Month: September 2016

  • படக்கவிதைப் போட்டி .. (80)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14454513_1100461043341427_1026080646_n

    23112939n06_rராமச்சந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 0110.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ’’நந்தகோ பாலா நவனீ தசோரரே
    பந்தம் நமக்கிடையே பால்திருத்தாள் , -முந்தைய
    வெவ்வினைகள் வாட்டுதே வாடா(து) இருந்திட
    செவ்விளநீர் பாய்ச்சு சகா(தோழா)’’….கிரேசி மோகன்….!

    Share
  • ”உந்து தமிழ் கந்தன் களிப்பு”….!

    கிரேசி மோகன்
    ———————————————————

    vallidevyani_murugan_02
    மைபூசும் மாதர்வாய் பொய்பேசப் புல்லரித்து
    கைகூசும் காலம் கலவிடுவாய் -தைபூச
    நன்நாளின் தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திடுவீர்
    பண்ணாத பாவமும் பாழ்….(13)
    சுரமகள் அத்தி குறமகள் வள்ளி
    இருபுறம் சுத்தி இழைய -அறுபடை
    வீட்டில் வசித்திடும் வேலா மயிலேறி
    பாட்டில் வருவாய் பறந்து….(14)

    கண்ணனுன் காதலன் கந்தனுன் காவலன்
    எண்ணனும் நெஞ்சேநீ எந்நாளும் -முன்னவன்
    மாலனும் பின்வந்த வேலனும் நம்வாழ்வில்
    காலமும் நேரமும் காண்….(15)

    மயிலவர்க்கு கொண்டை மயிலிவர்க்கு அண்டை
    சயிலம் இருவர்க்கும் ஜாகை -துயிலிருப்பார்
    வேலையில் மாலவன் வேலனோ தீயோர்மேல்
    வேலை விடக்கண் விழிப்பு….(16)

    சரவணா கேளாய் ஒருவினா ஞானம்
    பெறவொணா வண்ணமேன் பெற்றாய் -குருவெனால்
    சீடன் தவித்திருக்க சும்மா இருப்பதோ
    பாடமனு பூதி புகட்டு….(17)

    கரம்தாங்கும் வேலும் புறம்தாங்கும் நீல
    நிறம்தாங்கும் வண்ணமயில் நோக்கும் -அறம்தாங்கும்
    ஆறு முகமும் அணிசேவல் கொக்கரிப்பும்
    கூறு தமிழ்மொழியும் காப்பு….(18)….கிரேசி மோகன்….!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 223

    -மலர் சபா 

    மதுரைக் காண்டம்அழற்படு காதை

    அரச பூதம் 

    வெற்றி பொருந்திய
    வெங்கதிர் போன்ற மேனியுடையவன்;
    ஒளி குன்றாத மணிகளைக்
    கழுத்தில் அணிந்தவன்;                              silambu
    உச்சந்தலையில் முடி முதல்
    கால்களில் கழல்வரை
    அரசர்க்குரிய அணிகள் அணிந்தவன்;

    செண்பகம், கருவிளை,செங்கூதளம்
    ஆகிய பூக்களோடு
    குளிர்ச்சியான நீர்ப்பூக்களையும்
    சேர்த்துத் தொடுத்த மாலை அணிந்தவன்;
    பலவகைப் பூக்களால் ஆன
    அசைந்தாடும் மாலைகளை அணிந்தவன்;

    சூரியன் தன் கைகளால்
    அள்ளித் தெளித்தது போன்ற
    குங்கும நிறம் கொண்ட
    மார்பை உடையவன்;
    ஒளிபொருந்திய செந்நிறப்
    பட்டாடையை அணிந்தவன்;

    சாலி என்னும் செந்நெல் சோற்றைப்
    பொற்கலத்தில் இட்டு
    அதன் நல்ல சுவையறிந்து
    அதை விரும்பி உண்பவன்;
    பவளம் போன்ற
    செந்நிற மேனியை உடையவன்!

    *****

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. (23)

    நிர்மலா ராகவன்

    நாமகரணங்கள்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-2-1-1
    கதை 1: `டார்லிங்!’

    புதிதாக மணமானவர்கள் இப்போது தம் கணவரையோ, மனைவியையோ விளிக்கும் விதம் இது என்றுதான் நினைத்திருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி கணவரை இப்படி அழைப்பது கண்டு வியந்து போனேன், `ஆகா! கல்யாணமாகி பத்து வருடங்களுக்குப் பின்னரும் இவளுக்கு இவ்வளவு காதலா!’ என்று.

    ஒரு நாள் இருவரும் ஏதோ வாக்குவாதம். இறுதியில், அதற்கு மேலும் பொறுக்க முடியாத மனைவி, “ஷட் அப், டார்லிங்!” என்றாளே பார்க்க வேண்டும்! எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவளைப் பொறுத்தவரை, டார்லிங் என்பது அவருடைய பெயர். அவ்வளவுதான். அச்சொல்லில் அன்பு கிடையாது.

    கதை 2:  துர்கா இதற்கு நேர் எதிரிடை.  அவளுக்கு நிறையத் துன்பங்கள் கொடுத்தவர் அவளது கணவர். எல்லாவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையானவர். அவள் அவருடன் பேசுவதையே விட்டுவிட்டாள். ஆனால் அவர்மேலிருந்த ஆத்திரத்தை மகன்மேல் காட்டினாள். மகனுக்கு என்ன பெயர் வைத்தார்களோ, அவனை `துடைப்பக்கட்டை’ என்றுதான் அழைப்பாள். அவனுடைய அக்காள்மேல் எந்த வருத்தமுமில்லை துர்காவுக்கு. ஏனெனில் அவளும் தன்னைப்போல் ஒரு பெண். அப்பாவைப்போல் நடக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது.

    தாயின் நம்பிக்கை பொய்க்கவில்லை. மகள் ஓரளவு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்தாள். மகனுக்கோ, `நான் உதவாக்கரை!’ என்ற எண்ணத்தை பெற்ற தாயே சிறுவயதிலிருந்தே மனதில் பதிய வைத்திருந்ததால், படிப்பும் ஏறவில்லை. மதுவுக்கு அடிமையானான். ஆறு மாதங்கள் ஏதாவது வேலை செய்து, கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும், வேலையை விட்டுவிடுவான். பகலில் அக்கம்பக்கத்தினருக்கு உதவியாக ஏதாவது செய்வான். `சாயங்கால வேளைகளில் அவனுடைய போக்கே மாறிவிடும்,’ என்கிறார்கள் அவனுடைய அண்டைஅயலார். நான் பார்த்தபோது, சாதுவாக, தன்னம்பிக்கை குன்றியவனாக காணப்பட்டான். அவனுடைய கதையைக் கேட்க பரிதாபமாக இருந்தது.

    ஏதோ காரணத்தால் மனத்துக்குப் பிடிக்காத மணாளனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் பெண்கள் தம் விதியையே நினைத்து மருகி, அந்த நிராசையை பெற்ற பிள்ளைகளின்மேல் காட்டினால், வாழையடி வாழையாக குடும்பம் உருப்படாமல்தான் போகும். பெற்றவர்களில் ஒருவர் ஆதரவாக இருந்தால்கூட பிள்ளைகள் நல்ல விதமாக வளர வாய்ப்பிருக்கிறதே!

