செ. இரா.செல்வக்குமார்

இந்த வாரத்தின் வல்லமையாளர் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2016 இரியோ-தி-செனரோ ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒற்றையர் பெண்கள் இறகுப் பந்தாட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பு. வே. சிந்து (P.V. Sindhu) அவர்களே

. அகவை 21 நிரம்பிய, தெலிங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் தந்தையார் திரு. பு.வே. இரமணா அவர்கள் இந்தியாவின் அருச்சுனா விருதை வென்றவர். சிந்து அவர்களின் தாயார் தந்தையார் ஆகிய இருவருமே புகழ்பெற்ற கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள். பு. கோபிச்சந்து என்னும் புகழ்பெற்ற இறகுப்பந்தாட்ட வல்லுநர் மேற்பார்வையிலும் பயிற்றுவிப்பிலும் இவர் இறகுப்பந்தாட்டத்தில் மிகுசிறப்பான தேர்ச்சிபெற்றார். 2015 ஆம் ஆண்டில், இவருக்கு அகவை 20 இருக்கும்பொழுதே இந்தியாவின் நான்காவது உயர் விருதாகிய பதுமசிறீ (தாமரைத்திரு) வழங்கப்பட்டது. இவரே இவ்விருதைப் பெற்றவர்களில் அகவை குறைந்தவர்.

இரியோ ஒலிம்பிக்கில் சிந்து அவர்கள் எசுப்பானியாவைச் சேர்ந்த கரோலினா மரின் மார்ட்டின் (Carolina Marín) என்பாருடன் விளையாண்ட தங்கப்பதக்கப் போட்டியில் வெற்றியடையாததால் வெள்ளிப்பதக்கம் பெற்றார். கரோலினா மரின் 19–21, 21–12, 21–15 என்னும் பெறுமதிப்பீட்டில் சிந்துவை வெற்றிகொண்டார்.


இறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வெங்கட சிந்து.


இறகுப்பந்தாட்ட வீராங்கானை புசர்ல செங்கட சிந்து நசோமி ஒக்குஃகாரா (Nozomi Okuhara) அவர்களை 21-19, 21-10 என்னும் பெறு மதிப்பீட்டில் வென்றபொழுது. .

சிந்து அவர்கள் மிகப்பல பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றியாளாராக ஒளிவீசியிருக்கின்றார். கீழ்க்காணும் 6 வெற்றிகள் குறிப்பிடத்தக்கன


இறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வேங்கட சிந்துவின் பன்னாட்டு வெற்றிகள் (தரவு விக்கிப்பீடியா) .

மக்கள்தொகையில் 1.293 பில்லியன் பேர்கள் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்த போதிலும் உலகளாவிய ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதில்லை. 1900 ஆண்டுமுதல் இந்தியா உலக ஒலிம்பிக்குப் போட்டிகளில் கலந்துகொள்கின்றது. 1928-1956 ஆகிய காலப்பகுதியில் இந்தியா வளைதடியாட்டப் போட்டியில் ஆறுமுறை தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்றது. அதன்பின் 1964 இலும் 1980 இலுமாக மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. 2012 ஆம் ஆண்டு இலண்டன் மாநகரத்தில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றதே மிக அதிகமாகப் பெற்ற பதக்கங்கள் ஆகும். இலண்டன் ஒலிம்பிக்குப் போட்டிகளில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 55 ஆவது இடத்தில் நின்றது. இது தவிர சீனாவில் பெய்சிங்கில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்றதுபோக மற்ற ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒன்றிரண்டு பதக்கங்களே வென்றுள்ளது. அவற்றிலும் வெண்கலப்பதக்கங்களே அதிகம். 116 ஆண்டுகளில் கலந்துகொண்ட ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 28 பதக்கங்களே பெற்றுள்ளது (தங்கம் 9, வெள்ளி 7, வெண்கலம் 12). 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள இரியோ-தி-செனரோ நகரில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியாவின் பு.வே. சிந்து பெற்ற வெள்ளிப்பதக்கமும், மற்போரில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாக்சி மாலிக்கு என்னும் வீராங்கனை வென்ற வெண்கலப்பதக்கமும் சேர்ந்து மொத்தம் இரண்டே பதக்கங்கள் பெற்று உலக நாடுகளின் வரிசையில் 67 ஆவதாக நிற்கின்றது. இரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாவிட்டாலும், சீர்நடமியப் பயிற்சியில் (gymnastics) தீபா கர்மாக்கர் என்னும் பெண் நான்காவது இடத்தைப் பெற்றதையும் குறிப்பிடவேண்டும். புரொதுனோவா தாண்டல் (Produnova vault) என்னும் கடுமையான குதித்துத்தாண்டலை உலகில் மிகச்சிலரே செய்துள்ளனர். 2016 ஒலிம்பிக்கில் இதனை வெற்றியுடன் செய்துகாட்டியும் நான்காவது இடத்தையே தீபா கர்மாக்கர் பெற்றார். பு.வே. சிந்து, சாக்சி மாலிக்கு, தீபா கர்மாக்கர் ஆகிய மூன்று இளம் பெண்மணிகளும் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த ஒலிம்பிக்குத் திறமையாளிகள்.

2016 இரியோ ஒலிம்பிக்குப் போட்டியில் இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பு.வே. சிந்து அவர்களைப் பாராட்டி இவ்வார வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. பந்து விளையாடு அதில் முந்தி விளையாடு, புயல் பிந்த விளையாடு மகளே
    வந்து விளையாடு வா எழுந்து விளையாடு நீ புகுந்து விளையாடு புயலே
    உந்தி விளையாடு நகை சிந்தி விளையாடு புகழ் தந்து விளையாடு எழிலே
    சிந்து விளையாடு புதுச் சிந்து இசைபாடி, மணிச் சிந்து விளையாடு மயிலே

  2. அருமையான தமிழ் தரவு தொகுப்பு.. பெரிய தரவு (Big Data) ஆராய்ச்சிக்கு உதவும்..2016 இரியோ ஒலிம்பிக்குப் போட்டியில்.
    பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் , வீராங்கைனக்களும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.. பேராசிரியர் செ. இரா.செல்வக்குமார் அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
    நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.