Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

கற்றல் ஒரு ஆற்றல்- 41

க. பாலசுப்பிரமணியன்

கற்றலின் போது மூளையில் ஏற்படும் தாக்கங்கள்

education-1-1-1-1

இத்தாலியைச் சேர்ந்த வின்சென்ஸ்ஸோ மாலாகார்னே (Vincenzo Malacarne) என்ற 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானி மூளையின் பலவிதமான செயல்களைப் பற்றி ஆராய்ந்தபொழுது சில அறிய நுணுக்கமான திறன்களைக் கண்டறிந்தார். அவர், சில கற்கும் திறன் உள்ள பறவைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் சிறுமூளைப் பகுதியினை ஆராய்ந்தபொழுது அதில் ஏற்பட்டுள்ள மடிப்புக்களையும் பதிவுகளையும் அறிந்தார். பின்பு அந்தப் பறவைகளை சில நாட்களுக்கு புதிய சில தந்திரங்களையும் திறன்களையும் பழகிக்கொள்ளவும் பயிற்சிபெறவும் உதவி செய்தார். சிலநாட்களுக்குப் பிறகு அந்தப் பறவைகளின் மூளையை மீண்டும் ஆராய்ந்த பொழுது அதில் புதிய பதிவுகள் மட்டுமின்றி அதிக அளவில் மடிப்புக்கள் இருந்ததையும் அறிந்தார். அதன் மூலம் கற்றல் மற்றும் பயிற்சி என்ற செயல் நடக்கும் பொழுது மூளையின் சில பாகங்களில் ஏற்படும் மாறுதல்களும் வளர்ச்சியும் தெளிவாகத் தென்பட்டன.

இதேபோல் சார்லஸ் டார்வின் (சார்லஸ் டார்வின்) என்ற மிகப் பெயர் பெற்ற விஞ்ஞானியும் ஒரு வம்சாவளியைச் சேர்ந்த சில பறவைகளைத் தேர்ந்தெடுத்து அவைகளில் காட்டில் வளர்கின்ற சிலவற்றையும் வீடுகளில் வளர்கின்ற சிலவற்றையும் தேர்ந்தெடுத்து அவைகளின் மூளைகளின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ந்த பொழுது காட்டில் வளர்ந்த பறவைகளின் மூளைகளில் அதிக மடிப்புக்களும் பதிவுகளும் இருக்கக் கண்டார். இதன் மூலம் பொதுவாக புதிய அனுபவங்களும் சவால்களும் மூளையின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன என்ற உண்மை வெளிப்பட்டது.

இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல கோணங்களில் கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு அனைத்துமே ” மூளை கற்பித்தலுக்கு உகந்ததாக இல்லை, அது கற்றலில் சிறப்பாக வளர்கின்றது ” என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆகவே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் அறிவு மேலிருந்து கீழாக (Top-down approach) வருகின்றது என்ற மனப்பாங்கை கொஞ்சம் மாற்றி வகுப்பறைகளை “கற்றலுக்கு” உகந்ததாக மாற்றுவது அவசியமாகத் தென்படுகின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் மூளை நரம்பியலிலும் மற்றும் கற்றல்- புரிதல் பற்றிய ஆராய்ச்சிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட சில தத்துவங்கள், கோட்பாடுகள், விழிப்புணர்வுகள் நம்முடைய நடைமுறைச் செயல்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அடிப்படியாக அமைகின்றன.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மூளைநரம்பியல் அறுவை சிகிச்சையில் வல்லுநராகவும் முனைவராகவும் இருக்கும் ஜார்ஜ் ஓஜமான் (George Ojemaan) என்பவர் வலிப்பு நோய்க்காக (Epilepsy) ஒருவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை செய்யும் பொழுது அவருடைய கையில் இருந்த அறுவை ஆயுதம் (forceps) ஒன்று அந்த நபரின் மூளையின் ஒருபாகத்தைத் தொட்டுவிட அவருக்கு உடலின் ஒரு பகுதியில் உணர்வும் அசைவும் ஏற்பட்டது. இதைக் கண்ட அந்த வல்லுநர் அந்த நபரின் மூளையின் மற்றொரு பாகத்தைத் தொட அது உடலின் இன்னொரு பகுதியில் உணர்வைத் தூண்டிவிட, அவர் அதையே ஒரு ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டு மூளையின் ஒரு வரைபடத்தைத் (Neural cartography) தயாரித்தார்.

அதன் மூலம் மூளையின் எந்தெந்தப் பகுதிகள் எந்தெந்த உறுப்புக்களோடு உறவாடுகின்றன என்ற ஒரு உண்மை வெளிப்பட்டது. இந்த மூளையின் வரைபடம் (Neural Cognitive Mapping) மூளையின் பல செயல்களை நமக்குத் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ளவும் மேற்படி ஆராய்ச்சிக்கும் தூண்டுகோலாக இருந்தது.

இதில் அறியப்பட்ட சில உண்மைகள் :

1. ஒவ்வொரு சொல்லும், வார்த்தைகளும், திறன்களும் மூளையின் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்படுகின்றன.
2. ஒரே ஒலியை ஏற்படுத்தும் வேறுபட்ட மொழிகளின் சொற்களும் வார்த்தைகளும் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்படுகின்றன.
3. ஒரே மொழியின் வார்த்தைகளின் பரிமாணம், அவற்றின் இலக்கணப் பரிமாணங்கள், இலக்கியப் பரிமாணங்கள், மொழித்திறன் போன்ற பலவும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் பதிவு செய்யப் படுகின்றன.
4. ஒரு மொழியின் எழுத்துப் பரிமாணங்கள், பேச்சுப் பரிமாணங்கள் மூளையின் வெவ்வேறு இடங்களில் அமர்கின்றன.

ஆனால், மூளை நாம் பேசும்பொழுதும் எழுதும் பொழுதும், சிந்திக்கும் பொழுதும் தேவையான திறன்களையும் அதன் பரிமாணங்களையும் ஒன்றுபடுத்தி ஒரு வடிவம் கொடுத்து ஒரு வினாடியின் மிகச்சிறிய நேரத்தில் (Nano-seconds) நமக்கு பொருளுடன் அனுப்பிவைக்கிறது . என்னே ! மூளையின் திறன் !. ஆகவே கற்றல்- புரிதல் நடக்கும் பொழுது மூளையின் பல பகுதிகள் ஒன்றாகச் செயல்பட வேண்டும்.

இந்த விந்தையான துரிதமான செயலைப் பற்றியும் இது எவ்வாறு நம்முடைய கற்றலை மேம்படுத்தவும் சிறப்பிக்கவும் பயனுள்ளதாகிறது என்பதை பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்

(தொடரும் )

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (2)

 1. Avatar

  மூளையின் எந்தெந்தப் பகுதிகள் எந்தெந்த உறுப்புக்களோடு உறவாடுகின்றன என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மூளைநரம்பியல் அறுவை சிகிச்சையில் வல்லுநராகவும் முனைவராகவும் இருக்கும் ஜார்ஜ் ஓஜமான்
  ஆய்வு செய்ததை தமிழில் விளக்கமளித்த நண்பர் திரு க. பாலசுப்ரமணியன்
  அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  நன்றி வணக்கம்.
  URL;
  http://neurosurgery.washington.edu/education/faculty/researchbios/ojemann.asp

 2. Avatar

  தங்கள் கருத்துக்கும் பாராட்டுதலுக்கு உளங்கனிந்த நன்றி.

Comment here