செண்பக ஜெகதீசன்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
(திருக்குறள்-51வாழ்க்கைத்துணைநலம்) 

புதுக் கவிதையில்…

மனையறம் போற்றிடும்
மாண்பினளாய்,
மணாளன் வருவாய்க்கேற்றவாறு
மணவாழ்வு அமைத்துக்கொள்பவள்தான்,
மெய்யான வாழ்க்கைத்துணை…! 

குறும்பாவில்…

மனையற மாண்புடனே
கணவன் வருவாயறிந்து வாழ்பவளே,
உறவாம் வாழ்க்கைத்துணை…! 

மரபுக் கவிதையில்…

மனையறம் நன்றாய்த் தெரிந்துகொண்டே
     -மாண்புடன் வாழும் மனையாளாய்,
அனைவரும் மெச்சும் வகையினிலே
   -அன்பொடு ஆருயிர்க் கணவனவன்
தனையும் பேணியவன் வருவாய்க்குத்
  –தக்க வாறு வாழ்பவளே
நினைக்கப் படுவாள் நீணிலத்தில்
   -நிறைந்த வாழ்க்கைத் துணையெனவே…! 

லிமரைக்கூ…

மனையறம் நன்றாய்த் தெரிந்து
வாழ்பவள்நல் வாழ்க்கைத்துணை, அவள் நடந்தால்,
கணவனின் வருவாயைப் புரிந்து…! 

கிராமிய பாணியில்…

வாழ்க்கத்தொண வாழ்க்கத்தொண
மனைவிதானே வாழ்க்கத்தொண,
குடும்பநலம் தெரிஞ்சிக்கிட்டு
வாழ்பவதான் வாழ்க்கத்தொணயாவா
நல்ல வாழ்க்கத்தொணயாவா… 

அதுலயும்,
புருசங்காரன் வருமானத்தப்
புருஞ்சிக்கிட்டு அதுக்கேற்ப
வாழுறவதான் வாழ்க்கத்தொண,
மிகநல்ல வாழ்க்கத்தொண… 

வாழ்க்கத்தொண வாழ்க்கத்தொண
நல்ல
மனைவிதானே வாழ்க்கத்தொண…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *