Month: August 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”திருப்பாவை ராகத் திருமண மாலை
    திருத்துழாய் மார்பில் தரித்து -கருப்பைத்தன்
    காதலனாய் ஏற்றனள் கோதைஅவ் ஆண்டாளே
    ராதையாம் ராகம்மா றாள்’’….கிரேசி மோகன்….!

    ராகம்மா றாள்-விடாது (காதல்) கருப்பை…..!(விடாது கருப்பு என்று ஒரு தமிழ் சீரியல் வந்தது….கேசவ்வை ‘’விடாது கருப்பு’’(கண்ணன்)….!

    Share
  • ’’குமார சம்பவம்’’….!

    கிரேசி மோகன்
    —————————————
    சர்கம் -2
    ————-

    அந்த சமயம், அசுரனாம் தாரகனால்
    நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்
    முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்
    கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)

    சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு
    போததி காலை புலப்படும் -ஆதவன்போல்
    வாடிய வானவர்முன் கூடிய வாசலில்
    பாடிடும் நூலோன் பிறப்பு….(61)

    நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை
    தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து
    தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்
    தூவினர் சொற்பூ தொழுது….(62)
    (OR)
    வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை
    நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த
    தேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்
    தூவினர் சொற்பூ தொழுது….(62)

    தத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே
    சத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே
    மூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்
    கோர்த்தோம் சரணா கதிக்கு….(63)

    தண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்
    நண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்
    அசையும் உயிர்கள், அசையா பொருட்கள்
    விசையுறச் செய்யுமுன் வித்து….(64)
    கற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்
    உற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்
    என்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்
    அன்றசை(வு) இல்லா அயன்….(OR)
    அன்றிருந்தீர் ஏகம் அடைந்து….(65)….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்த வாரத்தின் வல்லமையாளர் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2016 இரியோ-தி-செனரோ ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒற்றையர் பெண்கள் இறகுப் பந்தாட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பு. வே. சிந்து (P.V. Sindhu) அவர்களே

    . அகவை 21 நிரம்பிய, தெலிங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் தந்தையார் திரு. பு.வே. இரமணா அவர்கள் இந்தியாவின் அருச்சுனா விருதை வென்றவர். சிந்து அவர்களின் தாயார் தந்தையார் ஆகிய இருவருமே புகழ்பெற்ற கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள். பு. கோபிச்சந்து என்னும் புகழ்பெற்ற இறகுப்பந்தாட்ட வல்லுநர் மேற்பார்வையிலும் பயிற்றுவிப்பிலும் இவர் இறகுப்பந்தாட்டத்தில் மிகுசிறப்பான தேர்ச்சிபெற்றார். 2015 ஆம் ஆண்டில், இவருக்கு அகவை 20 இருக்கும்பொழுதே இந்தியாவின் நான்காவது உயர் விருதாகிய பதுமசிறீ (தாமரைத்திரு) வழங்கப்பட்டது. இவரே இவ்விருதைப் பெற்றவர்களில் அகவை குறைந்தவர்.

    இரியோ ஒலிம்பிக்கில் சிந்து அவர்கள் எசுப்பானியாவைச் சேர்ந்த கரோலினா மரின் மார்ட்டின் (Carolina Marín) என்பாருடன் விளையாண்ட தங்கப்பதக்கப் போட்டியில் வெற்றியடையாததால் வெள்ளிப்பதக்கம் பெற்றார். கரோலினா மரின் 19–21, 21–12, 21–15 என்னும் பெறுமதிப்பீட்டில் சிந்துவை வெற்றிகொண்டார்.


    இறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வெங்கட சிந்து.


    இறகுப்பந்தாட்ட வீராங்கானை புசர்ல செங்கட சிந்து நசோமி ஒக்குஃகாரா (Nozomi Okuhara) அவர்களை 21-19, 21-10 என்னும் பெறு மதிப்பீட்டில் வென்றபொழுது. .

    சிந்து அவர்கள் மிகப்பல பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றியாளாராக ஒளிவீசியிருக்கின்றார். கீழ்க்காணும் 6 வெற்றிகள் குறிப்பிடத்தக்கன


    இறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வேங்கட சிந்துவின் பன்னாட்டு வெற்றிகள் (தரவு விக்கிப்பீடியா) .

    மக்கள்தொகையில் 1.293 பில்லியன் பேர்கள் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்த போதிலும் உலகளாவிய ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதில்லை. 1900 ஆண்டுமுதல் இந்தியா உலக ஒலிம்பிக்குப் போட்டிகளில் கலந்துகொள்கின்றது. 1928-1956 ஆகிய காலப்பகுதியில் இந்தியா வளைதடியாட்டப் போட்டியில் ஆறுமுறை தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்றது. அதன்பின் 1964 இலும் 1980 இலுமாக மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. 2012 ஆம் ஆண்டு இலண்டன் மாநகரத்தில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றதே மிக அதிகமாகப் பெற்ற பதக்கங்கள் ஆகும். இலண்டன் ஒலிம்பிக்குப் போட்டிகளில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 55 ஆவது இடத்தில் நின்றது. இது தவிர சீனாவில் பெய்சிங்கில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்றதுபோக மற்ற ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒன்றிரண்டு பதக்கங்களே வென்றுள்ளது. அவற்றிலும் வெண்கலப்பதக்கங்களே அதிகம். 116 ஆண்டுகளில் கலந்துகொண்ட ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 28 பதக்கங்களே பெற்றுள்ளது (தங்கம் 9, வெள்ளி 7, வெண்கலம் 12). 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள இரியோ-தி-செனரோ நகரில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியாவின் பு.வே. சிந்து பெற்ற வெள்ளிப்பதக்கமும், மற்போரில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாக்சி மாலிக்கு என்னும் வீராங்கனை வென்ற வெண்கலப்பதக்கமும் சேர்ந்து மொத்தம் இரண்டே பதக்கங்கள் பெற்று உலக நாடுகளின் வரிசையில் 67 ஆவதாக நிற்கின்றது. இரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாவிட்டாலும், சீர்நடமியப் பயிற்சியில் (gymnastics) தீபா கர்மாக்கர் என்னும் பெண் நான்காவது இடத்தைப் பெற்றதையும் குறிப்பிடவேண்டும். புரொதுனோவா தாண்டல் (Produnova vault) என்னும் கடுமையான குதித்துத்தாண்டலை உலகில் மிகச்சிலரே செய்துள்ளனர். 2016 ஒலிம்பிக்கில் இதனை வெற்றியுடன் செய்துகாட்டியும் நான்காவது இடத்தையே தீபா கர்மாக்கர் பெற்றார். பு.வே. சிந்து, சாக்சி மாலிக்கு, தீபா கர்மாக்கர் ஆகிய மூன்று இளம் பெண்மணிகளும் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த ஒலிம்பிக்குத் திறமையாளிகள்.

    2016 இரியோ ஒலிம்பிக்குப் போட்டியில் இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பு.வே. சிந்து அவர்களைப் பாராட்டி இவ்வார வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்- 41

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலின் போது மூளையில் ஏற்படும் தாக்கங்கள்

    education-1-1-1-1

    இத்தாலியைச் சேர்ந்த வின்சென்ஸ்ஸோ மாலாகார்னே (Vincenzo Malacarne) என்ற 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானி மூளையின் பலவிதமான செயல்களைப் பற்றி ஆராய்ந்தபொழுது சில அறிய நுணுக்கமான திறன்களைக் கண்டறிந்தார். அவர், சில கற்கும் திறன் உள்ள பறவைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் சிறுமூளைப் பகுதியினை ஆராய்ந்தபொழுது அதில் ஏற்பட்டுள்ள மடிப்புக்களையும் பதிவுகளையும் அறிந்தார். பின்பு அந்தப் பறவைகளை சில நாட்களுக்கு புதிய சில தந்திரங்களையும் திறன்களையும் பழகிக்கொள்ளவும் பயிற்சிபெறவும் உதவி செய்தார். சிலநாட்களுக்குப் பிறகு அந்தப் பறவைகளின் மூளையை மீண்டும் ஆராய்ந்த பொழுது அதில் புதிய பதிவுகள் மட்டுமின்றி அதிக அளவில் மடிப்புக்கள் இருந்ததையும் அறிந்தார். அதன் மூலம் கற்றல் மற்றும் பயிற்சி என்ற செயல் நடக்கும் பொழுது மூளையின் சில பாகங்களில் ஏற்படும் மாறுதல்களும் வளர்ச்சியும் தெளிவாகத் தென்பட்டன.

    இதேபோல் சார்லஸ் டார்வின் (சார்லஸ் டார்வின்) என்ற மிகப் பெயர் பெற்ற விஞ்ஞானியும் ஒரு வம்சாவளியைச் சேர்ந்த சில பறவைகளைத் தேர்ந்தெடுத்து அவைகளில் காட்டில் வளர்கின்ற சிலவற்றையும் வீடுகளில் வளர்கின்ற சிலவற்றையும் தேர்ந்தெடுத்து அவைகளின் மூளைகளின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ந்த பொழுது காட்டில் வளர்ந்த பறவைகளின் மூளைகளில் அதிக மடிப்புக்களும் பதிவுகளும் இருக்கக் கண்டார். இதன் மூலம் பொதுவாக புதிய அனுபவங்களும் சவால்களும் மூளையின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன என்ற உண்மை வெளிப்பட்டது.

    இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல கோணங்களில் கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு அனைத்துமே ” மூளை கற்பித்தலுக்கு உகந்ததாக இல்லை, அது கற்றலில் சிறப்பாக வளர்கின்றது ” என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆகவே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் அறிவு மேலிருந்து கீழாக (Top-down approach) வருகின்றது என்ற மனப்பாங்கை கொஞ்சம் மாற்றி வகுப்பறைகளை “கற்றலுக்கு” உகந்ததாக மாற்றுவது அவசியமாகத் தென்படுகின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் மூளை நரம்பியலிலும் மற்றும் கற்றல்- புரிதல் பற்றிய ஆராய்ச்சிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட சில தத்துவங்கள், கோட்பாடுகள், விழிப்புணர்வுகள் நம்முடைய நடைமுறைச் செயல்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அடிப்படியாக அமைகின்றன.

    அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மூளைநரம்பியல் அறுவை சிகிச்சையில் வல்லுநராகவும் முனைவராகவும் இருக்கும் ஜார்ஜ் ஓஜமான் (George Ojemaan) என்பவர் வலிப்பு நோய்க்காக (Epilepsy) ஒருவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை செய்யும் பொழுது அவருடைய கையில் இருந்த அறுவை ஆயுதம் (forceps) ஒன்று அந்த நபரின் மூளையின் ஒருபாகத்தைத் தொட்டுவிட அவருக்கு உடலின் ஒரு பகுதியில் உணர்வும் அசைவும் ஏற்பட்டது. இதைக் கண்ட அந்த வல்லுநர் அந்த நபரின் மூளையின் மற்றொரு பாகத்தைத் தொட அது உடலின் இன்னொரு பகுதியில் உணர்வைத் தூண்டிவிட, அவர் அதையே ஒரு ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டு மூளையின் ஒரு வரைபடத்தைத் (Neural cartography) தயாரித்தார்.