    கதை 3: பதினைந்து வயதான லேகாவிற்குத் தான் புத்திசாலி என்பதில் கொள்ளைப் பெருமை. அவள் வளர்க்கும் நாய்க்கோ, அறிவு குறைவாகத்தான் இருந்தது என்று அவளுக்கு இளக்காரம். தினமும் உலாவ அந்த நாயை அழைத்துச் செல்வாள். அதுவோ, நாயின் குணப்படி அங்கும் இங்கும் எதையோ தேடி அலையும்.

    `இடியட்!’ என்று உரக்கக் கத்தி, அதன் கழுத்துப்பட்டியில் பொருத்தப்பட்டிருந்த சங்கிலியை இழுப்பாள். சிறிது நேரத்திற்குப்பின், இதே நிகழ்ச்சி தொடரும்.

    தினமும் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை.

    “பாவம்! அதை ஏன் அப்படிக் கூப்பிடறே?” என்று லேகாவைக் கேட்டேன். நாய்க்கு ஆங்கிலமோ, இடியட் என்ற வார்த்தைக்கு அர்த்தமோ தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும், கூப்பிடும் தொனி புரியாதா, என்ன!

    “இது சொன்னாலே கேக்கறதில்லே!” என்றாள்.

    “அதுக்கு அவ்வளவுதான் தெரியும். ஒன் நாய்க்குப் பேர் கிடையாதா? அதைச் சொல்லிக் கூப்பிடு,” என்றதும், எதுவும் பேசாது நடையைக் கட்டினாள்.

    பொதுவாக எல்லா மிருகங்களின்மேலும் உயிராக இருக்கும் ஒரு பையன் அவர்கள் வீட்டுக்குத் தினமும் போவான். அதே நாய் அவன் முகத்தை நக்கிக் கொஞ்சுகிறது என்று அவ்வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

    `குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பதில், `மிருகங்களும்’ என்று சேர்த்துக்கொள்ளலாம்.

    கதை 4: மலேசியாவில் ஒரு சிற்றூரில் அமைந்திருந்த மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தேன். இருபது வயதை எட்டியிராத `தமிழன்’ எல்லா மிருகங்களையும் அன்புடன் அழைத்து, பரிவுடன் நடத்துவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

    “உனக்கு மிருகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமா?” என்று அநாவசியமான கேள்வி ஒன்றைக் கேட்டேன்.

    “சின்ன வயசிலேருந்தே அப்படித்தான், ஆன்ட்டி,” என்று ஒத்துக்கொண்டவன், “எல்லாரும் என்னைப் பைத்தியம்கிறாங்க. அதான் வீட்டுக்கே போறதில்லே. இங்கேயே தங்கிடறேன்!” என்றான், வருத்தத்துடன்.

    “நீ ரொம்ப நல்லவன். இப்படி இருக்கறதுதான் சரி. மாறிடாதே!” என்றேன்.

    “இதுங்களையும் சாமிதானே படைச்சார்?” என்று அவன் கேட்டதில் தான் செய்வதன் நியாயத்தை ஏன் பிறர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற குழப்பம் வெளிப்பட்டது.
    அவன் ஞானி என்றுதான் எனக்குத் தோன்றியது.

    பெற்ற பிள்ளைகளை ஒரு தாய் இழிவாக நடத்துவதையோ, தன் `செல்லப் பிராணி’யை ஒரு பெண் கண்டபடி திட்டுவதையோ பொறுக்கும் உலகம் மனித நேயத்துடன் நடக்கும் ஒருவனை `பைத்தியம்’ என்கிறது!

    இது மோசமான உலகமா, இல்லை உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் உலகமா?

    தொடருவோம்

    Share
  • வண்ணான்

    -தமிழ்த்தேனீ

    “நீ  என்னை   ரொம்ப நல்லவன்னு நெனைக்காதே! நான் அவ்ளோ நல்லவன் இல்லே”  என்றார் கார்த்திகேயன். திடுக்கிட்டாள் சௌதாமினி.

    “என்னது ஏன் இப்பிடி உளர்றீங்க…என்ன ஆச்சு உங்களுக்கு  உடம்பு சரியில்லையா?”  என்றாள் பதட்டத்துடன்.

    “அடேடே  பயந்துட்டியா…?  பயப்படாதே! ஆனா நான் சொன்னது உண்மை” என்றார் கார்த்திகேயன்.

    “என்ன விளையாட்டு இது? உங்களுக்கு வயசு  ஐம்பது!“  என்றாள் சௌதாமினி.

    “அதுனாலே என்ன? நான் குழந்தையாப் பொறந்து வாலிபப் பருவத்தை அடைஞ்சுதானே இப்போ ஐம்பதை எட்டி இருக்கேன். புரியுதா… நானும் வாலிபப் பருவத்திலே இருந்திருக்கேன், இன்பேச்சுவேஷன் ஆக்ரமிச்சிருந்த பருவத்திலே  எது காதல் எது காமம்னே  தெரியாமத்தானே இருந்தேன்“

    “எது அழகு…எது கவர்ச்சி…எது குத்துவிளக்கு… எது அகல் விளக்கு… எது மின்மினி விளக்குன்னு குழம்பித்தானே வளந்திருக்கேன்?”

    “நான் என்ன புத்தனா ராமனா  உணர்ச்சிகள் நிறைஞ்ச வெறும் கார்த்திகேயன்தானே? நானும் தவறுசெய்ய நிறைய வாய்ப்பு கிடைச்சுதே!”

    “இப்போ என்னை உத்துப் பாரு!  நான் இந்த  ஐம்பது வயசிலேயும்  கம்பீரமா அழகா ஆண்மையா இருக்கேன்னா…அப்போ  என்னோட வாலிபப் பருவத்திலே நான் எப்பிடி இருந்திருப்பேன்னு  உன்னாலே கற்பனை செஞ்சு பாக்க  முடியுதா?”

    “என்னோட  பழைய போட்டோவெல்லாம் பார்த்துட்டு  உண்மையிலேயே  நீங்க  அழகாத்தான் கவர்ச்சியாத்தான் இருக்கீங்கன்னு  ஒருநாள்  ரசிச்சுச் சொல்லிட்டு,   ஏங்க உங்களை யாருமே காதலிக்கலையா  நீங்க  வேற யாரையுமே காதலிக்கலையான்னு கேட்டியே நியாபகம் இருக்கா?”

