கற்றல் ஒரு ஆற்றல் – 46
க. பாலசுப்பிரமணியன்
மூளையின் பாதிப்புகளும் கற்றலும்
கற்றலின் போது மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. பார்க்கின்ற ஒவ்வொரு வார்த்தையின் எழுத்துக் கூட்டங்களையும் அதனுள் அமர்ந்துள்ள கருத்துப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து மூளை அதன் பொருளை எளிதாக நமக்கு கொடுக்கின்ற ஒரு செயல் விந்தையானது மட்டுமல்ல, அது மிகவும் துரிதமானது. அதே போல் காதில் விழுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் அலசி ஆராய்ந்து அது எந்த மொழியைச் சார்ந்தது என்று அறிந்து அதற்க்கான பொருளை நமக்கு எடுத்துரைப்பதும் ஒரு விந்தையான செயல். உதாரணமாக. காதில் விழுகின்ற “மோர்” என்ற வார்த்தையை உள்வாங்கி அது தமிழ் சொற்களின் கூட்டமைப்பில் வந்ததா, அல்லது ஆங்கில சொற்கூட்டங்களில் பிறந்து வந்ததா அல்லது இந்தி மொழியின் சொற்றொடர் நடுவே வந்ததா என ஆராய்ந்து அதற்கான பொருளாக தமிழில் “பாலின் வழிவந்த ஒரு நீரான உணவையும் “, ஆங்கிலத்தில் “இன்னும்” என்ற பொருள் கொண்ட பரிமாணத்தையும், இந்தியில் “மயில் “என்று பறவையையும் பொருளாகாத் தருகிறது. மூன்று மொழிகளும் அறிந்த ஒருவருக்கு மூளை இடத்திற்கும் சம்பந்தத்திற்கும் தகுந்தவாறு சரியான பொருளைத் தருகிறது!
இப்படிப்பட்ட செயல்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் நடக்கும் விதமும் தனித்தனியானது. மாணவனுடைய கற்கின்ற சூழ்நிலைகள், அவனுடைய முன்னார்வம், முந்திய கற்றலின் அளவுப் பரிமாணங்கள் ஆகியவற்றைச் சார்ந்து இந்தக் கற்றலும் அதன் திறன்களும் வெளிப்படும். ஆகவே, ஒரு புத்தகத்தையோ அல்லது பாடத்தையோ ஒரு மாணவன் கற்கும் பொழுதும், தன் கற்றலை வெளிப்படுத்தும் பொழுதும் அதனை மற்ற மாணவர்களுடைய கற்றலோடு ஒப்பிடுதல் மிகவும் தவறானதாகவும் பயனற்றதாகவும் அமையும்.
ஒரு குழந்தைக்கு மூளையின் நரம்புகளில் தளர்ச்சிகள் ஏற்பாட்டிருந்தாலோ, அல்லது மூளையின் நரம்போட்டங்களின் வலைத்தளங்களில் பாதிப்புகள் இருந்தாலோ அல்லது மூளையின் ஏதாவது ஒரு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ அது கற்றலின் பரிமாணங்களை பாதிக்க வாய்ப்புக்கள் உண்டு.
பொதுவாக எழுத்துக்களையும் எண்களையும் மாற்றி படிக்கும் தவறுகளை ஏற்படுத்தும் dyslexia (டிஸ்லெக்சியா) என்னும் கற்றல் சார்ந்த பாதிப்புகள், உருவங்களைத் தவறாகப் புரிந்துகொண்டோ அல்லது வெளிப்படுத்தும் செயல்கள் dysgraphia (டிஸ்க்ராபியா) போன்ற பாதிப்புகள், மற்றும் கணிதத்தில் எண்களைத் தவறாக பயன்படுத்தும் dyscalculia (டிஸ்கேல்குலியா) போன்ற பாதிப்புகள் இந்த மாதிரித் தளர்ச்சிகள் காரணமாக வர வாய்ப்புண்டு.
இந்த பாதிப்புகளை சிறிய வயதில் கண்டுபிடுத்து சீர்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகள் இருப்பவர்களில் பல பேர்கள் வாழ்க்கையில் சிறப்பான நிலையையும் புகழையும் அடைந்துள்ளனர். இந்த பாதிப்புக்களை பொதுவாக ஒரு நோயாகவோ அல்லது இயலாமையாகவோ கல்வியாளர்கள் கருதுவதில்லை. இவைகளை சிறிய கற்றல் விதிமுறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் சீர் படுத்த முடியும். ஐன்ஸ்டீன், ஹென்றி போர்ட், வால்ட் டிஸ்னி, ரிச்சர்ட் பர்டன் போன்று வாழ்க்கைப் பாதையில் சாதனைகளைப் படைத்தவர்கள் இது போன்ற பாதிப்புக்களைச் சமாளித்து வாழ்க்கையில் வெற்றிநடை போட்டவர்கள்.
மூளையின் வடிவமைப்பில் சில கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டவர்களிலும் வெற்றிநடை போட்டவர்கள் பலர் உண்டு.
1951ஆம் ஆண்டு பிறந்த கிம் பீக் என்றவருக்கு மூளையில் கார்ப்ஸ் காலசோம் (CORPUS CALLASOM) என்ற பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தப் பகுதி வலது மூளையின் செயல்களையம் இடது மூளையின் செயல்களையும் ஒருங்கிணைத்து செயல்படுகின்றது. அதே போல் மூளையில் (CEREBELLUM)என்னும் பகுதியும் பாதிக்கப் பட்டிருந்தது. ஆகவே இளம் வயதில் பள்ளிகளில் இவரால் மற்றவர்களுக்கு இணையாக படிக்க முடியவில்லை. மேலும் இவர் புத்தகங்களைப் பார்க்கும் விதமும் விந்தையாக இருந்தது. ஆகவே இவர் பல பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்
ஒருநாள் இவர் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் தற்செயலாக கவனித்த இவர் தந்தை இவர் தன் இரண்டு கண்களால் புத்தகத்தின் இரண்டு பக்கங்களைத் தனித்தனியாகப் பார்ப்பதை கவனித்தார். மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இவரது இரண்டு கண்களும் ஒருங்கிணையாததால் இரு கண்களும் தனித்தனியாக செயல்பட்டன. ஆனால் இவர் தான் படித்த இரண்டு பக்கங்களின் கருத்துக்களையும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியது மட்டுமின்றி அவற்றை சில வினாடிகளிலேயே தனது நினைவுக்குள் கொண்டுவந்தார். இவருடைய இந்தத் திறனைக் கண்டு அதை வளர்க்க இவர் தந்தை அருகிலுள்ள ஒரு நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். காலப்போக்கில் கிம் பீக் அங்குள்ள 12000 புத்தகங்களைப் படித்து முடித்தது மட்டுமின்றி அவற்றிலுள்ள கருத்துகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கினார். இவரை மையக்கருத்தாக வைத்து வந்த “Rain Tree “என்ற ஆங்கிலப் படம் ஆஸ்கார் விருதையும் பெற்றது. ஆகவே மூளையில் ஒரு பகுதியில் பாதிப்புகள் இருந்தாலும் மற்ற பகுதிகள் மூலமாக சிறப்பான கற்றலை பெற முடியும் என்பது மூளை நரம்பியல் வல்லுநர்கள் கருத்து.
தொடருவோம்