    அதன் மூலம் மூளையின் எந்தெந்தப் பகுதிகள் எந்தெந்த உறுப்புக்களோடு உறவாடுகின்றன என்ற ஒரு உண்மை வெளிப்பட்டது. இந்த மூளையின் வரைபடம் (Neural Cognitive Mapping) மூளையின் பல செயல்களை நமக்குத் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ளவும் மேற்படி ஆராய்ச்சிக்கும் தூண்டுகோலாக இருந்தது.

    இதில் அறியப்பட்ட சில உண்மைகள் :

    1. ஒவ்வொரு சொல்லும், வார்த்தைகளும், திறன்களும் மூளையின் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்படுகின்றன.
    2. ஒரே ஒலியை ஏற்படுத்தும் வேறுபட்ட மொழிகளின் சொற்களும் வார்த்தைகளும் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்படுகின்றன.
    3. ஒரே மொழியின் வார்த்தைகளின் பரிமாணம், அவற்றின் இலக்கணப் பரிமாணங்கள், இலக்கியப் பரிமாணங்கள், மொழித்திறன் போன்ற பலவும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் பதிவு செய்யப் படுகின்றன.
    4. ஒரு மொழியின் எழுத்துப் பரிமாணங்கள், பேச்சுப் பரிமாணங்கள் மூளையின் வெவ்வேறு இடங்களில் அமர்கின்றன.

    ஆனால், மூளை நாம் பேசும்பொழுதும் எழுதும் பொழுதும், சிந்திக்கும் பொழுதும் தேவையான திறன்களையும் அதன் பரிமாணங்களையும் ஒன்றுபடுத்தி ஒரு வடிவம் கொடுத்து ஒரு வினாடியின் மிகச்சிறிய நேரத்தில் (Nano-seconds) நமக்கு பொருளுடன் அனுப்பிவைக்கிறது . என்னே ! மூளையின் திறன் !. ஆகவே கற்றல்- புரிதல் நடக்கும் பொழுது மூளையின் பல பகுதிகள் ஒன்றாகச் செயல்பட வேண்டும்.

    இந்த விந்தையான துரிதமான செயலைப் பற்றியும் இது எவ்வாறு நம்முடைய கற்றலை மேம்படுத்தவும் சிறப்பிக்கவும் பயனுள்ளதாகிறது என்பதை பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்

    (தொடரும் )

    Share
  • ஓர் அபூர்வக் கவிஞனின் அகால மரணம்!

     

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதன் சக மனிதர்களோடு பல்வேறு சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காகப் போராடுவதோடல்லாமல் நோய்களோடும் போராடவேண்டிய அவலநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சில நோய்கள், உடலை வாடகை வீடாய் நினைத்துச் சிலகாலம் மட்டும் அங்கே குடியிருந்துவிட்டுத் தக்க மருந்துகள் எனும் தாக்குதல் ஏற்பட்டால் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடிக்கும்.

    வேறுசில நோய்களோ உள்ளிருப்பதே தெரியாமல் திருடன்போல் ஒளிந்திருந்து, முற்றியபின்பு திடீரென்று வெளிப்பட்டு மனிதனைத் தாக்கும். இதுபோன்ற சங்கடமான சூழ்நிலையில், நோயாளி நோயை வென்று மீள்வதும், நோய்க்கு வெற்றிதந்து மாள்வதும் அவனுக்குத் தக்கதருணத்தில் கிடைக்கும் சரியான மருத்துவ வசதியைப் பொறுத்தது. அத்தகைய மருத்துவ வசதி ஒருவனுக்கு உடனடியாகக் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் ’விதி’ என்னும் இரண்டெழுத்தால் தீர்மானிக்கப்படுவது போலும்!

    na-muthu‘ஊழ்’ என்று வள்ளுவரால் விளிக்கப்படும் இந்த விதி, ஒருவனுடைய ஜாதகத்தில் அவனுக்குச் சாதகமாக இருந்தால் பாயும் படுக்கையுமாக இருந்தவன், பாயும் குதிரையில் தாவியேறும் வல்லமை பெறுகின்றான். இல்லையேல்… அவன் வாழ்வே பாழ் என்றாகின்றது. இதற்குச் சமீபத்திய சான்று நம் உள்ளங்கவர் இளங்கவிஞர் நா. முத்துக்குமார். அவரின் அகால மரணம் நம்மை நெஞ்சைவிட்டு அகலா ரணம்!

    ”தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்ற நன்மொழிக்கு இலக்கணமாய்க் காஞ்சி மாநகர் இரண்டு பெரிய ஆளுமைகளை வரலாற்றில் விட்டுச் சென்றிருக்கிறது. ஒருவர், ஒப்பற்ற மேடைப் பேச்சு, கதை, கட்டுரை, திரைப்பட வசனம், அரசியல் வாழ்வு, தமிழோடு ஆங்கிலத்திலும் இணையற்ற மொழிப்புலமை ஆகியவற்றால் தமிழர்களைக் கவர்ந்த தன்னேரிலாத் தலைவர் பேரறிஞர் அண்ணா. மற்றொருவர், தமிழில் சிறந்த மொழிப்புலமையும், இலக்கிய ஆளுமையும், திரைப்படப் பாடல் புனைவதில் ஈடு இணையற்ற திறமையும் கொண்டிருந்த திரு. நாகராஜன் முத்துக்குமரனாகிய நா. முத்துக்குமார்.

    விவரமறியாப் பிஞ்சுப் பருவத்திலேயே கொஞ்சிடும் அன்புத் தாயை இழந்த இக்கவிஞர், தமிழாசிரியராகவும் புத்தக வாசிப்பையே தன் சுவாசிப்பாகவும் கொண்டிருந்த தன் தந்தை திரு. நாகராஜன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலால் புத்தகங்கள் மீது தீராக் காதல் கொண்டார்; வாசிப்பில் தன் தாயை இழந்த வலிக்கான ஆறுதலைக் கண்டார். பள்ளிப்பருவத்திலேயே கவியெழுதும் ஆற்றல் கைவரப்பெற்றிருந்த முத்துக்குமார், காஞ்சியிலிருந்த பல்வேறு இலக்கிய அமைப்புக்களோடும், வாசிப்பு வட்டங்களோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டு எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

    கல்லூரிக் கல்வியில் இளங்கலை இயற்பியல் (B.Sc. Physics) படித்து, அதில் தொண்ணூறு விழுக்காடு மதிப்பெண்களோடு தேர்ச்சிபெற்றிருந்தும், பி.டெக் பொறியியல் படிக்க வாய்ப்பிருந்தும், தன்னுடைய தணியாத தமிழ்க்காதலால் முதுகலைத் தமிழில் சேர்ந்தார். அவ்விளவயதிலேயே பிழைப்புக்குரிய கல்வியைத் தேடாது, தனக்குப் பிடித்ததை நாடக்கூடிய சுயசிந்தனையும், சுதந்திரமும் அவருக்கிருந்ததை அறிய வியப்பும் மகிழ்ச்சியும் நமக்கு ஏற்படுகின்றது.

    பேரறிஞர் அண்ணாவின் ஆளுமையை வளர்த்தெடுத்த பச்சையப்பன் கல்லூரியில்தான் நா. முத்துக்குமாரும் இச்சையோடு தமிழ் பயின்றார். எல்லாக் கல்லூரிகளின் கவிதைப் போட்டிகளிலும் முத்துக்குமாரின் குரலில் ஒலித்த ’பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்’ எனும் வாசகம் அந்நாளில் மிகப் பிரபலம்!

    ”புறா வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
    என்னிடமிருந்து பறிக்கிறான்
    பூனை வளர்க்கும் சுதந்திரம்!”

    ’சுதந்திரம்’ என்ற பெயரில் நா. முத்துக்குமார் எழுதிய மேற்கண்ட கவிதை மாணவர்களிடம் மிகுந்த பாராட்டையும், கவிதைப் போட்டியில் அவருக்கு முதல் பரிசையும் பெற்றுத் தந்தது!

    சோற்றுக்கு வரும் நாயிடம்
    யார் போய்ச் சொல்வது?
    வீடு மாற்றுவதை!”  என்று அவரெழுதிய கவிதையில், நாயிடமும் தாயன்பு காட்டும் அவர் கருணையுள்ளம் துலக்கமாய்க் காட்சிதருகின்றது.

    அனைத்திந்திய வங்கித் தொழிலாளர்கள் சங்கம், கல்லூரி மாணவர்களுக்காகச் சென்னையில் நடாத்திய கவிதைப் போட்டியில்,

    மாபெரும் அறைகூவலுக்குப் பின்
    உலகத் தொழிலாளர்கள்
    ஒன்று சேர்ந்தார்கள்!
    லெனின் சொன்னான்…
    என்னை மன்னித்துவிடுங்கள்!
    உங்களுக்கு முன்பாகவே
    முதலாளிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்
    என்று!

    யார் சொன்னது?
    பின்னி ஆலையை மூடிவிட்டார்கள் என்று?
    இப்போதும் பின்னி ஆலையில்
    நூல் நூற்கும் பணி
    நடந்துகொண்டுதான் இருக்கிறது!
    சின்ன வித்தியாசம்…
    நூல் நூற்பது தொழிலாளிகள் அல்ல…
    சிலந்திகள்!”

    என்று கவிதை பாடினார் இந்த இளங்கவிஞர். வேலையிழந்த தொழிலாளர்களின் வேதனைக் குரலைத் துல்லியமாய்ப் பிரதிபலித்த இந்தக் கவிதையைக் கேட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எழுந்துநின்று ஆரவாரத்தோடு கை தட்டினர்! 

    கவிதை, கட்டுரை, சிறுகதை எனத் தமிழின் அனைத்துத் தளங்களிலும் ஆர்வத்தோடு இயங்கிய முத்துக்குமார், திரைப்பட இயக்குநராகவேண்டும் என்று ஆசைகொண்டார். அதன்பொருட்டு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் சிலகாலம் உதவியாளராய்ப் பணியாற்றினார். திரைப்பட மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையையும் கவிஞர் அறிவுமதியிடம் கற்றுத்தேர்ந்தார்.

    ’பட்டாம்பூச்சி விற்பவன்’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கவிதைத் தொகுப்பை வாசித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா மனம்நெகிழ்ந்தார். கவிஞரை ஆரத்தழுவிப் பாராட்டியதோடு, அந்நூலின் வெளியீட்டு விழாவையும் (தன் செலவில்) விமரிசையாய்க் கொண்டாடி மகிழ்ந்தார். அவருடைய அன்புவெள்ளத்தில் முத்துக்குமார் திண்டாடித்தான் போனார்!