    “நான்கூட   சே……… சே  அதெல்லாம் ஒண்ணுமில்லேன்னு வழிஞ்சேனே  அதை அப்பிடியே  நம்பி என்னோட  இத்தனை வருஷமா குடித்தனம் நடத்தறியே… உன் மனசிலே  என் மேலே  சந்தேகமே வரலியா? வந்திருக்கும்  ஆனாலும் நம்மோட புருஷன்  நல்லவன்னு   நம்பியோ இல்லே….சரி நாம கல்யாணம் செஞ்சிகிட்டு வரதுக்கு முந்தி ஏதாவது நடந்திருந்தா  அதைத் தோண்டியெடுத்து கவலைப் படறதிலே  என்ன உபயோகம்  நமக்கு கல்யாணம் ஆகி  இந்த ஆளு  நம்மோட  புருஷனா  ஆயிட்டாரு  இனிமே இந்த  ஆளை நம்ம கையிலே வெச்சிக்கணும்னு அதுதான் வாழ்க்கை  அப்பிடீன்னு புரிஞ்சு  புத்திசாலித்தனமா  ப்ராக்டிகலா வாழ்ந்தியான்னு யோசிச்சேன்”

    “எது எப்பிடி இருந்தாலும்  என்னமோ ஒரு அலசல்  சுய அலசல் . ஆனா சத்தியமா என்னைப் பொறுத்த  வரைக்கும்  உன் மேலே  ஒரு துளிக்கூட  சந்தேகமே எனக்கு வந்தது கிடையாது.  அதுனாலே எனக்கு எந்த  உறுத்தலும் இல்லே”

    “ஆனா  நான் நல்லவன் தானான்னு அப்பப்போ சந்தேகம் வரும். யோசிப்பேன்… அப்பிடி யோசிச்சதிலே எனக்கு கிடைச்ச  விடையைத்தான்  உனக்கு இன்னிக்குச் சொன்னேன்” என்றார் கார்த்திகேயன்”

    “அப்பிடி ஏன் உங்களுக்கு தோணுது? ஏதாச்சும் தப்பு பண்ணீங்களா”  என்றாள் சௌதாமினி.

    “இந்தக் கேள்விக்குதான்  விடையைத் தேடிகிட்டு இருக்கேன்” அவ்ளோ நல்லவன் இல்லேன்னு விடை வந்தாலும்… நானும் நல்லவன்தான் அப்பிடீன்னு ஒரு விடையையையும்  சொல்லுது மனசு என்றார் கார்த்திகேயன்.”

    “ஏன் தெரியுமா?  தைரியம் இல்லாமலோ,  பயத்தாலோ அல்லது மனசாட்சி, கடவுள், பாவம் புண்ணியம் எல்லாம் கலந்த ஒரு உணர்வாலோ  இல்லே  ஏதோ தெய்வத்தோட அருளாலோ எவ்வளவோ  சந்தர்ப்பம் கிடைச்சும் நான்  தப்பு பண்ணலேன்னு  சொல்றதைவிட   தப்பு பண்ண முடியலேன்னு சொல்றதுதான்  உண்மை”

    “மனசிலே  நிறைய  தப்பெண்ணம் வந்தாலும் அது பாவம்தான்  அப்பிடீன்னாலும்   உடம்பாலே  எந்த   தப்பும் செய்யாமே  இருந்தோம்   அப்பிடீங்கற திருப்தி ஒண்ணுதான் இன்னமும் என்னைத் தலை நிமிர்ந்து நல்லவன்னு நெனைக்க வைக்குது“

    “அதுக்கு என்னைச் சரியா வழிநடத்தின எங்க அப்பா அம்மாவுக்கும்  இறைவனுக்கும்  நான் நன்றி சொல்லிகிட்டே இருக்கேன்”

    “ஆனாலும் நான் ஒண்ணும் அவ்ளோ கெட்டவன் இல்லே  நல்லவன்தானே”   என்றார் கார்த்திகேயன்

    மொத்தத்தையும் கேட்டுவிட்டு  அவரைக் கட்டிக்கொண்டு அவர் கண்களையே உற்றுப் பார்த்து “அப்பிடிப்பாத்தா  நீங்களும் நல்லவர்தான்  நானும் நல்லவதான்  என்றாள் சௌதாமினி”

    ”மணி வெளுக்கச் சாணை உண்டு
    மனம் வெளுக்க வழி உண்டோ?” என்று எங்கிருந்தோ  பாடல் கேட்டுக்கொண்டிருந்தது.

    சுய அலசல் செய்து அங்கே மனிதம் நிமிர்ந்தது.   இருவரும்  மனம்விட்டுச் சிரித்தனர்.

    சுபம்

     

     

     

    Share
  • சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

    -க.பிரகாஷ் 

    விருந்தோம்பல்

         விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவுமுறை. பொதுவாக விருந்தோம்பல் உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பதுண்டு.  ஆங்கிலத்தில் விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ என்று குறிப்பிடுகின்றனர். இது இலத்தீன் மொழிச் சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ ‘அதிகாரம் கொள்ளல்’ எனப் பொருள்படுவதான ‘ஹாஸ்டடிஸ்’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ‘ஹோஸ்ட்’ என்பதன் பொருள் சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் அந்நியர்களின் பெருமகன் எனப் பொருளாகும்.

         ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ் என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஜீயஸ் கடவுளை ஜெனோஸ் ஜீயஸ் (ஜெனோஸ் என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்டறிந்து கொள்ளும் வழக்கம் உண்டு.

    பண்டைய கால விருந்தோம்பல்

         பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு விருந்தேம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதிசெய்து கொள்வது ஒரு புரவலனின் கட்டுப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா என்பதன் பொருள் விருந்தாளி – நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.

         பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப்பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசில் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்திய கடவுளரான ஜீயஸ் மற்றும் ஹெர்ரமஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில் பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும் இத்தம்பதி இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுள் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை கொடுக்கின்றனர்.

    செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்பல்

         விருந்தோம்பல் என்னும் பண்பு, குறிப்பாக, பாதுகாப்பு அளிப்பது ஆகும்.  செல்ட்டிக் நாகரிகத்தைச் சார்ந்த சமூகங்களில் மிகுந்த அளவில் மதிப்புற்றிருந்தது. அடைக்கலம் கேட்டு வரும் ஒருவருக்குப் புரவலரானவர், உண்டியும் உறைவிடமும் மட்டும் அன்றித் தமது கவனிப்பில் இருக்கையில் அவருக்குத் தீங்கு ஏதும் நேராத வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு யதார்த்தமான வாழ்க்கையில் உதாரணம் ஒன்றை வரலாறு அளிக்கிறது.

    கி.பி 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்தது ஸ்காட்டிஷ் மெக்கிராகோர் எனும் குலம். இலாமோண்ட் என்னும் குலத் தலைவர் கிளைன்ஸ்டிரேவில் வாழும் மெக்கிராகோர் தலைவரின் இல்லத்தை அடைந்து தாம் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகக் கூறி அடைக்கலம் கோருகிறார். தமது சகோதரத் தலைவரை கேள்விகள் ஏதும் கேட்காமலேயே மெக்கிரோகர் வரவேற்கிறார். பின்னர், இரவுப் பொழுதில் இலாமோண்ட் தலைவரைத் தேடி வரும் மெக்கிரகோர் குல மக்கள் மெக்கிரகோரிடம் உண்மையில் அவரது மகனையே இலாமோண்ட் தலைவர் கொன்றுவிட்டதாக குறிப்பிடுகின்றனர். விருந்தோம்பலின் புனிதக் கடமையின் பாற்பட்டு மெக்கிரோகர் தலைவர் இலாமோண்ட்டைத் தனது குல மக்களிடம் ஒப்படைக்க மறுப்பது மட்டும் அல்லாது மறுநாள் காலை அவரை அவரது பூர்வீக இடத்திற்குத் தாமே வழித்துணையாக உடன்சென்று அனுப்பிவைக்கின்றார்.

