக் கேட்டால் இப்படிச் சொல்லிக் கொண்டு உன்னை விட்டு ஒதுங்கிச் செல்வார் : “இந்த உலகில் தூய கருத்தியல்வாதிகள் (Idealists) எனப்படும் பல மனிதர் பலவீனக் கனவுகள் உடையவர்.” கலில் கிப்ரான். (Decayed Teeth)

“பிதற்றுபவரைப் பார்த்து அவரது பிதற்றலைக் கேட்டு நான் சலிப்படைந்து விட்டேன். அவரை வெறுக்கிறது எனது ஆத்மா. காலை எழுந்து தினச் செய்தித் தாளையோ கடிதங்களையோ படிக்கப் போனால், அவை முழுவதிலும் வெறும் வம்பளப்புகளைத்தான் காண்கிறேன். தொங்கிக் கொண்டிருக்கும் பொருளற்ற வாசகம் அவற்றில் வஞ்சகம் கலந்து எழுதப் பட்டுள்ளன.” கலில் கிப்ரான். (Mister Gabber)

___________________

காரணம்
(Reasoning)
___________________

காரணம் உன்னிடம் பேசினால்
காது கொடுப்பாய் !
பாதுகாப் புறுதி அது !
அதன் உதவியை நாடு !
அறிவுக்கு
ஆயுதம் அளிக்கும் உனக்கு !
ஆண்டவன்
உனக் களித்த வற்றுள்
காரணத் தைப் போல்
வலுவான கை
வேறு ஒன்றில்லை !
காரணம்
உன்னிடம் பேசும் போது
உதாரணம் நீ அதற்கு
இச்சைக்கு எதிராக !
காரணம்
உனக்கு எச்சரிக்கை மந்திரி
நம்பத் தகும் வழிகாட்டி !
ஞான அறிவூட்டி !
இருளில் ஒளிகாட்டி !
சினம் என்பது ஒளி ஊடே
இருள் போன்றது !
அறிவுக்குக் கதவைத்
திறந்து வை !
காரணம் தெரிந்திடச்
சாளரம் திறந்திடு !
அவசரப் புத்தியைத் தவிர்ப்பாய் !
அவ்வுரைதான் உனக்குச்
செவ்வழி காட்டும் !
___________________

கவனமாய்க் கேள் !
காரணம்
உதவி யின்றிப் போகும்
உன் கையில்
அறிவின்றிப் போனால் !
உடன் பிறப்புச் சகோதரி
அறிவு இல்லாமை
காரணத் துக்கு
வீடில் லாத வறுமை !
அறிவுக்குக்
காரணம் இல்லாமை
கதவில் லாத வீடாகும் !
காரணம் இல்லாமல் போயின்
காதல், நீதி, நேர்மைக்கு
ஆதார மின்றி முறியும் !
___________________

நீதி, நெறி இல்லாத
கல்வி கற்ற மனிதன்
நிராயுத பாணியாய்ப்
போருக்குச் செல்லும்
வீரனுக்கு ஒப்பா வான் !
போர்ச் சினம்
வாழ்க்கையில் வீணாகும்
அவன் இனத்துக்கு !
தூய்மை யான
நீர்க் குடத்தில் கலந்த
கத்தாழை வித்துப் போலாகும் !
காரணங் களோடு
கல்வி கற்பது
உடலும் ஆத்மாவும்
உறவாடல் போலாகும் !
உடல் இல்லா விட்டால்
ஆத்மா வுக்கு
ஒன்று மில்லை !
வெறும் காற்றாய்ப் போகும் !
ஆத்மா இல்லா விடில்
உணர்வற்ற கூடாகும்
உடம்பு !
___________________

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  கல்வி கற்பது
  உடலும் ஆத்மாவும்
  உறவாடல் போலாகும் !
  உடல் இல்லா விட்டால்
  ஆத்மா வுக்கு
  ஒன்று மில்லை !
  வெறும் காற்றாய்ப் போகும் !
  ஆத்மா இல்லா விடில்
  உணர்வற்ற கூடாகும்
  உடம்பு !

  காலங்களால் அழியாத உண்மை…
  க. பாலசுப்ரமணியன் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க