    திரைப்பட இயக்குநராகும் அவருடைய கனவு கானலாகிப் போனாலும், திரைப்படப் பாடல்கள் எழுதவேண்டும் எனும் அவருடைய ஆசையைக் காலம் (இயக்குநர் சீமானின் ’வீரநடை’ திரைப்படத்தின் மூலம்) கனிய வைத்தது. அதில் இவர் எழுதிய “முத்து முத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப்பூவைப் புடிச்சிருக்கு” பாடல் அதிக உவமைகளையும் உருவகங்களையும் கொண்ட பாடலாய் இன்றுவரை நின்றுநிலவுகின்றது.

    திரைப்படங்களுக்குப் பாட்டெழுதவந்த சில ஆண்டுகளிலேயே சிறந்த பாடலாசிரியராக மட்டுமின்றி, ஒவ்வோர் ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதக்கூடியவராகவும் முத்துக்குமார் பெயர்பெற்றது பெருஞ்சாதனையே! ஆனால் அச்சாதனையைச் சாத்தியமாக்கவும், நிகழ்த்திய சாதனையைத் தக்கவைத்துக்கொள்ளவும் மெய்வருத்தம் பாராது, கண்துஞ்சாது, அசுரத்தனமாய் உழைக்கவேண்டிய அவலநிலையும் அவருக்கு ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை!

    விளைவு? தீந்தமிழ்ச் சொல்லெடுத்து, தித்திக்கும் கவிதைகளைச் சரந்தொடுத்து எத்திக்கும் ஒலிக்கவிட்டிருந்த இளங்கவிஞனை மஞ்சள் காமாலை தாக்கியது. இன்னும் பல புதிய உயரங்களை அவர் தொடுவார் என்று நாம் ஆவலோடு காத்திருக்க…நமக்குக் கிடைத்ததோ பெருந்துயரம்!

    ”இருப்பதற்காக வருகிறோம்
    இல்லாமல் போகிறோம்”
    என்ற கவிஞர் நகுலனின் வரிகளை மெய்ப்பித்திருக்கிறது அவருடைய அகால மரணம்!

    வயோதிகத்தின் எல்லையில் நின்றுகொண்டு, நித்தமும் நோய்களோடு யுத்தம் செய்துகொண்டு, ”காலன் எப்போது வருவான்…தங்கள் காலம் எப்போது முடியும்?” எனக் காத்திருப்போர் பலரிருக்க, அவர்களையெல்லாம் விடுத்து, அற்புதத் திறமை படைத்த இளைஞனை, பொற்புடைப் பாடல்களால் கவிமழையில் நமை நனைத்த காஞ்சிக் கவிஞனைப் பற்றிச் சென்றிருக்கிறானே கூற்றுவன்! அவனை ’அந்தகன்’ என்று அழைப்பதில் பிழையென்ன?

    ”…முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு.“
    என்று நாலடியார் நவில்வது வேதனைதரும் இச்சூழலுக்கு முற்றும் பொருந்துகின்றது.

    சற்றே சிந்தித்துப் பார்த்தால், அசாத்தியத் திறமைக்கும் அகால மரணத்திற்கும் ஏதோ அத்யந்தத் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகின்றது. கீட்ஸ், ஷெல்லி, பாரதி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் என்று அகால மரணத்தைச் சந்தித்த இளங்கவிஞர்களின் வரிசை இதனை உறுதிசெய்கின்றது. அந்த வரிசையில் நா. முத்துக்குமாரும் இணைந்தது நம் தவக்குறைவே!

    வார்த்தைகளில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் எளிமையைப் போற்றியவர் நா.முத்துக்குமார். ஈத்துவக்கும் இன்பத்தைத் தன் கைகோத்து நடந்த பிஞ்சுமகனுக்கும் போதித்த அபூர்வக் கவிஞர் இவர்.

    திரைப்பட வரலாற்றில், காலத்தைக் கடந்துநிற்கும் பாடலாசிரியர்கள் வரிசையில் நா. முத்துக்குமாரின் பெயரும் நிச்சயம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்!

    ****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    நா. முத்துக்குமாரின் ’அணிலாடும் முன்றில்’ மற்றும் ’வேடிக்கை பார்ப்பவன்’ நூல்கள்.

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. ! (18)

    நிர்மலா ராகவன்

    பரீட்சைப் பயம்

    நலம்-1-2

    `இது சாதாரண பள்ளிக்கூடப் பரீட்சைன்னு அலட்சியமா இருக்காதீங்க! இப்போ வாங்கற மார்க்கைத்தான் பப்ளிக் எக்ஸாமிலும் வாங்குவீங்க!’ பல மாணவர்களும் கேட்டு நடுங்கிய எச்சரிக்கை.

    இப்படியெல்லாம் பயமுறுத்தினால்தான் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள், நமக்கும் மரியாதையோ, பதவி உயர்வோ கிடைக்கும் என்றெண்ணி பல ஆசிரியைகள் இம்முறையைக் கையாளுவார்கள். `படிப்பு’ என்றாலே பயம் உண்டாகும் என்பதுதான் உண்மை.

    ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நான் புத்தகங்கள் படிப்பது கண்டு, `எப்படித்தான் உனக்குப் படிக்கப் பிடிக்கிறதோ!’ என்பார்கள் என்னுடன் வேலை பார்த்த சில ஆசிரியைகள். வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்ட அலட்சியமும், சிறிது பொறாமையும் அவர்கள் குரலில் ஒலிக்கும். `நாங்கள் பரீட்சைகளில் பாஸ் பண்ண மட்டும்தான் புத்தகங்களைத் தொடுவோம்!’ என்று பெருமை பேசுவார்கள்.

    `ஆசிரியர்’ என்றாலே கண்டிப்பு மிக்கவர், அவரை நினைத்தாலே அச்சம் ஏற்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்றைப் பலரும் கடைப்பிடிக்கின்றனர். பள்ளிப் படிப்புதான் என்றில்லை, இசையோ, நடனமோ கற்பிக்கும் ஆசிரியர்களும் இப்படி நடந்தால்தான் மாணவர்கள் விரைவில் கற்றுத் தேர்வார்கள் என்றே எண்ணுகிறார்கள்.

    மலேசியாவில் எனக்கு அலெக்சாண்ட்ரா என்ற ஒரு சிநேகிதி இருந்தாள். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவள். அவளுடைய ஆறு வயதுப் பெண்ணுக்கு இந்திய முறைப்படி நாட்டியம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று ஓர் ஆசிரியையிடம் அழைத்துப் போனாளாம். அங்கு அந்த ஆசிரியை தன் மாணவியின் கன்னத்தில் அடித்துச் சொல்லிக் கொடுத்ததைப் பார்த்து, பெண், `I don’t know how to handle this!’ என்று கற்க மறுத்துவிட்டதாகச் சொன்னாள்.

    “அடி வாங்கிய சிறுமியின் தாய் அருகிலேயே இருந்தாள். ஆனால், ஒன்றுமே நடக்காததுபோல் வாளாவிருந்து விட்டாளே!” என்று அதிசயப்பட்டாள் அலெக்சாண்ட்ரா. அவர்கள் நாட்டில் குழந்தைகளைப் பெற்றோர் அடிப்பதுகூட சட்டவிரோதம். `ஆசிரியை அடித்தால் எனக்குச் சமாளிக்கத் தெரியாதே!’ என்று பெண் பயந்ததில் என்ன அதிசயம்?

    நம் நடன ஆசிரியைகள் தாம் இப்படிப் பயில்விக்கப்பட்டதால்தான் இன்று உயர்ந்திருக்கிறோம் என்று அதே முறையைக் கையாள்கிறார்கள்.
    தாம் மிரட்டியோ, பயமுறுத்தியோ செய்தால்தான் மாணவர்கள் எதையும் செவ்வனே செய்வார்கள் என்று ஆசிரியர்கள் நினைக்கலாம். ஆனால், பாட்டு ஆசிரியை பயமுறுத்தினால் மேடையிலோ, பிறர் எதிரிலோ பாட ஆரம்பிக்கும்போது, தொண்டையை அடைத்துக்கொள்வதுபோல் இருக்கும். நாட்டியம் ஆடும் பெண்களோ, சற்றே விறைத்தாற்போல் இருப்பார்கள். கண்கள் அலையும் — தப்பாக ஏதாவது ஆடிவிட்டால், பிறகு ஆசிரியை எப்படித் திட்டுவாரோ என்ற பயத்தில். இதற்கெல்லாம் `STAGE FEAR!’ என்று சப்பைக்கட்டு கட்டிவிடுகிறோம். அதற்குக் காரணமான ஆசிரியைக்கு யார் எடுத்துச் சொல்வது!

    எந்தப் போட்டியில் பார்த்தாலும், ஆரம்பத்தில் நன்றாகப் பாடுகிறவர்களோ, ஆடுகிறவர்களோ இறுதிச் சுற்றில் வெற்றி பெறுவதில்லை. அமைதியாக இருப்பவர்களோ, சிறுகச் சிறுக முன்னேறிக்கொண்டே வந்து, வெற்றிக்கோப்பையைப் பிடித்துவிடுவார்கள்.

    இவர்களால் இவ்வளவு பெரிய சமாசாரத்தை எப்படிச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, படபடப்பில்லாமல் இயங்க முடிகிறது என்று பார்த்தால், அவர்களுடைய ஆசிரியைகள் சிரிப்பும், விளையாட்டுமாகச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். தவறிழைத்தால், கேலியோ, திட்டோ கிடையாது. பிற ஆசிரியர்களைப்பற்றி அவதூறாகப் பேசவும் மாட்டார்கள். இம்மாதிரி வகுப்புகளுக்கு குழந்தைகள் ஆர்வமாக வருவார்கள். கற்பது முதலில் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால், பந்தயத்தில் ஓடும் குதிரைபோல், விரைவிலேயே பல மடங்காக உயர்ந்து, பிறரைப் பின்தள்ளி விடுவார்கள். போட்டி, பொறாமையின்றி பிறருக்கு உதவவும் செய்வார்கள்.

    குழந்தைகளுக்கு இயல்பாகவே எந்தக் காரியத்திலும் நீண்ட காலம் கவனம் செலுத்திக்கொண்டு இருக்க முடியாது. இது புரியாது, அவர்களைத் திட்டி, அடித்தால் அது கொடுமைதான்.

    `ஆறு வயதுக் குழந்தைகளை மேடையில் ஆடப் பழக்கும்போது, தலையை அப்படியும் இப்படியும் திருப்புகிறார்களே!’ என்று அயரும் நடன ஆசிரியைகளுக்கு ஓர் ஆலோசனை: வீட்டில் சிறுமி ஆடும்போது, அவளுக்குப் பிடித்த பொம்மை ஒன்றைத் தாயின் கையில் கொடுத்து, `பொம்மையைப் பார்த்துக்கொண்டு ஆடு!’ என்று பழக்க வேண்டும். தாய் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தாலும், பொம்மையிலேயே கருத்தாக இருக்கும் சிறுமி தலையைத் திருப்ப மாட்டாள். எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்தாலும், பார்வை என்னவோ முன்னோக்கியே இருக்கும்.

    நான் ஆரம்பப் பள்ளியில் படித்தபோது, குடுமி வைத்த ஆசிரியர்கள் மட்டும்தான். எல்லாரும் வகுப்பிலிருந்த பையன்களை அடிப்பார்கள் — கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லத் தெரியாத குற்றத்துக்காக. இல்லையேல், தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள்.