    இந்தியாவில் விருந்தோம்பல்

         உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான கலாசாரங்களைப் போலவே விருந்தோம்பல் உள்ளிட்ட பல அருமையான பண்புகளை இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. மூடன் ஒருவன் அழையாத விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில் தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம் பூண்ட இறைவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது தாராள மனத்திற்காகக் கடவுள் அவனுக்கு மிகுந்த செல்வமளிக்கிறார்.

         பசியுடன் இருக்கும் அனைவரும் உண்பதற்காகப் பெண் ஒருத்தி தன்னிடம் இருக்கும் கிச்சடி அனைத்தையும் சமைத்து அளிக்கிறாள். ஒரு நாள் அவளிடம் இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடவே இறுதியாகப் பசியுடன் வரும் ஒருவனுக்குத் தன் உணவையே அவள் அளிக்கையில் இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது நிறைந்தே இருக்கும் கிச்சிடி கொண்ட பாத்திரம் ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் தாம் இருந்த காலம்தொட்டே இத்தகைய கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் என்பதை உணர்ந்து, சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின்பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்த அணுகு முறையை உருவாக்கினர்.

    எனவே தமிழில் படைக்கப்பட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் விருந்தோம்பல் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

    “…………………………………………………………………………………………….
         உண்டாயின் பதம் கொடுத்து
         இல்லாயின் உடன் உண்ணும்
         இல்லோர் ஒக்கல் தலைவன்
        அண்ணல் எம்கோமான், வைந் நுதி வேலே”                (புறம் – 95)

         செல்வமுடையராய் இருக்கும்போது உணவு கொடுத்தும், இல்லாதபோது இருப்பதைப் பகிர்ந்து உடன் உண்ணும் வறியோர் சுற்றத்திற்குத் தலைவனும், தலைமை சான்றவனுமாகிய வேந்தன், அவனுடைய கூரிய துனியையுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து குறுகிய பணிக் களரியில் கிடப்பனவாயின.

         “ஒரு தலைப் பதலை தூங்க ஒரு தலைத்
           தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
           கவிழ்ந்த மண்டை மலர்க்கு நர்யார் எனச்
          சுரன் முதல் இருந்த சில்வளை விறலி”                                     – (புறம் – 103)

         தோள் அமையினது ஒருபுறத்தே பதலை என்னும் கருவி தொங்குகின்றது. மற்றொரு புறத்தே துளையுடைய சிறிய முழா தொங்குகின்றது. இவற்றைச் சுமந்தவாறே எமக்கு உணவு இடுவார் யாருமிலராயினர். எமக்கு உணவு இட்டு கவிழ்ந்து கிடைக்கும் உண்கலத்தை மலர்த்த வல்லார் யாரெனச் சொல்லிச் சுரத்திடையே வந்திருந்து வருந்தும் விறலியே… நீ அவனிடத்துச் செல்வையாயின், பல வேற்படையையுடைய அதியாமான் ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் படுதலால் ஈரம் காயாத உண்கலத்தில் மெழுகான் இயன்ற மெல்லிய அடைபோலக் கொழுத்த நிணம் மிக அளித்தல் வல்லன்.

         “………………………………………………………………………………………………
         பிறர் அஞ்சுவது அஞ்சி
         புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழிஎனின்
         உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
         அன்ன மாட்சி அனையர் ஆகி”  ( புறம் – 182)

         தேவர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தாலோ தவத்தாலோ தமக்க வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலும் இலர். யாரோடும் வெறுப்பிலர் பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி, அது தீர்த்தற் பொருட்டுச் சோம்பியிருத்தலும் இலர். புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர், பழியெனின் அதனால் உலகம் முழுதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை இல்லார். அத்தகைய மாட்சிமைப்பட்ட தன்மையராய், தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் சான்றோரால் இவ்வுலகம் இருக்கின்றது.

         தனித்துத் தாம் மட்டும் உண்ணுவதை விரும்பார்; இதனை இனிது எனத் தமியர் உண்டலும் இலர் என்றார். யாவரிடத்தும் அன்புடையர் என்பதை உணர்த்த முனிவிலர் என்றும் அஞ்சத்தகும் துன்பத்திற்கு அஞ்சி, அதனால் செயல்படாது சோம்பியிரார் என்பதை ‘துஞ்சலும் இலர்’ என்று குறித்தார்.

         “உண்க என உணரா உயவிற்று ஆயினும்     ………………………………………………………………………………………………………………………..
         வரகும் தினையும் உற்றவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென
        …………………………………… கூட்டு” ( புறம் – 333)

         தம்மிடம் உள்ள வரகும் தினையும் இரவலர்க்கு வழங்கப்பட்டுவிட்டன. குறி எதிர்ப்பாகத் தந்த பொருள்களும் கிடைக்கப் பெறவில்லை. வீரனின் மனைவி, விதைப்பதற்காக வைத்திருந்த தினையைக் குத்தி உணவு சமைத்து வழங்கினாள். அவ்வுணவே போர் மேற்செல்லும் வீரனின் உணவுமாயின. ஒரு வீரனின் மனைவியின் விருந்தோம்பும் இயல்பு இப்பாடலால் விளக்கப்பட்டுள்ளது. பகைவரொடு போர் செய்வதற்கு அரசர்கள் வழங்கும் பொருளை அவன் பாணர் முதலியோர்க்கும் பரிசாக வழங்குவான்.

         “எழுதி யன்ன திண்நிலைக் கதவம்
         கழுதுவழங்கு அரைநாள் காவல் மடிந்தென     ……………………………………………………………………………………………………..
         இம்மை உலகத்து இல் எனப் பல்நாள்
         பொம்பல் ஓதி நீவிய காதலொடு”  (அகம் – 311)

              மழை பெய்யாது பொய்த்தமையால் திசையெல்லாம் வெப்பம் மிகுந்தது. பாலைவழி வருவோரைப் பேணிக் காக்கும் பண்பினைப் பெற்ற வெற்றி ஆயர்கள் இளைய எருதுகளின் எழுத்தில் கட்டிய மூங்கில்குழாயுள் அடைத்து வைத்த சுவைமிக்க புளிச் சோற்றினை தேக்கின் இலையில் இட்டு அப்புதியோரின் பசி நீங்கக் கொடுத்தார்.

         அத்தகைய புல்லி என்பானது நல்ல நாட்டின் அப்பாலுள்ள கடத்தற்கரிய பாலை வழியைக் கடந்து நம் தலைவர் சென்றிருந்தாலும் காலந் தாழ்த்தாது நின்னை நினைந்து விரைந்து வருவார்.

         “ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்              முல்லை சான்ற கற்பின்
          மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே”

                                           ( நற்றி – 142)

         இரவு நேரத்தே விருந்து வரினும் உவப்பவள் என் தலைவி. அவள் என்சொற் கேட்டு இல்லிருந்து நல்லறம் செய்யும் கற்பினையும், மென்மையான இயல்பையும் இளமையையும் உடையவள் ஆவாள். அத்தகைய காதலி தங்கியிருப்பதும் பொய்யாத வருவாயுடையதுமான ஊர் காட்டகத்தே அமைந்தது.

