குறளின் கதிர்களாய்…(139)
–செண்பக ஜெகதீசன்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (திருக்குறள் -71: அன்புடைமை)
புதுக் கவிதையில்…
அடைத்திடும் தாழ்ப்பாளில்லை
அன்புக்கு,
அன்புகொண்டோரின் துன்பங்கண்டு
உடைத்துவரும் கண்ணீரே
ஊரறியக் காட்டிவிடும்
உள்ளத்து அன்பை…!
குறும்பாவில்…
அன்பை அடைத்திடத் தாழ்ப்பாளில்லை,
அதுவாய் வெளிவரும் கண்ணீராய்
அன்புகொண்டோரின் துன்பம் கண்டு…!
மரபுக் கவிதையில்…
அன்பை அடைத்துத் தடுத்திடவே
-அடைக்கும் தாழ்ப்பாள் ஏதுமில்லை,
அன்பு கொண்டோர் வாழ்வினிலே
-அடையும் துன்பம் தனைக்கண்டே,
இன்னல் இவர்க்கே வந்ததுபோல்
-இளகிடும் இவர்தம் கண்ணீரே
அன்பு நிறைந்த இதயம்தனை
-அகிலம் அறியக் காட்டிடுமே…!
லிமரைக்கூ…
அன்படைக்கத் தாழ்ப்பாளில்லைத் தடையாய்,
அன்புடையோர் துன்பங்கண்டு கண்ணீர் பெருகிவரும்
தண்ணீர் திறந்துவிட்ட மடையாய்…!
கிராமிய பாணியில்…
பூட்டுமில்ல தாப்பாயில்ல
பொங்கிவாற அன்படைக்க,
முடியாது முடியாது அடச்சிவைக்க முடியாது
அன்பத்தான் அடக்கிவைக்க முடியாது…
காட்டிக்குடுக்கும் காட்டிக்குடுக்குமே
கண்ணீரே காட்டிக்குடுக்குமே,
அடுத்தவங்க துன்பங்கண்டு
அன்போட
அழுதகண்ணீரே காட்டிக்குடுக்குமே,
அன்பத்தான் காட்டிக்குடுக்குமே…
அதால,
முடியாது முடியாது அடச்சிவைக்க முடியாது
அன்பத்தான் அடக்கிவைக்க முடியாது…!