    வாடிக்கையாக, என்னைப்போல் ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதில் கவனமின்றி எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களை நாற்காலியின்மேல் நிற்கச் சொல்வார் ஓர் ஆசிரியர். அவ்வளவுதான். அடி கிடையாது. (எங்கள் வகுப்பில் நான் ஒருத்திதான் அப்படி நின்றதாக நினைவு).

    எனக்கு இம்முறை நன்றாகப் பழகிப்போய், என் பெயரை ஆசிரியர் அழைக்க வேண்டியதுதான், நானே நாற்காலியின்மேல் ஏறி நின்றுவிடுவேன் — அவர் வேறு எதற்காகக் கூப்பிட்டிருந்தாலும். எல்லாரையும்விட உயரமாக இருக்கிறோமே என்று பெருமையாக இருக்கும். அதோடு, இனி ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனிக்க வேண்டாமே!

    சும்மா நிற்க முடியுமா? என் கண்கள் அங்கும் இங்குமாக அலையும். என்னைப்போல் `உருப்படாத,’ குழந்தைகளுக்காக மேலே பார்க்கும் இடங்களில் எல்லாம் கூட்டல், பெருக்கல் கணக்கு, பழமொழி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். அதனால்தானோ, என்னவோ, தமிழ், கணக்கு இரண்டும் எனக்கு மிகவும் கைவந்த பாடங்களாக ஆயின!

    சிறு வயதாக இருந்தால் அப்படித்தான் எல்லாரும் திட்டுவார்கள் போலிருக்கிறது என்றெண்ணியதால், இம்மாதிரியான தண்டனை எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வயது சற்று கூடியதும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் கட்டொழுங்கு தானே வந்தது. அப்போது நான் என் இடைநிலைப்பள்ளி ஆசிரியைகளைப் போய் பார்த்தபோது, ஓயாமல் என்னை `ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை’ என்று நிந்தித்த ஆசிரியைகள் இருவர், `நீ நல்லா முன்னுக்கு வருவேன்னு அப்பவே தெரியும்,’ என்றார்கள்!

    பாடங்களை மறந்த குற்றத்துக்காக தோப்புக்கரணம் போட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நன்மைதான் செய்திருக்கிறார்கள். அந்த `தண்டனை’ மூளையிலுள்ள நரம்புகளை வலுப்படுத்துவதால், இப்போது மேல் நாடுகளில் ஒரு வித யோகா என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறதே!
    அடி வாங்கிய மாணவர்கள்தாம், பாவம், பரீட்சை சமயத்தில் படித்ததையெல்லாம் மறந்து விடுவார்கள். அதற்காக இன்னும் அடி. (கடந்ததை மறக்க முடியாது, கல்லூரி நாட்களில்கூட, `பரீட்சை’ என்றாலே வயிற்றுப்போக்கு ஏற்பட்டுத் துடித்த சிலரை நான் அறிவேன்).

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனையைவிடக் கொடுமையானது, `படி, படி’ என்று உயிரை வாங்கும் பெற்றோரைப் பெற்றிருப்பது.

    ஒரு தாய் `பெரிய பரீட்சை’ என்று நடுங்கி, இளைத்துப்போன மகளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கேட்டாள்: `படிக்காமலிருந்தால் என்ன ஆகும்?’
    `பரீட்சையில் தேர்ச்சி பெற முடியாது’.

    `படித்தால்?’

    `பாஸ் பண்ணலாம்!’

    `அது போதுமே!’

    இப்படி வளர்க்கப்பட்ட குழந்தை இயல்பாகவே கடினமாக உழைக்கும் — படபடப்பு இல்லாது. எத்தனை வயதானாலும் படிப்பதிலுள்ள ஆர்வமும் குன்றாது.

    தொடருவோம்

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (77)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14054805_1073254236062108_614667592_n

    27182698@N05_rராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • கீழாநெல்லியின் மடல்

    –பொன். இராம்

    மனம் தெளிவுபட
    மருந்துக் கவிதையானாய்!
    பாழ்பட்ட திரையுலகைப்
    பண்படுத்த வேரானாய்!
    என்னை மட்டும்
    ஏன் பயன்படுத்த
    மறந்தாய் மானிடனே?

    சிற்பி வடித்த சிலைகளாய்
    மனித உள்ளங்களைச்
    சீர்திருத்திய நீ
    உடல்நலம் காக்க
    என்னை மட்டும்
    ஏன் மறந்தாய்?

    முத்தான கவிதைகளை
    முத்துக்குமரனாய்
    முருகவேள் தந்த
    தமிழை வளர்த்த
    உன் புகழைத்
    தீந்தமிழ்க்
    கவிதை நெஞ்சங்கள்
    என்றும் பாடும்!

    பணம் தர மறுத்த
    வெற்று உயிர்க் காசோலைகள்
    அல்ல நாங்கள்!
    அடுத்த பிறவி
    அருமையாய் உனக்கு
    அமைந்திட்டால்
    நல்ல உள்ளங்களுக்கு
    மட்டுமே பா வடிக்க
    வேண்டுகிறேன்!

    சும்மா வரவில்லை சுதந்திரம்
    என்பதுபோல
    சும்மா வராது
    தமிழ்க்கவிதை என்றே
    விதி வகுக்க வருவாயா!
    மூலிகைச் செடியான
    என் பெருமையும்
    அடுத்த பிறவியில்
    நீ பாட
    குறுஞ்செடியின்
    தாழ்மையான விண்ணப்பம்!

    என்னை வளர்க்கத்
    தண்ணீரும் பரிதி தயவும்
    போதுமே!
    உயிர் மருந்தாய்
    உச்சந்தொட்ட
    பாவினைக் காணக்
    கண்ணீருடன் காத்திருக்கும்
    கீழாநெல்லி மூலிகை!!

     

     

    Share
  • தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிரிவாக்கமும் சுற்றுச்சூழல் சீர்கேடும்

    –ரா. மூர்த்தி

     

          தமிழர்கள் நிலங்களை ‘நிலம், ‘திணை’ சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு இயற்கையும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலுமே காரணமாக அமைந்தது. இதனைத் தொல்காப்பியம் ’ஐவகை சார்ந்த திணைக்கோட்பாடு’ என்கிறது. தொல்தமிழர்கள் இனக்குழுவாழ்க்கை, கூட்டுவாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, சமூக வாழ்க்கை வாழ்ந்ததற்கான பண்பாட்டு இறுமையாக அடையாளமாகவும் இனங்கானுகிறது. தமிழ்ச்சமுதாயம் நிலப்பின்னணியில் குறிஞ்சி – மலை, முல்லை – காடு, மருதம் – வயல், நெய்தல் – கடல் என வகுப்பட்ட நிலையில், அந்தந்த நிலத்திற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் இவைகளையும் சுற்றுச்சூழல் தகவமைப்பிற்கு ஏற்பவே இனங்காணப்பட்டுள்ளது.

          முதற்பொருள் முழுக்க முழுக்க இயற்கைச் சூழலினை உள்வாங்கிக்கொண்டு நிலம் – பொழுது என வரையறைப்படுத்தி அதற்குள் நிலங்களை நானிலமாக பிரித்தாள்வதைப் பேசுகிறது. இதில் சில மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்திருந்தன. அதிலே இணைக்கப்பட்டதுதான் பாலை என்றொரு வறண்ட நிலம். இவற்றிற்கென்று தனிநிலம் இல்லையாயினும் காலம் கருத்தில் கொள்ளப்பட்டது.

          இந்நிலங்களில் வாழ்ந்த வாழ்வு நிலைத்திருக்கவில்லை. இடமாற்றம் அடிக்கடி ஏற்பட்டது. அதே நேரத்தில் இயற்கைப்பேரிடர்கள் ஏற்படவும் செய்தன. நிலத்திற்கு ஏற்ப மலை, காடு, வயல், கடல், வறட்சி (பாலை) என இயற்கையினையும் சுற்றுச்சூழலையும் கொண்டு உருவாக்கியதோடு மக்களும் (கருப்பொருள்) அவர்களுக்கான துணைவினைப்பொருட்கள் தேவைப்படுதை அறிந்து அந்தந்த நிலங்களில் கிடைக்கும் துணைவினைகளைக் கருப்பொருளாக உருவாக்கி, பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி வாழத்தொங்கினர்.

          திணைச்சமூக வாழ்வில் இயற்கையே நமக்கு முன்னோடியாகத் திகழ்வதை அறிந்துகொள்ளலாம். ஏனென்றால் மனித வாழ்க்கையானது இயற்கையான மலை, காடு இவைகளிலிருந்தே நாடோடியாகத் தொடக்கத்தில் தொடங்குகிறது. அதனால்தான் குறிஞ்சியும் முல்லையும் பூக்களின் பெயரைக்கொண்டு – இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தொல்காப்பியர் நிலங்களை பிரித்தாண்டுள்ளனர். இதிலிருந்து வளர்ச்சி பெறும்போது மற்றவைகள் விரிவு பெறுகின்றன.

          பழந்தமிழகத்தில் நிலத்தின் விரிவாக்கத்திற்கு நீரின் பயன்பாடு முதன்மையாயிற்று. நிலத்தின் மீதான உரிமையே நீரின் மீதான உரிமையினையும் இயல்பாகவே நிலவுடைமையாளர்களுக்கு பெற்றுத்தந்துள்ளது. தொடக்க காலங்களில் நீர் உரிமையும், நீரினைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும் ஊராரிடமுமே இருந்துள்ளன. நீர் மேலாண்மையில் பாசான விவசாயமே முதன்மைப்படுத்தப் பட்டது. அதில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் விதந்து பேசப்பட்டுள்ளன. அவற்றுள் நெல் ஆட்சியாளர்களை நீர்ப்பாசன வேளாண்மைக்கு ஈர்த்திருக்கும். நெல்லிற்கு இணையாக உப்பும் மதிக்கப்பட்டுள்ளது. நெய்தல் நிலத்தில் கடல் நீரினைப் பாத்திகட்டி உப்பு விளைவிக்கப்பட்டுள்ளது. மாறாக மருதநிலத்தில் மிருதுவான நன்னீர் கொண்டு பாத்திகட்டி நெல் பயிரிடப்பட்டது.  மருதம் நெய்தல் இவ்விரு நிலங்களின் அமைப்பானது வெகுதொலைவில் இருந்ததில்லை. அருகருகே இருக்கவும் செய்துள்ளது; இன்றும் இருந்து வருகிறது.

