பத்து முறை பிறப்பவனே!
க. பாலசுப்பிரமணியன்
(1974-ம் ஆண்டு சென்னை கடற்கரைக் கவியரங்கத்தில் படிக்கப்பட்டு பதிவுசெய்த கவிதை.. மறுபகிர்வு)
பத்து முறை பிறப்பவனே
இன்றொரு முறை பிறந்தாலென்ன !
பச்சைப் புற்கள் பசுமை மரங்கள்
பழைய நினைவுகள் மறைந்தாலென்ன ?
படைத்த உலகைப் பாவி மனிதரை
படைத்தவனே அழித்தாலென்ன ?
லஞ்சம் கொஞ்சும் நெஞ்சில் வஞ்சம்
பஞ்சம் நட்டம் பாவம் மிச்சம் !
கொடிய விடத்தைக் கொட்டும் தேளும்
ஒதுங்கிச் செல்லும் ஓரம் பார்த்து !
பாவி மனிதன் பகட்டு வார்த்தை
வெம்பி நெஞ்சில் விளைந்த கலை !
உள்ளம் ஒன்று, உதட்டில் ஒன்று
உண்மை ஒன்று, உறவு ஒன்று
பரந்த நெஞ்சில் பாவம் நின்று
பகர்ந்ததின்றே கொள்கையென்று !
பத்துத் தலை இராவணனுக்கும்
புத்தி ஒன்றே இருந்தது !
பித்துப் பிடித்த மனிதா
உனக்கோ பத்துப் புத்தி வந்தது !
காலமில்லை கடமையில்லை
நெஞ்சில் கடவுளில்லை !
ஆண்மையில்லை, நல் பெண்மையில்லை
இன்பப் பகட்டில் விலை !
கத்திக் கொஞ்சம் அழைத்துவிட்டேன்
காதில் அவனுக்கோ விழவில்லை !
படைத்த தானே பாவியென்றே
பரமன் எங்கே பதுங்கினானோ ?
பரந்த உலகைக் காப்பவனே
பாற்கடலுக்கே சென்றானோ ?
பாவம் அழிக்கப் பிறப்பேனென
பாரதத்தில் சொன்னவனே !
பார்த்தனுக்கே தேரோட்டி
பாவைகளுக்கோர் கண்ணனே !
பத்து முறை பிறப்பவனே
இன்றொரு முறை பிறந்தாலென்ன !
பச்சைப் புற்கள் பசுமை மரங்கள்
பழைய நினைவுகள் மறைந்தாலென்ன ?
படைத்த உலகை பாவி மனிதரை
படைத்தவனே அழித்தாலென்ன ?