    ***** 

    குறிப்புகள்: 

    சங்க இலக்கியம்
    புறநானூறு – 1, 2
    அகநானூறு – 1, 2
    குறுந்தொகை – 1, 2
    நற்றிணை – 1 – நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    41 – பி -சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட்
    அம்பத்தூர், சென்னை – 098

    *****

    க.பிரகாஷ்
    தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர் ( பகுதி நேரம்)
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்  – 46

    க. பாலசுப்பிரமணியன்

    மூளையின் பாதிப்புகளும் கற்றலும்

    education-1-1

    கற்றலின் போது மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. பார்க்கின்ற ஒவ்வொரு வார்த்தையின் எழுத்துக் கூட்டங்களையும் அதனுள் அமர்ந்துள்ள கருத்துப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து மூளை அதன் பொருளை எளிதாக நமக்கு கொடுக்கின்ற ஒரு செயல் விந்தையானது மட்டுமல்ல, அது மிகவும் துரிதமானது.  அதே போல் காதில் விழுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் அலசி ஆராய்ந்து அது எந்த மொழியைச் சார்ந்தது என்று அறிந்து அதற்க்கான பொருளை நமக்கு எடுத்துரைப்பதும் ஒரு விந்தையான செயல். உதாரணமாக. காதில் விழுகின்ற “மோர்” என்ற வார்த்தையை உள்வாங்கி அது தமிழ் சொற்களின் கூட்டமைப்பில் வந்ததா, அல்லது ஆங்கில சொற்கூட்டங்களில் பிறந்து வந்ததா அல்லது இந்தி மொழியின் சொற்றொடர் நடுவே வந்ததா என ஆராய்ந்து அதற்கான பொருளாக தமிழில் “பாலின் வழிவந்த ஒரு நீரான உணவையும் “, ஆங்கிலத்தில் “இன்னும்” என்ற பொருள் கொண்ட பரிமாணத்தையும், இந்தியில் “மயில் “என்று பறவையையும் பொருளாகாத் தருகிறது. மூன்று மொழிகளும் அறிந்த ஒருவருக்கு மூளை இடத்திற்கும் சம்பந்தத்திற்கும் தகுந்தவாறு சரியான பொருளைத் தருகிறது!

    இப்படிப்பட்ட செயல்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் நடக்கும் விதமும் தனித்தனியானது. மாணவனுடைய கற்கின்ற சூழ்நிலைகள், அவனுடைய முன்னார்வம், முந்திய கற்றலின் அளவுப் பரிமாணங்கள் ஆகியவற்றைச் சார்ந்து இந்தக் கற்றலும் அதன் திறன்களும் வெளிப்படும். ஆகவே, ஒரு புத்தகத்தையோ அல்லது பாடத்தையோ ஒரு மாணவன் கற்கும் பொழுதும், தன் கற்றலை வெளிப்படுத்தும் பொழுதும் அதனை மற்ற மாணவர்களுடைய கற்றலோடு ஒப்பிடுதல் மிகவும் தவறானதாகவும் பயனற்றதாகவும் அமையும்.

    ஒரு குழந்தைக்கு மூளையின் நரம்புகளில் தளர்ச்சிகள் ஏற்பாட்டிருந்தாலோ, அல்லது மூளையின் நரம்போட்டங்களின் வலைத்தளங்களில் பாதிப்புகள் இருந்தாலோ அல்லது மூளையின் ஏதாவது ஒரு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ அது கற்றலின் பரிமாணங்களை பாதிக்க வாய்ப்புக்கள் உண்டு.

    பொதுவாக எழுத்துக்களையும் எண்களையும் மாற்றி படிக்கும் தவறுகளை ஏற்படுத்தும் dyslexia (டிஸ்லெக்சியா) என்னும் கற்றல் சார்ந்த பாதிப்புகள், உருவங்களைத் தவறாகப்  புரிந்துகொண்டோ அல்லது வெளிப்படுத்தும் செயல்கள் dysgraphia (டிஸ்க்ராபியா) போன்ற பாதிப்புகள், மற்றும் கணிதத்தில் எண்களைத் தவறாக பயன்படுத்தும்  dyscalculia (டிஸ்கேல்குலியா) போன்ற பாதிப்புகள் இந்த மாதிரித் தளர்ச்சிகள் காரணமாக வர வாய்ப்புண்டு.

    இந்த பாதிப்புகளை சிறிய வயதில் கண்டுபிடுத்து சீர்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகள் இருப்பவர்களில் பல பேர்கள் வாழ்க்கையில் சிறப்பான நிலையையும் புகழையும் அடைந்துள்ளனர். இந்த பாதிப்புக்களை பொதுவாக ஒரு நோயாகவோ அல்லது இயலாமையாகவோ கல்வியாளர்கள் கருதுவதில்லை. இவைகளை  சிறிய கற்றல் விதிமுறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் சீர் படுத்த முடியும். ஐன்ஸ்டீன், ஹென்றி போர்ட், வால்ட் டிஸ்னி, ரிச்சர்ட் பர்டன் போன்று வாழ்க்கைப் பாதையில் சாதனைகளைப் படைத்தவர்கள் இது போன்ற பாதிப்புக்களைச் சமாளித்து வாழ்க்கையில் வெற்றிநடை போட்டவர்கள்.

    மூளையின் வடிவமைப்பில் சில கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டவர்களிலும் வெற்றிநடை போட்டவர்கள் பலர் உண்டு.

    1951ஆம் ஆண்டு பிறந்த கிம் பீக் என்றவருக்கு மூளையில் கார்ப்ஸ் காலசோம் (CORPUS CALLASOM) என்ற பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தப் பகுதி வலது மூளையின் செயல்களையம் இடது மூளையின் செயல்களையும் ஒருங்கிணைத்து செயல்படுகின்றது. அதே போல் மூளையில்  (CEREBELLUM)என்னும் பகுதியும் பாதிக்கப் பட்டிருந்தது. ஆகவே இளம் வயதில் பள்ளிகளில் இவரால் மற்றவர்களுக்கு இணையாக படிக்க முடியவில்லை. மேலும் இவர் புத்தகங்களைப் பார்க்கும் விதமும் விந்தையாக இருந்தது. ஆகவே இவர் பல பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்

    ஒருநாள் இவர் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் தற்செயலாக கவனித்த இவர் தந்தை இவர் தன் இரண்டு கண்களால் புத்தகத்தின் இரண்டு பக்கங்களைத் தனித்தனியாகப் பார்ப்பதை கவனித்தார். மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இவரது இரண்டு கண்களும் ஒருங்கிணையாததால் இரு கண்களும் தனித்தனியாக செயல்பட்டன. ஆனால்  இவர் தான் படித்த இரண்டு பக்கங்களின் கருத்துக்களையும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியது மட்டுமின்றி அவற்றை சில வினாடிகளிலேயே தனது நினைவுக்குள் கொண்டுவந்தார். இவருடைய இந்தத் திறனைக் கண்டு அதை வளர்க்க இவர் தந்தை அருகிலுள்ள ஒரு நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். காலப்போக்கில் கிம் பீக் அங்குள்ள 12000 புத்தகங்களைப்  படித்து முடித்தது மட்டுமின்றி அவற்றிலுள்ள கருத்துகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கினார். இவரை மையக்கருத்தாக வைத்து வந்த “Rain Tree “என்ற ஆங்கிலப் படம் ஆஸ்கார் விருதையும் பெற்றது. ஆகவே மூளையில்  ஒரு பகுதியில் பாதிப்புகள் இருந்தாலும் மற்ற பகுதிகள் மூலமாக சிறப்பான கற்றலை பெற முடியும் என்பது மூளை நரம்பியல் வல்லுநர்கள் கருத்து.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(139)

    செண்பக ஜெகதீசன்

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.  (திருக்குறள் -71: அன்புடைமை) 

    புதுக் கவிதையில்…

    அடைத்திடும் தாழ்ப்பாளில்லை
    அன்புக்கு,
    அன்புகொண்டோரின் துன்பங்கண்டு
    உடைத்துவரும் கண்ணீரே
    ஊரறியக் காட்டிவிடும்
    உள்ளத்து அன்பை…! 