          ஒரு களத்தில் உழவர்கள் நெல்தூற்றியபோது பறந்துசென்ற துரும்புகள் அருகேயுள்ள உப்பளத்தில் பாத்திகளில் படர்ந்ததால் உப்பளப் பாத்திகளிலுள்ள வெண்மையான உப்பு கெட்டது. இதனால், ஆத்திரமுற்ற பரதவர்கள் உழவர்களோடு சண்டையிட்டு இரு தரப்பாரும் சேறுகளை வாரியடித்துக் கொண்டனர். இத்தகைய நிகழ்வு மருதநில நரைமுது பெரியோர்கள் முன்னிலையில் சரிசெய்யப்பட்டு மருத நிலத்தில் கிடைக்கும் கள் பரதவர்களுக்கும் உழவர்களுக்கும் கொடுக்கப்பட்டு வழக்கு முடித்து வைத்து அணுப்பட்டுள்ளதை

    “தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
     நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்புஅழித்து
    கள்ஆர் களமர் பகடுதலை மாற்றி
    கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
    காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்
    இருநீர்ப் பரப்பின் பனிந்துறைப் பரதவர்
    தீம்பொழி வெள்ளுப்பு சிதைதலின் சினைஇ
    கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
    இருஞ்சோற்று அள்ளல் எறிசெருக் கண்டு
    நரைமூதாளர் கைபிணி விடுத்து
    நனைமுதிர் தேறல் நுழையர்க்கு ஈயும்” (அகம்.366)

          என்ற பாடல் வரிமூலம் அறியமுடிகிறது. இங்கு நிலத்தின் விரிவாக்கம் பரந்து கிடப்பினும் பரதவர், உழவர் மத்தியில் நிலத்தைத் தன்வயப்படுத்தி தொழில்செய்யும் ஆக்கிரமிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  நிலத்திற்கான உரிமை தனிமனித வயத்தில் தற்காத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நிலத்தின் பரப்பளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே இனங்காணப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலை ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்த தமிழர்களுக்கு நிலத்தின் ஈர்ப்பு தொழிலாக செயல்பட்டு வந்தாலும் உணவு, பொருளீட்டல் பெருக்குதல் நிலையிலே முதன்மையாயின.

          உணவு, பொருளீட்டல் நிலைக்கு மாறிய மனிதனுக்கு இருப்பிடத்தின் நிரந்தரத் தேவையை அமைக்கும் தன்முனைப்பிலும் இரங்க வேண்டிய நிலைக்கும் மாற்றமுற்றான். இதனால் தாவரங்கள், விலங்குள் ஆகியவைகளை தனிமைப்படுத்தியும் அழித்தாண்டும் அழிவுகுள்ளாக்கியும் வாழச் செய்தான். விலங்குகள், தாவரங்கள் தன்வயப்படுத்தல் குறிஞ்சி, முல்லை, பாலை ஆகிய நிலங்களிலும் கடல்வாழ் உயிரினங்கள் பயன்படுத்துதல் நெய்தல் நிலங்களில் நிகழ்ந்துள்ளன.

    நிலஅழிவும் விரிவாக்கமும்

          நிலஅழிவு தொடக்க காலத்தில் மலைகளிலே தொடக்கம் கொள்கிறது. இதில் மனிதன் மூன்று நிலைகளில் முன்னோடியாகத் திகழ்க்கிறான்.

    1. மனிதன் – விலங்குகளை அழித்தல்
    2. மனிதன் – தாவரங்களை அழித்தல்
    3. மனிதன் – நிலங்களை அழித்தல்.
    4. மனிதன் – மனிதனை அழித்தல்.

    இம்மூன்று நிலைகளிலும் மனிதன் முன்னோடியாக இருந்தான். அதற்குமுன் நாடோடியாக விலங்குகளை மட்டும் அழிவுகுள்ளாக்கும் செயலினைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தான். உணவின் தேவை அதிகரிப்பு, இனக்குழு பெருக்கம், வாரிசுஏய்ப்பு போன்ற காரணங்களினால் மற்றவைகளின் மீதும் அவனுடைய நாட்டம் இறங்கத்தொடங்கிற்று.

          இருப்பினும் சங்க காலத்தில் நிலஅழிவு, தொழில் அடிப்படையில் தினைக்காடுகளிலே கானக்குறவர், குன்றக்குறவர், புனக்குறவர், ஏனல் காவலர், கானவன், நாடன், மலைக்குறவர், குடிக்குறவர், புனவன், சிறுகுடிக் குறவன் இவர்களின் முனைப்பிலே தொடக்கம் கொள்கிறது. இவர்கள் செய்த வேளாண்மை முறையை உலகளாவிய நிலையில் இனவரைவியலார்கள் பலவாறு பெயர்கள் கூறி அழைக்கின்றனர். ‘காட்டெரிப்பு வேளாண்மை (Slash-and – burn cultivation), இடம்பெயரும் வேளாண்மை’ (fallow peirod, shifting cultivation), ‘சுவிடன் வேளாண்மை’ (Swidden cultivation),  ‘மில்பா வேளாண்மை’ (Milpa agriculture), ‘ரோசா வேளாண்மை’ (roza farming) எனப் பலவாறு கூறப்படும் .(”ப. 118 தமிழ்பழங்குடிகள்). இந்தியாவில் பழங்காலம் முதல் பழங்குடிகள் தொடர்ந்து காட்டெரிப்பு வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர்.

          சங்க இலக்கியத்தில் வேட்டையாடி உணவு சேகரிக்கும்முறை (விலங்குகள் அழித்தல்), குறித்தும், காட்டெரிப்பு வேளாண்மை முறை (தாவரங்கள் அழித்தல்) குறித்தும் பல்வேறு பதிவுகள் காணக்கிடைக்கின்றன. அதில் குறிஞ்சி நிலமே முன்னின்று செயல்பட்டது. குறிஞ்சிநில மலைகளிலுள்ள காடுகளை அழித்து அவ்விடத்தில் புனங்களை உருவாக்கியதை,

    “யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
     கரும்பு மருள் முதல பைந்தாட் செந்தினை
    மடப்பிடித் தடக்கை அன்ன பால்வார்ப்பு”  (குறுந்.குறி.198:1-3) 

    “இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
     கருங் காற் செந் தினை கடியுமுண்டன”
    (நற்.குறி.122:1-2) 

    “மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
     துளி பதம் பெற்ற கான்உழு குறவர்
     சில வித்து அகல இட்டென பல விளைந்து” (நற்.குறி.209:1-3) 

    கூறுகிறது. இங்கு மலைகளிலுள்ள யாமரங்களை வெட்டியளித்து அவ்விடத்தில் மழைநீர் தங்கி இருக்கும் பொருட்டு நிலத்தை அகலமாக அமைத்து உழுது கரும்பு போன்ற அடிப்பகுதிகளையுடைய தினையினை விதைத்து வளர்த்துள்ளனர். குறவர்கள் மரங்களை வெட்டி அழித்ததுடன் அப்புனத்தை களைக்கொட்டினால் நன்றாகக் கிளறி கருந்தினைகளை விதைத்துள்ளனர். இதனை,

    “மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
     பிறங்கு குரல் இறடி காக்கும் புறம்” (குறுந்.குறி.214:1-2) 

          இங்கு கானவர்கள் தினைப்புனங்களை அழித்துத் தினைக்காடுகளை உருவாக்குவதற்கு ‘துளா’; எனும் இரும்பாலான கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். பாரியின் மலைநாட்டிலும் வேங்கை மரங்களுக்கிடையே இருந்த மேடுகளை மழைபெய்யும் காலத்தில் நன்றாக கலப்பையில் பொருத்தப்பட்ட பூழி மழுங்குமளவிற்கு நன்றாக உழுதுத் தினை விவசாயம் மேற்கொண்டுள்ளனர்.

    “வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
     கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து
     பூழி மயங்கப் பல உழுது” (புறம்.120:1-3) 

          முல்லை நிலத்தில் கார்காலத்தில் பெய்த மழையால் செம்மண் நிலம் ஈரம் மிகுந்து காணப்பட்டது. அதில் வினைஞர் (கொல்லை உழவர்) ஏரின் உதவியால் செம்மண் நிலத்தை உழுது அதில் வரகினை விதைத்தனர்.

    “பேர்உறை தலைஇய பெரும்புலர் வைகறை
     ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
     புறம்மாறு பெற்ற பூவல் ஈரத்து
     ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
     வித்திய மருங்கின் விதைபல நாறி” (அகம்.முல்.194:1-5) 

    இவ்வாறு செய்த விவசாயத்திலிருந்து படிப்படியாக மாறி மருத நிலத்தில் நிலமும் சமதளப்பரப்புடன் திகழ்ந்ததால் உழவர்கள் தொடர் விவசாயம் மேற்கொண்டனர். நெல்லறுத்து நீக்கப்பெற்ற வயலில் மீண்டும் ஏர்கொண்டு உழுது அதில் விதைகளை விதைத்து விவசாயம் மேற்கொண்டனர்.

    “அரிகால் மாறிய அம்கண் அகல் வயல்
     மறு கால் உழுத ஈரச் செறுவின்
     வித்தொடு சென்ற வட்டி பற்பல” (நற்.மரு.210:1-3) 

          மருத நிலத்தில் நிலத்தை அழிவுக்குள்ளாக்கும் முனைப்பில் உழவர்கள் செயல்படவில்லை. மாறாக நிலத்தில் தொடர் விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணப்போக்கினையே கொண்டிருந்தது தெரிய வருகிறது. ஒரு வகையில் மனிதர்கள் நிலங்களைத் தன்வயப்படுத்தி உழுது செய்த விவசாயம் போன்று உழாமலேயும் விவசாயம் செய்துள்ளனர்.

          மலைகளில் கார்காலத்தில் பெய்யும் மழையால் காந்தள் செடிகள் கிழங்கு உருப்பெறுமளவிற்கு வளர்ந்து நிற்கும். அதனை பன்றிகள் தன்னினத்துடன் சேர்ந்து சென்று தன்னுடைய கூர்மையான மூக்கினால் நன்றாக கிளறி அதன் கிழங்குகளை உண்டு செல்லும். அவ்விடத்தில் குறவர்கள் உழாமலே சிறுதினைகளை விதைத்து விவசாயம் மேற்கொண்டனர்.

    “கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தட்
     கொழுங் கிழங்கு மிளரக் கிண்டி கிளையொடு
    கடுங் கண் கேழல் உழுத பூழி
    நல் நாள் வரு பதம் நோக்கி குறவர்
    உழாஅது வித்திய பரூஉக் குரற் சிறு தினை” (புறம்.168:2;-5) 

    குறவர்கள் செய்த தினை விவசாயம்போன்று பெருங்கடலில் சென்று தனது வாழ்க்கையை நிகழ்த்தக்கூடிய பரதவர்களும் பெரிய உப்பங்கழிகளின் வயலில் உப்பை விளைவிக்காமல் வெண்ணிறக் கல் உப்பினை உழாமலே விளைவிக்கவும் செய்துள்ளனர்.

    “பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
    இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
    வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி” (அகம்.நெய்.140:1-3). 

