நலம் .. நலமறிய ஆவல் .. (23)
நிர்மலா ராகவன்
நாமகரணங்கள்
புதிதாக மணமானவர்கள் இப்போது தம் கணவரையோ, மனைவியையோ விளிக்கும் விதம் இது என்றுதான் நினைத்திருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி கணவரை இப்படி அழைப்பது கண்டு வியந்து போனேன், `ஆகா! கல்யாணமாகி பத்து வருடங்களுக்குப் பின்னரும் இவளுக்கு இவ்வளவு காதலா!’ என்று.
ஒரு நாள் இருவரும் ஏதோ வாக்குவாதம். இறுதியில், அதற்கு மேலும் பொறுக்க முடியாத மனைவி, “ஷட் அப், டார்லிங்!” என்றாளே பார்க்க வேண்டும்! எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவளைப் பொறுத்தவரை, டார்லிங் என்பது அவருடைய பெயர். அவ்வளவுதான். அச்சொல்லில் அன்பு கிடையாது.
கதை 2: துர்கா இதற்கு நேர் எதிரிடை. அவளுக்கு நிறையத் துன்பங்கள் கொடுத்தவர் அவளது கணவர். எல்லாவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையானவர். அவள் அவருடன் பேசுவதையே விட்டுவிட்டாள். ஆனால் அவர்மேலிருந்த ஆத்திரத்தை மகன்மேல் காட்டினாள். மகனுக்கு என்ன பெயர் வைத்தார்களோ, அவனை `துடைப்பக்கட்டை’ என்றுதான் அழைப்பாள். அவனுடைய அக்காள்மேல் எந்த வருத்தமுமில்லை துர்காவுக்கு. ஏனெனில் அவளும் தன்னைப்போல் ஒரு பெண். அப்பாவைப்போல் நடக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது.
தாயின் நம்பிக்கை பொய்க்கவில்லை. மகள் ஓரளவு படித்து, உத்தியோகத்திலும் அமர்ந்தாள். மகனுக்கோ, `நான் உதவாக்கரை!’ என்ற எண்ணத்தை பெற்ற தாயே சிறுவயதிலிருந்தே மனதில் பதிய வைத்திருந்ததால், படிப்பும் ஏறவில்லை. மதுவுக்கு அடிமையானான். ஆறு மாதங்கள் ஏதாவது வேலை செய்து, கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும், வேலையை விட்டுவிடுவான். பகலில் அக்கம்பக்கத்தினருக்கு உதவியாக ஏதாவது செய்வான். `சாயங்கால வேளைகளில் அவனுடைய போக்கே மாறிவிடும்,’ என்கிறார்கள் அவனுடைய அண்டைஅயலார். நான் பார்த்தபோது, சாதுவாக, தன்னம்பிக்கை குன்றியவனாக காணப்பட்டான். அவனுடைய கதையைக் கேட்க பரிதாபமாக இருந்தது.
ஏதோ காரணத்தால் மனத்துக்குப் பிடிக்காத மணாளனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் பெண்கள் தம் விதியையே நினைத்து மருகி, அந்த நிராசையை பெற்ற பிள்ளைகளின்மேல் காட்டினால், வாழையடி வாழையாக குடும்பம் உருப்படாமல்தான் போகும். பெற்றவர்களில் ஒருவர் ஆதரவாக இருந்தால்கூட பிள்ளைகள் நல்ல விதமாக வளர வாய்ப்பிருக்கிறதே!
கதை 3: பதினைந்து வயதான லேகாவிற்குத் தான் புத்திசாலி என்பதில் கொள்ளைப் பெருமை. அவள் வளர்க்கும் நாய்க்கோ, அறிவு குறைவாகத்தான் இருந்தது என்று அவளுக்கு இளக்காரம். தினமும் உலாவ அந்த நாயை அழைத்துச் செல்வாள். அதுவோ, நாயின் குணப்படி அங்கும் இங்கும் எதையோ தேடி அலையும்.
`இடியட்!’ என்று உரக்கக் கத்தி, அதன் கழுத்துப்பட்டியில் பொருத்தப்பட்டிருந்த சங்கிலியை இழுப்பாள். சிறிது நேரத்திற்குப்பின், இதே நிகழ்ச்சி தொடரும்.
தினமும் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை.
“பாவம்! அதை ஏன் அப்படிக் கூப்பிடறே?” என்று லேகாவைக் கேட்டேன். நாய்க்கு ஆங்கிலமோ, இடியட் என்ற வார்த்தைக்கு அர்த்தமோ தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும், கூப்பிடும் தொனி புரியாதா, என்ன!
“இது சொன்னாலே கேக்கறதில்லே!” என்றாள்.
“அதுக்கு அவ்வளவுதான் தெரியும். ஒன் நாய்க்குப் பேர் கிடையாதா? அதைச் சொல்லிக் கூப்பிடு,” என்றதும், எதுவும் பேசாது நடையைக் கட்டினாள்.
பொதுவாக எல்லா மிருகங்களின்மேலும் உயிராக இருக்கும் ஒரு பையன் அவர்கள் வீட்டுக்குத் தினமும் போவான். அதே நாய் அவன் முகத்தை நக்கிக் கொஞ்சுகிறது என்று அவ்வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
`குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பதில், `மிருகங்களும்’ என்று சேர்த்துக்கொள்ளலாம்.
கதை 4: மலேசியாவில் ஒரு சிற்றூரில் அமைந்திருந்த மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தேன். இருபது வயதை எட்டியிராத `தமிழன்’ எல்லா மிருகங்களையும் அன்புடன் அழைத்து, பரிவுடன் நடத்துவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
“உனக்கு மிருகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமா?” என்று அநாவசியமான கேள்வி ஒன்றைக் கேட்டேன்.
“சின்ன வயசிலேருந்தே அப்படித்தான், ஆன்ட்டி,” என்று ஒத்துக்கொண்டவன், “எல்லாரும் என்னைப் பைத்தியம்கிறாங்க. அதான் வீட்டுக்கே போறதில்லே. இங்கேயே தங்கிடறேன்!” என்றான், வருத்தத்துடன்.
“நீ ரொம்ப நல்லவன். இப்படி இருக்கறதுதான் சரி. மாறிடாதே!” என்றேன்.
“இதுங்களையும் சாமிதானே படைச்சார்?” என்று அவன் கேட்டதில் தான் செய்வதன் நியாயத்தை ஏன் பிறர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற குழப்பம் வெளிப்பட்டது.
அவன் ஞானி என்றுதான் எனக்குத் தோன்றியது.
பெற்ற பிள்ளைகளை ஒரு தாய் இழிவாக நடத்துவதையோ, தன் `செல்லப் பிராணி’யை ஒரு பெண் கண்டபடி திட்டுவதையோ பொறுக்கும் உலகம் மனித நேயத்துடன் நடக்கும் ஒருவனை `பைத்தியம்’ என்கிறது!
இது மோசமான உலகமா, இல்லை உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் உலகமா?
தொடருவோம்