    குறும்பாவில்… 

    அன்பை அடைத்திடத் தாழ்ப்பாளில்லை,
    அதுவாய் வெளிவரும் கண்ணீராய்
    அன்புகொண்டோரின் துன்பம் கண்டு…! 

    மரபுக் கவிதையில்… 

    அன்பை அடைத்துத் தடுத்திடவே
      -அடைக்கும் தாழ்ப்பாள் ஏதுமில்லை,
    அன்பு கொண்டோர் வாழ்வினிலே
      -அடையும் துன்பம் தனைக்கண்டே,
    இன்னல் இவர்க்கே வந்ததுபோல்
      -இளகிடும் இவர்தம் கண்ணீரே
    அன்பு நிறைந்த இதயம்தனை
      -அகிலம் அறியக் காட்டிடுமே…! 

    லிமரைக்கூ…

    அன்படைக்கத் தாழ்ப்பாளில்லைத் தடையாய்,
    அன்புடையோர் துன்பங்கண்டு கண்ணீர் பெருகிவரும்
    தண்ணீர் திறந்துவிட்ட மடையாய்…! 

    கிராமிய பாணியில்…

    பூட்டுமில்ல தாப்பாயில்ல
    பொங்கிவாற அன்படைக்க,
    முடியாது முடியாது அடச்சிவைக்க முடியாது
    அன்பத்தான் அடக்கிவைக்க முடியாது… 

    காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்குமே
    கண்ணீரே காட்டிக்குடுக்குமே,
    அடுத்தவங்க துன்பங்கண்டு
    அன்போட
    அழுதகண்ணீரே காட்டிக்குடுக்குமே,
    அன்பத்தான் காட்டிக்குடுக்குமே… 

    அதால,
    முடியாது முடியாது அடச்சிவைக்க முடியாது
    அன்பத்தான் அடக்கிவைக்க முடியாது…!

     

     

    Share
  • ஜஸ்ட் பீட் இட்

    செல்வரகு

                                 ஜஸ்ட் பீட் இட்

    as

    புதுயுகத்தின் வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல் கல்லாக தமிழகத்தின் சிறந்த இசைக்குழுவிற்கான பிரம்மாண்ட தேடல் நிகழ்ச்சி ” ஜஸ்ட் பீட் இட்” தமிழகம் முழுவதும் முதற்கட்ட தகுதிசுற்றை நடத்தி வருகிறது.

    as1

    அதகளமான கோவை, நெல்லை ஆடிஷன்சை தொடர்ந்து திருச்சியில் NITT – வளாகத்தில் இசைக்குழுவிற்கான ஆடிஷன்ஸ் நடைபெறவுள்ளது.

    இந்த ஜஸ்ட் பீட் இட் – திருச்சி ஆடிஷன்ஸில் கலந்து கொள்ள 4 – 8 பேர் கொண்ட குழுவாக தங்கள் அணியை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    as2

    இதில் பங்கெடுத்து இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணி ’ஜஸ்ட் பீட் இட்’ – 2016 க்கான சேம்பியனாகவும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் வெல்லும் அற்புத வாய்ப்பை பெறுங்கள்.

    நடைபெறும் நாள் : 30.09.2016 – வெள்ளி, காலை 9 .00– மணி முதல்.

    NITT வளாகம், தஞ்சாவூர் மெயின் ரோடு

    BHEL அருகாமையில்

    திருச்சி.

    மேலும் விவரங்களுக்கு, 7358771145

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இன்று கேசவ் கிருஷ்ணரைப் பார்த்ததும் , நண்பர் இரா.முருகர் சார், அனுப்பிய பத்து வயது MS அம்மா பாடிய ”மரகத வடிவும்” திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பாடல், நினைவுக்கு வந்தது….அந்த தாக்கத்தில் எழுதியது….!

    kesav

    ”மரக தவடிவை ,மாவிலைப் பச்சை
    நிறமது நெஞ்சில் நிறைய, -பரகதி
    மோட்சம் கொடுத்திடும் மோகன ரூபனின்
    காட்சிக்கு கேசவ் கரம்”….!

    ”மரகத மேனி,மாந்தளிர் பச்சை
    நிறமது நெஞ்சில் நிறைய, -நரகதில்
    வீழாது மோட்சத்தில் வாய்த்திடும் வாழ்வுனக்கு:
    கூழாகும் வெவ்வினைகள் காண்”….!

    நிவேதனம்
    ————–
    திருக்கண் ணமுது, திரள்கின்ற வெண்ணை,
    பருப்புதயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து
    அண்டாவில் சாறு(பழரசம்), அதிரசம் சீடைமுறுக்கு,
    உண்டேனுன் நாமம் உரைத்து….கிரேசி மோகன்….!

    Share
  • ’’குமார சம்பவம்’’….!

    கிரேசி மோகன்

    ————————————-

     

    ஆகாச கங்கையில் ஆதவன் கைகளால்
    வேகா(து) உலர்த்திய வாரிசத்தின் -யோகீசர்
    சூடும் மணிச்சரத்தை செய்யகை பார்வதிதென்
    நாடுடையோன் முன்வைத்து நிற்பு….(189)

    நிச்சயமாய் அன்பர் நிவேதனம் ஏற்றிடும்
    அச்சிவன் மாலையை ஆகம்கொள் -அச்சமயம்
    சம்மோ ஹனஅம்பை தம்வா கனவில்லுக்(கு)
    அம்மால் அனங்கன் அளிப்பு….(190)

    சந்திரன் தோன்றிட சற்றே கலக்கமுற்று
    வெண்திரை கொந்தளிக்கும் வாரிதியாய் -தன்திரம்
    கொஞ்சம் கலைய ,கனியிதழ் பார்வதியை
    நஞ்சுண்டோன் மூவிழியால் நோக்கு….(191)

    கேசரங்கள் கொண்ட கதம்பமொத்த அங்கங்கள்
    ஆசையுடன் கூர்ச்செரிந்து ஆர்ப்பரிக்க -நேசமுடன்
    ஓர விழியால், ஒருபக்கம் சாய்ந்தவண்ணம்
    பூரணனைப் பார்வதி பார்ப்பு….(192)

    புலனடக்கம் செய்வதில் பேர்போன ஈசன்
    நிலநடுக்க மாய்தன் நிலைக்குள் -தலையெடுத்த
    போக்கைத் தகர்த்தெறிந்து தாக்கம் தனையறிய
    நோக்கினார் நாற்திசையும் நன்கு….(193)

    வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
    காமன் வளைத்துவில்லை கண்வரை -ஆமளவு
    நான்றிட தோளிரண்டும் நாணிழுத்துக் கால்வலதை
    ஊன்றிடப் பார்த்தனன் உற்று….(194)