          இங்கு நிலத்தின் தன்மை மலையாக இல்லாமல் கடல்புறமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குறவர்கள் செய்த உழாத சிறுதினை விவசாயத்தைக் கருத்தில் கொண்டே பரதவர்கள் கடல் நீரினைப் பாத்திகட்டி உப்பு விளைவிக்கும் தொழிலை மேற்கொண்டிருக்க வேண்டும். இங்கு இரு பண்பாட்டிற்கான தொழில், தொழில் பொருட்கள் (குறிஞ்சி – தினை, சிறுதினை – நெய்தல் – உப்பு) வௌவ்வேறாக இருப்பினும் மக்களுக்குள் ஓர் ஒத்திசைவு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

    குடிபெயர்வு

          ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் பூர்வக் குடிகளைத் தவிர மற்ற மக்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளவில்லை. மாற்று இடங்களை நோக்கிக் குடிபெயரவும் செய்துள்ளனர். இக்குடிபெயர்வு தொழிலுக்காக நிகழ்ந்துள்ளது. உணவுக்காக இருந்துள்ளது. பூர்வக்குடிகளின் தாட்டிமை தொடர்நிகழ்வாக இருக்கும்போது இடம்பெயர்வுகான தன்மையாகவும் இருந்துள்ளது. பாலைநிலம் இயல்பாகவே வறண்டு காணப்படும். அங்கு வாழக்கூடிய மறவர்களின் தொழில் வழிப்பறி,  ஆட்கொலை,  உடைமைப்பொருட்களை கவர்தல் போன்றவே. அத்தகைய நிலையில் வழிச்செல்வோர் மறவர்களின் வழிப்பறிக்குப் பயந்தும் நிலத்தின் கொடும் வேனிலுக்குப் பயந்தும் மாற்று இடங்களைத் தேடி குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.

    “ஆறுகொல் வம்பலர் தொலைய மாறுநின்று
     கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்”
    (குறுந்.பாலை.331:2-3)

    “கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
     இடுமுடை மருங்கில்
    போரிய முது பாறு
    இறகு புடைத்து இற்ற பறைப் புள் தூவி
    சேங்கனைச் செறிந்த வன்கண் ஆடவர்” (நற்.பாலை.229:2-6, 352:1-2) 

          அதே போன்று பாண்குடிகளின் வாழ்வும் நாடோடி வாழ்வாக தொடர்ந்திருந்தது. இவ்வாழ்வு உணவிற்காகவும், அரசர்கள் வழிப்படுத்துவதற்காகவுமே இருந்தன. பாண் குடிகளின் வாழ்வு வாழ்க்கையின் காலகட்டத்தைப் பார்க்கும்போது அரசு உருவாக்கம் நிலவிய காலமாக மாறியுள்ளது. இனக்குழு வாழ்வு அழிந்து அரசுடைமையாக்கத்திற்கு மாறிய வாழ்வாக தென்படுகிறது. இங்கு நிலத்தின் ஆளுமை அனைத்தும் பெருமன்னர்கள்,  குறுநில மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்டு இருந்து வந்தது. இங்கு நிலம் ஒரே மன்னரின் கீழ் நிரந்தரப்பட்டிருக்கவில்லை. தொடர்மாற்றமாக இருந்துள்ளது. இதனால் மன்னர்கள் மக்களை வழிப்படுத்துவதுடன் அவர்களைத் தன்னுடைய கட்டுபாட்டிற்குள் அடக்கும் நிலைக்கும் மாறிவிடுகின்றனர். அத்தோடு உயிர்க் காரணிகளை அழிக்கும் தன்மைக்கு மாறியவர்களாக மாறவும் செய்துள்ளனர்.

    உயிர்க்காரணிகளை அழிப்பவைகளை கிப்போ ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.

    1. வாழிடம் அழித்தல் (H – Habitat destruction)
    2. அறிமுகப்படுத்தும் சிற்றினங்கள் (I – Invasive Species)
    3. மாசுபாடு (P – Pollution)
    4. மனித மக்கள்தொகை அதிகரிப்பு (P – Human over Population)
    5. அதிகமான அறுவடை (O – Over harvesting)

    என்று கூறுகிறார். மேற்கண்ட ஐந்து கருத்தாக்கங்களும் மருத நிலத்திற்குப் பொருந்தியுள்ளது. அகவாழ்விலிருந்து புறவாழ்க்கைக்கு (தொல்காப்பிய நிலையில் புறத்திணைக்கு) மாறிய வாழ்வில் இவை ஐந்தும் வெளிப்பட்டு நிற்கிறது.

          அகத்திணைகளைத் திணை வாழ்க்கையாக உருவகித்துக்கொண்டுள்ள நாம் அதற்கு மாறாகப் புறத்திணை வாழ்க்கையை வீரநிலை வாழ்க்கையாக மாற்றமுறச் செய்து கொண்டுள்ளோம். இதில் நிலப்பறிப்பு, ஆக்கிரமிப்பு, கவர்தல், மீட்டல்,  படையெடுத்தல்,  கைக்கொள்ளுதல் என நகரும் சூழலில் அரசுருவாக்கத்தில் உருவாகிய கோட்டைக் கொத்தளங்கள்,  காவல் மரங்கள்,  அடக்குமுறை,  வெற்றிசூடல் ஆகியன தொடர்ந்து நிகழ்ந்தன. இதில் காவல் மரங்கள், தெய்வம் குடிகொள் இடங்கள், அரண்மனைகள் அழிவுக்குள்ளாகின. அடக்குதல், கவர்தல்,  அழிவுறுதல் என்ற சூழலில் நகர்ந்து வந்துள்ளது.

    அகம் புறம் உட்பிரிவுகள் கொண்டு பார்க்கும்போது வெளிப்படுவனவாக உள்ளவைகள்:

    கைக்கிளை  – பாடாண்  – கடவுள் பரவல்:  தெய்வக்காதல்,  வருணனை, தெய்வ  மனிதக் காதல், இளம் பருவக்காதல், பாசம், குடும்ப வருணனை,  தலைவன் துதி, ஆற்றுப்படை,  வேள்விப்பாடல்கள், கடவுள்அருள் கூறி வாழ்த்தல்,  அரசனிடம் மயங்கிய மகளிர் பாடல், பள்ளியெழுச்சிப்பாடல்,  அரசரின் நீராடல், பரிசு ஏற்றல், சகுன – நிமித்தங்கள்.

    முல்லை   – வஞ்சி    – ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர்:  படையின் ஆரவாரம், தீயிடல், வீரப் பெருமை, ஈகை, பகை, அழிப்பு, பரிசுபெறல், தனியொருவன் படைபொருதல்,  பெருஞ்சோற்று விழா, வென்றோன் புகழ், தோற்றோன் அழிவு, வெற்றிப் பாடல்,  காயம்பட்டோருக்கு உதவி.

    குறிஞ்சி – வெட்சி – ஆநிரை கவர்தல்:     வீரக் குடும்பப் பெருமை கூறல், கொற்றவை வணக்கம், வெறியாடல், அடையாளப் பூ வேம்பு, பனை, ஆத்தி சூடல், வள்ளிக்கூத்து, நிமித்தம் காணல்,  பகைவரை ஓட்டல், ஆமீட்டல், சூளுரை, படையை எதிர்த்தல், வாள்போரில் மரணம், வீரசொர்க்கம், நடுகல்

    பாலை – வாகை -திறன்/ஆற்றல் புகழ்தல்: நடுகல் வரவேற்பு, நடுகல் நீராடல், கல்நடல்,  கல் வழிபாடு, வீரனைக் கல்லில் ஏற்றல் – போர்ப்படை பாசறை, களவழிப் பாட்டு, குரவைக் கூத்து, வேலின் புகழ், வீரத்தியாகம், உடன்படிக்கை,  புகழ்பாடல்,  அரியணை ஏற்றம்,  அவையோர் பாராட்டு, ஈகைக் குணம், மன்னிப்பளித்தல்,  ஒழுக்க மரபு படியாக வாழ்தல்,  செல்வ வளம் மிக்க வாழ்வு, காமம் கைவிடல்,  பிராமண அரச வணிக ஒழுக்கங்கள்,  பணிகள்,  அறிவுத்தேட்டம்,  தவமியற்றல்,  வீரமியற்றல்.

    மருதம் – உழிஞை – மதில்முற்றுகை/ கைப்பற்றுதல்:   ஆக்கிரமிப்பைத் தீர்மானித்தல், படைவகுப்பு, மதில் முற்றுகை, தனியொருவனாகிப் பகையுடன் மோதல், நல்ல புறப்பாடு, மதிலில் ஏணி வைத்து ஏறுதல், மதில் கைப்பற்றுதல், மதிலின் அகத்து இருந்த மன்னன் வீழ்ச்சி, வெளியே இருந்தவனின் தோல்வி, கிடங்குப்போர்,  தெருப்போர், வெற்றி நீராடல்,  தோற்றோர் குல அழிவு.

    நெய்தல் – தும்பை – பகை அழிப்பு தலையில்லா உடலின் துள்ளல்: படைமோதல், யானைப்போர், குதிரைப்போர், பகைவர் அழிப்பு, இருவரும் இறத்தல், படை ஓட்டம்/ புறமுதுகிடல், மற்போர், வெற்றி நடனம், வீரமரணம், பாய்ந்துசென்று பகைவனைத் தாக்குதல்.

    பெருந்திணை – காஞ்சி – உலக நிலையாமை கூறல்:   காலனின் தண்டனை, நல்வழிபடுத்தல், காயவைத்துப் பிளந்து பெருக்கி இறத்தல்,  காயம்பட்ட வீரனைப் பேய்கள் சூழ்ந்து காத்தல், வீரனைப் புகழ்ந்து வருந்திப்பாடல்,  உறுதிமொழி,  பிணம் காத்தல்,  கணவனுடன் மனைவியும் இறத்தல்.

    முடிவுகள்

          அகம் மற்றும் புறவாழ்க்கை நிலையை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இயங்கி வந்த தமிழ்ச் சமூகம் இன்றைய நிலையில் ஐவகை நிலங்களைக் கடந்து நகரம் நகரம் சார்ந்த வாழ்வாக மாற்றம் பெற்றுவருகிறது. இதனால் பூகோளத்திலுள்ள இயற்கை வாழிடங்கள் அனைத்தும் அழிவுக்குள்ளாவதுடன், நீர்நிலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, புதிய இருப்பிடங்கள் உருப்பெறுகின்றன. மேலும், விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு மொத்தமாகவும், தவணை முறையில் நில மனைகள் உருவாகி வருகின்றன. அத்தோடு விலங்குகள் உலாவி வந்த மலை, காடு சார்ந்த இடங்கள் அனைத்தும் வழித்தடங்களாக மாறுவதுடன், அவை மனித இருப்பிடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உயிர்ப் பாதுகாப்பு இல்லாநிலை ஏற்படுகிறது. இதில் அதிகம் விலங்குகளே அழிவுக்குள்ளாகிறது. இயற்கையின் தட்பவெப்ப மாற்றமும் தொடர்ந்து மாறிப் பருவமழை, காலமாற்றம் எனத் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது.

    பார்வை நூல்கள்:

    1. பக்தவத்சல பாரதி – தமிழகப் பழங்குடிகள்
    2. ரா. மூர்த்தி – பயன்பாட்டுப் பார்வையில் தமிழகம் (கட்டுரை)
    3. ஐயப்பப் பணிக்கர் – இந்தியக் கோட்பாடுகள் சூழல் பொருத்தம்

    ****

    –ரா. மூர்த்தி
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் -641046
    ramvini2009@gmail.com

     

     

    Share
  • நாம் நினைப்போம்! 

