வண்ணான்
-தமிழ்த்தேனீ
“நீ என்னை ரொம்ப நல்லவன்னு நெனைக்காதே! நான் அவ்ளோ நல்லவன் இல்லே” என்றார் கார்த்திகேயன். திடுக்கிட்டாள் சௌதாமினி.
“என்னது ஏன் இப்பிடி உளர்றீங்க…என்ன ஆச்சு உங்களுக்கு உடம்பு சரியில்லையா?” என்றாள் பதட்டத்துடன்.
“அடேடே பயந்துட்டியா…? பயப்படாதே! ஆனா நான் சொன்னது உண்மை” என்றார் கார்த்திகேயன்.
“என்ன விளையாட்டு இது? உங்களுக்கு வயசு ஐம்பது!“ என்றாள் சௌதாமினி.
“அதுனாலே என்ன? நான் குழந்தையாப் பொறந்து வாலிபப் பருவத்தை அடைஞ்சுதானே இப்போ ஐம்பதை எட்டி இருக்கேன். புரியுதா… நானும் வாலிபப் பருவத்திலே இருந்திருக்கேன், இன்பேச்சுவேஷன் ஆக்ரமிச்சிருந்த பருவத்திலே எது காதல் எது காமம்னே தெரியாமத்தானே இருந்தேன்“
“எது அழகு…எது கவர்ச்சி…எது குத்துவிளக்கு… எது அகல் விளக்கு… எது மின்மினி விளக்குன்னு குழம்பித்தானே வளந்திருக்கேன்?”
“நான் என்ன புத்தனா ராமனா உணர்ச்சிகள் நிறைஞ்ச வெறும் கார்த்திகேயன்தானே? நானும் தவறுசெய்ய நிறைய வாய்ப்பு கிடைச்சுதே!”
“இப்போ என்னை உத்துப் பாரு! நான் இந்த ஐம்பது வயசிலேயும் கம்பீரமா அழகா ஆண்மையா இருக்கேன்னா…அப்போ என்னோட வாலிபப் பருவத்திலே நான் எப்பிடி இருந்திருப்பேன்னு உன்னாலே கற்பனை செஞ்சு பாக்க முடியுதா?”
“என்னோட பழைய போட்டோவெல்லாம் பார்த்துட்டு உண்மையிலேயே நீங்க அழகாத்தான் கவர்ச்சியாத்தான் இருக்கீங்கன்னு ஒருநாள் ரசிச்சுச் சொல்லிட்டு, ஏங்க உங்களை யாருமே காதலிக்கலையா நீங்க வேற யாரையுமே காதலிக்கலையான்னு கேட்டியே நியாபகம் இருக்கா?”
“நான்கூட சே……… சே அதெல்லாம் ஒண்ணுமில்லேன்னு வழிஞ்சேனே அதை அப்பிடியே நம்பி என்னோட இத்தனை வருஷமா குடித்தனம் நடத்தறியே… உன் மனசிலே என் மேலே சந்தேகமே வரலியா? வந்திருக்கும் ஆனாலும் நம்மோட புருஷன் நல்லவன்னு நம்பியோ இல்லே….சரி நாம கல்யாணம் செஞ்சிகிட்டு வரதுக்கு முந்தி ஏதாவது நடந்திருந்தா அதைத் தோண்டியெடுத்து கவலைப் படறதிலே என்ன உபயோகம் நமக்கு கல்யாணம் ஆகி இந்த ஆளு நம்மோட புருஷனா ஆயிட்டாரு இனிமே இந்த ஆளை நம்ம கையிலே வெச்சிக்கணும்னு அதுதான் வாழ்க்கை அப்பிடீன்னு புரிஞ்சு புத்திசாலித்தனமா ப்ராக்டிகலா வாழ்ந்தியான்னு யோசிச்சேன்”
“எது எப்பிடி இருந்தாலும் என்னமோ ஒரு அலசல் சுய அலசல் . ஆனா சத்தியமா என்னைப் பொறுத்த வரைக்கும் உன் மேலே ஒரு துளிக்கூட சந்தேகமே எனக்கு வந்தது கிடையாது. அதுனாலே எனக்கு எந்த உறுத்தலும் இல்லே”
“ஆனா நான் நல்லவன் தானான்னு அப்பப்போ சந்தேகம் வரும். யோசிப்பேன்… அப்பிடி யோசிச்சதிலே எனக்கு கிடைச்ச விடையைத்தான் உனக்கு இன்னிக்குச் சொன்னேன்” என்றார் கார்த்திகேயன்”
“அப்பிடி ஏன் உங்களுக்கு தோணுது? ஏதாச்சும் தப்பு பண்ணீங்களா” என்றாள் சௌதாமினி.
“இந்தக் கேள்விக்குதான் விடையைத் தேடிகிட்டு இருக்கேன்” அவ்ளோ நல்லவன் இல்லேன்னு விடை வந்தாலும்… நானும் நல்லவன்தான் அப்பிடீன்னு ஒரு விடையையையும் சொல்லுது மனசு என்றார் கார்த்திகேயன்.”
“ஏன் தெரியுமா? தைரியம் இல்லாமலோ, பயத்தாலோ அல்லது மனசாட்சி, கடவுள், பாவம் புண்ணியம் எல்லாம் கலந்த ஒரு உணர்வாலோ இல்லே ஏதோ தெய்வத்தோட அருளாலோ எவ்வளவோ சந்தர்ப்பம் கிடைச்சும் நான் தப்பு பண்ணலேன்னு சொல்றதைவிட தப்பு பண்ண முடியலேன்னு சொல்றதுதான் உண்மை”
“மனசிலே நிறைய தப்பெண்ணம் வந்தாலும் அது பாவம்தான் அப்பிடீன்னாலும் உடம்பாலே எந்த தப்பும் செய்யாமே இருந்தோம் அப்பிடீங்கற திருப்தி ஒண்ணுதான் இன்னமும் என்னைத் தலை நிமிர்ந்து நல்லவன்னு நெனைக்க வைக்குது“
“அதுக்கு என்னைச் சரியா வழிநடத்தின எங்க அப்பா அம்மாவுக்கும் இறைவனுக்கும் நான் நன்றி சொல்லிகிட்டே இருக்கேன்”
“ஆனாலும் நான் ஒண்ணும் அவ்ளோ கெட்டவன் இல்லே நல்லவன்தானே” என்றார் கார்த்திகேயன்
மொத்தத்தையும் கேட்டுவிட்டு அவரைக் கட்டிக்கொண்டு அவர் கண்களையே உற்றுப் பார்த்து “அப்பிடிப்பாத்தா நீங்களும் நல்லவர்தான் நானும் நல்லவதான் என்றாள் சௌதாமினி”
”மணி வெளுக்கச் சாணை உண்டு
மனம் வெளுக்க வழி உண்டோ?” என்று எங்கிருந்தோ பாடல் கேட்டுக்கொண்டிருந்தது.
சுய அலசல் செய்து அங்கே மனிதம் நிமிர்ந்தது. இருவரும் மனம்விட்டுச் சிரித்தனர்.
சுபம்