    (OR)

    வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
    காமன் வளைத்துவில்லை, கண்வரை -ஆமளவு
    நாணிழுத்துக் கால்வலதை ஊனிட தாருக
    கானழித்தோன் கண்ணில் கனல்….(194)

    அகத்துற்ற உக்கிரம் அச்சமுறும் வண்ணம்
    முகத்தில் புருவ முறிப்பாய் -விதிர்த்திட
    நெற்றி விழிதன்னில் நீண்ட ஒளிபிறப்(பு)
    உற்று வளர்ந்ததாம் ஊழ் (OR) ஓம்….(195)

    ’’அய்யனே கோபம் அடக்குங்கள்’’ என்றமரர்
    குய்யோ முறையோ குரலொலி -உய்யும்முன்
    சீறும் சிவன்கண் சுடரொளி சூழ்ந்திட
    மாறன் பிடிசாம்பல் மண்….(196)(LIGHT travels FASTER than SOUND என்று கவியின் ஞானம் பிற்காலத்தில் விஞ்ஞானமாய் ஆகியது -லிஃப்கோ உரையாசிரியர்….)

    என்ன நடந்ததோ என்றறியா விட்டாலும்
    இன்னலென்றே நெஞ்சு இறைந்திட -தன்னவன்
    சாவை அறியா சதிரதி மூர்ச்சையால்
    பூவெனச் சாய்ந்தாள் புறத்து (OR) புவி….(197)

    இடிவிழ இற்று ஒடியும் மரமாய்
    இடபர் தவத்திற்க்(கு) இடராய் -விடிந்த
    அனங்கனை சாய்த்து அணங்கினை நீங்கி
    கணங்களுடன் சென்றார் கலைந்து….(198)

    தந்தை விருப்பமும் தான்சிவன் மேல்கொண்ட
    விந்தையாம் காதலும் வீணாக -நொந்தவள்
    துக்கிரித் தோழியர்முன் தோற்றதால் பார்வதி
    வெக்கமுடன் ஏகினாள் வீடு….(199)….

    சர்கம் நான்கு(ரதி விப்ரலம்பம்-ரதியின் பிரிவுத் துயர் புலம்பல்)
    —————————————————————————————————————-

    ஆங்கு மயக்கத்தில் ஆழ்ந்த அமைதிக்குத்
    தாங்கொணாத் துன்பம் தெளித்திட -தீங்காம்
    விதியெழுப்பிப் ‘பெண்ணே விதவைநீ’ என்று
    ரதியறியச் செய்வு ரசித்து….(200)….கிரேசி மோகன்….

     

    Share
  • ’உந்து தமிழ் கந்தன் களிப்பு’’….!

    கிரேசி மோகன்
    —————————————————–

     

    பாம்பணைப் பள்ளிப் பெருமாள் மருகோனைத்
    தாம்புனைந்தார் சந்தத் தமிழ்கொண்டு -பாம்பன்
    குமர குருதாசர் கூறு கவசம்
    அமரநிலை சேர்க்கும் அமுது….(7)

    சாம்பவி புத்திரனே சம்பு புதல்வனே
    மாம்பழ வாயன் மருகோனே -பாம்பன்
    அடிகள் அழைக்க அழகுமயில் ஏறி
    சடுதியில் வந்தோய் சரண்….(8)

    தந்தைக்கு மிக்கதோர் மந்திரம் கூறிய
    எந்தையே ஏரகக் கந்தனே -முந்தைப்
    பழவினைகள் போக்கி புதுவினைக்கு ஞானக்
    கிழவனாய் வந்தெனையாட் கொள்….(9)

    ஆறு முகம்கொண்டோய் ஆறு படைநின்றோய்
    கோறும் அடியார் குறைதீர்க்கும் -மாறுபடு
    சூரனைக் கொன்ற சுரமகள் கேள்வனே
    பாரெனைத் தாயாய் பரிந்து….(10)

    கந்தா குஹாகடம்பா கார்த்திகே யாவென்று
    உன்தாள் பணிந்து உவப்புடன் -அந்தாள்
    அருணகிரி போலே வருணகவி பாட
    தருணமிது தாராய் தமிழ்….(11)

    அண்ணா மலைதீபம், உண்ணா முலையுந்தி,
    விண்ணாளும் தேவர்தம் வெற்றி, -எந்நாளும்,
    காப்பதற்குக் கையில், கதிர்வேல் கொண்டவனாம்,
    தீப்பொறி தோற்றத்தைத் தொழு….(12)….கிரேசி மோகன்….!

    Share
  • பெருமாள் திருப் புகழ்…. திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்

    கிரேசி மோகன்

    திருவள்ளூர் திரு.என்.சி.ஸ்ரீதர் அவர்களின் உபயத்தால் ஒரு அம்மாவசையில், அவர் துணை திரு.நாராயணன் அழைத்துச் செல்ல ‘’வீர ராகவப் பெருமாளை’’ தரிசித்தேன்(மாளைய அம்மாவசை ஸ்பெஷல்)….!ஆஹா ஏரிகாத்த ராமர்”எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர…. (திரு +எவ்வுள்+ஊர்-திருவள்ளூர்) ….வீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்….

    பெருமாள் திருப் புகழ்….
    திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்
    ———————————————————–

    தய்யான தான தானன தய்யான தான தானன
    தய்யான தான தானன -தனதான

    “பொல்லாத நோயில் வாடிட தள்ளாது தேகம் ஆடிடும்
    செல்லாத காசு ஆகுவை -அதனாலே,
    அவ்வேளை சோணை மாமலை உள்ளுறும் தீயில் ஸ்நானம்செய்
    வல்லானவ் ஆல வாய்மகன் -ரமணேசர்

    சொல்லாத மோன பாஷையை அவ்வாறே நானும் பேசிட
    செவ்வேளின் தாயின் சோதர -அருள்வாயே
    செய்யாளின் மீது ராவண ஒவ்வாத காம மோடுயிர்
    கொய்யேவு வாளி வீசிடும் -ரகுராமா

    கல்லேறி சாபம் தீரவும் ,முள்ளேறி பாதம் நோகவும்
    கள்ளுறும் கேச ஜானகி -இளையோனும்
    அய்யாவுன் கூட ஏகினும் ,மெய்யான போதும் மானுட
    பொய்யான மாய மேனியில் -தளர்வாகி

    புள்ளுர்தி ஆழி நாகணை செல்லாழி சோழி யாவையும்
    கொள்ளாது ஒய்வு காணவும் -புயமாளும்
    வில்லோரம் வீசி சாலியர் நல்லோரின் மீது ஊணிடும்
    வள்ளுரின் வீர ராகவ -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    புள்ளூர்தி -கருட வாகனம்….ஆழி நாகணை -பாற்கடல் பாம்பு மெத்தை….!
    செல்லாழி -சுதர்சன சக்கிரம்….சோழி -வெண்சங்கு….
    ————————————————————————————————————

    Share
  • போட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து!

    bagy3

    ‘அய்யனார் வீதி ‘ படக்கதை. இப்படத்தில் ஐயராக பாக்யராஜும், ஐயனாராக பொன்வண்ணனும் நடித்துள்ள னர்.. ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். யூ.கே..முரளி இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ளனர்.

    இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கேவி ஸ்டுடியோவில் இன்று நடந்தது.

    bagya

    பொதுவாக சினிமா விழாக்களில் வாழ்த்திப் பேசும்போது ‘இந்தப்படம் நூறுநாள் ஓடவேண்டும்’,’ வெற்றிவிழாவில் சந்திப்போம் ‘என்றெல்லாம் மிகையாகப் பேசி வாழ்த்துவதுண்டு. இன்றைய சினிமா சூழலில் நூறுநாள் ஓடுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும்.. ஆனாலும் விழாவுக்கு விழா அப்படித்தான் கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் ‘அய்யனார் வீதி’ படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு விட்டு அந்த விழாவில் பேசிய கே.பாக்யராஜ், ‘தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் ‘ என்று யதார்த்தமாக பேசினார்.

    விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது ,

    ” இந்தப் படத்தில் நான் நடித்த போது தயாரிப்பாளர் செந்தில்வேலின் சுறு சுறுப்பைக் கண்டேன். அவருடன் தயாரிப்பில் இணைந்து கொண்டிருக்கிறார் அவரது நண்பர் விஜயசங்கர். பொதுவாகவே சினிமாவில் யாரும் துணைக்கு வரமாட்டார்கள். நீ முன்னாலே போ; நான் பின்னாலே வருகிறேன் என்பார்கள். முன்னாடி போகவிட்டு போகிறவனை ஆழம் பார்ப்பார்கள். ஆனால் அப்படிப் பார்க்காமல், அவரது நண்பர் உடன் வந்து இணைந்திருக்கிறார்.

    bagy2

    இப்போது எனக்கு என் பழைய நினைவு வருகிறது.அன்றைக்கு ‘நீ முன்னாலே போநான் பின்னாலே வருகிறேன்’ என்று இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் .நானும் அவரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில்தான் படித்தோம். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அவர் வேறுபள்ளிக்குப் போனார். நாங்கள் நண்பர்கள்தான் .என்னைப் போலவே அவருக்கும் சினிமா மீது ஆர்வம்.ஆனாலும் லேசா பயம் .அதனால் வரத் தைரியமில்லை. ஆனால் நான் துணிச்சலாக சென்னைக்கு வந்து விட்டேன் .நான் சோறு தண்ணி பார்க்க மாட்டேன். அவருக்கு சாப்பாடு சரியாக இருக்க வேண்டும்.

    நான் இங்கு வந்தேன். கஷ்டப் பட்டேன். உதவி இயக்குநராகச் சேர்ந்து விட்டேன். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்தேன். நான் 92 சி எண்ணுள்ள என் அறையில் இருப்பேன்.அங்கு வருவார். வந்து என் நிலைமையைப் பார்த்து விட்டுப் போவார். நான் உயர்ந்த பிறகு அவரை ஊர்க்காரர்களே விட வில்லை. பாக்யராஜே பெரிய ஆளாய்ட்டார். நீ இங்கு என்னசெய்கிறாய் எனப்.. பாடாய்ப் படுத்த,அவர் புறப்பட்டு விட்டார். இங்கு வந்து பாண்டிபஜார். ,தேனாம் பேட்டை என என்னைப் போலவே இருந்து அவரும் பெரிய ஆளாகிவிட்டார்.

    bag1
    அப்படி இல்லாமல் விஜயசங்கரோ கூடவே வந்து விட்டார். இந்தத் தயாரிப்பாளர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. நான் இந்தப் படத்தில் ஆரம்பிக்கும் முன்பு இல்லை. ஆரம்பித்த பிறகுதான் உள்ளே வந்தேன். படத்துக்காக சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தினார்கள். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்துவது ஒரு பெருமையாக இருந்தாலும் சில நேரம் தொந்தரவாகிப் பதற்றமாக இருக்கும்.

    ராஜபாளையத்தில் நான் படப்பிடிப்பு நடத்தியது இல்லை. இந்தப் படத்துக்காகத்தான் போனேன். போனபிறகுதான் தெரிந்தது, அங்கே எனக்கு வேண்டியவர்கள் பலபேர் இருந்தார்கள். இதில் நடித்த போதுதான் ஐயனார் பற்றியே எனக்கு விரிவாகத் தெரிந்தது. படத்தில் 108 ஐயனார் பற்றிய பாடலும் வருகிறது.

    படத்துக்கு வெறும் ஐயனார் மட்டும்போதாது படத்தில் இளைஞர்களும் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.இளைஞர்யுவனும் நடித்திருக்கிறார். இந்தப்படம் பற்றிப் பெரிய பேராசை எல்லாம் இல்லை. தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் என்று மட்டும் வாழ்த்துகிறேன்..தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் ,அவர் தப்பித்துக்கொள்வார். நிறைய படங்கள் எடுக்கும் தைரியம் வந்து விடும்.பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு வந்து விடுவார். ” என்று கே.பாக்யராஜ் இயல்பாகப் பேசி படக்குழுவினரை வாழ்த்தினார்.

    முன்னதாக தயாரிப்பாளர் செந்தில் வேல் பேசும் போது,

    “ஒரு ரசிகனாக தியேட்டர் போய் பாக்யராஜ் சார் படம். பார்த்தவன் நான். அவரையே என்படத்தில் நடிக்க வைத்தது எங்கள் பாக்யம்” என்றார் பிரமிப்புடன்.

    பாடலாசிரியர் ப்ரியன்பேசும் போது,

    ” படத்துக்குப் பாடல் எழுதுவது என்பது ஒரு வகை. இதில் பாடல் ,தானே வந்தது. ஐயனார் பற்றிய தேடலில் 108 ஐயனார்கள் பற்றித் தேடித்தேடி திரட்டி ஒரு பாடல் உருவாக்கினோம். இப்போதெல்லாம் ஒரு திரைப்படக் பாடலுக்கு மாதக்கணக்கில் மட்டுமே ஆயுள் இருக்கிறது. சூழல் அப்படி இருக்கிறது.” என்றார் கவலையுடன்.

    இயக்குநர் ஜிப்ஸி என். ராஜ்குமார் பேசும் போது,

    ” இந்தப் படத்தில் பாக்யராஜ் சார் நடிப்பதாக இருந்தால் மட்டுமே மேலே செல்வது என்பதில் கவனமாக இருந்தேன். அவர் வந்ததும் அது படத்துக்குப் பெரிய பலமாக மாறியது. அவரும் பொன்வண்ணன் சாரும் இந்தப் படத்தைத் தங்கள் தோளில் சுமந்திருக்கிறார்கள்.”என்றார் மகிழ்ச்சியுடன்.

    நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் சக்திவேல், இசையமைப்பாள்ர் யூ.கே.முரளி,தயாரிப்பாளர் விஜயசங்கர். நாயகன் யுவன்.பி.ஆர்ஒ.சங்கப் பொருளாளர் விஜயமுரளி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

    விழாவில் பி.ஆர்ஒ.சங்கத்தின் தலைவர் டைமண்ட்பாபு, செயலாளர் ஏ.ஜான், பொருளாளர் விஜயமுரளி , வி. பி மணி ,முன்னாள் செயலாளர் பெரு.துளசி பழனிவேல் ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர்,

    Share