    எம். ஜெயராமசர்மாமெல்பேண், அவுஸ்திரேலியா

    உள்ளத்து உணர்வுகளை உலகினுக்கு எடுத்துரைக்கும்
    கள்ளமில்லா மனமுடயார் கவிதைகள்தாம்
    வாழ்கிறது
    வள்ளுவரின் கவிதையின்று வையகத்தில்
    நிலைப்பதற்குக் கள்ளமில்லா அவர்மனமே காரணமாய் ஆகியதே!

    எல்லோரும் வள்ளுவராய் இருந்துவிட முடிவதில்லை
    என்றாலும் இயன்றவரை ஏற்றதையே எடுத்துரைப்பார்
    நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நாளுமவர் தந்துவிடின்
    நாட்டிலுள்ளார் மனங்களிலே நன்மதிப்பைப் பெற்றிடுவார்!

    சங்ககாலக் கவிதையெலாம் நாம்படித்துப் பார்த்துவிடின்
    இங்கிதமாய்ப் பலகருக்கள் இருப்பதையும் உணர்ந்திடலாம்
    எங்களது தமிழ்மொழியின் மங்காத செல்வங்களாய்
    இருக்குமந்த அருமையினை எல்லோரும் அறிந்திடலாம்!

    சொற்சுருக்கம் சுவைநுணுக்கம் அத்தனையும்
    அரவணைத்துச் சுந்தரத்தமிழ் கொண்டு செப்பிநின்ற கவிதையது
    இப்பொழுது அவையாவும் எல்லோரும் படிக்காமல்
    எம்மேக்கும் பீயேக்கும் எடுக்கின்றார் படிப்பதற்கே!

    பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற பாடமாய்ப்
    பண்டிதர்க்கும் புலவர்க்கும் பரீட்சிக்கும் புத்தகமாய்ப் பண்டைத் தமிழிலக்கியங்கள் இருக்கின்ற
    பாங்கினையே
    பார்க்கின்றோம் எனநினைக்கில் பரிதாபம் எழுகிறது!

    சங்கத் தமிழ்படித்தால் சரியான கவிதைவரும்
    பொங்கிவரும் தமிழுணர்வைப் புதுவழியில் செலுத்திடலாம்
    கவிதையெனும் பெயர்சூடி வருகின்ற கவிதையெலாம்
    காலமென்னும் வரலாற்றில் காணாமல் போய்விடுமே!சாகாத இலக்கியங்கள் நாம்படைக்கத் தேவையில்லை

    மனம்நோவாத இலக்கியங்கள் படைத்துவிட
    நினைத்திடுவோம்
    வாழ்நாளை வளமாக்கும் வகையிலே படைத்துவிடின்
    வரவேற்று அனைவருமே வாரியே அணைத்திடுவார்!

    புழுதியிலே புரளுகின்ற இலக்கியங்கள் புறந்தள்ளிப்
    பழுதில்லா வகையான இலக்கியங்கள் படைத்தளிப்போம்
    நிலவுலகில் யாவருமே நினைந்துநிற்கும் வகையினிலே
    நலமுடைய இலக்கியங்கள் படைதளிக்க
    நாம் நினைப்போம்!

     

     

    Share
  • சுகவனம்-1

    இன்னம்பூரான்
    ‘சுகவனம்’ என்ற இந்த தொடர் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று துவக்கப்பட்டதின் நீடிப்பு. உரியகாலம் இப்போது தான் வந்ததோ என்னவோ? சுகவனம் இயற்கை வளம் பொருந்திய கானகம் என்க. அது அவரவர் ஆரோக்கியத்தை அவரவரே கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தின் உருவகம். அந்த விழிப்புணர்ச்சிக்கு அரசும், சமுதாயமும், மருத்துவ உலகமும் கைகொடுக்கவேண்டும். அவ்வாறு அவர்கள் இயங்காவிடின் அவர்களை நாம் வற்புறுத்தி, நல்வழிக்குக் கொணரவேண்டும்.
    logo
    சான்றாக, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் அகாலமரணம் கலையுலகுக்கும், கவிதையுலகுக்கும் மாபெரும் இழப்பு. மக்களின் சுகவனம் பற்றி நமது நாட்டில் அரசின்/ சமுதாயத்தின் கோட்பாடுகள் நோயாளியை வியாதியிலிருந்து மீட்க, அவரை முன்னிறுத்தி செயல்படவேண்டும். காமாலை நோயால் அவர் இறந்ததை எளிதில் தவிர்த்திருக்க முடியும் என்பதால், சோகமும் ஆத்திரமும் எனக்கு ஏற்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் டாக்டர் பார்த்தசாரதி என்ற மயக்கமருந்து கொடுக்கும் இளவயது மருத்துவர் காமாலையால் இறந்தார். அது அறுவை சிகிச்சை மையத்தில், சிக்கனம் கருதியோ, அக்கரையில்லாததாலோ, டாக்டர்களுக்கு பாதுகாப்பு வளையம் சரியாக அமையவில்லை. அவர் பலி கொடுக்கப்பட்டார். பல வருடங்களுக்கு முன், சென்னையில் ஒரு பிரபல ஆஸ்பத்திரியின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் கொடுத்த சுதந்திரத்தை பிரயோகித்து ஒரு தணிக்கை செய்து நான் அமைத்த ஒரு மூவர் குழு பல பரிந்துரைகளை அளித்தது. அவற்றை, உரிய நேரத்தில் கூறுகிறேன். ஒன்று மட்டும் இப்போது. அறுவை சிகிச்சை டாக்டர்களின் உயிரும் வெல்லம் தான். அவர்கள் ஒரு திரவத்தை அள்ளி, அள்ளி பூசிக்கொண்டு தான் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தம் செய்து கொள்வார்கள். அந்த ஆஸ்பத்திரியில் காலாவதியான திரவம் தரப்பட்டிருந்தது. அவற்றையெல்லாம் திரட்டி நாசம் செய்தேன். தலைவர் ஆமோதித்தார். இதை சொல்லவருவதற்குக் காரணம்: காமாலை நோயை மருத்துவர்கள் கையாளும் முறையில் உள்ள தவறுகள். சான்று கீழே உள்ள ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கமும், மூலமும்:
    *
    சுகவனம் நோயாளியின் நலனுக்கு முதல் மரியாதை கொடுக்கவேண்டும். 2014ஆம் வருடத்தில் அமல்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் காமாலை வியாதியை குணப்படுத்துவதில் ஒரு புரட்சியே கண்டது. அதன்படி பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்த முடியும். ஆனால் மூன்று மாத சிகிச்சை திட்டத்தின் விலை லக்ஷக்கணக்கில் ஆகும். அமெரிக்காவில் கூட அந்தத் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற நடைமுறை. மற்றவர்களுக்கு அவஸ்தை தான் மிஞ்சும். இந்த அணுகுமுறை, மருத்துவ கோட்பாடுகளை மீறுகிறது. விஞ்ஞானம் இதை ஆதரிக்கவில்லை. மக்கள் சுகாதாரம் நாடி எடுக்கும் வழிமுறைகளை நீர்க்கச் செய்து விடுகிறது. மூலக்கட்டுரை படைத்த ஆய்வாளர், இந்த தவறான அணுகுமுறையை டாக்டர்களும், அரசும் ஒழிக்கவேண்டும் என்கிறார். ஆங்கில மூலமும், அதன் மூலமும் கீழே.
    இந்தியாவில் கேட்கவேண்டாம். அண்மையில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக, இங்கிலாந்திலிருந்து வந்திருந்த என் மைந்தன், ஒரு மயக்கமருந்து ஸ்பெஷலிஸ்ட்; வலி நிவாரணம், உறக்கம் சம்பந்தமான இன்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்பவர். அவர் இங்கு வியாதியஸ்தர்கள் படும் பாட்டைக் கண்டு திகைத்துப்போனார். இங்கு எல்லாமே சடங்குகள், சம்பிரதாயங்கள். வியாதியஸ்தன் ஒரு நம்பர். இந்த சூழ்நிலையில், தான் செய்த படைப்புகளுக்கு புகழ் பெற்று, திரவியம் இழந்த கவிஞர் நா.முத்துக்குமார் அத்யாவசியமான மருந்துகள் கொடுக்கப்பட்டாரா என்ற ஐயம் எழுகிறது. சிலருக்கு நினைவு இருக்கலாம். என் நண்பரும் தலித் கதாசிரியருமான திரு.க.சமுத்திரம் ஒரு விபத்துக்குள்ளானர். நினைவிழந்த அவரால் தன் நிலை கூற இயலவில்லை. மற்றவர் சொன்னதை அந்த தனியார் ஆஸ்பத்திரி ஏற்க வில்லை. காசு வை முதலில் என்று நிர்பந்தித்தார்கள். அவர் இறந்து போனார்.
    *
    ஆங்கில மூலம்:

    Sound health policy puts patients first. Antiviral regimens approved in 2014 revolutionised treatment of hepatitis C virus (HCV) infection. Most patients can now be cured. These new regimens, however, were priced at US$83 320–150 000 for a 3-month course. Public and private payers in the USA responded by limiting coverage to patients with advanced fibrosis or cirrhosis, keeping the drugs from being used to prevent those stages. These restrictions defy medical guidelines, lack scientific justification, and undermine public health efforts to stem transmission. Instead of reducing barriers to care, the system has இன்னம்பூராerected new ones. As drug makers and payers battle over billions of dollars, the needs of patients have been cast aside. Physicians and governments have a duty to make sure health policy is driven by the needs of patients and public health. In this Personal View, I call upon these groups to lead the creation of a national consensus among all stakeholders that will allow the advances in therapeutics for HCV infection to be put to work to end the epidemic.

    DOI: http://dx.doi.org/10.1016/S1473-3099(16)30005-6 |

    Share
  • குறளின் கதிர்களாய்…(134)

    செண்பக ஜெகதீசன்

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
    (திருக்குறள்-51வாழ்க்கைத்துணைநலம்) 

    புதுக் கவிதையில்…

    மனையறம் போற்றிடும்
    மாண்பினளாய்,
    மணாளன் வருவாய்க்கேற்றவாறு
    மணவாழ்வு அமைத்துக்கொள்பவள்தான்,
    மெய்யான வாழ்க்கைத்துணை…! 

    குறும்பாவில்…

    மனையற மாண்புடனே
    கணவன் வருவாயறிந்து வாழ்பவளே,
    உறவாம் வாழ்க்கைத்துணை…! 

    மரபுக் கவிதையில்…

    மனையறம் நன்றாய்த் தெரிந்துகொண்டே
         -மாண்புடன் வாழும் மனையாளாய்,
    அனைவரும் மெச்சும் வகையினிலே
       -அன்பொடு ஆருயிர்க் கணவனவன்
    தனையும் பேணியவன் வருவாய்க்குத்
      –தக்க வாறு வாழ்பவளே
    நினைக்கப் படுவாள் நீணிலத்தில்
       -நிறைந்த வாழ்க்கைத் துணையெனவே…! 

    லிமரைக்கூ…

    மனையறம் நன்றாய்த் தெரிந்து
    வாழ்பவள்நல் வாழ்க்கைத்துணை, அவள் நடந்தால்,
    கணவனின் வருவாயைப் புரிந்து…! 

    கிராமிய பாணியில்…

    வாழ்க்கத்தொண வாழ்க்கத்தொண
    மனைவிதானே வாழ்க்கத்தொண,
    குடும்பநலம் தெரிஞ்சிக்கிட்டு
    வாழ்பவதான் வாழ்க்கத்தொணயாவா
    நல்ல வாழ்க்கத்தொணயாவா… 

    அதுலயும்,
    புருசங்காரன் வருமானத்தப்
    புருஞ்சிக்கிட்டு அதுக்கேற்ப
    வாழுறவதான் வாழ்க்கத்தொண,
    மிகநல்ல வாழ்க்கத்தொண… 

    வாழ்க்கத்தொண வாழ்க்கத்தொண
    நல்ல
    மனைவிதானே வாழ்க்கத்தொண…!

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 220

    மலர்சபா

    *மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை*

    ama

    அங்ஙனம் அவள் எறிந்த நேரத்தில்
    நீல நிறத்தையும்
    செந்நிறமான நீண்ட சடையையும்
    பாலைப் போன்ற
    வெள்ளிய எயிற்றையும் உடைய
    பார்ப்பன வடிவத்துடன்
    நன்றாக இருக்கின்ற
    எதையும் எரிக்க வல்ல
    தீக்கடவுள் வெளியே வந்து,
    “நிறைந்த கற்புடையவளே!
    இந்நகர் உனக்கு மிகவும் தவறிழைத்துவிட்டது.
    பரந்த நெருப்புக்கு
    இந்நகரை இரையாக்கும் ஏவலை
    நான் முன்னரே பெற்றுள்ளேன்.
    இங்கே யார் மட்டும் பிழைத்திருக்க வேண்டும்?”எனக் கண்ணகியைக் கேட்டது.

    *கண்ணகியின் கட்டளையால் மதுரையில் தீ எழல்*

    அந்தணர் அறவோர் பசுக்கள்
    பத்தினிப் பெண்டிர்
    வயதில் முதிர்ந்தோர் குழந்தைகள்
    ஆகிய இவர்கள் தவிர்த்து,
    தீய தன்மையுடையவர்களை மட்டும்
    அழித்து நிற்பாயாக” எனக் கண்ணகி ஏவியதும்
    அத்தீக்கடவுள், தேரையுடைய பாண்டியன் நகர் நோக்கித்
    தீயை முடுக்கிவிட
    நகர் எங்கும் புகை மண்டியது.

    *வெண்பா*

    சிறப்புடைய மன்னவனும்
    மகளிரும் மாளிகையும்
    விற்படை வேழப்படையும்
    கண்ணகியின் கற்புத்தீ சுட்டெரித்தது.
    தீமை நல்கிய கூடல் நகர்
    தீயில் கருகியது.

    *வஞ்சினமாலை முற்றியது*

    Share
  • பத்து முறை பிறப்பவனே!

    க. பாலசுப்பிரமணியன்

    (1974-ம் ஆண்டு சென்னை கடற்கரைக் கவியரங்கத்தில் படிக்கப்பட்டு பதிவுசெய்த கவிதை.. மறுபகிர்வு)

     

    பத்து முறை பிறப்பவனே
    இன்றொரு முறை பிறந்தாலென்ன !
    பச்சைப் புற்கள் பசுமை மரங்கள்
    பழைய நினைவுகள் மறைந்தாலென்ன ?
    படைத்த உலகைப் பாவி மனிதரை
    படைத்தவனே அழித்தாலென்ன ?

    லஞ்சம் கொஞ்சும் நெஞ்சில் வஞ்சம்
    பஞ்சம் நட்டம் பாவம் மிச்சம் !

    கொடிய விடத்தைக் கொட்டும் தேளும்
    ஒதுங்கிச் செல்லும் ஓரம் பார்த்து !
    பாவி மனிதன் பகட்டு வார்த்தை
    வெம்பி நெஞ்சில் விளைந்த கலை !

    உள்ளம் ஒன்று, உதட்டில் ஒன்று
    உண்மை ஒன்று, உறவு ஒன்று
    பரந்த நெஞ்சில் பாவம் நின்று
    பகர்ந்ததின்றே கொள்கையென்று !

    பத்துத் தலை இராவணனுக்கும்
    புத்தி ஒன்றே இருந்தது !
    பித்துப் பிடித்த மனிதா
    உனக்கோ பத்துப் புத்தி வந்தது !

    காலமில்லை கடமையில்லை
    நெஞ்சில் கடவுளில்லை !
    ஆண்மையில்லை, நல் பெண்மையில்லை
    இன்பப் பகட்டில் விலை !

    கத்திக் கொஞ்சம் அழைத்துவிட்டேன்
    காதில் அவனுக்கோ விழவில்லை !
    படைத்த தானே பாவியென்றே
    பரமன் எங்கே பதுங்கினானோ ?

    பரந்த உலகைக் காப்பவனே
    பாற்கடலுக்கே சென்றானோ ?

    பாவம் அழிக்கப் பிறப்பேனென
    பாரதத்தில் சொன்னவனே !
    பார்த்தனுக்கே தேரோட்டி
    பாவைகளுக்கோர் கண்ணனே !

    பத்து முறை பிறப்பவனே
    இன்றொரு முறை பிறந்தாலென்ன !
    பச்சைப் புற்கள் பசுமை மரங்கள்
    பழைய நினைவுகள் மறைந்தாலென்ன ?
    படைத்த உலகை பாவி மனிதரை
    படைத்தவனே அழித்தாலென்ன ?

    Share
  • புற்று நோயை ஜெயித்த பெண்மணி

    ஸ்ரீதரன்

    asகாப்பாற்ற முடியாத நோய் புற்று நோய்.. திருமதி வேதவல்லி பார்த்தசாரதி புற்று நோயிலிருந்து ( 3வது ஸ்டேஜ்)  மீண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகி விட்ட்து.. 32 கீமோதெரபி செய்து தலை மயிர் எல்லாம் போய் மொட்டை அடித்தது போன்ற தலையுடன் இருந்தவர் அவருடைய  பாஸிடிவ் அப்ரோச் மூலம் .  புற்று நோய் பாதிக்கப்  பட்டவர்களுக்கு யோகா மூலம் மனவலிமை கிடைக்க உதவி செய்கிறார்.. புற்று நோயின் பயத்தைப் போக்கவும். நோயை  நீக்கவும் உதவி செய்கிறார்.  அவரிடம் சில கேள்விகள். அதற்கு அவர் கொடுத்த பதில்கள் ;

    1. புற்று நோய் பயமுறுத்தும் நோய் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    ஆரம்பத்தில் எனக்குப் புற்று நோய் வந்த போது அப்படி நினைத்தேன். இப்போது  இல்லை.

    1. புற்று நோய் வந்து விட்ட்து என்று அறிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது.?

    அதிக  அச்சமாய்  இருந்தது. எனக்குப் போய் புற்று நோய் வந்து விட்டதே என்று கவலைப்பட்டேன்.  அப்போது என்னுடைய குழந்தைகள் முதல் வகுப்பு, மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமோ என்று மிகவும் பயமாய் இருந்தது.

    1. அப்போது ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளியே வ்ந்தீர்கள் ?

    டாக்டர் மற்றும்  யோகா கொடுத்த தைர்யம், மனபலம் . யோகாவின் மூலம் என்னை நானே செதுக்கிக்கொண்டேன். நீ நல்லாயிடுவே, நீ நல்லாயிடுவே என்று பல முறை என் மனதில் சொல்லிக் கொண்டேன். சுய நம்பிக்கை மூலம் மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்தேன். யோகா குரு சிவரிஷிக்கு என் நன்றியைச் சொல்ல வேண்டும்.

    4.யோகாவால் புற்றுநோய்  குணப்படுத்தமுடியும் என்று எப்படி தெரிந்தது ?

    யோகா புற்று நோய் குணம் ஆக சப்போர்ட் செய்யும். என்னுடைய ரேடியேஷன் டாக்டர் சுமன்தா பிரேம்குமார் கொடுத்த அறிவுரைப்படி யோகாவைப் பயிற்சி செய்தேன்.

    புற்று நோயைக் குணப்படுத்தத் தேவையானவை

    1. மருந்து
    2. பாசிடிவ் எண்ணம். உடைந்து போக மாட்டோம் என்னும் நம்பிக்கை . இதை யோகா மூலம் பெறமுடியும்..
    3. மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?

    நான் பட்ட வேதனையை மற்றவர்கள் படக்கூடாது என்று நினைத்ததால்  என்னால் முடிந்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அப்போது ஃபோர்டு   கம்பெனியில் ஏரியா சேல்ஸ் மேனேஜராக இருந்தேன். சேவை செயவதற்காக வேலையை விட்டு விட்டு “வீ கேன் கேர்“ என்னும் அமைப்பை ஆரம்பித்தேன். ஹெல்ப் லைன் நெம்பர் – 9841053435 .

    1. வீ கேன் கேர் அமைப்பின் நோக்கத்தைக் கூறவும்
    2. போன் சப்போர்ட்
    3. மாரல் சப்போர்ட்
    4. யோகிக் சப்போர்ட்
    5. வீ கேன் கேர் இதுவரை செய்த தொண்டைப் பற்றி கூறவும்?

    வீ கேன் கேர் இதுவரை எண்ணற்ற புற்று நோயாளிகளுக்கு கவுன்சலிங், கொடுத்திருக்கிறது. மாரல் சப்போர்ட் கொடுத்திருக்கிறது. புற்று நோயிலிருந்து குணம் அடைந்தவர்களும் இந்த அமைப்பில் வாலண்டியராக சேவை செய்கிறார்கள்.

    1. புற்று நோய் வந்தவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்ல வேண்டும்.?
    2. பேசணும்
    3. பேச வைக்கணும்
    4. மனதில் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்ய வேண்டும்.

    1. புற்று நோய் வந்தவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
    2. தைர்யமாய் இருக்க வேண்டும்,.
    3. துவண்டு போய் விடக் கூடாது.
    4. மன அழுத்தத்திலிருந்து வெளி வர முயல வேண்டும்.

    1. புற்று நோய் வருவதை தடுக்க என்னவிதமான தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.?
    2. நல்ல மனநிலையை மெயிண்டெயின் செய்ய வேண்டும்
    3. மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    4. புற்று நோய் வந்தவர்களுக்கு நீங்கள ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

    அவர்கள் தைர்யமாக இருக்க வேண்டும் . ஒரு கூண்டுக்குள் அடைப்பட்டுக்கிடக்காமல் மேலேறி  வர முடியும்  என்னும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

    பி.கு. உதவி வேண்டியவர்கள் 996 251 7790 என்ற  மொபல் நெம்பருக்கு தொடர்பு கொள்ளவும் .

                                &&&&&&&&&&

    Share